World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The pseudo-legal arguments for a police state

ஒரு பொலிஸ் அரசுக்கான போலி-சட்ட வாதங்கள்

Tom Carter
31 December 2013

Back to screen version

டிசம்பர் 27இல் ACLU v. கிளாப்பர் வழக்கில் அமெரிக்க மாவட்ட நீதிபதி வில்லியம் H. போலேயின் தீர்ப்பு ஜனநாயக உரிமைகள் மீது ஆழ்ந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அத்தீர்ப்பு நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் தொலைபேசி அழைப்புகளையும் பதிவு செய்ய NSA கண்காணிப்பு வலையமைப்பிற்கு அனுமதி வழங்குகிறது.

அது ஒரு பெடரல் நீதிபதியால் எழுதப்பட்டிருந்த போதினும், அமெரிக்க அரசியலமைப்பை ஒதுக்கித் தள்ள மற்றும் ஒரு பொலிஸ் அரசை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் ஒரு பாசிச-பாணியிலான தர்க்கவாதமாக இருப்பதால் அது அந்தளவிற்கு ஒரு சட்ட கருத்தாக இல்லை. ஒரு பெடரல் நீதிபதி இதுபோன்ற வாதங்களைச் செய்வதென்பது எந்தளவிற்கு ஒரு சர்வாதிகாரச்-சார்பு ஒருமித்த உணர்வு நீதித்துறையின் உயர்மட்டங்களுக்குள் அபிவிருத்தி அடைந்துள்ளதென்பதற்கு ஒரு முக்கிய அறிகுறியாக உள்ளது என்பதே உண்மையாகும்.

அவரது அறிவிப்பின் ஒட்டுமொத்த பகுதியும், பொலிஸ் அரசு உளவு வேலைகளுக்கான மற்றும் இரகசியங்களை வெளியிடுவோரை மௌனமாக்குவதற்கான சுய-நனவோடு கூடிய ஒரு அரசியல் விஷயமாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் NSA உளவு வேலைகளை "ஏறத்தாழ ஓர்வெல்லியன்" என்று குறிப்பிட்ட அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரிச்சார்ட் லியோனின் முடிவுக்கு விடையிறுப்பாக, நீதிபதி போலேய், வரலாறு முழுவதிலும் ஒவ்வொரு சர்வாதிகாரமும் ஏதோவொரு வடிவத்தில் "தேசிய பாதுகாப்பும்" மற்றும் "பயங்கரவாதத்தின்" அச்சுறுத்தலும் ஜனநாயக உரிமைகளின் வழக்கொழிப்பை அவசியப்படுத்தி உள்ளதென்ற வாதத்தை பயன்படுத்துகிறார். இது நாஜி வழக்கறிஞர் கார்ல் ஷிமித் (Carl Schmitt) கூறிய வாதங்களின் மாற்று வடிவங்கள் அல்லாமல் வேறொன்றுமில்லை. ஷிமித் கூறியது: சகல அதிகாரமும் பொருந்திய ஒரு தலைவரால் (“fuehrer”) தீர்மானிக்கப்படுவதைப் போல அரசு நலன்கள் ஓர் "விதிவிலக்கு பெற்ற அரசுக்கு" உத்தரவாணை வழங்கக்கூடும், அந்த நிலையின் கீழ் அரசியலமைப்பை ஒத்தி வைக்கலாம் என்பதோடு ஜனநாயக உரிமைகளையும் நசுக்கலாம் என்று கூறினார்.

நீதிபதி போலேய் இன் கருத்துப்படி, 12 ஆண்டுகளுக்கு முன்னர் 2001 செப்டம்பர் 11 தாக்குதல்கள் (அல்கொய்தா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட அந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்க உளவுத்துறை முகமைகள் நன்கு அறிந்திருந்தன) முன்னொருபோதும் இல்லாத ஓர் அரசு உளவு வேலைகளின் விஸ்தரிப்பை நியாயப்படுத்துகின்றன. மூத்த ஒபாமா நிர்வாக அதிகாரிகளின் சாட்சிகளின் மீது விமர்சனமற்ற ரீதியில் தங்கியிருந்த நீதிபதி போலேய், 2001, செப்டம்பர் 11க்கு இட்டு சென்ற காலகட்டத்தில் NSA அதன் தற்போதைய தொலைபேசி ஒற்றுகேட்பு திட்டத்தில் தங்கி இருந்திருந்தால், அந்த தாக்குதல்கள் தடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்று வாதிடுகிறார்.

