தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி How the German Left Party defends the European Union ஜேர்மனியின் இடது கட்சி எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாக்கின்றது
By Peter Schwarz Use this version to print| Send feedback அடுத்த வார இறுதியில் ஹாம்பேர்க்கில் நடக்க இருக்கும் அதன் கட்சி மாநாட்டில், இடது கட்சி அதன் ஐரோப்பிய தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மக்களிடையே எதிர்ப்பு பரந்து அதிகரித்துக் கொண்டிருந்தாலும், இடது கட்சி தன்னை ஐரோப்பிய ஒன்றியத்தின் விசுவாசமான பாதுகாப்பாளர் என காட்டிக்கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறது. மாநாட்டிற்கு முன்னதாக இப்பிரச்சினை சில கருத்துமுரண்பாடுகளை எழுப்பியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை “நவ-தாராளவாத, இராணுவவாத, பெரிதும் ஜனநாயகமற்ற சக்தி” என்று விபரிக்கும் பத்தியை முதல் வரைவு அறிக்கையின் முன்னுரையில் கொண்டிருந்தது. செய்தி ஊடகம் இவ்வாறு விபரித்ததை பற்றிக்கொண்டு இடது கட்சியின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விரோதமான மனப்பாங்கிற்கு இது வெளிப்படையான நிரூபணம் என மேற்கோளிட்ட நிலையில் கட்சிப் பாராளுமன்ற குழுவின் தலைவருடைய தலைவர் கிரிகோர் கீசி, தன்னை அந்நிலைப்பாட்டிலிருந்து அந்நியப்படுத்தி வைத்துக் கொண்டு கட்சி மாநாடு அதை மாற்றும் என்று உறுதியளித்தார். மாநாட்டிற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமை, கட்சித் தலைமை இப்பத்தியை வரைவில் இருந்து ஒரு வாக்கு எதிராக, ஐந்து பேர் வாக்களிக்காத நிலையில் அகற்றியது. செய்தி ஊடகத்தகவல்களின்படி, கட்சித் தலைமை ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்மை பற்றிய ஒரு விரிவான விவாதம் காங்கிரசில் நடப்பதை தடுக்க விரும்புகிறது. “ஐரோப்பாவிற்கு தெளிவான “ஆம்” என நாங்கள் கூறுகிறோம், ஆனால் இதை ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய ஒரு ஆக்கபூர்வ விமர்சனத்துடன் இணைக்கிறோம்” என்று கட்சி தலைவர் கத்யா கிப்பிங் இப்பத்தி நீக்கப்பட்டதை விளக்குகையில் கூறினார். முதலில் விவாதத்திற்கு உரிய பத்தியை ஆதரித்த துணைத் தலைவர் சஹ்ரா வாகென்நெக்ட், பின்னர் இப்பத்தி அகற்றப்படலாம் என அறிவித்தார். இந்நிகழ்வு இடது கட்சிக்குரிய தனிஅடையாளமாகும். ஐரோப்பிய ஒன்றியம் நவதாராளவாத, இராணுவவாத மற்றும் ஜனநாயக விரோதத் தன்மையை கொண்டுள்ளது என்பது மறுக்கமுடியாதது. எந்த ஜனநாயக சட்டபூர்வத்தன்மையும் இல்லாத பிரஸ்ஸ்ல்ஸின் அதிகாரிகள், கிரேக்கத்திற்கும் மற்ற நாடுகளுக்கும் சிக்கன திட்டங்களை ஆணையிடுகின்றனர். இதன் பொருள் மில்லியன் கணக்கான மக்களுக்கு இழிந்த வறுமையாகும். ஆபிரிக்கா, மத்திய கிழக்கு ஆகியவற்றில் நடக்கும் ஏகாதிபத்திய போர்களில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆயினும்கூட, இடது கட்சி இதை வெளிப்படையாக மூடிமறைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது. கிப்பிங் கூறிய “ஆக்கபூர்வ விமர்சனம்” இதை மூடிமறைக்கத்தான் பயன்படுகிறது. கட்சியின் அனைத்து வேறுபட்ட பிரிவுகளும் இப்பிரச்சினையில் உடன்பாட்டைக் கொண்டுள்ளன. இடது கட்சியில் எவரும் ஐரோப்பிய ஒன்றியத்தை நிராகரிக்கவுமில்லை, அது அகற்றப்பட வேண்டும் எனக்கூறவுமில்லை. உட்கட்சி வேறுபாடு, உள்ளடக்கத்தை பற்றி அல்லாது சொற்றொடர்களைச் சுற்றி உள்ளது. ஒரு பிரிவு, ஐரோப்பிய ஒன்றியத்தை “மாற்றுதலுக்கு” அழைப்புவிடுத்துள்ளபோது, மற்றொன்று “புதிய தொடக்கத்திற்கு” அழைப்பு விடுகிறது. அனைவருக்கும் பிரச்சனையான விடயம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக பெருகும் எதிர்ப்பை எவ்வாறு அடக்குவது என்பதுதான். கட்சியின் வலதுசாரிப் பிரிவு ஐரோப்பிய ஒன்றியத்தைப் பற்றிய தீவிர விமர்சனம் அரசாங்கத்தில் பங்கு பெறும் வாய்ப்பை குறைக்கும் எனக் கருதுகிறது. பெயரளவிலான “இடது” சாரி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அது பேச்சளவில்கூட வேறுபடுத்தி காட்டாவிட்டால் அனைத்து செல்வாக்கையும் இழக்கும் என நம்புகிறது. ஐரோப்பிய தேர்தல் திட்டத்தை விவாதித்த பெப்ரவரி 1 இல் பிராங்பேர்ட்டில் நடந்த கட்சியின் ஹெஸ்ஸ மாநில மாநாடு இதைத் தெளிவாகக் காட்டுகிறது. போலி இடது போக்குகளான Marx 21, SDS, Socialist Left போன்றவை கட்சியின் ஹெஸ்ஸ அமைப்பில் நன்கு பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மத்திய பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் ஒருவரான கிறிஸ்டியான் புக்கோல்ஸ் ஹெஸ்ஸவில் இருந்து வருவதுடன், மாநில சட்டமன்றத்தின் 6 உறுப்பினர்களில் ஒருவரான ஜனீன் விஸ்லர் ஆகியோர் Marx 21இன் உறுப்பினர்கள் ஆவர். மாநாடு, கட்சித் தலைமை நிர்வாகிகளுக்கு ஒரு பாலம் அமைப்பதில் கவனம் காட்டியதுடன், வேறுபட்ட பிரிவுகளை சமரசத்திற்கு உட்படுத்த முற்பட்டது. ஐரோப்பிய தேர்தல் அறிக்கையின் முன்னுரைக்கு மாற்றுப் பத்தியை அது ஏற்றது. அதில் பிரச்சனைக்குரிய பத்தியான இராணுவ வாதம், ஐரோப்பிய ஒன்றியித்தின் ஜனநாயக விரோதத் தன்மை ஆகியவை அகற்றப்பட்டன. சில முக்கிய பத்திகளுக்குப்பின் ஹெஸ்ஸவில் வரையப்பட்ட பதிப்பு, கட்சியின் தேசிய தலைமையைப்போல், ஐரோப்பிய ஒன்றியம் சீர்திருத்தப்பட வேண்டும் என்று கூறி அது தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை ஏற்கிறது. ஹெஸ்ஸவில் இருந்து வரவிருக்கும் வரைவிற்கான தனது அறிமுகத்தில் ஜனீன் விஸ்லர் இடது கட்சி ஐரோப்பாவிற்கு விரோதப்போக்கு காட்டுகிறது என்பது “மோசமான நகைச்சுவை” என்றார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தை பற்றி மக்களுக்கு தெளிவாகக் கூறவேண்டும் என்றார் அவர். ஐரோப்பிய ஒன்றியம் தீவிர-வலதை வலுப்படுத்துவது குறித்த அதிருப்தியை ஒருவர் தெளிவாக கண்டுகொள்ள வேண்டும் என்றார் அவர். பிராங்பேர்ட்டில் முக்கிய பேச்சாளர் காபி சிம்மர், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஐரோப்பிய ஐக்கிய இடது/நோர்டிக் பசுமையின் (GUE/NGL) மத்திய குழுவின் தலைவர் ஆவார். இவருடைய இளவயதில் அவர் கிழக்கு ஜேர்மனியில் ஸ்ராலினிச அரச கட்சியின் உறுப்பினராக இருந்தார், 2000த்தில் இருந்து 2003 வரை இடது கட்சியின் முன்னோடியான ஜனநாயக சோசலிச கட்சியின் (PDS) தலைவராக இருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தன் ஆதரவை அவர் தடையற்ற முறையில் ஒப்புக் கொள்கிறார். “நாங்கள் இந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்காக போராடுவோம்” என அவர் அறிவித்தார். ஐரோப்பிய இடதின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்து சிம்மர், சமூக ஜனநாயகவாதிகளுடனும் பசுமைவாதிகளுடனும் கூட்டுழைப்பிற்கு அழைப்பு விடுக்கிறார். குறிப்பாக ஐரோப்பா என வரும்போது, ஐரோப்பிய இடதை வலுவிழக்கச் செய்யும் உள்மோதல்கள் கூடாது, ஏனெனில் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளுக்குள் இயங்குவது ஏற்கனவே கஷ்டமாக உள்ளது என்றார் அவர். GUE/NGL 14 நாடுகளில் இருந்து 35 பிரதிநிதிகளையே கொண்டுள்ளதால், வேட்பாளர்கள் பசுமைவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பிறரை உள்ளடக்கிய அனைத்து பிரிவுகளுடனும் ஒத்துழைக்கத் தயாராக இருக்க வேண்டும். சிம்மர் பட்டியலிட்டுள்ள கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கை மற்றும் இராணுவவாதத்திற்கு முற்றிலும் உறுதிப்பாட்டை கொண்டவர்களாவர். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியைப் போல் அவர்கள் அரசாங்கத்தில் இருக்கும் இடங்களில் அவற்றை செயல்படுத்துகின்றனர். GUE/NGL இற்குள்ளேயே சைப்ரஸ் AKEL, பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை ஐரோப்பிய ஒன்றியத்தை நிபந்தனையற்று ஆதரிக்கும் அரசாங்கங்களுடன் நீண்டகாலமாக ஈடுபாடு கொண்டவை. இத்தகைய கட்சிகளுடன் சிம்மர் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பிற்கு விடுத்துள்ள அழைப்பு, தான் ஐரோப்பிய ஒன்றியத்தை “மாற்ற” விரும்புவதாக அவர் கூறும் கருத்தையே நிராகரிக்கிறது. ஐரோப்பிய தேர்தல்களில் ஐரோப்பிய இடதின் முக்கிய வேட்பாளரான சிரிசாவின் (SYRIZA) தலைவர், கிரேக்கத்தின் அலெக்சிஸ் சிப்ரஸ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதிப்பாடு கொண்டவர். அவர் பலமுறை வாஷிங்டனுக்கும் பேர்லினுக்கும் பயணித்து, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, ஏதேன்ஸில் அது அரசாங்கத்தை அமைத்தால் சிரிசாவிடம் பயப்படத் தேவையில்லை என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார். பிராங்பேர்ட்டில் பல பேச்சாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவை நியாயப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தை நிராகரிக்கப்பது தீவிரவலது, இனவெறியாளர்களுக்கு ஆதரவைக் கொடுக்கும் என்றனர். இது உண்மையை தலைகீழாகக் கூறுவது ஆகும். வலதுசாரிக் கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெருகும் மக்கள் எதிர்ப்பால் இலாபம் அடைவது எதனால் என்றால், அவை பெயரளவிலான இடதில் இருந்து எந்த எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடது கட்சியும் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு அமைப்புக்களும் கொடுக்கும் ஆதரவால் வலதுசாரி ஜனரஞ்சகவாதிகளே இலாபமடைகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தை இடது கட்சி பாதுகாப்பது தற்செயல் நிகழ்வு அல்ல. இதில் ஆழ்ந்த சமூக வேர்கள் உள்ளன. இதுபற்றி ஒரு முந்தைய கட்டுரையில் WSWS எழுதியது: “இடது கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாப்பது அதனால் அதை சீர்திருத்தமுடியும் என்பது குறித்து அது நப்பாசையை கொண்டிருப்பதால் அல்ல, மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதே சமூக நலன்களை அதுவும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஆகும்.” கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலிச கட்சியில் இருந்தும் மேற்கு ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவில் இருந்துமே இடது கட்சி உருவாகியது. இவை இரண்டுமே பல தசாப்தங்கள் வர்க்கப் போராட்டத்தை “சமூக அமைதி” என்னும் பெயரில் அடக்கியுள்ளன. இடது கட்சி தொழிற்சங்கங்களையும் அரச அமைப்புகளையும் சுற்றியுள்ள செல்வம் படைத்த அடுக்குகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இந்த தட்டு தொழிலாள வர்க்கத்தின் அணிதிரள்வு தன் சொந்த சலுகைகளுக்கு அச்சுறுத்தல் எனக் கருதுகின்றது. ஜேர்மனியில் ஐரோப்பிய தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தொழிலாளர்களை சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் திரட்டும் ஒரேயொரு கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியாகும் (Partei fur Soziale Gleichheit ). “பெருவணிகம், அதன் கட்சிகள் மற்றும் அதன் அரசாங்கத்திற்கு எதிராக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த அரசியல், சமூக இயக்கத்தை நாங்கள் வளர்க்க முற்படுகிறோம்” என்று PSG, மற்றும் பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) கூட்டு அறிக்கை கூறுகிறது. “ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் உட்பட அதன் அனைத்து ஜனநாயகமற்ற அமைப்புகளை நாங்கள் நிராகரிக்கிறோம். ... எங்கள் நோக்கம் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவுதல் ஆகும். ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் அரசாங்கத்தை அமைப்பதும் ஐரோப்பாவை சோசலிச அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதும்தான். ஐரோப்பா தேசியவாதத்திற்குள்ளும் போரிற்குள்ளும் செல்வதை தடுத்து, ஐரோப்பாவின் பரந்த மூலவளங்களையும் உற்பத்தி சக்திகளையும் முழுச்சமூகத்தின் நலன்களுக்காக பயன்படுத்தி அபிவிருத்திசெய்யும் சூழ்நிலையை உருவாக்கும்.” |
|
|