World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq slides toward civil war

ஈராக் உள்நாட்டுப் போரை நோக்கி சரிகிறது

By Bill Van Auken 
3 January 2014

Back to screen version

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆயுதம் ஏந்திய எதிர்ப்பைக்காட்டிய மையமான ஈராக்கின் மேற்கு அன்பார் மாநிலத்தில் பல்லுஜா, ரமாடி ஆகிய நகரங்களின் பெரும் பகுதிகளை கைப்பற்றிய சுன்னிப் போராளிகளுக்கும் ஈராக்கிய அரசாங்கத்தின் துருப்புக்களுக்கும் இடையே வியாழன் அன்று பெரும் மோதல் வெடித்தது.

2007-2008ல் அமெரிக்க இராணுவ “விரிவாகத்தைத் தொடர்ந்து” 2013ல் இறப்பு எண்ணிக்கை ஈராக்கில் மிக உயர்ந்த அளவிற்குச் சென்றது என்னும் ஐக்கிய நாடுகள் மற்றும பிற நிறுவனங்கள் வெளியிட்ட புள்ளி விவரங்களுக்குப்பின், போர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றம் கடந்த ஆண்டு ஈராக்கில் சாதாரண குடிமக்கள் வன்முறைக்கு பலியான எண்ணிக்கை 7,818 என்றும் இதே காலத்தில் 1,050 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர் என்றும் கூறுகிறது. பிரித்தானியாவை தளமாக கொண்ட நிறுவனமான Iraq Body Count (IBC) குடிமக்கள் இறப்பு எண்ணிக்கை 9,475 என்று கூறியுள்ளது.

ஐ.நா.வின் மதிப்பீட்டை வெளியிடுகையில், ஈராக்கிலுள்ள ஐநா.பணியின் தலைவர் Nickolay Mladenov கூறினார்: “இது ஒரு வருத்தம் தரும் கொடூரமான சான்று, ஈராக்கிய அதிகாரிகள் இந்த நச்சு வட்டத்தை தடுக்க வேண்டிய வன்முறையின் வேர்களை ஆராயவேண்டிய உடனடித் தேவையை உறுதிப்படுத்துகின்றது.”

கடந்த ஆண்டு இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 2008ற்குச் சமமாக இருந்ததை குறிப்பிட்ட Iraq Body Count (IBC), 2008 எண்ணிக்கை “வன்முறை இறப்புக்களில் சரிவைப் பிரதிபலித்தது (25,800ல் இருந்து); ஆனால் இப்பொழுது இது அதிகமாகியுள்ளதைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு இருமடங்கு ஆகிவிட்டது; அப்பொழுது குடிமக்கள் இறப்புக்கள் 4,500 என இருந்தன.”

“தற்போதைய வன்முறை அளவுகள், எதிர்வரும் ஆண்டும் தொடர்ந்து குறையாமல் இருந்தால், பின் 2014 ம் 2004 போல் அதிக மரணம் அளிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. 2004ல் அமெரிக்க இராணுவத்தின் இரு முற்றுகைகள் பல்லுஜாவில் இருந்தன, ஈராக்கிய எழுச்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது” என IBC கூறுகிறது.

கடந்த ஏப்ரல் முதல் வன்முறையும் இறப்புக்களும் பெருகிவிட்டன; அப்பொழுது ஷியா தளம் கொண்ட பிரதம மந்திரி நூரி அல் மாலிகி வடக்கு நகரான ஹவிஜாவில் எழுப்பப்பட்டிருந்த சுன்னி எதிர்ப்பு முகாமை வன்முறையில் அகற்ற உத்தரவிட்டபோது, கிட்டத்தட்ட 50 குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

மாடியில் ஒரு எதிர்ப்பு முகாமிற்கு எதிராக திங்களன்று இதேபோன்ற அடக்குமுறை நடத்தப்பட்டது அந்நகரில் எழுச்சிகளை தோற்றுவித்தது. அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் பல்லுஜா இன்னும் பல சிறு நகரங்களிலும் எழுச்சி செய்தனர்.

மாலிகி திங்கள் அன்று குறைந்தப்பட்சம் 10 பேர் கொல்லப்பட்ட ஒரு எதிர்ப்பு முகாமை கலைத்ததை தொடர்ந்து, மக்களின் எதிர்ப்பை தணிக்கும் ஒரு கொச்சையான முயற்சியாக, எதிர்ப்பாளர்கள் கோரிக்கைக்கு எனக் கூறக்கூடிய சலுகையில் அன்பார் போன்ற சுன்னி மக்கள் மையங்களில் இருந்து இராணுவத் துருப்புக்களைத் தான் அகற்றுவதாகவும் முறையான பாதுகாப்பை பொலிஸிற்கு விட்டுவிடுவதாகவும் கூறினார்.

