World Socialist Web Site www.wsws.org |
Obama’s legacy ஒபாமாவின் மரபுJoseph Kishore ஜனாதிபதியின் வார்த்தைகளோடும் மற்றும் உண்மையான அமெரிக்க சமூக நிலைமைகளோடும் ஓரளவுக்கே தொடர்புடைய அல்லது முற்றிலும் தொடர்பற்ற, பல ஆண்டுகளில் ஒரு வெற்று சம்பிரதாயமாக மாறியுள்ள ஆண்டுதோறும் நடக்கும் அரசியல் பாரம்பரியமான ஜனாதிபதியின் ஒரு காங்கிரஸ் கூட்டு அமர்வு நிகழ்ச்சியில், இன்று மாலை, பராக் ஒபாமா அவரது ஐந்தாவது கூட்டு அமர்வு உரையை நிகழ்த்துவார். இந்த ஆண்டும் வித்தியாசமாக ஒன்றும் இருக்க போவதில்லை. இந்த ஆண்டின் உரைக்கு முந்தைய நாட்களில், நிர்வாக அதிகாரிகள் முக்கிய நடவடிக்கைகள் மீதான எதிர்ப்பார்ப்புகளைக் குறைத்துவிட்டுள்ளனர். அதற்கு பதிலாக, ஒபாமா பதவிக்காலத்தின் "மேன்மைகளை" கூர்மைப்படுத்தும் நோக்கத்தில் ஒரு சில சிறிய முறைமைகள் அந்த உரையில் அறிவிக்கப்படலாம். கடந்த வார இறுதியில் வெளியான நியூ யோர்க் டைம்ஸ் பகுப்பாய்வின்படி, ஒபாமா "அவரது அதிகார வரம்புகளை துல்லியமாக உணரத் தொடங்கி உள்ளார்," ஆனால் "அவரது மரபை வடிவமைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சிநிரலை எடுத்து செல்ல அவர் கூட்டு அமர்வு உரையை முக்கியமான ஒரு வாய்ப்பாக" பார்க்கிறார். அரச எந்திரத்திற்குள் உயர்மட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகளைப் பொறுத்த வரையில், எதார்த்தங்களில் இருந்து பிரிக்கப்பட்ட ஓர் ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் பிளவை பெரும்பான்மை மக்கள் எதிர்கொண்டுள்ள வேளையில், ஒபாமாவின் "மரபு" சமீபத்திய பெருநிறுவன சந்தைப்படுத்தல் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஒருசில வாக்கியங்களால் வடிவமைக்கப்படுகிறது. எவ்வாறிருந்த போதினும், வரலாறு — மற்றும், மிக உடனடியாக, பொதுமக்கள் — தேனொழுகும் வார்த்தைகளின் அடித்தளத்திலிருந்து அல்ல, மாறாக அதன் நடவடிக்கைகளால் நிர்வாகத்தை தீர்மானிப்பார்கள். இந்த நிர்வாகம் எவ்வாறு வரலாற்றுரீதியில் பார்க்கப்படுகிறது என்பதை தீர்மானிக்கும் சில முக்கிய நடவடிக்கைகள் இங்கே அளிக்கப்படுகின்றன: * அது ஒரு அமெரிக்க குடிமகனை விசாரணையின்றி படுகொலை செய்ய உத்தரவிட்டது. CIA உடன் இணைந்த ஒரு பெருநிறுவனத்தில் தனது முதல் வேலையை தொடங்கிய அந்த முன்னாள் அரசியலமைப்பு சட்ட பேராசிரியர், ஓர் அமெரிக்க குடிமகனான அன்வர் அல்-அவ்லாகியை நீதித்துறை புனராய்வின்றி படுகொலை செய்வதற்கு, பகிரங்கமாக ஊக்குவித்த அமெரிக்க வரலாற்றின் முதல் ஜனாதிபதியாவார். வேறு எவரையும் விட அதிகமாக, வாராந்திர கூட்டங்களுக்கு தலைமை வகித்தும் மற்றும் அமெரிக்க டிரோன் ஏவுகணைகளுக்கான இலக்குகளைத் தேர்ந்தெடுக்க "கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியலைத்" தேர்ந்தெடுத்தும், அவரது நிர்வாகம் தான் கூடுதல் அதிகார அரச படுகொலைகளை நிறுவனமயமாக்கவும், அதிகாரத்துவப்படுத்தவும் முனைந்துள்ளது. *அது உலகளாவிய பொலிஸ் அரச உளவுவேலை எந்திரத்தை பாரியளவில் விரிவாக்கியது. எவ்வித தடையுமின்றி செயல்படும் ஓர் உளவுவேலை உபகரணம், தோற்றப்பாட்டளவில் பூமியில் உள்ள ஒவ்வொருவரின் தகவல்தொடர்பையும் கண்காணித்து வருவதை எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் அமெரிக்க மற்றும் உலக மக்களுக்கு அம்பலப்படுத்தி உள்ளன. *அரசாங்க குற்றங்களை அம்பலப்படுத்தியவர்களை அது