தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா Coup in Ukraine: A warning to the international working class உக்ரேனில் ஆட்சி கவிழ்ப்பு: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை
Peter Schwarz Use this version to print| Send feedback சமீபத்திய உக்ரேனிய சம்பவங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாகும். அந்த அரசியல் சம்பவங்களில் தொழிலாளர்கள் சுயாதீனமாய் தலையீடு செய்ய அவர்களுக்கு ஒரு முன்னோக்கோ அல்லது ஒரு கட்சியோ இல்லாத நிலைமைகளின் கீழ், உக்ரேனில் நிலைமை முற்றிலுமாக பிற்போக்குத்தனமான திசையில் அபிவிருத்தி அடைந்துள்ளது. 1945இல் ஹிட்லரின் மூன்றாம் குடியரசின் (Third Reich) வீழ்ச்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் எது சிந்திக்க முடியாத ஒன்றாக இருந்ததோ அது நடைமுறைக்கு வந்துள்ளது: அமெரிக்காவும் ஜேர்மனியும் இரக்கமின்றி, பொறுப்பற்ற விதத்தில் அந்நாட்டை ஸ்திரமின்மைக்கு ஆட்படுத்தியதோடு, பாசிசவாதிகள் களத்தின் தீர்க்கமான சக்தியாக மாறி உள்ளனர். இந்த நெருக்கடி கடந்த ஆண்டு நவம்பரில் ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஐக்கியப்படுவதற்கான ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்தபோது வெடித்தது. அதை வாஷிங்டன் மற்றும் பேர்லினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. Die Zeitஇல் தியோ சொம்மெர் எழுதியதைப் போல, “ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு செல்வாக்கெல்லையும் ரஷ்யாவின் மேற்கு செல்வாக்கெல்லையும் எங்கே அமைய வேண்டும்?" என்பது தான் பிரச்சினையில் பணயத்தில் உள்ளது. யானுகோவிச்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்த ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு பெற்ற எதிர்ப்பை அமெரிக்காவும், ஜேர்மனியும் முறையாக ஆதரித்தன. ஜேர்மன் CDU உடன் மிக நெருக்கமாக உள்ள வலதுசாரி கட்சிகளான ஜூலியா தியெமோசென்கோவின் Fatherland மற்றும் விடாலி கிளிட்ஸ்ச்கோவின் UDAR ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு, ஓலெஹ் தியாஹ்ன்பொக்கின் பாசிச ஸ்வோபோடா கட்சியும் எதிர்ப்பில் சேர்ந்திருந்தது. ஸ்வோபோடா, நவ-பாசிச முத்திரைகளைப் பயன்படுத்துகிறது, வெளிநாட்டினர், யூதர்கள், ஹங்கேரியர்கள் மற்றும் போலந்து நாட்டினருக்கு எதிராக கிளர்ச்சி செய்கிறது, பிரெஞ்சு தேசிய முன்னணி உடன் நெருக்கமான உறவுகளைத் தக்கவைத்துள்ளது, மற்றும் கிரேக்க கோல்டன் டோன் மற்றும் ஹங்கேரிய ஜோபிக் ஆகிய அதிவலதுகளுடன் உலக யூத காங்கிரசால் ஒப்பிடப்படுகிறது என்ற உண்மை கூட, தியாஹ்ன்பொக்கை பகிரங்கமாக அரவணைப்பதில் இருந்து அமெரிக்க மற்றும் ஜேர்மனிய வெளியுறவுத்துறை மந்திரிகளை தடுத்துவிடவில்லை. எவ்வாறிருந்த போதினும் ஆரம்பகட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் யானுகோவிச்சை இராஜினாமா செய்ய நிர்பந்தித்துவிடவில்லை. அந்த புள்ளியில், மோதலைத் தீவிரப்படுத்த மற்றும் நாட்டை உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பிற்கு கொண்டு வர துணைப்படையை கொண்ட பாசிச போராளிகள் ஒன்று திரட்டப்பட்டனர். Right Sector என்றழைக்கப்படுவதால் முக்கிய பாத்திரம் வகிக்கப்பட்டது. தலைக் கவசங்கள், குறுந்தடிகள், வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் ஏந்திய அதன் முகத்தை மறைத்த போராளிகள் விரைவிலேயே பாதுகாப்பு படைகளின் மீது மூர்க்கமான தாக்குதல் நடத்தி, கீவ்வின் மையத்தைக் கைப்பற்றினர். கீவ்வில் மட்டும் அவர்களைச் சேர்ந்த 2,000இல் இருந்து 