World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Edward Snowden and Europe’s pseudo-left

எட்வார்ட் ஸ்னோவ்டெனும் ஐரோப்பாவின் போலி-இடதும்

Robert Stevens
15 February 2014

Back to screen version

தேசிய பாதுகாப்பு முகமையின் (NSA) இரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னொவ்டெனுக்கு ஐரோப்பாவில் தஞ்சம் வழங்க வேண்டுமென்று கோரிய ஒரு தீர்மானத்தை இந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றம் நசுக்கியதோடு, அவர் சார்பில் "வழக்கு நடத்துவதற்கோ, அயல்நாட்டிடம் ஒப்படைப்பதற்கோ அல்லது மூன்றாவது தரப்பினரிடம் அவரை சரணடைய செய்வதற்கோ" எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நடவடிக்கையானது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் சர்வதேச அளவில் ஆளும் மேற்தட்டிற்குள் அங்கே எந்தவொரு பிரிவும் இல்லை என்பதை அடிக்கோடிடுகிறது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் குடியுரிமை சுதந்திரங்கள் கமிட்டியால் புதனன்று கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்த பாரிய கண்காணிப்புக்கான ஒரு 60 பக்க வரைவு அறிக்கையில் ஸ்னோவ்டெனின் பெயர் இடம் பெற்றிருக்கவே இல்லை. ஆனால் தேசிய பாதுகாப்பு முகமை (NSA), பிரிட்டனின் அரசு தகவல்தொடர்பு தலைமையகம் (GCHQ) மற்றும் ஏனைய பிரதான சக்திகளின் இரகசிய சேவைகளால் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் பாரிய உளவுவேலை திட்டங்கள் குறித்து ஸ்னோவ்டெனின் தைரியமான முயற்சிகளின் காரணமாக மட்டுமே உலகால் அறிந்து கொள்ள முடிந்தது.

ஸ்னோவ்டெனால் கசியவிடப்பட்ட இரகசியங்கள் குறித்து ஐரோப்பிய அரசாங்கங்களிடம் இருந்து அமெரிக்கா மீது வெளியான பாசாங்குத்தனமான ஒரு குற்றச்சாட்டு அலைக்கு இடையே அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. பாரிய அரசு கண்காணிப்பால் முன்னிறுத்தப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான கொடிய தாக்கங்களைக் குறித்து ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்திற்கு எந்த கவலையும் இல்லை, மாறாக அமெரிக்கா அரசியல் மற்றும் வர்த்தக ஆதாயங்ளைப் பெற முயல்கிறது, அது பிரதான ஐரோப்பிய சக்திகளின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களைக் குடைகின்றது என்ற உண்மையே அதன் கவலை ஆகும்.

700 மில்லியனுக்கு மேலான ஐரோப்பியர்கள் உட்பட உலக மக்களின் ஒவ்வொரு நடவடிக்கைகள் மீதும் கண்காணிப்பைக் கொண்டிருக்கும் பரந்த கண்காணிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதில் நிச்சயமாக ஐரோப்பிய அரசாங்கங்களும் ஒன்றாக உள்ளன.

பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் குளோட் மோரஸால் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வரைவு அறிக்கை அரசு கண்காணிப்பை நிறுத்த வேண்டுமென அழைப்புவிடுக்கவில்லை, அதை "சீர்திருத்த" வேண்டுமென அழைப்புவிடுக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அட்லாண்டிக் பிரதேசத்திற்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பு தொடர வேண்டியது இன்றியமையாததாகும்," என்று அந்த வரைவு வலியுறுத்துகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் "அமெரிக்க சமபலங்களோடு ஆக்கபூர்வமான ஒரு பேச்சுவார்த்தையில் இறங்க தயாராக உள்ளதாகவும்" அது மேலும் குறிப்பிடுகிறது.

சுருக்கமாக கூறுவதானால், ஐரோப்பிய ஒன்றியமும் அதில் பங்கு வகிக்கும் அரசாங்கங்களும் அமெரிக்காவால் சேகரிக்கப்படும் தகவல்களை அணுகும் உரிமையைப் பெற விரும்புகின்றன, அத்தோடு சேர்ந்து ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் போன்ற பிரபலங்களின் மீது உளவு பார்ப்பதென்று வரும் போது தேசிய பாதுகாப்பு முகமை ஒரு அரசியல் மரபொழுங்கு முறைமையை கடைபிடிக்கும் என்ற ஏதோவொரு வகையிலான உத்திரவாதத்தைக் கோருகின்றன.

அடுத்தது என்னவென்றால், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் அதேபோன்ற பாரிய கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன என்பதை ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தி உள்ளார், அவை தேசிய பாதுகாப்பு முகமையால் திரட்டப்படும் தகவல்களை அணுக முடியவில்லை என்றளவிற்கு மட்டும் தான் பிரிட்டனின் GCHQ உளவுவேலை வலையத்திலிருந்து வேறுபடுகின்றன. பிரிட்டன், ஐந்து கண்கள்" (அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) திட்டத்தின் பாகமாக சிறப்பு அனுமதியைப் பெற்றுள்ளது. ஜேர்மனும் பிரான்சும் அவற்றின் சொந்த கண்காணிப்பு திட்டங்களையும் அதில் இணைக்க அதேபோன்றவொரு ஏற்பாட்டை விரும்புகின்றன.