குற்றவாளியாக்கியது. சட்டவிரோத அரச காரியங்களை அம்பலப்படுத்திய, சிறையில் உள்ள பிராட்லி மேனிங், பிரிட்டனில் ஈக்குவடோரியன் தூதரகத்திற்குள் சிக்க வைக்கப்பட்டிருக்கும் ஜூலியன் அசான்ஜ், மற்றும் நாட்டைவிட்டு வெளியேறி ரஷ்யாவில் தங்க நிர்பந்திக்கப்பட்டுள்ள, அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து மரண அச்சுறுத்தல்களை முகங்கொடுத்து வருகின்ற எட்வார்ட் ஸ்னோவ்டென் ஆகியோரின் தலைவிதிகளின் மூலமாக, ஜனநாயக உரிமைகளுக்கு அந்த நிர்வாகத்தின் மனோபாவம் என்னவென்பது தொகுத்தளிக்கப்படுகிறது. இதற்கிடையில், சித்திரவதைக்கு உத்தரவிட்ட மற்றும் யுத்தக் குற்றங்களை நடத்திய அரசு அதிகாரிகளை தண்டிப்பதை அந்த நிர்வாகம் விடாபிடியாக எதிர்த்துள்ளது. *அது கட்டுப்பாடின்றி யுத்தத்தை நடத்தியது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் புஷ் நிர்வாகத்தின் யுத்தங்களை ஒபாமா தொடர்ந்தார். அவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், யேமன், சோமாலியா மற்றும் ஏனைய நாடுகளில் இருந்த இலக்குகளை நிர்மூலமாக்க எண்ணற்ற டிரோன் ஏவுகணைகளை அனுப்பினார். 2011இல் கேர்னல் மௌம்மர் அல்-கடாபியை ஆட்சியிலிருந்து தூக்கியெறியவும், படுகொலை புரியவும் லிபியாவில் யுத்தம் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில், ஒபாமா நிர்வாகமும் அதன் கூட்டாளிகளும் சிரியாவில், பத்து ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்த மற்றும் மில்லியன் கணக்கான சிரியர்களை அகதிகளாக மாற்றிய ஓர் உள்நாட்டு யுத்தத்தை எரியூட்டி, இஸ்லாமியவாத மேலாதிக்க எதிர்ப்பிற்கு நிதியுதவிகள் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி உள்ளனர். அந்த நிர்வாகம் சீனாவை இராணுவரீதியில் சுற்று வளைக்க மற்றும் பொருளாதாரரீதியிலும் இராஜாங்கரீதியிலும் குழிபறிக்க "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" என்பதை நடத்தி உள்ளது. முதலாம் உலக யுத்தம் வெடித்த 100 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு புதிய உலகளாவிய மோதல் கட்டவிழ்வதற்கான அச்சுறுத்தல்களைக் கொண்ட பிராந்திய பதட்டங்களை அது திட்டமிட்டு தூண்டியுள்ளது. * உலக வரலாற்றில் செல்வவளம் மிகப் பெரியளவில் ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு கைமாற்றுவதை அது மேற்பார்வையிட்டது. வங்கிகளுக்கான 2008 பிணையெடுப்பு மற்றும் புஷ் நிர்வாகத்தின் கீழ் தொடங்கிய "பணத்தைப் புழக்கத்தில் விடும்" திட்டங்கள் ஒபாமாவின் கீழ் பாரியளவில் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. அவரது நிர்வாகம் தோற்றப்பாட்டளவில் கணக்கில்லா ஆதாரவளங்களை வோல் ஸ்ட்ரீட்டின் ஊக வணிகத்திற்கு கிடைக்க வழிவகை செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பெடரல் ரிசேர்வ் முக்கியமாக 1.5 ட்ரில்லியன் டாலருக்கும் கூடுதல் மதிப்பிலான ஒன்றுக்கும் உதவாத அடமான பத்திரங்களை நிதியியல் அமைப்புகளிடம் இருந்து, மற்றும் அமெரிக்க கருவூலத்திடமிருந்து அதையும் விட அதிகமாக, வாங்கி உள்ளது. அது ட்ரில்லியன் கணக்கான டாலர்களை அச்சிட்டிருப்பதோடு, அவற்றை நிதியியல் சந்தைகளுக்குள் பாய்ச்சி உள்ளது. அதன் ஒரு நேரடி விளைவாக, பங்குச் சந்தைகள் வளர்ந்துள்ளன. ஒபாமாவின் முதல் பதவிகாலத்தின் முதல் மாதங்களில் இருந்து டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி இரண்டு மடங்கை விட கூடுதலாக உயர்ந்துள்ளது. அதற்கேற்ப போர்ப்ஸின் 400 மிகப் பெரிய அமெரிக்க பணக்காரர்களின் மொத்த செல்வவளம், 2009இல் 1.27 ட்ரில்லியனில் இருந்து இன்று 2 ட்ரில்லியனுக்கு, அதாவது 60 சதவீத உயர்வோடு, அல்லது 700 பில்லியன் டாலருக்கு அதிகமாக, உயர்ந்துள்ளது. 