தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா “அரசு, நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் அனைத்தும் எங்களுக்கு எதிராக அணிதிரண்டுள்ளன"—பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி இந்தியா தொழிலாளர்களின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்
By Deepal Jayasekera and Arun Kumar Use this version to print| Send feedback ஹரியானாவின் மாருதி சுஜூகி இந்தியா மானேசர் கார் உற்பத்தி ஆலையின் தொழிலாளர்கள் அந்த கார் உற்பத்தி நிறுவனத்தின் கண்மூடித்தனமான மலிவு-கூலி வேலையிட-ஆட்சிமுறைக்கு எதிராக நடத்தி உள்ள கடுமையான மற்றும் வெடிப்பார்ந்த போராட்டத்தின் தலைமையிடத்தில் பங்கு பற்றியுள்ள ஒரு தொழிலாளரான மஹாபிர் திம்'ஐ உலக சோசலிச வலைத்தளம் சமீபத்தில் நேர்காணல் செய்தது. அரசு அங்கீகாரம் பெற்ற, நிறுவனத்தின் ஆதரவிலான ஒரு தலையாட்டி தொழிற்சங்கத்திற்கு எதிர்ப்பாக 2011இல் மானேசர் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட சுயாதீனமான தொழிற்சங்கமும், அந்த ஆண்டின் கோடைகாலத்திலும் மற்றும் ஆண்டு முடிவிலும் பல வேலைநிறுத்தங்கள் மற்றும் முற்றுகை போராட்டங்களை நடத்தியதுமான மாருதி சுஜூகி தொழிலாளர் சங்கத்தை (MSWU) மாருதி சுஜூகி (MSI) நிறுவனம், காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசின் முழு ஒத்துழைப்போடு, நசுக்க முனைந்துள்ளது. MSWU'இன் ஒட்டுமொத்த தலைமை உட்பட MSWU'இன் மிக போர்குணமிக்க 148 அங்கத்தவர்கள், கடந்த 18 மாதங்களாக, கொலை மற்றும் கலகத்தில் ஈடுப்பட்டமை உட்பட ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் மீது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2012 ஜூலை 18இல் நிறுவனத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு தகராறில் இருந்து அந்த குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. அந்த சம்பவத்தில், தொழிலாளர்களுக்கு அனைத்துவிதத்திலும் அனுதாபம் காட்டிய ஒரேயொரு மாருதி சுஜூகி மேலாளர் அவனிஷ் குமார் தேவ் கொல்லப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களில் பலர் அந்த தகராறின் போது சம்பவ இடத்தில் கூட இருக்கவில்லை. 2012 ஜூலை இறுதியிலும் மற்றும் ஆகஸ்ட் தொடக்கத்திலும், நிர்வாகத்தால் வழங்கப்பட்ட போர்குணமிக்க தொழிலாளர்களின் பட்டியலைப் பயன்படுத்தி பொலிஸ் பாரிய கைது நடவடிக்கையை மேற்கொண்டது. சிறையில் தொழிலாளர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள், அதில் கால்களை அகல விரிக்க செய்வது மற்றும் நீண்ட நேரம் தண்ணீரில் மூழ்க வைத்திருப்பது ஆகியவையும் உள்ளடங்கும். 546 நிரந்தர தொழிலாளர்களை மற்றும் 1,800 ஒப்பந்த தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி, நிறுவனம் அதன் தொழிலாளர்சக்தியில் பரந்தளவைக் கழித்தொழிக்குவதற்கு ஒரு போலிக்காரணமாகவும் அந்த 2012 ஜூலை 18 தகராறைப் பயன்படுத்தியது.
