World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan SEP to contest provincial election இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது
Socialist
Equality Party இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, மார்ச் 29 நடக்கவுள்ள மேல் மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்துக்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அரசாங்கம் அதே தினம் தென் மாகாண சபைக்கான தேர்தலையும் நடத்துகின்றது. தேர்தல் சட்டத்தின்படி சோசக 43 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எமது வேட்பாளர் குழுவுக்கு கட்சியின் அரசியல் குழுவின் நீண்டகால உறுப்பினரான விலானி பீரிஸ் தலைமை வகிக்கின்றார். ஏனைய சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களில், அனைத்துலக சோசலிச முன்னோக்குக்கான போராட்டுத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களும் அடங்குவர். கொழும்பு மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி உட்பட ஆறு அரசியல் கட்சிகளும் ஒரு தொகை சுயேட்சைக் குழுக்களும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்த சகல கட்சிகள் மற்றும் குழுக்களுக்கும் மாறாக ஏகாதிபத்திய இராணுவவாதத்துக்கும் உலக யுத்த ஆபத்துக்கும் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநயாக உரிமைகள் மீது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் தொடுக்கும் தாக்குதல்களுக்கும் எதிராக, அனைத்துலக சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். ஆசியா பூவி-சார் அரசியல் பதட்டங்களின் ஒரு வெடிகுண்டு முனையாகி வருகின்றது. இந்த பதட்டங்கள் ஒரு அழிவுகரமான பூகோள மோதலுக்குள் உலகை இழுத்துத் தள்ளிவிட அச்சுறுத்துகின்றன. ஆழமடைந்துவரும் சர்வதேச பொருளாதார நெருக்கடியின் மத்தியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆதிக்கத்தை பேணுவதற்கும் புதிய சந்தைகள் மற்றும் இலாப ஊற்றுக்களுக்கும் வழியைத் திறந்துவிட நெருக்குவதற்காகவும் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கீழறுக்க முயற்சிக்கின்றது. ஆசியாவுக்கு “மீண்டும் திரும்பும்” அதன் திட்டத்தின் பாகமாக, ஒபாமா நிர்வாகம், சீனாவுடனான பிராந்திய முரண்பாடுகளை ஆக்கிரோசத்துடன் முன்நகர்த்துமாறு ஜப்பானையும் ஏனைய நாடுகளையும் ஊக்குவிக்கும் அதே வேளை, யுத்தத்துக்கான தயாரிப்பில் இந்து-பசுபிக்கில் தனது இராணுவத்தின் 60 சதவீதத்தை ஒருமுகப்படுத்தியுள்ளது. இலங்கை பெரும் கடல்நீர்ச்சுழலுக்குள் இழுபட்டு வருகின்றது. ஆயினும், அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சியுமாக முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனமும், ஆசியாவில் அமெரிக்க இராணுவப் பலப்படுத்தல் மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் ஆத்திரமூட்டல்களினால் எழும் யுத்த ஆபத்து பற்றி முற்றிலும் மௌனம் காக்கின்றது. ஒபாமா நிர்வாகம், பெய்ஜிங்கிடம் இருந்து கொழும்பை தூர விலகச் செய்வதற்கு நெருக்குவதற்காக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தின் போது நடந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை சுரண்டிக்கொள்கின்றது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் இரட்டை மோசடியாகும். வாஷிங்டன் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அதன் சொந்த யுத்தக் குற்றங்களுக்கு மட்டும் பொறுப்பாளி அல்ல, மாறாக அது புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத்தையும் ஆதரித்தது. அமெரிக்கா இப்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒரு சர்வதேச விசாரணைக்காக தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர அச்சுறுத்துகின்றது. அத்தகைய ஒரு விசாரணை யுத்தக் குற்றங்களுக்காக இராஜபக்ஷவை கூண்டில் ஏற்றும் சாத்தியத்தை ஏற்படுத்தும். இந்த மாகாண சபை தேர்தலில், அரசாங்கம் யுத்தக் குற்றங்களுக்கான அனைத்துப் பொறுப்பையும் மறுப்பதோடு “சர்வதேச விசாரணை” ஒன்றுக்கு இரையாகியுள்ளதாக தன்னை சித்தரிப்பதன் மூலம் “ஏகாதிபத்திய-விரோதியாக” காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது. அதே சமயம், ஐ.