World Socialist Web Site www.wsws.org |
Apologists for NSA redouble witch-hunt of Edward Snowden NSA இன் அனுதாபிகள் எட்வார்ட் ஸ்னோவ்டென் மீதான வேட்டையை இரட்டிப்பாக்குகின்றனர்Bill Van Auken தேசிய பாதுகாப்பு முகமையின் பாரிய உளவுவேலை திட்டங்கள் மீது ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்த "சீர்திருத்தத்தின்" உண்மையான உள்ளடக்கம் குறித்து யாருக்கேனும் ஏதாவது ஐயங்கள் இருந்திருந்தால், NSAஇன் சட்டவிரோத நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு அறிய செய்த எட்வார்ட் ஸ்னோவ்டென் மீது இருகட்சிகளின் ஒப்புதலோடு கூடிய வக்கிரமான வேட்டையால் அவை ஞாயிறன்று தெளிவாகி இருக்கும். காங்கிரஸ், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் முன்னணி அங்கத்தவர்கள் ஸ்னோவ்டெனை ஒரு தேசத்துரோகி மற்றும் ரஷ்ய உளவாளி என முத்திரை குத்த, அவரை முயன்று பிடித்து தண்டிப்பதற்கான ஒரு நியாயப்பாட்டை வழங்கி, தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிகளில் தோன்றினர். அந்த முன்னாள் NSA ஒப்பந்ததாரர் மீது பெடரல் வழக்கறிஞர்கள், இதுவரையில் குற்றப்பதிவு செய்யவில்லை என்றபோதினும், 1917 உளவுத்துறை சட்டத்தின் கீழ் பிரத்யேக அறிக்கைகளோடு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி உள்ளனர். நூறு மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் மற்றும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மில்லியன் கணக்கான மக்களின் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், குறுஞ்சேதிகள் மற்றும் இணைய நடவடிக்கைகளை உளவு பார்த்தமை மீதான ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் இல்லையென்றால், வெள்ளியன்று நீதித்துறையில் ஒபாமா அவரது உரையை வழங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அமெரிக்க ஜனாதிபதியின் விடையிறுப்பு, “பிரத்யேக தனிநபர் விடயங்கள்" மீதான அர்த்தமற்ற வனப்புரைகள் மற்றும் "மேற்பார்வை செய்யப்படுமென்ற" வெற்று முன்மொழிவுகளைக் கொண்டிருந்தது. NSA மற்றும் ஏனைய அமெரிக்க உளவு முகமைகளால் அமெரிக்காவிற்குள் மற்றும் உலகெங்கிலும் நடத்தப்பட்ட பொலிஸ் அரசு நடவடிக்கைகளை முழு அளவில் பாதுகாப்பதை அது உள்ளடக்கி இருந்தது. ஸ்னோவ்டென் மீதான தாக்குதலை உள்ளடக்கி இருந்த ஒபாமாவின் பொய் உரைகள், இரகசியங்களை அம்பலப்படுத்திய அந்த நபரின் இரத்தத்திற்காக ஓலமிட்டு, தாக்குதலைத் தொடர, ஆளும் வர்க்கத்தின் மிக வலதுசாரி பிரிவுகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக இருந்தது. மிகப் பொருத்தமாக போயிங் கார்பரேஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட NBCஇன் "Meet the Press” நிகழ்ச்சியில் தோன்றிய உளவுத்துறை கமிட்டிக்கான குடியரசு கட்சியின் தலைவரும், காங்கிரஸ் பிரதிநிதியுமான மைக் ரோஜர்ஸ் ஸ்னோவ்டெனை "ஒரு திருடரென்று" வர்ணித்தார், "அவர் சிலரிடமிருந்து உதவிகளைப் பெற்றிருந்தார் என்று நாங்கள் நம்புகிறோம்; பிரத்தியேக தனிநபர் விடயங்களோடு சிறிதும் தொடர்பற்ற, ஆனால் அதற்கு மாறாக அமெரிக்கர்களை பாதுகாப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நாம் எவ்வாறு தகவல்களை சேகரிக்கிறோம் என்பது குறித்த பரந்த பெரும்பான்மை தகவல்களை அவர் திருடி உள்ளார்,” என்றார். ஸ்னோவ்டெனால் பல்வேறு திட்டங்கள் அம்பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், இது முற்றிலும் முட்டாள்தனமானதாக உள்ளது. உண்மையில் அவற்றின் மூலமாக ட்ரில்லியன் கணக்கில் தொலைபேசி மற்றும் இணைய செய்திகள் NSAஆல் உருவப்பட்டுள்ளன. “வெளிநாடுகளில் இருந்து நாம் எவ்வாறு தகவல்களைச் சேகரிக்கிறோம்" என்பதைப் பொறுத்த வரையில், இதில், ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் தெளிவாக காட்டியுள்ளவாறு, ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரேசிலிய ஜனாதிபதி தில்மா ரௌஸ்ஸெப் போன்ற அரசு தலைவர்களின் தொலைபேசிகள் மற்றும் கணினிகளை ஒற்று கேட்டமை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய அமைப்புகளின் சர்வதேச கூட்டங்களை உளவு பார்த்தமை, மற்றும் பிரேசிலின் அரசுத்துறை எண்ணெய் நிறுவனமான பெட்ரோபாஸ், மற்றும் அதனுடன் ஐரோப்பிய நிறுவனங்கள் மற்றும் பொருளாதார அதிகாரிகளின் மீது தொழில்துறைரீதியிலான உளவுவேலைகளில் ஈடுபட்டமை ஆகியவையும் உள்ளடங்கும். இந்த அனைத்து நடவடிக்கைகளும் "அமெரிக்கர்களைப் பாதுகாப்பாக வைப்பதோடு" எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டவை அல்ல, இவை அனைத்தும் அமெரிக்க நிதியியல் மற்றும் பெருநிறுவன ஜாம்பவான்களின் இலாப நலன்களைப் பெருக்க வைப்பதற்காக செய்யப்பட்டவை ஆகும். "அவர் வெளியேறுவதற்கு முன்பே பயணிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்" என்றும், “நீங்கள் விரும்புவதால் கூறுகிறேன், அவர் பயணப் பெட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்,” என்றும் குறிப்பிட்டு ஸ்னோவ்டென் ஒரு உளவாளி என்ற அவரது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைத் தாங்கி பிடிக்க ரோஜர்ஸ் முயற்சித்தார். புறப்படுவதற்கு முன்பே பயண ஏற்பாடுகளைச் செய்வதென்பது பெரும்பாலான அறிவார்ந்த மக்களிடையே பொதுவாக இருக்கும் ஒரு நடைமுறை பழக்கமாகும், அவ்வாறிருக்கையில் NSAஇன் சட்டவிரோத உளவுவேலைகளை வெளியிட்ட உடனே ஓர் உலகளாவிய மனித வேட்டையின் ஒரு பொருளாக மாற இருந்த ஒரு நபர் குறித்து கூற வேண்டியதே இல்லை. அந்த காங்கிரஸ் உறுப்பினர் தொடர்ந்து குறிப்பிட்டார்: “அவர் மாஸ்கோவின் ஒரு FSB முகவரின் [Federal Security Service – பெடரல் பாதுகாப்பு சேவை] அன்பார்ந்த கரங்களில் விழுவதற்கு அங்கே ஒரு காரணம் இருந்ததென்று