தற்போது 29 வயது நிரம்பிய மஹாபிர் திம் 2006இல் மாருதி சுஜூகியால் தொழில்பயிற்சி பெறுநராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டில் தான் மானேசர் ஆலை தொடங்கப்பட்டது. அவர் MSWU இடைக்கால கமிட்டியின் ஓர் அங்கத்தவர் ஆவார். MSWU'இன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தலைமையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலைமைகளின் கீழ் அரசு-நிறுவன தாக்குதலுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை கொடுக்க அது ஸ்தாபிக்கப்பட்டது. WSWS: 2012 ஜூலை 18 சம்பவத்தின் பின்புலம் என்னவாக இருந்தது? மஹாபிர்: அது எங்கள் சங்கத்தை உடைக்க நிறுவனத்தால் முன்கூட்டியே திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட ஒரு சம்பவமாகும். மனிதவளத்துறை மேலாளர் அவனிஷ் தேவ் மார்ச் 2012இல் ஹரியானா தொழிலாளர் நலத்துறையில் MSWU'ஐ பதிவு செய்ய உதவினார். நிர்வாகம் அது குறித்து கோபமாக இருந்ததோடு, சங்கத்தை என்ன விலை கொடுத்தேனும் உடைக்க தீர்க்கமாக இருந்தது. 2012 ஜூலை 18க்கு முன்னர் அங்கே அத்தகைய முயற்சிகள் பல இருந்தன. MSWU தலைமை நிர்வாகத்திடம் இருந்து பணம் பெற்றதாகவும், அதனால் தான் தொழிலாளர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும், தொழிலாளர்கள் நலன்கள் குறித்து தொழிற்சங்கத்திற்கு எந்த கவலையும் இல்லையென்றும் நிர்வாகம் வதந்திகளை பரப்பியது. அவர்கள் தொழிற்சங்க தலைவர்களுக்கு இலஞ்சம் கொடுக்கவும் முயன்றனர். தொழிலாளர்களை தூண்டிவிடும் நோக்கத்தோடு, ஒருமுறை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தேனீரில் ஒரு பல்லி கிடந்தது. ஆனால் வெளிப்பார்வைக்கு நிறுவனம் அப்பழுக்கற்றதாக காட்டப்பட்டது. ஆகவே தொழிலாளர்கள் இதையொரு திட்டமிட்ட நடவடிக்கையாக பார்த்தனர். ஜூலை 18 மாலை 7:15க்கு அந்த சம்பவம் நடந்தது. ஒரு மேற்பார்வையாளர் ஒரு தொழிலாளர் ஜியாலாலுக்கு எதிராக ஜாதியை அவமதிக்கும் சொற்களை பயன்படுத்தினார், அவர் அதை எதிர்த்தபோது, ஜியாலால் வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார், மேற்பார்வையாளர் விடுமுறையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அனைத்து தொழிலாளர்களும் இடைநீக்க உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென கோரியதோடு, அந்த குறிப்பிட்ட மேற்பார்வையாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர். அசாதாரணமான முறையில் அன்று தொழிற்சாலைக்குள் 200 பலமான பொலிஸ் படை கொண்டு வரப்பட்டது. மாருதி சுஜூகி தொழிலாளர் சீருடையில் கருங்காலிகளையும் நாங்கள் பார்த்தோம். அவர்கள் யாரென கேட்டபோது, “நாங்கள் புதிதாக சேர்ந்திருக்கிறோம், MSI குர்காவ் ஆலையிலிருந்து மாற்றல் செய்யப்பட்டிருக்கிறோம்,” என்றனர். ஜூலை 18 சம்பவத்திற்கு ஒருசில நாட்களுக்குப் பின்னர் அவனிஷ் தேவ்வின் மனைவி NDTVக்கு கூறுகையில், அவரது கணவர் கொலையில் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று தாம் நம்பவில்லை என்று தெரிவித்தார். அவனிஷ் மற்றும் MSI நிர்வாகத்திற்கு இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த சர்ச்சை குறித்தும் அவர் தெரிவித்தார். எவ்வாறிருந்த போதினும், அந்த நேர்காணல் NDTVஇன் ஆவணத் தொகுப்பில் இருந்து காணாமல் போயுள்ளது. WSWS: சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாருதி சுஜூகி தொழிலாளர்களின் தற்போதைய நிலையை உங்களால் விவரிக்க இயலுமா? மஹாபிர்: இப்போதைய நிலை இன்னமும் படுமோசமாக உள்ளது. தொடக்கத்தில் 