WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
மேல்
மாகாண சபை தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சி விஞ்ஞாபனம்
சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்!
யுத்தம்,
சிக்கனம் மற்றும் பொலிஸ்-அரச
வழிமுறைகளுக்கு எதிராக சோசலிச வேலைத் திட்டத்துக்காக போராடு!
By the Socialist Equality Party (Sri Lanka)
22 February 2014
Back to screen version
சோசலிச சமத்துவக்
கட்சி (சோசக),
மார்ச்
29
நடக்கவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திற்கு கட்சியின் அரசியல்
குழு உறுப்பினர் விலானி பீரிஸ் தலைமையில்
43
வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
எமது
பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள்
விடுக்கின்றோம்.
ஆசியாவில்
வளர்ச்சியடையும் யுத்த அச்சுறுத்தலுக்கும்,
அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் ஜனநாயக உரிமைகள்
நசுக்கப்படுவதற்கும் எதிராக சிங்களம்,
தமிழ்
மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை அணிதிரட்டும் சோசலிச மற்றும் அனைத்துலக வேலைத்
திட்டத்தை அபிவிருத்தி செய்யும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.
சோசலிச கொள்கைகளை
அமுல்படுத்தவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும்,
தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக இலங்கையில்
தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக சோசலிச சமத்துவக் கட்சி
போராடுகின்றது.
தொழிலாளர்,
விவசாயிகள்
மற்றும் இளைஞர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி இது மட்டுமே.
ஏனைய நாடுகளைப்
போலவே இலங்கையும்
1930களின்
பின்னர் காணப்பட்டிராத முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியில் மூழ்கிப் போயுள்ளதோடு,
எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் தூண்டிவிடப்பட்டுள்ள புவிசார்-அரசியல்
பதட்டங்கள் மற்றும் பகைமை என்ற பெரும் நீர்ச்சுழிக்குள் இழுக்கப்பட்டு வருகின்றது.
போலி-இடது
அமைப்புக்கள் உட்பட முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனமும்,
உலக
அரசியலில் இத்தகைய பெரும் ஆபத்தான பயங்கர மாற்றங்களைப் பற்றி தொழிலாளர்கள் மற்றும்
இளைஞர்களுக்கு இருட்டடிப்புச் செய்ய முயற்சிக்கின்றன.
முதலாம் உலக
யுத்தத்தின் பின்னர் நூறாவது ஆண்டில்,
முதலாளித்துவம் இன்னொரு அழிவுகரமான பூகோள மோதலுக்குள் மனித குலத்தை மூழ்கடிக்க
அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது.
அமெரிக்காவின்
“ஆசியாவுக்கு
மீண்டும் திரும்பும்”
திட்டம்,
குறிப்பாக
ஜப்பன்,
ஆஸ்திரேலியா
மற்றும் இந்தியாவுடன் பிராந்தியத்தில் கூட்டணிகள்,
மூலோபாய
உறவுகள் மற்றும் உடன்படிக்கைகள் ஊடாக சீனாவை தனிமைப்படுத்தி இராணுவ ரீதியில் சுற்றி
வளைப்பதை இலக்காக் கொண்டதாகும்.
ஏற்கனவே
ஆப்கானிஸ்தான்,
ஈராக்
மற்றும் லிபியாவிலும் யுத்தங்களை நடத்திய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈவிரக்கமற்ற
குற்றவியல் கொள்கைகள்,
ஆழமடைந்துவரும் உலகப் பொருளாதார நெரக்கடியினாலும் அமெரிக்காவின் சொந்த பொருளாதார
சரிவினாலும் உந்தப்படுபவையாகும்.
ஆசியாவில்
தனது தொடர்ச்சியான மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தவும் அதன் மூலம் அதன் பிரமாண்டமான
மலிவு உழைப்பு வளத்தில் இருந்து சுரண்டப்படும் இலாபத்தின் மிகப்பெரும் பங்கை
உறுதிப்படுத்தவும் சங்கற்பம் கொண்டுள்ள ஒரு நிதியக் கொள்ளைக் கும்பலின் சார்பிலேயே
வாஷிங்டன் செயற்படுகின்றது.
