World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan army commander issues threat against “separatists” இலங்கை இராணுவத் தளபதி "பிரிவினைவாதிகளுக்கு" எதிராக அச்சுறுத்தல் விடுக்கின்றார்
By K. Ratnayake அக்டோபர் 16, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்னாயக்க, "பிரிவினைவாதிகள்" அரசியல் ரீதியில் செயற்பட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அப்பட்டமாக எச்சரித்தார். அவர் வடக்கில் தீவின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட பிரதேசமான வன்னி மாவட்டத்தில், வவுனியாவில் உள்ள பாதுகாப்பு படை தலைமையகத்தில் துருப்புக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இராணுவ தளபதி இலக்கு, வெறுமனே 2009ல் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளின் மிச்சசொச்சங்கள் அல்ல. மாறாக, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வளர்ச்சியடைகின்ற நிலையில், அவர் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம்களுமாக முழு உழைக்கும் மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்றார். ரட்நாயக்க அறிவித்ததாவது: "ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் ஒரு ஜனநாயக சமூகத்தில் எவரும் வாழ முடியும், ஆனால் யாரும் ஜனநாயக எல்லைகளுக்கு வெளியே சென்று தீவிரவாதிகளாகி நாட்டை பிரிக்க முயற்சித்தால், அவர்களது தலைகள் மட்டுமே அவர்களின் உடல்களில் இருந்து பிரிக்கப்படும், என்பதே சமூகத்திற்கு எங்களுடைய செய்தி." கடந்த மாதம் வட மாகாண தேர்தலில் "தமிழ் கட்சி" (தமிழ் தேசிய கூட்டமைப்பு) வெற்றி பெற்றதனால், சில குழுக்கள், அந்த தேர்தல் முடிவை தனி அரசுக்கான ஒரு மக்கள் ஆணையாக எடுத்துக்கொண்டுள்ளதோடு நாட்டை மீண்டும் பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார். வடக்கில் அதன் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு விரோதமான எந்தவொரு எதிர்ப்பையும் இராணுவம் பொறுத்துகொள்ளாது முடியாது என்ற எச்சரிக்கையே ரட்நாயக்கவின் கருத்துக்கள் விடுக்கின்றன. லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க ஜனநாயகத்தைப் பற்றி குறிப்பிடுவது ஒரு கேலிக்கூத்தாகும். வட மாகாணத்தில் மக்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இராணுவ ஆக்கிரமிப்பு மேலாதிக்கம் செலுத்துகிறது. இராணுவத்தின் படி, வடக்கில் 40,000 துருப்புக்கள் இருக்கின்றன. ஆனால் ஏனைய மதிப்பீடுகள் மிக உயர்ந்த எண்ணிக்கையை காட்டுகின்றன. பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, செப்டம்பர் 21 நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களை வென்றது. எனினும், உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு மீது நம்பிக்கை வைத்ததானால் அதற்கு வாக்களிக்கவில்லை. மாறாக 2006ல் யுத்தத்தை மீண்டும் தொடங்கிய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தின் மீதான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவே வாக்களித்தனர். கூட்டமைப்பு, புலிகள் தோல்வியடையும் வரை அதன் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்டது. 2009ல் இருந்துதான், இராஜபக்ஷ அரசாங்கத்துடன் ஒரு அரசியல் உடன்பாட்டுக்கு அது முயற்சிக்கின்றது. தமிழ் உயர்தட்டினரின் நலன்களுக்காக ஒரு அதிகார பரவலாக்கல் ஒழுங்கமைப்புக்காக பேரம் பேச வட மாகாண சபையில் தனது கட்டுப்பாட்டை பயன்படுத்துவதே அதன் திட்டமாகும். சர்வதேச கண்காணிப்பாளர்கள் உட்பட்ட தேர்தல் கண்காணிப்பு குழுக்களும், இராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐ.ம.சு.மு.) வேட்பாளர்களுக்கு இராணுவம் உதவிசெய்ததாக குற்றம் சாட்டினர். எனினும், உழைக்கும் மக்கள் மிகப்பெருமளவில் சுதந்திர முன்னணியை நிராகரித்துள்ளனர். அரசாங்கமும் இராணுவமும் வட மாகாணத்திற்கு வழங்கிய அபிவிருத்தி உதவிக்கு வாக்காளர்கள் நன்றிகாட்டவில்லை என்றும் இராணுவ தளபதி குற்றம் சாட்டினார். அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம் என்று கூறப்படுவது உழைக்கும் மக்களுக்கு உதவ அல்ல, மாறாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதையே இலக்காகக் கொண்ட உள்கட்டமைப்பு திட்டங்களாகும். "பிரிவினைவாதிகளுக்கு" எதிரான இராணுவத் தளபதியின் அப்பட்டமான அச்சுறுத்தல், தங்கள் வாழ்க்கை நிலைமைகள் மோசமாகி வருவதையிட்டு உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ச்சியடையும் அமைதியின்மை பற்றி நாட்டின் ஆளும் உயரடுக்கு விழிப்படைந்துள்ளதையே பிரதிபலிக்கின்றது. லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்னாயக்க, நாட்டை பிரிக்க முயன்றவர்களுடன் இலங்கை எப்படி