சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US minimum wage “debate”

அமெரிக்க குறைந்தபட்ச ஊதியம் மீதான "விவாதம்"

Andre Damon
21 February 2014

Use this version to printSend feedback

ஒபாமா நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டதைப் போல, பெடரல் குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு 7.25 டாலரில் இருந்து 10.10 டாலர் என்று உயர்த்துவதால் ஏற்படும் விளைவுகளை மதிப்பிட்டு, செவ்வாயன்று, காங்கிரஸின் வரவுசெலவு திட்ட அலுவலகம் (CBO) ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்வைக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறின் மீது அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்களுக்குள் விவாதத்தைத் தீவிரப்படுத்தியது.

குறைந்தபட்ச ஊதிய உயர்வானது 16.5 மில்லியன் அமெரிக்கர்களின் சம்பளத்தை உயர்த்தும், ஆனால் 500,000 வேலைகளை இல்லாதொழிக்குமென அந்த அறிக்கை முடித்திருந்தது. CBO அறிக்கையின்படி, அந்த உயர்வு, 900,000 ஜனங்களை, அல்லது மக்கள்தொகையில் 0.2 சதவீதத்தினரை வறுமையில் இருந்து தூக்கிவிடும். இது தற்போது மத்திய அரசின் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்துவரும் 46.5 மில்லியன் மக்கள் அல்லது மக்கள்தொகையில் 15 சதவீதத்தினரில் ஒரு சிறிய பகுதியாகும்.

ஜனநாயக கட்சியினரின் பரிந்துரை குறைந்தபட்ச ஊதியத்தை, நிஜமான வரையறைகளில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் 1968இல் இருந்ததை விட குறைந்த மட்டத்திற்கு கொண்டு வந்து நிறுத்தும். அமெரிக்காவில் சராசரியாக வாரத்திற்கு 34 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு ஒரு மணி நேரத்திற்கு 10.10 டாலர் என்பது, வரிக்கு முந்தைய வருமானமாக ஆண்டுக்கு அவருக்கு 17,856 டாலர் வருவாய் ஈட்டித் தரும். இது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கான அரசின் பொருத்தமற்ற குறைந்த வறுமைக்கான நிர்ணய அளவை விட கணிசமான அளவிற்கு குறைவாகும்.

பொருளாதார மற்றும் கொள்கை ஆய்வு மையத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, அமெரிக்காவில் தொழிலாளர் உற்பத்தி திறன் உயர்வோடு குறைந்தபட்ச ஊதியத்தை பொருத்திப் பார்த்தால், அது 2012இல் ஒரு மணி நேரத்திற்கு 21.72 டாலர் அளவிற்கு எட்டி இருக்க வேண்டும்.

பரந்தரீதியில் பேசுவோமேயானால், குடியரசு கட்சியின் வரிசையில் நிற்கும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதை எதிர்க்கின்றன. தொழிற்சங்க அதிகாரத்துடன் நெருக்கமாக இருக்கும் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு மக்கள் எதிர்ப்பு மற்றும் சமூக எழுச்சிகளின் ஆபத்து ஆகியவற்றைக் குறித்து ஓரளவிற்கு மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும் ஜனநாயக கட்சியினரின் வரிசையில் நிற்பவர்கள், குறைந்தபட்ச ஊதிய உயர்வை ஆதரிக்கின்றனர்.

பெருமந்த நிலைமைக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், வறுமைக்கு அருகாமையில் வைத்திருக்க உறுதியளிக்கும் இந்த சிறியளவிலான குறைந்தபட்ச ஊதிய உயர்வே அரசியல் ஸ்தாபகத்திற்குள் இதுபோன்ற கருத்து வேறுபாடுகளை தூண்டுகின்றன என்ற உண்மையானது, ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையின் திவால்நிலைமையை மற்றும் பெரும்பான்மை ஜனங்கள் மீதிருக்கும் அதன் வெறுப்பை மட்டுமே அடிக்கோடிடுகிறது.