3,000 பேர் இருப்பார்கள் என்று புதிய செய்திகள் மதிப்பிடுகின்றன. பழமைவாத Die Welt பத்திரிகை Right Sectorஐ "வலதுசாரி மற்றும் நவபாசிச பிளவு குழுக்களின் ஓர் உத்தியோகபூர்வமற்ற ஐக்கியம்" என்று குறிப்பிட்டது. அதன் தலைவர் திமிட்ரி யாரோஷை நேர்காணல் செய்த டைம்ஸ் இதழ், அவர்களின் "சித்தாந்தம் பாசிசத்திற்கு அருகாமையில் உள்ளதாகவும், அது உக்ரேனின் மிகவும் உக்கிரமான தேசியவாதிகளிடமிருந்து மட்டும் ஆதரவைப் பெறுவதாகவும்" எழுதுகிறது. அதன் அங்கத்தவர்களில் பலர் முன்னாள் சிப்பாய்கள் ஆவர் அல்லது அஜர்பெய்ஜானின் தரப்பில் மோதலில் சண்டையிட்டவர்கள் மற்றும் செச்சென்யாவில் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக தெற்கு ஓசிடியாவில் சண்டையிட்டவர்கள் ஆவர். இந்த துணைஇராணுவ பாசிச போராளிகள்தான் கடந்த வியாழனன்று தீவிரமான சூழ்நிலையை உறுதி செய்தவர்கள். அவர்கள் பாதுகாப்பு படைகளுடன் இரத்தக்களரியான யுத்தம் நடத்தி கொண்டிருந்த போது, அதில் இருதரப்பிலும் டஜன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த அதேவேளையில், ஜேர்மன், போலாந்து மற்றும் பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரிகள் கீவ்விற்கு பறந்து சென்று, மணிக்கணக்கான பேரம்பேசல்களுக்குப் பின்னர் யானுகோவிச்சை ஒரு "சமரசத்திற்கு" உடன்பட நிர்பந்தித்தனர். அது அந்த ஜனாதிபதியின் முடிவுக்கு தொடக்கமாக இருந்தது. அந்த உடன்படிக்கைக்கு எதிராக Right Sector பேசிய போது மற்றும் சண்டைகளை நீடிக்கப் போவதாக அச்சுறுத்தியபோது, இராணுவம் நடுநிலைமை வகிப்பதாக அறிவித்ததோடு, யானுகோவிச்சின் Party of Regionsஇல் இருந்து பல அதிகாரிகள் கட்சி மாறினர். இது அவரது கதியை முடிவுக்கு கொண்டு வந்தது. உக்ரேனில் நிலைமை இதுவரையில் அதீத பதட்டத்துடனும், ஸ்திரமின்றியும் உள்ளது. எதிர்ப்பின் பல்வேறு முகாம்கள் அரசியல் மேலாதிக்கத்திற்காக சண்டையிட்டு வருகின்றன, அதேவேளையில் கிரீமியா மற்றும் நாட்டின் கிழக்கில் பிரிவினைவாத மற்றும் உள்நாட்டு யுத்த ஆபத்து நிலவுகிறது. ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர மேற்கத்திய சக்திகளும், எதிர்ப்பும் எதை சார்ந்திருந்தனவோ அந்த பாசிச சக்திகள் எஞ்சியவற்றில் அவற்றின் பங்குகளைக் கோரி வருகின்றன. அவை அந்நாட்டின் அரசியல் வாழ்வில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும். முன்னாள் பிரதம மந்திரியும், Fatherland கட்சியின் தலைவருமான யூலியா தியமோசென்கோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சுதந்திர சதுக்கத்தில் பேசுகையில், பாசிச போராளிகளுக்கு பல்வேறு நேசமான கோரிக்கைகளை விடுத்தார். அவர் "புரட்சியில் அதன் பங்களிப்பிற்காக" Right Sectorக்கு உணர்வுபூர்வமாக நன்றி தெரிவித்தார். “சுதந்திர சதுக்கத்தில் உள்ள தற்காப்பு படைகள்" புதிய அமைப்புமுறைக்குள் ஒருங்கிணைக்கப்படும் என்று புதிய உள்துறை மந்திரி உறுதியளித்தார். பாசிசவாதிகளை இவ்வாறு பலப்படுத்துவதென்பது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஊடகங்கள் மற்றும் பிரதான அரசியல் கட்சிகளின் முறையான ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமில்லை. நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் Süddeutsche Zeitung போன்ற தாராளவாத பத்திரிகைகள் உக்ரேனிய சம்பவங்களை "ஒரு ஜனநாயக புரட்சியாக" சித்தரித்து, பாசிஸ்டுகளின் பாத்திரத்தை பூசிமொழுகி, ஆட்சி கவிழ்ப்பைப் புகழ்ந்து கொண்டாடி ஒரு பிராச்சார பிரளயத்தை உண்டாக்கி உள்ளன. எல்லா தரப்பிலிருந்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் — அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி, ஜேர்மனி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து பழமைவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள், பசுமை கட்சியினர் மற்றும் பிராட்டன் கட்சியின் பிரதிநிதிகள் — வலதுசாரி குண்டர்களோடு தங்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தி கீவ்விற்கு யாத்திரை புறப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர், யானுகோவிச்சிற்கு எதிரான ஆட்சிகவிழ்ப்பில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்தார். ஜேர்மனியின் இடது கட்சியும், ஏனைய பல போலி இடது அமைப்புகளும் கிவ்வில் நடந்த ஆட்சி கவிழ்ப்பை ஆதரித்து, உக்ரேனிய பாசிசவாதிகளின் பாத்திரத்தை மற்றும் அதன் தன்மையை மூடிமறைக்க பிரச்சாரத்தில் இணைந்துள்ளன. பாசிச சக்திகளை நோக்கிய இந்த திருப்பம், உக்ரேனோடு மட்டுப்பட்டதல்ல. பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பிரிவுகள் தேசிய முன்னணியை நோக்கி திரும்புகின்றன. அது சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரி, தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளில் இருந்து ஆதாயமடைந்துள்ளது. வரவிருக்கின்ற ஐரோப்பிய தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்புகளில் தேசிய முன்னணி தற்போது முதலிடத்தில் உள்ளது. வலதை நோக்கிய இந்த திருப்பத்தின் அடியில் இருப்பது, முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடி தீவிரமடைந்திருப்பதும், சமூக துருவமுனைப்படுதல் அதிகரித்து வருவதும் ஆகும். சிக்கன நடவடிக்கை, சுகாதார வெட்டுக்கள் மற்றும் விலை உயர்வுகள் என ஏற்கனவே கிரீஸிற்கு வழங்கப்பட்ட மருந்துகளைப் புகட்டுவதே, கீவ்வில், புதிய அரசாங்கத்தின் முதல் பணியாக இருக்கும். திவால்நிலைமையிலிருந்து வெளியேற உக்ரேனுக்கு தேவையான கடன்களைப் பெற இவையெல்லாம் முன்நிபந்தனைகளாகும் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். இது உக்ரேனிய பில்லியனர் செல்வந்த தட்டுக்களை உற்சாகப்படுத்தும். அவற்றில் சில தட்டுக்கள் எதிர்ப்புகளை ஆதரித்திருந்தன, அதேவேளையில் ஏனையவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த தரப்பிற்கு மாறின. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவின் மீது அழுத்தத்தை அதிகரிக்க உக்ரேனிய ஆட்சி கவிழ்ப்பை பயன்படுத்தி வருகின்றன. இது ஓர் இராணுவ மோதல் ஏற்படுவதற்கான ஆபத்தை உயர்த்துகிறது. உக்ரேனின் உள்நாட்டு மோதலில் ரஷ்யா தலையீடு செய்வது, "சர்வதேசரீதியில் வாஷிங்டன் அதன் செல்வாக்கைப் பயன்படுத்த நிர்பந்திக்கும். அந்த நகர்வுகளில் மாஸ்கோ அதிக விலைகொடுக்க வேண்டியதிருக்கும்," என்று பைனான்சியல் டைம்ஸில் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜிபெக்னெவ் ப்ரெஜிஜின்ஸ்கி (Zbigniew Brzezinski) எச்சரிக்கிறார். உக்ரேனிய நெருக்கடி முழுவதிலும், அரசியல் சம்பவங்களில் தலையீடு செய்ய தொழிலாள வர்க்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தான் செல்வந்த குழுக்களுக்கு போட்டியாக, ஏகாதிபத்திய சக்திகளாலும், பாசிசவாதிகளாலும் மேலோங்கி இருக்க முடிந்தது. ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தை மற்றும் அதன் ஆதரவாளர்களை தூக்கியெறிய சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட இயக்கத்தின் மூலமாக மட்டுமே — உக்ரேனில் இன்று மிகத் தெளிவாக தெரிகின்ற — அதிகரித்துவரும் சர்வாதிகாரம் மற்றும் யுத்தத்தின் அச்சுறுத்தலை எதிர்க்க முடியும். |
|
|