World Socialist Web Site www.wsws.org |
The real content of Obama’s “progressive” agenda Democrats attack the unemployed and the poor ஒபாமாவின் "முற்போக்கு" நிகழ்ச்சிநிரலின் உண்மையான உள்ளடக்கம் ஜனநாயக கட்சியினர் வேலைவாய்ப்பற்றோரையும் ஏழைகளையும் தாக்குகின்றனர்
Patrick
Martin வேலைவாய்ப்பற்றோருக்கான விரிவாக்கப்பட்ட உதவிகளை வெட்டுவதில் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மிக வறிய பிரிவுகளுக்கான உணவு மானிய கூப்பன் உதவிகளைக் குறைப்பதில் காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் இந்த வாரம் குடியரசுக் கட்சியினருடன் பகிரங்கமாக இணைந்துகொள்ள முன்வந்தனர். வியாழனன்று, செனட்டின் பெரும்பான்மையினர் தலைவர் ஹார்ரி ரெய்ட் மத்திய அரசின் நீண்டகால வேலைவாய்ப்பின்மை உதவிகளை புதுப்பிக்க ஒரு திட்டத்தை முன்னெடுத்தார். நீண்டகால வேலைவாய்ப்பின்மையில் இருந்த 1.3 மில்லியன் மக்களுக்கான அத்திட்டம் டிசம்பர் 28இல் காலாவதியாக இரண்டு கட்சிகளாலும் அனுமதிக்கப்பட்டது. ஜனநாயக கட்சியின் திட்டத்தின் கீழ், உதவிகள் நவம்பர் மத்தியில் வரைக்கும் பத்து மாதங்களுக்கு மட்டும் புதுப்பிக்கப்படும். நடைமுறையில் 2014 காங்கிரஸ் தேர்தல்களுக்கு சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் காலாவதியாகும். அவசரகால உதவிகளை அவற்றின் கடந்த ஆண்டு அளவுகளில் இருந்து இன்னும் மேலதிகமாக குறைக்கப்படும். மாநில வேலைவாய்ப்பின்மை காப்பீட்டு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட 26 வாரங்களை 47 வாரங்களுக்கான உதவியாக கூட்டுவதற்கு மாறாக, புதிய திட்டமானது உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதங்களை 9 சதவீதத்திற்கு அதிகமாக கொண்டிருக்கும் மாநிலங்களில் அதிகபட்சமாக 31 வாரங்களுக்கு மட்டும் வழங்கும். மத்திய அரசின் இந்த விரிவாக்கப்பட்ட உதவிகள் உத்தியோகபூர்வமாக குறைந்தபட்ச வேலைவாய்ப்பின்மை விகிதங்களைக் கொண்டுள்ள மாநிலங்களில் இன்னும் குறைந்த காலத்திற்கே வழங்கப்படும். விரிவாக்கப்பட்ட உதவிகளின் எவ்வித மீட்டமைப்பும் ஏனைய சமூக செலவின வெட்டுக்களைக் கொண்டு நிதியளிக்கப்பட வேண்டுமென்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டில் உள்ள குடியரசு கட்சியினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ரெய்ட் முற்றிலுமாக அடிபணிந்தார். ஜனநாயகக் கட்சி திட்டத்தின் 18 பில்லியன் டாலர் ஒட்டுமொத்த செலவும் இந்த விதத்தில் சரிகட்டப்படும். முக்கியமாக, 17 பில்லியன் டாலரை வெட்டி, நாடெங்கிலும் ஒதுக்கீட்டு வெட்டுக்கள் (sequestration) என்றழைக்கப்படும் செலவின வெட்டுக்களை ஒரு வருடத்திற்கு நீடிப்பதன் மூலமாக செலுத்தப்படும், அதாவது அது இப்போது 2023இல் முடிவதற்கு பதிலாக 2024 வரை நீடிக்கும். செனட்டில் உள்ள குடியரசு கட்சியினரால் முன்மொழியப்பட்ட