World Socialist Web Site www.wsws.org |
A tribute to Dave Hyland டேவ் ஹைலண்டுக்கு அஞ்சலி By David North பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் மறைந்த முன்னாள் தேசிய செயலாளர் தோழர் டேவ் ஹைலண்டுக்கு மரியாதை செய்கின்ற விதமாக ஜனவரி 18 அன்று நடைபெற்ற ஒரு நினைவுக் கூட்டத்தில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் வழங்கிய நினைவஞ்சலி உரையை இங்கே பதிவிடுகிறோம். டேவ் ஹைலண்ட் டிசம்பர் 8,2013 அன்று மரணமடைந்தார். (காணவும்: நினைவஞ்சலிக் கூட்டம் டேவ் ஹைலண்டின் அரசியல் போராட்டத்திற்கு அஞ்சலி செலுத்துகிறது.”) ** ** ** ** டிசம்பர் 8 அன்று டேவ் மரணமடைந்த செய்தி ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கவில்லை. மிகத் தீவிரமான முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாய் அவர் மிக மோசமாக உடல்நிலை பாதிப்புற்று இருந்து வந்தார். விஞ்ஞான விளக்கத்தை மீறிய எதிர்ப்புசக்தியின் அளவுகளை டேவ் வெளிப்படுத்தியிருந்தார். அவருடைய மனத்திடமும், வாழ்வதற்கும் வாழ்க்கையில் சாத்தியமான அளவு முழுமையாகப் பங்குபற்றுவதற்கும் அவர் கொண்டிருந்த விருப்பமும் ஒரு உண்மையான பௌதீக சக்தியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. நான்கு வருடங்களுக்கு முன்பாக, டேவ் நினைவிழந்து போயிருந்த ஒரு சமயத்தில் மருத்துவர்கள் அவர் இன்னும் ஒரு சில நாட்கள் தான் உயிர்வாழ்வார் என்று கூறினார்கள். ஆனால் அவர் மீண்டும் சுயநினைவு பெற்றார் என்பதோடு தீவிரமான உடல் பாதிப்புகள் இருந்த நிலையிலும் செயலூக்கத்துடனான ஒரு அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்க்கையைத் தொடர்ந்தார். இன்னும் கொஞ்ச காலத்திற்கு டேவ் நம்முடன் தொடர்ந்து இருப்பார் என்ற நம்பிக்கை மிக சமீப காலம் வரை சாத்தியமானதாகவே இருந்தது. ஆனால் நவம்பரில், டேவின் நோயை இனியும் பிடிக்குள் வைத்திருக்க முடியாது என்பது தெளிவானது. இந்த உண்மையை கண்ணியத்துடன் ஏற்றுக் கொண்ட அவர் தனது வாழ்க்கையை நீட்டிப்பதற்கான மேலதிக -அவர் பயனற்றது என நம்பிய- முயற்சிகளை நிராகரித்தார். ஒரு சந்தர்ப்பத்தில் உடல்நிலை வருத்தியெடுத்துக் கொண்டிருந்ததன் மத்தியில் அவர் தனது மகள் ஜூலியிடம் “வாழ்க்கை அழகானது” என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன். டேவ் தனது நோயின் துன்பங்களை சுய-கழிவிரக்கத்தின் எந்தவொரு சுவடும் இல்லாமல் சகித்துக் கொண்டார். தனது நம்பிக்கையையும் வாழ்க்கை மீதான தனது காதலையும் விடாதிருந்தார். பலருக்கும் நாட்பட்ட நோய் அனுபவமும், உடல்ரீதியான சிரமங்கள் மற்றும் வலியின் முழுப் பாதிப்பும் கைவிடல்களுக்கும், புத்திஜீவித்தன ஒதுங்கல்களுக்கும், உணர்வுரீதியான பின்னிழுப்புகளுக்கும் இட்டுச் செல்வது வழக்கம். ஆனால் டேவ் விடயத்தில் அவ்வாறு நடக்கவில்லை. நவம்பரில் டேவும் நானும் பேசும்போது அதுதான் எங்களது கடைசி சந்திப்பு என்பது எங்கள் இருவருக்குமே புரிந்திருந்தது. பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், அந்த விவாதத்தில் வருத்தம் என்பதே துளியும் இருக்கவில்லை. டேவ் எப்போதும்போல உலகத்துடன் தீவிரமாக சம்பந்தப்பட்டவராகவும், சர்வதேச சோசலிசத்துக்கான தனது அரசியல் உறுதிப்பாட்டில் உணர்ச்சிபூர்வமானவராகவும், நடக்கும் விடயங்களில் முழு ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். தனது வாழ்க்கையின் பிரதான பாதை குறித்து எந்த வருத்தமும் இல்லை என்று டேவ் என்னிடம் தெரிவித்தார். 1970களின் ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைய அவர் எடுத்த முடிவானது, ஒரு வர்க்கநனவு மிக்க தொழிலாளியாக அந்த சகாப்தத்தின் மாபெரும் போராட்டங்களில் இருந்து அவர் உள்ளீர்த்திருந்த அரசியல் முடிவுகளில் இருந்து அத்தியாவசியமாக விளைந்திருந்தது. 1985 இல் அனைத்துலகக் குழுவின் வரலாறு, கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு WRP இன் தேசிய சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நின்றதே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு என்று அவர் கண்டார். அவரது வாழ்க்கை முடிவை நெருங்கியிருந்த சமயத்தில், டேவ் உலக சோசலிச வலைத் தளத்தின் அபிவிருத்தி குறித்த தனது பெருமிதத்தையும், அவர் அழிக்கவியலாத பங்களிப்பு செய்திருந்த இயக்கத்தின் வருங்காலம் குறித்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். இங்கு பேசிய ஒவ்வொருவரும் 1985 ஆம் ஆண்டின் நிகழ்வுகளைக் குறிப்பிட்டார்கள். அடுத்த வருடத்துடன் அந்தப் போராட்டம் நடந்து 30 வருடங்கள் ஆகிறது. அந்தப் போராட்டத்தில் பங்குபெற்ற எங்களுக்கு அது நேற்று தான் நடந்ததைப் போல இருக்கிறது. ஆனால் இங்கு கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்களோ நமக்கு வேறுவிதமாகச் சொல்கிறது. அப்போது நாங்கள் இன்னும் இளைஞர்களாக இருந்தோம். ஆனால் மூன்று தசாப்தங்கள் கடந்து விட்டிருந்த போதும் கூட, 1985 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் நேற்று தான் நடந்ததைப் போல எங்கள் மனதில் மிகப் பசுமையாக இருக்கின்றன. அந்த நிகழ்வுகளுக்கும் நாங்கள் இப்போதும் நடத்திச் சென்று கொண்டிருக்கும் வாழ்வுக்கும் ஒரு சக்திவாய்ந்த தொடர்பு இருக்கிறது என்பது தான் அதன்காரணம். டேவ் தனது எழுபதுகள் எண்பதுகளைத் தொட்டு விட வேண்டும் என்று தான் விரும்பியிருப்பார். ஆனால் எல்லோருக்கும் நெடிய வாழ்வு கிடைப்பதில்லை. ஆனால் நெடிய வாழ்வை விட மிக முக்கியமானது என்னவென்றால் கிடைத்த வாழ்க்கை வருடங்களைக் கொண்டு ஒரு மனிதர் என்ன செய்கிறார் என்பது தான். ஒருவர் இளைஞராக இருக்கின்றபோது கொண்டிருந்த மிகச் சிறந்த குணங்களை அவரது வாழ்வின் இறுதி வரை தக்கவைத்துக் கொள்வதும் அவர் கடந்து வந்திருக்கக் கூடிய அனுபவங்களின் உள் தர்க்கத்தை புரிந்து கொள்ள முடிவதும் தான் ஒருவரது வாழ்க்கையின் வெற்றிக்கான உண்மையான அளவுகோல் ஆகும். ஒரு பரந்த வரலாற்று விளக்கத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட அத்தியாயங்களாக தனது வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு டேவினால் இயன்றது. டேவ் பல தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் ஏற்று வாழ்ந்திருந்த சோசலிசக் கோட்பாடுகளால் வழிநடத்தப்பட்ட ஒரு வாழ்க்கையாக அது இருந்தது. அவரது வாழ்க்கை புரிந்து கொள்ளக் கூடியது என்பதுடன் அவரது காலத்தின் மகத்தான வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தியும் புரிந்து கொள்ளத்தக்கதாகும். பிரம்மாண்டமான வலிமை கொண்ட புறநிலை சக்திகளுக்கு இடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கையின் பாதை எந்த மட்டத்திற்கு நமது நேரடியான மற்றும் உடனடியான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகளால் தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது குறித்த ஒரு உயர்ந்த பார்வை ஒருவருக்கு வயது முதிரும் போது வந்து சேர்கிறது. ஆனால் நாம் சக்தியற்றவர்கள் அல்ல. வரலாற்றின் மகத்தான புறநிலை சக்திகளுக்கு எவ்வாறு பதிலிறுப்பு செய்ய வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். புகைப்படக் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களும் ஆவணங்களும் அவரது வாழ்க்கையின் காலகட்டங்களை ஒன்றோடொன்று இணைத்த கோட்பாடுகளை