ஆனால் புதன் அன்று, பெரும் ஆயுதங்கள் தாங்கிய போராளிகள் ரமாடி, பல்லுஜாவில் உள்ள பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்டு குறைந்தபட்சம் 100 கைதிகளை விடுவித்தனர்; ஆயுதக்கிடங்கை கைப்பற்றினர், பல கட்டிடங்களை எரித்தனர். பெரும்பாலும் பொலிசார் தங்கள் நிலைப்பாட்டை பூசலின்றி விட்டுக் கொடுத்தனர்.

இதன்பின் மாலிகி தன் முந்தைய ஆணையை மாற்றி, அப்பகுதியில் இராணுவப் பிரிவுகள் நிலைகொள்ள உத்தரவிட்டார். இது சிறுநகரங்களை முற்றுகையிட தயாரிப்புக்களை மேற்கொண்டது; பீரங்கிகள் வியாழன் அன்று பல்லுஜாவின் சில பகுதிகளைத் தாக்கின; அந்நகரத்தையும் ரமாடியையும் எதிர்த்துப் போரிட்டன.

“பல்லுஜாவில் பாதிப்பகுதி, ISIL என்னும் ஈராக் மற்றும் லெவன்ட் இஸ்லாமிய அரசின் ஆயுதமேந்திய பழங்குடி மக்களிடம் உள்ளது என்று உள்துறை அமைச்சரக அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார். மாடியிலும் இதேபோன்ற நிலை இருப்பதாகவும், சில பகுதிகள் ISIL கட்டுப்பாட்டிலும், மற்றவை பழங்குடியினர் கட்டுப்பாட்டிலும் இருப்பதாகவும்” கூறினார்.

மாடியில் தன் நிருபர்கள் “டஜன் கணக்கான வாகனங்கள், நிறைய ஆயுதம் கொண்டவர்களை சுமந்து நகரத்தின் கிழக்குப் பகுதியில் செல்கின்றன, ISIL ஐ பாராட்டி பாடல்களை பாடுகின்றன”, “ISIL அடிக்கடி பறக்க விடுவது போன்ற கறுப்புக் கொடிகளையும் ஏந்தின” எனக் கூறியதாக AFP மேற்கோளிட்டுள்ளது.

அல் குவேடாவுடன் பிணைப்பு உடைய ஒரு சுன்னி இஸ்லாமிய போராளி இயக்கமான ISIL, அண்டை சிரிய நாட்டில் ஆட்சி மாற்றத்திற்காக மேற்கத்திய ஆதரவுடன் நடக்கும் போரில் “எழுச்சியாளர்களில்”முக்கியகூறுபாடாகும். வடக்கு சிரியாவில் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியபின், இது சிரிய ஈராக்கிய எல்லையில் படைகளை முன்னும் பின்னும் நகர்த்திக் காட்டும் திறனை நிரூபித்துள்ளது; இராணுவ, பொலிஸ் பிரிவுகளை தாக்கியுள்ளது, குறுங்குழுவாத தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. இதன் கூறப்பட்ட இலக்கு இரு நாடுகளிலும் படர்ந்திருக்கும் ஒரு சுன்னி முஸ்லிம் காலிபேட்டை நிறுவுவதாகும்.

ISIL படைகளின் நடவடிக்கைகளை போலிக்காரணமாக எடுத்துக் கொண்டு, பாக்தாத் அரசாங்கத்தால் தூண்டப்பட்டுள்ள பரந்த சுன்னி எதிர்ப்பை வன்முறையில் மாலிகி அடக்க முற்படுகிறார். இது சுன்னி மக்களை அரசியல் முறையில் ஒதுக்குதல், அடக்குதல் என்பவற்றைத் தோற்றுவித்துள்ளது.

இதில் சுன்னி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்களை “பயங்கரவாதிகள்” என்ற குற்றச்சாட்டிற்கு உட்படுத்துவதும் அடங்கும். வன்முறைக்கு முன்னதாக, பாதுகாப்புப் படைகள் ரமாடியின் பாராளுமன்ற உறுப்பினர் அஹ்மத் அல் அல்வானியின் வீட்டைச் சோதித்தனர்; அவரைக்கைது செய்தனர். அவருடைய சகோதரரையும் ஐந்து பாதுகாவலரையும் கொன்றனர். இந்த நடவடிக்கை பாராளுமன்றத்தில் இருந்து 44 உறுப்பினர்களின் ராஜிநாமாவிற்கு வழிவகுத்தது; அவர்களில் பெரும்பாலனவர்கள் சுன்னிக்கள் ஆவர்.