இந்த கருத்து பொய்கள் மற்றும் திரித்தல்களில் சிக்குண்டு இருந்தது. அமெரிக்க அரசின் நடவடிக்கைகள் அல்கொய்தாவிற்கு எதிரான போராட்டத்தின் தேவையால் நியாயப்படுத்தப்பட்டு இருப்பதே முதன்மையான பொய்யாக உள்ளது. இந்த வாதம் நுணுக்கமான எதிர்வாதங்களுக்கு முன்னால் நிலைக்க முடியாது. கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு ஒரு போலிக்காரணத்தை வழங்கியுள்ள "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்றழைக்கப்படுவதை, ஒரு மரணகதியிலான தேசிய அவசரநிலைமை என்ற வாதம் இல்லாமல், பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அனைத்திற்கும் மேலாக, ஒருவேளை அல்கொய்தாவுடன் ஒரு யுத்தம் நடத்த வேண்டி இருந்ததாக எடுத்துக் கொண்டாலும், இந்த அமெரிக்க அரசு இப்போது லிபியாவிலும் சிரியாவிலும் அல் கொய்தா உடன் இணைப்பு பெற்ற பயங்கரவாத கூட்டாளிகளுக்கு ஆயுதங்களும், நிதியுதவிகளும், மற்றும் மறுபுறம் இராணுவ ஒத்துழைப்பும் கூட அளித்து வருகிறது. உலக சோசலிச வலைத் தளம் ஆரம்பத்தில் இருந்தே மிகச் சரியாக வலியுறுத்தி வந்ததைப் போல, “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" நிஜமான நோக்கம் அல் கொய்தாவுடன் சண்டையிடுவதில்லை, மாறாக அன்னிய நாடுகள் மீதான இராணுவவாதத்தை நியாயப்படுத்துவதும் மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை நிரந்தரமாக பறிப்பதுமே ஆகும்.

இதேபோல, அல் கொய்தா பயங்கரவாதிகளைப் பிடிக்க அமெரிக்க அரசு ஒரு பிரமாண்ட உளவுக் கருவியை கட்டியெழுப்பி உள்ளதென்ற கருத்தை ஏளனமாக தள்ளிவிட முடியாது. அமெரிக்க உளவுத்துறை கருவிகள் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் உட்பட ஒட்டுமொத்த உலகின் மீதும் கண்மூடித்தனமாக உளவு வேலை செய்து வருகிறது என்பது இப்போது முழுவதுமாக தெரிய வந்துவிட்டது, இதற்கு NSAஇன் இரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோவ்டெனின் தைரியமான நடவடிக்கைகளுக்கு தான் நன்றி கூற வேண்டும்.

நீதிபதி போலேயின் வாதத்தில், அவர் ஒவ்வொரு அமெரிக்கரின் தொலைபேசி அழைப்பையும் அரசு உளவுபார்ப்பது அவசியமென்று மழுப்பலில்லாமல் வாதிடுவதற்காக மட்டுமே, அரசு உளவுவேலையின் அளவு பிரச்சினைக்குரியதாக இருப்பதை ஒப்புக் கொள்கிறார்.

