தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி Nine questions for Robert Service ரோபர்ட் சேர்விஸுடம் ஒன்பது கேள்விகள்
By the Partei für Soziale
Gleichheit (Socialist Equality Party of Germany) Use this version to print| Send feedback பிரிட்டிஷ் எழுத்தாளரான ரோபர்ட் சேர்விஸ் அவர் எழுதி சர்வதேச அளவில் அவப்பெயர் பெற்ற ‘லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைசரிதம்’ குறித்து பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 12 அன்று பேசவிருக்கிறார். பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி இன் அழைப்பின் பேரில் சேர்விஸ் அங்கு உரையாற்றுகிறார். சேர்விஸின் புத்தகம் ஒரு வெற்று வசைமழை. இப்புத்தகம் அறிவியல் தகைமையின் அடிப்படையான நிர்ணயங்களையும் விதிகளையும் மீறிய ஒன்று என்பதோடு வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்களையும் இன்னும் யூத-விரோத குறிப்புகாட்டலையும் கூட கொண்டிருக்கிறது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி(Partei für Soziale Gleichheit -PSG )பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறது, அத்துடன் சேர்விஸிடம் கேட்பதற்கென ஒன்பது கேள்விகளையும் கூட தொகுத்துக் கொடுத்திருக்கிறது. மேலதிக தகவல்கள் வேண்டுவோர் trotzki.de இல் காணலாம். 1. 2011 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மிக அங்கீகரிக்கப் பெற்ற வரலாற்று ஜேர்னலான American Historical Review நீங்கள் எழுதிய ‘ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை சரிதம்’ குறித்து சுக்குநூறாக்கும் ஒரு விமர்சனத்தை வெளியிட்டது. ”வரலாற்றுப் பதிவுகள் ஏராளமாய் திரிக்கப்பட்டுள்ளமை, மற்றும் ஒட்டுமொத்த முனைப்பின் புத்திஜீவித நேர்மையையுமே கேள்விக்குள்ளாக்கும் மட்டத்திற்கு அப்பட்டமான தகவல் பிழைகள் கொண்டுள்ளமை” குறித்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பேர்ட்ராண்ட் M. பட்டனவ்ட்(Betrand M. Patenaude)தனது திறனாய்வில் சான்றளித்திருக்கிறார்.(தி அமெரிக்கன் ஹிஸ்டாரிக்கல் ரிவ்யூ, தொகுதி.116, எண்.3, ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ், ஜூன் 2011, பக். 900-902). உங்கள் புத்தகத்தில் இருக்கும் “தகவல் பிழைகளின் எண்ணிக்கை” “மலைப்பூட்டுவதாக இருக்கிறது” என விவரிக்கும் பட்டனவ்ட், தான் கைப்பட எண்ணிய பிழைகளின் எண்ணிக்கையே நாலு டசனைத் தாண்டும் எனக் குறிப்பிடுகிறார். “ஒரு குறிப்புதவியாக சேர்விஸின் புத்தகம் ஏற்கத்தகாதது. சில இடங்களின் பிழைகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது” என்று அவர் நிறைவு செய்கிறார். நீங்கள் எழுதிய ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைசரிதம் புத்தகத்திற்கு எதிராக டேவிட் நோர்த் ‘லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து’ என்ற அவரது புத்தகத்தில்(இந்தப் புத்தகம் ஜேர்மன் மொழியிலும் கிடைக்கிறது)வைத்த பல்தரப்பட்ட விமர்சனங்களுடன் இந்த மதிப்புமிகுந்த