நான் நம்புகிறேன்… அவர் மாஸ்கோவில் FSBஇன் கையாளுகையின் கீழ் விழுந்ததொன்றும் ஓர் எதிர்பாரா அதிருஷ்டமென்று நான் கருதவில்லை,” என்றார். ஸ்னோவ்டென் ரஷ்யர்களோடு இணைந்து வேலை செய்து வந்தார் என்பதில் நீங்கள் உடன்படுகிறீரா என கேட்கப்பட்ட போது செனட் உளவுத்துறை கமிட்டியின் ஜனநாயக கட்சி தலைவர் டேனி பெயின்ஸ்டீன் பின்வருமாறு விடையிறுத்தார்: “அவருக்கு தொடர்பிருக்கலாம். இப்போதைய நிலையில் நமக்கு தெரியவில்லை. ஆனால் இந்த நடவடிக்கையைப் பெரிதுபடுத்துவது உண்மையில் ஒரு விதமான ஒரு புதிய அளவிலான அவமதிப்பை உருவாக்கும் என்று நான் கருதுகிறேன்,” என்றார். இத்தகைய அவதூறுகளையே எதிரொலித்து, உள்நாட்டு பாதுகாப்பு கமிட்டியின் குடியரசு கட்சி தலைவர் மைக் மெக்கால் ABC Newsக்கு கூறுகையில்: “அவர் என்ன செய்தாரோ, அவ்வாறு செய்ய ஒரு வெளிநாட்டு சக்தியால் அவர் செய்விக்கப்பட்டார் என்றே நான் தனிப்பட்ட விதத்தில் நம்புகிறேன். மேலும் மீண்டும் நான் கூற விரும்புவது, அவர் எந்த விதத்திலும் ஒரு வீரபுருஷனாக மாட்டார். அவர் ஒரு தேசத்துரோகி,” என்றார். அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை உபகரணங்களுக்கான முத்திரைகளாக மற்றும் ஊதுகுழல்களாக அனைத்து வகையிலும் சேவை செய்துள்ள இந்த அதிகாரிகளில் எவருமே, ஸ்னோவ்டெனுக்கு மரணத்தைத் தீர்ப்பாக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக ஒரேயொரு ஆதார துணுக்கைக் கூட வழங்கவில்லை. அவர்கள் கூறுவதில் சில முற்றிலும் அர்த்தமற்றவை. ஸ்னோவ்டென் "மாஸ்கோவில் ஒரு FSB முகவரின் அன்பார்ந்த கரங்களில்" விழுந்துவிட்டார் என்ற வாதம் ஒரு அப்பட்டமான பொய். பல்வேறு NSA குற்றங்களை அம்பலப்படுத்திய பின்னர், அமெரிக்க அரசு அவரது கடவுச்சீட்டை இரத்து செய்த போது ஸ்னோவ்டென் ஈக்வடாரில் பாதுகாப்பிற்கான புகலிடம் கோர முயன்றார், அமெரிக்க நடவடிக்கை மாஸ்கோவ்வின் ஷ்ரெமெட்யெவோ சர்வதேச விமான நிலையத்தின் ஓய்வறையில் அவரை 39 நாட்கள் தங்க வைத்த நிலையில், அங்கே அவர் திட்டங்களை மாற்ற வேண்டி இருந்தது. இது அவரை வரவேற்க FSB ஆட்கள் காத்திருந்தார்கள் என்பதை சிறிதும் எடுத்துக்காட்டுவதாக இல்லை. மிக தெளிவாக, முன்னாள் NSA ஒப்பந்ததாரருக்கு பொலிவியாவில் தஞ்சம் வழங்குவதற்காக பறந்து கொண்டிருக்கிறதென்ற சந்தேகத்தின் பேரில் ஜனாதிபதி எவோ மொராலெஸ் சென்ற விமானத்தைத் தரையிறக்கும் அளவிற்கு அமெரிக்க அரசின் முரட்டுத்தனமான நடவடிக்கை இருந்த நிலையில், ஸ்னோவ்டென் ரஷ்யாவில் தங்குவார் என்று வாஷிங்டன் எதிர்பார்க்கவில்லை. ஒபாமாவின் உரையைப் போலவே, பொய்கள் மற்றும் அவதூறுகளின் இந்த பிரச்சாரம், பொதுமக்களை அச்சுறுத்தவும், அமெரிக்காவில் மற்றும் உலகெங்கிலும் NSAஇன் பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கு எழும் எதிர்ப்புகளை ஒடுக்கவும் நோக்கம் கொண்டுள்ளது. அமெரிக்க அரசியலமைப்பை சீரழிப்பதில் மற்றும் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிக்க