தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி Germany: The Left Party defends the EU ஜேர்மனி: இடது கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாக்கிறது
By Peter
Schwarz Use this version to print| Send feedback ஞாயிறன்று ஐரோப்பிய இடது கட்சி (Party of the European Left -PEL) பேர்லினில் இந்த ஆண்டு ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலகளுக்கான நிகழ்வு ஒன்றை நடத்தியது. முன்னதாக, ஜேர்மனியின் இடது கட்சித் தலைவர்கள் சிவப்பு கார்நேஷன் மலர்களையும், மலர்வளையங்களையும் 1919 ஜனவரி 15ல் கொலை செய்யப்பட்ட ரோசா லுக்சம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்நெக்ட் நினைவாலயத்தில் வைத்தனர். இத்தினமானது, வைமர் குடியரசு மற்றும் முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் காலத்திலிருந்து ஒரு வருடாந்த நிகழ்வாக கொண்டாடப்படுகின்றது. கடந்தகாலத்தில் இது கிழக்கு ஜேர்மனிய ஸ்ராலினிஸ்டுக்களால் செய்யப்பட்டபோது, இரு கொலையுண்ட புரட்சியாளர்களின் நினைவாலயத்திற்கு வால்டர் உல்பிரிஷ்ட், எரிக் ஹோனேக்கர் போன்றவர்கள் புனித யாத்திரையாக செல்வதுண்டு. இன்று இது, இடது கட்சித் தலைவர்களான கிரிகோரெகர் கீஸி, கத்யா கிப்ளிங் மற்றும் ஒஸ்கார் லாபொன்டைன் ஆகியோரால் செய்யப்படுகிறது. ஆனால் இவர்களில் எவரும் தாங்கள் கௌரவிப்பதாகக் கருதப்படும் இறந்த இருவரோடுடனும் பொதுவான தன்மை எதையும் கொண்டிருக்கவில்லை. லுக்சம்பேர்க்கும், லீப்க்நெக்ட்டும் அரசியல் எதிரிகளுடைய அழுத்தங்களுக்கு தாழ்ந்து போவதற்குப் பதிலாக தாங்கள் நம்பியதற்காக சிறைக்குச் சென்ற புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களாவர். உல்பிரிஷட்டும் ஹோனேக்கரும் ஸ்ராலினிச அடிவருடிகளாவர். அவர்களுக்குப்பின் வந்த இடது கட்சியில் இருப்பவர்கள் முதலாளித்துவ அரசியல்வாதிகளும், பேர்லினுள்ள அதிகார அமைப்பின் ஒரு பகுதியாக நீண்ட காலமாக இருப்பவர்களுமாவர். Berlin Volksbühne இல் நடந்த PEL இனது கூட்டமும் லுக்சம்பேர்க்-லீப்க்நெக்ட் பேரணியில் இருந்த அதே ஏமாற்றுத்தனத்தைத்தான் கொண்டிருந்தது. பேச்சாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைக் குறைகூறினாலும், சிலர் மிகவும் கடுமையாக தாக்கினாலும், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாக்கத்தான் அவ்வாறு பேசினர். இந்த நிகழ்விற்கு முன் இடது கட்சியின் ஐரோப்பிய தேர்தல் வேலைத்திட்ட வரைவு பற்றி பொது விவாதம் நடந்தது. கட்சித் தலைவர் கீஸியும் கட்சியின் வலதுசாரி பிற பிரதிநிதிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தை “புதிய தாராளவாத, இராணுவவாத, பரந்த ஜனநாயகமற்ற அதிகாரத்தை” கொண்டுள்ளது என்று விவரித்துள்ள வரைவுத் திட்டத்தில் இருந்து தம்மை பகிரங்கமாக அந்நியப்படுத்திக்கொண்டு, “பெரு வங்கிகள் மற்றும் அதிகாரத்துவத்தின் கொள்ளைமுறை, பாதுகாப்பு நிறுவனங்களின் உறுதியற்ற தன்மை” ஆகியவற்றைக் கண்டித்தனர். இப்பந்தி கட்சியின் “இடது சாரி” என்று அழைக்கப்படும் சஹ்ரா வாகென்நெக்ட் மற்றும் ஒஸ்கார் லாபொன்டைனிடமிருந்து வருகின்றது. Volksbühne நிகழ்வில், லாபொன்டைன், வாகென்நெக்ட் உட்பட இதே பேச்சாளர்கள் தங்கள் ஆதரவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்தனர். அவர்களுடைய விமர்சனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒழிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை, மாறாக அதன் கொள்கைகளை மாற்றுவதில்தான் உள்ளது என்று அவர்கள் அறிவித்தனர். இடது கட்சி, “ஐரோப்பா என்ற கருத்தை மீண்டும் ஈர்க்கும் தன்மை உடையதாக வருவதற்குப் போராடவேண்டும்” என்று கீஸி உறுதியளித்தார். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒழிக்க விரும்பவில்லை, மாறாக “அடிப்படையில் அதை மாற்ற வேண்டும், இன்னும் ஜனநாயகத்துடனும், இன்னும் சமாதானத்துடனும், சமூகத் தன்மை உடையதாக்கவேண்டும்.” என்றார். ஐரோப்பா என்ற கருத்தின்மீது இடது கட்சி விரோதப் போக்கு கொண்டுள்ளது எனக் குற்றம் சாட்டுவது அபத்தமாகும் என்றார் லாபொன்டைன். “நாம்தான் உண்மையான ஐரோப்பியர்கள், மற்றவர்கள் ஐரோப்பிய உணர்விற்கு எதிரானவர்கள்” என்றார் அவர். “இந்த உணர்வுடன் நாம் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துவோம்.” என்றார் கட்சித் தலைவர் பேர்ன்ட் ரிக்ஸிங்கர் Berliner Zeitung பத்திரிகையிடம்: “எமக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சாதகமான அர்த்தத்தில், அரசியல்ரீதியாக வளர்ச்சியடையக்கூடிய ஒன்றாகும். நாம் அதை இன்னும் சிறப்பானதாகவும், சமூகத்தன்மையுடையதாகவும், சமத்துவம் உடையதாகவும் அமைக்க விரும்புகிறோம்.” என உறுதியளித்தார். வாகென்நெக்ட் ஐரோப்பிய எதிர்ப்பு உணர்வுகளை எதிர்க்க விரும்புவோர் வேறுபல ஐரோப்பிய உடன்பாடுகளுக்கும், வேறொருவடிவத்திலான ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கு ஆதரவாக இருக்கவேண்டும் என அறிவித்தார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும் ஐரோப்பிய இடது கட்சியின் தலைவருமான பியர் லோரென்ட் அறிவித்தார்: “இடதுகளின் நேரம் வந்துவிட்டது”. “ஐரோப்பிய மக்களுக்கு ஒரு புதிய சமூக, ஜனநாயக, சுற்றுச்சூழல் வெற்றிகளின் சகாப்தம்” வரும் என்று உறுதியளித்து, கிரேக்க தீவிர இடது கூட்டணியின் (SYRIZA) தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸின் பின்னால் இதற்கு ஆதரவளிப்பவர்கள் அணிதிரள வேண்டும் என்றார். சிப்ரஸ் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் பதவித்தேர்விற்கு நிற்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கட்டளைகள், மில்லியன் கணக்கான கிரேக்கர்களுக்கு வேலையின்மை பெரும் வறுமை என்று கொடுத்த போதும், பேர்லினில் முதலில் பேசியிருக்க வேண்டிய சிப்ரஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்கத்தின் அங்கத்துவத்தை பாதுகாக்கிறார். Volksbühne இல் நடந்த கூட்டம் இடது கட்சி ஏன் ஐரோப்பிய ஒன்றியத்தைக் குறைகூறுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஐரோப்பிய பொருளாதார, நிதிய மற்றும் பெரும் சக்திகளின் நலன்களுக்கான ஜனநாயக விரோத அமைப்பை அகற்றுவதற்கு அல்ல, மாறாக அதை பரந்த சமூக அடுக்குகளின் எதிர்ப்பின் முன் பாதுகாப்பதற்குத்தான். இந்த இலக்கில், இது ஐரோப்பிய ஒன்றியம் சமூக முன்னேற்றத்திற்கான அமைப்பாக மாற்றப்படலாம் என்னும் நப்பாசைக்கு ஊக்கம் கொடுக்கிறது. இக்கட்சியின் பல பிரிவுகளுக்கிடையே தொழில்பங்கீடு உள்ளது. லாபொன்டைன் மற்றும் வாகென்நெக்ட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தை முன்னணியில் குறைகூறுகின்றனர். கீஸி பிரஸ்ஸல்ஸிலும் பேர்லினிலும் உள்ள ஆளும் வட்டங்களுக்கு