தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
உலகளாவிய செல்வந்தர் ஆட்சி
Andre Damon and Barry Grey Use this version to print| Send feedback சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உள்ள அல்பைன் மகிழ்விட நகரில் நடந்துவரும் உலக பொருளாதார மாநாடு, ஒட்டுண்ணித்தனமாக வளர்ச்சியடைந்த செல்வம் மற்றும் அதிகாரத்தின் ஆண்டு கண்காட்சியாக விளங்குகின்ற சூழலில், ஆக்ஸ்பாம் அறக்கட்டளை உலகெங்கிலும் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சமூக சமத்துவமின்மை வளர்ந்திருப்பதை எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு கிரகம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில செல்வந்தர்களின் தீய பிடியில் இருப்பதாக விவரிக்கும் அந்த அறிக்கை, உலகின் 85 மிகப் பெரிய செல்வந்தர்கள், உலக மக்கள் தொகையில் அடியிலுள்ள ஐம்பது சதவீத மக்களுடைய (அதாவது 3.5 பில்லியன் மக்கள்!) செல்வ வளத்திற்கு இணையான செல்வத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றது. ஒரு சதவீத மிகப் பெரிய செல்வந்தர்கள் இன்று உலக செல்வ வளத்தின் 46 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதாக அது குறிப்பிடுகிறது. ஆக்ஸ்பாம் எழுதுகிறது: “உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களின் செல்வம் 110 ட்ரில்லியன் டாலருக்கு உள்ளது... அது உலக மக்கள்தொகையில் அடியிலுள்ள பாதி மக்களின் மொத்த செல்வத்தை விட 65 மடங்காகும்.” 2008இல் இருந்து, வேறெந்த அபிவிருத்தி அடைந்த நாட்டையும் விட அமெரிக்காவின் சமூக சமத்துவமின்மை மிக அதிகளவில் உயர்ந்துள்ளதை எடுத்துக்காட்டும் ஒரு வரைபடத்தையும் அந்த அறிக்கை இணைத்துள்ளது.
அந்த ஆண்டில் வோல் ஸ்ட்ரீட் முறிவுக்குப் பின்னரில் இருந்து, ஒருபுறம் தொழிலாள வர்க்கத்தின் வறுமையும், மறுபுறம் நிதியியல் மேற்தட்டு மேலதிகமாக செழித்தோங்கியமையும் தீவிரமாக அதிகரித்துள்ளன. உலக பில்லினியர்களின் செல்வவளம் இரட்டிப்பாகி உள்ள அதேவேளையில், இன்று 1 பில்லியனுக்கும் மேலான மக்கள் நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர், மற்றும் உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதியளவிற்கு, 3 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், நாளொன்றுக்கு 2.50 டாலருக்கும் குறைந்த தொகையில் பிழைக்க விடப்பட்டுள்ளனர். ஆக்ஸ்பாம் அதன் ஆய்வறிக்கையை வெளியிட்ட அதேநாளில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது 2013இல் உலகம் முழுவதிலும் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 5 மில்லியன் உயர்ந்து, 202 மில்லியனுக்கு அதிகரித்துவிட்டதாக குறிப்பிட்டது. வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 2014இல் தொடர்ந்து அதிகரிக்குமென்று ILO அனுமானித்தது. இன்றிருப்பதை போல செல்வம் ஒரேயிடத்தில் குவிந்திருப்பதற்கோ அல்லது "புதிய நடைமுறைகளாக" ஏற்பட்டுள்ள உயர்ந்தளவிலான ஒட்டுண்ணித்தனம் மற்றும் சீரழிவிற்கோ மனித வரலாற்றில் வேறெங்கும் சமாந்திரம் இல்லை. ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் மற்றும் ஊடக தலையாட்டிகளும் எதை "கட்டுப்பாடற்ற நிறுவன அமைப்புமுறை" என்று அழைக்கின்றனவோ—அந்த சமகாலத்திய முதலாளித்துவம் உருவாக்கி உள்ள உலகின் ஒவ்வொரு கொள்கை முடிவும் உலக மக்கள் தொகையின் ஒரு மிகச் சிறிய அற்பத்தனமான பிரிவின் செல்வ வளத்தை பாதுகாக்கும் மற்றும் அதிகரிக்கும் தேவையால் வழிநடத்தப்படுகிறது. இந்த உலகளாவிய புளூட்டோகிரசி (செல்வந்தர் ஆட்சி plutocracy) —வரையறையில் கூறுவதானால், செல்வந்தர்களால் நடத்தப்படும் ஒரு சமூகம்— மிக அதிகளவிலான மற்றும் எப்போதும் அதிகரித்து கொண்டே வந்திருக்கும் ஆளும் வர்க்கத்தின் செல்வ வளத்தை, உபயோகமான பண்டங்களின் உற்பத்தியில் இருந்தோ அல்லது சமூகத்தின் உற்பத்தி திறன்களின் விரிவாக்கத்தில் இருந்தோ உருவாக்குவதில்லை, மாறாக பணப்புரட்டு, ஊக வணிகம் மற்றும் அப்பட்டமான மோசடித்தனத்திலிருந்து, முக்கியமாக உற்பத்தி சக்திக்கு பேரழிவை உண்டாக்கும் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து உருவாக்குகின்றன. ஊழல்மிக்க அரசியல்வாதிகள், கல்வித்துறை அனுதாபிகள், புத்திஜீவித மாயாவிகள், அனைத்துவிதமான வித்தகர்கள், இராணுவம் மற்றும் பொலிஸின் ஒடுக்குமுறை சக்திகள் என ஒரு கூட்டத்தால் ஆதரிக்கப்பட்ட ஒரு சில நூறு மக்கள், நாகரிக வளர்ச்சியின் குரல்வளையை பிடித்துள்ளனர், மேலும் தங்களின் தீரா பேராசையைத் திருப்திப்படுத்த அதை அழிக்க அச்சுறுத்துகின்றனர். இந்த சமூக கூறுகள், அல்லது மிக துல்லியமாக கூறுவதானால் சமூக-விரோத கூறுகள், மக்களுக்கு கொடுமையான விதத்தில் விரோதமாக இருப்பதோடு, ஜனநாயக உரிமைகளை அலட்சியப்படுத்துவதுடனும், இராணுவ போக்கிலும் உள்ளன. அதன் தனிப்பட்ட செல்வ வளத்தை விரிவாக்கும் அதன் முயற்சியில், அது மக்கள் தொகையின் மிக பரந்த பெரும்பான்மையாக விளங்கும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களை இரக்கமில்லாமல் தாக்குகின்றன. புளூட்டோகிரசியின் கட்டுப்பாட்டில் உள்ள உலகம் முழுவதிலும் உள்ள அரசுகள் இன்னும் கூடுதலாக வலிநிறைந்த சிக்கன நடவடிக்கைகளை, ஊதிய வெட்டுக்களை, வேலை குறைப்புகளை, சமூகநல திட்டங்களை தகர்ப்பதை, பாடசாலைகளை மூடுவதை, மருத்துவ கவனிப்புகளை துண்டாடுவதைத் திணிக்கின்றன. வங்கிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் பிணையெடுப்பு வழங்க அரசு கருவூலங்கள் காலியாக்கப்பட்டுள்ளன; பங்குச் சந்தைகளின் விலைகளை, பெருநிறுவன இலாபங்களை மற்றும் தலைமை நிர்வாகிகளின் சம்பளங்களை உயர்த்த, மத்திய வங்கிகள் ட்ரில்லியன் கணக்கில் நிதியியல் சந்தைகளுக்குள் பாய்ச்சுகின்றன. இலாபம் சம்பாதிப்பதற்கான அனைத்து சட்டபூர்வ கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கையாள, அரசாங்கங்கள் திட்டமிட்டு தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பை குற்றங்களாக்குகின்றன. ஐரோப்பா முழுவதிலும் உள்ள நாடுகளில், ஒவ்வொரு முக்கிய வேலைநிறுத்தமும் சட்ட தடைகள் மற்றும் பொலிஸ் வன்முறையை எதிர்கொண்டுள்ளன. சமூக புரட்சியின் சாத்தியக்கூறால் ஸ்தம்பித்து, முன்னாள் தேசிய பாதுகாப்பு முகமையின் ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் அம்பலப்படுத்தியதைப் போல, அவர்கள் ஓர் உலகளாவிய சர்வாதிபத்திய பொலிஸ் அரசின் உள்கட்டமைப்பை நிலைநிறுத்தி