World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி Berlin IYSSE protests Professor Jörg Baberowski’s suppression of democratic discussion at Humboldt University ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி ஜனநாயக கலந்துரையாடலை ஒடுக்கியதற்கு பேர்லின் IYSSE எதிர்ப்பினை பதிவு செய்கிறது22 February 2014 சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு பேர்லினில் இருக்கும் ஹம்போல்ட் பல்கலைக்கழக வாரியத்திற்கு அனுப்பிய கடிதம் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. அன்புள்ள பேராசிரியர்கள் Jan-Hendrik Olbertz மற்றும் Michael Seadle ஆகியோருக்கு: ரோபர்ட் சேர்விஸ் எழுதிய ’ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைச் சரிதம்’ தொடர்பாக பிப்ரவரி 12 அன்று ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு பொதுக் கூட்டத்தில் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி கலந்துரையாடலை ஒடுக்க எதேச்சாதிகார வழிமுறைகளைக் கையாண்டார். அவரது நடத்தையானது ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் அடிப்படையான கல்வியாய்வு சுதந்திரங்களை கேள்விக்குள் தள்ளுகிறது. ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை கண்டிப்பதற்கு சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு(IYSSE) பல்கலைக்கழக வாரியத்திற்கு அழைப்பு விடுக்கிறது. கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத் துறையின் பொது ஆய்வரங்கம் ஒன்றிற்கே பார்பெரோவ்ஸ்கி சேர்விஸை அழைத்திருந்தார், இந்த ஆய்வரங்கிற்கு “ஆர்வமுள்ள அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுவதாக”வே வரலாற்றுத் துறையின் வலைத் தளம் கூறியிருந்தது. ஆனால், சேர்விஸ் எழுதிய வாழ்க்கைச் சரிதத்தை “கூலிக்கு மாரடித்திருக்கும் ஒரு வேலை” என்று ஒரு முன்னணி ஜேர்னலும் சர்வதேசப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களும் வருணித்திருப்பதை சுட்டிக் காட்டி சோசலிச சமத்துவக் கட்சியும் (PSG—Partei für Soziale Gleichheit) IYSSE ம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்ததோடு நல்ல பங்கேற்பைப் பெற்ற ஒரு கூட்டத்தையும் நடத்தியதை அடுத்து, பார்பெரோவ்ஸ்கி பொதுவாக ஒரு போலிஸ் அரசுடன் தொடர்புபடுத்தக் கூடிய நடவடிக்கைகளை கொண்டு பதிலிறுப்பு செய்தார்.
சேர்விஸிடம் எந்த விமர்சன ரீதியான கேள்விகளும் எழுப்பப்படுவதை தடுக்கும் முயற்சியில், பார்பெரோவ்ஸ்கி பொது ஆய்வரங்கை முன்கூட்டிய அறிவிப்பின்றி இரத்து செய்து விட்டார். இந்த நடவடிக்கைக்கு எந்த காரணமும் கூறப்படவில்லை. மேலும், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தவர்கள் முற்றிலும் நேர்மையற்றதொரு வழியில் நடத்தப்பட்டனர். கூட்டம் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தது என்பது பொதுமக்களுக்கு சொல்லப்படவில்லை. சேர்விஸின் கூலிக்கு மாரடிக்கும் வேலை குறித்து எந்த ஆட்சேபனைகளும் தெரிவிக்கத் துணியாத சிறிய எண்ணிக்கையிலான பார்பெரோவ்ஸ்கியின் சகாக்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமே புதிய முகவரி தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், கூட்டம் நடக்கின்ற