World Socialist Web Site www.wsws.org |
Fiat’s $4.35 billion payoff to UAW, Inc. UAW, Inc. இற்கு பியட் நிறுவனத்தின் 4.35 பில்லியன் டாலர்கள் வெகுமதி
Jerry White ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் (UAW) சங்கம் கிறைஸ்லர் நிறுவனத்தில் உள்ள பங்குகளை வாங்க அதன் அறக்கட்டளை நிதிக்கு 4.35 பில்லியன் டாலர் வழங்க இத்தாலிய வாகன உற்பத்தியாளரான பியட் நிறுவனம், புத்தாண்டின் முதல் நாள் அன்று ஒப்புதலளித்துள்ளது. கிறைஸ்லர் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வெட்டுவதிலும் மற்றும் அந்நிறுவனத்தின் இலாபத்தை உயர்த்துவதற்கும் UAW வழங்கிய சேவைகளுக்காக அந்த உடன்படிக்கையானது அதற்கு வழங்கப்பட்ட ஒரு பாரிய வெகுமதியாகும். வோல் ஸ்ட்ரீட் வழக்கறிஞர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு இடையே மூடிய-கதவுக்குப் பின்னால் நடந்த கூட்டங்களினூடாக, கிறைஸ்லர் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் செய்யப்பட்ட அந்த உடன்படிக்கை, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து UAW இனையும் இதர உத்தியோகப்பூர்வ தொழிற்சங்கங்களினையும் பிரித்து வைத்திருக்கும் இணைக்கவியலா பிளவை எடுத்துக்காட்டுகிறது. அந்த உடன்படிக்கை விதிமுறைகளின் கீழ், UAW கட்டுப்பாட்டில் உள்ள தன்னார்வ பணியாளர்கள் நல அமைப்பு (Voluntary Employees Beneficiary Association) அல்லது VEBA என்றழைக்கப்படும் ஓய்வூதியதாரர் மருத்துவ காப்பீடு அறக்கட்டளை நிதிக்கு பியட் நிறுவனம் 1.75 பில்லியன் டாலர் வழங்கும் மற்றும் கிறைஸ்லர் நிறுவனம் 1.9 பில்லியன் டாலர் பங்களிப்பு வழங்கும். விற்பனை ஜனவரி 20இல் அல்லது அதற்கருகில் முடிந்தால் நான்கு ஆண்டு தவணைகளில் அறக்கட்டளைக்கு 700 மில்லியன் டாலர் வழங்கவும் கிறைஸ்லர் ஒப்புக் கொண்டது. ஒபாமா நிர்வாகத்தால் நிர்ப்பந்திக்கப்பட்ட திவால்நிலைமை மற்றும் 2009இல் அந்த டெட்ராய்ட் வாகன உற்பத்தி நிறுவனத்தின் மறுசீரமைப்பு ஆகியவற்றின் விளைவாக கிறைஸ்லரில் ஒரு பாக பங்குகளின் உரிமை, UAW கட்டுப்பாட்டில் இருந்த நிதியத்திற்கு வழங்கப்பட்டது. புதனன்று அறிவிக்கப்பட்ட பல பில்லியன் டாலர் தொகைக்கு பிரதிபலனாக, கிறைஸ்லரில் உள்ள அதன் 41.5 சதவீத பங்கை (மீதி 58.5 சதவீத பங்குகளை பியட் கொண்டுள்ளது) UAW விற்றுவிடும், மேலும் அதன் பங்குகளுக்காக ஓர் உயர்ந்த விலையைக் கோரி தொடரப்பட்ட ஒரு வழக்கையும் திரும்ப பெறும். இதன் ஒரு விளைவாக, பங்குகளின் மதிப்பை உயர்த்தும் என்று UAW நிர்வாகிகள் நம்பியிருந்த முதன்மை பொது பங்கு வெளியீடு (IPO) இரத்து செய்யப்படுகிறது. Detroit Free Press தகவலின்படி, அந்த உடன்படிக்கை, பியட் தலைமை செயலதிகாரி செர்ஜியோ மர்சியோன்னிக்கும் UAW'இன் நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புரூக் கேபிட்டல் குழும LLCஇன் ஒரு மூத்த மேலாண்மை இயக்குனர் ஆலென் லெபெக்கிற்கும் இடையே டிசம்பர் 28இல் புளோரிடாவில் உள்ள ஓர் உல்லாச ஓய்விடத்தில் முடிக்கப்பட்டு இருந்தது. UAW'க்கு வழங்கப்படும் அந்த வெகுமதி, கடந்த நான்கு ஆண்டுகளாக கொடூரமான ஊதிய வெட்டுக்கள் மற்றும் வேலை வேகப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கிறைஸ்லர் தொழிலாளர்களின் வேர்வையிலும் இரத்தத்திலும் இருந்து