சித்திரப்படுத்துகிறது. ஒருவரது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கும்போது அவரது நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி வந்திருந்தமையமான நோக்கம் எதனையும் அவரால் அடையாளம் காணமுடியாமல், “அது என்ன?” என்ற கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியாமல் இருந்தாலோ அல்லது இன்னும் மோசமாக கடந்த காலத்தைக் குறித்த கேள்விகளுக்கு “எனக்கு நினைவில்லை” என்று கூற நேர்ந்தாலோ அதை விடத் துயரகரமான நிலை இருக்க முடியாது. நினைவுகூர முடியாதவர்கள் பெரும்பாலும் நினைவுகூர விரும்பாதவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் இளமையில் தனக்கு ஆகர்ஷிக்கப்பட்டதாய் இருந்த இலட்சியங்களில் இருந்து விலகி அவர்கள் வெகுதூரம் பயணப்பட்டு விட்டிருக்கிறார்கள். தனது வாழ்க்கை என்னவாக இருந்தது என்பதை டேவ் அறிந்து வைத்திருந்தார். அவர் தான் கடந்து வந்த அனுபவங்களை நினைவில் வைத்திருந்தார், நினைவில் வைத்திருக்க விரும்பினார். டேவ் தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் முகம்கொடுத்த அமைதி மற்றும் சமநிலையான மனதிற்கு இதுவே முக்கியமான அம்சமாக இருந்தது. இதுபோன்ற ஒரு கூட்டம் நடைபெறும், தனது வாழ்க்கை குறித்த மதிப்பீடு புறநிலையானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும் என்பதை அவர் எதிர்பார்த்தார் என்றே நான் நினைக்கிறேன். பிரிட்டிஷ் மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் டேவ் ஒரு மிகப்பெரும் ஆளுமையாக நினைவுகூரப்படுவார் என்பதில் சந்தேகமேயில்லை. டேவ் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் பிறந்தார். அக்காலகட்டம் தொழிலாள வர்க்க போர்க்குணத்தின் மறுஎழுச்சியைக் கண்ணுற்ற ஒரு காலகட்டமாகும். 1960களில் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளும் வயதை அடைந்த நூறாயிரக்கணக்கிலான பிரிட்டிஷ் தொழிலாளர்களைப் போலவே, டேவும் 1926 பொது வேலைநிறுத்தம் மற்றும் “30களின் பஞ்சப்பட்டினி” போன்ற கண்ணியமற்ற விடயங்களுக்காய் பழிதீர்க்க நேரம் வந்து விட்டிருந்ததாக நம்பினார். சமூகப் போராட்டத்தின் அந்தக் காலகட்டத்திற்கு அவரது தந்தையிடம் இருந்து அவருக்கு நேரடியான ஒரு தொடர்பும் இருந்தது. தொழிற் கட்சி சோசலிசப் பிரிட்டனுக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையில் 1945 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம் தொழிற் கட்சியை பெரும் வாக்குகளளித்து அதிகாரத்தில் அமர்த்தியிருந்தது. ஆனால் அடுத்து வந்த கால்நூற்றாண்டு காலம் –அது அதிகாரத்தில் இருந்தபோதும்சரி இல்லாதபோதும் சரி– தொழிற்கட்சியும், தொழிற்சங்க காங்கிரசும் ஸ்ராலினிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் தமது சக்திகளின் பெருமளவை வெறுப்பைச் சம்பாதித்திருந்த டோரிக்களை எதிர்த்துப் போராடுவதற்காய் செலவிடாமல், மாறாக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை மட்டுப்படுத்துவதற்கும், எதிர்ப்பதற்கும், காட்டிக் கொடுப்பதற்குமாய் செலவிட்டன. போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சக்தியை ஒருபோதும் கண்டிராமல் அதன் பின்னடைவுகளை மட்டுமே பார்த்து வந்திருக்கக் கூடிய இளைய தலைமுறைக்கு 1960களிலும் 1970களின் ஆரம்பத்திலும் நிலவிய அதன் நம்பிக்கையையும் தீர்மானகர உறுதியையும் புரிந்து கொள்வது சிரமமானதாக இருக்கலாம். அந்தக் காலத்தின் இசையிலும் கூட குறிப்பிட்ட மட்டத்திற்கு இது வெளிப்படுத்தப்பட்டதாக இருந்தது. பழைய முறையின் மீதான ஒரு அலட்சியமும் அதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தீர்மான உறுதியும் அங்கு இருந்தது. அதை நடத்தி முடிக்கக் கூடிய ஒரு சக்தி அங்கு இருந்தது என்பது வெளிப்படையான ஒன்றாக இருந்தது. தேசியத் தேர்தலில் டோரி கட்சி 1970 இல் வெற்றி பெற்றதானது தொழிலாள வர்க்கத்தின் அலைஅலையான போராட்டங்களுக்கு மேடை அமைத்துத் தந்தது. புதிய அரசாங்கம் வேலைநிறுத்தங்களை ஒடுக்குவதற்கு தனது புதிய தொழிற்துறை உறவுகள் சட்டத்தைப் பயன்படுத்த தீர்மானமாய் இருந்தது, ஆனால் ஆளும் வர்க்கத்தின் நலன்களைச் செயல்படுத்துகின்றவை என்பதைத் தவிர வேறெதனையும் இந்தச் சட்டங்கள் செய்யவில்லை என்பதால் இந்தச் சட்டங்களின் அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ள பிரிட்டிஷ் தொழிலாளர்கள் மறுத்தனர். 1926 பொது வேலைநிறுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வேறெப்போதையும் விட 1970க்கும் 1974க்கும் இடையில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் பிரிட்டனை சோசலிசப் புரட்சிக்கு மிக நெருக்கமாய்க் கொண்டுவந்தன. 1973-74 இல் பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் எட்வர்ட் ஹீத் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான தமது இரண்டாவது தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தில், தமது தாத்தாமார்கள் செய்ய முடியாததை செய்துகாட்டினர். இந்த வேலைநிறுத்தம் ஹீத்தை ஒரு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விட நிர்ப்பந்தித்தது. “பிரிட்டனை ஆளுவது யார்?” என்பது தான் மையமான பிரச்சினை என்று அறிவித்தார் தடுமாற்றத்தில் இருந்த பிரதமர். “அது நீங்களாக இருக்கப் போவதில்லை” என்பது அவருக்கு பதிலாகக் கொடுக்கப்பட்டது. ஹீத் தேர்தலில் தோற்றார். வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம் தனது தொழிற்துறை சக்தியைப் பயன்படுத்தி டோரி அரசாங்கம் ஒன்றிற்கு இராஜினாமாவையும் தோல்வியையும் கொண்டுவந்திருந்தது. டோரிக்கள் தோற்கடிக்கப்பட்டதானது பிரிட்டனில் சோசலிசப் புரட்சியின் மூலோபாயப் பிரச்சினையை தீர்த்து விடவில்லை. மாறாக தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் – பிரிட்டனை சோசலிசப் புரட்சியின் விளிம்பிற்குக் கொண்டு வந்திருந்த ஒரு வெகுஜன இயக்கத்தை மட்டுப்படுத்தி, திசைதடுமாறச் செய்து, முடக்கி, விரக்தியுறச் செய்து, நிராயுதபாணியாக்குவதற்கு அரசியல் காட்டிக்கொடுப்பில் தான் பெற்றிருந்த அனுபவம் மற்றும் திறனைப் பயன்படுத்துவதில் தீர்மானகரமான உறுதி கொண்டிருந்த சமரசமற்ற எதிரி - கூட்டணி கொண்ட ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்கம் முகம் கொடுத்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 1974க்கும் 1979க்கும் இடையில், பிரதமர்கள் வில்சன் மற்றும் காலஹனின் தொழிற்கட்சி அரசாங்கங்கள், TUC மற்றும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த கூட்டாளிகள் உடந்தையாக இருக்க, தொழிலாள வர்க்கத்தின் மீது விழுந்த தாட்சரிசம் மற்றும் அதனையடுத்து வந்த அத்தனை அரசியல் பேராபத்துகளும் வெற்றி பெறுவதற்குத் தேவையான அரசியல் களத்தை தயாரிப்பு செய்வதற்கு தம் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்தன. இருந்தபோதிலும் 1973-74 இன் மாபெரும் அரசியல் இயக்கத்துக்கு முந்தைய 20 ஆண்டுகளின் சமயத்தில் தொழிற்கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவம், ஸ்ராலினிசம் மற்றும் பிரதானமாக பப்லோவாத மற்றும் அரச முதலாளித்துவப் போக்குகள் உள்ளிட்ட நடுத்தர வர்கக் தீவிரவாதத்தின் பல்வேறு வடிவங்கள் ஆகியவற்றுக்கான எதிர்ப்பின் அடிப்படையில் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தில் ஒரேயொரு அரசியல் போக்கு அபிவிருத்தியுற்றிருந்தது. ஆம், நான் குறிப்பிடுவது ஜெர்ரி ஹீலி தலைமை கொடுத்திருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) குறித்துத் தான். 1953க்கும் 1973க்கும் இடையிலான 20 ஆண்டுகளில் பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் அசாதாரணமான வளர்ச்சியைக் கண்டிருந்தது. இந்த வெற்றிகள் எல்லாம், நான்காம் அகிலத்தில் மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமை வகித்த திருத்தல்வாதப் போக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பாதுகாக்கப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் எழுந்திருந்தன. தொழிலாள வர்க்கத்தினுள் மார்க்சிச நனவை அபிவிருத்தி செய்வதில் நான்காம் அகிலம் ஆற்றிய இணையற்ற பாத்திரம் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் வெற்றி ஆகியவையே இந்தப் போராட்டத்தின் அடிப்படையான பிரச்சினைகளாய் இருந்தன. ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளின் தலைமையிலோ அல்லது பல்தரப்பட்ட சமூக மற்றும் அரசியல் ரீதியாக பலபடித்தான குட்டி-முதலாளித்துவ தீவிர அமைப்புகளின் தலைமையின் கீழோ சோசலிசம் எட்டப்பட முடியும் என்று பப்லோவாதிகள் கூறியதை 1953 இல் உருவாக்கப்பட்ட அனைத்துலகக் குழு நிராகரித்தது. 1953 போராட்டத்தில் ஹீலி ஒரு முக்கியமான பாத்திரம் வகித்திருந்தார். அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்த ஜேம்ஸ் பி. கனன் உடன் நெருக்கமாக வேலை செய்து ஹீலி பிரிட்டிஷ் அமைப்புக்குள்ளாக இருந்த பப்லோவாதப் போக்கினை தோற்கடித்தார். உண்மையில் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியின் சுயாதீன இருப்பினை முடிவுக்குக் கொண்டு வரவும் அதனை கம்யூனிஸ்ட் கட்சியில் கலைத்து விடவும் கோருவது தான் பப்லோவாதிகளின் நிலைப்பாடாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியே தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி விடுகின்றது என்பதால், ஒரு சுயாதீனமான ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கான அவசியமேதும் இல்லை என்று அது கூறியது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான இடைவிடாத போராட்டம் தான் பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அடுத்து வந்த வளர்ச்சிக்கான அடித்தளத்தை இட்டது. ஸ்ராலினிசத்தின் மீதான ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வு (கிரெம்ளின் அதிகாரத்துவம் மற்றும் அனைத்து தேசியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாற்றவியலாத எதிர்ப் புரட்சிகர பாத்திரத்தின் மீதான வலியுறுத்தல்) ஸ்ராலின் ஒரு கொலைகாரராக அம்பலப்படுத்தப்பட்ட 1956 பிப்ரவரி குருசேவின் “இரகசிய உரை”க்குப் பின்னரும், அதே ஆண்டின் அக்டோபரில் ஹங்கேரியின் புரட்சி, சோவியத்தால் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டதற்கும் பிந்தைய அரசியல் சூழல்களுக்கு பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை தயாரிப்பு செய்தது. சோவியத் அதிகாரத்துவத்தையும் சர்வதேச ஸ்ராலினிச இயக்கத்தையும் கடுமையான நெருக்கடிக்குள் தூக்கிவீசிய இந்த நிகழ்வுகள் 1953 இல் ஹீலியின் தலைமையின் கீழ் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதிகள் எடுத்த நிலைப்பாட்டை சரியானதாக நிரூபணம் செய்தன. மேலும், ஸ்ராலினிசத்தின் இயல்பு குறித்த தெளிவு, அதாவது கிரெம்ளின் ஆட்சியின் புரட்சிகர சாத்தியவளமாகக் கூறப்பட்டதன் மீது பப்லோவாதிகள் சளைக்காமல் ஊக்குவித்த எந்தப் பிரமைகளும் இல்லாமை, ட்ரொட்ஸ்கிசவாதிகளுக்கு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் நெருக்கடியில் தலையீடு செய்வதற்கு வழிவகுத்தளித்தது. ஸ்ராலினிச இயக்கத்தில் இருந்து அப்போது ஏராளமான காரியாளர்கள் வென்றெடுக்கப்பட்டனர், அவர்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அடுத்துவந்த வளர்ச்சியில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றினர். தொழிற் கட்சியின் தடைகள், ஸ்ராலினிஸ்டுகளின் தாக்குதல்கள், அடிக்கடி நிதிவளங்கள் குன்றிப் போகுதல் என தீவிரமான பிரச்சினைகள் இருந்தபோதும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் செல்வாக்கு 1950களின் பிற்பகுதியில் தொடர்ந்து வளர்ச்சி கண்டது. அமைப்பு ரீதியான வளர்ச்சி செழித்திருந்த இந்த காலகட்டத்தில் தான் நான்காம் அகிலத்திற்குள்ளாக பப்லோவாதத்திற்கு எதிராக நடந்து வந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதிகள் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றினர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இன்னும் சொல்லப் போனால் இந்தக் காலகட்டத்தில் தான் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதிகள், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) தடம்விலகி பப்லோவாதிகளுடன் இணக்கத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர்கள் சரியாக உணர்ந்த ஒன்றின் மீதான விமர்சனங்களை அபிவிருத்தி செய்யத் தொடங்கினர். SWP 1953 இல் அது பாதுகாத்த ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை 1957 ஆம் ஆண்டிலேயே ஹீலி புரிந்துகொண்டு விட்டார். அமெரிக்காவில் ஒரு “மறுஇணைவு” பிரச்சாரத்தில் SWP சிக்கிக் கொண்டிருந்தது, இது இடது நடுத்தர வர்க்க தீவிரவாதத்தின் சூழலை நோக்கிய ஒரு சந்தர்ப்பவாத மறுநோக்குநிலைக்கு சமிக்கை செய்தது. SWP இன் சந்தர்ப்பவாத ஊசலாட்டங்களுக்கு நேரெதிரான வகையில், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதிகள் ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டத்தை சீராக அபிவிருத்தி செய்து கொண்டிருந்தனர். 1940களின் பின்பகுதி முதலாக, பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதிகள் தொழிற்கட்சிக்குள்ளான வேலையை நடத்தியிருந்தனர். இந்த வேலையின் நோக்கம் தொழிற் கட்சியை ஒரு சோசலிச அமைப்பாக மாற்றுவதாக இருக்கவில்லை –அது சாத்தியமற்ற வேலை – மாறாக சமூக ஜனநாயகத்தின் துரோகப் பாத்திரத்தை அம்பலப்படுத்துவதும் அதன் மூலம் தொழிற் கட்சிக்குள்ளான மிகச்சிறந்த கூறுகளை நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கிற்கென வென்றெடுப்பதுமே அதன் நோக்கமாய் இருந்தது. 1950களின் பின்பகுதியில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் செல்வாக்கு பெருகியதை அடுத்து, தொழிற்கட்சி சூழ்ச்சி வேட்டைகளிலும் கட்சி வெளியேற்றங்களிலும் இறங்கியது. அதனைக் கொண்டெல்லாம் ஹீலியை அச்சுறுத்தி விட முடியவில்லை. 1959 இல் தொழிற்கட்சிவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தொடுப்பதற்காக ட்ரொட்ஸ்கிசவாதிகள் சோசலிச தொழிலாளர் கழகத்தை (SLL) உருவாக்கினர். முக்கியமாக அமெரிக்காவில் SWP இந்த அவசியமான அமைப்புரீதியான முறிவை எதிர்த்தது, அதற்கான மாற்று தொழிற்கட்சியின் ஒழுங்கிற்கும் அதிகாரத்திற்கும் முழுமையான அரசியல் சரணாகதி அடைவதாக இருந்தது என்ற உண்மையை அது உதாசீனம் செய்தது. இப்போது ஒரு முழுமையான சந்தர்ப்பவாதியாக மாறி விட்டிருந்த கனன், ஜெர்ரி ஹீலி ”அதி-இடது ஆழத்திற்குள்” இறங்கி விட்டதாக குற்றம்சாட்டினார். தொழிற் கட்சியின் எல்லைகளைக் கடந்து வாழ்க்கை சாத்தியமற்றது என்றதான கனனின் கூற்றுகளை நிராகரித்த சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) அந்த சமயத்தில் தொழிற் கட்சியின் இளைஞர் இயக்கமாக இருந்த இளம் சோசலிஸ்டுகளுக்கு (Young Socialists) உள்ளேயே சமூக ஜனநாயகத்திற்கான ஒரு கணிசமான எதிர்ப்பைக் கட்டியெழுப்பியது. 