சூழ்ச்சி செய்வதில் யார் பொறுப்பாக உள்ளார்களோ, ஒபாமா மற்றும் உளவுத்துறை தலைவர்கள் உட்பட, அந்த நிஜமான குற்றவாளிகளை அம்பலப்படுத்தியதற்காக ஸ்னோவ்டெனை குற்றவாளியாக சித்தரிப்பதே, ஜூலியன் அசான்ஜ் மற்றும் பிரட்லி மேனிங் மீதான வேட்டை மற்றும் தண்டனையோடு சேர்ந்த விதத்தில், இதன் நோக்கமாகும். இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய Quinnipiac கருத்துக்கணிப்பு, சமீபத்திய மாதங்களில் ஸ்னோவ்டெனுக்கான ஆதரவு வளர்ந்துள்ளதையே எடுத்துக் காட்டியது. ஸ்னோவ்டெனை இரகசியங்களை வெளியிட்ட தைரியசாலியாக 57 சதவீதத்தினர் குறிப்பிட்டிருந்தனர், அவரை ஒரு தேசதுரோகியாக சித்தரித்த ஒபாமா மற்றும் இரண்டு பிரதான கட்சிகளின் தலைமையோடு உடன்பட்டு 34 சதவீதத்தினர் (வெறும் மூன்றில் ஒரு பங்கினர்) அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இளைஞர்கள் (18 முதல் 29 வயதுடையவர்கள்) மத்தியில், ஸ்னோவ்டென் மீதான ஆதரவு உணர்வு இன்னும் அதிகமாக மேலோங்கி உள்ளது, அவர்களில் 77 சதவீதத்தினர் ஸ்னோவ்டெனின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல 100,000 டாலர் அல்லது அதற்கு மேல் வருவாய் கொண்டவர்களை விட 50,000 டாலர் அல்லது அதற்கு குறைவான வருமாய் பெறும் அமெரிக்கர்கள் மத்தியில் கணிசமான அளவிற்கு ஆதரவு உயர்ந்துள்ளது. ஸ்னோவ்டெனுக்கான இத்தகைய மக்கள் ஆதரவு அரசியலமைப்பிலோ அல்லது மக்கள் ஊடகங்களிலோ வெளிப்பாட்டைக் காணவில்லை என்பது அமெரிக்காவிலும் மற்றும் ஒட்டுமொத்த பூமண்டலத்திலும் உள்ள பரந்த பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களுக்கும், இரண்டு அரசியல் கட்சிகளையும் மற்றும் அத்தோடு பிரதான செய்தியிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி வலையமைப்புகளைக் கட்டுப்படுத்தும் பணம் நிரம்பிய செல்வந்த தட்டுக்கும் இடையிலான பரந்த பிளவை மட்டுமே அடிக்கோடிடுகிறது. தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைத் தாக்கியும் புதிய யுத்தங்களுக்கு தயாரிப்பு செய்தும் வருகின்ற அதேவேளையில் சமூக செல்வ வளத்தை கைமாற்றும் அமெரிக்க அரசின் கொள்கைகள் மீதும் மற்றும் சாதனை அளவிலான சமூக சமத்துவமின்மை மீதும் அதிகரித்துவரும் மக்கள் கோபத்தோடு, ஸ்னோவ்டெனுக்கான ஆதரவு கையோடு கை கோர்த்து செல்கிறது. இந்த ஆதரவும் மற்றும் இந்த கோபமும் எட்வார்ட் ஸ்னோவ்டெனை பாதுகாக்க மற்றும் ஒரு பொலிஸ் அரசை நோக்கிய ஆளும் வர்க்கத்தின் உந்துதலை தோற்கடிக்க, தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல்ரீதியிலான சுயாதீனமான இயக்கத்தின் அபிவிருத்திக்குள் திருப்பி விடப்பட வேண்டும். இதற்கு ஒபாமா நிர்வாகம் மற்றும் இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் அவை பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டம் அவசியமாகும். |
|