அமெரிக்க ஜேர்னல் நிபந்தனையின்றி ஓரணியில் நிற்கிறது. நோர்த்தின் ட்ரொட்ஸ்கிச உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு இந்த விமர்சனங்கள் எல்லாம் மிகைப்படுத்தல்கள் என்று ஒருவர் நம்பத்தகாது, மாறாக அவை ”விரிவான, கவனமாகத் தொடுக்கப்பட்ட, நன்கு வாதிடப்பட்ட, அடித்து நொறுக்குகின்ற” தன்மை கொண்டவை என்று பட்டனவ்ட் எழுதுகிறார். தி அமெரிக்கன் ஹிஸ்டாரிக்கல் ரிவ்யூ இவ்வாறு நிறைவு செய்கிறது: ’கூலிக்கு மாரடித்திருக்கும் வேலை’ என்று சேர்விஸ் எழுதிய வாழ்க்கைச்சரிதம் குறித்து நோர்த் குறிப்பிடுகிறார். கடுமையான வார்த்தைகள் தான் என்றபோதிலும் முழுக்க நியாயமானவையே. வரலாற்றுத் தகமையின் அடிப்படை நிர்ணயங்களையும் கூட பூர்த்தி செய்யத் தவறுகிறதொரு புத்தகத்திற்கு ஹார்வர்ட் பல்கலைக்கழக அச்சகம் தனது ஒப்புதலை வழங்கியிருக்கிறது. உலகின் முன்னணி வரலாற்று ஜேர்னல்களில் ஒன்று இதை விடக் கடுமையான விமர்சனத்தை வேறெங்கும் வைத்திருக்குமா என்பதை கற்பனையும் செய்ய முடியவில்லை. மேலும் ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகளில் புகழ்பெற்ற பதினான்கு பேர் இந்த விமர்சனத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு உங்கள் புத்தகத்தின் ஜேர்மன் பதிப்பை வெளியிடுவதில் Suhrkamp Verlag தளர்ச்சி காட்டும்படி செய்தனர். இத்தனை நடந்தும் கூட இந்த விமர்சனத்திற்கு நீங்கள் பதிலளிக்கவும் இல்லை உங்களது மரியாதையை பாதுகாத்துக் கொள்வதற்கு நீங்கள் முயலவும் இல்லை. அது ஏன்? இதற்கு உங்களிடம் இருக்கும் விளக்கம் என்ன? இதற்கான ஒரு பதில் உங்களிடம் இல்லை, உங்கள் புத்தகத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் எல்லாம் சரியானவை என்பதோடு மறுக்கவியலாதவையும் கூட என்பது தான் உங்களது எதிர்வினையில் இருந்து ஒருவர் வரக்கூடிய முடிவாக இருக்கும். 2. ”பழைய ஆள் ட்ரொட்ஸ்கிக்கு இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது. பனிக் கோடரி அவர் கதையை முடிக்கவில்லை என்றால், எனது புத்தகம் அதைச் செய்யும் என நான் நம்புகிறேன்” என்று நீங்கள் குறிப்பிட்டதாக அக்டோபர் 23, 2009 ஆம் தேதி The London Evening Standard மேற்கோளிடுகிறது. இந்த வசனத்திற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் என்ன? முக்கியமான அரசியல் வாழ்க்கைச்சரிதம் எழுதுவதை விட குணநலன் படுகொலை செய்யும் வேலையைத் தான் உங்கள் புத்தகத்தின் மூலம் உங்களுக்கு நீங்களே விதித்துக் கொண்டிருந்ததாய் படுகிறது. 3. ட்ரொட்ஸ்கியின் தனிநபர் ஆளுமையைத் தாக்குகின்ற நோக்கத்துடன் புனையப்பட்ட அடாவடித்தனமானதும் வரலாற்றுரீதியாக பொய்யானதுமான கூற்றுகள் உங்கள் புத்தகத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, ட்ரொட்ஸ்கி தனது முதல் மனைவி அலெக்சான்ட்ரா ஸோகோலோவ்ஸ்கயாவை “அநாகரித்துடன்” நடத்தினார் என்பதாய் நீங்கள் கூறுவதோடு(பக்.4)அவருடன் இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்னர் “அவரை விட்டு ஓடுவதற்கு முடிவுசெய்தார்” (பக்.67)என்று