தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Canadian NDP MP harassed by Sri Lankan authorities கனேடிய புதிய ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை அதிகாரிகளால் தொந்தரவுக்குள்ளானார்
By Athiyan Silva Use this version to print| Send feedback புதிய ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், தனது பிறந்த நாடான இலங்கைக்கு அண்மையில் தனிப்பட்ட தேவைக்காக சென்றிருந்தபோது, இலங்கை அதிகாரிகளால் அவர் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவரை அவர்கள் அரசியல் ரீதியில் அச்சுறுத்த முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 28 இலங்கை வந்த குறுகிய நேரத்தில், தன்னைப் பின்தொடர்வதாக ஊடகங்களிடம் புகார் செய்த சிற்சபேசன், "தான் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படலாம்" என்றும் எச்சரித்தார். ஒரு சமயம் அவர் இலங்கை "பயங்கரவாத” புலனாய்வாளர்களால் அவரது ஹோட்டல் அறையிலேயே முடக்கி வைக்கப்பட்டிருந்தார். "தாம் முன்னர் கூறியது போன்ற ஒரு கைது உத்தரவு என் பெயரில் இல்லை என இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக, கனேடிய தூதரகத்திடம் இருந்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது” என்று பின்னர் சிற்சபேசன் தெரிவித்தார். தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக இலங்கை அரசு முன்னெடுத்த மூன்று தசாப்த கால நீண்ட இனவாத உள்நாட்டு யுத்தத்தின் மத்தியில், தனது குடும்பத்துடன் இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற சிற்சபேசன், 2011 முதல் டொரன்டோ பகுதியின், ஸ்கார்பரோ-ரௌக் ரிவர் தொகுதியின், புதிய ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார். அவர் தேர்வுசெய்யப்படுவதற்கு முன்னதாக, கட்சியின் மறைந்த தலைவர் ஜாக் லேடனின் ஆலோசகராக பணியாற்றினார். தொழிற்சங்க ஆதரவிலான புதிய ஜனநாயக கட்சி (NDP), ஒரு ஏகாதிபத்திய சார்பு, சிக்கன சார்பு கட்சியாகும். அது, லிபியாவில் "ஆட்சி மாற்றம்" ஒன்றுக்காக நேட்டோ 2011ல் முன்னெடுத்த யுத்தம் மற்றும் ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சி எதிர்ப்பு யுத்தத்தில் கனடாவின் ஆயுத படைகள் ஆற்றிய முக்கிய பாத்திரம் உட்பட, அமெரிக்க தலைமையிலான ஒரு தொடர் போர்களில் கனடாவின் பங்களிப்பை ஆதரித்து வந்துள்ளது. ஒரு போலியான "இடது" கட்சியான என்டிபீ, வெளிப்படையாகவே அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியுடனான இணக்கத்தை பற்றி பெருமையாக பேசுகிறது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் கனடாவின் ஆளும் தட்டு போல், என்டிபீயும், 2005ல் இருந்து பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அனைத்து யுத்த நடவடிக்கைகள் மற்றும் சமாதான பேச்சுவார்த்தைகளை கவிழ்க்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு கொடுத்தது. போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி, 2009ல் டொராண்டோவில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் தெருக்களுக்கு வந்த போது, புதிய ஜனநாயகக் கட்சி மௌனமாக இருந்தது. தனது இலங்கை விஜயத்தின் போது, சிற்சபேசன் பெருமளவில் தமிழ் பேசும் வட மாகாணத்திற்கு பயணம் செய்தார். அங்கு, குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் ஐக்கியப்பட்டிருந்ததற்கும் மேலாக, இனத்தை தளமாகக் கொண்ட வலதுசாரி தமிழ் முதலாளித்துவ கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் மத மற்றும் "சிவில் சமூக" தலைவர்களையும் சந்தித்தார். அவர் யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் மோசமான நிலைமையில் தொடர்ந்தும் வாழத் தள்ளப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கியுள்ள, யாழ்ப்பாண மாவட்ட வலிகாமம் வடக்கு அகதிகள் முகாமையும் பார்வையிட்டார். சிற்சபேசன் மீதான இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தலானது, யுத்தத்தின் போது அது ஏற்பாடு செய்து ஒப்புதலளித்த யுத்த குற்றங்களையும் தமிழ் சிறுபான்மையினரின் மீதான அதன் தொடர்ச்சியான அடக்குமுறைகளையும் மூடி மறைப்பதற்கான அதன் பிரச்சாரத்தின் ஒரு பாகமாகும். ஐக்கிய நாடுகள் சபையின்படி, 2009ல் போரின் இறுதி கட்டத்தில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் தலைமையிலான இலங்கை இராணுவத்தினால், குறைந்தபட்சம் 40,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், இராணுவத்தின் திட்டமிட்ட கண்மூடித்தனமான ஷெல் மற்றும் குண்டு தாக்குதல் கொள்கையின் விளைவாக கொல்லப்பட்டவர்கள் ஆவர். இலங்கை இராணுவம், சரணடைந்த விடுதலை புலி போராளிகளையும் மரணதண்டனை பாணியில் கொலை செய்திருந்தது. தீவில் "சமாதானத்தை" நிலைநிறுத்தும் இலங்கை அரசாங்கத்தின் வாய்ச்சவடால்கள் அப்பட்டமான பொய் ஆகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தொடர்ந்தும் இருக்கின்றன. அரசாங்கம் தமிழ் மற்றும் சிங்கள அரசாங்க எதிர்ப்பாளர்களை மிரட்டுவதற்காக, சித்திரவதை மற்றும் எதேச்சதிகாரமான கைதுகளுக்கு பேர்போன பயங்கரவாத புலனாய்வு துறையை தொடர்ந்தும் பயன்படுத்துகிறது. பத்திரிகையாளர்கள் மற்றும் சிற்சபேசன் போன்ற தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் உட்பட வெளிநாட்டுப் பிரஜைகள், யுத்தத்தின் கடைசி நாட்களில் இராணுவம் எப்படி யுத்தத்தை முன்னெடுத்தது என்பது பற்றியும் தமிழ் சிறுபான்மையினரின் தொடர்ச்சியான அவலம் பற்றியும் அறிந்துகொள்ளக் கூடியவாறு, இலங்கையில் சுதந்திரமாக நடமாடுவதை தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு, நியூசிலாந்து பசுமை கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜன் லோகி, ஆஸ்திரேலிய பசுமை கட்சியின் செனட்டர் லீ ரெஹினொன் ஆகியோர் தங்களுடைய சுற்றுலா விசாக்களின் விதிகளை மீறியதாகவும் அரசாங்க-விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டனர் தொழிலாளர்கள், சிற்சபேசன் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் பயமுறுத்தல்களையும் மற்றும் மேலும் முக்கியமாக தமிழ் சிறுபான்மையினரை இலங்கை அரசு தொடர்ந்தும் அலட்சியமாக நடத்துவதையும் எதிர்க்கும் அதேவேளை, அமெரிக்க மற்றும் கனேடிய அரசாங்கங்களதும் ஆளும் தட்டுக்களதும் பிற்போக்கு புவிசார் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களுடன் தம்மை கட்டிப்போட முயற்சிக்கும் புதிய ஜனநாயக கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கையில் ஏனைய தமிழ் முதலாளித்துவ குழுக்களதும் நடவடிக்கைகளையிட்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கனேடிய பங்காளியும் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் போருக்கு முழு ஆதரவு கொடுத்தன. எனினும், சமீபத்தில், வாஷிங்டனும் ஒட்டாவாவும், 2009ல் சில போர் குற்றங்கள் குறித்து இராஜபக்ஷ அரசாங்கத்தை விசாரணை செய்ய வேண்டும் என கோரி வருகின்றன. தனது சொந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மிதமான பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் மறுப்பதையிட்டு பிரதிபலித்த வாஷிங்டன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை இராணுவத்தின் மற்றும் அரசாங்க ஆதரவு துணை இராணுவ குழுக்களின் குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணையை கோரும் தீர்மானம் ஒன்றுக்கு அனுசரணை அளிப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் அணுகுமுறையிலான மாற்றம், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி கவலையினால் ஏற்பட்டதல்ல. வாஷிங்டன் மற்றும் கனடாவின் கன்சர்வேடிவ் அரசாங்கமும், சீனாவிடம் இருந்து விலகுவதற்காக கொழும்பு மீது அழுத்தம் கொடுக்கும் வழிமுறையாக, தமிழர்களை இராஜபக்ஷ அரசாங்கம் நடத்திய முறை குறித்து வஞ்சத்தனமாக பிரச்சினையை எழுப்பியுள்ளன. பெய்ஜிங், துறைமுகங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்வது உட்பட, இலங்கையில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. "ஆசியாவுக்கு மீண்டும் திரும்பும்” திட்டத்துடன், ஒபாமா நிர்வாகமானது அமெரிக்க உலக மூலோபாயத்தின் மையமாக, சீனாவை மூலோபாய ரீதியில் தனிமைபடுத்தி, அதற்கு எதிரான போருக்கு தயார் செய்கின்றது. இந்திய-பசுபிக் பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தி அதை பின்வாங்கச் செய்ய அமெரிக்கா முயற்சிக்கும் அதே வேளை, இந்திய பெருங்கடலின் மையத்தில், சீனாவின் பெரும்பகுதி எண்ணெய் இறக்குமதி உட்பட அதன் அநேகமான வர்த்தகம் பெருக்கெடுக்கும் பகுதியில் இலங்கை அமைந்துள்ளதால், அது விசேடமாக மூலோபாய முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது. அமெரிக்காவும் கனடாவும், தடங்கல்களாக அல்லது போதுமானளவு வளைந்து கொடுக்காதவையாக கருதப்படும் அரசாங்கங்களைக் கொண்ட நாடுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் மனித உரிமை மீறல்கள் பிரச்சினைகளை கிளப்பி அவற்றை சூழ்ச்சித் திறனுடன் கையாளுவதில் நீண்ட அவப்பேறான வரலாற்றைக் கொண்டுள்ள அதே வேளை, அமெரிக்காவுக்கும் மேற்குக்கும் தாழ்ந்து போகும், இரத்தம் தோய்ந்த வலதுசாரி சர்வாதிகாரங்களுக்கு ஆதரவும் ஆயுதமும் வழங்குவதோடு மனித உரிமைகளின் பெயரில் ஆக்கிரமிப்பு யுத்தங்களையும் முன்னெடுக்கின்றன. பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் கன்சர்வேடிவ் அரசாங்கம், எகிப்தில் முபாரக் சர்வாதிகாரத்தை ஆதரித்ததோடு எகிப்திய இராணுவத்தை மீண்டும் பதவியில் இருத்திய ஜூலை 2012 சதிப் புரட்சியையும் பாராட்டிய அதே வேளை, "சர்வாதிகார" ஈரானுக்கு எதிராக கடிந்து கொள்கின்றது. அத்துடன், கனடாவின் பிரதம மந்திரி, பாலஸ்தீன மக்களை வெளியேற்றும் இஸ்ரேலிய அரசின் "பற்றுறுதியான நண்பன்" கனடா என்று பெருமையாக கூறுவதில் சளைத்துப் போகாதவர். அமெரிக்க மற்றும் கனேடிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் அரசாங்கங்கள் மூலம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தொழிலாளர்களால் போராட முடியாது, மாறாக அவர்களுக்கு எதிராகவே போராட வேண்டும். எனினும் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் போர் குற்றங்களை எதிர்ப்பவர்களாக பாசாங்கு செய்யும் இந்த அரசாங்கங்களில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைக்க வேண்டும் என என்டிபீ, தமிழ் முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புக்களும் உழைக்கும் மக்களுக்கு கூறி வருகின்றன. கடந்த