1960களின் ஆரம்பத்தில், அது இளம் சோசலிஸ்டுகளின் தலைமையை வென்றிருந்தது. வெளியேற்றங்களை கொண்டு தொழிற்கட்சி பதிலிறுப்பு செய்ததை அடுத்து, YS தன்னை SLL இன் இளைஞர் இயக்கமாக மறுஉருவாக்கம் செய்து கொண்டது. 1961க்கும் 1963க்கும் இடையில் அப்போது ஜோசப் ஹேன்சன் தலைமையில் இருந்த அமெரிக்க சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி அனைத்துலகக் குழுவினை பப்லோவாதிகளின் சர்வதேச அமைப்புடன் மறுஇணைவு செய்ய பொறியமைவு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை SLL எதிர்த்தது. காஸ்ட்ரோவின் (இவர் ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றிருந்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது) தலைமையிலான கெரில்லா சக்திகளால் கியூபாவில் பாட்டிஸ்டா ஆட்சி தூக்கிவீசப்பட வேண்டும் என்பது தான் இந்த மறுஇணைவை நியாயப்படுத்தக் கூறப்பட்ட அரசியல் சாக்காக இருந்தது. மார்க்சிச இயக்கமாகவோ அல்லது ட்ரொட்ஸ்கிச இயக்கமாகவோ இருந்திராத, இன்னும் சொன்னால் வெளிப்படையான சோசலிச இயக்கமாக தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாத ஒரு அரசியல் தலைமையின் கீழும் கூட சோசலிசப் புரட்சி வெற்றிக்கு அழைத்துச் செல்லப்பட முடியும், அத்துடன் ஒரு தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்பட முடியும் என்பதையே காஸ்ட்ரோவின் வெற்றி நிரூபித்திருக்கிறது என்று SWP கூறியது. ஆகவே நான்காம் அகிலத்தை இடது நடுத்தர வர்க்க அரசியலின் பிற்போக்குத்தன அரசியல் சதுப்பிற்குள் கலைத்து விடுவது தான் இந்த மறுஇணைவின் நோக்கமாக இருந்தது. மார்க்சிசத் தத்துவத்தின் அடிப்படையிலும் அக்டோபர் புரட்சி காட்டிக் கொடுக்கப்பட்டதற்கு எதிராக ட்ரொட்ஸ்கி நடத்திய போராட்டத்தின் பாரம்பரியத்தின் வழியாக அரசியல்ரீதியாய் வழிநடத்தப்படுவதன் அடிப்படையிலுமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கைவிடலாமெனக் கூறப்பட்டது. சோசலிசப் புரட்சியின் எதிர்கால கதியானது ஏதேனும் ஒரு வடிவத்தில் அல்லது வேறு வடிவத்தில் சோவியத் அதிகாரத்துவத்துடன் கூட்டணி சேர்ந்த அல்லது அதனைச் சார்ந்து இயங்குகின்ற பல்தரப்பட்ட முதலாளித்துவ தேசியவாத மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிர அமைப்புகளின் வரிசையை நம்பி ஒப்படைக்கப்பட கூறப்பட்டது. பப்லோவாதிகளுடன் SWP இன் இந்த கோட்பாடற்ற மறுஇணைவுக்கு SLLம் PCI (பின்னர் இது OCI ஆனது) க்குள் இருந்த பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் காட்டிய எதிர்ப்பு நான்காம் அகிலம் கலைக்கப்படுவதை தடுத்து நிறுத்தியது. மேலும் SLL நடத்திய போராட்டமானது அனைத்துலகக் குழுவின் வேலை விரிவாக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக்கும், இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், பின்னர் 1970களின் ஆரம்பத்தில் ஜேர்மனியில் சோசலிச தொழிலாளர் கழகமும் (Bund Sozialistischer Arbeiter) ஆஸ்திரேலியாவில் சோசலிச தொழிலாளர் கழகமும் உருவாக்கப்பட்டன. SWP-பப்லோவாதிகள் மறுஇணைவை நிராகரித்ததைத் தொடர்ந்த ஆண்டுகளில் SLL கணிசமான வளர்ச்சிக்குச் சென்றது. இந்த வளர்ச்சியில், நாம் காணவிருப்பதுபோல், அரசியல் முரண்பாடுகள் இல்லாமலில்லை. ஆனால், SLL முன்னெடுத்த ஒரு சர்வதேசிய புரட்சிகர வேலைத்திட்டம் பிரிட்டனில் மிகவும் அரசியல் நனவு கொண்ட மற்றும் சுய-அர்ப்பணிப்பு கொண்ட தொழிலாள வர்க்கப் பிரிவுகளை, குறிப்பாக மே-ஜூன் 1968 நிகழ்வுகளைத் தொடர்ந்த தொழிலாள வர்க்கப் போராட்ட எழுச்சி நிலைமைகளின் கீழும், அத்துடன் 1970 ஜூனில் டோரிக்கள் அதிகாரத்துக்குத் திரும்பியிருந்த நிலைமைகளின் கீழும், மிகவும் கவர்ந்தது என்பதில் சந்தேகமேயில்லை. இதுதான் டேவ் ஹைலண்ட் புரட்சிகர அரசியலில் காலடி எடுத்து வைத்ததற்கான பின்புலம். SLL ஐ நோக்கி ஈர்க்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவராக டேவ் ஹைலண்ட் இருந்தார். 2005 அக்டோபரில் அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் அவர் SLL இல் தான் இணைந்த நிலைமைகளை நினைவுகூர்ந்திருந்தார்: “வீல்ட்ஸ்டோன் கோடாக்-ஆலையில் 25வயது தொழிலாளியாக நான் வேலை செய்து கொண்டிருந்தேன். தொழிற்சாலையிலும் ACTT பிலிம் சங்கத்திலும் ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான் முதன்முதலில் Workers Press ஐ படித்தேன். ஸ்ராலினிஸ்டுகளை அவர்களது மோசடித்தனத்தனம் மற்றும் தொழிலாளர்களை நோக்கிய நடிப்பு இரண்டிற்காகவும் தீவிரமாக வெறுத்து வந்திருந்தேன், ஆனாலும் அவர்களை அரசியல்ரீதியாக நான் புரிந்து வைத்திருக்கவில்லை. நான் வாங்கி வந்திருந்த Workers Press இல் மத்திய கிழக்கில் ஸ்ராலினிசத்தின் வரலாற்றுப் பாத்திரம் குறித்து ஒரு மையக் கட்டுரை வெளியாகியிருந்தது. அதுவரை கண்ணை மறைத்திருந்த ஒன்று விலகியது போல் இருந்தது. அந்தக் கட்டுரை ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர அரசியல் பாத்திரத்தை விளக்கியதோடு அதற்கு எதிரான போராட்டம் ஒரு சர்வதேச இயக்கத்தின் பகுதியாகவே நடத்தப்பட முடியும் என்பதையும் தெளிவாக்கியது. [டேவிட் நோர்த்துக்கு எழுதிய கடிதம், அக்டோபர் 9, 2005] பிரிட்டனில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்ததற்கு இடையே டேவ் இணைந்தார். 1972 இல் ஹீத் அரசாங்கம் புதிய தொழிற்துறை உறவுகள் சட்டத்தின் முற்றுகைப் போராட்ட தடுப்பு ஷரத்துகளை மீறிய ஐந்து துறைமுகத் தொழிலாளர்களை சிறையிலடைத்ததை அடுத்து ஒரு அறிவிக்கப்படாத பொதுவேலைநிறுத்தம் எழுந்தது. அரசாங்கம் தொழிலாளர்களை விடுதலை செய்யத் தள்ளப்பட்டது. அதே ஆண்டில் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஒரு தேசிய அளவிலான வேலைநிறுத்தம் அரசாங்கம் மீண்டும் பின்செல்லத் தள்ளியது. டேவ் SLL இல் தான் பெற்ற அரசியல் கல்விக்கு தன் வாழ்வின் இறுதி வரை பெருமிதத்தோடும் விசுவாசத்தோடும் இருந்தார். கட்சிக்கு வென்றெடுக்கப்பட்டிருந்த கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளது ஒரு பிரிவின் வேலைகளுக்கு அவர் குறிப்பாக மிகவும் உற்சாகமளித்தவராக இருந்தார். 2010 இல், கொரின் ரெட்கிரேவ் மரணமடைந்ததைத் தொடர்ந்து, டேவ் உலக சோசலிச வலைத் தளத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்: “WRP’இன் முன்னோடிக் கட்சியில் 1970களின் ஆரம்பத்தில் கொரின் [ரெட்கிரேவ்] சேர்ந்த அதேசமயத்தில் தான் நானும் இணைந்தேன். அவரை அத்தனை நன்றாக எனக்குத் தெரியாது என்றபோதிலும் ஒரு சில வருடங்களுக்கு தலைமைக்குள் இருந்த இரண்டு பிற கலைஞர்கள்/புத்திஜீவிகளுடன் எனக்கு நெருக்கமான அரசியல் உறவு இருந்தது – இயக்குநர் ராய் பேட்டர்ஸ்பை மற்றும் கதைவசனகர்த்தா ரோஜர் ஸ்மித் தான் அந்த இருவர். இது நாங்கள் SLL/WRP மற்றும் ACTT சங்கம் இரண்டிலும் உறுப்பினர்களாக இருந்ததால் விளைந்ததாகும். ”நான் ஹரோவில் கோடாக் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தேன். உள்ளூர் தோழர்களுடன் இணைந்து கட்சியின் கிளை ஒன்றைக் கட்டத் தொடங்கினோம். ராயும் ரோஜரும் பெரும் ஆர்வத்துடன் தங்களை இந்த வேலைக்குள் நுழைத்துக் கொண்டனர். ஞாபகமிருக்கிறது, ராய் ‘இயற்கையின் இயங்கியல்’ குறித்து தொடர்ச்சியாக பொதுக்கூட்ட உரைகளை வழங்கி வந்தார், ரோஜர் கட்சிக்கிளையில் ‘சோசலிசம்: கற்பனாவாதமும் விஞ்ஞானமும்’ என்ற தலைப்பில் வகுப்புகள் எடுத்தார், இருவருமே தொழிற்சாலை வாசல்களில் அவ்வப்போது பத்திரிகை விற்று வந்தார்கள். சிக்கலான கருத்துகளை விளக்குவதிலும் அவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளச் செய்வதிலும் அவர்கள் சிறந்து விளங்கினர். இந்த உரைகளும் வகுப்புகளும் மிக முக்கியமானவையாக இருந்தன, ஏனென்றால் அவை தொழிற்சாலை மற்றும் தொழிற்சங்கத்தின் உடனடியான பிரச்சினைகளில் இருந்து விவாதத்தை வெளியே அழைத்துச் சென்று தத்துவம், வரலாறு மற்றும் விஞ்ஞானம் குறித்தான பிரச்சினைகளின் விவாதத்திற்குக் கொண்டுசென்றது. “இவை உறுப்பினர்களிடையே பிரபலமான விவாதங்களாய் இருந்தன, அதைப்போலவே சிலி, அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் என முக்கியமான சர்வதேச அபிவிருத்திகளைச் சுற்றிய பிரச்சினைகளும் அவர்களது விவாதப் பொருட்களாகின. தொழிற்சாலையின் உள்ளே ஒரு பிரஷர் குக்கர் போல அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தது. நிர்வாகமும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் கூட்டுச்சேர்ந்து ட்ரொட்ஸ்கிசவாதிகளை மாட்டி விடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர். தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் அனுதாபம் காட்டிய போதிலும் கூட, தொழிற்சங்க வலிமையின் மூலமாகவே அரசாங்கங்களை கவிழ்க்க இயல முடிவது போல் தோற்றமிருந்த நிலையில் ஒரு புரட்சிகர கட்சிக்கான உண்மையான அவசியத்தை உணர முடியாதவர்களாய் அவர்கள் இருந்தனர்.” [உலக சோசலிச வலைத் தளத்திற்கு எழுதிய கடிதம், ஏப்ரல் 16,2010] 1970க்கும் 1974க்கும் இடையிலான காலகட்டத்தில் SLL பெரும் வளர்ச்சியைக் கண்டது. முன்வந்தவொரு காலத்தில் SLL இல் அபிவிருத்தியுற்றிருந்த அரசியல் பிரச்சினைகள் அத்தனையையும் முழுமையாகத் திறனாய்வு செய்வதற்கான காலமும் இடதும் இதுவல்ல என்றபோதும் அதற்கடுத்துவந்த நெருக்கடியை புரிந்து கொள்ள சில புள்ளிகளை வலியுறுத்திக் கூறுவது அவசியமாக இருக்கிறது. ஒரு இயக்கம் துரிதமான வளர்ச்சிக்குள் செல்லும் போது அந்த வளர்ச்சியை விமர்சனமற்றுக் காண்பதும், வெகுஜன இயக்கத்தில் நிலவுகின்ற நனவுக்கு அதனை தகவமைத்துக் கொள்வதும் எப்போதுமே ஆபத்தானதாகும். பிரிட்டனில் வெகுஜன இயக்கத்தின் நனவில் தொழிற்சங்கவாதமே அதாவது தொழிற்கட்சியின் வெற்றி மூலமாகவும் டோரிக்களைத் தோற்கடிப்பதன் மூலமாகவும் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் பிரதான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட முடியும் என்பதான கருத்தாக்கமே மேலோங்கியிருந்தது. ஒரு அமைப்பாளராக, பெரும் பேச்சாளராக, மற்றும் ஒரு அரசியல் மூலோபாயவாதியாக பிரிட்டிஷ் தொழிலாளர்’ இயக்கத்தில் ஜெர்ரி ஹீலிக்கு ஈடு சொல்ல எவரும் இல்லை. சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக கோட்பாடுகளுக்கு ஆதரவான பல தசாப்த கால அரசியல் போராட்டத்தை அவர் பிரதிநிதித்துவம் செய்தார். பல தசாப்த கால போராட்டத்தில் புடம்போடப்பட்டிருந்த அவரது அரசியல் ஆளுமையானது சோசலிசப் புரட்சிக்கான அசைந்து கொடுக்காத மற்றும் ஒற்றை நோக்குடனான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது, இது தான் டேவ் ஹைலண்டை தீவிரமாக ஈர்த்தது. ஹீலி தனது சிறந்த காலகட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் வலிமையில் தனது தீவிரமான நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்கின்ற திறனைப் பெற்றிருந்தார். அந்தத் திறனானது 1970 முதல் 1974 வரையான எழுச்சியின் போது அதன் பூரண வெளிப்பாட்டைக் கண்டது. அந்த காலகட்டத்தில் ஜெர்ரி ஹீலி பேசக் கேட்பது உத்வேகம் அளிப்பதாகவும் மறக்கமுடியாத அனுபவமாகவும் இருக்கும். 1974 பிப்ரவரியில் டோரி அரசாங்கம் வீழ்ந்ததானது ஹீலியின் நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்தது. டோரிக்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் எழவிருந்த மிகப்பிரம்மாண்டமான பிரச்சினைகள் குறித்து ஹீலி குறைமதிப்பீடு செய்திருந்தார். பெரும் எழுச்சியின் காலகட்டத்தில் SLL மிக வேகமாக வளர்ந்து வந்ததொரு சமயத்தில் ஹீலி அடிக்கடி சொல்வதுண்டு, தொழிலாள வர்க்கம் டோரி எஜமானையே வீழ்த்த முடிந்தது எனும்போது அவரின் சேவகர்களை நிச்சயம் வீழ்த்தி விட முடியும் என்று. ஆனால் ஏராளமான பிரிட்டிஷ் தொலைக்காட்சித் தொடர்களில் நாம் கண்டு வந்திருப்பதைப் போல, வேலைக்கமர்த்தும் எஜமானர் மற்றும் எஜமானியம்மாளைக் காட்டிலும் அந்த வீட்டின் நலன்களைப் பார்த்துக் கொள்வதில் அந்த வேலையாள் மிகத் திறமைசாலியாகவும் மிகத் தீர்மான உறுதிமிக்கவராகவும் காண்பது அபூர்வமான விடயமல்ல. 1974 ஆம் ஆண்டில், தொழிற் கட்சியின் அரசியல் சேவகர்கள், வெகுஜன தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தான் தமது மையமான பணி என்பதை தமது சீர்திருத்தவாத துரோகத்தின் நெடிய பாரம்பரியத்தைக் கொண்டு புரிந்து கொண்டார்கள். தொழிலாள வர்க்கத்தில் இருக்கும் அரசியல் குழப்பத்தின் ஒவ்வொரு வடிவத்தையும், தொழிற் கட்சி மீது எஞ்சியிருக்கும் பிரமைகளையும் சுரண்டி ஆளும் வர்க்கம் 1970களில் பெற்ற அவமதிப்பான தோல்விகளுக்கு வஞ்சம் தீர்க்க அதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பதில் இவர்கள் மிகத் தீர்மானமாக இருந்தார்கள். இம்மியும்பிசகாமல் அதுதான் நடந்தது. தொழிற் கட்சி அரசாங்கம் வெகுஜன இயக்கத்தின் நம்பிக்கைகளைக் காட்டிக்கொடுத்த அதேசமயத்தில் ஆளும் வர்க்கம் மார்கரெட் தாட்சரை அதிகாரத்திற்கு வளர்த்தெடுத்தது. டோரி எதிர்ப்பு இயக்கத்தின் போது SLL கணிசமான முன்னேற்றங்களைக் கண்டது என்றபோதிலும், தொழிற்கட்சி அரசாங்கம் அதிகாரத்திற்குத் திரும்பியதை பின்தொடர்ந்து வந்த சவால்களுக்கு அது அரசியல்ரீதியாகத் தயாரிப்பில்லாமல் இருந்தது என்பது, இறுதி ஆய்வில், புலப்பட்டது. SLL இன் நடைமுறை வெற்றிகளுடன் கைகோர்த்து முந்தைய காலகட்டம் குறித்த கணிசமான அரசியல் முரண்பாடுகளும் கூட அபிவிருத்தியுற்று வந்திருந்தன. இந்த முரண்பாடுகள் புறநிலைச் சூழல்கள் மற்றும் தலைமையின் அகநிலைத் தவறுகள் இரண்டிலும் வேர் கொண்டவையாக இருந்தன. SWP உடனான பிளவுக்குப் பிந்தைய காலத்தில், பப்லோவாத கலைப்புவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது தொடர்ச்சியாக கவனம் செலுத்த அவசியமாக இருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்படுவதைக் காட்டிலும் பெருமளவில் ஒரு அமைப்புரீதியான பிரச்சினையாகக் காணப்பட்டு வந்திருந்தது. பிரிட்டனில் இயக்கம் நடைமுறை வளர்ச்சி கண்டதானது —அதாவது இளைஞர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே அதன் செல்வாக்கு விரிவு கண்டதும், அதன் பொருளியல் வளங்கள் விரிவு கண்டதும்— ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், பப்லோவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் பல்வேறு வடிவங்களும் முன்வைத்த பிரச்சினைக்கான அடிப்படையான மற்றும் தீர்மானகரமான விடையாக பார்க்கப்பட்டது. இவ்வாறாக சோசலிசப் புரட்சியின் பிரச்சினை, சர்வதேசக் கட்டமைப்பிற்குள்ளகப் பார்க்கப்படுவதைக் காட்டிலும் ஒரு தேசியவாத கட்டமைப்பிற்குள்ளாக பார்க்கப்படுவது அதிகரித்தது. பிரிட்டனுக்குள்ளான உடனடி சந்தர்ப்பங்கள் சோசலிசப் புரட்சியின் ஒரு விரிந்த வரலாற்று மற்றும் சர்வதேச