World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German Left Party defends the European Union at party conference ஜேர்மனிய இடது கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தை கட்சி மாநாட்டில் பாதுகாக்கிறது
By Johannes Stern ஹாம்பேர்க்கில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இடது கட்சியின் மாநாடு ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஆளும் உயரடுக்கிற்கு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது. இக்கட்சி அதன் உறுதியான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொடுத்து, பெருகும் மக்கள் எதிர்ப்பிற்கு இடையே அதை பாதுகாக்க தான் தயாராக இருப்பதை அடையாளம் காட்டியுள்ளது. இம்மாநாடு இடது கட்சியின் அனைத்துப் பிரிவுகளும், போக்குகளும் இப்பிரச்சினையில் ஒன்றாக உள்ளன என்னும் உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரதிநிதிகள் ஒரு வரைவு வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அதன் ஆதரவு குறித்த சந்தேகம் எதையும் விட்டுவைக்கவில்லை. இத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளிப்படையான ஆதரவு தரும் வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது. பிரதிநிதிகள் வாக்குகளில் 76.5%ஐ பெற்ற தற்போதைய ஐரோப்பிய ஐக்கிய இடது/நோர்டிக் பசுமை இடது பிரிவு (European United Left/Nordic Green Left fraction) ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலைவரான காபி சிம்மர், (கிழக்கு ஜேர்மனியில் ஸ்ராலினிச அரசாங்கக் கட்சியின் பின்தோன்றலான முன்னாள் ஜனநாயக சோசலிச கட்சியின் (PDS) தலைவர் ) ஐரோப்பியத் தேர்தல்களில் முக்கிய வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைப் பட்டியலில் தொடர்ந்தவர்களான தோமஸ் ஹாண்டேல், கொர்னேலியா ஏர்னெஸ்ட், மற்றும் ஹெல்முட் ஷோல்ஸ் ஆகியோர் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் நீண்டகால உறுப்பினர்கள் ஆவர். தன்னுடைய உரையில், சிம்மர் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பற்றி ஒரு மோசமான சித்திரத்தை முன்வைப்பதற்கு எதிராகக் கூறினார்: அதாவது “ஐரோப்பிய ஒன்றியத்துடன் எவருக்கும் எவ்வித தொடர்புமில்லை” என்று கூறுவதற்கு எதிராக. இடது கட்சி “இந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்காக” போராட வேண்டி இருந்தது, ஏனெனில் “குடிமக்களுக்கும், ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்துக்கும், அதன் அங்கத்துவ நாடுகளுக்கும் இடையேயுள்ள நம்பிக்கையின்மை இப்பொழுது இருப்பது போல் எப்பொழுதும் பெரிதாக இருந்ததில்லை.” இடது கட்சித் தலைவர் கிரிகோர் கீசி ஐரோப்பிய ஒன்றியத்தைக் பாதுகாக்கும் பிரச்சினையில், அனைத்து இடது கட்சிப் பிரிவுகளும் ஒன்றுபட்டுள்ளன என்றார். மாநாட்டிற்கு முன்பு இருந்த முரண்பாடுகள் அனைத்தும் தெளிவாக்கப்பட்டுவிட்டன என்றார் அவர். உண்மையில், அது உள்ளடக்கத்தை பற்றிய முரண்பாடு அல்ல “மாறாக சில துரதிருஷ்டமான வரைவிலக்கணங்கள் இருந்தன, நாங்கள் அவற்றைக் கடந்து விட்டோம்.” என்றார். முதல் வரைவுத் திட்டத்திற்கு அறிமுகம் என்பதில் ஒரு பத்தியைக் குறித்த முரண்பாட்டை கீசி குறிப்பிட்டார். அது ஐரோப்பிய ஒன்றியத்தை “புதியதாராளவாத, இராணுவவாத, தீவிர ஜனநாயகமற்ற சக்தி” என விவரித்திருந்தது. ஆரம்பத்தில் கட்சி மாநாட்டில் முற்றிலும் புதிய மறுவரைவு செய்யப்பட்ட அறிமுகத்தை முன்வைப்பதற்கு முன் கட்சித் தலைமை இதை அகற்றியது. இப்போது ஏற்கப்பட்ட வரைவின் உள்ளடக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பற்றிய விமர்சன வரைவிலக்கணங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, “ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கியத்திற்கான ஒரு உண்மையான சமூகமாக வளர்க்கப்பட வேண்டும்” என அழைப்பு