FBI துணை இயக்குனர் சீன் ஜோய்சியின் சாட்சியை ஒப்புக்கொண்டு நீதிபதி போலேய் மேற்கோளிட்டு காட்டுகிறார்: “நமது நோக்கம் பயங்கரவாதத்தை நிறுத்துவது, அதை தடுப்பதாகும். அது நடந்த பின்னர் அல்ல, அமெரிக்காவில் அது நடப்பதற்கு முன்னர் அதை தடுப்பதற்காக ஆகும். அதற்காக ஒவ்வொரு கருவியும் அத்தியாவசியமானதும், முக்கியமானதுமாகும். நான் உங்களிடம் முன்பே கூறியதைப் போல கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும் இன்று அத்தகைய சதிதிட்டங்களில் சிலவற்றை தடுக்க மதிப்புடையனவாக இருந்துள்ளன. 'அமெரிக்கர்களின் வாழ்வை எவ்வாறு நீங்கள் மதிப்பிடுகிறீர்கள்?' என்று நீங்கள் கேட்கலாம், அது விலை மதிப்பில்லாதது என்று நான் கூறுவேன்.”

அதிகாரத்தையும், இரும்பு-கவசம் போன்றிருக்கும் உரிமைகளையும் பொதுமக்களின் பார்வைக்கு முன்னால் மிக கவனமாக பிரித்து காட்டுவதன் மூலமாகவே கொடுங்கோன்மையை நோக்கிய அரசின் இயல்பான போக்கைத் தடுக்க முடியுமென்பதே அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்துருவாக உள்ளது. இந்த உட்பொருளில், அமெரிக்க புரட்சியாளர்கள் உரிமைகள் சாசனத்தின் (1791) பாகமாக, நான்காவது திருத்தத்தை, எழுதினார்கள். அது தெளிவாக கூறியது: “காரணமற்ற சோதனைகள் மற்றும் பறிமுதல்களுக்கு எதிராக தனிநபர்கள், வீடுகள், ஆவணங்கள், மற்றும் விளைபயன்களைப் பாதுகாப்பதற்கான உரிமை மீறப்படக்கூடாது,” அரசின் ஒவ்வொரு சோதனைக்கும் மற்றும் பறிமுதல் செய்வதற்கும் குறிப்பிட்ட காரணத்தைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட உத்தரவாணை அவசியப்படுகிறது.

ACLU அதன் குறிப்புகளில் குறிப்பிட்டு காட்டியதைப் போல, சட்ட உத்தரவின்றி ஒட்டுமொத்த மக்களின் தொலைபேசி அழைப்புகளைத் திரட்டியமையானது "ஒரு நபரின் மதம், அரசியல் இணைப்புகள், தொலைபேசி பாலியல் உரையாடல்களின் பயன்பாடு, தற்கொலை குறித்த சிந்தனை, சூதாட்டம் அல்லது போதைக்கு அடிமையாகி இருத்தல், வன் பாலியல் அனுபவம், பாலியலோடு ஏற்பட்டிருந்த போராட்டங்கள் அல்லது குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காக அதனுடனான ஆதரவு" என அனைத்தையும் வெளியிட முடியும். பகுப்பாய்வின் இறுதியில், ஒட்டுமொத்தமாக அந்த அபத்தத்தின் முன்னால் இருப்பதென்ன என்பதைக் குறித்து வாதிட 55 பக்கங்களை செலவிடுகிறார்: அதாவது, ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களின் தொலைபேசி பதிவுகளைச் சேகரித்ததும் நான்காம் திருத்தத்தின் கீழ் "பொருத்தமானதே" என்று வாதிடுகிறார்.

போலேயின் சட்ட விளக்கங்கள், அவருடைய வாதத்தில் என்னவாக இருந்தாலும், அவை போலி வாதங்கள், திரிக்கப்பட்ட மேற்கோள்கள் மற்றும் பொய்களின் ஒட்டுவேலையாக உள்ளது. உளவு முகமைகளை நெறிப்படுத்த (அல்லது நெறிப்படுத்துவதைப் போன்ற தோற்றத்தைக் காட்ட) வடிவமைக்கப்பட்ட அன்னியநாடுகள் மீதான உளவு சட்டம் (1978), தலைகீழாக திருப்பப்பட்டுள்ளதோடு, எல்லையில்லா உளவுவேலைகளுக்கான ஒரு வெற்று காசாலை போல மாற்றப்பட்டுள்ளது. ஒரு நபர் எப்போதெல்லாம் தொலைபேசியைப் பயன்படுத்துகிறாரோ, அந்த ஆணோ அல்லது பெண்ணோ "தானாகவே முன்வந்து" அவரது அந்தரங்க உரிமைகளை ஒப்படைக்கிறார் என்றும் போலேய் வாதிடுகிறார். ஊகிக்கக்கூடிய விதத்தில் ஒரு நபர் ஒரு கார், ஒரு கணினி, ஒரு GPS சாதனம், ஒரு தொலைக்காட்சி, ஒரு வங்கி, ஒரு மருத்துவமனை, ஒரு ஹோட்டல், ஒரு வெப்கேம், ஒரு தபால்நிலையம், மற்றும் இவை போன்றவைகளை உபயோக்கின்ற போது அதை போன்று "தானாகவே" வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கிறார்.