உள்ளடக்கத்தில் இருந்து பிரித்துப் பார்க்கப்பட்டது. இது பிரிட்டனிலான தந்திரோபாய வெற்றிகள் ஒருவகையில் சர்வதேச சக்திகளுக்கு இடையிலான உறவில் இருந்த பிரச்சினைகளைத் தீர்த்து விடும் என்பதான பிரமைகளை ஊக்குவித்தது. பக்கவாட்டில் ஒட்டி வைத்திருப்பதற்கும் பிரிட்டனில் வளர்ந்து வந்த SLL இன் நடவடிக்கைகளுக்கு துணையுதவி செய்வதற்கும் தான் அனைத்துலகக் குழு என்பதாக ஆனது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டமானது, தத்துவம் மற்றும் அரசியல் முன்னோக்குகளின் மட்டத்தில், பிரிட்டனில் கட்சி கட்டுவதிலான நெருக்கும் பிரச்சினைகளில் இருந்தான ஒரு திசைதிருப்பும் கவனச்சிதறலாகக் கருதப்பட்டது. தேசியப் பிரச்சினைகளில் கவனம் குவித்ததானது தவிர்க்கவியலாமல் வெகுஜன டோரி-எதிர்ப்பு இயக்கத்தில் மேலோங்கி இருந்த குறைந்துபட்ட அரசியல் நனவுக்குத் தகவமைத்துக் கொள்ளும் வடிவத்தை எடுத்தது. இந்த தகவமைவின் மிகத் தீவிர வெளிப்பாடு தான் 1973 நவம்பரில் பெருமளவில் ஒரு தேசிய முன்னோக்கின் அடிப்படையில் SLL WRP ஆக உருமாற்றம் பெற்றதாகும். WRP ஸ்தாபக விவாதங்களில் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் பங்குபெறவில்லை என்பதோடு ஸ்தாபன காங்கிரஸின் நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூட அவை அழைக்கப்படவில்லை. நான் விவரித்திருக்கும் கருத்துகளும் மனோபாவங்களும் ஒரேயடியாக எழுந்தவை அல்ல. உண்மையில், டோரி-எதிர்ப்பு காலகட்டத்தில் SLL ஆல் உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு ஆவணங்கள் மற்றும் கட்டுரைகளில் புரட்சிகர சர்வதேசியவாதம் மற்றும் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் ஆகிய பிரச்சினைகளில் முழுக்கவும் மரபுவிலகாத கூற்றுகள் இருப்பதைக் காண்பது சாத்தியமே. ஆனால் SLL இன் பரிணாம வளர்ச்சியை இன்னும் கவனமாக ஆய்வு செய்ததில் –இதனை ICFI 1985-86 உடைவுக்குப் பிறகு மேற்கொண்டது– தேசிய சந்தர்ப்பவாதத்தை நோக்கிய ஒரு வீழ்ச்சி 1960களின் பிற்பகுதியில் உருவாகி 1970களின் முற்பகுதியில் வலிமை பெற்றது நிரூபணமாகியது. அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான OCI உடனான முறிவின் சடுதியிலான மற்றும் அரசியல்ரீதியாகத் தெளிவற்ற தன்மைக்கு அனைத்துலகக் குழு ஏராளமான ஆவணங்களில் கவனத்தை ஈர்த்தது. SLLக்கும் OCIக்கும் இடையிலான மோதலின் கீழமைந்த அடிப்படையான அரசியல் முன்னோக்கு பற்றிய பிரச்சினைகள் அதிகம் விவாதிக்கப்படாததாக இருந்தது. பிரான்சில் 1968 மே-ஜூன் மாதத்தின் மகத்தான நிகழ்வுகளில் இருந்து எழுந்த சர்வதேசிய புரட்சிகர மூலோபாயத்தின் மிக முக்கியமான பிரச்சினைகள் உரியமுறையில் கையாளப்பட்டு அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையே இந்தப் பிரச்சினைகளிலான நழுவல் உணர்த்தியது. மேலும் OCI ஏற்றுக் கொண்ட சந்தர்ப்பவாதப் போக்குகள் அத்தனையும் பிரெஞ்சு அமைப்பின் பிரச்சினைகளின் வெளிப்பாடு மட்டுமே எனப் புரிந்து கொண்ட மட்டத்தில், இதேபோன்ற பிரச்சினைகள் பிரிட்டிஷ் அமைப்பிற்குள்ளாகவும் எவ்வாறு தம்மை வெளிப்படுத்தின என்பதை ஆராய SLL தவறியது. பிரெஞ்சு அமைப்புடனான மோதலில் SLL உணர்ந்து கொள்ளத் தவறிய இன்னுமொரு முக்கியக் கூறும் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் இறுதி வரைக்கும் பிரெஞ்சு உளவுத் துறை மார்க்சிசத்துக்கு எதிரான போராட்டத்தின் முன்னிலையில் நின்றது. நாஜிக்களுடன் அவரது அருவருக்கத்தக்க கூட்டின் காரணத்தால் ஜேர்மனியில் மதிப்பிழந்து விட்டிருந்தாலும், ஹேய்டெக்கர் பிரான்சில் எண்ணற்ற எடுபிடிகளை கண்டார். இருத்தலியல்வாதத்தை (Existentialism) பிரெஞ்சு புத்திஜீவிவட்டம் ஆவேசமாய் பற்றிக் கொண்டது. 1968 மே-ஜூன் எழுச்சிகளுக்குப் பின்னால், சோசலிசப் புரட்சியின் பயங்கரத்தை நினைத்து மிரட்சி கண்ட பிரெஞ்சு புத்திஜீவிகள் மற்றும் மாணவர் இளைஞர்களின் பெரும் பிரிவுகள் முன்னதாக மார்க்சிசத்துடன் அவர்கள் பராமரித்து வந்த எந்தவொரு தொடர்புகளையும் கூட துண்டித்து விட்டனர். 1968க்குப் பிந்திய புத்திஜீவித்தன பிற்போக்குத்தனத்தின் ஒரு சூழலில் Sartreம் கூட மார்க்சிசத்துடன் இணக்கமானவராய் பார்க்கப்பட்டார். தத்துவார்த்த பகுத்தறிவு மறுப்போரின் ஒரு புதிய தலைமுறை முன்னிலைக்கு வந்தது. Lyotard மற்றும் Foucault இன் காலம் விடிந்திருந்தது. OCI உடன் முறித்துக் கொண்டு விட்டிருந்த SLL இந்த அபிவிருத்திகள் குறித்தும் ஒரு புரட்சிகரக் கட்சியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைக்கு இவை கொண்டிருந்த தொலைநோக்குத் தாக்கங்கள் குறித்தும் பெருமளவுக்கு அறியாநிலையில் இருந்தது. ஆனால் தத்துவார்த்தப் பிரச்சினைகளின் முக்கியத்துவம் தெளிவாக வெளிவருவதற்கு முன்பாகவே, OCI உடனான வேறுபாடுகளை கவனக்குறைவாகக் கையாண்டதன் அரசியல் பின்விளைவுகள் WRPக்குள்ளாக தம்மை உணரும்படி செய்தன. 1974 அக்டோபரில் WRPஇல் இருந்த முன்னணி தொழிற்சங்கவாதி –ஆம், உண்மையில் அவர் முன்னணி தொழிற்சங்கவாதியாகத் தான் உண்மையிலேயே இருந்தார்– அலன் தொர்னெட் (Alan Thornett) அரசியல் குழுவின் ஒரு கூட்டத்தில் கருத்துவேறுபாடுகளை அறிவித்தார். புதிய தொழிற் கட்சி அரசாங்கத்திலான பிரமைகளை வெளிப்படுத்தியதாக இருந்த தொர்னெட்டின் நிலைப்பாடுகள் OCI ஆல் சூத்திரப்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தன. அரசியல் ரீதியாக விசுவாசமற்றவராகவும் நேர்மையற்றவராகவும் தொர்னெட் அவர் ஒரு எதிர்ப்பு அமைப்புடன் இணைந்து வேலை செய்து கொண்டிருந்தார் என்பதை வெளிக்காட்டாமல் இருந்திருந்தார். WRP இன் அரசியல் குழுவில் தொர்னெட் வழங்கிய நிலைப்பாடுகள், அவர் சூத்திரப்படுத்தியது அல்ல என்பதை ஐந்து நிமிடங்களுக்குள் ஹீலி புரிந்து கொண்டு விட்டார். தொர்னெட்டின் வாதங்கள் அப்போது மித்திரோனின் சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருந்த OCI இன் அரசியல் நிலைப்பாடுகளை பிரதிபலித்ததை ஹீலி புரிந்து கொண்டார். தலைமைக்குள்ளாக OCI இன் நிலைப்பாடுகளை தொர்னெட் முன்வைக்க முடிகின்ற ஒரு நிலை OCI க்கு எதிரான போராட்டத்தின் அலட்சியத்தில் இருந்தே எழுந்திருந்தது. தொர்னெட் உடனான மோதல், OCI உடனான கருத்துவேறுபாடுகளை தெளிவுபடுத்துவதற்கான தாமதமான சந்தர்ப்பத்தையேனும் WRPக்கு வழங்கியது. ஆனால் மறுபடியும், ஹீலியின் பதிலிறுப்பானது அரசியல் பிரச்சினைகளைப் பின் தொடர்வதற்குப் பதிலாக தொர்னெட் உடன் துரிதமாய் அமைப்புரீதியான தீர்வுக்கு செல்வது என்பதாக இருந்தது. இதன் விளைவாகவே 1974 அக்டோபருக்கும் டிசம்பருக்கும் இடையில் WRP பல நூறு உறுப்பினர்களை இழந்தது, தொழிற்சங்க அடித்தளத்தில் இருந்த அதன் கணிசமான பிரிவும் அதில் அடங்கும். டேவ் ஹைலண்ட், தொர்னெட் உடன் செல்லவில்லை என்பது அவரது அரசியல் வலிமைக்குச் சான்றாக அமைந்தது. தொர்னெட்டின் பிராந்திய தொழிற்சங்க முன்னோக்கு ஹீலிக்கு பிடிக்கவில்லை. தொர்னெட்டின் இரட்டை வேடம், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பாரம்பரியங்களுக்கு அவர் காட்டிய அலட்சியம், மற்றும் அவரது சந்தர்ப்பவாத முன்னோக்கு ஆகியவை ஹீலிக்கு வெறுப்பூட்டுவதாக இருந்தன. டேவ் கட்சிக்கு விசுவாசமானவராக தொடர்ந்து இருந்தார். ஆனால் WRP க்குள்ளான நெருக்கடி ஆழமடைந்தது. தொழிற் கட்சி அதிகாரத்தில் இருந்த நிலையில், டோரி-எதிர்ப்பு இயக்கத்தின் போது இணைந்த பலரும் கட்சியை விட்டு அகன்றனர், இது அமைப்புரீதியான நெருக்கடிகளையும் அதிகரித்தது. இந்த நெருக்கடியில் இருந்து வெளியேற வழி காண்கின்ற முயற்சியில் ஹீலி மத்திய கிழக்கின் முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் அத்தனை வகை கோட்பாடில்லாத உறவுகளையும் உருவாக்கினார். WRP இன் சந்தர்ப்பவாதச் சீரழிவு அனைத்துலகக் குழுவிற்குள் வேர்க்கர்ஸ் லீக்குடன் அது மோதலுக்குச் செல்ல இட்டுச் சென்றது. 