World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Attempts of EU, far-right opposition to set up Ukraine government collapse

உக்ரேனில் தீவிர-வலது எதிர்தரப்பு, அரசாங்கம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிகள் சரிந்துவிட்டன

By Alex Lantier
26 February 2014

Back to screen version

சனிக்கிழமை பாசிச ஆட்சி கவிழ்ப்பு மூலம் அதிகாரத்தைப் பற்றிய மேற்கத்திய ஆதரவு உக்ரேனின் எதிர்த்தரப்பு சக்திகள் மேற்கொண்ட அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூகத் தாக்குதல்கள் அதிகரிக்க வேண்டும் என்னும் கோரிக்கைகளுக்கும் மற்றும் ரஷ்யாவுடனான இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியில் சரிந்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை பிரிவுத் தலைவர் கத்தரின் ஆஷ்டன் இரண்டு நாட்கள் பல்வேறு எதிர்த்தரப்புக் கட்சிகளை ஒன்றாக அரசாங்கத்தில் இணைக்கும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் நேற்று கீவை விட்டு நீங்கினார். மேற்கத்திய செய்தி ஊடகத்தில் ஜனநாயகத்திற்கான போராட்டம் என்று இழிந்த முறையில் பாராட்டப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு, ஏகாதிபத்திய நிதிய மூலதனத்தின் இழிந்த சர்வாதிகாரத்தை பலவந்தமாக நிறுவும் செயல் என்று நிரூபிக்கப்படுகிறது.

எதிர்த்தரப்பு அதிகாரிகள், உக்ரைன் அதன் கடன்களை புதுப்பிக்க 35 பில்லியன் டாலர்கள் வரை தேவைப்படும் என இந்த வாரம் மதிப்பிடப்பட்டுள்ளனர். எனினும், முக்கிய சர்வதேச வங்கிகள் திறமையுடன் உக்ரேனுக்கு கடனை நிறுத்திவிட்டன, அழிக்கும் அளவிற்கு அதிக வட்டிவிகிதங்களைக் காட்டுகின்றன, அதை உக்ரேன் கொடுக்க முடியாது. இதற்கிடையில் ரஷ்ய-ஆதரவு கொண்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை கவிழ்த்தபின்னர், தான் தருவதாக கூறியிருந்த 15 பில்லியன் டாலர்கள் உதவியைத் தருவதற்கு இல்லை என ரஷ்யா கூறிவிட்டது.

ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளும், உடனடி திவால்தன்மையை தவிர்க்கத் தேவையான 1 அல்லது 2 பில்லியன் டாலருக்கு ஈடாக, மின்சார கட்டணங்களுக்கு அரசாங்க உதவிகளில் ஆழ்ந்த வெட்டு சிக்கன நடவடிக்கைகளை கோருகின்றனர். கடந்த இலையுதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அத்தகைய வெட்டுக்கள் வேண்டுமென்ற கோரிக்கையை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஐக்கியப்படுவதற்கான ஓர் திட்டமிடப்பட்ட உடன்படிக்கையை யானுகோவிச் நிராகரித்தார்; இந்த வெட்டுக்கள் தன் ஆட்சியை கவிழ்க்கும் சமூக எழுச்சிகளுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சினார்.

இப்பொழுது ஸ்வோபோடா கட்சி மற்றும் நவ-நாசி வலது பிரிவுக் (Right Sector) குழுவில் இருக்கும் பாசிசக் குண்டர்களின் ஆதரவைக் கொண்டு மேற்கத்திய-சார்பு எதிர்த்தரப்பு, இப்பிற்போக்குத்தன ஜனநாயக விரோத செயற்பட்டியலை செயல்படுத்த முயல்கின்றன. பில்லியனர் தன்னலக்குழு உறுப்பினர் யூலியா திமோஷெங்கோவின் Fatherland கட்சியின் ஆர்செனி யாட்சென்யுக், வாஷிங்டன் தான் விரும்பும் வலதுசாரி உக்ரேன் தலைவர் எனக்கருதப்பட்டவர், எதிர்த்தரப்பை அரசாங்கத்தில் சேருமாறு அழைப்பு விடுத்தார், மக்கள் எதிர்ப்பை மீறி வங்கிகள் ஆணையைச் செயல்படுத்தவும் கோரினார். “இது அரசியல் பொறுப்பு பற்றியது. அரசாங்கத்தில் இருப்பது இதைப் பொறுத்தவரை அரசியல் தற்கொலை என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் நாம் மிகவும் வெளிப்படையானதாகவும் திறந்ததாகவும் இருக்க வேண்டும்” என யாட்சென்யுக் பாராளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் கூறினார்.

இத்தகைய கருத்துக்கள், மக்கள் எதிர்ப்பு எப்படி வெளிப்பட்டாலும் அதை நசுக்குவதற்கு எதிர்த்தரப்பினர், வன்முறையான தொழிலாளர் எதிர்ப்பு சக்திகளான ஸ்வோபோடா அல்லது வலது பிரிவைப் பயன்படுத்தி, உக்ரேனிய மக்கள் மீது தாக்குதலை நடத்தும் நோக்கத்தைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவை வெளிப்படையாக நாசிசத்தையும், யூத இன ஒழிப்பையும் பெருமைப்படுத்துகின்றன.

