World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The West Virginia chemical disaster

மேற்கு வெர்ஜீனிய இரசாயன பேரிடர்

Andre Damon
15 January 2014

Back to screen version

மேற்கு வெர்ஜீனியாவின் ஒன்பது கவுன்டிகளின் குடிநீரில் நிலக்கரி-சுத்திகரிப்பு இரசாயனம் கலந்ததால், ஐந்த நாட்களாக மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இது அமெரிக்காவில் தொடர்ச்சியான பெருநிறுவன விதிமுறை மீறல்களின் விளைவாக ஏற்படும் பல தொழில்துறை பேரிடர்களில் சமீபத்திய ஒன்றாகும்.

"சுரங்கம், எஃகு, மற்றும் சிமெண்ட் தொழில்துறைகளுக்கு தேவையான சிறப்பு இரசாயனங்களை வழங்கும்" Freedom Industries எனும் நிறுவனத்தால் நடத்தப்படும் ஆலையின் இரசாயன சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த கசிவு உருவானது. மோசமாக பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆலை, அம்மாநிலத்தின் தலைநகரும் மிகப் பெரிய நகரமுமான சார்லெஸ்டனில் இருந்து எல்க் ஆற்றிற்கு இரண்டு மைல்களுக்கு குறைந்த தூரத்தில் மற்றும் சுற்றி அமைந்துள்ள ஒன்பது கவுன்டிகளுக்கு குடிநீர் வழங்கும் அமெரிக்க குடிநீர் ஏற்று நிலையத்திலிருந்து எதிரே சுமார் ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது.

சார்லெஸ்டனில் வசிப்போர் வியாழனன்று காலை ஒரு "இனிப்பு வாசத்தை" கவனித்தனர், அது crude 4-Methylcyclohexanemethanol (MCHM) என்ற இரசாயனம் கலந்ததால் ஏற்பட்டிருந்தது. அவர்கள் மேற்கு வெர்ஜீனிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறைக்கு (DEP) தொலைபேசியில் தகவல் அளிக்க தொடங்கினர். ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் ஆய்வாளர்கள் கசிவைக் கண்டறிந்தனர், அதற்குள் 40,000 கேலன் தொட்டியிலிருந்து சுமார் 7,500 கேலன் இரசாயனம் கசிந்திருந்தது. ஆலையின் தரையில் 400 சதுர அடிக்கு தேங்கி இருந்த அந்த கசிவு, அருகிலுள்ள ஆற்றில் இரசாயனங்கள் கலக்காமல் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டாவது கான்க்கிரீட் தடுப்பானில் இருந்த ஒரு ஓட்டை வழியாக கசிந்திருந்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் சார்லெஸ்டன் அரசிதழுக்கு கூறுகையில், அவர்கள் அங்கே சென்ற போது, Freedom Industries நிறுவனம் எரிந்த கட்டைகளைக் கொண்ட ஒரு தடுப்பை ஏற்படுத்தி இருந்ததோடு, இரசாயன ஓட்டத்தைத் தடுக்க முயற்சிக்க அங்கே உறிஞ்சும் தன்மை கொண்ட ஒருவிதமான பாதுகாப்பு பொடியின் 50 பவுண்ட் எடை கொண்ட பையை பயன்படுத்தி இருந்தது,” என்று தெரிவித்தனர். “அதை கட்டுப்படுத்துவதற்கு நிறுவனம் எவ்வித முழுமையான கவனமும் செலுத்தவில்லை," என்று ஒரு DEP அதிகாரி அரசிதழுக்கு தெரிவித்தார்.

செவ்வாயன்று மாலையில், பாதிக்கப்பட்ட 300,000 மக்களில் சில ஆயிர மக்களுக்கு மட்டும் அவர்களின் குழாய் நீர் பருகக் கூடிய தன்மையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. மீதமுள்ளவர்கள் குளிப்பதற்கோ அல்லது குடிப்பதற்கோ தண்ணீர் இல்லாமல் தொடர்ந்து நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தேசிய பாதுகாப்பு படையால் வினியோகிக்கப்படும் போத்தல் நீருக்காக நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

அந்த ஆலை 1991இல் இருந்து வெறும் மூன்று முறை மட்டுமே பரிசோதிக்கப்பட்டிருந்ததாக மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு இரசாயன நாற்றம் குறித்து குறைகள் வந்த பின்னர் ஆய்வாளர்கள் அந்த ஆலையை 2010இல் பார்வையிட்டனர். பின்னர் மீண்டும் 2012இல் அங்கே அனுமதி பெற வேண்டிய புதிய செயல்முறைகள் ஏதேனும் நடத்தப்பட்டு வருகிறதா என்பதை பார்வையிட சென்றனர். அந்த இரண்டு சமயத்திலும் நெறிமுறைப்படுத்தும் அதிகாரிகள் சேமிப்பு தொட்டிகளின் நிலையைப் பரிசோதிக்கவில்லை.