புதிய முகவரி தெரியவந்தபோது, பொதுமக்களின் பல்வேறு உறுப்பினர்களும் புதிய இடத்திற்கு விரைந்தனர் - பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்திற்குள் இருக்கும் ஒரு அறை தான் அந்த புதிய இடம். அங்கே அவர்கள் ஒரு அசாதாரணமான காட்சியை எதிர்கொள்ளும்படி ஆனது. பாதுகாவலர்கள் புடைசூழ சந்திப்பு அறையின் வாசலில் பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி நின்றிருந்தார். வருபவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் யார், ஏன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என்று பார்பெரோவ்ஸ்கி விசாரித்துக் கொண்டிருந்தார். பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் ஒரு அப்பட்டமான மீறலாக, பார்பெரோவ்ஸ்கி, பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளாக நடத்தப்பட பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் யார் கலந்து கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்க அரசியல் தகுதிநிர்ணயங்களை திணித்தார். சேர்விஸுடன் கருத்துபேதம் கொண்டிருந்தவராக பார்பெரோவ்ஸ்கி சந்தேகித்த எவரொருவரும் பல்கலைக்கழகத்தின் கூட்ட அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரான டேவிட் நோர்த்தும் அனுமதி மறுக்கப்பட்டவர்களில் ஒருவராவர். 40 ஆண்டுகளாக சர்வதேச சோசலிச இயக்கத்தின் ஒரு முன்னணி ஆளுமையாக இருந்து வரும் நோர்த், சேர்விஸ் எழுதிய வாழ்க்கைச் சரிதத்தின் பிழைகளையும் புரட்டுகளையும் அம்பலப்படுத்திய ’லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து’ என்ற சர்வதேசரீதியாக பாராட்டப் பெற்ற ஒரு புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். நோர்த் தன் அடையாளத்தை வெளிப்படுத்தியபோது, பார்பெரோவ்ஸ்கி கடுமையான கம்யூனிச-விரோத அவமதிப்புகளை உரக்கக் கூறியதோடு போலிசை அழைக்கப் போவதாகவும் மிரட்டினார். சேர்விஸ் எழுதிய ’ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைச்சரிதம்’ புத்தகம் ஜேர்மன் பதிப்பில் வெளியிடப்படுவதற்கு எதிராக இன்னும் 13 வரலாற்று ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒரு திறந்த மடல் எழுதியிருந்த சர்வதேச அளவில் அறியப்பட்ட வரலாற்றாசிரியரான போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மரியோ கெஸ்லரும் அரங்கில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. சேர்விஸ் எழுதிய வாழ்க்கைச்சரிதம் குறித்து IYSSE நடத்தியிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பல ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர்களும் கூட இக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து தடுக்கப்பட்டனர். பார்பெரோவ்ஸ்கியின் நடத்தையானது பல்கலைக்கழக கூட்டங்களில் பின்பற்றப்படும் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் சுதந்திரமான மற்றும் மனம்திறந்த விவாத முறையை அப்பட்டமாய் மீறியதாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு இடையூறு செய்யப் போவதாக எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை. The Partei für Soziale Gleichheit, சேர்விஸ் எழுதிய வாழ்க்கைச்சரிதத்திற்கான தனது ஆட்சேபனைகளை வெளியிட்டிருந்ததோடு