தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India: Protest denounces frame-up of Maruti Suzuki auto workers An on-the-spot report இந்தியா: மாருதி சுஜூகி வாகனத்துறை தொழிலாளர்கள் மீதான பொய் வழக்கை எதிர்ப்பு போராட்டம் கண்டிக்கிறதுஒரு நேரடி அறிக்கை
By Jai Sharma and Arun Kumar Use this version to print| Send feedback மாருதி சுஜூகி மானேசர் கார் உற்பத்தி ஆலையினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், நிறுவனம், பொலிஸ் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தால் கூட்டாக அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வேட்டைக்கு எதிராக ஒன்றுதிரள, ஹரியானாவின் குர்காவில் டிசம்பர் 20 மற்றும் 21இல் இரண்டு நாள் தர்ணா (மறியல்) போராட்டம் நடத்தினர். படுகொலை மற்றும் ஏனைய ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது கடந்த பதினாறு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 148 தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் செப்டம்பர் 2012இல் நிறுவனம் ஏதேச்சதிகார முறையில் நீக்கிய 2,300 தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் சேர்க்கவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். அந்த போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பல தொழிலாளர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர். அது 148 தொழிலாளர்கள் மீதான படுகொலை வழக்கு மீண்டும் தொடங்கப்பட்ட அதே நேரத்தோடு சரியாக பொருந்தி இருந்தது. இருந்த போதினும், அதிகாரிகள் வழக்கின் இரண்டாம் நாள் சாட்சிகள் விசாரணையை ஜனவரி 24க்கு தள்ளி வைக்க முடிவெடுத்தனர். இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஜூகி, அதன் மூர்க்கமான, மலிவு-உழைப்பு வேலையிட ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை நசுக்கும் ஒரு முழு பிரச்சாரத்தை நடத்த, 2012 ஜூலை 18இல் அதன் மானேசர் ஆலையில் நிறுவனத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு தகராறைப் பயன்படுத்தியது. அந்த சம்பவத்தில் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் அவனிஷ் குமார் தேவ் கொல்லப்பட்டார். அந்நிறுவனம் இதில் ஹரியானாவின் மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தின் முழு ஆதரவை பெற்றுள்ளது. நிறுவனத்தின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பட்டியலைப் பயன்படுத்தி, ஹரியானா பொலிஸ் 2012 ஜூலை 18 தகராறைத் தொடர்ந்து வந்த வாரங்களில் ஏறத்தாழ 150 தொழிலாளர்களைக் கைது செய்தது. அப்போதிருந்து அவர்களிடமிருந்து பொய் வாக்குமூலங்களைப் பெற அவர்களை அச்சுறுத்தும் ஒரு முயற்சியில் அடித்து துன்புறுத்தியதோடு சித்திரவதைக்கும் உட்படுத்தியது. (பார்க்கவும்: “Jailed Maruti Suzuki workers subjected to torture”) மாருதி சுஜூகி தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் (MSWU) ஒட்டுமொத்த தலைமையும் மற்றும் MSWU'இல் தீவிரமாக செயல்பட்டு வந்த பல உறுப்பினர்களும் சிறையில் அடைக்கப்பட்ட அந்த தொழிலாளர்களில் உள்ளடங்கி இருந்தனர். வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை முற்றுகை போராட்டங்கள் என போர்குணமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட MSWU தொழிற்சங்கம், நிறுவனத்திற்கு தலையாட்டும் ஒரு தொழிற்சங்கத்திற்கு எதிர்ப்பாக 2011இல் ஒரு சுயாதீன தொழிற்சங்கமாக உருவாக்கப்பட்டதாகும். மீண்டும் மாநில அரசாங்கத்தின் உதவியோடு, நிறுவனம் அந்த தகராறை அதன் தொழிலாளர்களை கழித்தொழிப்பதற்கான போலிக்காரணமாகவும் பயன்படுத்தியது. செப்டம்பர் 2012இல், அது 500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 1,800 ஒப்பந்த தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. அதற்கடுத்த 16மாதங்களில், மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கு எதிரான