தெரிவிக்கிறீர்கள். [அத்தனை மேற்கோள்களும் ரோபர்ட் சேர்விஸ், ’ட்ரொட்ஸ்கி: ஒரு வாழ்க்கைச் சரிதம்’, கேம்பிரிட்ஜ் மற்றும் இலண்டன், 2009 புத்தகத்தில் இருந்து எடுத்துக் காட்டப்படுகின்றன]. உண்மையில் நாடுகடத்தப்பட்டு சைபீரியாவில் இருந்த ட்ரொட்ஸ்கி தனது அரசியல் வேலைகளைத் தொடரும் பொருட்டு அங்கிருந்து தப்பிக்கையில் தனது அப்போதைய மனைவியின் முழு சம்மதத்துடன் தான் அங்கிருந்து சென்றதாக கிடைக்கின்ற அத்தனை ஆதாரங்களும் காட்டுகின்றன. இருவருமே தமது புத்திஜீவித தொடர்பையும் நட்பையும் தமது வாழ்நாளின் இறுதிவரை பராமரித்திருந்தனர். அலெக்சான்ட்ரா ஸொகோலோவ்ஸ்கயாவுக்கும் குழந்தைகளுக்கும் ட்ரொட்ஸ்கியின் பெற்றோர் நிதியுதவி செய்து வந்தனர். இருவருக்கும் இடையில் இருந்த தொடர்பை முறித்ததே ஸ்ராலினின் பயங்கரத்தின் எந்திரம் தான். ட்ரொட்ஸ்கியுடன் நட்பில் இருந்த காரணத்தினால் தான் அலெக்சான்ட்ரா ஸொகோலோவ்ஸ்கயா 1938 இல் படுகொலை செய்யப்பட்டார். ட்ரொட்ஸ்கியின் குடும்ப உறுப்பினர்கள் அவரது மோசமான எதிரியான ஸ்ராலினிச ஆட்சியால் கொல்லப்பட்டதற்கு ட்ரொட்ஸ்கியை பொறுப்பாக்க நீங்கள் ஏன் துடிக்கிறீர்கள்? 4. ட்ரொட்ஸ்கியின் அரசியல் செல்வாக்கு என்பது எல்லாவற்றுக்கும் மேல் அவரது எழுத்துக்களின் மீது தான் தங்கியிருந்தது, அத்துடன் ஏராளமான படைப்புகளை அவர் ஆஸ்தியளித்து விட்டுச் சென்றிருக்கிறார், ஆனால் நீங்களோ அரசியல், சமூக மற்றும் கலாச்சார பிரச்சினைகள் குறித்த அவரது எண்ணற்ற கட்டுரைகள், ஆய்வுகள் அல்லது புத்தகங்களில் ஒன்றைக் கூட முக்கியத்துவத்துடன் விவாதிக்காத ஒரு வாழ்க்கைச்சரிதத்தை எழுதியிருக்கிறீர்கள். அடிப்படையாக தனது சிந்தனைகள் மூலமாக உழைத்து வந்திருந்த ஒரு மனிதரைக் குறித்து அவருடைய சிந்தனைகளில் ஒன்றையும் கூட விளக்குதலின்றியே நீங்கள் ஒரு வாழ்க்கைச்சரிதத்தை எழுதி விட்டிருக்கிறீர்கள். அறிமுகவுரையில் நீங்கள் சொல்கிறீர்கள்: “அவர் எழுதியளித்துச் சென்றவை மட்டுமே ஒட்டுமொத்த விடயமாக எடுத்துக்கொள்ளப்பட அனுமதித்து விடக் கூடாது....ட்ரொட்ஸ்கி எதை பேசுவதற்கு அல்லது எழுதுவதற்கு தெரிவு செய்து கொண்டார் என்பதைப் போலவே அவர் எதைக் குறித்து வாயே திறக்கவில்லை என்பதும் முக்கியமானதே ஆகும். அவர் மவுனம் காத்த அடிப்படை அனுமானங்கள் அவரது வாழ்க்கையின் கலவையில் ஒருங்கிணைந்த பகுதியாய் இருந்தது.” (பக்:5) இது வெளிப்பட்ட அபத்தம். ட்ரொட்ஸ்கி என்ன எழுதினார் என்பதைப் படிக்காமலேயே அவரது “வாயே திறக்காத அடிப்படை அனுமானங்கள்” என்னவாக இருந்தன என்பதைக் கண்டுபிடிக்க உங்களால் எப்படி முடிந்தது? இந்த “வாயே திறக்காத அடிப்படை அனுமானங்கள்” தான் என்ன? 5. ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் உள்ளடக்கத்தை நீங்கள் உதாசீனப்படுத்துகின்ற அதேநேரத்தில், உங்கள் புத்தகமோ ஒரு எழுத்தாளராக ட்ரொட்ஸ்கியை சிறுமைப்படுத்தும் குறிப்புகளால் நிரம்பிக் கிடக்கிறது. மற்ற விடயங்களோடு சேர்த்து “எப்போதும் அவர் தலையில் என்ன தோன்றியதோ அதை எழுதிக் கொண்டிருந்தார்” (பக்:79) என்றும் தொடர்ந்து சொல்கிறீர்கள். “கட்சியின் புத்திஜீவித உயரடுக்கை இப்போது குடைந்து கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு அலட்டிக் கொள்ள அவர் மறுத்தார்” (பக்.109)என்றும் “அவரது சிந்தனை குழப்பிய மற்றும் குழப்புகின்ற ஒரு குப்பைப்பை” (பக். 