இந்த விவாதம் என்றழைக்கப்படுவதில், சம்பளம் உயர்த்தப்படுவதன் விளைவாக ஏற்படும் வேலை இழப்புகள் மீதான மதிப்பீடுகள் குறித்த சர்ச்சைகளும் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை சிறிது உயர்த்துவதால் அது உண்மையில் பெருநிறுவன இலாபங்களுக்கு ஆதாயமா இல்லையா என்பதன் மீதான சர்ச்சைகளும் உள்ளடங்கி உள்ளன. தொழிலாளர்கள் பட்டினியில் இல்லாதளவிற்கு கூலிகளை வழங்குவதே வேலைவாய்ப்பின்மைக்கான தீர்வென்று குடியரசு கட்சியினர் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பகிரங்கமாக வாதிட்டு வருகின்றனர். ஆனால் வாழ்வூதியம் தொழிலாளர்களின் ஓர் உரிமை என்பதையோ, அதற்கு பெருநிறுவனங்கள் இலாபங்களைக் குவிப்பதை விட மற்றும் பெரும் பணக்காரர்களால் தனிப்பட்ட செல்வவளம் திரட்டப்படுவதை விட முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்பதையோ வலியுறுத்தும் நிலைப்பாட்டிற்கு ஜனநாயகக் கட்சியினரோ அல்லது தாராளவாத பத்திரிகைகள் எனப்படுபவையோ அழுத்தம் அளிக்கவில்லை.

பெருநிறுவன இலாபங்கள் மீதோ அல்லது அமெரிக்க பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டின் செல்வத்தின் மீதோ கணிசமான அளவிற்கு வந்து மோதும் எந்தவொரு முறைமையும் சாத்தியமில்லை என்பது "விவாதத்தின்" இருதரப்பின் அடியிலும் உள்ள பிரதான கூற்றாக உள்ளது. மில்லியன் கணக்கான மக்களுக்கு தேவையான போதிய ஊட்டச்சத்து, வாழ்வதற்குரிய வீட்டுவசதி, ஒரு கண்ணியமான கல்வி மற்றும் பாதுகாப்பான முறையில் ஓய்வு பெறுவது ஆகியவற்றை விட நிதியியல் பிரபுத்துவத்தின் தனியுரிமைகள் முற்றிலும் முன்னுரிமை பெறுகின்றன.

ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் அற்பமான பரிந்துரையை ஒரு பிரதான சமூக சீர்திருத்தமாக மற்றும் சமூக சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான முக்கிய படியாக சித்தரிப்பதானது, சமூக சீர்திருத்தத்தின் எந்தவொரு திட்டத்தையும் ஜனநாயக கட்சியினர் நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்பதற்குரிய ஒரு வெளிப்பாடாக உள்ளது. குறைந்தபட்ச ஊதிய பரிந்துரையானது ஒரு திசைதிருப்பும் நடவடிக்கையும் பொதுமக்கள் உடனான உறவுகளில் செய்யப்படும் சூழ்ச்சியும் ஆகும். அது ஒபாமா நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிற கண்மூடித்தனமான சிக்கன முறைமைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப வடிவமைக்கப்பட்டது.

பொருளாதார சமத்துவமின்மையை குறைப்பது மற்றும் வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்த ஒபாமாவின் வெற்று பேச்சுக்கள், அவருக்கிருந்த மக்கள் ஆதரவு கூர்மையாக வீழ்ச்சி அடைந்து வருவதை கருத்துக்கணிப்புகள் காட்டி வருகின்ற அதே தருணத்தில் வருகின்றன. மாற்றம்" என்ற அவரது முழக்கத்தின் அடிப்படையிலும் மற்றும் ஓர் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதி உழைக்கும் மற்றும் ஏழை மக்களின் தலைவிதிக்கு மிகவும் அனுதாபமாக இருப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் அவருக்கு வாக்களித்த பத்து மில்லியன் கணக்கான மக்கள், தங்கள் மீது சுமை ஏற்றப்பட்டிருப்பதை கசப்போடு புரிந்து கொண்டுள்ளனர்.

குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதன் மீது வெள்ளை மாளிகையும் ஜனநாயக கட்சியும் திடீரென வலியுறுத்துவது, 2014 இடை தேர்தல்களில் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் தாராளவாத மற்றும் போலி-இடது கூட்டாளிகளை ஜனநாயக கட்சியினர் பின்னால் ஒன்றுதிரட்டுவதற்காக செய்யப்படும் ஒரு வெளிப்படையான அரசியல் நாடகமாகும். AFL-CIO ஜனாதிபதி ரிச்சர்டு ட்ரூம்கா புதனன்று கூட்டமைப்பின் ஆண்டு குளிர்கால கூட்டத்தின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் கூலிகளை உயர்த்துவது நமது சம காலத்திய பிரச்சினையாகும், மேலும் நம்பத்தகுந்த விதத்தில், அது இந்த தேர்தலுக்குரிய பிரச்சினையாகவும் உள்ளது," என்றார்.