உக்ரேனில் பரந்த மக்கள் விரோதம், யானுகோவிச்சிற்கு மட்டும் இல்லாமல், முக்கிய எதிர்த்தரப்பு தன்னலக்குழு உறுப்பினர் திமோஷெங்கோவிற்கும் இருப்பதைத்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பெண்மணி Neue Zürcher Zeitung இடம் “அவர்கள் அனைவரும் திருடர்கள், ஒருவரைப் போல்தான் மற்றவர்களும், யூலியா திமோஷங்கோ ஒன்றும் சிறந்தவர் அல்லர்என்றார்.

மேற்கத்திய சக்திகளின் நடவடிக்கை உக்ரேனை ரஷ்ய செல்வாக்கு மண்டலத்தில் இருந்து பறித்தெடுக்க முற்படுகையில் அழுத்தங்கள் பெருகியுள்ளன. ஓர் அறிக்கையில், ரஷ்ய வெளியுறவு மந்திரி உக்ரேனில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கொள்கைகள் “உக்ரேனின் கதி பற்றிய கவலையினால் உந்தப்பெறவில்லை, ஒருதலைப்பட்ச புவி அரசியல் கணக்கீடுகளினால் உந்தப்பெறுகிறது. ...சர்வாதிகார, சில நேரம் பயங்கரவாத வழிவகைகளை பயன்படுத்தி பல பிராந்தியங்களிலும் எதிர்ப்பாளர்களை நசுக்கும் போக்கு உள்ளது” என்று தாக்கினார்.

திங்களன்று Interfax செய்தி நிறுவனத்திடம் பேசிய ரஷ்ய பிரதம மந்திரி டிமிட்ரி மேட்வடேவ், கீவின் ஆட்சிமாற்றத்தை கண்டித்தார். அவர் கூறியது: “கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அங்கு பேசுவதற்கு எவரும் இல்லை. முழு அரசாங்கப் பிரிவுகளின் நெறியும் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.... மக்கள் கீவிற்கு கறுப்பு முகமூடிகள் அணிந்து, கிளாஷிநிகோவ் துப்பாக்கிகளுடன் சென்றுவந்தல் அரசாங்கம் என கருதப்படுகிறது, அத்தகைய அரசாங்கத்துடன் உழைப்பது எங்களுக்கு மிகவும் கடினமாகும்.”

ஆனால் மேட்வெடேவ் சேர்த்துக் கொண்டார்; ரஷ்யா சட்டபூர்வமாக உள்ள இயற்கை எரிவாயு ஒப்பந்தங்கள், உக்ரேனுக்கு எரிவாயு அளிப்பது மதிக்கப்படும். “இந்த உடன்பாடுகள் சட்டபூர்வமானவை, கௌரவப்படுத்தப்ப வேண்டியவை. நாங்கள் ஒன்றும் தனிநபர்களுடன் ஒத்துழைக்கவில்லை. இவை நாடுகளுக்கு இடையேயான உறவுகள். நாம் அண்டை நாட்டினர், நெருக்கமான நாடுகள் ஒன்றில் இருந்து மற்றொன்று தப்பி ஓட முடியாதவை. கையெழுத்திடப்பட்டவை மதிக்கப்பட வேண்டும். எங்களைப் பொறுத்தவரை உக்ரேன் ஒரு தீவிர, முக்கிய பங்காளியாகத்தான் உள்ளது.”

எதிர்த்தரப்பு, ரஷ்ய மொழியின் அந்தஸ்த்தை உத்தியோகப்பூர்வ மொழி என்பதில் இருந்து அகற்றிவிட்டது – இது குறிப்பாக பரந்த அளவில் உக்ரேனின் கிழக்கே பேசப்படுகிறது. கீவ் எதிர்ப்பு சக்திகள் கிழக்கை கைப்பற்ற முயற்சிக்கும் என்றால் அல்லது கிரிமியாவில் உள்ள ரஷ்யன் இராணுவத் தளங்களை எடுத்து கொள்ள முற்பட்டால், ரஷ்ய தலையீடு உட்பட ஒருவேளை போர் மூளலாமோ என்னும் பரந்த அச்சமும் உள்ளது.

நேட்டோவின் ஐரோப்பிய தளபதி ஜெனரல் பிலிப் ப்ரீட்லவ் ரஷ்யத் தலைமை இராணுவ அதிகாரி ஜெனரல் வலெரி ஜேரசிமோவுடன் திங்கள் அன்று பதட்டமான கருத்துப்பறிமாற்றத்தைக் கொண்டார்; இதில் இருவரும் “உக்ரேன் நிலைமை குறித்து கவலையைத் தெரிவித்துக் கொண்டனர்.”