353)என்றும் நீங்கள் எழுதுகிறீர்கள். இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது. இந்தப் பார்வை ஏராளமான வல்லுநர்கள் மற்றும் சமகாலத்தவர்களின் ஆய்வுமுடிவுகளில் இருந்து நேரெதிரானதாக இருக்கிறது. உதாரணமாக “வாழும் மகத்தான ஐரோப்பிய எழுத்தாளர் என்று ட்ரொட்ஸ்கியைக் கருதுவதற்கு நற்காரணங்கள் இருக்கின்றன” என்று 1931 ஆம் ஆண்டில் Bertolt Brecht மதிப்பீடு செய்ததை வால்டர் பெஞ்சமின் தனது ஜேர்னலில் மேற்கோளிடுகிறார். தேசிய சோசலிசத்தின்(National Socialism)அபாயங்களை வேறெவரொருவரையும் விட ட்ரொட்ஸ்கி மிகச் சரியாக முன்கணித்திருந்தார் என்பதையும் நாஜிக்களுக்கு எதிராக சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஐக்கிய முன்னணிக்கு (இக்கொள்கையை ஸ்ராலினும் SPD தலைமையும் ஆவேசத்துடன் நிராகரித்தனர்) அவர் விடுத்த அழைப்பு மிகச்சரியானது என்பதையும் அவரது அரசியல் எதிரிகளில் பலரும் கூட இன்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு கடன்பட்டிருக்கிறார்கள். தேசிய சோசலிசம் குறித்த அவரது எழுத்துக்கள்(எழுதி முடிக்காத இந்தப் புத்தகம் 1971 ஜேர்மன் பதிப்பில் 800 பக்கங்கள் கொண்டதாய் இருந்தது)இன்றளவும் இந்த விடயத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த படைப்புகளில் இடம்பிடித்திருக்கிறது. ஜேர்மனி நிகழ்வுகளுக்கு நீங்கள் ஒரு சில வரிகள் மட்டுமே அர்ப்பணிக்கிறீர்கள், ஆயினும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை. அதற்குப் பதிலாய் ட்ரொட்ஸ்கிக்கு “ஹிட்லர், முசோலினி அல்லது ஃபிராங்கோவை ஆய்வு செய்யும் உந்துதலே இருக்கவில்லை” என்று(பக். 474)தவறை நீங்கள் திட்டவட்டமாக தெரிவிக்கிறீர்கள். அறிமுகவுரையில் நீங்கள் அறிவிப்பது: “அத்துடன் ஸ்ராலினுக்குப் பதிலாக ட்ரொட்ஸ்கி பிரதான தலைவராக இருந்திருந்தார் என்றால், ஐரோப்பாவில் இரத்த ஆற்றின் அபாயங்கள் மிகப்பெருமளவில் அதிகரிப்பு கண்டிருக்கும்” (பக்:3). நீங்கள் சொல்ல முயல்வது என்ன? இரண்டாம் உலகப் போர் மற்றும் யூதப்படுகொலையில் 80 மில்லியன் பேர் இறந்தது இரத்த ஆறு இல்லையா? தொழிலாளர்’ இயக்கம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் முடக்கப்படுவதற்கும் நோக்குநிலை மாற்றப்படுவதற்கும் எதிராகவும் நாஜிக்களுக்கு எதிராக அந்த இயக்கத்தை அணிதிரட்டுவதற்குமாய் போராடிய ட்ரொட்ஸ்கி எப்படி ஒரு இன்னும் பெரிய இரத்த ஆற்றுக்குக் காரணமாகியிருக்க முடியும்? 6. உங்களது புத்தகம் ட்ரொட்ஸ்கியின் யூதக் குணம் குறித்துத்தான் விடாப்பிடியாக கவலை கொள்வதோடு வழக்கமான யூதவிரோதப் பல்லவிபாடும் மனிதர்களிடம் அனுதாபம் தேடுகிறது. மற்ற விடயங்களுடன் சேர்த்து நீங்கள் எழுதுகிறீர்கள்: “நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதைக் காட்டிலும் உலகப் புரட்சியை பரப்புவதில் தான் அதிக ஆர்வம் கொண்ட ஒரு அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஆனதன் மூலம் ட்ரொட்ஸ்கி ‘யூதப் பிரச்சினை’ என்ற ஒரு பரவலான மாறாநிலை வகையை உறுதிசெய்கிறார்” (பக். 