எந்தவொரு ஐரோப்பிய நாடாளுமன்ற அறிக்கையும் அமெரிக்க உளவுவேலையின் விமர்சனங்களைக் கொண்டிருக்காதபடிக்கு வலியுறுத்தி, அமெரிக்கா ஸ்னோவ்டெனின் ஜனநாயக உரிமைகளை மறுக்க அதன் கைவசமிருந்த ஒவ்வொரு இராஜாங்க மற்றும் அரசியல் கருவிகளையும் பயன்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு, கனெக்டிக்கட்டின் ஜனநாயக கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி, ஐரோப்பிய வெளியுறவு விவகாரங்கள் மீதான செனட் வெளியுறவுத்துறை துணை கமிட்டியின் தலைவராக உள்ள இவர், புரூஸ்செல்ஸில் பேசுகையில், அமெரிக்க கண்காணிப்பு "பெரிதும் உங்கள் நாடுகளின் உளவுவேலை சேவைகளோடு பொருந்திய விதத்திலேயே நடத்தப்பட்டது" என்று குறிப்பிட்டுக் காட்டினார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குள் உள்ள ஐரோப்பிய ஐக்கிய இடது-நார்டிக் பசுமை இடதின் பல்வேறு கட்சிகள் அரசு உளவுவேலைகளை எதிர்ப்பவை என்றும், அவை ஸ்னொவ்டெனின் மற்றும் இரகசியங்களை வெளியிட்ட ஏனையவர்களின் பாதுகாவலர்கள் என்றும் கூறப்பட்ட வாதங்களோடு பொருந்தாமல் சம்பவங்கள் எதிர்மாறாக உள்ளன. இந்த குழுவில் ஜேர்மனியின் Die Linke (இடது கட்சி), ஜோன் லூக் மெலென்சோனின் இடது கட்சி மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, கிரீஸில் சிரிசா, ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான Izquierda Unida (ஐக்கிய இடது), மற்றும் இத்தாலியின் கம்யூனிஸ்ட் மறுஸ்தாபகம் உட்பட ஸ்ராலினிச, முன்னாள் சமூக ஜனநாயக மற்றும் போலி இடது அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த குழுவின் தலைவர் Die Linke இன் Gabi Zimmer ஆவார். ஒரு செய்தி அறிக்கையில், இந்த [ஐரோப்பிய நாடாளுமன்ற] அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதை இந்த குழு வரவேற்கிறது" ஏனென்றால் "உளவுவேலை மற்றும் கண்காணிப்பு ஆகியவை வெறுமனே சந்தேகத்திற்குரியவைகளாக இல்லாமல், உண்மையிலேயே நடந்துள்ளன என்பதை அது துல்லியமாக ஒப்புக் கொண்டுள்ளது," என்று சிம்மெர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறினார், எதிர்மறையான விடயம் என்னவென்றால், போலி அனுமானங்கள் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு சட்டங்களைத் துஷ்பிரயோகம் செய்வது குறித்து அங்கே எந்தவொரு நிஜமான விவாதமும் இருக்கவில்லை, ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் வழங்குவது குறித்தும் அங்கே ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை, கடல்கடந்த அட்லாண்டிக் வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டுறவை (TTIP) முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கை விடுக்கப்படவில்லை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு, பொலிஸ் மற்றும் உளவுத்துறை ஆகியவற்றிற்கு இடையே தெளிவாக வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இன்றைய ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பு மீதான உண்மையான திருத்தங்கள் எதுவும் அதிலே இல்லை," என்றார்.

இங்கே, சர்வாதிகார உளவுவேலை நடவடிக்கைகளை "சீர்திருத்துவது" மீதான வெற்று வார்த்தை வனப்புரைகளுக்கு பிரதி உபகாரமாக, அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து வந்த மரண அச்சுறுத்தல்கள் உட்பட ஸ்னொவ்டென் பழிவாங்கப்படும் விவகாரம் ஒரு கூடுதல் தகவல் என்பற்கு சற்று அதிகமான ஒன்றாக அல்லது பேரம்பேசுவதற்கான துருப்புசீட்டாக உள்ளது.

அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் உட்பட ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்காவால் உளவுபார்க்கப்பட்டார்கள் என்பதை ஸ்னொவ்டென் அம்பலப்படுத்தியதற்குப் பின்னர், இதேபோன்றவொரு தொனியில், கடந்த அக்டோபரில், மிக சுருங்கிய ஐரோப்பிய இடது குழுக்களின் கட்சி துணை தலைவர், ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியின் மைட் மோலா ஐரோப்பிய மேற்தட்டின் நலன்களை பாதுகாக்க பேசினார். அவர் கூறினார், மில்லியன் கணக்கான ஐரோப்பிய பிரஜைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசு தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிகள் மீதான உளவுவேலைகளில் அமெரிக்கா என்ன பொறுப்பு வகித்தது என்பதன் மீது ஐரோப்பா, தெளிவாக, முழு பலத்தோடு ஒரே குரலில் கேள்வி எழுப்ப வேண்டிய நேரமிது. மேலும் 35 உலக நாடுகளின் தலைவர்களை உளவுபார்த்துள்ள ஒரு நாட்டுடன் நேட்டோ உட்பட வர்த்தகம், இராணுவம், மற்றும் பொலிஸ் உடன்படிக்கைகளை கொண்டிருப்பதைக் குறித்து இது மறுஆய்வு செய்ய வேண்டிய நேரமும் கூட.

சிம்மெர் மற்றும் மோலா முதலாளித்துவ அரசியல்வாதிகளாக பேசுகிறார்கள், அவர்களைப் பொறுத்த வரையில் ஸ்னோவ்டெனின் கதியைக் குறித்து அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையை வரவேற்பதன் மீது நிறுத்தப்பட்ட இந்த எச்சரிக்கைகள் வெறுமனே ஐரோப்பிய ஆளும் மேற்தட்டு பிரிவுகளின் கவலைகளை எதிரொலிக்கின்றன, அதாவது ஐரோப்பிய தொழில்துறை மீதான TTIPஇன் தாக்கம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பு மற்றும் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்கு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறைக்கான ஆதரவு ஆகியவை மீதான அந்த பிரிவுகளின் கவலைகளை வெளிப்படுத்துகின்றன. இவ்விதத்தில், போலி இடது அமைப்புகள் பகிரங்கமாக ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரிட்டனின் தொழிற் கட்சி போன்ற வலதுசாரி கட்சிகளுக்கு அரசியல் போர்வையை வழங்குகின்றன. அவை வழங்கிய வாக்குகள் ஸ்னொவ்டெனின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அழைப்புவிடுக்கும் தீர்மானத்தை தோற்கடிக்க உதவின.

ஸ்னோவ்டென் விவகாரத்தில் போலி-இடது உடந்தையாய் இருப்பது, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட அனைத்து பிரச்சாரத்திற்கும் அவர்கள் காட்டிய விரோதத்தோடு இணைந்து நிற்கிறது. அசான்ஜ் மீதான மிகவும் வஞ்சகமான தாக்குதல்களில் சில இத்தகைய அமைப்புகளிடம் இருந்து வந்துள்ளன. அவை ஜோடிக்கப்பட்ட பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரை ஸ்வீடனிடம் ஒப்படைக்க ஆதரவளித்தன.

"ஜூலியன் அசான்ஜ் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்க வேண்டும்" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 2012இல் பிரிட்டிஷ் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி ஒரு கட்டுரை பிரசுரித்தது. உண்மையில் அசான்ஜிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்பதும், ஸ்வீடனிடம் ஒப்படைப்பதென்பது அமெரிக்க யுத்த குற்றங்களை அம்பலப்படுத்தியமைக்காக உளவுவேலை குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்க அமெரிக்காவிற்கு கொண்டு செல்வதற்கான ஒரு முதல்படியாக மட்டுமே இருக்கும் என்பதும் அதற்கு முற்றிலும் நன்றாக தெரியும்.

போலி-இடது குழுக்கள் ஐரோப்பிய ஏகாதிபத்திய நலன்களின் பாதுகாவலர்களாக மற்றும் அதன் எதிர்வினைக்கு அனுதாபிகளாக உள்ளன. ஒரு நீண்ட காலக்கட்டத்தில், அவை முதலாளித்துவ அரசின் கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அந்த கட்டமைப்பிற்குள் அவர்கள் எண்ணிக்கையில்லா அரசியல் தொடர்புகளை மற்றும் தனிப்பட்ட தொடர்புகளைக் கொண்டுள்ளன. Die Linke மற்றும் Marx 21 குழுவின் ஒரு முன்னணி உறுப்பினரான Christine Buchholz ஜேர்மன் நாடாளுமன்றத்தின் இராணுவ கமிட்டியில் இடது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

தொழிலாள வர்க்கம் மட்டுமே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக மற்றும் அரசியல் சக்தியாக உள்ளது.

அமெரிக்க அரசியல் மற்றும் உளவுத்துறை ஸ்தாபகத்தில் உள்ள பிரபலங்களால் ஸ்னோவ்டெனின் வாழ்க்கைக்கு எதிராக வைக்கப்படும் அச்சுறுத்தல்களும், அசான்ஜை சிறைக்குள் அடைப்பதற்காக நடந்து வரும் முயற்சிகளும் பாரிய எதிர்ப்போடு எதிர்கொள்ளப்பட வேண்டும். இதற்கு, உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை நிலைமைகளை அழிக்கின்ற அதேவேளையில் பொலிஸ் அரசு சர்வாதிகாரத்திற்கு உயர்வளித்து வரும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான சோசலிசத்தோடு, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பை இணைக்கும் ஓர் இயக்கம் அவசியமாகும்.