விடுத்தது. ஐரோப்பிய ஒன்றியம் “சமாதானம், சமூக அமைதி போன்றவற்றை தோற்றுவிக்கும் இலக்கை இழந்துவிட்டது.” என அது மேலும் குறிப்பிட்டது. இந்த அறிக்கைகள் இடது கட்சியின் இழிந்த, வலதுசாரித் தன்மை குறித்து நிறையக் கூறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மக்களின் நலன்கள் பற்றிய “இலக்கை இழந்துவிடவில்லை”, மாறாக அவற்றிற்கு முற்றிலும் எதிராக உள்ளது. ஐரோப்பிய ஆளும் வர்க்கம், ஐரோப்பிய ஒன்றியம் என்னும் அமைப்பின் மூலம் தொழிலாள வர்க்கம் போராடிப்பெற்ற அனைத்து ஜனநாயக, சமூக உரிமைகளை அழிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் பாரிய வேலையின்மை, புதிய காலனித்துவப்போர்கள் மற்றும் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய முற்படும் ஆயிரக்கணக்கான குடியேறுவோர் இறப்பு ஆகியவற்றிற்கு மறு பெயராகும். இந்த ஐரோப்பிய ஒன்றிய சார்பு வேலைத்திட்டம், ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புப் பிரிவு என்று கட்சியில் அழைக்கப்படும் பிரிவாலும் ஆதரிக்கப்படுகிறது. துணைத் தலைவர் சாரா வாகென்நெக்ட், புதிய வரைவிற்கு ஆதரவைக் கொடுத்து அது “சமப்படுத்தப்பட்ட வேட்பாளர் பட்டியல்” என்று பாராட்டினார். இடது கட்சிக்கு நெருக்கமான நாளேடான Junge Welt இற்கு திங்கள் பதிப்பிற்கு கொடுத்த நேர்காணலில் அவர் யூரோ இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று தான் ஒருபோதும் விரும்பவில்லை என்றார். ஐரோப்பிய எதிர்ப்பு வரைவை முன்வைத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வொல்ப்காங் கேர்க்க மற்றும் டீட்டர் டேமும் வாக்கெடுப்பிற்கு முன் உத்தியோகபூர்வமாக அதைத் திரும்பப் பெற்றனர். கட்சியின் இடது என்று தவறாக கூறிக்கொள்ளப்படும், ஐரோப்பிய ஒன்றியத்தினை விமர்சிப்போரின் நிலைப்பாடு, ஆரம்ப வரைவு வேலைத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொள்கையளவில் எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதைக் காட்டுகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆதரவு என்பது, அதிகரிக்கும் மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் தங்கள் திறைமையை மட்டுப்படுத்திவிடும் என்னும் கட்சியின் ஒரு பிரிவினரிடேயேயுள்ள அச்சத்தைத்தான் பிரதிபலிக்கிறது. கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஆற்றிய உரைகள், இடது கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிப்பது அதன் ஜனநாயக விரோத, சமூக விரோத இராணுவக் கொள்கைகளுக்காகவே ஒழிய அது அவற்றிக்கு எதிரானதால் அல்ல என்பதை தெளிவாக காட்டுகின்றது. ஜேர்மனிய பாராளுமன்றத்தில் மற்ற கட்சிகளுடன் பொதுவாக, இடது கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தைத் தன் பொருளாதார, பூகோள அரசியல் நலன்களை பயன்படுத்தும் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் நலன்களைக் பாதுகாக்கிறது. கீசி பின்வருமாறு வலியுறுத்தினார்: “ஐரோப்பிய ஒருங்கிணைப்பின் மூலக்கருத்தான அது ஓர் இடது, மனிதாபிமானக் கருத்து என்பதை அதன் தவறான நண்பர்கள் விமர்சிப்பதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதுவும் நம் பணிதான். ஆனால் ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பாவையும் கொண்டுள்ளது. அதில் ரஷ்யாவும் அடக்கம். நாம் முழு ஐரோப்பாவையும் விரும்புகிறோம்.” அதே நேரத்தில் அவர் யூரோவின் உடைவு ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கு ஒரு பின்னோக்கிய படியாக இருக்கும் என்று எச்சரித்தார். இதை “நாம் குறிப்பாக விரும்பவில்லை.” தேசிய நாணயங்கள் மறுபடி அறிமுகப்படுத்தப்படுதல் ஊக வாணிபத்தை எளிதாக்கி, “சமூகச் சரிவை தீவிரமாக விரைவுபடுத்தும்”, “ஜேர்மனியின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடுமையான இடர்பாடுகளைக் கருத்திற்கொள்ள நேரிடும். எனவே