World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Defend Edward Snowden!

எட்வார்ட் ஸ்னோவ்டெனைப் பாதுகாப்பீர்!

Bill Van Auken
27 January 2014

ack to screen version

ஜேர்மன் ARD தொலைகாட்சி வலையத்திற்கு ஞாயிறன்று வழங்கிய பேட்டியில் தேசிய பாதுகாப்பு முகமையின் (NSA) முன்னாள் ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டென், அமெரிக்க "அரசு அதிகாரிகள் என்னை கொல்லக் விரும்புகின்றனர்," என்று எச்சரித்தார்.

"அரசு அதிகாரிகளான இவர்கள், நான் சூப்பர்மார்கெட்டில் இருந்து வெளியே வரும் போது என் தலையில் ஒரு துப்பாக்கி குண்டை பாய்ச்ச அல்லது விஷம் பாய்ச்ச விரும்புவதாக கூறி உள்ளனர்," என்று ஸ்னோவ்டென் தெரிவித்தார்.

சட்டவிரோத NSA உளவுவேலைகளை தாம் அம்பலப்படுத்துவதை நிறுத்த அமெரிக்க அரசு தம்மை கொல்ல விரும்புகிறது என்ற ஸ்னோவ்டெனின் எச்சரிக்கை அதிகபட்ச முக்கியத்துவத்தோடு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அவரை பாதுகாக்கவும் மற்றும் ஜனநாயக உரிமைகளின் அழிவை எதிர்க்கவும் ஒரு பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் உடனடி அவசியத்தை அது உயர்த்துகிறது.

அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளோடு நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் Buzzfeed வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையை ஸ்னோவ்டென் குறிப்பிட்டார். அதில் அந்த அதிகாரிகள் அவரை படுகொலை செய்வதற்கான அவர்களின் விருப்பத்தை மிக வெளிப்படையாக விவாதித்திருந்தனர். அவர்களில் ஒருவரான ஓர் இராணுவ உளவுத்துறை அதிகாரி ஸ்னோவ்டெனைப் படுகொலை செய்வதற்கு ஒரு திடுக்கிடும் பரிந்துரையை முன்மொழிந்தார்: ... நாங்கள் மிக விரைவிலேயே அதை முடிவுக்கு கொண்டு வருவோம். சாவகாசமாக மாஸ்கோவ் வீதிகளில் நடந்து கொண்டிருக்கையில்... அவர் ஒரு வழிபோக்கரால் எளிய முறையில் தாக்கப்படலாம். அப்போதைக்கு அவருக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் சிறிது நேரத்தில் சோர்வை உணருவார், பின்னர் அது உள்ளூர் குடிநீரில் இருந்து வந்த ஒரு பாக்டீரியாவாக இருக்குமென்று நினைப்பார். ஒன்றுமே தெரியாமல் அவர் வீட்டிற்கு செல்வார், உங்களுக்கு தெரியுமா அடுத்து அவர் குளியலறையில் இறந்து கிடப்பார்."

ஏற்கனவே ஒபாமா நிர்வாகம் ஹெல்பயர் ஏவுகணைகளைக் கொண்டு கூடுதல் அதிகாரத்தின் கீழ் நான்கு அமெரிக்கர்களின் படுகொலைகளை நடத்தி உள்ள நிலையில், இதுபோன்ற அறிக்கைகளை வெறும் வெற்றுபேச்சுக்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. அதற்கு முரணாக, அவை முற்றிலும் அரசியல் அடாவடித்தனத்தோடு பொருந்தி உள்ளன. அவை ஸ்னோவ்டெனை ஒழிக்க செய்யப்படும் தயாரிப்புகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

"அதை [சராசரி அமெரிக்கர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மீது அமெரிக்க உளவுவேலைகளைக் குறித்த வெளியீடுகளை] மிக வேகமாக முடிவுக்கு வருவதற்கான" விருப்பம், NSA, CIA மற்றும் பெண்டகன் முகவர்களால், ஒபாமா வெள்ளை மாளிகை வரையில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இதில் ஒரு விடயம் ஐயத்திற்கிடமின்றி உள்ளது, அது ஸ்னோவ்டெனுக்கு ஒரு நியாயமான விசாரணையை வழங்க அமெரிக்க அரசுக்கு எந்த நோக்கமும் இல்லை என்பதாகும். ஸ்னோவ்டெனும் அவரது வழக்கறிஞரும் இதை தெளிவுபடுத்தி உள்ளனர். ஓர் இரகசிய மற்றும் சட்டவிரோத பொலிஸ் அரச எந்திரத்தை அம்பலப்படுத்திய அவரது நடவடிக்கையை அவர் நியாயப்படுத்த இடம் தராத வகையில் 1917 உளவுத்துறை சட்டத்தைப் பயன்படுத்தி இருப்பதால், தமக்கு எதிரான எந்தவொரு விசாரணையும் வெளிப்பார்வைக்கு மட்டுமே ஒரு விசாரணையாக இருக்குமென்று ஸ்னோவ்டென் அவரது நேர்காணலில் கூறினார். அவர் தரப்பு நியாயத்திற்கு உதவும் ஆவணங்கள் மறைக்கப்பட்டு, அவை ஆதாரங்களாக எடுக்கப்படாமல் போகலாம், மற்றும் நீதிமன்ற நடுவர்களின் ஜனநாயக உணர்வுகளுக்கு முறையிட அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