வழங்கப்படுவதாகும். அந்த தொழிற்சங்கத்தை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள UAW தலைவர் பாப் கிங் போன்ற வியாபாரிகளுக்கும் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஆலோசகர்களின் படைகளுக்கும் மற்றும் அந்த உடன்படிக்கையை முடிக்க UAW'ஆல் அமர்த்தப்பட்ட சட்ட ஆலோசகர்களுக்கும் நிச்சயமாக ஒரு மிகப் பெரிய ஊக்கத்தொகைகளை அது கொண்டு வரவிருக்கிறது. பங்கு விற்பனை செய்திகள் வெளியானதும் மிலான் பங்கு சந்தையில் பியட் நிறுவன பங்குகள் 16 சதவீதம் உயர்ந்தன. பியட் தலைமை செயலதிகாரி மர்சியோன்னியைப் பொறுத்த வரையில் பங்கு விற்பனைகள் எதிர்பாரா வெற்றியாக பார்க்கப்பட்டது, பகுப்பாய்வாளர்கள் கணித்திருந்ததை விடவும் அவர் மிக குறைவாக செலுத்தி இருந்தார். உலகில் ஏழாவது மிகப் பெரிய வாகனத்துறை கூட்டுநிறுவனத்தை உருவாக்கும் அந்த இரண்டு நிறுவனங்களின் இணைவு, இத்தாலியிலும் ஏனைய நாடுகளிலும் வேலைநீக்கம், ஆலை மூடல்கள், ஊதியம் மற்றும் சலுகைகள் மீதான வெட்டுக்களின் ஒரு புதிய அலையை கட்டவிழ்த்துவிட்டு, அமெரிக்க தொழிலாளர்கள் மீது இன்னும் கூடுதலான தாக்குதலை நடத்த இட்டு செல்லுமென எதிர்நோக்கப்படுகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியதாவது, “முதன்மை பங்கு வெளியிடுவது தவிர்க்கப்பட்டமை, நிறுவனங்களின் பொறியியல் மற்றும் உற்பத்தி நடைமுறைகளை இன்னும் கூடுதலாக ஒருங்கிணைக்க திரு. மர்சியோன்னுக்குத் தேவைப்படும் சுதந்திரத்தை அவருக்கு கிடைக்க செய்கிறது... மேலும் நீண்டகால விற்பனை தேக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பாவின் பியட் செயல்பாடுகளில் மறுஇயக்கத்தை செய்யவும் இந்த உடன்படிக்கை நீண்டகால அவகாசத்தை அவருக்கு வழங்குகிறது... அதற்கு கைமாறாக, கிறைஸ்லரின் செயல்பாடுகளை இன்னும் திறமையாக ஆக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க UAW உடன்பட்டிருப்பதாக பியட் தெரிவித்தது.” கடந்த ஆறு ஆண்டுகளில் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கு நெருக்கத்திற்கு தொழிலாளர் செலவுகளைக் குறைத்து, கிறைஸ்லர் தொழிலாளர்கள் மீதான பாரிய தாக்குதல்களை UAW ஏற்கனவே மேற்பார்வை செய்துள்ளது. இது, 2009இல் திவாலாகிப்போன கிறைஸ்லர் தொடர்ந்தாற் போல் ஒன்பது காலாண்டுகளுக்கு இலாபங்களை அறிவிக்க உதவியுள்ளது. 2013இன் முதல் மூன்று காலாண்டுகளில், கிறைஸ்லர் 1.14 பில்லியன் டாலர் இலாபம் ஈட்டியதோடு, 11.5 பில்லியன் டாலர் ரொக்கமாக கைகளில் வைத்திருந்ததாக கூறப்பட்டது. கிறைஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ்'க்கான ஒபாமா நிர்வாகத்தின் 2009 மறுசீரமைப்பு விதிமுறைகளின் கீழ் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்ட ஊதிய மற்றும் சலுகை விட்டுகொடுப்புகளை தொழிலாளர்கள் மீது UAW சுமத்தியது. இதில் இரண்டு-அடுக்கு ஊதிய முறையும் உள்ளடங்கும், அது, நிஜமான விதத்தில், அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்களுக்கு 1930களில் இருந்த சம்பளங்கள் அளவிற்கு புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகளைக் குறைத்துள்ளது. இதனினும் கூடுதலாக, நிறுவனத்தின் மாற்று வேலை நேரம் (Alternative Work Schedule) என்றழைக்கப்படுவதையும் UAW அமுலாக்கியது, அதன்படி தொழிலாளர்கள் மிகைநேர சம்பளம் எதுவுமின்றி பத்து மணி நேரம் உழைக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். அது கிறைறிஸ்லர் மற்றும் ஏனைய வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அவற்றின் ஆலைகளின் வேலைநாட்களில் கூடுதலாக 49 நாட்களுக்கு சமமான வேலைகளைப் பிழிந்தெடுக்க உதவுகிறது. இத்தகைய விட்டுகொடுப்புகளுக்கு பிரதிபலனாக, ஒபாமா நிர்வாகம் கிறைஸ்லரில் இருந்து கணிசமான பகுதி பங்குகளை VEBA'க்கு ஒப்படைத்தது. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க கடமைப்பட்டிருந்த டெட்ராய்ட் வாகன உற்பத்தி நிறுவனங்களை அதிலிருந்து விடுவிக்க, இந்த தன்னார்வ தொழிலாளர் நல அமைப்பு (VEBA) முதன்முதலாக 2007இல் UAW'ஆல் ஏற்படுத்தப்பட்டது. இது உலகின் மிகப் பெரிய தனியார் முதலீட்டு நிதிகளில் ஒன்றின் மீது UAW'க்கு கட்டுப்பாட்டை வழங்கியது, அந்த அறக்கட்டளை வலைத் தளத்தால் இந்த நிதி 54 பில்லியன் டாலர் மதிப்பிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. இது கிறைஸ்லரின் 117,000 ஓய்வூதியதாரர்களின் நலனுக்காகவோ அல்லது உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவர்களின் மனைவியரின் நலன்களுக்காகவோ செய்யப்பட்டதல்ல. அதற்கு நேர்விரோதமாக, VEBA மீது கட்டுப்பாடு கொண்டிருப்பதோடு, UAW ஓய்வூதியதாரர்களின் மருத்துவ காப்பீடு சலுகைகளை வெட்ட ஒரு நேரடி நிதிய நோக்கத்தை கொண்டுள்ளது. மருத்துவ காப்பீட்டில் கழித்தொழிக்க வேண்டிய தொகைகளை அதிகரித்தும், சில மருந்து பரிந்துரைகளின் மீது காப்பீடு இல்லை என்று ஆக்கியும் மற்றும் துணை-கட்டணங்களை விதித்தும் அது ஏற்கனவே இவ்வாறு செய்துள்ளது. ஒபாமாகேர் திட்டத்தின் கீழ் உள்ள “தங்க பிரிவு" காப்பீட்டு சலுகைகள் நீக்கப்படவிருக்கின்றன என்று கூறப்படுவதோடு சேர்ந்து (UAW முழுவதுமாக இதை ஆதரிக்கிறது) இன்னும் நிறைய நிச்சயமாக வரவிருக்கின்றன. VEBA நிதியிலிருந்து நிறைய சலுகைகளுக்கு உரிமைகோர முன்னரே தற்போதைய தொழிலாளர்கள் இறந்தால் அவர்களால் இன்னும் நிறைய பணத்தைப் பெற முடியுமென்று அவர்களின் வோல் ஸ்ட்ரீட் ஆலோசகர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி UAW நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி இருப்பார்கள். இது நீண்ட வேலைநாட்கள் மற்றும் முதுகை உடைக்கும் வேகப்படுத்தல்களை நடைமுறைப்படுத்த UAW'க்கு இன்னும் கூடுதலாக உந்துதலை வழங்குகிறது. UAW உடன் இறுதி உடன்பாடு எட்ட வழிவகுத்த முக்கிய பிரமுகர்களில் ஒருவராக ரோன் புளூம் இருந்தார். இவர் ஒரு முன்னாள் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியாளரும், UAW மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களுக்கு நெருங்கிய நிதியியல் ஆலோசகரும் ஆவார். நிதியியல் ஒட்டுண்ணித்தனம், தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் கூட்டிணக்கத்திற்கு, புளூம் ஒரு மிகச் சிறந்த உதாரணமாய் திகழ்கிறார். UAW உடன் பங்கு விற்பனையை பேரம் பேச இவர் மர்சியோன்னியால் நியமிக்கப்பட்டிருந்தார். 