வருகின்றனர். ஒன்றுக்கொன்று போட்டிபோடும் செல்வந்த குழுக்கள், தங்களின் நடவடிக்கைகளுக்கான அடித்தளமாக தேசிய அரசுகளைப் பயன்படுத்தி, பலவீனமான நாடுகள் மீது தாக்குதல் நடத்தி, அவற்றை ஈவிரமில்லாமல் ஆக்கிரமித்து கொள்ளையடிக்கின்றன; மரணத்தையும் பேரழிவுகளையும் ஏற்படுத்துகின்றன. பிராந்தியங்கள், சந்தைகள், ஆதார வளங்கள் மற்றும் மலிவு கூலி உழைப்புகளைக் கட்டுப்பாட்டில் பெற தங்களின் எதிரிகளுக்கு எதிரான போராட்டத்தில், அவை இந்த பூமியை ஓர் ஆயுத கூடாரமாக மாற்றிவிடுகின்றன என்பதோடு மனிதயினத்தை அதுவும் இந்தமுறை அணுஆயுதங்களைக் கொண்டு நிர்மூலமாக்கும் சாத்தியக்கூறோடு, ஒரு மூன்றாம் உலக யுத்தத்திற்குள் தள்ள அச்சுறுத்துகின்றன. செல்வந்தர்களும், பெரும் செல்வந்தர்களும் இந்த வாரம் டாவோஸில் காட்சி தருவார்கள், ஆண்டு நிகழ்வான அதில் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற உலக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பில்லியனர் வங்கியாளர்களுக்கும் பெருநிறுவன தலைமை செயலதிகாரிகளுக்கும் தலை வணங்கி மரியாதை செலுத்த வருவார்கள். ஒரு விமர்சகரின் வார்த்தைகளில், உலகளாவிய நிதியியல் மேற்தட்டு "[இறகுகளால் ஆன] மின்க் உடையணிந்த வெற்றித்திருமகள்கள் வரிசையாக செல்வதைப் போல, அவர்களின் ஹெலிகாப்டர்களில் 5,000 அடி உயரமுள்ள சுவிஸ் ஆல்ஃப்ஸ் மலையில் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள தயாரிப்பு செய்து வருகின்றனர்." இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான செலவு, CNNஆல் மதிப்பிடப்பட்ட வகையில் சுமார் ஒரு நபருக்கு 40,000 டாலர் ஆகிறது, இது அமெரிக்காவில் ஒரு சாதாரண தொழிலாளி ஓராண்டில் சம்பாதிப்பதற்கு மேலாக ஏறத்தாழ 50 சதவீதம் அதிகமாகும். சமூக சமத்துவமின்மையின் "பிரச்சினை" விவாதத்தின் மைய விடயமாக இருக்குமென்று இந்த மாநாடு அறிவித்துள்ளது. இந்த குற்றத்தனமான அடுக்கின் மீதான கோபம் உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் அதிகளவில் அதிகரித்து வருகிறது, அதை அவர்கள் வெறுப்பதோடு அவமதிக்கிறார்கள். அந்த கோபம் நடவடிக்கையில் வெளிப்பட வெறும் சில மணி நேரங்களே ஆகும். பணம்படைத்த உயரடுக்கு பிரமாண்டமான சமூக எழுச்சி மற்றும் புரட்சியின் ஆவியுருவால் பீதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பாரிய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியில் அதை அனுபவித்துள்ளனர். அது தான் எகிப்தில் முபாரக் சர்வாதிகாரத்தை பதவியில் இருந்து இறக்கியது. அவர்கள் ஐரோப்பாவில் சமூக வெடிப்புகளைக் கண்டுள்ளனர் மற்றும் அமெரிக்காவில் வரவிருக்கின்றன எழுச்சிகளின் முன்நிகழ்வுகளையும் கண்டுள்ளனர். அவர்களால் அதிகாரத்தைத் தக்கவைத்திருக்க முடிந்ததென்றால் அது அனைத்திற்கும் மேலாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகத்தால் ஆகும். மேலும் தங்களைத் தாங்களே "இடது" என்று அழைத்துக் கொள்ளும், அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி, மற்றும் கிரீஸில் சிரிசா போன்ற வலதுசாரி அமைப்புகளில் உள்ள அவற்றின் அனுதாபிகள் வழங்கிய உதவிகளாலும் ஆகும். முதலாளித்துவ அமைப்புமுறையின் மிக நுண்மையான மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட பாதுகாவலர்கள், தற்போதைய நிலைமை நீடிக்க முடியாதென்பதை எச்சரித்து வருகின்றனர். கடந்த வாரம், பைனான்சியல் டைன்ஸின் தலைமை பொருளாதார விமர்சகர் மார்டின் வொல்ஃப், "தோல்வியடைந்துவரும் மேற்தட்டுக்கள் எமது எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் சமூக புரட்சியின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது குறித்து எச்சரித்தார். முதலாளித்துவத்தின் மரண ஓலத்திற்கு சமிக்ஞை காட்டிய மற்றும் அதற்கடுத்த மூன்று ஆண்டுகளில் ரஷ்ய புரட்சிக்கு வித்திட்ட முதல் உலகளாவிய பேரழிவான முதலாம் உலகப் போரின் 100வது நினைவுதினத்தை மேற்கோளிட்டு காட்டி, வொல்ஃப் பின்வருமாறு எச்சரித்தார்: “பூகோளமயப்பட்ட பொருளாதார மற்றும் நிதியியல் மேற்தட்டு … அவர்களை உருவாக்கிய நாடுகளில் இருந்து முன்பைவிட அதிகமாக விட்டுவிலகி நிற்கிறது … பொருளாதார வளர்ச்சியின் ஆதாயங்கள் ஒரு மிகச் சிறிய வட்டத்திற்குள் பகிர்ந்து கொள்ளப்பட்டமை பெருமளவிற்கு இந்த அபிவிருத்தியை விஸ்தரிக்கிறது. இதனால், இது முன்பைவிட அதிகமாக செல்வந்தர்கள் ஆளும் ஒரு சமூகமாக மாறி உள்ளது.” அவர் எழுதினார், 2008 நிதியியல் முறிவிலிருந்து, “பொருளாதார, நிதிய, புத்திஜீவித மற்றும் அரசியல் மேற்தட்டுக்கள்" தங்களைத்தாங்களே மதிப்பிழக்க செய்து கொண்டுள்ளன. அவர் இவ்வாறு முடித்திருந்தார், “மேற்தட்டுக்கள் தோல்வி அடைந்தால், பரந்த மக்களின் கோபம் அதிகரிப்பதை நாம் பார்க்க போகிறோம். மேற்தட்டுக்கள் சிறப்பாக செயல்பட வேண்டி உள்ளது. அவர்கள் செய்யவில்லை என்றால், சீற்றம் நம் அனைவரையும் மூழ்கடித்துவிடும்.” உலக மக்கள் இந்த கேள்வியை முகங்கொடுத்துள்ளனர், அதாவது: இந்த பூமியின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கும் இந்த சமூக-விரோத மற்றும் குற்றவியல் அடுக்கை என்ன செய்வது? ஆக்ஸ்பாம் செய்ய சொல்வதைப்போல, இந்த செல்வராட்சியின் "நல்ல தேவதைகளுக்கு" முறையிடுவதால் எதையும் மாற்றிவிட முடியாது. அல்லது வொல்ஃப் செய்ய சொல்வதைப் போல, மேற்தட்டின் அறிவார்ந்த பேராசிரியர்களிடம் முறையிடுவதாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை. சமூகத்தைத் துப்புரவாக்க மற்றும் அடிப்படை உயிர் வாழ்விற்கான ஒரு விடயமாக, இந்த ஒட்டுண்ணித்தனமான அடுக்கின் செல்வ வளம் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் அதை கைப்பற்றி, வேலைகள், மருத்துவ பராமரிப்பு, கல்வி, வீட்டுவசதி, ஊட்டச்சத்து, கலாச்சாரம் மற்றும் கலைகளைப் பெறுவது போன்ற அத்தியாவசிய சமூக தேவைகளை பூர்த்தி செய்ய அவற்றைப் பயன்படுத்த வேண்டும். நிதி மற்றும் தொழில்துறையின் மீது பெருஞ்செல்வந்தர் ஆட்சியின் மரணப்பிடி உடைக்கப்பட வேண்டும். வங்கிகளும் பெருநிறுவனங்களும் தனியார் கரங்களில் இருந்து எடுக்கப்பட்டு, பொதுவுடைமை மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தப்பட வேண்டும். அங்கே இருக்கும் ஒரேயொரு வழி, சமூகத்தை புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டும் மற்றும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதைக் கொண்டும் மட்டுமே இவற்றை செய்து முடிக்க முடியும். |
|
|