உரிமைகள் சாசனம் எழுதிய அமெரிக்க புரட்சியாளர்களின் கருத்திற்கும் நீதிபதி போலேயின் கருத்திற்கும் இடையிலான முரண்பாடு இதைவிட அப்பட்டமாக இருக்க முடியாது. புரட்சியாளர்கள், மரணத்தை விட மேலானதாக சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்க உறுதிமொழி ஏற்று, கொடுங்கோன்மைக்கு எதிராக நிலையான கண்காணிப்பிற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் இதற்கு மாறாக நீதிபதி போலேய் கேள்வியின்றி அரசை நம்புமாறும், அரசு தேசப்பற்றுடைய மற்றும் நிர்வாக திறமை வாய்ந்த நல்லவர்களால் ஆனதென்றும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும் என்றும், அவர்கள் நம்முடைய சுதந்திரங்களை இரகசியமாக நம்மிடமிருந்து பறிக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களிடம் ஒரு சரியான காரணம் இருக்குமென்றும் நமக்கு கூறுகிறார்.

அமெரிக்கா "சுதந்திர உலகத்தின்" தலைவராக காட்டிக்கொள்வதோடு மட்டுமில்லாமல், அதன் அரசு ஒரு இரங்கத்தக்க சாதனைகளையும் கொண்டுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில்: பிரித்து வைத்தல், விசாரணையின்றி கொல்லுதல், இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானிய-அமெரிக்கர்களின் விஷயத்தில் செய்யப்பட்டதைப் போல பெருந்திரளாக சிறை பிடித்தல் மற்றும் வெளியேற்றுதல், கருத்து வேறுபாடு கொண்ட அரசியல் குழுக்களை ஊடுருவி கண்காணித்தல் மற்றும் வேவு பார்த்தல், கடும் அச்சுறுத்தல்கள், யுத்த குற்றங்கள், ஊழல், குற்றத்தனம், சதிகள், படுகொலைகள், சித்திரவதைகள், (“பேரழிவு ஆயுதங்கள்"; “நீங்கள் விரும்பினால் உங்கள் திட்டத்தையே நீங்கள் தொடரலாம்" போன்ற) பொய்கள், மற்றும் எத்தனையோ சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. நீதிபதி போலேய் வாதிடுவதைப் போல, அரசு என்ன கூறுகிறதோ அதுவே உண்மை மற்றும் இராணுத்தின் உளவுத்துறை முகமைகளின் கரங்களில் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு காப்பாற்றப்படும் என்பது ஒட்டுமொத்தமாக ஜனநாயக உரிமைகளைக் கைவிடுவதாகும்.

நீதிபதியின் தீர்ப்பு, அடிப்படையில் மக்களின் உரிமைகள் மற்றும் அரசு நலன்களுக்கு இடையில் ஒரு முரண்பாடு இருப்பதற்கான எவ்வித சாத்தியக்கூறையும் நிராகரிக்கிறது. நீதிபதி போலேய் 9/11 கமிஷன் அறிக்கையை மேற்கோளிட்டு காட்டுகிறார்: “அமெரிக்க மண்ணில் ஒரு பயங்கரவாத தாக்குதலின் வெற்றியை விட, உள்நாட்டு சுதந்திரங்களுக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்று கொள்ளலாம் என்பதால், சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு இடையே ஏதாவதொன்றை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிப்பது தவறானதாகும்." வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வருவதாக அரசு கூறி வரும் வரையில், அது உரிமைகள் சாசனத்தைப் புறக்கணித்து வரக்கூடும்.

