தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Democratic rights and the defense of Edward Snowden ஜனநாயக உரிமைகளும், எட்வார்ட் ஸ்னோவ்டெனின் பாதுகாப்பும்
Thomas Gaist and Joseph Kishore Use this version to print| Send feedback தேசிய பாதுகாப்பு முகமையின் திட்டங்களைப் பாதுகாத்து கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி பராக் ஒபாமா வழங்கிய உரையை அடுத்து, அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்கள் இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு எதிரான அவற்றின் அச்சுறுத்தல்கள் மற்றும் அவதூறுகளின் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளன. அமெரிக்க அரசு மற்றும் அதன் கூட்டாளிகளின் பொலிஸ் அரசு கண்காணிப்பு திட்டங்களை அம்பலப்படுத்தியதன் மூலமாக ஓர் பிரதான பொதுச் சேவை புரிந்துள்ள ஸ்னோவ்டென், ஒபாமா நிர்வாகத்தால் உளவுத்துறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை முகங்கொடுத்துள்ளார். மேலும் ஒபாமா நிர்வாகம் அவரை தூக்கிலிட அல்லது கூடுதல் அதிகாரத்தின் கீழ் படுகொலை செய்ய கோருகிறது. அமெரிக்க அரசியலமைப்பிற்கு விரோதமாக தேசதுரோகமிழைத்து குற்றவாளிகளாக உள்ளவர்கள், அவர்களின் குற்றங்களை அம்பலப்படுத்தி உள்ள ஒரு மனிதருக்கு எதிராக "தேசதுரோக" குற்றமென்று கூச்சலிட்டு வருகிறார்கள். வியாழனன்று, அமெரிக்க அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டெர், இது " அதிக தூரம் சென்று கொண்டிருக்கிறது " என்று கூறி, ஸ்னோவ்டெனுக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரிய பரிந்துரைகளை முதல்முறையாக வெளிப்படையாக நிராகரித்தார். அரசு இரகசியங்களைக் காட்டிகொடுத்தமைக்காக ஸ்னோவ்டென் குற்றவாளியாவார், “நீதி அமைப்பின்" கரங்களில் தம்மைத்தாமே ஒப்படைத்து, குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்க அவர் அமெரிக்கா திரும்ப வேண்டுமென்று கடந்த வாரம் ஒபாமா அவரது உரையில் வலியுறுத்தியதை ஹோல்டெரும் எதிரொலித்தார். அதே "நீதி அமைப்பு" தான் பிரட்லி மேனிங்கை சித்திரவதை செய்து, 35 ஆண்டுகள் அவரை சிறையில் அடைத்துள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு செனட்டால் அங்கீகரிக்கப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட, பிரத்யேக தனிநபர் விடயங்கள் மற்றும் மக்கள் சுதந்திரங்களை மேற்பார்வையிடும் ஆணையத்திடமிருந்து (Privacy and Civil Liberties Oversight Board – PCLOB) ஓர் அறிக்கை வெளியான அதே நாளில் ஹோல்டெரின் கருத்துக்கள் வந்திருந்தன. சர்ச்சைக்குரிய திட்டங்கள் சட்டப்பூர்வமற்ற விதத்தில் இருப்பதை அந்த ஆணையம் ஒப்புக் கொண்டது. ஸ்னோவ்டெனால் அம்பலப்படுத்தப்பட்ட பிரதான திட்டங்களில் ஒன்றான, தொலைபேசி உரையாடல்களின் ஒட்டுமொத்த சேகரிப்பிற்கு “ஒரு நம்பகமான சட்ட அடித்தளம் இல்லை", மேலும் "முதல் மற்றும் நான்காம் அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அரசியலமைப்பு