நா. தீர்மானத்தை முன்நகர்த்த வேண்டாம் என இராஜபக்ஷ அமெரிக்காவை கெஞ்சுவதோடு சீனாவுடனான உறவுகளை திருப்பிச் சுருட்டிக்கொள்வதாகவும் சமிக்ஞை செய்தார். இது எந்தளவு மோசடியானது! அவர் அப்படிச் செய்தால், அமெரிக்கா இலங்கையில் யுத்தக் குற்றம் மற்றும் ஜனநயாக உரிமை மீறல்கள் சம்பந்தமாக கவலைப்படுவதை கைவிட்டுவிடும். எவ்வாறெனினும், அரசாங்கம் சீன உதவி மற்றும் முதலீட்டில் கனமாகத் தங்கியுள்ளது. பொருளாதாரம் பலமாக இருப்பதாக இராஜபக்ஷ கூறிக்கொள்ளும் அதே வேளை, நாடு உலகப் பொருளாதார பொறிவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரசாங்கம் வங்குரோத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அது முன்னைய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் அன்றாட செலவுகளை சமாளிப்பதற்கும் உயர்ந்த வட்டி வீதத்தில் வெளிநாட்டுக் கடன்களை வாங்குவதில் தங்கியிருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ், அரசாங்கம் ஏற்கனவே பரந்த விளைவுகளுடைய நடவடிக்கைகளை செயற்படுத்தியுள்ளதோடு மேலும் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளப்படும். தேர்தலை அறிவித்த சில நாட்களுக்குள்ளேயே அரசாங்கம் பால்மா விலையை கிலோவுக்கு கிட்டத்தட்ட 30 வீதம் வரை அதிகரித்தது. இது அடுத்து வரவுள்ளவை பற்றிய அறிகுறியாகும். தலைநகரை பூகோளப் பொருளாதாரத்தின் மையமாக மாற்றும் அதன் அவநம்பிக்கையான முயற்சியில், அரசாங்கம் காணிகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் அபிவிருத்தி செய்வதற்கு விடுவிப்பதற்காக கொழும்பில் இருந்து 70,000 குடிசைவாழ் குடும்பங்களை அகற்றிவருகின்றது. உழைக்கும் மக்களின் பகைமையும் எதிர்ப்பும் வளர்ச்சியடைகின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக இராஜபக்ஷ கொழும்பு ஸ்தாபனத்தின் களஞ்சியத்தில் உள்ள இனவாதத்தை கிளறிவிடுவதை நாடியுள்ளார். அரசாங்கம் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட பாசிச அமைப்புக்களின் பேரினவாத பிரச்சாரத்தை ஊக்குவிப்பதோடு புலிகள் தம்மை மீண்டும் ஸ்தாபித்துக்கொண்டுள்ளதாக கூறி தமிழர்-விரோத காழ்ப்புணர்ச்சியை தொடர்ந்தும் பரப்பிக்கொண்டிருக்கின்றது. இராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கலாம் என்பதை ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளதோடு தனது பிரச்சாரத்துக்கான ஒரு பரீட்சார்த்தக் களமாக மாகாண சபைத் தேர்தலை பயன்படுத்துகின்றார். எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ), வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் சந்தை-சார்பு பொருளாதாரக் கொள்கையுடன் எந்தவொரு அடிப்படை முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. வெளிப்படையாகவே ஒரு பெரு வர்த்தகர்களின் கட்சியான யூஎன்பீ, 1977ல் ஒரு மலிவு உழைப்புக் களமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நாட்டைத் திறந்துவிடும் முன்னெடுப்பை உலகில் முதலாவதாகத் தொடங்கியது. பெய்ஜிங்குக்கு எதிராக வாஷிங்டனுடன் அணிசேர்வதற்கு தான் தயார் என்பதை யூஎன்பீ ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளது. யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்காவும் சர்வதேசமும் “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்” பிரேரணைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு விடுக்கும் கோரிக்கையை இட்டுநிரப்புவதாக அறிவித்துள்ளார். இந்த நல்லிணக்க