சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Jaffna Teaching Hospital volunteer workers struggle betrayed

இலங்கை: யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொண்டர் தொழிலாளர்களின் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டது

By Subash Somachandran
11 January 2014

Use this version to printSend feedback

இலங்கையின் வடக்கில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதாரப் பிரிவு தொண்டர் தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டதானது யாழ்ப்பாணத்திலும் இலங்கை முழுவதிலும் நிலவும் வர்க்க பதட்டங்களை நன்கு வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக தொண்டர் தொழிலாளர்களாக பணிபுரிந்த, 243 தற்காலிக தொண்டர் தொழிலாளர்கள், நிரந்தர நியமனம் கோரி கடந்த டிசம்பர் 12ம் திகதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். 13 நாட்கள் நீடித்த சுகாதாரப் பிரிவு தொண்டர் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், டிசம்பர் 25ம் திகதி, பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டில் பொய் உறுதிமொழியோடும், பாதி மிரட்டலோடும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் பவானி பசுபதிராஜா, வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் இரா. செல்வவடிவேல் ஆகியோருடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவையுடன் கலந்துரையாடி ஜனவரி 5ம் திகதி உங்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

எனினும், அமைச்சரின் கருத்து அனைத்து தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் கிடைக்காது என்பதை உறுதிப்படுத்தியது. இந்த தொழிலுக்காக 8 வகுப்புவரை கற்றிருப்பது தகமையாகக் கொள்ளப்பட்டிருந்த போதும், “.பொ.. சாதாரண தர தகுதி உள்ளவர்களுக்கே முதலில் நியமனம் வழங்கப்படும். ஏனையவர்களுக்கு விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்த அவர், “ஆனாலும் அவர்கள் வரும்காலத்தில் சாதாரண தரத்தினைப் பூர்த்தி செய்ய வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்.

தமக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்த தொண்டர் தொழிலாளர்கள் கடந்த 6 வருடங்களாக தினமும் 10க்கு மேற்பட்ட மணிநேரமும், மோசமான நிலமைகளுக்குள்ளும், ஓய்வூதியம் மற்றும் எந்த காப்புறுதியும் இன்றி வேலைசெய்து வந்தனர். அவர்களுக்கு வெறும் 175 ரூபாய் மட்டுமே நாளாந்த கூலியாக கிடைத்தது.

வாக்குறுதி கொடுத்து இரண்டே நாட்களுக்குள் அதை முற்றாக மீறிய தேவானந்தா, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 243 தொண்டர் தொழிலாளர்களில், 80 பேர் கா.பொ.. சாதாரண தரத்தினைப் பூர்த்தி செய்திருந்தபோதிலும், அவர்களில் 44 பேருக்கு மட்டுமே நியமனம் வழங்கியதோடு, ஏனைய தொண்டர் தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, மேலும் புதிதாக 124 பேருக்கு நியமனம் வழங்கினார்.

உறுதிமொழியின் காலக்கெடு முடிந்ததையடுத்து ஜனவரி 6 தொண்டர் தொழிலாளர்கள் தமது வேலையை இடைநிறுத்தி அமைச்சரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். இதன்போது, தென்பகுதியில் தேர்தல்கள் வருகின்ற காரணத்தினால் நான் இப்போது அரசாங்கத்துடன் கதைக்க முடியாது என்று தட்டிக் கழித்த அவர்,அதுவரையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும், அதனூடாகவே நிரந்தர நியமனங்கள் தொடர்பில் துறைசார்ந்தோர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிப்படையாகவே தொழிலாளர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார்.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை அம்பலப்படுத்தும் தொழிலாளர்களின் முயற்சிகளும் நசுக்கப்பட்டன. சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க வைத்தியசாலைக்கு சென்ற WSWS நிருபரை குறுக்கிட்ட வைத்தியசாலை பணிப்பாளர்,ஆஸ்பத்திரிக்குள் எந்த பத்திரிகையாளரும் அரசாங்கத்தின் அனுமதியின்றி ஊழியர்களை சந்திக்க முடியாது. அவ்வாறு சந்தித்து ஏதாவது தகவல்களை அவர்கள் எமது அனுமதியின்றி உங்களுக்கு தந்தால், அவர்கள் வேலையை இழக்க நேரிடும்,” என எச்சரித்தார்.

வடமாகாணம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களின் உயிர்வாழ்வோடு நேரடித்தொடர்பு கொண்ட இந்த வைத்தியசாலைக்கு நாளாந்தம் பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது உயிரை பாதுகாக்க சென்று வருகின்றனர். இந்த வைத்தியசாலையின் நிலையைப் பற்றி ஒரு வைத்திய அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், “மருத்துவரில் இருந்து தொண்டர் தொழிலாளர் வரை போதாதுள்ளது, 5 மருத்துவ தாதிகளுக்கு ஒருவரே சேவையாற்றுகிறார், உள்கட்டுமான வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளன, இதனால் தரமான சேவைகளை வழங்கமுடியாதுள்ளது என்றார்.

யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர் தொழிலாளர் போராட்டம், வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதாக கடந்த நான்கு வருடங்களாக கூறிவரும் ஒரு அரசாங்கத்தின் உண்மையான முகத்தையும், அரசாங்க ஆதரவு, அரசாங்க எதிர்ப்பு தமிழ் கட்சிகளின் தொழிலாள வர்க்க விரோத பண்பையும், வைத்தியசாலை நிர்வாகத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் கூட்டாக வெளிக்கொணர்ந்துள்ளது. சாதாரண மக்களின் அடிப்படைத் தேவை தொடர்பாக அரசாங்கம் மற்றும் தமிழ் கட்சிகளின் உதாசீனத்தை இச் சம்பவம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

அரசாங்கம், EPDP, EPDP சார்பு வைத்தியசாலை நிர்வாகம் ஆகியவை கூட்டாக இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளன. அவர்களின் முழுமுயற்சியாக இருந்தது, இந்தப் போராட்டத்தை நாளாந்தம் வைத்தியசாலைக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கானோரின் மத்தியில் பரவவிடாமல், விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதே. அவர்கள் தமது அதிகாரபலத்தை பயன்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களும், போலி இடது கட்சிகளும் யாழ்ப்பாண தொண்டர் தொழிலாளர்களின் போராட்டம் முதுகில் குத்தப்படுவதற்கு ஏற்றவகையில் தனிமைப்படுத்தினர். போராட்டம் தொடர்பாக முழுமையாக இருட்டடிப்பு செய்திருந்தனர்.

இந்த தொண்டர் தொழிலாளர்களை கொத்தடிமை முறையில் சுரண்டுவதற்கான முழு முயற்சியும் இந்தப் போலி உறுதிமொழிகளின் பின்னால் இருந்தமை தெளிவாகியுள்ளது. இதுவரைகாலமும் சிற்றூழியர்களினதும் மற்றும் மருத்துவ மாதுக்களினதும் பற்றாக்குறைகளை இந்த தொண்டர் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்பியதன் மூலம் அரசாங்கம் இலட்சக் கணக்கான ரூபாய்க்களை திருடிக்கொண்டுள்ளது.

வேலைநிறுத்தம் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில், .பீ.டி.பீ யாழ் மாவட்ட இணைப்பாளர் கே. ஜெகன், வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுநர் போன்றோர் இதே நிபந்தனையையே முன்வைத்திருந்தனர். ஆனாலும் ஒரு மாற்று அரசியல் முன்னோக்கும் தலைமையும் இல்லாத நிலையில், அப்போது நிராகரிக்கப்பட்ட அதே கோரிக்கைகளுக்கான தங்களது போராட்டத்தை தொழிலாளர்களால் இறுதிவரை தொடர முடியாமல் போனது.

இது தொடர்பாக WSWSக்கு கருத்துத் தெரிவித்த ஒரு தொழிலாளி, “எமக்கு யாரிடம் போவது என்று தெரியவில்லை, ஈபிடிபி அரசாங்கத்துடன் உள்ளதால், அவரை எதிர்காமல் இணைந்து சென்றே நியமனத்தினை பெறவேண்டும் என நாங்கள் போராட்டத்தினைக் கைவிட்டோம். அவர்கள் எங்களுக்கு வேலை வாங்கித் தருவார்கள் என்று நம்பினோம். அவர்கள் எங்களின் காலை வாரிவிட்டார்கள். ‘விரும்பினால் வேலை செய்யுங்கள் இல்லாவிட்டால் வீட்டுக்குப் போங்கள் என்பதையே டக்ளஸின் கருத்து பிரதிபலிக்கின்றது. எங்களைப் பற்றியோ அல்லது எங்களின் குடும்பங்களைப் பற்றியோ அவர்களுக்கு எள்ளளவும் அக்கறை கிடையாது என்றார்.

தேவானந்தாவின் சந்திப்பின் பின்னர் நம்பிக்கையிழந்த தொண்டர் தொழிலாளர்களில் பலர் வேலைக்குச் செல்லாமல் நின்று விட்டனர். இன்னும் சிலர் மூன்று மாதங்கள் பொறுமையாக வேலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். தொண்டர் தொழிலாளர்களின் வருகை 50 வீதமாக உள்ளதாக சக ஊழியர்கள் தெரிவிக்கின்றர்.

ஏற்கனவே, 300 சிற்றூழியர்கள் தேவைப்படும் நிலையில், இந்த சேவைகளுக்கு பதிலீட்டு தொண்டர் தொழிலாளர்களாக தற்போது உள்வாங்கப்பட்டுள்ள 168 பேரும் நாளொன்றிற்கு அடிப்படை சம்பளமாக 391 ரூபாய்களை (அண்ணளவாக 2 யூரோ அல்லது 3 அமெரிக்க டாலர்)  பெறுவர். மாதம் பத்து நாட்களுக்கு குறையாமல் வேலைக்கு சமூகமளித்தால் அவர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி நாளாந்தம் 260 ரூபா என இன்னொரு அற்ப தொகை வழங்கப்படும். மேலும் இந்தப் பதவியானது, நிரந்தரமோ அல்லது தற்காலிக நியமனமோ கூட அல்ல இதுவொரு பதிலீட்டு நியமனமாகும், அதாவது அவர்களது சேவை தேவையற்றதாக கருதும் பட்சத்தில் எந்தவித நிபந்தனைகளும் இன்றி வெளியேற்றப்படுவர்.