கலந்துரையாடலை வழிநடத்த கேள்விகளின் ஒரு பட்டியலையும் கூட அவருக்கு அனுப்பியிருந்தது. பார்பெரோவ்ஸ்கிக்கு அனுப்பிய இரண்டு கடிதங்களில் PSG, “சந்தேகமில்லாமல் ஆய்வரங்கின் கட்டமைப்புக்கு மரியாதையளிப்போம்” என்று உறுதியளித்திருந்தது. மேலும் இதற்கு நான்கு நாட்கள் முன்னதாக நடந்த IYSSE கூட்டத்தில் பார்பெரோவ்ஸ்கியின் துறையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததோடு எந்தத் தடைகளுமின்றி எந்தக் கேள்விகளையும் கேட்பதற்கும் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பார்பெரோவ்ஸ்கியின் எதேச்சாதிகார நடவடிக்கைகளானவை சேர்விஸின் மதிப்பிழந்த வாழ்க்கைச்சரிதத்தின் மீதான விமர்சனத்தை ஒடுக்குவதென்கிற பிரத்யேக நோக்கம் கொண்டதாய் இருந்தது. 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஆய்வரங்கில் அச்சுறுத்தலின் ஒரு சூழல் நிலவியது. நிலவறை போன்றதொரு அறையில் கூட்டம் நடந்தது, அதன் கதவுகள் உட்புறமாக பூட்டிக் கொள்ளப்பட்டன, ஏராளமான பாதுகாப்புக் காவலர்கள் வெளிப்பக்கமாய் நிறுத்தப்பட்டனர். இத்தனை முன்னெச்சரிக்கைகளையும் தாண்டி ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டபோது, கேள்வி கேட்டவரை பேச்சை நிறுத்துமாறு பார்பெரோவ்ஸ்கி கூறி விட்டார்! பார்பெரோவ்ஸ்கியின் நடத்தை ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலாக இருந்தது என்பதோடு ஒரு கல்வி நிறுவனத்திற்குப் பொருத்தமான நடத்தையின் அத்தனை நிர்ணயங்களையும் மீறியதாக இருந்தது. ஒரு புத்தகத்தை விமர்சனம் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மாணவர்களையும் வரலாற்றாசிரியர்களையும் அவரது கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் அனுமதிக்க மறுத்தார்! அவமதிப்பைச் சம்பாதித்த சேர்விஸின் படைப்பு சவாலைச் சந்திக்கக் கூடாது என்பதை உறுதி செய்து கொள்ள விரும்பிய பார்பெரோவ்ஸ்கி அதற்காக பல்கலைக்கழகத்தின் சுதந்திரமான வெளிப்பாட்டின் மீது தாக்குதலைத் தொடுத்தார். தனது நடவடிக்கையின் மூலமாக பார்பெரோவ்ஸ்கி அரசியல் தணிக்கைக்கு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கித் தந்திருக்கிறார். ’ஸ்ராலினிச கொடுங்கோல் ஆட்சிக்கான மூலம் அந்த சர்வாதிகாரியின் உளவியலில் தான் காணத்தக்கது’ என்று Verbrannte Erde(கொளுத்தப்பட்ட பூமி)என்ற அவரது சமீபத்திய புத்தகத்திலும் பார்பெரோவ்ஸ்கி கூறியிருக்கிறார். ஆனால், அரசியல் வன்முறைக்கான மூலம் எங்கேயிருக்கிறது என்பதான விடயத்தில் பார்பெரோவ்ஸ்கியின் சொந்த நடத்தையே இன்னும் மிகத் தெளிவான ஒரு சித்திரத்தை வழங்குகிறது. ஸ்ராலினிச ஆட்சியை சவால் செய்த சிந்தனைகளை ஒடுக்குவது தான் ஸ்ராலினிச சர்வாதிகாரத்தின் நோக்கமாய் இருந்தது. இந்த நோக்கத்தை மிகஎளிதில் புரிந்துகொள்ள பொருத்தமானவர் தான் பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி. அவர் விரும்பாத அவர் பதிலளிக்க முடியாத சிந்தனைகளை கொண்டு அவர் சவால் செய்யப்பட்டால், உடனே அவர் தணிக்கையிலும் பாதுகாவலருக்குக் கட்டளைகளிலும் போலிசை அழைப்பதான மிரட்டல்களிலும் இறங்கி விடுகிறார். மாணவர்கள் இடையே IYSSE விநியோகித்த ஒரு துண்டறிக்கை வினா எழுப்பியது: “பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்கு