2009 மற்றும் 2012க்கு இடையே அனைத்து வருவாய் இலாபங்களின் தொண்ணூற்றி ஐந்து சதவீதம் அமெரிக்க மக்கள் தொகையின் ஒரு சதவீத செல்வந்தர்களுக்கு சென்றுள்ளது. பெருநிறுவனங்களின் இலாபங்கள் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு உயர்ந்துள்ளது, அதேவேளையில் சம்பள உயர்வு இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததில் இருந்து குறைந்தபட்ச மட்டங்களில் உள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் 2009 வாகனத்துறை மறுசீரமைப்பிற்குப் பின்னர், வாகனத்துறை தொழிலாளர்களின் நிஜமான கூலிகள் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன மற்றும் உற்பத்தி தொழில்துறையில் கூலிகள் ஒட்டுமொத்தமாக 2.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கூலிகளில் ஏற்பட்ட பொறிவின் விளைவாக, வரலாற்றில் முதல்முறையாக, வேலை செய்யும் வயதுடைய பெரும்பான்மை அமெரிக்கர்கள் உணவு மானிய கூப்பன்கள் பெறுபவர்களாக மாறி உள்ளனர். *அது வோல் ஸ்ட்ரீட் குற்றவாளிகளுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கியது. ஒரேயொரு வங்கியாளர் கூட அவர் செய்த குற்றங்களுக்காக மற்றும் உலக மக்களின் மீது அவர் சுமத்திய பேரழிவுக்காக பொறுப்பாக்கப்படவில்லை. ஒபாமாவிற்கு "விருப்பமான வங்கியாளராக" வாஷிங்டன் பார்வையாளர்களால் அறியப்படும் ஜேபிமோர்கன் சேஸ் தலைமை செயல் அதிகாரி ஜேமி திமோனின் செயல்பாடுகள் ஓர் உச்சமாய் திகழ்கின்ற நிலையில், வோல் ஸ்ட்ரீட் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்க ஒபாமா கவசமாக இருந்து காப்பாற்றி உள்ளார். மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட மற்றும் நன்கு-ஆவணப்படுத்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடையே, திமோன் சுதந்திரமாக நடைபோடுகிறார் என்பது மட்டுமல்ல, மாறாக அவருக்கு 2013க்கான 74 சதவீத சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. *ஒபாமாகேர் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கான மருத்துவ காப்பீடு சிதைக்கப்பட்டதில் தொடங்கி, ஒரு சமூக எதிர்புரட்சியை அது நடத்தியது. ஒபாமா ஒவ்வொரு சமூக திட்டத்தின் மீதும் ஓர் இரக்கமற்ற தாக்குதலை மேற்பார்வை செய்துள்ளார். இன்றிரவு அவரது உரையை அவர் வழங்க உள்ள நிலையில், நீண்டகால வேலையின்மைக்கான உதவிகள் காலவதியாக அனுமதித்த வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸில் உள்ள ஜனநாயக கட்சியினரின் முடிவால், பண உதவிகள் வெட்டப்பட்டுள்ளதோடு, 1.3 மில்லியன் வேலையற்றோர் கடும் வறுமையை முகங்கொடுத்துள்ளனர். கடந்த நவம்பரில் 5 பில்லியன் டாலர் வெட்டு திணிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று, உணவு மானிய கூப்பன் திட்டத்திலிருந்து 8 பில்லியன் டாலர் வெட்ட ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினர் ஓர் உடன்படிக்கையை எட்டினர். உள்நாட்டு அவசரகால செலவுகளுக்கான அமெரிக்க பொருளாதார பங்களிப்பை, 1950களுக்குப் பின்னரில் இருந்து மிகக் குறைந்த அளவாக