எந்த நாடும்
பாதுகாப்பானது அல்ல. பெய்ஜிங்குடனான உறவுக்கு முடிவுகட்ட இலங்கை அரசாங்கத்தை
நெருக்குவதில் வாஷிங்டன் உறுதியாக உள்ளது. இதற்காக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இலங்கை இராணுவம் நடத்திய அட்டூழியங்கள் பற்றி
விசாரணை நடத்துமாறு மார்ச்சில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையில்
(யுஎன்எச்ஆர்சி) மூன்றாவது தீர்மானத்தை நகர்த்த அமெரிக்கா
திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது. இலங்கையிலோ அல்லது வேறெங்காவதோ “மனித உரிமைகள்”
சம்பந்தமாக அமெரிக்காவுக்கு எந்தக் கவலையும் கிடையாது. ஆனால், சீனா சம்பந்தமாக
அமெரிக்கா விடுக்கும் கட்டளைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைவணங்காவிட்டால்,
அவர் யுத்தக் குற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளக் கூடும்.
அமெரிக்காவின்
அச்சுறுத்தல்களுக்கான இராஜபக்ஷவின் பிரதிபலிப்பு, வெற்று வாய்ச்சவடால்கள் மற்றும்
அடிமைத்தனமும் ஒன்றுகலந்ததாகும். முரண்பாடான ஆதராங்கள் குவிந்த போதும், அவர்
எந்தவொரு அட்டூழியமும் நடக்கவில்லை என மொட்டையாக மறுப்பதோடு தான் ஒரு “சர்வதேச
சதிக்குள்” அகப்பட்டுள்ளதாக கூறிக்கொள்கின்றார். அதே சமயம், இராஜபக்ஷ துண்டை
இடுப்பில் கட்டுக்கொண்டு பிரதான “சதிகாரரிடமே” சென்று, வாஷிங்டனுடனான உறவுக்கு
கெஞ்சுகிறார். அரசாங்கம் வாடகைக்கு அமர்த்திய அமெரிக்க
செல்வாக்கு
நிறுவனம் ஒன்று ஜனவரியில் அனுப்பிய கடிதத்தில், “அமெரிக்கா உடனான உறவுகள்” சீனாவை
விட “மிகவும் பலமாக அபிவிருத்தியடைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள”
கொழும்பு விரும்புகிறது, என அறிவித்திருந்தது.
அமெரிக்கா
சீனாவுக்கு எதிராக யுத்தத் தயாரிப்புகளை செய்த போதும், இலங்கையின் அனைத்து எதிர்க்
கட்சிகளும் ஏதாவதொரு வழியில் அமெரிக்காவின் “மனித உரிமைகள்” என்ற பம்மாத்துக்குப்
பின்னால் அணிதிரண்டுள்ளன. மேற்கத்தைய-சார்பு ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ),
“நாட்டை சீனாவுக்கு விற்பதாக” இராஜபக்ஷவை குற்றஞ்சாட்டுகின்றது. நாட்டின் இனவாத
யுத்தத்தை தொடக்கிவைத்ததோடு எண்ணிலடங்கா அட்டூழியங்களுக்கும் பொறுப்பான யூஎன்பீ,
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக “நம்பகமான விசாரணைக்கு” அழைப்பு விடுக்கின்றது.
போலி-இடது
அமைப்புகளான நவசமசமாஜக் கட்சி (நசசக) மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும், வலதுசாரி
யூஎன்பீ உடன் ஒரு செயல்முறை கூட்டணியில் இருப்பதோடு அமெரிக்க “மனித உரிமைகள்”
நாடகத்தை ஊக்குவிக்கும் தலைவர்களாகவும் உள்ளனர். இந்த பிரச்சார வண்டிக்குள்
பாய்ந்து ஏறிக்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முதலாளித்துவக்
கும்பல்களின் சிறப்புரிமைகளை தக்க வைத்துக்கொள்வதற்கான வழிமுறையாக, ஒரு சர்வதேச
விசாரணைக்கு அழைப்பு விடுக்கின்றது. யூஎன்பீ போலவே, முன்னால் இராணுவத் தளபதி சரத்
பொன்சேகாவால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியும், சீனாவுக்கு எதிராக அமெரிக்காவை
ஆதரிக்கப் பரிந்துரைக்கின்றது.