ரோபர்ட் சேர்விஸை ஏன் அழைத்தார்? இந்தக் கேள்விக்கு இப்போது பதிலளிக்க முடியும். நாஜி குற்றங்களை எதிர்வினைகளாக சித்தரிப்பதும் அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைப்பதுமான எழுத்துகளுடன் மூன்றுதசாப்தங்களாக தொடர்புபடுத்தப்பட்டு வந்திருக்கும் எர்னஸ்ட் நோல்டேயின் படுபயங்கரமான வலது-சாரி கருத்தாக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு பார்பெரோவ்ஸ்கி தனது பதவியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஜேர்மன் வரலாற்றை திருத்தி எழுதுவதற்கு நடக்கும் முயற்சிகள் குறித்து Dirk Kurbjuwelt எழுதிய ஒரு நெடுநீளக் கட்டுரை ஒன்றை செய்தியிதழான Der Spiegel பிப்ரவரி 10 அன்று வெளியிட்டிருந்தது. நோல்டேயின் கருத்துகளை சிரத்தையுடன் பாதுகாக்கும் பார்பெரோவ்ஸ்கி இந்தப் பிரச்சாரத்தில் ஒரு பிரதான பாத்திரம் ஆற்றிக் கொண்டிருக்கிறார். “ஹிட்லர் மனநலம் திரிந்தவர் அல்லர், அத்துடன் பொல்லாங்கானவரும் அல்ல. தனது மேசையில் யூதர்களை அழிப்பது குறித்து எவரும் பேசுவதை அவர் விரும்பியது கிடையாது” என்று அவர் கூறியதாக Der Spiegel மேற்கோளிட்டிருந்தது. Der Spiegel இல் பார்பெரோவ்ஸ்கி நோல்டேயை வெளிப்படையாக பாதுகாத்துப் பேசியிருந்தார். “நோல்டேக்கு அநீதி இழைக்கப்பட்டது” என்றும் “வரலாற்றுரீதியாகப் பார்த்தால் அவர் கூறியவை சரியே” என்றும் அவர் அந்த செய்திப் பத்திரிகையிடம் கூறியிருந்தார். ஆனால் எது விடயமாக நோல்டே கூறியவை “சரி”? என்று யாருக்கும் கேள்வி எழலாம். இப்போது 91 வயதாகும் நோல்டே கூறி பொதுவாக நவ-நாஜி வெளியீடுகளில் தொடர்புபடுத்தப்படுவதாய் இருப்பதில் இருந்து கூற்றுகளை Der Spiegel மேற்கோளிடுகிறது. அவர் கூறியிருந்தார்: ”போலந்தினர் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் ஆற்றிய பாத்திரத்திற்கு இப்போதிருப்பதைக் காட்டிலும் இன்னும் கூடுதலான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நான் மிக மிகத் திட்டவட்டமாய் நம்புகிறேன். அடிக்கடி சொல்லப்படுவதைப் போல ஹிட்லர் வெறுமனே போர் செய்ய வேண்டுமென்பதற்காக போர் செய்யவில்லை. போலந்தினருடன் சோவியத்-எதிர்ப்பு கூட்டணி ஒன்றுக்குள் நுழைவது அவருக்கு விருப்பமானதாகவே இருந்திருக்கும். போலந்திற்கு எதிரான அவரது கூற்றுகள் எல்லாம் “தேசிய சோசலிச”(நாஜி)வகைப்பட்டதல்ல. மாறாக அவையெல்லாம் வைய்மார் குடியரசின் காலத்து வரலாற்றுக்கு உரியவை. போலந்து அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு ஒருவரை அனுப்பி, ஹிட்லர் விரும்பியது போல, க்டான்ஸ்கை ஜேர்மன் ரைய்கிற்கு திருப்பிக் கொடுப்பது மற்றும் ‘காரிடார்’ வழியாக பிராந்தியங்கடந்த சாலை மற்றும் ரயில் தொடர்புகளை உருவாக்கித் தருவது என்ற ’வைய்மாரின்’ கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டிருந்தால், ஹிட்லர் போலந்திற்குள் ஊடுருவியிருக்கப் போவதில்லை.” போல்ஷ்விக்குகள் சிலர் யூதர்களாய் இருந்து அதனால் ”‘குலாக்’க்கில் (அதாவது சோவியத் ஒன்றியத்தின் வதைமுகாமில்)அவர்களது சொந்தப் பங்களிப்பை”க் கொண்டிருந்தனர் என்பதால் Auschwitz க்கு சமபொறுப்பு யூதர்களுக்கும் உண்டு என நோல்டே குற்றம்சாட்டுகிறார். இத்தகைய வாதங்கள் “யூத விரோதிகளின் வாதமாக நெடுங்காலமாக இருந்து