ஸ்னோவ்டெனுக்கு எதிராக அமெரிக்க ஸ்தாபகம் வேகப்படுத்தி வரும் அரசியல் வேட்டை, அது எவ்வித விசாரணையையும் வழங்கும் நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. இரண்டு கட்சிகளின் அரசியல்வாதிகளும் அவரை ஓர் உளவாளியாக மற்றும் ஒரு தேசதுரோகியாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளனர். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் டானியல் ஹென்னிங்கெர் போன்ற, ஊடகங்களில் உள்ள பாசிச குண்டர்கள் அவரைக் கொல்ல பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த சூழலில், கடந்த வாரம் அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டெர் ஒரு சமரச உடன்படிக்கைக்கு இட்டு செல்லும் "பேச்சுவார்த்தைகளுக்கு" விடுத்த அழைப்பானது, அமெரிக்க அரசின் சட்டவிரோத உளவுவேலை நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதை நிறுத்த கூடுதல் அதிகாரத்தைப் பயன்படுத்தும் அதன் திட்டங்களை மூடி மறைப்பதற்கான வெறும் அரசியல் போர்வையாக உள்ளது.

ஸ்னோவ்டெனுக்கு பொதுமன்னிப்பு என்பது "வெகுதூரத்தில் போய் உள்ளது" என்று ஒரு MSNBC நேர்காணலில் வலியுறுத்திய ஹோல்டர் கூறினார், அவர் சட்டத்தை மீறிவிட்டார், அவர் நம்முடைய தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளார்அவரது நடவடிக்கைகளுக்கு அவர் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." ஹோல்டரின் கருத்துக்கள் கடந்த வியாழனன்று வெர்ஜினீயா பல்கலைக்கழகத்தில் அவர் வழங்கிய அறிக்கையை எதிரொலித்தது. அதில் அவர், ஸ்னோவ்டென் " ... ஒரு சமரசத்திற்கு வர அமெரிக்காவிற்கு திரும்புகிறார் என்றால், நாங்கள் அவரது வழக்கறிஞரோடு பேசுவோம்," என்றார்.

ஸ்னோவ்டென் அமெரிக்காவிற்கு திரும்பி, அமைதியாக சிறைவாசத்தை ஏற்று கொள்ள வேண்டுமென்ற பரிந்துரையானது, இந்த இறுதி எச்சரிக்கையை சூடேற்றுகிறது, அதாவது: பேசாமல் சிறைக்குள் போ, அல்லது நாங்கள் உன்னை கொன்று விடுவோம்." ஸ்னோவ்டென் அமெரிக்க மண்ணில் கால் வைத்தால், மீண்டும் அவரை யாராலும் ஒருபோதும் பார்க்க முடியாது.

ஒரு நாடற்ற அகதியாக தற்போது ரஷ்யாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த முன்னாள் NSA ஒப்பந்ததாரரைப் பொறுத்த வரையில், அவர் அமெரிக்காவிற்கு திரும்புகிறாரோ இல்லையோ ஆனால் அரச படுகொலையின் அச்சுறுத்தல் மிக வெளிப்படையான உண்மையாக உள்ளது. ஒபாமா நிர்வாகத்தால் அவருக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும் இரண்டு குற்றச்சாட்டுக்களும் உளவுத்துறை சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் குற்றங்களாகும், அவை மரண தண்டனையைத் தாங்கி உள்ளன. அரசியல்ரீதியாக விரும்பத்தகாத தனிநபர்களைப் படுகொலை செய்வதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சாதனையானது, CIA எப்போது படுகொலை நிறுவனமென்று (Murder Inc.) பெயர் பெற்றதோ அப்போதிருந்து ஒபாவின் டிரோன் தாக்குதல்கள் வரையில், மிக சிறப்பாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

எட்வார்ட் ஸ்னோவ்டெனைப் பிடிப்பதில் அமெரிக்க அரசின் "ஆழ்ந்த நுண்மையான தடுமாற்றத்தைக்" குறித்து இலண்டனின் பைனான்சியல் டைம்ஸ் மிக வெளிப்படையான மதிப்பீடுகளில் ஒன்றை வழங்கியது. அரசின் பார்வையில், ஒரு விசாரணையானது மேலதிக வெளியீடுகளை கொண்டு வரும் மற்றும் திரு. ஸ்னோவ்டெனுக்கு இன்னும் கூடுதலான மக்கள் ஆதரவு திரள்வதற்கான ஆபத்துக்களைக் கொண்டு வரும் சாத்தியக்கூறு உள்ளது" என்று அது குறிப்பிட்டது.