பல திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கான அவரின் எதிர்ப்பையும் ஜனநாயக கட்சி தலைவர் கைவிட்டார், மேலும் ஜனநாயக கட்சியின் கணிசமான ஆதரவோடு ஒருவேளை அவை நிறைவேற்றபடலாம். ஊனமுற்றோருக்கான சமூக பாதுகாப்பு தொகை பெறுவது மீதான ஒரு தடை மற்றும் அதேவேளையில் வேலைவாய்ப்பின்மை உதவிகள் மீதான தடை, மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒட்டிய வரி சலுகைகள் (child tax credit) போன்ற மத்திய அரசின் உதவிகளை பெறுவதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் உட்பட அத்திட்டத்தில் மேற்படி கட்டுப்பாடுகளைச் சேர்ப்பதும் அவற்றில் உள்ளடங்கும். நீண்டகால வேலையின்மைக்கான விரிவாக்கப்பட்ட உதவிகளை கூடுதலாக சுருக்குவதற்கான ஜனநாயகக் கட்சியின் திட்டம், வேலைவாய்ப்பு மீதான தொழிலாளர் நலத்துறையின் சமீபத்திய அறிக்கை வெளியிடப்படுவதற்கு வெறும் 24 மணி நேரத்திற்கு முன்னர் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை, டிசம்பரில் மொத்தம் 74,000 புதிய வேலைகள் படுமோசமாக உருவாக்கப்பட்டதை எடுத்துக்காட்டியதோடு வேலைவாய்ப்பற்றோர் கூட்டத்தில் மேற்கொண்டும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டியது. உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.7 சதவீதமாக வீழ்ந்துள்ளது, ஆனால் 347,000க்கும் மேற்பட்ட வேலையற்ற தொழிலாளர்கள் அங்கே வேலை இல்லாததால் வேலை கோருவதை நிறுத்திவிட்டுள்ள நிலையில், அது தொழிலாளர் சந்தையில் மோசமடைந்துள்ள நிலைமைகளின் ஒரு சொல்லொணா வெளிப்பாடாக இருந்தது. உணவு மானிய கூப்பன்களைப் பொறுத்த வரையில், C-SPANஇல் ஞாயிறன்று ஒளிபரப்ப பதிவு செய்யப்பட்ட ஒரு நேர்காணலில், பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியின் சிறுபான்மையினர் கொறடா ஸ்டெனி ஹோயர், ஊட்டச்சத்து உதவி துணைத்திட்டம் (SNAP) என்று உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுவதில் இருந்து 10 ஆண்டுகளில் 9 பில்லியன் டாலரை வெட்டுவதற்கான ஒரு முன்மொழிவு ஜனநாயக கட்சியினரின் கணிசமான ஆதரவோடு பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்படக்கூடும் என்பதை ஒப்புக் கொண்டார். தாமே அதுபோன்றவொரு வெட்டிற்கு வாக்களிக்க இருப்பதாகவும் ஹோயர் தெரிவித்தார். ஒபாமா நிர்வாகத்தின் 2009 பொருளாதார மீட்புபொதி திட்டத்தின் பாகமாக செலவுகளைத் தற்காலிகமாக அதிகரித்தபோது, உணவு மானிய கூப்பன் செலவினங்கள் வரலாற்றில் முதன்முறையாக கடந்த இலையுதிர் காலத்தில் நாடெங்கிலும் வெட்டப்பட்டது. அது காலாவதியாக அனுமதிக்கப்பட்டதோடு, SNAPஇல் இருந்து உடனடியாக 5 பில்லியன் டாலர் வெட்டப்பட்டது, மற்றும் மூன்று ஆண்டுகளில் 11 பில்லியன் டாலர் வெட்டப்பட உள்ளன. இது ஆண்டுக்கு ஒரு மாத உணவு வெட்டுக்கு சமமாகும். ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள செனட், தற்போதைய வரவு-செலவு கணக்கு பேச்சுவார்த்தை சுற்றில், உணவு மானிய கூப்பன்களில் பத்தாண்டுகளில் கூடுதலாக 4 பில்லியன் டாலர் வெட்டுக்களை முன்மொழிந்துள்ளது, அதேவேளையில் குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதிநிதிகள் சபை அதே காலக்கட்டத்தில் மலைக்க வைக்கும் விதத்தில் 40 பில்லியன் டாலர் வெட்டுக்களைக் கோரி உள்ளது. விளைவாக ஏற்படும் 9 பில்லியன் டாலர் "சமரசம்" என்பது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்நிலைமைகளை கடுமையாக மோசமடைய செய்வதென்பதைக் குறிக்கிறது. இந்தளவிற்கு உணவு மானிய கூப்பன்களின் வெட்டுக்களானது தவிர்க்க முடியாமல் உயர்ந்தளவிலான நீரழிவு நோய்கள் மற்றும் ஏனைய ஊட்டச்சத்து சார்ந்த நோய்கள், குழந்தைகளுக்கான வளர்ச்சி பிரச்சினைகள், மற்றும், தொழிலாள வர்க்க குடியிருப்புகளை படுமோசமாக பாதிக்கப்படுவதில், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் முழு பசி ஆகியவையாக மாறும் என்று மருத்துவ மற்றும் வறுமை-ஒழிப்பு குழுக்கள் எச்சரித்துள்ளன. உணவு மானிய கூப்பன்களைப் பெறுபவர்களில் பாதி பேர் குழந்தைகள், மற்றும் 10 சதவீதம் பேர் முதியோர், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட நிரந்தர வருவாயில் வாழ்கின்றனர். டிசம்பர் மத்தியில் ஜனாதிபதி ஒபாமா அவரது உரையில் அறிவித்ததில் இருந்து, அதாவது வருவாய் சமத்துவமின்மை மிகப் பெரிய பிரச்சினை என்றும் பதவியில் இருக்கும் மீதமுள்ள ஆண்டுகளை அதற்காகவே அவர் அர்பணிக்க இருப்பதாகவும் கூறியதில் இருந்து, ஜனநாயக கட்சி அமெரிக்க அரசியலில் "முற்போக்குவாதத்தின்" ஒரு புதிய சகாப்தத்திற்கு தாக்குமுகப்பாக மாறியுள்ளதாக சித்தரிக்க அங்கே ஊடகங்களிலும், ஒபாமாவின் தாராளவாத மற்றும் போலி-இடது அனுதாபிகள் இடையேயும் ஒரு திட்டமிட்ட முயற்சி இருந்து வருகிறது. உலகெங்கிலும் அமெரிக்கா இராணுவ முன்னெடுப்புக்கு நிதியளிப்பதற்கு பாரிய தொகைகளை அர்ப்பணித்திருந்த அதேவேளையில், வங்கிகளைப் பிணையெடுக்க ட்ரில்லியன் கணக்கான டாலர்களை பாய்ச்சியும் மற்றும் பங்குச் சந்தைக்கு உதவி செய்திருந்தபோது, உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதில் ஒபாமா நிர்வாகத்தின் தொடர்ச்சியான பிற்போக்குத்தனமான சாதனையை அதுபோன்ற வாதங்கள் மூடிமறைத்தன என்பதால், அவை எப்போதும் ஒரு மோசடியாக இருந்தன. வேலைவாய்ப்பற்றோர் மற்றும் ஏழைகளுக்கான உதவிகளை வெட்டும் அதிதீவிர வலது திட்டம் ஜனநாயக கட்சியினரால் பகிரங்கமாக ஆதரவழிக்கப்படுவதோடு சேர்ந்து, ஒரு புதிய "முற்போக்கு" அரசியல் என்ற வாதங்களுக்கும் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் உண்மையான திட்டங்களின் பிரதிபலிப்பிற்கும் இடையிலான முரண்பாடு முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு கூர்மையாகி உள்ளது. |
|