நீதிபதி போலேயின் கருத்துக்குப் பின்னர், இந்த கேள்வியை முன்னிறுத்துவது பொருளுடையதாக இருக்கும்: அதாவது, அமெரிக்காவில் இன்னமும் உரிமைகள் சாசனம் செயல்பாட்டில் இருக்கிறதா? நாட்டில் ஒவ்வொரு அமெரிக்கர்களின் மீதும் ஒரு சட்ட ஆணை இல்லாமல் மற்றும் உடனுக்குடன் அரசு ஒற்றுவேலை செய்வதை நான்காம் அரசிலமைப்பு திருத்தத்தால் தடுக்க முடியாது என்றால், பின் அது துல்லியமாக எதை தான் தடுக்கும்?

அமெரிக்க ஆளும் வர்க்கம் (வெளிநாட்டிலும் சரி, உள்நாட்டிலும் சரி சூறையாடும்) அதன் கொள்கைகள் மக்கள் விரோதமாக இருப்பதை அறியும். கீழே இருந்து எழும் ஒரு மக்கள் இயக்கம் குறித்து அது பெரிதும் அஞ்சி உள்ளது, இந்த காரணத்தினால் உரிமைகள் சாசனம் இல்லாத ஒரு எதிர்காலத்தை எதிர்பார்க்கிறது. இத்தகைய எதிர்காலத்தில், நிர்வாக உத்தரவின் பேரில் நகரங்களை மூடிவிட முடியும், மற்றும் ("பயங்கரவாதிகள்" என்று முத்திரைக் குத்தப்பட்ட) அதிருப்தியாளர்களை விசாரணையின்றி அவர்களின் வீடுகளில் இருந்து இழுத்து சென்று, சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம். நிர்வாக மற்றும் இராணுவ அதிகாரங்களுக்காக நீதிபதிகள் தீர்ப்புகளை ஒத்தி வைப்பார்கள், அதிலும் குறிப்பாக "தேசிய பாதுகாப்பு" என்பது குற்றஞ்சார்ந்து எங்கே சம்பந்தப்படுகிறதோ அங்கே இவ்வாறு நடக்கும். நீதிமன்ற அறைகள் வரிசையாக இரப்பர் ஸ்டாம்ப் குத்தும் கூடமாக மாற்றப்படும்.

நீதிபதி போலேயின் தீர்ப்பு இந்த கற்பனை எந்தளவிற்கு ஒரு எதார்த்தமாக மாறி வருகிறதென்பதை அடிக்கோடிடுகிறது. சர்வாதிபத்தியத்தின் ஆலோசகர்கள் ஏற்கனவே அரச எந்திரத்தில் வியாபித்துள்ளனர். இந்த மாதம், முன்னாள் CIA தலைவர் ஜேம்ஸ் வூல்சே அறிவித்தார்: “அவருக்கு [ஸ்னொவ்டெனுக்கு] பொது மன்னிப்பு வழங்குவது முட்டாள்தனமானதென்று நான் கருதுகிறேன். அவர் தேச துரோகத்திற்காக தூக்கில் இடப்பட வேண்டும். அவரை கூர்ந்து நோக்கும் ஒரு நடுவர் குழு தீர்ப்பளித்தால், அவர் சாகும் வரையில் தூக்கில் தொங்க விடப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கும்."

இது தான் பாசிசத்தின், ஒரு பொலிஸ் அரசின் மொழியாகும். நீதிபதி போலேயின் தீர்ப்பில் நடைமுறை பயன்பாட்டைக் கண்டுள்ள இதுபோன்ற அறிக்கைகள், மரணகதியிலான அரசியல் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அமெரிக்க ஜனநாயகம் அதன் காலடியில் அழுகி வருகிறது. சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதல் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட நடவடிக்கை மூலமாக மட்டுமே நிறுத்தப்பட முடியும்.