2012இல் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது பொலிஸ் அவர்களைச் சித்திரவதை செய்தது. சமீபத்திய காலங்களில் அங்கே சித்திரவதை இல்லை. ஆனால் அவர்களை சிறையில் வைத்திருப்பதன் மூலமாக மற்றும் நெருங்கிய உறவினர்களின் இறுதிச்சடங்கு போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள அவர்களுக்கு சில மணி நேரங்கள் கூட அனுமதி வழங்காமல், நிர்வாகம் தொழிலாளர்களை மனரீதியாக சித்திரவதை செய்து வருகிறது. யாராவது நோய்வாய்பட்டால், முறையான மருத்துவ கவனிப்புகள் வழங்கப்படுவதில்லை. மருத்துவ சிகிச்சைக்காக கூட குறுகிய-காலத்திற்கு பிணை பெறுவது மிகவும் அரிதாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், ஒரு தொழிலாளர் காசநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஆறு மாதங்கள் சிகிச்சைக்காக பிணை வழங்கப்பட்டது. இந்த ஆறு மாதங்கள் முடியவிருக்கின்றன. அவர் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். WSWS: ஆகஸ்ட்-செப்டம்பர் 2012இல் தொழிலாளர் சக்தியைக் கழித்தொழித்த பின்னரில் இருந்து மானேசர் ஆலையின் நிலைமைகள் எவ்வாறு உள்ளன? மஹாபிர்: அப்போதிருந்து வேலைப்பழு ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மானேசர் ஆலை ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை நியமிப்பதை நிறுத்தி உள்ள போதினும், அது தினக்கூலி தொழிலாளர் முறையை (casual labour) ஏற்படுத்தி உள்ளது. நிறுவனம் ஹரியானாவிற்கு வெளியில் இருந்து ஏழு மாத காலத்திற்கு தினக்கூலி தொழிலாளர் முறையின் அடிப்படையில் சுமார் 1,000 தொழிலாளர்களை நியமித்தது. ஏழு மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் நீக்கப்படுவார்கள். பின்னர் அதே முறையில் புதியவர்கள் சேர்க்கப்படுவார்கள், இது இவ்வாறு போய் கொண்டிருக்கும். முந்தைய ஒப்பந்த தொழிலாளர்களில் சிலர் தொழில்பயிற்சி பெறுநர்களாக மாற்றப்பட்டனர், அவர்களுக்கு மாதம் வெறும் 10,000 ரூபாய்க்கு (165 அமெரிக்க டாலர்) சற்று அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறது. நிரந்தர தொழிலாளர்களுக்கு 25,000 ரூபாய் (400 டாலரை விட சற்று அதிகம்) வழங்கப்படுகிறது. தினக்கூலி தொழிலாளர் முறையின் அடிப்படையில் (casual worker) ரூ. 7,000'இல் இருந்து ரூ. 8,000க்குள் ($115-$145) வழங்கப்படுகிறது. ஆலையில் ஒடுக்குமுறை கடுமையாக உள்ளது. அங்கே ஒவ்வொரு நாளும் மூன்று ஷிப்டுகளிலும் 200 பொலிஸ் சிப்பாய்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதோடு, ஆலையில் பொலிஸ் பிரசன்னம் 24 மணி நேரமும் உள்ளது. அதற்கு கூடுதலாக அங்கே மேலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக என்ற பெயரில் 200 ஆயுதமேந்திய PSOகளும் (Personal Security Officers) நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கே சுடும் ஆயுதங்கள் (firearms) இல்லாமல், ஆனால் லத்திகளோடு நிறுவனத்தின் பாதுகாப்பு படையும் உள்ளது. தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்பதோடு அவர்கள் தங்கள் குரலை உயர்த்த கூடாதென்றும் அவ்வாறு உயர்த்தினால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் பொலிஸால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். நிறுவனம் தொழிலாளர்களைக் கண்காணிக்க உளவாளிகளையும் பயன்படுத்துகிறது. இந்த உளவாளிகள் அல்லது கண்காணிப்பு அதிகாரிகள் MSI தொழிலாளர்கள் ஆலைக்கு வெளியே போராட்டங்களில் ஒன்றிணைந்தால் கூட கண்காணிப்பார்கள். WSWS: MSWU ஆலைக்கு உள்ளே செயல்பட்டு வருகிறதா? மஹாபிர்: அந்த தொழிற்சங்கம் ஆலைக்கு வெளியில் மட்டும் தான் செயல்படுகிறது, உள்ளே இல்லை. அந்த சங்கத்தின் பதினோறு ஆக்கபூர்வமான உறுப்பினர்கள், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு உட்பட, ஏனைய மாநிலங்களில் MSI'இன் ஆலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொழிலாளர் சக்தியை அச்சுறுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. WSWS: MSEU'ஐ மற்றும் அதற்கு பின்னர் MSWU'ஐ உருவாக்க உங்களை இட்டு சென்றது எது? மஹாபிர்: ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்பது, சம்பள உயர்வுகள் மற்றும் சிறந்த வேலையிட நிலைமைகள் இவையே எங்களின் பிரதான கோரிக்கைகளாகும். 2011இல் அந்த கோரிக்கைகளுக்காக போராட மாருதி சுஜூகி பணியாளர் சங்கத்தை (MSEU) நாங்கள் உருவாக்கி, அதை பதிவு செய்வதற்காக ஹரியானா தொழிலாளர் துறைக்கு விண்ணப்பம் செய்தோம். ஆனால் தொழிலாளர் துறை ஏற்கனவே அங்கே ஒரு தொழிற்சங்கம், அதாவது மாருதி உத்யோக் காம்கார் யூனியன் (MUKU) [நிறுவனத்திற்கு தலையாட்டும் தொழிற்சங்கம்] இருப்பதாக கூறி, எங்கள் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய மறுத்துவிட்டது. பின்னர் நிர்வாகம் MSEUஇன் நிர்வாகிகளுக்கு ஒரு சில நூறு ஆயிர ரூபாய்களை வழங்கி, அவர்களை இராஜினாமா செய்ய நிர்பந்தித்தது. பின்னர் அந்த சங்கம் கலைக்கப்பட்டது. அதனால் தான் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய தொழிற்சங்கத்தை, மாருதி சுஜூகி தொழிலாளர் சங்கத்தை (MSWU), பதிவு செய்ய வேண்டி இருந்தது. WSWS: மாருதி சுஜூகி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) போன்ற பிரதான தொழிலாளர் கூட்டமைப்புகளின் மனோபாவம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [CITU மற்றும் AITUC ஆகியவை முறையே இரண்டு பிரதான நாடாளுமன்ற ஸ்ராலினிச கட்சிகளான, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியான (CPI) ஆகியவையோடு இணைப்பு பெற்றவை ஆகும்.] மஹாபிர்: அண்மையில் உள்ள குர்காவ் மற்றும் கெய்தாலின் நகரங்கள் உட்பட, ஹரியானாவில் CITU மற்றும் AITUC பல கிளைகளைக் கொண்டுள்ளன. ஆனால் இதுவரையில் வெற்று ஆதரவு வாக்குறுதிகளைத் தவிர அவர்கள் நிதியுதவி அல்லது மனிதவளங்கள் கொண்டு உதவவில்லை. அவர்கள் பணவீக்கம் மற்றும் இதர விடயங்களைக் குறித்து முறையீடுகளை எழுப்பி உள்ளனர், ஆனால் பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்காக எந்தவொரு கோரிக்கைகளையும் உயர்த்தவில்லை. கெய்தாலில் உள்ள CITU'இன் உள்ளூர் கிளை ஒரு சிறிய பேரணியை ஒருமுறை நடத்தியது, அதில் இருந்த கோரிக்கைகளில் மாருதி சுஜூகி தொழிலாளர்களை விடுவிக்க வேண்டுமென்பதும் ஒன்றாக இருந்தது, ஆனால் அதுவும் கூட நிதியுதவியோ அல்லது மனிதவள ஒத்துழைப்போ வழங்கவில்லை. மத்திய தொழிற்சங்கங்கள் பலமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. சான்றாக கடந்த ஆண்டு பெப்ரவரியில் அவர்கள் இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். ஆனால் தொழிலாளர்களால் உரிமைகளை வெல்ல முடியவில்லை, ஏனென்றால் CPM'இல் இருந்து வரும் தலைமையும், மத்திய தொழிற்சங்கங்களும் மிகவும் பலவீனமாக உள்ளன. இந்த தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அது ஏனென்றால், மானேசர் ஆலையிலும் மற்றும் இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய நிறுவனங்களிலும் உருவாகியுள்ள இந்த புதிய சுயாதீன தொழிற்சங்கங்களின் காரணத்தினால் ஆகும். நேர்மறையான விடயம் என்னவென்றால் புதிதாக