1982 அக்டோபருக்கும் 1984 பிப்ரவரிக்கும் இடையில், வேர்க்கர்ஸ் லீக் WRP இன் தத்துவார்த்த கருத்தாக்கங்கள் மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தின் மீதான விரிவான விமர்சனங்களை முன்வைத்தது. ஆயினும் கருத்துவேறுபாடுகளை அனைத்துலகக் குழுவிற்குள்ளாக விவாதிக்காமல் WRP உடன் வேர்க்கர்ஸ் லீக் முறித்துக் கொள்வது ஒரு பெரும் அரசியல் தவறாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம். அனைத்துலக இயக்கத்திற்குள்ளாக வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் நிலைப்பாடுகள், புரிந்து கொள்ளப்படுவதை விடுங்கள், இன்னும் அதிகம் அறியப்படாததாகவும் கூட இருந்தது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். குறிப்பாக, WRP க்குள்ளான நிலையே கூட எங்களுக்குத் தீவிரமான கவலை தருவதாக இருந்தது. WRP இன் தலைமையுடன் எனக்கு அரசியல் கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும், அக்கட்சி மீது மிகப்பெரும் மரியாதை எனக்கு இருந்தது. அதன் வரலாறு, அதன் பல தசாப்த கால போராட்டம் எல்லாம் அறிந்தவன் நான். அதன் காரியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்தவர்கள், பலசமயங்களில் ஒருநாளைக்கு 12 மணி நேரம், 15 மணி நேரம், ஏன் 18 மணி நேரம் வரையும் கூட அவர்கள் கடுமையாக உழைத்திருந்தார்கள். ட்ரொட்ஸ்கிசத்துக்கு அர்ப்பணிப்பு கொண்ட கட்சி உறுப்பினர்கள் இருந்தார்கள், சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அதிமுக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை அவர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. முன்னொருபோதையும் விட மிக வெளிப்படையான சந்தர்ப்பவாத வீழ்ச்சி குறித்து அந்த அமைப்பில் கவலை ஏதும் இருக்காது என நம்புவதற்கு எனக்குக் கடினமாய் இருந்தது. ஆனால், கட்சியின் சாமானிய உறுப்பினர்களை ஒருவர் சென்றடைவது எப்படி? சாமானிய உறுப்பினர்களுடன் ஏறக்குறைய எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். Workers Press ஆண்டுதினத்திற்காக அல்லது ட்ரொட்ஸ்கி படுகொலை தின அனுசரிப்பின் போது அவ்வப்போது லண்டன் நடைபாதைக் கூட்டங்களில் பங்கெடுத்திருக்கிறேன். ஆனால் கட்சியின், குறிப்பாக மையத்திற்கு வெளியில், உறுப்பினர்களுடனான எனது தொடர்பு என்பது மிக மிகக் குறைவானது. அப்படியே தான் தொடர வேண்டும் என்பதில் WRP தீர்மானமாக இருந்தது. 1985 கோடையின் பிற்பகுதியில் சூழல் திடுதிப்பென மாற்றம் கண்டது. 1985 செப்டம்பர் 3 அன்று மாலை, அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது, WRP இன் பொதுச் செயலாளரான மைக்கல் பண்டாவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, “கூட்டணியைத் தொடருங்கள்”என்று சூசகமாக அவர் என்னிடம் கேட்டார். 1982 அக்டோபரின் ஒரு சமயத்தில், பண்டா, WRP இன் தவறான தத்துவார்த்த மற்றும் அரசியல் கருத்தாக்கங்கள் மீதான ஒரு விவாதத்தைத் தொடக்கிவைப்பதற்கான எனது முயற்சிகளுக்கு அவர் ஆதரவளிப்பதாக வாக்குறுதியளித்ததை ஒட்டி ஏற்பட்ட ஒரு உடன்பாட்டை அவர் குறிப்பிட்டார். ஆனால் சில வாரங்களுக்குள்ளாகவே பண்டா தனது வாக்குறுதியில் இருந்து தடம்புரண்டு, ஹீலி உடனான முழுமையான சந்தர்ப்பவாத ஒப்பந்தம் ஒன்றிற்கு சென்று விட்டிருந்தார். பண்டாவிடம் இருந்து வந்த அழைப்பு குறித்து மறுநாள் நான் வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் குழுவுக்கு தகவல் தெரிவித்தேன். WRP இன் எந்தத் தலைவருடனும் வேர்க்கர்ஸ் லீக் கூட்டணிக்குள் செல்வதில்லை என்பதில் நாங்கள் ஒருமனதாக உடன்பட்டோம். WRPஇன் தலைமை முழுக்க முழுக்க ஒரு சந்தர்ப்பவாத வழியில் நடந்து கொண்டு விட்டிருந்தது என்பதை நாங்கள் இப்போது புரிந்துகொண்டோம். தனது சொந்த கன்னை சண்டைகளைக் கட்டுப்படுத்த அனைத்துலகக் குழுவை சுரண்டிக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளவும் கூட அது முனைவதாக நான் கருதினேன். ஆனால், வேர்க்கர்ஸ் லீக்கைப் பொறுத்த வரையில், அனைத்துலகக் குழுவானது, WRP தலைவர்களின் கன்னை நலன்களுக்கு உலக இயக்கத்தின் தேவைகளைக் கோட்பாடற்ற வகையில் அடிபணியச் செய்வதை சகித்துக் கொள்ளத் தயாராய் இல்லை. அமைப்பிற்குள் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காண நானும் லாரி போட்டரும் 1985 செப்டம்பரின் மத்தியில் இங்கிலாந்து சென்றோம். உடல்நிலை மோசமடைந்ததாலும் வயதாகி விட்டதாலும் ஹீலி இராஜினாமா செய்கிறார் என்பது மட்டும் தான் எங்களிடம் சொல்லப்பட்டது. அந்த விளக்கத்தை நாங்கள் நம்பவில்லை என்பதை என்னால் உங்களுக்கு உறுதிப்படச் சொல்ல முடியும். ஆனால் இந்த நெருக்கடியின் உடனடிக் காரணம் என்னவாக இருந்தபோதிலும், தலைமையின் அரசியல் நோக்குநிலை பிறழ்வு மற்றும் சந்தர்ப்பவாதப் பின்சரிவு ஆகியவற்றின் விளைபொருளாகத் தான் இது தோன்றியிருந்தது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். நான் பண்டாவை சந்தித்தபோது, WRPக்குள்ளான நெருக்கடிக்கு அவரிடம் அரசியல் விளக்கம் ஏதுமில்லை என்பது தெளிவாகிவிட்டது. 1982 மற்றும் 1984 இல் செய்யப்பட்டிருந்த அரசியல் விமர்சனங்கள் குறித்து நான் அவருக்கு நினைவூட்டினேன். அவர் ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்த அவரது கோப்புகளுக்குள் தேடு தேடு என்று தேடி எனது 1984 பிப்ரவரி அறிக்கையின் ஒரு நகலைக் கண்டுபிடித்து விட்டார். நான் கூறியவை சரிதான் என்று பண்டா ஒப்புக் கொண்டார். என்னுடன் விவாதிக்க விரும்பிய அவர், யோர்க்ஷயர் வரை தன்னுடன் வர முடியுமா என்று கேட்டார். சமீபத்தில் முடிவடைந்திருந்த சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் ஒரு முக்கிய பாத்திரம் ஆற்றியிருந்த ஒரு தோழரை அங்கு அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ரோத்தர்ஹாமில் இருந்த டேவ் ஹைலண்ட் தான் அவர் சந்திக்கத் திட்டமிட்டிருந்த அந்தத் தோழர். டேவ் ஹைலண்ட் என்ற பெயர் மட்டுமே நான் அறிந்திருந்தேன். அவரிடம் அதற்கு முன்னால் நான் பேசியதில்லை. பிரிட்டிஷ் பேருந்தில் எத்தனையோ முறை பயணித்திருக்கிறேன், ஆனால் அதிலெல்லாம் மிக முக்கியமானதாக ஆனது ரோதர்ஹாம் நோக்கிய இந்த மூன்று மணி நேரப் பயணம் தான். டேவின் இல்லத்திற்கு பண்டா வந்துசேர்ந்ததற்குப் பின்னர், சுரங்கத் தொழிலாளர்களிடையே வேலை செய்வது தொடர்பான பிரச்சினைகள் குறித்து மையமற்ற ஒரு விவாதம் நடந்தது. விவாதம் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்ததால் எனது கவனம் ஹைலண்டின் சமையலறையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு அழகான நாயின் மீது தான் அதிகம் இருந்தது. விளையாட்டாக ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டதைத் தவிர்த்து டேவும் நானும் வேறெதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் கிளம்பிக் கொண்டிருந்தபோது, எனக்கு ஆச்சரியமான விதத்தில் பண்டா, 1984 பிப்ரவரியில் அனைத்துலகக் குழுவுக்கு நான் கொடுத்திருந்த அறிக்கையின் ஒரு நகலை எனது பையில் இருந்து சட்டென்று உருவினார். அதை டேவ் ஹைலண்டிடம் அவர் கொடுத்ததும் நாங்கள் கிளம்பி விட்டோம். 