சிக்கல்களோடு தொடர்புபட்டுள்ளது,” என்று அந்த ஆணையம் முடிவுக்கு வந்திருந்தது. ஒளிவுமறைவற்ற மொழியில் கூறுவதானால், NSA திட்டங்கள் சட்டவிரோதமானவை மற்றும் அரசியலமைப்பிற்கு புறம்பானவை ஆகும். PCLOBஇன் முடிவுகள், ஓர் உத்தரவாணையோ அல்லது பொருத்தமான காரணமோ இல்லாமல் நூறு மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் தகவல்களைச் சேகரித்த உளவுவேலை திட்டங்களின் உள்ளடக்கத்தை ஏதோவிதத்தில் புறநிலையாக ஆராய்ந்ததில் இருந்து தப்பிக்கவியலாதபடிக்கு எழுகிறது. எவ்வாறிருந்த போதினும், வெள்ளை மாளிகை உடனடியாக அந்த ஆணையத்தின் முடிவுகளை நிராகரித்ததோடு, திட்டத்தை நிறுத்த வேண்டுமென்ற அதன் பரிந்துரையையும் நிராகரித்தது. ஒபாமாவின் உரையால் ஊக்கப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட ஸ்னோவ்டென் மீதான வேட்டை, காங்கிரஸில் உள்ள ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் முன்னணி அங்கத்தவர்கள் ரஷ்ய அரசின் ஓர் உளவாளியாக ஸ்னோவ்டென் செயல்படுகிறார் என்று குற்றஞ்சாட்டிய போது, கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து முனைப்போடு தொடங்கியது. “Meet the Press” நிகழ்ச்சியில் தோன்றிய குடியரசு கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் உளவுத்துறை கமிட்டி தலைவர் மைக் ரோஜர்ஸ், ஸ்னோவ்டெனை "ஒரு திருடரென்று" வர்ணித்தார், “அவர் சிலரிடமிருந்து உதவிகளைப் பெற்றிருந்தார் என்று நாங்கள் நம்புகிறோம்; பிரத்யேக தனிநபர் விடயங்களோடு சிறிதும் தொடர்பற்ற, ஆனால் அதற்கு மாறாக அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நாம் எவ்வாறு தகவல்களைச் சேகரிக்கிறோம் என்பது குறித்த பரந்த பெரும்பான்மை தகவல்களை அவர் திருடி உள்ளார்,” என்றார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த செனட்டின் உளவுத்துறை கமிட்டி தலைவர் டேனி பெயின்ஸ்டீன், ரஷ்யர்களுக்காக ஓர் உளவாளியாக “அவர் வேலை செய்து கொண்டிருக்கலாம்,” என்று கூறி, ரோஜரின் முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு நம்பகத்தன்மையை வழங்கினார். உண்மையில் வேறெந்த நாட்டிற்குள்ளும் அவரை நுழைய விடாமல் செய்ய அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சர்வதேச பிரச்சாரத்தின் விளைவாகவே ஸ்னோவ்டென் ரஷ்யாவில் இருக்கிறார் என்ற உண்மை மேலோட்டமாக கைவிடப்பட்டது. கடந்த கோடையில் மாஸ்கோவின் ஸ்ரெமெட்யெவோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்னோவ்டென் வெளியேறுவதைத் தடுக்கும் அதன் முயற்சியில் அமெரிக்காவும் மற்றும் அதன் கூட்டாளிகளும் NSA ஒப்பந்ததாரராக இருந்து இரகசியங்களை வெளியிடுபவராக மாறியவர் விமானத்தில் தப்பி செல்கிறார் என்ற சந்தேகத்தின் மீது பொலிவியன் ஜனாதிபதியின் விமானத்தைத் தரையிறக்கும் அளவிற்கு சென்றனர். ரஷ்யர்களுக்கு வேலை செய்வதாக அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு விடையிறுப்பாக, ஸ்னோவ்டென் New