கடந்த மாதம் எதிர்ப்பு முகாம் கலைக்கப்பட வேண்டும் என இறுதி எச்சரிக்கை கொடுத்தபின், மாலிகி அதை “அல்குவேடா தலைமையின் தலைமையகம்” என விவரித்தார்.

இந்த சுயதேவைகளுக்கான அரசாங்க கதை, மாலிகியின் சொந்த குறுங்குழுவாத கொள்கைகள்தான் சுன்னி மக்களிடையே கடுமையான எதிர்ப்பிற்கு எரியூடியுள்ளன என்ற உண்மையை மறைக்கிறது. இதையொட்டி பணிகள் கொடுப்பதில்லை, பொறுப்பற்ற “பயங்கரவாதத்திற்கு எதிரான” தாக்குதல்கள் நடக்கின்றன, ஆயிரக்கணக்கானவர்கள் குற்றச்சாட்டு இன்றி சிறையில் தள்ளப்படுகின்றனர்; பாத்திஸ்டுகளை அகற்றும் திட்டம், பொதுத் துறை ஊழியர்களை வேலையில் இருந்து அகற்றப் பயன்படுத்தப்படுகிறது.

அரசாங்கம் வெறுமனே அல்குவேடா பயங்கரவாதத்திற்கு எதிரா போரில் ஈடுபட்டுள்ளது என்னும் போலிக்காரணம் ஈரான், வாஷிங்டனில் இருந்து ஆதரவைப்பெறப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டன் சமீபத்தில், ஹெல்பைர் ஏவுகணைகளும் இன்னும் நவீன ஆயுதங்களும் ஈராக்கிய பாதுகாப்புப் பிரிவினருக்குக் கொடுக்குமாறு ஆணையிட்டுள்ளது. இந்த ஏவுகணைகளில் சில வியாழன் அன்று பல்லுஜா தாக்குதலில் அரசாங்கம் பயன்படுத்தியது என்று கூறப்படுகிறது.

ஈராக்கில் அன்பரில் இராணுவ மோதல் உருவாகுகையில் மற்ற இடங்கிலும் புதிய வன்முறைச் செயல்களும் பதிவாகியுள்ளன. ஒரு தற்கொலைப் படைக்காரர் வியாழன் இரவு பாக்தாத்திற்கு வடகிழக்கே 45 மைல் தூரத்தில் உள்ள பாலட் ருசில் நெரிசல் மிக்க வணிகத் தெருவில் வெடிமருந்துகள் அடங்கிய வாகனத்தை சுட்டுத் தாக்கினார். இந்த வெடிப்பில் குறைந்தப்பட்சம் 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமுற்றனர். இத்தகைய தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன; ஷியா, சுன்னி மக்கள் இருவருமே இலக்கு கொள்ளப்படுகின்றனர்.

ஈராக்கிய மக்கள், ஒரு தசாப்தத்திற்கும் மேலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளைப் போர்கள் மற்றும் காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கு இன்னும் கடுமையான விலை கொடுக்கின்றனர். எட்டு ஆண்டுகால அமெரிக்க ஆக்கிரமிப்பு நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்ளின் உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. அதே நேரத்தில் நாட்டின் மக்களை பிரிக்கவும் வெற்றிகொள்ளவும் குறுங்குழுவாத அரசியலை முறையாக சுமத்துகிறது. மாலிகி ஆட்சி அத்தகைய அமைப்பு முறையின் விளைவாகும்.

இப்பொழுது அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டு நடக்கும் அண்டைநாட்டு சிரிய உள்நாட்டுப் போர் புதிய, சக்திவாய்ந்த உந்துதலை ஈராக்கிலேயே உள்நாட்டுப் போருக்கு அளித்துள்ளது; வாஷிங்டனின் நட்பு நாடுகள் சௌதி அரேபியா இன்னும் பிற பேர்சிய வளைகுடா முடியரசுகள் எல்லைக்கு இருபுறமும் இருக்கும் சுன்னி இஸ்லாமிய போராளிகளுக்கு பொருள் உதவி அளிக்கின்றனர்; வாஷிங்டனே மாலிகி ஆட்சியை இராணுவ உதவி மூலம் முட்டுக் கொடுத்து நிறுத்துகிறது.