World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French presidential address: A call for austerity and militarism பிரெஞ்சு ஜனாதிபதி உரை: சிக்கனம், இராணுவ வாதத்திற்கு அழைப்புBy Alex Lantier பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் தனது சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் ஆதரவு வீழ்ச்சியை நிறுத்தும் முயற்சியில், நேற்று மூன்று மணிநேர பத்திரிகையாளர் கூட்டத்தில், எலிசே ஜனாதிபதி அரண்மனையில் பேசினார். ஹாலண்ட் நிர்வாகம், அதன் பிற்போக்குத்தனக் கொள்கைகள் மீது பெருகும் மக்கள் சீற்றம் மற்றும் ஏமாற்றத்தினால் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் அது பிரான்சின் மிகச்செல்வாக்கற்ற அரசாங்கமாகிவிட்டது, வெளிநாடுகளில் நடத்தும் போர்கள் மற்றும் வேலையின்மையினால் அதன் ஒப்புதல் 15 வீதத்தைக்கூட எட்டவில்லை. வரவிருக்கும் நகராட்சி மற்றும் இந்த ஆண்டு ஐரோப்பிய தேர்தல்களில் இது கடுமையான தோல்வியையும், மற்றும் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) ஒரு சாத்தியமான முதல் இடத்திற்கான வாய்ப்பையும் எதிர்நோக்குகிறது. செய்தியாளர் கூட்டத்திற்கு முன்பு, நிதியச் செய்தி ஊகம் ஹாலண்டை அவருடைய சிக்கன நட்டிக்கைகளை விரைவுபடுத்த அழைப்பு விடுத்தது. Economist சஞ்சிகை ஹாலண்டை, ஐரோப்பாவின் எல்லைப் பகுதி நாடுகளான கிரேக்கம், அயர்லாந்து, ஸ்பெயின் இவற்றை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ள வெட்டுவகைகளைச் சுமத்துமாறு அழுத்தம் கொடுத்துள்ளது. அது புகார் கூறுவதாவது: “எல்லைப் பகுதி நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை அப்படியே செயல்படுத்துவதைவிடுத்து அவர் சற்றே தொழில்துறை மற்றும் உற்பத்திச் சந்தைகளை தாராளமயப்படுத்துதல் அல்லது பிரான்சின் சமூக நலன் வெட்டுக்களைக் குறைத்தல் இவற்றை தொடங்கியுள்ளார்; இதுவோ OECD யின் செல்வம் படைத்த நாடுகளில் கூடுதலாக உள்ளது.” நேற்று செய்தியாளர் கூட்டத்தில், இராணுவ வாதம் மற்றும் குடியேறுவோர் எதிர்ப்பு வனப்புரையை நியாயப்படுத்தி, கடுமையான சமூக நல குறைப்புக்களுக்கு உறுதியளித்து ஹாலண்ட் ஆளும் வர்க்கத்தின் ஆதரவைத் திரட்டும் முயற்சியாக பதிலளித்தார். இது முற்றிலும் முன்கூட்டியே எழுதப்பட்ட விவகாரம் ஆகும். எலிசே அரண்மனையின் வனப்பு மிகுந்த மர வேலைப்பாடுகளில் இருந்து அதேபோன்ற அழைக்கப்பட்ட செய்தியாள்களின் மரம் போன்ற வினாக்கள் வரை; இவற்றிற்கு ஹாலண்ட் பல சுதந்திரச் சந்தைக் கருத்துக்கள் (பலமுறை கூறப்படுபவை) மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இராணுவ சக்தியில் நம்பிக்கை என்னும் வகையில் விடையிறுத்தார். “பொதுநலச் செலவுகளைக் குறைக்கும் தன் விருப்பத்தை” வலியுறுத்திய