Yorker இதழின் ஒரு நேர்காணலில் பதிலளித்தார், “இந்த அவதூறுகள் எனக்கு புதிரானவை அல்ல. அப்படி பேசுபவர்களே முற்றிலும் ஊகத்தில் பேசுகிறார்கள் என்பதை அதே [ஊடக] வெளியீடுகளின் செய்திகள் குறிப்பிடுகின்றன,” என்றார். எவ்வாறிருந்த போதினும், ஸ்னோவ்டென் மீதான தாக்குதல் உண்மையின் அடித்தளத்தில் இல்லை, மாறாக பழியுரைகள் மற்றும் பொய்களின் அடிப்படையில் உள்ளன. அரசின் இரகசியங்கள் மற்றும் குற்றங்களை அம்பலப்படுத்திய மன்னிக்க முடியா குற்றத்திற்காக, ஸ்னோவ்டென் சிறையில் அடைக்கப்படுவார் அல்லது அதனினும் மோசமாக நடத்தப்படுவார். இந்த வாரம், ஸ்னோவ்டென் ரஷ்யாவில் உள்ளூர் அதிகாரிகளிடம் பாதுகாப்பிற்கு விண்ணப்பித்தார். அந்த நகர்வை விளக்கி, அவரது வழக்கறிஞர் ஊடகங்களுக்கு கூறுகையில், “எட்வார்ட் உண்மையிலேயே அவரது வாழ்வும், பாதுகாப்பும் ஆபத்தில் இருப்பதாக நம்புகிறார்,” என்றார். இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளோடு நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில், “அமெரிக்க உளவாளிகள் எட்வார்ட் ஸ்னோவ்டெனின் மரணத்தை விரும்புகின்றனர்,” என்ற ஆத்திரமூட்டும் தலைப்பின் கீழ் ஒரு Buzzfeed அறிக்கை வெளியானதை அடுத்து, ஒரு சிறந்த காரணத்திற்காக, ஸ்னோவ்டெனின் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. “நான் அவரது [ஸ்னோவ்டெனின்] தலையில் ஒரு புல்லட்டைப் பாய்ச்ச விரும்புகிறேன்,” “அவர் அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய தனிமனித தேசத்துரோகி,” என்ற ஒரு பெண்டகன் அதிகாரியின் கூற்று மேற்கோளிட்டு காட்டப்பட்டது. வெளிநாட்டில் இருக்கும் ஒரு பாதுகாப்புத்துறை ஒப்பந்ததாரர் அறிவித்தார், “நான் பேசியவர்களில் பெரும்பான்மையினர் அவரை முயன்று பிடித்து தூக்கில் தொங்கவிட வேண்டும்; விசாரணையே தேவையில்லை, நேரடியாக அவரை தூக்கில் தொங்க விடுங்கள் என்று கூறுகின்றனர்.” தற்போதைய ஒரு NSA பகுப்பாய்வாளர் கூறுகையில், நான் தடுக்கப்படாமல் விடப்பட்டால், “தனிபட்ட விதத்தில் நானே போய் அவரை கொன்று விடுவேன்,” என்றார். இத்தகைய பாசிய உணர்வுகள் அரசு மற்றும் ஊடக உபகரணங்களுக்குள் வியாபித்துள்ளன. புதனன்று, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் டானியல் ஹென்னின்ஹரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையைப் பிரசுரித்தது. அதில் அந்த கட்டுரையாளர் முழு ஒப்புதலோடு எழுதினார், “ஒரு பிரபலமான அமெரிக்கராக திரு. ஸ்னோவ்டெனின் எதிர்காலம் போல் ரிவெரைக் காட்டிலும் ரோசென்பேர்க்ஸிற்கு மிக நெருக்கத்தில் வைக்கப்படும்." அதாவது அமெரிக்க வரலாற்றில் மிகவும் அவமதிக்கத்தக்க அரசியல் தண்டனைகள் மற்றும் நீதித்துறை ஏளனங்களில் ஒன்றில் பாதிக்கப்பட்ட ஒருவரின் தலைவிதியைப் போன்று அவர் அனுபவிக்க வேண்டும் என்பதாகும். அரசு கண்காணிப்பிற்கு கிளம்பும் எதிர்ப்பானது, "மக்களின் சித்த பிரமையின்" ஒரு வெளிப்பாடு என்று வாதிடுமளவிற்கு ஹென்னின்ஹர் சென்றார். சர்வதேசரீதியில் ஒருங்கிணைந்த