இந்த சகல
கட்சிகளுக்கும் எதிராக, சோசக, நான்காம் அகிலத்தின் அனைத்தலகக் குழுவின் ஏனைய
சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, ஏகாதிபத்திய யுத்தத்தின் தோற்றுவாயான இலாப அமைப்பை
தூக்கிவீசுவதை இலக்கக் கொண்ட, ஒரு ஐக்கியப்பட்ட யுத்த-விரோத இயக்கத்தில் சர்வதேசிய
தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் போராடுகின்றது. யுத்தத்துக்கான உந்துதலை
நிறுத்துவதற்கு பொருத்தமான ஒரே மூலோபாயம் உலக சோசலிசப் புரட்சியே ஆகும்.
இந்தப்
போராட்டத்தில் எம்முடன் இணையுமாறு இலங்கையிலும் தெற்காசியா பூராவும் உள்ள
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசக அழைப்பு விடுக்கின்றது. சகல முதலாளித்துவ
கன்னைகளிலும் இருந்து சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு யுத்த-விரோத இயக்கத்தை
கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தக் குற்றவாளிகளை
ஆதரிக்காதே! வாஷிங்டனின் மனித உரிமைகள் என்ற போலி நாடகத்தை ஆதரிக்காதே! என நாம்
கோருகிறோம்.
அரசாங்கத்தின்
சிக்கன முயற்சிகளை எதிர்த்திடு
2009ல் புலிகளின்
தோல்வியின் பின்னர், இராஜபக்ஷ ஒரு புதிய “பொருளாதார யுத்தத்தை” அறிவித்தார். சரியாக
இதையே அவரது அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கும் வறியவர்களுக்கும் எதிராக
முன்னெடுக்கின்றது. தடங்களற்ற சுரண்டலுக்கு வழியமைப்பதற்காக, தொழிலாள வர்க்கம்
கடந்த காலத்தில் வென்ற அனைத்து சமூக நன்மைகளையும் இல்லாமல் ஆக்குவதன் மூலம், பூகோள
பொருளாதார நெருக்கடியின் சுமைகளை அதன் மீது திணிக்குமாறு, சர்வதேச நிதி மூலதனம்
உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்களிடம் கோருகின்றது.
நெருங்கிவரும்
சென்மதி நிலுவை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியத்தின்
அனைத்து கோரிக்கைகளையும் அமுல்படுத்துகின்றார். அரசாங்கம், 2009ல் மொத்த தேசிய
உற்பத்தியில் கிட்டத்தட்ட 10 சதவீதமாக இருந்த வரவு-செலவு
பற்றாக்குறையை, 2013ல் திட்டமிட்டு 5.8 வீதம் வரை குறைத்ததோடு 2016ல் அதை 3.8
வீதமாக குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இராஜபக்ஷ பெரும்
வர்த்தகர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் சலுகைகளையும் வரி வெட்டுக்களையும்
கொடுத்தமை, சிக்கன நடவடிக்கைகளின் முழுச் சுமையும் உழைக்கும் மக்கள் மீது
ஏற்றப்படும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. அரசாங்கம் உயர்ந்த வரிகளைத் திணித்து,
மானியங்களை வெட்டிக் குறைத்ததன் மூலம் விலைவாசியை உயர்த்தியதோடு இலவச சுகாதார சேவை
மற்றும் இலவச கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஆழமான சீரழிவை
ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.
கொழும்பு
நகரத்தில், அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் செலவில் தலைநகரை தெற்காசியாவின் வர்த்தக
மையமாகவும் செல்வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விளையாட்டு திடலாகவும் ஆக்குவதற்கான
அதன் பிரமாண்டமான திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. சர்வதேசிய
முதலீட்டாளர்களை ஈர்க்கும் அவநம்பிக்கையான முயற்சியில் புதிய வீதிகள், அலுவலக
கோபுரங்கள், ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் அடுக்கு மனைகளுக்கும் வழியமைப்பதற்காக,
70,000க்கும் மேற்பட்ட குடிசைவாழ் குடும்பங்களை அவர்களது வீடுகளில் இருந்து
வெளியேற்றுகின்றது.
பணக்காரர்களுக்கும்
வறிவர்களுக்கும் இடையிலான சமூகப் பிளவு அகலமாகி வருகின்றது. ஜனத்தொகையில் அதி
செல்வந்த 20 வீதத்தினர், தேசிய வருமானத்தில் 53 சதவீதத்தை பெறும் அதேவேளை, மிக வறிய
20 வீதத்தினர் 4.4 வீதத்தை மட்டுமே பெறுகின்றனர் என அண்மைய புள்ளிவிபரங்கள்
காட்டுகின்றன.