இலையுதிர்காலத்தில், இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த இராஜபக்ஷ தவறியதற்கு மேம்போக்காக எதிர்ப்பை காட்டுவதன் பேரில், கொழும்பில் நடந்த பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஹாப்பர் மறுத்த போது, என்டிபீ, கனடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் புலிகளின் சாம்பலில் இருந்து வெளிப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற குழுக்கள் அவரை புகழ விரைந்தன. அக்டோபர் 28, அவர்கள் ஹார்ப்பருக்கு "நன்றி" தெரிவிக்க ஒட்டாவா பாராளுமன்ற கட்டிடங்களுக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததோடு, பொதுநலவாய நாட்டு தலைவர்கள் மாநாடு கொழும்பில் கூட்டப்பட்ட நவம்பர் 14 அன்றும் இதே போன்ற ஒரு பேரணியை டொராண்டோவில் ஏற்பாடு செய்திருந்தனர். சிற்சபேசன் ஒட்டாவா கூட்டத்தில், லிபரல் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதே போல் நீதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் மக்கே மற்றும் குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டர் உட்பட கன்சர்வேர்டிவ்களுடன் தோள் கொடுத்துக்கொண்டிருந்தார். 3,00,000 கனேடிய தமிழ் சமூகத்தினர் இருந்தாலும் இரு கூட்டங்களிலும் மொத்தமாக சுமார் 500 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர். புலிகளின் எச்ச சொச்சங்கள் கனடிய ஸ்தாபனத்தின் அனைத்து கட்சிகளிலும் செயற்படுகின்றன. 2011ல் தமிழ் தேசியவாதிகளால் சிற்சபேசன் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், பலர் இப்போது அவருக்கு சவாலாக லோகன் கனபதி என்பவரை ஆதரிக்கின்றனர். கனபதி, மார்கம் 7ம் வட்டாரத்தின் தமிழ் கவுன்சிலர் ஆவார். புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்கார்பரோ வடக்கு தேர்தல் தொகுதியில், அடுத்த தேர்தலில் சிற்சபேசனுக்கு எதிராக லிபரல்கள் தமது வேட்பாளராக கனபதியை தேர்வு செய்துள்ளனர். கனடாவில் புலிகளின் எச்சங்கள் கனேடிய ஆளும் வர்க்கத்தின் கட்சிகளுடன் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, ஹார்ப்பர் அரசாங்கத்தின் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் தீவிரமான சீன எதிர்ப்பு மூலோபாயத்தை முன்நகர்த்த தமிழர் பிரச்சினையை பயன்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் அதே வேளை, தமிழ் கூட்டமைப்பானது அமெரிக்க-சார்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் (யூஎன்பீ) கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளது. இலங்கை முதலாளித்துவத்தின் பாரம்பரிய வலதுசாரி கட்சியான யூ.என்.பி. 1983ல் தமிழர்களுக்கு எதிரான இனவாத உள்நாட்டு யுத்தத்தை தொடுத்தது. இந்த வகையில், தமிழ் தேசியவாதிகள், தமிழ் மக்களின் தோல்விக்கு வழிவகுத்த பிற்போக்கு முதலாளித்துவ வர்க்க நோக்குநிலையை தொடர்கின்றனர். அவர்கள், இலங்கை அரசின் இனவாத யுத்தத்தை ஆதரித்த அதே சக்திகளான ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் சிங்கள முதலாளித்துவத்தின் பிரிவினருடன் தமிழ் மக்களை கட்டுப்போட்டுவிட முயற்சிக்கின்ற அதேவேளை, சோசலிச முன்நோக்கை கடுமையாக எதிர்க்கின்றனர். சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் இலங்கை, இந்தியா மற்றும் உலகம் பூராவும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் தமிழ் தொழிலாளர் மற்றும் விவசாயிகளை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்திலேயே அவர்களின் ஜனநாயக உரிமைகளை வெல்ல முடியும். |
|
|