ஒரு பழிவாங்கும் நடவடிக்கையின் பாகமாக விளங்கும் அதுபோன்ற அறிக்கைகள் வியாழனன்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷப்பின் கருத்தில் அடிகோடிடப்பட்டது. ஸ்னோவ்டென் "முன்னொருபோதும் நடந்திராத தேசதுரோகத்திற்காக" குற்றவாளியாவார், மேலும் "ரஷ்யாவில் பதுங்கியிருந்து அவரது நாட்டை வெட்கமின்றி காட்டிக்கொடுப்பதை தொடர்கிறார்" என்று அவர் ஒரு வாஷிங்டன் DC சிந்தனை கூடத்திற்கு தெரிவித்தார். உளவு முகமைகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கங்களின் வெறிபிடித்த விடையிறுப்பானது ஸ்னோவ்டென் மீதான வெறுப்பிற்கு மட்டும் ஒரு வெளிப்பாடாக இல்லை, மாறாக பரந்த மக்கள் எதிர்ப்பின் மீதிருக்கும் அச்சத்திற்கு காட்டப்படும் வெளிப்பாடாக உள்ளது, அதில் ஸ்னோவ்டென் ஒரு விடயமாக உள்ளார். அந்த சட்டவிரோத திட்டங்களைத் தொடர்வதை நோக்கமாக கொண்ட அரசியல் ஸ்தாபகத்தின் பொய்கள் மற்றும் சூழ்ச்சிகள், பிரதான ஜனநாயக உரிமைகள் மீறலுக்கு நிலவும் ஆழ்ந்த கோபத்தையோ, அல்லது ஸ்னோவ்டெனுக்கே கூட பரந்த மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவையோ கணக்கில் எடுக்கவில்லை. ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதற்குப் பின்னால், மிகப் பணக்கார ஆளும் செல்வந்த தட்டு உலகில் ஒடுக்கப்படும் மற்றும் சுரண்டப்படும் மக்களுக்கு எதிராக அதன் நலன்களைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் தங்கி உள்ளன. ஸ்னோவ்டெனுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் கொடிய அணுகுமுறைகளில், தொழிலாளர்களும் முன்-அனுபவத்தை பெற்று வருகிறார்கள். அரசைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவத்திற்கு எதிரான அனைத்து சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பில் அந்த முறைகள் பயன்படுத்தப்படும். உலக சமூகம் ஒரு செல்வந்தர் ஆட்சியால் (புளூட்டோகிரசி) மேலாதிக்கம் செலுத்தப்படுகிறது, அதன் பரந்த அதிகாரம் மற்றும் தனிச்சலுகைகளுக்கு ஜனநாயக உரிமைகள் பொருத்தமற்றதாக உள்ளன. உலக செல்வ வளத்தின் சமத்துவமின்மை குறித்து கடந்த திங்களன்று வெளியான ஆக்ஸ்பாம் அறிக்கை, உலகின் 85 மிகப் பணக்கார தனிநபர்கள் 3.5 பில்லியன் மிக ஏழை மக்களின் செல்வ வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதாக, மற்றும் மக்கள்தொகையில் 1 சதவீத மிகப் பெரிய பணக்காரர்கள் பூமண்டலத்தின் மொத்த செல்வ வளத்தின் 46 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதாக எடுத்துக்காட்டியது. சர்வதேச தொழிலாள வர்க்கம் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு ஆதரவாக எழ வேண்டும். இது ஒபாமா நிர்வாகம், அரசியல் ஸ்தாபகம் மற்றும் அவர்கள் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான எதிர்ப்பில் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க ஓர் சுயாதீனமான இயக்கமாக அபிவிருத்தி அடைவதோடு இணைக்கப்பட வேண்டும். |
|
|