ஆணைக்குழுவானது அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை மூடி மறைப்பதற்காக இராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது அமைப்புக்கள் வலதுசாரி யூஎன்பீ மற்றும் அதன் அமெரிக்க-சார்பு திசையமைவுக்குப் பின்னால் அணிசேர்ந்துள்ளன. அவை, ஜனநயாக உரிமைகளை மோசமாக மீறும் யூஎன்பீயின் நீண்ட வரலாற்றை மூடி மறைத்து, அதை எதேச்சதிகார இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான, ஜனநாயகத்துக்கான ஒரு பாதுகாப்பு அரணாக மோசடித்தனமாக முன்னிலைப்படுத்துகின்றன. இதே போல், உழைக்கும் மக்களின் செலவில் ஒரு சிறிய முதலாளித்துவ கும்பலின் சிறப்புரிமைகளை தக்க வைத்துக்கொள்வதற்காக கொழும்புடன் ஒரு உடன்பாட்டை எதிர்பார்க்கும், தீவின் பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அவை ஆதரிக்கின்றன. எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ), அதுவே “மக்களின் குரல்” என வஞ்சகத்தனமாகக் கூறிக்கொண்டு தேர்தலில் போட்டியிடுகின்றது. ஜேவிபீ தமிழர்-விரோத இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு அது தன்னை கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் இறுக்கமாகப் பிணைத்துக்கொண்டுள்ளது. 2005 நடந்த ஜனாதிபதித் தேர்தலில், இராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக ஜேவிபீ சளைக்காமல் செயற்பட்டது. “அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கான ஒரு மையத்தை” கட்டியெழுப்புவதாக அது கூறிக்கொள்வது, முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தக் கூடிய தொழிலாளர்களதும் வெகுஜனங்களதும் எந்தவொரு சுயாதீன இயக்கமும் எழுச்சி பெறுவதை நிச்சயமாக தடுப்பதற்கே ஆகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, சோசலிச மற்றும் அனைத்துலகவாத கொள்கைக்காகப் போராடுவதில் கறைபடியாத வரலாற்றைக் கொண்டுள்ளது. அது அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, ஏகாதிபத்திய யுத்தத்தை நோக்கிய உந்துதலுக்கு எதிராக அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு யுத்த-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை முன்கொணர்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (புகக), உள்நாட்டு யுத்தத்துக்கு எதிராக இலங்கை தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் போராடியதோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை திருப்பியழைக்கக் கோருகின்றது. யுத்தம் மற்றும் இனவாத பாகுபாட்டுக்கு முடிவுகட்டவும், தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற வெகுஜனங்களதும் சகல ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளையும் அடைவதற்கும், தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராகவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு ஒன்றை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதன் பேரில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்துக்காக சோசலிச சமத்துவக் கட்சி செயற்படுகின்றது. இந்த வேலைத் திட்டத்துக்காக சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் உறுதியான போராட்டத்தை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ளன. நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக 700,000 ரூபா நிதியை சேகரிப்பதோடு ஆகக்கூடிய உதவியைச் செய்யுமாறும் அழைப்பு விடுக்கின்றது. தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டம், பெப்பிரவரி 12 அன்று, பொது நூலக கேட்போர் கூடத்தில் மாலை 4 மணிக்கு இடம்பெறும். இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்து, சோசலிச அனைத்துலக முன்னோக்கு பற்றிய கலந்துரையாடலிலும் பங்குபற்றுமாறு நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். |
|