கருத்துக்கணிப்புகள் ஸ்னோவ்டெனுக்கு பாரிய ஆதரவைக் காட்டுகின்றன. அவரை ஒரு தேசதுரோகியாக மற்றும் உளவாளியாக காட்டியுள்ள அனைத்து பெருநிறுவன ஊடகங்களிலோ அல்லது பிரதான கட்சிகளிலோ, அந்த உணர்வு எவ்வித வெளிப்பாட்டையும் காணாத நிலையில் அது இன்னும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் மக்களின் நலன்களுக்கு உதவியதா என்பதன் மீது மொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிக்கும் குறைவான மக்கள் வேறுபட்டு நிற்பதாக சமீபத்திய Pew Research ஆய்வு கண்டறிந்துள்ளது. பதினெட்டில் இருந்து முப்பது வயதுடையவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், 57 சதவீதத்தினர் ஸ்னொவ்டெனின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், வெறும் 35 சதவீதத்தினர் அவரை எதிர்க்கின்றனர்.

ஸ்னோவ்டெனின் தைரியமான நடவடிக்கைகள் அரசின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வெறுமனே அவரது சொந்த எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை, மாறாக பெரும்பான்மை மக்கள் மத்தியில், அதுவும் குறிப்பாக தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் உணர்வுகளாகும் என்பது ஆளும் ஸ்தாபகத்திற்குள் அதிகரித்துவரும் கவலையாக உள்ளது. சமூக செல்வ வளத்தை நிதியியல் பிரபுத்துவத்திற்கு கைமாற்றுகின்ற மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தங்களைத் தொடுக்கின்ற அதேவேளையில் ஜனநாயக உரிமைகளை அழிக்கின்ற பணக்காரர்களின், பணக்காரர்களால், பணக்காரர்களுக்கான ஓர் அரசின் மீது இந்த அடுக்குகள் அதிகளவில் வெறுப்படைந்துள்ளன.

ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் அதிகாரத்தில் உள்ளவர்கள் தான் நிஜமான குற்றவாளிகள் என்பதை அம்பலப்படுத்தி வருகிறது. அவரை வாய்மூடச் செய்ய மற்றும் அவரை ஒரு முன்னுதாரணமாக ஆக்க இது இன்னும் அவர்களை தீர்க்கமாக்கி வருகிறது. ஸ்னோவ்டென் "அவரது நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்பட வேண்டுமென" ஹோல்டெர் வலியுறுத்துகிறார். ஆனால் அமெரிக்க அரசியலமைப்பில் எழுதப்பட்ட சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் இரண்டையும் மிக துணிச்சலாக மீறியுள்ள, அனைத்திற்கும் அடியில் ஒபாமாவிலிருந்து தொடங்கி, மக்களின் மீது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் பாரிய உளவுவேலை திட்டங்களுக்கு திட்டம் தீட்டிய, அவற்றிற்கு அங்கீகாரம் வழங்கிய மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்திய இவர்களை என்ன செய்வது?

ஸ்னோவ்டெனின் வெளியீடுகளால் அம்பலப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அரச எந்திரங்கள், அமெரிக்க அரசைக் கட்டுப்படுத்துகின்ற நிதியியல் செல்வந்த தட்டின் நலன்களைப் பாதுகாக்க கட்டமைக்கப்பட்டுள்ளன. அதன் சர்வாதிபத்திய நடவடிக்கைகள் பயங்கரவாத சதிகளை முறியடிப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை, மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் சூறையாடும் நோக்கங்களை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. வெளிநாடுகள், இவை யுத்த தயாரிப்புகளுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல, மாறாக கூட்டாளிகள் என்று கூறப்படுபவை மீதும் உளவுவேலை செய்வதற்கும் மற்றும் போட்டியிடும் பெருநிறுவனங்களுக்கு எதிராக தொழில்துறைரீதியிலான உளவுவேலைகளை நடத்துவதற்கும் ஆகும். உள்நாட்டில், அதிகளவில் விரோதகரமான மற்றும் அபாயகரமான எதிரியாக யார் பார்க்கப்படுகிறார்களோ, அந்த அமெரிக்க உழைக்கும் மக்களின் தகவல்களை உளவுபார்ப்பது மற்றும் சேகரிப்பது என்பதைக் குறிக்கிறது.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கு தொழிலாளர் வர்க்கம் மட்டுமே ஒரே உண்மையான ஸ்தாபகமாக விளங்குகிறது. எட்வார்ட் ஸ்னோவ்டெனை பாதுகாக்க மற்றும் அவருக்கு எதிரான அரச சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பாரிய ஆதரவு ஒன்றுதிரட்டப்பட வேண்டும். உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை நிலைமைகளை அழிக்கின்ற பொலிஸ் அரச சர்வாதிகாரத்திற்கு எது உயர்வளித்து வருகிறதோ, அந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்திலிருந்து, ஸ்னோவ்டெனின் பாதுகாப்பு பிரிக்க முடியாததாக உள்ளது.