நிறுவன-அரசு பிரச்சாரம் தொடர்ந்துள்ளது. பெருந்திரளான பொலிஸார் ஒவ்வொரு வேலை நாளிலும் மானேசர் கார் உற்பத்தி ஆலையின் உள்ளே நிறுத்தப்பட்டுள்ளனர். அரசின் கட்டளையின் பேரில், பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை பொலிஸ் மீண்டும் மீண்டும் தாக்கியதோடு அவற்றை சட்டவிரோதமாகவும் அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தலைமையும் ஜூலை-ஆகஸ்ட் 2012 பொலிஸ் வலையில் சுருட்டப்பட்டதால், MSWU'ஐ முன்னெடுத்து செல்ல உருவாக்கப்பட்ட இடைக்கால தொழிலாளர் கமிட்டியின் ஓர் உறுப்பினர் இமான் கான், டிசம்பர் 17இல், ஏறத்தாழ ஓராண்டிற்கு சிறையில் இருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். கான் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேச இருந்த நிலையில், வன்முறையைத் தூண்ட தயாரிப்பு செய்து வருகிறார் என்ற போலி வாதத்தின் மீது, கடந்த ஜனவரி 24இல் கைது செய்யப்பட்டார். கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக எழும் எவ்வித சவாலையும் அவர்கள் அகற்றுவார்கள் என்பதை பெரு வர்த்தகங்களுக்கு மறு-உத்தரவாதம் வழங்க; கடந்த இரண்டு தசாப்தத்தில் வாகனத்துறை உற்பத்தியின் பிரதான மையமாக எழுந்துள்ள நீண்ட குர்காவ்-மானேசர் தொழிற்சாலை சரகத்தில் உள்ள தொழிலாளர்களையும் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களையும் அவ்விதத்தில் அச்சுறுத்த அரசும், அரசு அதிகாரிகளும் மாருதி சுஜூகி தொழிலாளர்களின் மீது சீரிய தண்டனைகளைச் சுமத்த தீர்க்கமாக உள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கு பிணையளிக்க மறுத்த ஹரியானா நீதிமன்ற ஒரு நீதிபதி, பட்டவர்த்தனமாக, "தொழிலாளர் கிளர்ச்சிக்கு அஞ்சி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பண முதலீடு செய்ய அஞ்சக்கூடும்,” என்ற எச்சரிப்போடு அவரது தீர்ப்பை நியாயப்படுத்தினார். பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்று திரண்டதில் இருந்து டிசம்பர் 20-21 போராட்டம் தொடங்கியது. பின்னர் அருகில் இருந்த குர்காவ் மாவட்ட கமிஷனர் (District Commissioner - DC) அலுவலகத்திற்கு அணி வகுத்து சென்றது. அவர்கள் பின்னர் மாவட்ட கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்தனர். விறைக்கும் அளவிற்கு இருந்த இரவுநேர தட்பவெப்ப நிலைக்கு இடையிலும் பலர் 21ஆம் தேதி மதியம் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சுஜூகி மோட்டார் சைக்கிள் தொழிலாளர்கள் சங்கம், சுஜூகி பவர் ட்ரைன் இந்தியா தொழிலாளர்கள் சங்கம், RICO தொழிலாளர்கள் சங்கம் - தாரூஹேரா, FCC ரிகோ தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஹோண்டா தொழிலாளர்கள் சங்கம் உட்பட குர்காவ்-மானேசர் தொழிற்சாலை சரகத்தில் இருந்த பல தொழிற்சாலைகளின் தொழிற்சங்கங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட சிறிய பிரதிநிதிகள் குழுவும் அந்த தர்ணாவில் இணைந்து கொண்டன. மத்திய தொழிலாளர் கூட்டமைப்பு அவர்களின் அக்டோபர் 27 போராட்டத்தை ஆதரிக்க தவறியதன் மீதான MSWUஇன் விமர்சனங்களால் குடைந்தெடுக்கப்பட்டதால், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் முறையே இணைந்துள்ள சிஐடியு (இந்திய தொழிற்சங்கங்களுக்கான மையம்) மற்றும் ஏஐடியுசி (அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ்) ஆகிய பிரதான ஸ்ராலினிச தொழிற்சங்க கூட்டமைப்புகளின் மாநில தலைவர்களும் MSWU'இன் தர்ணாவில் கலந்து கொண்டனர். நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்தும், மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தும் சிஐடியு மாநில தலைவர் சுரேந்தர் சிங் மற்றும் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் அனில் பவார் வீராவேச உரைகளை நிகழ்த்தினர். ஆனால் இந்த ஸ்ராலினிச தொழிற்சங்கங்களும் பாராளுமன்ற கட்சிகளும் தான் அரசு-நிறுவன பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் மாருதி