192). நீங்கள் மேலும் சொல்கிறீர்கள்: “அவர் தனது புத்திசாலித்தனம் குறித்து அற்பகர்வம் கொண்டிருந்தார், தனது கருத்துகளைப் பேசிக்கொண்டேயிருப்பார். அவரை யாரும் அச்சுறுத்த முடியாது. இந்த குணாம்சங்களை எல்லாம் மற்ற அநேக யூதர்களைக் காட்டிலும் ட்ரொட்ஸ்கி இன்னும் அதிகமான மட்டத்திற்குக் கொண்டிருந்தார்.... ஆனால் பொதுவெளியில் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வெளிப்பட அனுபவித்த யூதர் அவர் மட்டுமே என்று சொல்ல முடியாத வெகுதூரத்தில் அவர் இருந்தார்.” (பக். 202) "மயிர்க்கூச்செறியும் சண்டைகள் மார்க்சிசத்துக்கும் யூதத்துக்கும் பொதுவானவை” (பக். 202). “கட்சியின் தலைமை ஒரு யூதக் கும்பலாகவே பரவலாய் அடையாளம் காணப்பட்டது” (பக். 205). ஆங்கிலப் பதிப்பில் ட்ரொட்ஸ்கி குறித்த ஒரு நாஜி கார்ட்டூனையும் கூட காண முடியும் (மூலம் குறித்த விபரம் இல்லாமல்). அதன் தலைப்பு இவ்வாறு இருக்கிறது: “உண்மையில் அவரது உண்மையான மூக்கு நீளமாகவும் இல்லை வளைந்தும் இல்லை அத்துடன் அவர் தனது குறுந்தாடியை அலைபாயும்படி விடவோ அல்லது முடியை சீவாமல் விடவோ கூட ஒருபோதும் அனுமதித்ததில்லை.” யூதர்கள் குறித்த இத்தகைய கிண்டல்களை நீங்கள் பயன்படுத்தியிருப்பது ஏன்? யூத அடையாளங்களாக சொல்லப்படுவனவற்றை ட்ரொட்ஸ்கி மீது ஏன் வலிந்து சுமத்துகிறீர்கள்? ட்ரொட்ஸ்கியின் எதிரிகள் அவருக்கு எதிராக யூதவிரோத தப்பெண்ணங்களை அணிதிரட்டினார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தும் கூட இதை நீங்கள் செய்வதன் காரணம் என்ன? ட்ரொட்ஸ்கியின் யூத அம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்ட உங்களின் சொந்தக் கதையையும் கூட நீங்கள் கண்டுபிடித்திருக்கிறீர்கள். Leiba என்ற Yiddish முதற்பெயரை ட்ரொட்ஸ்கி தாங்கியதுமில்லை பயன்படுத்தியதுமில்லை என்றபோதும் உங்களின் புத்தகத்தின் முதல் நாற்பது பக்கங்களுக்கும் மேலாக நீங்கள் அவரை தொடர்ச்சியாக Leiba என்றே குறிப்பிடுகிறீர்கள். மீண்டும் நீங்கள் ஏன் அவர் குறித்து அவரது ஸ்ராலினிச மற்றும் பாசிச எதிரிகள் உருவாக்கிய யூத விரோத கேலிச்சித்திரங்களை உங்களுக்கு அடித்தளமாகக் கொள்கிறீர்கள்? 7. உங்களது புத்தகம் ஸ்ராலினுக்கான மறைமுகமான பாராட்டுரையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. “ஸ்ராலின் சராசரி மனிதர் அல்ல மாறாக மனம்கவர் வகையில் பல்தரப்பட்ட திறன்களும் அத்துடன் உறுதியான தலைமைக்கான திறமையும் கொண்டிருந்தார்” (பக். 3) என்று நீங்கள் எழுதுகிறீர்கள். ”ட்ரொட்ஸ்கி ‘அதிகாரத்துவத்தின்’ கரங்களில் தோல்வியடையவில்லை: சோவியத் பொது வாழ்க்கை குறித்து ஒரு மகத்தான புரிதல் கொண்டிருந்த ஒரு மனிதர் மற்றும் கூட்டத்திடம் தான் அவர் தோற்றுப் போனார்”(பக். 