உருவாகி உள்ள தொழிற்சங்கங்களின் தலைமையில் இப்போது புதிய இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தொழிலாளர்களுக்கு சில நல்ல விடயங்களைச் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் சிந்தனைகள் புரட்சிகர போராட்டத்தை நோக்கி உள்ளன. அவர்கள் நிர்வாகத்திற்கு முன்னால் அடிபணிவதை விட போராட விரும்புகின்றனர். அங்கே தீர்க்கமான உணர்வு உள்ளது. இருந்தபோதினும் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீனமான தொழிற்சங்கங்களில் உறுப்பினர் எண்ணிக்கை பெரிதாக இல்லை என்பது எதிர்மறை விடயமாக உள்ளது. WSWS: உங்களுடைய போராட்டத்தினூடாக நீங்கள் காங்கிரஸ் அரசாங்கம், பொலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் உட்பட ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராக வந்திருப்பீர்கள். உங்களுடைய போராட்டம் இத்தகைய அரசியல் சக்திகளுக்கு எதிராக செல்வதை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? மஹாபிர்: அவர்கள் அனைவரும் எங்களுக்கு எதிராக அணிதிரண்டுள்ளனர் என்பது உண்மை தான். நீதிமன்றங்கள், பொலிஸ் மற்றும் அரசாங்கங்கள் எதுவுமே தொழிலாளர்களின் நிலைமைக்கு அனுதாபம் காட்டுவனவாக இல்லை. அவை அனைத்தும் முதலாளித்துவவாதிகளின் தரப்பில் சார்ந்துள்ளன. அரசு உண்மையில் தொழிலாளர்களுக்கு எதிராக போராட நிறுவன வழக்கறிஞர்களுக்கு கட்டணம் செலுத்தி வருகிறது. அது பெருந்தொகையாகும், நாளொன்றுக்கு சுமார் 150,000 ரூபாய் ($2600) ஆகும். அங்கே தொழிலாளர்களிடம் ஒற்றுமையைத் தவிர, ஓரளவிற்கு கூட அரசியல் சக்தி இல்லை. இதர தொழிலாளர்களிடம் இருந்து ஆதரவை ஒன்றுதிரட்ட நாங்கள் எங்களால் முடிந்தளவிற்கு செய்து வருகிறோம். மேலும், எங்கள் நிலைமைக்கு ஆதரவு கோரி நாங்கள் கிராமங்களுக்கு செல்கிறோம். அனைத்து சுயாதீனமான தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதே எங்களின் இலக்காகும். நம்மிடம் வலிமை இருந்தால் மட்டும் தான் நம்முடைய உரிமைகளை நம்மால் வெல்ல முடியும். எங்களுடைய சக தொழிலாளர்கள் விடுவிக்கப்படும் வரையில் மற்றும் வேலையில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பும் வரையில் எங்கள் போராட்டத்தை நாங்கள் நிறுத்த போவதில்லை. வெவ்வேறு இந்திய நகரங்களில் போராட்டங்கள் நடத்துவது மற்றும் [காங்கிரஸ் கட்சி தலைமையிலான] மத்திய அரசு தலையீடு செய்யக் கோரி டெல்லிக்கு பேரணி செல்வது உட்பட நாங்கள் பல நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளோம். WSWS: மாருதி சுஜூகி நிர்வாகத்தோடு பகிரங்கமாகவே கைகோர்த்து வேலை செய்துவரும் மற்றும் அதன் தரப்பில் சாய்ந்துள்ள மாநில மற்றும் மத்திய காங்கிரஸ் கட்சி அரசாங்கங்கள், தொழிலாளர் நலத்துறை, இதரபிற இத்தகைய சக்திகளிடம் முறையிடுவதன் மூலமாக தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க முடியுமென நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? மஹாபிர்: தொழிலாளர்களுக்கு அரசியல் சக்தி இல்லை. அவர்களுக்கு அந்த உண்மை தெரியும். அவர்களுக்கு இருக்கும் ஒரே சக்தி அவர்களின் ஒற்றுமை. அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் அவர்கள் தொடர்ந்து போராட வேண்டி உள்ளது. மானேசர் ஆலையில் தற்போது வேலை செய்துவரும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை ஆதரிக்கின்றனர். பொலிஸ் மற்றும் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் அவர்கள் ஒவ்வொரு சாத்தியப்பட்ட வழியிலும் எங்களுக்கு உதவ முயன்று வருகிறார்கள். |
|
|