சுஜூகி தொழிலாளர்களைத் திட்டமிட்டு தனிமைப்படுத்தி, 2011இல் மானேசர் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஒடுக்குவதில் பாத்திரம் வகித்திருந்தன. அவர்களோடு ஐக்கியப்பட்டிருப்பதாக உறுதிமொழிகளை உதிர்த்துக் கொண்டே, மாருதி சுஜூகி தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் எவ்வித முயற்சியையும் அவர்கள் எதிர்த்தனர், மேலும் அதற்கு மாறாக அவர்கள் தொழிலாளர்களிடம் அவர்களுக்கு சார்பாக மாருதி சுஜூகி நிர்வாகத்தோடு தலையீடு செய்ய ஹரியானா மற்றும் புது டெல்லியில் உள்ள ஹரியானா தொழிலாளர் நலத்துறை மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களிடம் முறையிட அவர்களின் சக்தியை திருப்பிவிடும்படி வலியுறுத்தி வந்துள்ளனர். MSWU இடைக்கால குழுவிற்கு மத்திய தொழிற்சங்கங்களின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் கூட, ஸ்ராலினிஸ்டுகளின் அரசியல் செல்வாக்கு மற்றும் தொழிற்சங்கவாத கருத்துருக்களின் கீழ், ஹரியானா அரசாங்கம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திடம் முறையிடும் அதே பாதையைத் துல்லியமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருந்த போதினும் ஒப்பந்த தொழிலாளர்முறை, மற்றும் அடிமாட்டுழைப்பு நிலைமைகள், மற்றும் நியாயமான பிரதிநிதித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஒட்டுமொத்த முதலாளித்துவ மேற்தட்டும், அதன் அரசியல் கட்சிகள், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களும் சமரசமின்றி எதிர்ப்பாக உள்ளன என்பதை மானேசர் மாருதி சுஜூகி தொழிலாளர்களின் அனுபவம் எடுத்துக்காட்டி உள்ளது. அவர்களுக்கு எதிரான நிறுவன-அரசு சூழ்ச்சியைத் தோற்கடிக்க, பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்கள் அவர்களின் போராட்டத்தை இந்தியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதன் அடித்தளத்தில் அமைக்க வேண்டும். பொய் வழக்குகளுக்கு எதிரான மற்றும் கழித்தொழிக்கப்பட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான போராட்டமானது இந்தியா முழுவதிலும் உள்ள ஒப்பந்த தொழிலாளர்முறை, வேகப்படுத்தல், மற்றும் அடிமாட்டுழைப்பு நிலைமைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்தாக்குதலை அபிவிருத்தி செய்வதோடு இணைக்கப்பட வேண்டும். மேலும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் தொழிலாளர்களின் அதிகாரங்களுக்கான மற்றும் ஒட்டுமொத்த இலாப அமைப்புமுறைக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே பாதுகாக்கப்பட முடியும் என்பதை உணர்வதன் மூலமாக உயிரூட்டப்பட வேண்டும். குர்காவில் டிசம்பர் 20-21 போராட்டத்தில் பங்குபெற்ற, சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களின் சில உறவினர்களோடு உலக சோசலிச வலைத் தளம் பேசியது. பெரும்பாலான தொழிலாளர்களின் வயது 20'களில் அல்லது 30'களின் தொடக்கத்தில் இருப்பதையும், வறிய கிராம குடும்பங்களில் இருந்து வந்திருந்ததையும் நாம் அவதானித்தோம்.
சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுஜூகி இந்தியா தொழிலாளி ஜியாலாலின் தந்தை ராம் லால் WSWS'க்கு கூறுகையில், “போர்குணமிக்க தொழிலாளர்களிடமிருந்து விடுவித்து கொள்ள, MSI நிர்வாகம் அதன் சொந்த மேலாளரை, அவனிஷ் தேவை, கொன்று விட்டு, அந்த வழக்கை தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பி விட்டது! ஆனால் தொழிலாளர்கள் மேலாளரை ஒன்றும் செய்யவில்லை. அந்த வழக்கில் எனது மகன் முதன்மை குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டார், பொலிஸால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவராக இருந்தார். நிர்வாகம் தான் ஜூலை 18இல் தகராறைத் தூண்டிவிட்டது, என்னவெல்லாம் நடந்ததோ அதற்கு தொழிலாளர்களைக் காரணமாக்கிவிட்டது. ஆனால் MSI நிர்வாகம் தான் முதன்மை குற்றவாளி. எனக்கு அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இல்லை," என்றார்.