ஏனைய தொழிலாளர்களுக்கு உள்ள பிரசவ லீவு உட்பட, எந்தவிதமான லீவும் இவர்களுக்கு கிடையாது. ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடையாது. சீருடைக்கான கொடுப்பனவுகள் கூட வழங்கப்படமாட்டாது. உயிர்களைப் பராமரிக்கும் இந்த தொழிலாளர்கள் பெறும் கூலியானது, வெளியே சாதாரண கூலித் தொழிலாளர்களின் சம்பளத்தை விட மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது.

மறுபக்கத்தில் அமெரிக்க, இந்திய நலன்களின் பேரில் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களைப் பற்றி நாளாந்தம் கண்ணீர் வடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ந்த உயிர்வாழும் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாகதமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி வெளிப்படையாகவே கையை விரித்துவிட்டது. வடமாகாண தேர்தல் முடிந்து 3 மாதங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் உறுதியளித்த வாக்குறுதிகள் எல்லாம் பொய்யென அம்பலப்படுவதை வாக்களித்தவர்கள் காணத் தொடங்குகின்றனர்.

ஈபிடிபியும் தமிழ் கூட்டமைப்பும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தாலும் ஒரு வர்க்கப் போராட்டம் வெடித்தவுடன் ஒரேமாதிரி பிரதிபலிப்பதையே இச்சம்பவம் வெளிக்கொணர்ந்துள்ளது. “கூட்டமைப்புக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால் பறவாயில்லை, அவர்கள் எங்களுடன் இணைந்து போராடுவதற்கு கூடவா அதிகாரம் வேண்டும்?” என்று ஒரு தொழிலாளி WSWS நிருபர்களிடம் கேட்டார்.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் அரசாங்கத்துடனான நயவஞ்சக கூட்டில் இருந்தும் அதேபோல ஸ்ராலினிச, மாவோவாத கட்சிகள் மற்றும் போலி இடதுகள், அதே போல் தொழிற்சங்கங்களினதும் துரோக பாத்திரத்தில் இருந்தும் தொழிலாளர்கள் நிறைய அரசியல் படிப்பினைகளைப் பெறவேண்டியுள்ளது. உலக முதலாளித்துவத்திற்கு இலங்கையை ஒரு மலிவு-உழைப்பு களமாக மாற்றும் ஆளும் வர்க்கத்தின் உந்துதலுக்கு அவை தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளன.

உலக சோசலிச வலைத் தளம், இச் சம்பவத்தில் தலையிட்ட அரசியல் கட்சிகள் தொடர்பாக தொழிலாளர்களுக்கு செய்த எச்சரிக்கைகள் ஒரு வாரத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகள், இயக்கங்களை எதிர்கொள்வதற்கு தொழிலாளர்களுக்கு வெறும் போர்க்குணம் மட்டும் போதாது. (காண்க, இலங்கை: யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொண்டர் தொழிலாளர்களின் போராட்டம் திருப்பு முனையில்)

தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், இலாப அமைப்பு முறைக்கும் அதன் சகல அரசியல் பாதுகாவலர்களுக்கும் எதிராக, தொழிலாளர்களை இலங்கையிலும் சர்வதேசரீதியாகவும் அணிதிரட்ட போராடவேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உட்பட உலகம் பூராவும் அரசாங்கங்கள் முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கே முனைகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒட்டு மொத்த எதிர்-தாக்குதலை அபிவிருத்தி செய்யும் போராட்டத்தோடு, தொண்டர் தொழிலாளர்கள் தமது போராட்டத்தை இணைக்கப் போராட வேண்டும். மேலும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான ஓர் அரசியல் போராட்டத்தில், குறிப்பாக ஒட்டுமொத்த இலாப முறைக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமே தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்பதே கற்றுக்கொள்ளப்பட வேண்டிய படிப்பினையாகும்.

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதாரப் பிரிவு தொண்டர் தொழிலாளர்களின் போராட்டம் இத்துடன் முடிவுக்கு வந்துவிடவில்லை. இக்காட்டிக் கொடுப்பின் படிப்பினைகள் நன்கு உள்வாங்கிக் கொள்ளப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய தலைமையும் முன்னோக்கும் இன்றியமையாதது என்பதை நிரூபித்துள்ளது. இந்த முன்னோக்கையும் தலைமைத்துவத்தையும் அபிவிருத்தி செய்வது உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் மட்டுமே.