நான் உங்களுக்குக் கூறுவேன்: வேண்டாம், நாமும் யூரோவைக் காப்பாற்ற வேண்டும்.” வாடிக்கையான வெறுப்பான இழிந்த முறையில் அவர் இடது கட்சி ஜேர்மனிய, ஐரோப்பிய நலன்களைக் பாதுகாக்க இராணுவ வழிவகைகளை ஆதரிக்கும் வகையில் பேசும் என்றார். “அசாதாரண கருத்துக்களுக்கு நான் முற்றிலும் ஆதரவு தருபவன். ஒருமுறை எவரோ என்னிடம் கூறினார்: அனைத்து தேசியப் படைகளும் அணுவாயுதங்களும் இல்லாதொழிக்கப்பட்டால், ஒரு சிறிய ஐரோப்பிய ஒன்றிய இராணுவம் ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றார்? அது கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது. அதுகூட விவாதிக்கப்படலாம்.” கட்சித் தலைவர் கத்ஜா கிப்பிங் ஒரு படி மேலே சென்றார். அவர் ஜேர்மனிய இராணுவவாதம் ஆபிரிக்காவிலும் மற்றும் பிற பகுதிகளில் மீண்டும் எழுச்சி பெற அழுத்தம் கொடுக்கும் புதிய பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வான் டெர் லையனை ஆதரித்தார். வான் டெர் லையன் நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு மந்திரி என நியமிக்கப்பட்டபோது, “அலையென விமர்சனங்கள் எழுந்தன. அதில் நாம் நல்ல காரணத்திற்காக பங்கு கொள்ளவில்லை” என்றார் கிப்பிங். “இந்நிலையில் பணியாற்ற இராணுவத்தில் உழைத்திருக்க வேண்டிய தேவையில்லை. இது பெண்களுக்கும் பொருத்தம்தான். இராணுவவாத ஆண் தளபதிகள் இப்பொழுது தங்கள் தலைவராக ஒரு பெண்ணைக் கொண்டிருக்கின்றனர் என்னும் கருத்து எனக்கு புன்சிரிப்பை தருகிறது.” கிப்பிங்கின் அறிக்கைகள், இடதுகட்சியாலும் அதன் போலி இடது ஆதரவாளர்களாலும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாள அரசியலின் பிற்போக்குத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. இடது கட்சி, பாதுகாப்பு அமைச்சரகத்தை ஒரு பெண் முதல் தடவையாக வழிநடத்துகின்றார் என்ற உண்மையைப் பயன்படுத்தி, ஜேர்மனிய இராணுவவாதத்திற்கு ஆதரவு கொடுக்கிறது. ஏதோ இது ஜேர்மனியிலும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு ஓர் ஆண் அல்லது பெண் உலக அரங்கில் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தியத்தின் மீள்வருகையை ஒழுங்கு செய்வது சிறிதளவு வித்தியாசத்தை கொடுக்கும் என்ற கருத்தில். ஐரோப்பிய கட்சி மாநாடு இடது கட்சி வலதிற்கு இன்னும் தீவிர திருப்பம் கொண்டுள்ளதைக் குறிக்கிறது. ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் வெடிக்கும் தன்மை உடைய அரசியல், சமூக நிலைமையில், இடது கட்சி அரசாங்கப் பொறுப்பை எடுத்துக் கொள்ளத் தயாராகவும் மற்றும் முதலாளித்துவத்தின் போர், சிக்கனம் என்னும் செல்வாக்கற்ற கொள்கைகளை முடுக்கிவிடத் தயாராக உள்ளது. கடந்த காலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதும் ஜேர்மனிய இராணுவம் வெளி இராணுவத் தலையீடுகளைச் செய்வதும் இடது கட்சி தேசிய மட்டத்தில் கூட்டணியில் பங்கு பெறுவதற்குத் தடையாக இருந்தன. இடது கட்சி தன் விமர்சனங்களை கிட்டத்தட்ட முழுமையாக விழுங்கிவிட்டது, ஆளும் உயரடுக்கில் இருந்து பாராட்டையும் பெற்றுள்ளது. Zeit Online கட்சி மாநாட்டை “அரசாங்கத்தில் பங்கு பெறுதல் என்னும் திசையில் ஒரு படி” என்று விவரித்துள்ளது. சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) துணைத்தலைவர் ரால்ப் ஸ்ரேக்னெர் Leipziger Volkszeitung பத்திரிகையில் இடது கட்சியின் “தலைமை மட்டத்தில் வழக்கமான கலந்துரையாடலுக்கு தொடர்புகொள்வதற்கு ” ஆதரவு தெரிவித்துள்ளார். சமூக ஜனநாயகக் கட்சி 2017 தேர்தல் பிரச்சாரத்தில் “அங்கேலா மேர்க்கெல் அகற்றப்பட வேண்டும்” என்னும் இலக்குடன் நுழைய வேண்டும்.” இடது கட்சியை ஒரு தடையாக கருதாவிட்டால், அவர்கள் ஒரு சாத்தியமான பங்காளி” என அவர் குறிப்பிட்டார். கீசி அல்லது டீட்மார் பார்ட்ஷ் போன்ற நம்பிக்கையான பங்காளிகளுடன் விவாதங்கள் விரைவில் தொடங்க வேண்டும் என்று அவர் சேர்த்துக் கொண்டார். |
|