உண்மையில், CNNஇன் தகவலின்படி, அந்த நிறுவனம் பெற வேண்டி உள்ள ஒரேயொரு அனுமதி புயல் ஏற்படும் காலத்தில் உண்டாகும் வெள்ளப்பெருக்கிற்கான தொழில்துறை அனுமதி மட்டுமாகும். “அடிப்படையில் மழையினால் உண்டாகும் வெள்ளப்பெருக்கை அவர்கள் கண்காணித்து, ஒவ்வொரு காலாண்டிற்கும் எங்களுக்கு தகவல்களை அனுப்ப வேண்டும். அது மட்டும் தான் நெறிமுறை தேவைகளாக இருந்தன,” என்று அந்த செய்தி நிலையத்திற்கு DEP தலைவர் ராண்டி ஹஃப்மேன் தெரிவித்தார்.

அப்பகுதியில் இதேபோன்ற பேரிடர்களின் வரலாறு ஏற்கனவே இருக்கின்ற நிலையில், தோற்றப்பாட்டளவில் அரசு நெறிமுறை இல்லாமல் இருப்பது குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கசிவு கடந்த ஐந்து ஆண்டுகளில் சார்லெஸ்டன் மகாநகர பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் மூன்றாவது மிகப் பெரிய இரசாயன விபத்தாகும்.

2008இல், மேற்கு வெர்ஜீனியாவின் Bayer CropScience பயிலக ஆலையில் ஒரு வெடிப்பு ஏற்பட்டதன் விளைவாக இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வெறும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், மேற்கு வெர்ஜீனியாவின் பெல்லெயில் உள்ள டூபாண்ட் இரசாயன ஆலையில் நச்சுவாயு வெளியானதில் மற்றொரு தொழிலாளர் உயிரிழந்தார். இத்தகைய இரண்டு சம்பவங்களுமே சமீபத்திய கசிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பதினைந்து மைல்களுக்குள், “இரசாயன பள்ளத்தாக்கு" என்றறியப்படும் கனாவ்ஹா ஆற்றங்கரையை ஒட்டி, ஏற்பட்டவையாகும்.

அனைத்திற்கும் மேலாக, மேற்கு வெர்ஜீனியாவில் பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் செல்வாக்கு பெற்றிருக்கும் குறிப்பாக நிலக்கரி எடுக்கும் நிறுவனங்களின் இலாப உந்துதல் மற்றும் அலட்சியத்தால், அந்த மாநிலம் ஏற்கனவே சுற்றுச்சூழல் பேரிடர்களுக்கான ஒரு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. 1972இல், Pittston Coal நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு நிலக்கரி நீர்மக்குழம்பு அணை வெடித்து, Buffalo Creek Hollow பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை ஒட்டிய 16 கிராமங்களின் மீது ஒரு நூறு மில்லியன் கேலியனுக்கும் அதிகமாக கருப்பு நிறக் கழிவுநீர் வெளியேறியது. அந்த சம்பவம் ஒரு பெடரல் சுரங்க ஆய்வாளரால் "திருப்திகரமாக" உள்ளதென்று அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின்னர் நடந்தேறியது. 125 மக்களைக் கொன்ற மற்றும் 5,000 பேர் மக்கள்தொகையில் 4,000 மக்களை வீடற்றவர்களாக மாற்றிய அந்த பேரிடருக்குப் பின்னர் பிட்ஸ்டன் அதிகாரிகள் அதை "கடவுளின் செயல்" என்று அறிவித்தனர்.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் என்னவெல்லாம் மேம்பாடுகள் செய்யப்பட்டதோ அவை அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் மிகவும் போர்குணமிக்க பிரிவுகளில் ஒன்றான நிலக்கரி சுரங்க தொழிலாளர்களின் மிக கடுமையான போராட்டத்தின் மூலமாக மட்டுமே வென்றெடுக்கப்பட்டு இருந்தது. இருந்த போதினும், ஐக்கிய சுரங்க தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் தசாப்தங்கள் கால காட்டிக்கொடுப்புகள் ஒரு நூற்றாண்டிற்கு முந்தைய நிலைமைகளுக்குத் திரும்புவதற்கு இட்டு சென்றுள்ளன. சுரங்கம் மற்றும் இரசாயன பெருநிறுவனங்களால் நடத்தப்படும் இன்றைய நவீன நிறுவனங்களின் நகரங்கள், அவற்றின் பணியாளர்களின் மற்றும் மாநில குடிவாசிகளின் வாழ்க்கையை பெரிதும் விலைகொடுக்க வேண்டியளவிற்கு கையாள்கின்றன.

இந்த கசிவு மேற்கு வெர்ஜீனியாவின் ராலெய்ஹ் கவுன்டியில் 2010 Upper Big Branch சுரங்க பேரிடர் நடந்து நான்கு ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் வருகிறது. அதில் இருபத்தி ஒன்பது சுரங்க தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். சுரங்கத்தை நடத்துபவரின் தரப்பில் இருந்த ஒட்டுமொத்த அலட்சியத்தால் அந்த பேரிடர் நடந்ததாக ஒரு நெறிமுறை விசாரணை கூறியது, ஆனால் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்த நிறுவனத்திற்கு வெறும் 10 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் ஒரு அடிமட்ட மேற்பார்வையாளர் அந்த குற்றத்திற்கான குற்றவாளியாக காட்டப்பட்டார்.