ஹாலண்ட், அதாவது தொழிலாளர் தொகுப்பின் செலவைக் குறைத்தல், பிரான்சில் செயல்படும் நிறுவனங்களில் இலாபங்களை அதிகரிக்க சமூகநல செலவுகளில் இருந்து பெருநிறுவன பங்களிப்பை வெட்டுதல் என “வழங்கல் பக்க” (supply-side) கொள்கைகளுக்கு ஏற்றம் அளித்தார். “பிரான்சின் முக்கிய பிரச்சினையை சமாளிக்கும் நேரம் வந்துவிட்டது: அதாவது உற்பத்தியை. நாம் இன்னும் அதிக, சிறந்த பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். எனவே நாம் வழங்கல் பகுதியில் செயல்பட வேண்டும்... இதன் பொருள் தேவையை முரண்படுத்துகிறோம் என்பது அல்ல, உண்மையில் வழங்கல் தான் தேவையை தோற்றுவிக்கின்றன.” என்றார் அவர். அவர் மேலும் கூறினார்: “நான் ஒரு புதிய இலக்கை நிர்ணயிக்கிறேன்: 2017 ஐ ஒட்டி, நிறுவனங்களுக்கும் சுய வேலையில் இருப்பவர்களுக்கும், நாம் குடும்ப சமூக அளிப்புக்களை நிறுத்த வேண்டும்; 30 பில்லியன் யூரோக்களை வரிகளில் நீக்க வேண்டும்.” இந்த பணம் பிரான்சில் 20 வயதுக்கும் கீழ் குறைந்தபட்சம் 2 குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கப்படும் 150 யூரோக்கள் (கிட்டத்தட்ட) நிதிக்குச் செல்கின்றன. இது பிரான்சில் அதிக பிறப்பு விகிதத்தைத் தக்க வைக்கும் கொள்கையின் மையப்பகுதி ஆகும். மொத்தம் 50 பில்லியன் யூரோக்கள் பெருநிறுவன வரிகளைக் குறைக்கும் உந்துதலின் ஒரு பாகமாக, RSA வேலையின்மை மற்றும் சமூகநலனில் மேலும் வெட்டுக்களுக்கு ஹாலண்ட் அழைப்பு விடுத்தார். இதற்கான தயாரிப்புக்கள் வசந்த காலத்தில் நடைபெறும் என்றும் இலையுதிர்காலத்தில் இதற்கான புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் கூறினார். அவருடைய சிக்கன நடவடிக்கைகள் “சமூகப்பங்காளிகள்” என அழைக்கபடுவோரின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் என்றார் ஹாலண்ட்; அதாவது தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் கூட்டமைப்புடன். சமூகக் கொள்கையில் “பொறுப்பு உடன்பாடு” (Responsibility Pact) என அவர்களுடன் இயற்றியிருப்பதை பாராட்டிய அவர், அது “பல தசாப்தங்களில் இந்நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய உடன்பாடுகளில் ஒன்றாகும். இதில் எல்லா சமூகப் பங்காளிகளும் உள்ளனர். என்னுடைய பேச்சுக்களின் வழிவகை இளைஞர் ஒப்பந்தங்கள், ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் வேலைப்பயிற்சி என்னும் பல விவாதங்களில் தன் மதிப்பை நிரூபித்துள்ளது.” என்றார். தன்னுடைய சிக்கனக் கொள்கைகளை பேரினவாதம் மற்றும் போர்வெறி அழைப்புக்களுடன் நியாயப்படுத்திய ஹாலண்ட் இவை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் உலக அரங்கில் தன்னை இராணுவ அளவில் மீண்டும் உறுதிப்படுத்த அனுமதிக்கும் என்றார். “தான் ஒரு சீர்திருத்தவாதி, யதாரத்தவாதி, எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டுப்பற்று உடையவர்” என்று பீற்றிக் கொண்ட ஹாலண்ட் கூறினார்: “நாம் யார்? நாம் வெறுமனே காலனிகளை கொண்டிருந்த ஒரு நாடு மட்டும் அல்ல. நம் நாடு இன்னும் வளங்களைக் கொண்ட சக்தியாகும்.... இப்பெரிய நாடு, இதன் இராணுவத் திறன், இந்த வியத்கு வீரர்கள் அவர்களுக்கு பின்னால் தேவையான இயக்கவியலை தோற்றவிக்கும் பொருளாதாரத்தை விட்டுச் செல்லவில்லை என்றால், பிரான்சின் தாக்கத்தை குறைத்துவிடும்.” அவர் இன்னும் பீற்றிக் கொண்டார்: “நான் ஒருவித இரகசியத்தை கூறுகிறேன்: சிரியாவில் தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்றால், அதைச் செய்ய நம்மால் இயலும்” என பெருமையடித்துக்கொண்டார். இன்னும் வலதுசாரி உணர்விற்கு அழைப்பு விடுகையில், ஹாலண்ட் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸின் பிற்போக்குத்தன ரோமா பள்ளிமாணவி லியோனார்டா டிப்ரானி மற்றும் அவருடைய குடும்பத்தை கடந்த இலையுதிர்காலத்தில் வெளியேற்றியதற்கு ஆதரவைத் தெரிவித்தார்—இதில் அந்நேரத்தில் அவர் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அவர் கூறினார்: “லியோனார்டா விவகாரத்தில் நான் என்னைக் கேட்டுக்கொண்ட ஒரேகேள்வி, நான் தலையிட வேண்டுமா என்பதுதான். பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது எனத் தோன்றுகிறது, எவரும் திரும்பவில்லை”. இது போர்கள், சிக்கன நடவடிக்கைகள் என்று ஐரோப்பிய ஏகாதிபத்தியம் தொடக்கியவற்றின் பேரழிவு விளைவுகள் இருந்த போதிலும் முதலாளித்துவத்தின் திவால்தன்மைக்கு சான்றாக உள்ளது. ஹாலண்ட் அவற்றைத்தான் அதிகம் கொடுக்கிறார், வேறு ஏதும் அவரிடம் இல்லை. அமெரிக்கத் தலைமையிலான சிரியத் தலையீடு கிட்டத்தட்ட இராணுவ மோதலை ஈரான், ரஷ்யாவுடன் வகை செய்தது. அது உலகப் போருக்கு வழிவகுத்திருக்கும்; கிரேக்கம் மற்றும் ஸ்பெயினின் சிக்கனக் கொள்கைகள் பொருளாதாரச்சரிவிற்கு உந்துதல் கொடுத்துள்ளன, பெரும்பாலான இளம் தொழிலாளர்களை வேலையில் இருந்து அகற்றிவிட்டது. ஆயினும் இதே போன்ற கொள்கைகளைத்தான் வெற்றிக்கான மாதிரிகள் போல் இன்னும் முதலாளித்துவ “இடது” கட்சிகளான PS போன்றவற்றால் தொடரப்படுகின்றன. இதில் ஹாலண்டும், சோசலிஸ்ட் கட்சியும், ஸ்ராலினிச அல்லது போலி இடது போக்குகளான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகியவற்றின் ஆதரவைக் கொண்டுள்ளன. தேர்தல் காலத்தில் ஹாலண்டிற்கு வாக்களிக்குமாறு கோரியபின், இத்தகைய குட்டிமுதலாளித்துவக் கட்சிகள் தங்களை PS உடைய இழிந்த மோசமான கொள்கைகளில் இருந்து ஒதுக்கி வைத்துக் கொள்ள முயல்கின்றன. இவ்வகையில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) இன் தேசியச் செயலர் பியர் லோரோன்ட் கூறினார்: “பிரான்சுவா ஹாலண்ட் அளித்துள்ளது உண்மையில் “பொறுப்பற்ற உடன்பாடுதான்”. இவர் ஆழ்ந்த தாக்குதலை, பிரான்சின் சமூக, குடியரசு மாதிரி அகற்றப்படுவதற்கு அறிவித்துள்ளார்.... கம்யூனிஸ்ட்டுகளும் இடது முன்னணியும் (இதில் ஒரு பகுதிதான் PCF) ஜனாதிபதியின் திட்டத்தை தோற்கடிக்க அணிதிரளும்.” PS இன் குட்டி முதலாளித்துவ நட்பு அமைப்புக்கள் அப்படி ஒன்றும் ஏதும் செய்யப்போவதில்லை. வரவிருக்கும் தேர்தல்களில் PCF தேர்தல் உட்பாடுகளை PS உடன் கொள்ள வேலைசெய்கின்றது; தொழிற்சங்க அதிகாரத்துவம் தன் சக்திகளை கொண்டு ஹாலண்டின் சிக்கன நடவடிக்கைகளுக்கு திட்டமிடுகிறது, முதலாளிகள் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சீற்றத்தை தீமை விளைவிக்காத வழிகளில் நிறுத்துவர். அவருடைய கொள்கைகளை சற்று மாற்றிக் கொள்ளும்படி வீணான அழைப்புக்களை ஹாலண்டிற்கு விடுவர். ஒரு வர்க்கப் பிளவு தொழிலாள வர்க்கத்தை, PS ன் அரசியல் சுற்றுவட்டத்தில் இருக்கும் இழிந்த குட்டி முதலாளித்துவத்தில் இருந்து பிரிக்கிறது. என்ன தயாரிக்கப்பட்டு வருகிறது என்றால், வலதுசாரிகளால் தூண்டிவிடப்பட்டு விரிவடையும் நெருக்கடிக்கு மத்தியில், தொழிலாள வர்க்கத்திற்கும், முதலாளித்துவத்தின் இடது பிற்போக்குத்தன கொள்கைகளுக்கும் இடையே ஒரு மோதல்தான். இதைப்பற்றி அவர் அதிகம் கூறவில்லை என்றாலும், ஹாலண்டும் ஐரோப்பிய ஆளும் வர்க்கமும் தங்களது பேரினவாத, இராணுவவாத அழைப்புக்கள் தேசிய அழுத்தங்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் விரிவாக்குகின்றன என்பதையும் அது FN போன்ற நவ-பாசிசக் குழுக்களுக்கு ஏற்றம் அளிக்கிறது என்பதையும் நன்கறிவர். ஜேர்மனியுடன் நெருக்கமான அரசியல், இராணுவ உறவுகளுக்கு அழைப்பு விடுத்த ஹாலண்ட் சுருக்கமாக பெரும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் மோதல்களை ஒப்புக் கொண்டார். “ஐரோப்பாவிற்குள் மோதல் உள்ளது, ஆனால் ஐரோப்பா என்னும் மூலகருத்து தன்னை சிதைக்க நான் விடமாட்டேன்” என்றார். FN எழுச்சி பற்றி அவர் புதிராகக் குறிப்பிட்டு, வணிக சார்பு வளர்ச்சிக் கொள்கைகளுக்கு அழைப்பு விடுத்து, பிரெஞ்சுத் தேர்தல்களில் “ஜனரஞ்சக” சக்திகள் எழுச்சி தடுக்கப்பட வேண்டும் என்றார். “நாம் வேகமாக செயல்பட வேண்டும்; இல்லாவிடின், இது ஜனரஞ்சனவாதிகளை அடைந்துவிடும்; இப்பெயர் அதிக பொருளைக் கொண்டிருக்கவில்லை, தீவிரவாதிகள், இனவாதிகள் நலன் அடைவர் என்று சொல்லுவோம்.” உண்மையில், FN எழுச்சி மற்றும் ஐரோப்பாவிற்கு உள்ளேயான பதட்டங்களுக்கும் உந்து சக்தியாக இருக்கும் முக்கிய காரணிகள், முதலாளித்துவத்தின் சரிவும் ஹாலண்ட் தன் உரையில் கொடுத்துள்ள பிற்போக்குத்தன முன்முயற்சிகளுமே ஆகும். |
|