சமூக
வெடிப்பையிட்டு பீதிகொண்டுள்ள அரசாங்கம், உள்நாட்டு யுத்தத்தின் போது
கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரத்தை தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகப்
பயன்படுத்துவதற்குத் தயாராகின்றது. இராணுவ வலைத் தளத்தில் அண்மையில்
வெளியானவற்றில், வெகுஜன ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்காக படையினரும் பொலிஸ்
கொமாண்டோக்களும் பயிற்றப்படும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “திடீர்
எழுச்சி மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை குறைந்தபட்ச பலத்தைக்கொண்டு
தணிப்பதற்கான ஒரு உள்ளக பாதுகாப்பு நடவடிக்கையே வன்முறை கட்டுப்பாடு” என அந்த
இணையம் சுட்டிக் காட்டியுள்ளது.
“குறைந்தபட்ச பலம்”
என்பதன் அர்த்தம் ஏற்கனவே தெளிவாகியுள்ளது. 2011 மே மாதம், ஆயுதம் ஏந்திய பொலிசார்,
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது சுட்டதில் ஒரு
தொழிலாளி கொல்லப்பட்டார். 2012ல், எண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிராக மீனவர்கள்
நடத்திய ஊர்வலத்தின் போது, பொலிஸ் கொமாண்டோக்கள் ஒருவரைக் கொன்றனர். கடந்த
ஆகஸ்ட்டில், வெலிவேரிய பிரதேசத்தின் தண்ணீர் விநியோகத்தில் தொழிற்துறை
மாசுபடுத்தலுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பாய்ந்த இராணுவத்தினர்,
மூன்று இளைஞர்களை கொன்றனர்.
அதே சமயம்,
இராஜபக்ஷ அரசாங்கம், 1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே எல்லா அரசாங்கங்களும்
செய்ததைப் போலவே, உழைக்கும் மக்களை பிளவுபடுத்த, இனவாதத்தையும் தேசியவாதத்தையும்
கிளறிவிடும் பிற்போக்கு வழிமுறையை நாடுவதன் மூலமே, அதன் ஆட்சியைத் தூக்கி நிறுத்த
முயற்சிக்கின்றது. புலிகள் இராணுவத் தோல்வியடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னரும்,
இராஜபக்ஷ “புலி பயங்கரவாதம்” மீண்டும் தலைதூக்குகிறது எனக் கூறி தமிழர்-விரோத
உணர்வை தொடர்ந்தும் கிளறிவிடுகின்றார்.
அரசாங்கமானது பொது
பலசேனா, சிங்கள ராவய மற்றும் ராவனா பலகாய போன்ற பாசிச பௌத்த அமைப்புக்களையும் ஊட்டி
வளர்க்கின்றது. 1930களில் ஜேர்மனியில் நாசி தாக்குதல் துருப்புக்களைப் போல்
இயங்கும் இந்தக் கருவிகள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும்
கிறிஸ்தவ தேவாலயங்களையும் இலக்குவைத்து தாக்குதல் நடத்துகின்றன. எதிர்காலத்தில்
இந்தக் குண்டர்கள் எதிர்ப்பு போராட்டம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள்
மீது திரும்புவர்.
தொழிலாள
வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக
முதலாளித்துவத்தின்
அனைத்து கன்னைகளிலும் இருந்து தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொள்ளாமல்
தொழிலாள வர்க்கத்தால் அதன் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க முடியாது. ஒட்டு மொத்த
கொழும்பு ஸ்தாபனமும், இலாப அமைப்பின் நெருக்கடிக்கு உழைக்கும் மக்களை விலை
கொடுக்கச் செய்ய ஐக்கியப்பட்டுள்ளன.