நடந்துகொண்டது என்பதை உலகம் முழுவதும் கண்டுள்ளது என அறிவித்து, தனது எச்சரிக்கையை கோடிட்டுக் காட்டினார். அவர் குறிப்பாக, மற்ற விடுதலை புலிகளின் சிரேஷ்ட தலைவர்களுடன் சேர்த்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் மோதலின் இறுதி நாட்களில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார். சிலர் நிராயுதபாணிகளாக்கப்பட்டு சரணடைந்தனர். வழமைபோல் இராணுவமே போர் குற்றங்களுக்கு பொறுப்பு என்பதை அரசாங்கமும் இராணுவமும் மறுக்கின்றன. எனினும், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவொன்று, யுத்தத்தின் இறுதி மாதங்களில் குறைந்தது 40,000 தமிழ் மக்களின், பிரதானமாக சாதாரண மக்களின் உயிரிழப்புக்கும், அதேபோல் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கும் இராணுவமே பொறுப்பு என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தனது நடுங்கவைக்கும் அச்சுறுத்தல்களின் பின்னர், ரட்நாயக்க, தன்னை மறைத்துக்கொள்ளும் முயற்சியில், "இராணுவத்தின் ஒழுங்குமுறைகளை மீறும் எந்தவொரு சிப்பாய்க்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று இழிந்த முறையில் அறிவித்தார். உண்மையில், இராணுவத்தின் யுத்த குற்றங்களுக்கோ அல்லது இராணுவ ஆதரவுடனான கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கோ எவர் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. கொழும்பு அருகே வெலிவேரிய பிரதேசத்தில் அப்பாவி எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட இராணுவப் பாய்ச்சலை வழிநடத்திய அதிகாரிகளுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளையே இங்கு இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அங்கு உள்ளூர்வாசிகள் சுத்தமான தண்ணீர் கோரியதோடு, ஒரு பெரிய தொழிற்சாலை உள்ளூர் நீரை மாசுபடுத்துவதாக குற்றஞ்சாட்டினர். முந்தைய ஒவ்வொரு விசாரணை போன்று, இந்த விசாரணையும் ஒரு மூடிமறைப்பாகவே இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெறுமனே பலி கடாக்களாக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் இப்போது நாடு முழுவதும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்க யுத்தத்தின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட இராணுவ முறைகளை பயன்படுத்துகின்றது என்பதே இந்த இராணுவ நடவடிக்கையின் அர்த்தமாகும். லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்கவின் அச்சுறுத்தல்களை சாதாரணமாக எடுத்து கொள்ளக் கூடாது. ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், இராணுவத்துடன் சேர்ந்து, முதலாளித்துவ ஆட்சியை தூக்கி நிறுத்துவதற்காக வெகுஜன கொலைகளை செய்வதில் நீண்ட இரத்தம் தோய்ந்த வரலாற்றை கொண்டுள்ளன. 1971ல் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஒரு சாகச எழுச்சியைத் தொடங்கியபோது, இராணுவத்தால் சுமார் 15,000 சிங்கள கிராமப்புற இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 1988-1990ல், இராணுவ ஆதரவிலான கொலைப் படைகளால், தெற்கில் சமூக அமைதியின்மையை நசுக்கும் முயற்சியில் குறைந்தது 60,000 இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டனர். இராணுவ தளபதியின் கருத்துக்கள், புலிகள் மீண்டும் தோன்றுகின்றனர் என்று கூறும் சிங்கள பேரினவாத குழுக்கள் மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரச்சாரத்தின் வரிசையில் உள்ளன. "பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அந்த அமைப்பின் தலைமறைவு உறுப்பினர்கள் மற்றும் உளவுத்துறையினரும், குறிப்பாக வெளிநாட்டில் உள்ளவர்களும், இன்னும் மிகவும் சுறுசுறுப்பாக செயற்படுவதோடு மீண்டும் நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர்," என்று அவர் கூறினார். அரசாங்கமும் இராணுவமும் இனவாத பதட்டங்களை கிளறிவிட இது போன்ற கருத்துக்களை சுரண்டிக்கொள்கின்றன. அவர்களது நோக்கம், அரசாங்கத்தின் சிக்கன திட்டத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தை தடுக்க சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை இன ரீதியில் பிளவுபடுத்துவதே ஆகும். இலங்கை மீது உலக முதலாளித்துவ நெருக்கடி தாக்கங்களை ஏற்படுத்துகின்ற நிலையில், இராஜபக்ஷ அரசாங்கம் பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பெரும் சலுகைகளை கொடுக்கும் அதே வேளை, தொழிலாளர்களின் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை சமூக நிலைமைகளை ஆழமாக சீரிழித்து வருகின்றது. அதே நேரம், அது தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க, தசாப்த கால யுத்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்த தயாராகி வருகிறது. |
|