நீண்டகாலமாக ஜனநாயக கட்சியின் செல்வாக்கில் உள்ள மேற்கு வெர்ஜீனியா, எண்ணெய்துறை ஜாம்பவானின் கொள்ளு பேரனான முன்னாள் கவர்னர் ஜே ராக்கிபெல்லர் போன்ற சுரங்கத்துறை மற்றும் எரிசக்தித்துறையின் கருவிகளால் தலைமை தாங்கப்படுகிறது.

ஏப்ரல் 2011இல் மெக்சிக்கோ வளைகுடாவில் ஆழ்கடல் எண்ணெய் வயலின் வெடிப்பு 11 தொழிலாளர்களைக் கொன்றதோடு, அமெரிக்க வரலாறில் மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரிடரை ஏற்படுத்தியது; ஏப்ரல் 2013இல் மேற்கு டெக்சாஸ் உர தொழிற்சாலை வெடிப்பு 15 பேரை கொன்றதோடு 150 நபர்களைக் காயப்படுத்தியது; மேலும் வடக்கு டகோடா மற்றும் அலபாமாவில் எண்ணெய் ரயில் தடம் புரண்ட சம்பவங்கள் மற்றும் வெடிப்புகள் உட்பட, தொடர்ச்சியான பல பேரழிவுகளை கடந்த மூன்று ஆண்டுகள் கண்டுள்ளன.

இது பல தசாப்தங்களாக பெருநிறுவனங்களுக்கு நெறிமுறைகள் தளர்த்தப்பட்டதன் தவிர்க்கவியலாத விளைவாக உள்ளது. இந்த நிலைமை ஒபாமா நிர்வாகத்தில் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒபாமா நிர்வாகம் 2008 முறிவிற்குப் பொறுப்பான BP, Massey, மற்றும் வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் போன்ற நிறுவனங்களை தண்டனையில் இருந்து காப்பாற்றி வரும் அதேவேளையில், பெருநிறுவனங்கள் மீதான எந்தவிதமான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளையும் நீக்க அதன் அதிகாரத்தில் அனைத்தையும் செய்துள்ளது.

அவரது 2012 அரசவை உரையில், ஒபாமா, “எனக்கு முந்தைய குடியரசு கட்சி ஜனாதிபதி செய்ததை விட நான் எனது பதவி காலத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் நிலைய நெறிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளேன்,” என்றார். அமெரிக்காவில் உள்ள 130 மில்லியன் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவதற்கு, தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் (OSHA) மற்றும் அரசு முகமைகளில், அங்கே வெறும் 2,200 ஆய்வாளர்கள் மட்டுமே பொறுப்பாக உள்ளனர். இது ஒவ்வொரு 59,000 தொழிலாளர்களுக்கும் ஏறக்குறைய ஒரு ஆய்வாளர் என்று காட்டுகிறது. இருகட்சிகளின் "ஒதுக்கீட்டு" வெட்டுகளின் விளைவாக OSHA ஆய்வாளர்களின் எண்ணிக்கை இன்னும் மேற்கொண்டு குறைய உள்ளது.

மேற்கு வெர்ஜீனிய இரசாயன கசிவு மற்றும் அதேபோன்ற தொழில்துறை பேரழிவுகள் அமெரிக்காவின் அடிப்படை குணாம்சங்களை எடுத்துக்காட்டுகின்றன. பெயரளவிற்கு ஒரு ஜனநாயகமாக இருந்து கொண்டு, அமெரிக்கா உண்மையில் ஒரு பணக்காரர்களின் ஆட்சியாக விளங்குகிறது. அது அரசின் ஒவ்வொரு சாதனத்தையும் கட்டுப்படுத்தும் மற்றும் என்றுமில்லாதளவிற்கு தங்களின் பெரும் செல்வ செழிப்பிற்கு மக்களின் பெரும்பான்மையினரின் வாழ்க்கையை அடிபணிய செய்யும் பல கோடி பில்லினியர்களின் ஒரு சிறிய குழுவால் ஆளப்படுகிறது.

இந்த வெளிப்படையான மற்றும் பகுத்தறிவிற்குப் பொருந்தாத அரசு விவகாரங்களை தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அரசியல் இயக்கத்தின் மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும். அது அதன் இலட்சியத்தில் முதலாளித்துவ அமைப்புமுறையை சோசலிசத்தைக் கொண்டு மாற்றீடு செய்வதை மற்றும் பொருளாதார, அரசியல் வாழ்வை தனிமனித இலாபத்திற்காக அல்லாமல் மனிதயின தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ஒழுங்கமைப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது.