World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Socialist Party runs Florange steelworks union leader in European elections

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி ஐரோப்பியத் தேர்தலில் ஃபுளோரோஞ்ச் உருக்கு தொழில் தொழிற்சங்க தலைவரை நிறுத்துகிறது

By Anthony Torres
9 January 2014

Back to screen version

ஃபுளோரோஞ்ச் ஆர்சிலர்-மிட்டல் உருக்குத்தொழில் நிறுவனத்தில் உள்ள பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CFDT) தலைமை தொழிற்சங்க பிரதிநிதியாக இருக்கும் எட்வார்ட் மார்ட்டின் இந்த ஆண்டில் ஐரோப்பிய தேர்தலில் கிழக்கு பிரான்சிற்கான சோசலிஸ்ட் கட்சியின் பட்டியலில் தலைமையிடம் பிடித்திருக்கிறார். அவர் போட்டியிடுவது குறித்து அரசியல் ஸ்தாபகம் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் தரப்பில் இருந்து இரட்டைவேடமான எதிர்வினைகள் வெளியாகியிருக்கின்றன.

சோசலிஸ்ட் கட்சியானது சமூக சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்திக் கொண்டும் ஏகாதிபத்தியப் போரை நடத்திக் கொண்டும் இருக்கிற அதேசமயத்தில் ஒரு தொழிற்சங்க பிரதிநிதியை தனது வேட்பாளராக ஊக்குவித்ததன் மூலமாக தன்னை தொழிலாள வர்க்கத்திற்கு நெருக்கமான ஒரு வெகுஜனக் கட்சியாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது. ஐந்தாவது குடியரசு ஸ்தாபகம் செய்யப்பட்டதன் பிந்தைய ஜனாதிபதிகளில் மிகவும் வெகுஜன வெறுப்பை சம்பாதித்திருக்கும் ஜனாதிபதியாக பிரான்சுவா ஹாலண்ட் இருக்கிறார். சோசலிஸ்ட் கட்சியானது அதிகாரத்தில் தொடர்வதற்கு தொழிற்சங்கங்களையும், “அதி இடதுஎன்பதாக அழைக்கப்படும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளையும், மற்றும் மார்ட்டின் போன்ற மனிதர்களையும் நம்பியிருக்கிறது.

மார்ட்டின் தனது முடிவைப் பின்வருமாறு விளக்கினார்: ”என்னை அரசியலுக்கு ஆட்படுத்திக் கொண்டதான ஒரு உணர்வு எனக்கு இல்லை, ஏனென்றால் ஒரு அரசியல் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை. பிரான்சிலும் ஐரோப்பாவிலும் தொழிற்துறையைக் காப்பதில் பல வருடங்களாக நாம் தலைமை கொடுத்து வந்திருக்கக் கூடிய அதேபோராட்டத்தை இப்போது இன்னொரு மட்டத்தில், ஐரோப்பிய மட்டத்தில் தொடர்வதற்கு நான் விரும்புகிறேன், அவ்வளவே. ஏனென்றால் அங்கு தான் நம்மைப் பாதிக்கக் கூடிய அத்தனை முக்கியமான முடிவுகளும் எடுக்கப்படுகின்றன.”

உண்மையில், மார்ட்டின் அரசியலுக்குள் சென்றிருக்கிறார் என்பதும் அத்துடன் தொழிலாள வர்க்கத்திற்கு மிகக் குரோதமான ஒரு கட்சிக்குள் சென்றிருக்கிறார் என்பதும் தெளிவு. பொது ஒழுங்கிற்கும் சோசலிஸ்ட் கட்சியின் ஸ்திர நிலைக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான திட்டங்களுக்கும் குந்தகம் வராமல் தொழிற்சாலை மூடல்களுக்கு ஏற்பாடு செய்தளிப்பது என்ற ஃபுளோரோஞ்சில் அவர் செய்த அதேவேலையை தொடர்வதே அவரது வகிபாத்திரமாக இருக்கும்.

CFDT மற்றும் PS இணைக்கும் பிணைப்புகள் சமீபத்தியவை அல்ல. பிரான்சின் இரண்டாம் பெரிய தொழிற்சங்கமான CFDT, 1970களில் சோசலிஸ்ட் கட்சியின் உருவாக்கத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஆற்றியது. Le Figaro நினைவுகூர்கிறது: “1974 இன் சோசலிச மன்றங்களில் (Socialist Forums) CFDT செயலூக்கத்துடன் பங்குபற்றியது. சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா மித்திரோன் 1981 இல் ஜனாதிபதியாக வெற்றி கண்ட சமயத்தில் CFDT இன் பாரிய எண்ணிக்கையிலான கூட்டாளிகள் அதில் இணைந்தனர். பிரதமர் பியர் மோறுவா இன் கீழான அவரது அமைச்சர்களில் 40 சதவீதம் பேர் தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்தவர்கள் என்றும், ஐந்தில் ஒருவர் CFDT இன் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.”

1981 முதல் 1984 வரை அதிகாரத்தில் இருந்த பிரதமர் பியர் மோறுவா, மித்திரோன் 1983 இல்சிக்கன நடவடிக்கைத் திருப்பத்தைமேற்கொள்வதற்கு துவக்கமளித்தார். மித்திரோனின் சிக்கன நடவடிக்கைத் திட்டங்களிலும் - அச்சமயத்தில் CFDT தலைவராக இருந்த எட்மோண்ட் மேய்ர் தான் ஜனாதிபதி மாளிகையான எலிசேயில் இருந்தபடி இதனை அறிவித்தார் - ஃபுளோரோஞ்ச் அமைந்திருக்கும் கிழக்கு பிரான்சின் உருக்காலைத் துறையை அழிப்பதிலும் CFDT ஒரு மையமான பாத்திரம் ஆற்றியது.  

எட்வார்ட் மார்ட்டின் 1989 இல் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கரங்களில்  தொழிலாள வர்க்கம் பெரும் தோல்விகளுக்கு ஆட்பட்டிருந்ததொரு சமயத்தில் CFDT தொழிற்சங்கப் பிரதிநிதியாக ஆனார்.

ஃபுளோரோஞ்ச் அனுபவம் மார்ட்டின் ஆற்றிய வர்க்கப் பாத்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்களுக்கும் அவர்களது முதலாளியான ஆர்சிலர்-மிட்டலுக்கும் இடையில் 2009 தொடங்கி 2012 வரை நடந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த வேலை செய்த அனைத்து தொழிற்சங்கக் குழுவுக்கு மார்ட்டின் தலைமை தாங்கியிருந்தார். ஆலை மூடலைத் தடுப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த அளவிலான போராட்டம் அபிவிருத்தியடையாமல் தடுப்பதிலும் ஆலையிலான தொழிலாளர்போராட்டத்தினை சோசலிஸ்ட் கட்சிக்கும் மற்றும் ஹாலண்டின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்குமான புகைப்பட விளம்பர சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் அவர் முயற்சித்தார்.

ஃபுளோரோஞ்ச் ஆலைக்கு விஜயம் செய்து எட்வார்ட் மார்ட்டினை சந்தித்த பிரான்சுவா ஹாலாண்ட், ஆலை மூடலைத் தடுக்கும் பொருட்டு ஆவன செய்யவிருப்பதாகக் கூறினார். சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் இருந்தால் இந்த உருக்காலை மூடப்படுவதை நிறுத்துவதற்கு அழுத்தமளிப்பது சுலபமாக இருக்கும் என்றதான பொய், மார்ட்டின் ஆதரவுடன், முன்வைக்கப்பட்டது.

ஹாலண்ட் வெற்றி பெற்ற ஒரு சில மாதங்களிலேயே இந்தப் பொய் தவிடுபொடியாகி விட்டது. வெளித்தோற்றத்திற்கு கரியமில வாயு வெளியீடுகளைக் குறைப்பதற்காய் வடிவமைக்கப்பட்ட முதலீட்டுக்கான ஒரு திட்டத்தில் தொழிற்சங்கங்களும், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கமும் மற்றும் ஆர்சிலர்-மிட்டல் நிறுவனமும் ஒரு உடன்பாட்டை எட்டின. இது இரண்டு வெடி அடுப்புகளை மூடி விடுவது சம்பந்தப்பட்டதாய் இருக்கிறது என்பதுடன் ஆலையின் 692 வேலைகளை அச்சுறுத்துகிறது.

ஃபுளோரோஞ்ச் ஆலையில் Force ouvrière (FO, தொழிலாளர் சக்தி)இன் தொழிற்சங்கப் பிரதிநிதியாக இருக்கும் வால்ட்டர் ப்ரொக்கோலி கருத்துக் கூறும்போது, “ஏதோவொரு விதத்தில், மார்ட்டின் ஃபுளோரெஞ்சை தனது சொந்த அபிலாசைகளுக்காய் பயன்படுத்திக் கொண்டார் என்பதான எண்ணமே எங்களுக்கு இருக்கிறதுஎன்றார்.  

இத்தகைய கருத்துகள் எல்லாம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் நிரம்பியிருக்கும் இரட்டை வேடங்களையும் மற்றும் அயோக்கியத்தனத்தையும் தான் பிரதிபலிக்கிறது. ப்ரோக்கோலி, சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக ஐரோப்பியத் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்து விட்டது வெளிப்படையாகி விட்டிருக்கும் நிலையில், வலது-சாரி எதிர்க் கட்சியான UMP(வெகுஜன இயக்கத்திற்கான ஒரு ஒன்றியம்)ஆன் குரோமேர்ஷ் பிரிவின் சார்பாக தேர்தலில் நிற்பதைதீவிரமாகப் பரிசீலித்து வருவதாகLibération நாளிதழ் குறிப்பிட்டது.   

பிப்ரவரியில் பட்டியல்கள் உருவாக்கப்படும்வரைஎதுவும் முடிவானதில்லைஎன்று குரோமேர்ஷ் Libération நாளிதழிடம் தெரிவித்தார். UMP சார்பாக தேர்தலில் நிற்கவிருப்பதான செய்திகளை ஆரம்பத்தில் ப்ரோக்கோலி மறுத்தார் என்றபோதிலும், பின்னர் UMP உடன் தொடர்பு கொண்டு பேசி வந்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

ஆர்சிலர்-மிட்டல் நிறுவனத்தின் தொழிலாளர் போராட்டத்தை, PS பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளித்துவப் பிரிவை தொழிற்சங்கங்கள் ஊக்குவிக்கின்ற நடவடிக்கைக்கு கீழ்ப்படியச் செய்வதென்பது, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் அல்லது அரசியல் ஸ்தாபகத்தின் எந்தப் பிரிவின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. சோசலிஸ்ட் கட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கண்டு தொழிற்சங்கங்களும் போலி-இடது அமைப்புகளும் அஞ்சுகின்றன என்பதால் அவை தொழிலாளர்களை திட்டமிட்டுக் காட்டிக் கொடுக்கின்றன.

முதலாளிகளின் தேவைகளுக்கு தக்கவாறு தொழிற்சாலைகளில் உற்பத்தியை ஒழுங்கமைத்துக் கொடுக்கின்ற வெற்றுக் கூடுகளாக தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. முதலாளிகளின் நடவடிக்கைகள் தொழிலாளர்களிடம் இருந்து எதிர்ப்பைச் சந்திக்கும் சமயத்தில், ஒழுங்கைப் பராமரித்து உற்பத்தி இடையூறின்றி தொடர்வதை உறுதி செய்கின்ற முதலாளிகளுக்கான காவலாளிகளாக தொழிற்சங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஃபுளோரோஞ்ச் உதாரணம் காட்டுவது போல, இலாபத்தன்மையான காரணங்களுக்காக ஒரு ஆலையை மூடிவிடத் தேவையாக இருக்கிறது என்று முதலாளித்துவம் கருதுமானால், தொழிற்சங்கங்கள் இந்த மூடலுக்கான ஒரு வழிவகையமைப்பை ஏற்பாடு செய்துகொடுத்து பின்னதாக, அளித்த சேவைகளுக்காய் பரிசுகளைப் பெற்றுக் கொள்கின்றன. இவ்வாறாய் அவர்கள் உயரத்தில் உட்கார வைக்கப்படுகிறார்கள் - மார்ட்டின் விடயத்தில் அவர் ஐரோப்பியத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் ஒரு முன்னணி வேட்பாளரின் இடத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்.

ஒரு முதலாளித்துவக் கட்சி தனது சொந்த வெற்றிவாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதற்காக முயற்சி செய்கின்றபோது, அதன் பாகமாய் மார்ட்டின் போன்ற மனிதர்கள் எவ்வாறு போட்டியிட முடிகிறது என்பதை, தொழிலாள வர்க்கத்தை நோக்கி தொழிற்சங்க அதிகாரத்துவம் கொண்டிருக்கும் குரோதத்தில் இருந்தே விளங்கிக் கொள்ள முடியும். சோசலிஸ்ட் கட்சியைச் சுற்றியிருக்கும் அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளில் இருந்து முறித்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே தொழிலாள வர்க்கம் தன்னை அரசாங்கத்தின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.