அவரது நிர்வாகம் குறைத்துள்ளதை ஒபாமா ஊக்குவிக்கிறார். அவரது பிரதான உள்நாட்டு திட்டமான மருத்துவ காப்பீட்டைச் செப்பனிடும் திட்டம், ஒரு பிரம்மாண்ட மோசடியாகும். அது மருத்துவ கவனிப்பை விஸ்தரிப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை, மாறாக அதை சரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. தனிநபர்களின் காப்பீடு பெறும் செலவுகள், தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் குறைந்த தரத்திலான மருத்துவ காப்பீடு ஆகியவற்றை அவரது நிர்வாகம் ஒரு முக்கிய சமூக சீர்திருத்ததிற்கு அவசியப்படுவதாக காட்ட முனைகிறது. 1930கள் மற்றும் 1960'களில் இருந்து தொடர்ந்து வந்த முக்கிய சமூக நல திட்டங்கள், சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றின் மீதான ஒரு தாக்குதலுக்கு ஒபாமாகேர் ஓர் ஆரம்பகட்ட அடியாகும். ஒபாமாவின் மரபு ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நிர்வாகத்திற்கோ மட்டுமான ஒரு குற்றப்பத்திரிக்கை அல்ல, மாறாக அவரது கொள்கைகள் எந்த சமூக மற்றும் அரசியல் அமைப்புமுறையோடு உள்ளார்ந்து உள்ளதோ அதன் மீது வைக்கப்படும் குற்றப்பத்திரிக்கையாக உள்ளது. அமெரிக்க சமூகத்தை இயக்கிச் செல்லும் பாரிய பெருநிறுவன மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரங்களுக்கு ஒபாமா ஒரு விருப்பமான கருவியாக உள்ளார். 2008இல் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அமெரிக்க வரலாற்றில் "மாற்றத்திற்கான" ஒரு சம்பவமாக புகழ்பாடிய, அடையாள அரசியலை தழுவிய, தொழிற்சங்கங்கள் மற்றும் தாராளவாத மற்றும் "இடது" சக்திகளின் ஆதரவோடு அவரது நிர்வாகம் செயல்பட்டு வந்துள்ளது. ஜனாதிபதியின் கூட்டு அமர்வு உரையின் பெரும் பகுதி ஒரு போலி "சீர்திருத்த" பிம்பத்தை வழங்குவதற்கான நோக்கத்தை கொண்டிருக்கும். அதைச் சுற்றி இந்த சக்திகள், ஜனநாயக கட்சிக்கு ஆதரவை முட்டு கொடுக்க மற்றும் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான இயக்கமாக வளர்ந்துவிடாமல் தடுக்க ஒருங்கிணைந்து நிற்க முடியும். ஐந்து வருட கால கசப்பான அனுபவங்களில் இருந்து உருவான கண்ணோட்டங்களை, வாஷிங்டனில் அரங்கேற்றப்படும் ஒரு நிகழ்வைக் கொண்டு ஏதோவிதத்தில் மறைக்க முடியுமென அரசியல் பண்டிதர்கள் நம்புகின்றனர். ஆனால் "நம்பிக்கை" மற்றும் "மாற்றத்திற்கான" வேட்பாளர் என்ற விதத்தில் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் நாட்டின் மனோபாவம் குறிப்பிடும் அளவிற்கு மாறியுள்ளது. மக்களின் பெரும்பான்மை அடுக்கினர் மத்தியில் தற்போது ஆழமான விதத்தில் ஏமாற்றம் வேரூன்றி உள்ளது. அவர்களைப் பொறுத்த வரையில், ஒபாமாவின் உரை பெரிதாக ஒரு விளைவைக் கொண்டு வரப்போவதில்லை. ஆளும் வர்க்கம் நிச்சயமாக மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒன்றும் வழங்கப் போவதில்லை என்பதை, மற்றும் அது வரலாற்று ரீதியில் திவாலாகிப் போன ஒரு பொருளாதார அமைப்புமுறையின் மீது தங்கியுள்ளது என்பதை மக்களுக்கு அவரது நிர்வாகம் எடுத்து காட்டிவிட்டது என்பதே ஒருவேளை ஒபாமாவின் மிக முக்கிய மரபாக இருக்கலாம். அதை தொடர்ந்து உண்டாகும் தீர்மானம் என்னவென்றால், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளால் முடிவெடுக்கப்பட்டு வருவதென்னவென்றால், அந்த அமைப்புமுறை தூக்கியெறியப்பட வேண்டும் என்பதே ஆகும். |
|