பல தசாப்தங்களாக, மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியத்தில் ஓர் உயர்வு என்பது பாதி-தானியங்கிதன்மை (semi-automatic) கொண்டதாக இருந்தது, அதாவது வெறுமனே தேர்தல் கால அமெரிக்க அரசியலின் அம்சமாக இருந்தது. 1938இல் புதிய உடன்படிக்கையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட பெடரல் குறைந்தபட்ச ஊதியம் ஒரு டஜனுக்கும் அதிகமான முறை உயர்த்தப்பட்டுள்ளது. 2007இல், குறைந்தபட்ச ஊதியத்தை 5.15 டாலரில் இருந்து 7.25க்கு ஆண்டுக்கு ஒருமுறையென மூன்று தவணைகளில் உயர்த்த காங்கிரஸ் ஒரு சட்டம் நிறைவேற்றியது.

அப்போது, அந்த நகர்வு ஆரவாரத்தோடு இரண்டு கட்சிகளின் ஆதரவையும் பெற்றிருந்தது, வெறும் மூன்று குடியரசு கட்சி செனட்டர்கள் மட்டுமே அந்த முறைமைக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஆனால் இப்போது, குறைந்தபட்ச ஊதியத்தில் வழக்கமான ஓர் அதிகரிப்பின் மீது எழுந்திருக்கும் பிரச்சினை ஒரு முற்போக்கான தர்மயுத்தம் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியோடு ஒப்பிடுகையில் கடந்த கால பொருளாதார நெருக்கடியின் போது, பிரான்க்ளின் டி. ரூஸ்வெல்ட் கீழ் அமெரிக்க முதலாளித்துவம் உண்மையான சமூக சீர்திருத்தங்களை அமுலாக்கியது, அந்நடவடிக்கைகள் வறுமையைக் குறைத்ததோடு, ஓரளவிற்கு பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியையும் குறைத்தது. புதிய உடன்படிக்கை சமூக பாதுகாப்பை உண்டாக்கியதோடு, குறைந்தபட்ச கூலியை நடைமுறைப்படுத்தியது, குழந்தை தொழிலாளர்களுக்குத் தடை விதித்தது, பணக்காரர்கள் மீது வரிகளை உயர்த்தியது, தொழிற்சங்கங்களுக்கு சட்டரீதியிலான அங்கீகாரம் வழங்கியது மற்றும் நாளொன்றுக்கு எட்டு மணிநேர வேலையைச் சட்டமாக்கியது.

இவையெல்லாம் ஆளும் வர்க்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை அல்ல, மாறாக ஏறத்தாழ கிளர்ச்சி போன்று நடந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை முற்றுகை போராட்டங்கள் ஆகியவற்றின் ஒரு அலை உட்பட பாரிய சமூக போராட்டங்கள் மூலமாக வென்றெடுக்கப்பட்ட விட்டுக்கொடுப்புகளாகும். அத்தகைய போராட்டங்கள் பாரிய தொழில்துறைரீதியிலான தொழிற்சங்கங்கள் உதயமாவதற்கு இட்டு சென்றன. சமூக புரட்சியின் அச்சுறுத்தலில் இருந்து ரூஸ்வெல்ட் எதை பாதுகாக்க முனைந்திருந்தாரோ அந்த அமெரிக்க ஆளும் மேற்தட்டின் அடிப்படை வர்க்க நலன்களை இத்தகைய முறைமைகளில் எதுவுமே சவால் செய்யவில்லை, ஆனால் அவை மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களில் கணிசமான அளவிற்கு உயர்வை ஏற்படுத்தி இருந்தன.