இலங்கையில் மிகப்
பழைய முதாலளித்துவக் கட்சியான யூஎன்பீ, பெரும் வர்த்தகர்களின் நலன்களுக்காக
செயற்படுவதில் நீண்ட சாதனை படைத்துள்ளது. அது 1978ல் சுதந்திர-சந்தை மறுசீரமைப்பு
வேலைத் திட்டத்தை தொடங்கியதோடு அது ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தொழிலாள
வர்க்கத்துக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டத்தை இடைவிடாமல் அமுல்படுத்தியது. யூஎன்பீ
ஆட்சிக்கு வருமெனில், அது வாழ்க்கைத் தரத்தின் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின்
தாக்குதல்களை மேலும் கொடூரமாக முன்னெடுக்கும்.
2005ல் இராஜபக்ஷவை
ஆட்சிக்கு கொணர்ந்ததோடு அவரது குற்றவியல் யுத்தத்தை உச்சம் வரை ஆதரித்த மக்கள்
விடுதலை முன்னணி (ஜேவிபீ), தனது சோசலிச பாசாங்குகள் அனைத்தையும் கைவிட்டுள்ளதுடன்
தன்னை யோக்கியமான முதலாளித்துவ கட்சியாக காட்டிக்கொள்கின்றது. அது இப்போது
சுத்தமான, நியாயமான, ஜனநாயகமான மற்றும் ஊழல் அற்ற முதலாளித்துவ ஆட்சியின்
பரிந்துரையாளனாக தோரணை செய்கின்றது.
ஜேவிபீயின்
வேலைத்திட்ட ஆவணமான எமது நோக்கு, “புதிய சோசலிச கொள்கைகளின்” கீழ் “ஒரு
நவீனமயப்படுத்தப்பட்ட மற்றும் தொழிற்துறைமயப்படுத்தப்பட்ட நாட்டுக்கு” அழைப்பு
விடுக்கின்றது. ஆனால், “சோசலிசத்தை” பற்றி ஜேவிபீ பேசும்போது, அது “சீன மாதிரியையே”
அர்த்தப்படுத்துகின்றது –வேறு வார்த்தைகளில் சொன்னால், வெளிநாட்டு
முதலீட்டாளர்களுக்கான ஒரு மலிவு உழைப்புத் தளமாகும். இலங்கையை “சர்வதேச ரீதியில்
போட்டித்தன்மை உடையதாக்குவதற்கு” எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதை
நிறுபிப்பதற்காக, ஜேவிபீ பெரும் வர்த்தகர்களுக்கு 5 சதவீத வரிச் சலுகையை
வழங்குகின்றது.
போலி இடதுகளான
நவசமசமாஜ மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் தேர்தல் கூட்டணி ஒன்றை
அமைத்துக்கொண்டிருந்தாலும், அவை யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்
யூஎன்பீ அரசாங்கத்துக்கும் ஊக்க குரல் கொடுக்கும் தலைவர்களாகவே செயற்படும். ஐக்கிய
சோசலிசக் கட்சி, ஒரு வலதுசாரி முதலாளித்துவக் கட்சிக்காக வெட்கமின்றி பிரச்சாரம்
செய்கின்றது என்ற உண்மையை, யூஎன்பீ பற்றிய அதன் அற்ப விமர்சனங்களின் மூலம்
மறைத்துவிட முடியாது. ஒரு தசாப்தத்துக்கு முன்னர்தான், சந்தர்ப்பவாத நவசமசமாஜவும்
ஐக்கிய சோசலிசக் கட்சியும், இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தமது
ஆதரவை நியாயப்படுத்துவதற்காக யூஎன்பீயை கண்டனம் செய்தன.
ஜேவிபீயில் இருந்து
பிரிந்து சென்ற முன்னிலை சோசலிசக் கட்சி (முசோக), இந்த தேர்தலில்
போட்டியிடாவிட்டாலும், அது தொழிலாள வர்க்கத்துக்கு ஆபத்தான புதிய அரசியல் பொறி
ஒன்றை உருவாக்குகின்றது. அது கிரேக்கத்தில் சிரிசா அமைப்பின் வழியில் நவசமசமாஜ,
ஐக்கிய சோசலிச கட்சி, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய போலி இடது குழுக்களுடன்
ஒரு மீள்குழுவாக்கத்துக்கு முயற்சிக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, கொடூரமான
சிக்கன நடவடிக்கைகளை திணிக்கக் கோரும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதை
அமுல்படுத்தும் கிரேக்க அரசாங்கத்துக்கும் எதிரான தொழிலாளர்களின் அரசியல்
போராட்டத்தை தடுப்பதே சிரிசாவின் வகிபாகமாகும். முசோக, இலங்கையில் ஆளும்
வர்க்கத்துக்காக இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட தயாராகின்றது.