வருகிறது” என Der Spiegel பட்டவர்த்தனமாய் தெரிவிக்கிறது. இதிலிருந்து என்ன அரசியல் முடிவுகளுக்கு வரலாம் என்பதை உங்களிடமே விட்டு விடுகிறோம். கூலிக்காய் செய்யப்பட்ட சேர்விஸின் நேர்மையற்ற படைப்பு இந்த சித்திரத்தில் மிகச்சரியாகப் பொருந்துகிறது. நாஜிக்களின் குற்றத்தைக் குறைப்பதற்காக ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி ஒரு குற்றவியல் நடவடிக்கையாக கண்டனம் செய்யப்படுகிறது, அத்துடன் ஸ்ராலினின் மிக முக்கியமான மார்க்சிச எதிரியான ட்ரொட்ஸ்கி சாத்தானாய் காட்டப்படுகிறார். வரலாற்றின் தவறானதொரு சித்தரிப்பை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் ஜேர்மன் வரலாற்றின் ஒரு அதிமுக்கியமான சமயத்தில் வருகின்றன. ஜேர்மனியின் பல தசாப்த கால இராணுவ ஒதுங்கலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரமிது என்று சமீபத்தில் ஜனாதிபதி Joachim Gauck கும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரும் சமீப காலங்களில் கூறிவருவதன் உள்ளடக்கத்தில் நிறுத்தி இத்தகைய முயற்சிகளைப் பார்க்க வேண்டும். ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயிரூட்ட நாஜி சகாப்த குற்றங்களை தணித்துக் காட்டுகின்ற வகையில் வரலாற்றுக்கு ஒரு புதிய பொருள்விளக்கம் அளிக்க அவர்களுக்கு அவசியமாய் இருக்கிறது. குறிப்பிட்ட கொள்கைக்கு என குறிப்பிட்ட வழிவகைகளும் அவசியமாய் உள்ளன. எதிர்ப்பை அச்சுறுத்துவது மற்றும் அடக்குவதன் மூலமாக மட்டுமே இவ்வாறு வரலாற்றைத் திருத்தி எழுத முடியும் என்று முடிவுக்கு வந்திருப்பதையே பிப்ரவரி 12 அன்றான பார்பெரோவ்ஸ்கியின் நடத்தை காட்டியிருக்கிறது. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் கல்வியாய்வுச் சுதந்திரத்தின் மீதான பார்பெரோவ்ஸ்கியின் தாக்குதல் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தை வலது-சாரி மற்றும் இராணுவவாத பிரச்சாரத்திற்கான மையமாக மாற்ற விரும்பும் சக்திகளின் நோக்கங்களுக்கு சேவை செய்வதாக இருக்கிறது. அமெரிக்காவில் வலது-சாரி அரசியலுக்கான கல்வியாய்வு மையமாகத் திகழும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஹூவர் நிறுவனத்துடன் பார்பெரோவ்ஸ்கி நெருங்கிய தொடர்புகள் கொண்டவர் என்பது நன்கறிந்த விடயமாகும். “ஹூவர் நிறுவனம் இட்டம் போல் பரவுகின்ற” வகையாக ஹம்போல்ட் பல்கலைக்கழகம் உருமாறுவதைக் காண்பதற்கு மாணவர்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. பல்கலைக்கழகம் அத்தனை விமர்சனக் கருத்துகளையும் ஒடுக்குகின்ற ஒரு வலது-சாரி சிந்தனைக் குழாமாக இருப்பதைக் காட்டிலும் விஞ்ஞான மற்றும் கல்வியாய்வு உரைகளுக்கான மையமாய் தொடர வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி ஒழுங்கில் வைக்கப்பட வேண்டும். அறிவொளியின் ஒரு முன்னணிப் பிரதிநிதியின் பேரைத் தாங்கிய ஒரு பல்கலைக்கழகத்தில், 1933 இல் நாஜிக்கள் புத்தகங்களைக் கொளுத்திய சதுக்கத்தில் இருந்து சில பத்து மீட்டர்கள் தள்ளி அமைந்திருக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் ஜனநாயக உரிமைகளும் சுதந்திரமான கல்வியாய்வு விவாதங்களும் அலட்சியத்துடன் அணுகப்படுவது என்பது அனுமதிக்கவியலாதது ஆகும். உண்மையுடன்,
வொல்ஃப்காங்
வெபர், |
|