இத்தகைய கருத்துக்கள், ஜனாதிபதி விளாடிமீர் புட்னின் ரஷ்ய ஆட்சியின் திவால்தன்மையை உயர்த்திக் காட்டுவதுடன், 23 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததின் பேரழிவுகரமான பூகோள மூலோபாய தாக்கங்களையும் முன்னிலைப்படுத்துகிறது. அதன் இயற்கை எரிவாயுவை ஐரோப்பிய சந்தகளுக்கு அனுப்புவதில் உக்ரேனிய குழாய்களை நம்பியுள்ள கிரெம்ளின் தன்னலக்குழு, ஊழல் மிகுந்த யானுகோவிச் ஆட்சியை விட ஒன்றும் அதிக மக்கள் செல்வாக்கு தளத்தைக் கொண்டிருக்கவில்லை. இதேபோன்ற மத்தியதர வர்க்க எதிர்ப்பு சக்திகளின் வலதுசாரி ஆத்திரமூட்டுதல்கள் அல்லது உள் இனவழிப்பூசல்கள் செச்சினியாவில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் எரியூட்டியதால்  நடைபெற்றது போன்ற ஆபத்துக்களும் உண்டு. ஏகாதிபத்தியத்தின் தீவிர வலதுசாரி தாக்குதலை தடுக்க, எந்த அளவிற்கு அதன் இராணுவ இயந்திரத்தை பயன்படுத்த முயற்சிக்கிறதோ அந்த அளவிற்கு மாஸ்கோ நேட்டோவுடன் முழுப் போர் நேரும் அபாயத்தை மட்டுமே தூண்டும்.

முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் தீவிர வலது, நவ காலனித்துவ ஆட்சியை சுமத்த முற்படும் ஏகாதிபத்திய சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக உக்ரேனிலும், சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான் ஒரே வழியாகும். இது இல்லாத நிலையில், ஏகாதிபத்திய சக்திகள் வலதுசாரி, மத்தியதர வகுப்புச் சக்திகளை திரட்டி பிராந்தியம் முழுவதும் உறுதியிழக்கச்செய்யவும், இறுதியில் ரஷ்யாவை குலைக்கும் நோக்கத்திலும் ஈடுபடும். அமெரிக்க ஆதரவு உடைய முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜிய அரசாங்கம், தெற்கு ஒசீஷியாவில் இருந்த ரஷ்ய அமைதிப்படையை தாக்கியபின், 2008ல் ரஷ்யாவுடன் குறுகிய காலத்திற்கு ஒரு போரை நடத்தியது, இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஐக்கியப்படுவதற்கான ஓர் திட்டமிடப்பட்ட உடன்படிக்கையை யானுகோவிச்சின் கீழ் உக்ரேன் நிராகரித்ததை கொண்டு அப்படி ஒன்றை நாடுகிறது.

நேற்றைய Süddeutsche Zeitung பத்திரிகையில், மாஸ்கோவில் இருக்கும் Carnegie Endowment or International Peace ன் சிந்தனைக் குழுவில் உள்ள லிலியா ஷெவ்ட்சோவா, மேற்கத்திய-ஆதரவு எதிர்த்தரப்பு சக்திகள் உக்ரேனிய ஆட்சி கவிழ்ப்பு போல, ரஷ்யா உட்பட முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பகுதிகள் அனைத்திலும் தயாரிப்புக்களை கொண்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

கீவ் நகரில் பாசிச தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பை ஓர்வெல்லிய முறையில் பாராட்டி,அதன் தலைவர்கள் மற்றும் மாவீரர்களால் ஒரு புதிய தேசியத் தன் உணர்வு ஏற்பட்டுள்ளது” என்று கூறி உக்ரேனை நேட்டோவில் சேருமாறும்  அழைப்பு விடுத்த அவர் கூறினார்: “சோவியத்திற்குப் பிந்தைய சங்கிலியில் உக்ரேன் மிக பலவீனமான பிணைப்பாக இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இது போன்ற எழுச்சிகள் மற்ற நாடுகளிலும் சாத்தியம் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.”

நாஜி ஆட்சிக்குப்பின் கடைபிடிக்கப்பட்ட தன் வெளியுறவு, இராணுவக் கொள்கை தடைகளை கைவிட வேண்டும் என அழைப்பு விடுத்த ஜேர்மன் ஜனாதிபதி ஜோஅஹிம் கௌக்கின் வெளியுறவுக் கொள்கையை சுட்டிக்காட்டி, ஷெவ்ட்சோவா பேர்லின் இதே போன்ற ரஷ்யாவிற்கு எதிரான செயல்களுக்கு ஆதரவு கொடுக்கும் சாத்தியப்பாடுகளையும் எழுப்பினார்.

அவர் எழுதினார்: “எனவே, உக்ரேனியர்கள் ஐரோப்பாவுடன் மீண்டும் ஏமாற்றம் அடையமாட்டர்கள் என நம்பலாம், மேலும் ரஷ்யாவில் உள்ள ஜனநாயக சக்திகள் ஐரோப்பாவுடனான தங்கள் தற்போதைய ஏமாற்றத்தையும் கடப்பர் என நம்பலாம்.”