சிறையில் அடைக்கப்பட்ட மற்றொரு நிரந்தர தொழிலாளரான ராம் சபாதின் தந்தை, சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களின் அனைத்து உறவினர்களைப் போலவே, அவர்களின் தலைவிதி மீது மிகவும் நம்பிக்கையிழந்து உள்ளார். கிழக்கு உத்திர பிரதேசத்தின் ஜோம்பூர் மாவட்டத்தில் சமஸ்புட் கிராமத்தில் இருந்து வந்த ஒரு சிறிய விவசாயி, குர்காவின் டிசம்பர் 20-21 தேதி போராட்டத்தில் கலந்து கொள்ள பல நூறு கிலோமீட்டர் கடந்து வந்திருந்தார். அவரது தந்தை விவரித்தார், "ராம் திருமணம் ஆனவர், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க என் மருமகளும் குழந்தையோடு என்னுடன் வந்துள்ளார். அவர் குர்காவ் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைந்து வரப்படும் போது மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் அனைவரும் ராமை பார்க்க வருகிறோம்," என்றார். "என்னுடைய மகன் அவரது தொழில்நுட்ப ITI பட்டய படிப்பை லக்னோவில் (உத்தர பிரதேசம்) முடித்துவிட்டு, டாடா மோட்டார்ஸில் தொழில் பயிலுனராக வேலை செய்து வந்தார். பின்னர் அவர் மாருதி சுஜூகி நிறுவனத்தில் சேர்ந்து எட்டு ஆண்டுகள் வேலை செய்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் அவர் நிரந்தரமாக்கப்பட்டார்." அவரது மகனையும், ஏனைய 140க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் நீதிமன்றங்கள் பிணையில் அனுப்ப மறுத்தமை குறித்து அவர் கூறுகையில், “பொதுவாக இதுபோன்ற படுகொலை குற்றச்சாட்டை முகங்கொடுக்கும் ஒருவரால், ஆறு மாத சிறை தண்டனைக்குப் பின்னர் பிணை பெற முடியும். ஆனால் எனது மகனும் மற்றவர்களும் இப்போது ஏறத்தாழ 18 மாதங்களாக சிறையில் இருக்கிறார்கள், அவர்களுக்கு இன்னமும் பிணை மறுக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மற்ற தொழிலாளர்களும் ஒரு கொலை குற்றத்திற்கு முறையற்ற விதத்தில் பொறுப்பாக்கப்பட்டு விட்டார்கள்!" என்றார். சிறையில் அடைக்கப்பட்ட MSI தொழிலாளரும் MSWU இன் தலைவர் ராம் மெஹரின் சகோதரருமான பல்வந்த் சிங்கிடமும் நாம் பேசினோம். மெஹருக்கு திருமணமாகி 5 மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர் ஹரியானாவின் கெய்தால் மாவாட்டத்தில் குலெய்னா கிராமத்தில் இருந்து வருகிறார். சிங் கூறுகையில், “MSI தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு தொடுக்க அங்கே ஒரு சூழ்ச்சி நடந்துள்ளது. சுரண்டுவதை நிர்வாகம் அதிகரிக்க விரும்பிய போது, அவர்கள் குறைந்த ஊதியத்திற்கு எதிராக மற்றும் ஓர் ஊதிய உயர்வைக் கோரி போராடினார்கள்," என்றார். ராம் மெஹரின் உடல்நலம் குறித்து கவலை தெரிவித்த அவரது சகோதரர், “நான் அவரை சிறையில் சந்தித்தேன். அவர் மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். சிறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. சிறையில் நாங்கள் அவரை சந்திக்க போகும் போதெல்லாம் அவருக்காக நாங்கள் உணவு எடுத்து செல்வோம், ஆனால் அந்த உணவை வழங்க அதிகாரிகள் எங்களை அனுமதிப்பதில்லை," என்றார். அரசியல் கட்சிகளைக் குறித்து அவர் ஏளனமாக கூறுகையில், “ஒரேயொரு கட்சி கூட மாருதி சுஜூகி தொழிலாளர்களை ஆதரிக்கவில்லை. எல்லா கட்சிகளுமே தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளன. கடந்த மார்ச் மாதம் கெய்தாலில் நடந்த ஒரு போராட்ட ஆர்ப்பாட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் பங்கெடுத்தபோது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, அவர்கள் பொலிஸால் குரூரமாக அடிக்கப்பட்டார்கள். அதில் பதினோறு பேர் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் வைக்கப்பட்ட பின்னர் தான் விடுவிக்கப்பட்டார்கள்," என்றார். |
|
|