இன்று வழங்கப்படுபவைகளில் சமூக சீர்திருத்தமென்று ஒன்றுமே கிடையாது. குறைந்தபட்ச ஊதியத்தின் ஒரு சிறிய உயர்விற்காக ஜனநாயக கட்சியினரால் முன்வைக்கப்படும் பரிந்துரை, சமூக சமத்துவமின்மை முன்னொருபோதும் இல்லாத அளவுகளை எட்டி உள்ள நிலையில் முன்னுக்கு வந்துள்ளது. அமெரிக்க பில்லியனர்களின் நிகர சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 1.2 ட்ரில்லியனை எட்டியது, இது 2009இல் என்ன இருந்ததோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். இதற்கிடையில், அமெரிக்காவில் மத்தியதட்டு மக்களின் குடும்ப வருமானம் 2007 மற்றும் 2012க்கு இடையே 8.3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

பெருநிறுவன இலாபங்கள் ஒபாமாவின் கீழ் 170 சதவீதத்தை விட அதிகமாக உயர்ந்துள்ளது, இது வேறெந்த முந்தைய ஜனாதிபதியின் கீழும் நடந்ததை விட அதிகளவிலான உயர்வாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கில் இன்று பெருநிறுவன இலாபங்கள் 1947இல் தொடங்கிய சாதனைகளுக்குப் பின்னர் அதிகபட்ச அளவை எட்டி உள்ளன, அதேவேளையில் ஊதியங்களுக்குச் செல்லும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு சாதனையளவிற்கு கீழ்நோக்கி வீழ்ச்சி அடைந்துள்ளது. 2009க்குப் பின்னரில் இருந்து, ஒபாமா நிர்வாகம் மறுசீரமைப்பிற்காக தனிமைப்படுத்திய வாகனத்துறை ஊதியங்கள் பத்து சதவீத சராசரியில் வீழ்ச்சி அடைந்து, பெரிய மூன்று வாகனத்துறை உற்பத்தியாளர்களுக்கு சாதனையளவு இலாபங்களை வாரி வழங்கி உள்ளது.

சமூகத்தின் ஒரு துருவத்தில் பெருந்திரளான தொழிலாளர்களை வறுமைக்குள் தள்ளப்பட்டதால், மறுமுனையில் கூறமுடியாத அளவிற்கு பணக்காரர்கள் உருவாகி உள்ளனர். பிரதான அமெரிக்க பெருநிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகளின் சம்பளம் கூர்மையாக உயர்ந்துள்ளது. கூகுள் அதன் நிர்வாக தலைவர் எரிக் ஸ்கூமிட்டிற்கு, 2013க்காக, 6 மில்லியன் டாலர் ரொக்க கொடுப்பனவுக்கு கூடுதலாக, பங்குகளாக 100 மில்லியன் டாலர் வழங்க உள்ளதாக அறிவித்தது. அது அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பை சுமார் 8 பில்லியன் டாலருக்கு கொண்டு வரும். ஒவ்வொரு நிமிடமும் 190 டாலரை பாக்கெட்டில் சேர்க்கும் கூகுள் தலைமை செயலதிகாரி, குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறும் ஒரு சாதாரண தொழிலாளர் ஓராண்டில் சம்பாதிப்பதை ஒரு மணி நேரத்தில் சம்பாதிக்கிறார்!

ஒரு கண்ணியமான வருமானம், வீட்டுவசதி, மருத்துவ காப்பீடு, மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான உரிமையை அனைத்து மக்களுக்கும் உத்தரவாதமளிக்க தேவையான சமூக வளங்கள் உள்ளன. ஆனால் சமூகத்தின் செல்வம் ஒரு சிறிய நிதியியல் பிரபுத்துவத்தால் ஏகபோகமாக்கப்பட்டுள்ளதோடு, அது அரசியல் அதிகாரத்தின் ஒவ்வொரு விசையையும் கட்டுப்படுத்தி வருகிறது.

குரல்வளையைப் பிடித்திருக்கும் இந்த பணக்கார ஆட்சியின் பிடியை உடைப்பதற்கான ஒரு நேரடியான போராட்டம் இல்லாமல், வறுமை அளவிலான கூலிகள் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு அங்கே எந்த பதிலும் இல்லை. பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டின் இலாப நலன்களுக்காக அல்லாமல், சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சமூகத்தை மறுஒழுங்கமைக்கும் நோக்கங்கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவது மட்டுமே ஒரு கண்ணியமான வாழ்க்கை தரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதற்குரிய ஒரே வழியாக உள்ளது.