1990களில், நூறு ஆயிரக்கணக்கான எஃகுத்துறை தொழிலாளர்களை வேலையின்றி அல்லது ஓய்வூதியமின்றி விட்டுவிட்ட அதேவேளையில், USWஇன் சொத்துக்களைப் பாதுகாத்து, எஃகுத் தொழில்துறையின் வோல் ஸ்ட்ரீட் மறுசீரமைப்பிற்கு உதவும் விதத்தில் ஒருங்கிணைந்த எஃகுத்துறை சங்கத்திற்கு (USW) புளூம் ஆலோசனைகள் வழங்கினார். VEBA'ஐ உருவாக்குவதற்கு UAWக்கு ஆலோசனை வழங்கிய பின்னர், அவர் ஒபாமாவின் வாகனத்துறை செயற்பிரிவில் (Auto task Force) சேவை செய்தார், அது 2009இல் வோல் ஸ்ட்ரீட் நலன்களுக்காக அமெரிக்க வாகனத்துறையை மறுகட்டமைப்பு செய்தது. UAW யாருடைய நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொள்கிறதோ அந்த தொழிலாளர்களின் நலன்களுக்கு அது இயல்பாகவே விரோதமாக உள்ளது என்ற உண்மையை இந்த பல பில்லியன் டாலர்கள் வெகுமதி அடிக்கோடிடுகிறது. பல தசாப்த கால தொழிலாளர்-நிர்வாக கூட்டுறவு மற்றும் காட்டிகொடுப்புகளுக்குப் பின்னர், அந்த தொழிற்சங்கம் முற்றிலும் ஒரு வியாபார நிறுவனமாக மாறி உள்ளது, அது தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டி பெற்ற இலாபங்களைப் பகிர்ந்து கொள்கிறது. தொழில் ஒப்பந்ததாரர்களாக மற்றும் தொழில்துறை பொலிஸாக சேவை செய்தும், முதலாளித்துவ சுரண்டலுக்கு முன்பில்லாத மலிவு உழைப்பை வழங்க தீர்மானமாக வேலை செய்தும், மில்லியனர்களாக தீர்மானித்துள்ள ஊழல்மிகுந்த மத்திய-மேல்தட்டு வர்க்க உட்கூறுகளால் UAW மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட் மற்றும் கிறைஸ்லருக்கான அமெரிக்க தொழிலாளர் செலவுகளைக் குறைக்க செயல்பட்டு வரும் அதேவேளையில், UAW ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளில் ஆலைமூடல்களை நடைமுறைப்படுத்தவும் அமெரிக்க நாடுகடந்த வாகனத்துறை நிறுவனங்களுக்கு உதவுவதில் பெரும் பாத்திரம் வகிக்கிறது. அது தற்போது தென்னெஸ்ஸியில் உள்ள வோல்ஸ்வாகன் ஆலையில் வறுமை கூலிக்கு நெருக்கத்தில் உள்ள சம்பளத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்க, தொழிலாளர்களுக்கு தெரியாமல் தொழிற்சங்க அங்கீகாரத்தைப் பெற வோல்ஸ்வேகனுடன் ஒத்துழைத்து வருகிறது. லேபர் நோட்ஸ் மற்றும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு உட்பட போலி-இடது அமைப்புகளின் ஓர் கூட்டு, UAW மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களை "தொழிலாள வர்க்க அமைப்புகள்" என்றும், புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவோ அல்லது கீழே இருந்து அழுத்தங்கள் கொடுப்பதன் மூலமாகவோ அவற்றை சீர்திருத்தலாம் என்றும் வலியுறுத்துகின்றன. அவை பொய்களாகும்! இந்த தொழிலாள வர்க்க விரோத, ஜனநாயக விரோத, அதிகாரத்துவ அமைப்புகளால் தொழிலாள வர்க்க நலன்களுக்கு சேவை செய்ய முடியாது, அதைவிட யாருடைய நலன்களுக்காக தொழிற்சங்கங்கள் சேவை செய்கின்றனவோ அந்த பெருநிறுவனங்களுக்கு தான் இவற்றால் சேவை செய்ய முடியும். இத்தகைய வலதுசாரி அமைப்புகளின் பிடியிலிருந்து தொழிலாளர்கள் உடைத்து கொண்டு, முற்றிலும் ஒரு புதிய முன்னோக்கினால் வழிகாட்டப்பட்ட, தொழில்துறைரீதியிலான மற்றும் அரசியல் போராட்டத்திற்கான புதிய வடிவங்களை உருவாக்க வேண்டுமென உலக சோசலிச வலைத் தளம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றது. இது தொழிற்சங்கங்களின் மற்றும் அவற்றின் ஜனநாயக கட்சி கூட்டணியின் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு வேலைதிட்டத்தை நிராகரித்து, சோசலிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் அடித்தளத்தில் ஒரு நிஜமான தொழிலாளர் இயக்கத்தை உருவாக்க போராடுவதைக் குறிக்கிறது. |
|