கட்சியின் நிபந்தனை அற்ற விசுவாசத்தை உறுதி கூறுகின்றர். அவர்கள் அனைவரும் பெருகும் சமூக எதிர்ப்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதன் அமைப்புகளினதும் பாதுகாப்பு என்ற ஒரே இலக்கைத்தான் கொண்டுள்ளனர். இதை கட்சித் தலைமை அடுத்த வாரம் விவாதிக்க விரும்பும் இடது கட்சியின் தேர்தல் மூலோபாயம் பற்றிய அறிக்கை ஒன்று ஐயந்திரிபுற வெளிப்படுத்துகிறது. Neues Deutschland நாளேடு இந்த மூலோபாய அறிக்கையைக் குறிப்பிட்டு அதில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பல “தம்மை நியாயப்படுத்திக்கொள்ளும் ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளன” எனக் கூறப்படுகிறது என்று எழுதியுள்ளது. இடது கட்சியின் பல வாக்காளர்களும் இந்த நம்பிக்கையற்ற தன்மையைக் கொண்டுள்ளனர். இச்சூழலில் “இடது, ஐரோப்பா முழுவதும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் போராடும் முயற்சியை எடுத்துக் கொள்ள அழைப்புவிட்டுள்ளது.” ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இம்மோதலில், கூடுதல் தீவிரமயமான சொற்றொடர்கள் முற்றிலும் பொருத்தம் என்று அது கூறுகிறது. “ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மாற்றீடுகள், அது பற்றிய விமர்சனங்களுக்கான விருப்பங்கள் உறுதியாக உள்ளன.” “ஆளும் வர்க்கத்துடன் போராடுவது தேவை. இடது கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் தெளிவான வார்த்தைகளை பயன்படுத்த விரும்புகிறது, இன்னும் தீவிரமான கோரிக்கைகளை அமைதியாக வெளிப்படுத்த விரும்புகிறது.” இவை அயோக்கியத்தனமான அரசியல் அவநம்பிக்கையாளர்களின் சொற்களாகும். இடது கட்சியின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியம் “தெளிவான வார்த்தைகள்” மூலம் சவால் விடப்பட முடியாது, “இன்னும் கூடுதலான தீவிரமான கோரிக்கைகளாலும்” முடியாது என்பதை நன்கு அறிவர். “இது ஜனநாயக முறைப்படி கட்டுப்படுத்தவும் செல்வாக்கிற்கு உட்படுத்தக்கூடிய நடுநிலையான ஒரு அதிகாரம் அல்ல. இது பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கு, பெரு நிறுவனங்களுக்கு மற்றும் வங்கிகளுக்கு சமூக ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அவற்றின் தாக்குதல்களுக்கு கட்டுப்பாட்டு மையம் போல் செயல்பட்டு, அரச அதிகாரங்கள், இராணுவ வாதத்தை முடுக்கிவிட உதவுகிறது. இடது கட்சி, தன்னால் ஐரோப்பிய ஒன்றியத்தை சீர்திருத்தலாம் என்ற நப்பாசையினால் அதை பாதுகாக்கவில்லை. மாறாக ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள அதே சமூக நலன்களைத்தான் இடது கட்சியும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பதால்தான் பாதுகாக்கிறது. இது ஒரு வலதுசாரி, முதலாளித்துவக் கட்சி. இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெருகும் எதிர்ப்பைக் குழப்பவும் அதை திணறடிக்கவும் இடது வார்த்தைஜாலங்களை பயன்படுத்துகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்க ஒரே வழி, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஒன்றாக அணிதிரட்டுவதுதான். ஐரோப்பிய தேர்தல்கள் பற்றிய தமது கூட்டறிக்கையில் ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சி இரண்டும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கு அழைப்புவிடுகின்றன. இடது கட்சி இதைக் கடுமையாக நிராகரிக்கிறது. |
|
|