4). உண்மையில் 1920கள் மற்றும் 1930களின் ஸ்ராலினது கொள்கைகளானவை பொருளாதார வாழ்வின் உள்முக இயக்கம், ஜேர்மனியில் பாசிச அபாயம், ஒரு ஜேர்மன் ஊடுருவல் குறித்த ஆபத்து ஆகிய விடயங்களில் பேரழிவுகரமான தவறான முடிவுகளின் முடிவில்லாத தொடர்ச்சியையே கொண்டதாக இருந்தது. 1923 முதல் 1940 வரை 17 ஆண்டுகளுக்கும் அதிகமாய் ட்ரொட்ஸ்கி சீராக அபிவிருத்தி செய்திருந்த ஸ்ராலினிசம் குறித்த விமர்சனத்திற்குள் செல்லாமலேயே நீங்கள் இந்த முடிவுகளுக்கு வந்தீர்கள். 1920களில் ஸ்ராலினின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்த, ஸ்ராலினின் “தனியொரு நாட்டில் சோசலிசம்” குறித்த, அவரது பலவந்த கூட்டுறவாக்கம் குறித்த, இன்னும் ஒவ்வொன்றின் மீதுமான விமர்சனமான ட்ரொட்ஸ்கியின் ’காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி’யை நீங்கள் கண்டுகொள்ளாதது ஏன்? இதுகுறித்து உங்கள் புத்தகத்தில் எதுவுமே கூறப்படவில்லையே. 8. இத்தகைய வெளிப்படையான மற்றும் அடாவடித்தனமான தவறுகள் உங்கள் புத்தகத்தில் காணப்படுவது ஏன்? அமெரிக்கன் ஹிஸ்டாரிக்கல் ரிவ்யூ ஜேர்னலை மீண்டும் மேற்கோளிடுவதாக இருந்தால், நீங்கள், “ட்ரொட்ஸ்கியின் மகன்களது பெயர்களை குழப்பிக் கொள்கிறீர்கள், 1906 இன் முதல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்த மிகப்பெரும் அரசியல் குழுவினைத் தவறாகக் குறிப்பிடுகிறீர்கள், சராஜேவோவில் படுகொலை செய்யப்பட்ட ஆஸ்திரிய இளவரசரின் பெயரை பிழைபடக் குறிப்பிடுகிறீர்கள், இரண்டாம் நிகோலஸ் பதவிதுறந்த சூழல்களைத் தவறாக சித்தரிக்கிறீர்கள், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் நுழைவு குறித்து 1940 இல் ட்ரொட்ஸ்கி கொண்டிருந்த நிலைப்பாட்டை எதிர்மாறாய் எடுத்துரைக்கிறீர்கள், அத்துடன் ட்ரொட்ஸ்கிக்குப் பின்னர் அவரது விதவை மனைவி இறக்கும் வருடத்தைத் தவறாய்க் குறிப்பிடுகிறீர்கள்.” மிக அடிப்படையான வரலாற்று உண்மைகளும் கூட மிக அப்பட்டமாக பிழையாக இருக்கும் ஒரு புத்தகத்திற்கு நீங்கள் எவ்வளவு நேரமும் முயற்சியும் செலவிட்டீர்கள்? 9. அத்துடன் கடைசியாக ஒரு கேள்வி. ஆய்வரங்கிற்கான உங்களது பங்களிப்பின் தலைப்பு இவ்வாறாய் இருக்கிறது: ”Trotzky - ஒரு வரலாற்றுச்சரிதத்தின் பிரச்சினைகள்” உங்களுக்குத் தெரியும், ட்ரொட்ஸ்கியின் பெயர் உச்சரிப்பு தவறாக இருக்கிறது என்று. ஆங்கிலத்தில் ட்ரொட்ஸ்கியின் பெயர் "S" பயன்படுத்தித் தான் எழுதப்பட்டு வருகிறது. அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் “Trotzky” என்ற உச்சரிப்பைப் பயன்படுத்துபவர்கள் 1930களின் பாசிஸ்டுகளும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகளும் மட்டும் தான் என்பது ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைசரிதம் எழுதிய உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். ட்ரொட்ஸ்கியின் பெயர் மிகுந்த அச்சுறுத்துவது போல் தோன்றச் செய்கின்ற பொருட்டு தான் அவர்கள் ட்ரொட்ஸ்கியின் பெயரை “tzky" பயன்படுத்தி எழுதினார்கள். இப்படியொரு அடிப்படையான பிழையை நீங்கள் செய்வதன் காரணம் என்ன? |
|
|