சோசலிச சமத்துவக்
கட்சியை ஆதரிப்பீர்
இத்தகைய சகல
கட்சிகளுக்கும் எதிராக, முதலாளித்துவத்தைத் தூக்கி வீசி, ஒரு சில செல்வந்தர்களின்
இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மை மக்களின் அவசர சமூகத் தேவைகளை அடையக் கூடிய, உலக
ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்காக, தொழிலாள
வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியத்துக்காக சோசக போராடுகின்றது. இலங்கையில் அழிவுகரமான
26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை தூண்டிய, சகல வடிவிலுமான தேசியவாதம் மற்றும்
பேரினவாதத்தையும் நிராகரிக்குமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு
விடுக்கின்றோம்.
தொழிலாளர்கள்,
விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் தேவைகளை இட்டு நிரப்பக் கூடியவாறு முதலாளித்துவத்தை
சீர்திருத்த முடியாது. இதனாலேயே தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிச
குடியரசுகளின் ஒன்றியத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச
குடியரசு என்ற வடிவில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காக சோசக
போராடுகின்றது.
நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசக, லியோன் ட்ரொட்ஸ்கியின்
நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நிரந்தரப் புரட்சியானது
இலங்கை போன்ற முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்து போன நாடுகளில் உள்ள
முதலாளித்துவம், ஜனநாயகத்துக்கான எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்க இயல்பிலேயே
இலாயக்கற்றது என்பதை வெளிக்கொணர்ந்துள்ளது. அந்தப் பணி, சோசலிசத்துக்கான
போராட்டத்தின் பாகமாக, தொழிலாள வர்க்கத்தின் மீதே சுமத்தப்படுகிறது.
சோசலிச சமத்துவக்
கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (புகக), 1964ல் லங்கா சமசமாஜக்
கட்சி சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் சேர்ந்து, சோசலிச
அனைத்துலகவாதத்தின் அடிப்படை கொள்கைகளை காட்டிக்கொடுத்ததற்கு எதிரான அரசியல்
போராட்டத்தில் 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது.
ஆரம்பத்தில்
இருந்தே, கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த இனவாத யுத்தத்தை எதிர்த்து, தீவின்
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை வெளியேற்றுமாறு கோரிய ஒரே கட்சி
சோசக/புகக மட்டுமே ஆகும். இந்த யுத்தம் வெறுமனே தமிழர்களுக்கு எதிராக மட்டும்
இலக்கு வைக்கப்பட்டதல்ல, மாறாக ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராக இலக்கு
வைக்கப்பட்டது என நாம் எப்போதும் எச்சரித்து வந்துள்ளோம். கொழும்பு அரசாங்கங்களின்
சிங்கள மேலாதிக்கவாதத்தை எதிர்க்கும் அதேவேளை, முதலாளித்துவ தமிழ் அரசுக்கான
புலிகளின் பிரிவினைவாத முன்னோக்கையும் நிராகரிப்பதன் மூலம், சோசலிச சமத்துவக் கட்சி
தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடியுள்ளது.
எமது கட்சி, 1917
ரஷ்யப் புரட்சியில் லெனினின் துணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல்
தத்துவார்த்த மரபுரிமையை அடிப்படையாகக் கொண்டது. தொழிலாள வர்க்கத்தின்
தலைமைத்துவத்துக்கான வரலாற்று நெருக்கடியை தீர்ப்பதன் பேரில், ஸ்ராலினிச
அதிகாரத்துவத்துக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்திலேயே லியோன் ட்ரொட்ஸ்கி 1938ல்
நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார்.
எமது தேர்தல்
பிரச்சாரத்துக்கு நிதி வழங்கியும், எமது தேர்தல் கூட்டங்களில் பங்குபற்றியும்
கொழும்பில் எமது பிரச்சாரக் குழுக்களில் இணைந்தும் எமது பிரச்சாரத்துக்கு
ஆதரவளிக்குமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும்
வேண்டுகோள் விடுக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, எமது அரசியல் முன்னோக்கு
மற்றும் வேலைத் திட்டத்தை கவனமாக படிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள
வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகரக் கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணைய
விண்ணப்பிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம். |