2005 இல் டேவ் எனக்கு எழுதினார்: “1985 இல் உங்களது இயங்கியல் ஆய்வுகள் [விமர்சனத்தை] நான் படித்த போதும், அதேபோல் 1982 இல் இருந்து வேர்க்கர்ஸ் லீக்கில் நடந்து வருகின்ற விவாதத்தை சுருங்க விவரிக்கும் மற்ற ஆவணங்களைப் படித்த போதும் எனக்கு அது ஒரு பெரும் கண்திறப்பு போல இருந்தது. பொதுவாக வரலாற்று, தத்துவார்த்த மற்றும் அரசியல் கேள்விகளை நோக்கிய அணுகுமுறை என்பது அந்தசமயத்தில் ஒரு மார்க்சிச வரலாற்று முன்னோக்கு மற்றும் விஞ்ஞான வழிமுறைக்கு நேரெதிர் வகையில் உடனடி உணர்வுகள் மற்றும் நடைமுறை முன்முயற்சிகள் ஆகியவற்றில் இருந்து தான் ஒவ்வொன்றையும் தொடங்குவது என WRP இல் இருந்த நிலைக்கு முற்றிலும் மாறானதாக இருந்தது. அதனால் தான் 20 ஆண்டுகளுக்கு முன்பாக உங்களை நான் தொலைபேசியில் அழைத்தேன், அடுத்துவந்த நிகழ்வுகள் அது என் வாழ்க்கையில் நான் எடுத்த மிக முக்கியமான அரசியல் முடிவு என்பதை ஊர்ஜிதம் செய்தன.” எனக்கு அந்த தொலைபேசி அழைப்பு மிக நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் அப்போது உலி ரிப்பேர்ட் உடன் ஜேர்மனியில் இருந்தேன். அக்டோபர் 9 அன்று மாலை, விடயங்கள் எவ்வாறு போய்க் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக டெட்ராயிட்டுக்கு நான் தொலைபேசியில் பேசினேன். அப்போதுதான் பிரிட்டனில் WRP உறுப்பினர் ஒருவர் தொலைபேசியில் அழைத்திருந்தது எனக்குத் தெரியவந்தது. அந்த உறுப்பினரின் பெயர் டேவ் ஹைலண்ட் என்றும் அவர் என்னிடம் பேசுவதற்குக் கேட்டு அழைத்திருந்தார் என்றும் கூறப்பட்டது. இந்த செய்தியைக் கேட்ட எனக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. நான் கேட்டதை உலியிடம் சொல்லி விட்டு அவரிடம் கூறினேன்: “நாம் சிந்தித்தது ஒருவழியாக நடந்திருக்கிறது. பிரிட்டிஷ் கட்சியின் ஒரு பிரிவு அனைத்துலகக் குழுவுக்கு இப்போது அழைக்கிறது, நம்மிடம் அரசியல் பிரச்சினைகள் குறித்துப் பேச விரும்புகிறது.” அது எத்தனை முக்கியமானதாக அவசியமானதாக எங்களுக்கு இருந்தது என்பதை நான் மிகைப்படுத்தவில்லை. அந்தத் தருணம் வரைக்கும், நாங்கள் வெளியில் இருந்து உள்ளே பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிந்தது. எங்களுக்கு எந்த அணுகலும் இல்லாத ஒரு அரசியல் அமைப்பில் இரகசிய நுழைவு செய்பவர்களைப் போல இருந்தது எங்கள் நிலை. ஆனால் இப்போதோ ஒருவர் WRP க்குள் இருக்கும் நெருக்கடி குறித்து எங்களுடன் பேச விரும்புகிறார், அவர் நாங்கள் எழுதியிருந்த ஆவணங்களிலும் ஆர்வம் காட்டுகிறார். பல நாட்களுக்குப் பின்னர், பிரிட்டன் சென்று டேவ் ஹைலண்டை நான் தொடர்பு கொண்டேன். 1985 அக்டோபர் 12 அன்று காலையில் தான் முதல்முறையாக நாங்கள் சந்தித்தோம். நம்பக் கூட கடினமாக இருக்கும், முதல் சந்திப்பு நடந்தது கிளிஃப் சுலோட்டரின் வீட்டில். ஆனால் அங்கு டேவுக்கும் சரி எனக்கும் சரி வரவேற்பு இருந்ததாகப் படவில்லை. “அழையா விருந்தாளிகள்” என்று தான் எங்களை சுலோட்டர் குறிப்பிட்டார். டேவும் நானும் விவாதிப்பதற்காக அருகிலிருந்த ஒரு பப் (pub) பிற்கு சென்று விட்டோம். WRPக்குள்ளான நெருக்கடி மீதான திறனாய்வுக்கு பின்னர் டேவ், ’பிரிட்டனில் ஒரு ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஒருபோதும் இருந்ததில்லையே’ என்ற ஒரு பார்வையை வெளிப்படுத்தினார் (இது கூட அவர் கொண்டிருந்த நிலைப்பாடாக நான் நினைக்கவில்லை, என்னைக் கேள்வி கேட்பதற்காகவே கேட்டிருக்க வேண்டும்). இப்படி ஒரு நிலைப்பாட்டைத்தான் பண்டா ஊக்குவித்து வந்திருந்தார். அனைத்துலகக் குழு 1953 இல் ஸ்தாபிக்கப்பட்டது முதலாக அதன் போராட்டத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் சுமார் மூன்று மணி நேரம் நான் திறனாய்வுக்கு உட்படுத்திக் காட்டினேன். டேவ் உன்னிப்பாகக் கேட்டார், அவ்வப்போது ஏதேனும் ஒரு புள்ளியில் இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூறும்படிக் கேட்பார். என் திறனாய்வு உரை முடிந்ததும் டேவ் தனது நிலைப்பாட்டில் மாற்றம் கண்டிருந்தார். அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால் அவருக்கு அப்போது வரை இருந்த கேள்விகளில் பதில் கிடைத்து விட்டதாக அவர் எண்ணினார். WRPக்குள்ளான போராட்டமானது ஒரு சர்வதேசிய வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையிலும், அத்துடன் அனைத்துலகக் குழுவுக்கு உள்ளாக பப்லோவாதத்தின் வளர்ச்சிக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியின் அடிப்படையிலும் தான் நடத்தப்பட வேண்டும் என்பதில் அவர் உடன்பட்டார். WRPக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த கன்னைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி டேவ் என்னை எச்சரித்தார். அவரது மதிப்பீடு எனக்கு உடன்பாடானதாக இருந்தது. ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரை பிளவுபடுத்தியது கன்னை விடயங்கள் அல்ல, மாறாக WRPக்குள்ளான நெருக்கடியின் கீழமைந்திருந்த வரலாற்று மற்றும் அரசியல் பிரச்சினைகள்தான், மையமான பிரச்சினைகளாய் இருந்தன. அந்தத் தருணம் முதல், டேவ் WRPக்குள் ஒரு சர்வதேசிய அடிப்படையில் விவாதத்தை வளர்த்தெடுக்கப் போராடினார். WRPக்குள் இருந்த அனைத்து பிற போலி-எதிர்ப்புகளுக்கும் நேரெதிரான வகையில் டேவ் ஹைலண்ட் பிரிட்டிஷ் அமைப்பு அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். WRPக்குள் தவறாகி விட்டிருந்த அனைத்துக்கும் ஹீலி மீது பழி சுமத்த பண்டாவும் சுலோட்டரும் முனைந்தனர். ’ஒரு அரசியல் அதிகார வெறியரின் பலிகளாக அவர்கள் ஆகியிருந்தனர், அவர்கள் செய்வதற்கு எதுவுமில்லை’ என்பதாக மற்றவர்களுக்கு காட்ட அவர்கள் முனைந்தனர். நமக்கு இதை விட நன்றாகவே தெரிந்திருந்தது. ஹீலிக்கு அரசியல்சட்டம் கடந்த, சவாலற்ற அதிகாரத்தைத் தருகின்ற ஒரு மசோதாவை ஒரு காங்கிரசில் அறிமுகம் செய்ததே இதே சுலோட்டர் தான் என்பதை நாம் மறந்து விடவில்லை. மேலும் WRP இன் அரசியல் நிலைப்பாடு மற்றும் தத்துவார்த்த கருத்தாக்கங்கள் மீதான விமர்சனங்களை ஒடுக்குவதற்கு சுலோட்டரும் பண்டாவும் சேர்ந்து ஹீலிக்கு ஒத்துழைப்பு அளித்திருந்தனர் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும். 1985 நவம்பரில், அமைப்பில் உறுப்பினராக ICFI இன் அரசியல் ஆளுமையை ஏற்றுக் கொள்வதை அவசியமாக்கிய ஒரு ஷரத்தினை கொண்டுவந்த ஒரு தீர்மானத்தை WRP மத்திய குழு ஏற்றுக்கொண்டது. இவர்கள் விரைவிலேயே அதனைத் தூக்கியெறிந்து விட்டு இந்த முடிவை செல்லாததாக்க முனைந்தனர். WRP மத்திய குழுவிற்குள்ளாக ஒரு சிறுபான்மைக் கன்னைக்கு தலைமை கொடுத்திருந்த டேவ் ஹைலண்டுக்கு எதிராக அவர்கள் கடுமையான ஆவேசத்தைக் கக்கினர். சர்வதேச இயக்கத்தின் ஆளுமையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே அங்கத்துவம் எனக் கொண்டால் அவரது “சிறுபான்மை” கன்னை உண்மையில் WRP உறுப்பினர்களின் ஒரு பெரும்பான்மையை பிரதிநிதித்துவம் செய்தது. WRP இன் சந்தர்ப்பவாத நடைமுறைகளுக்கு ஏதோ அனைத்துலகக் குழுவும் பொறுப்பாய் இருந்ததைப் போல WRP இன் தலைமை “சமமான சீரழிவு” என்ற நிலைப்பாட்டில் நின்றது. இதனிடையே, 1985 நவம்பரில் அனைத்துலகக் குழுவால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த அனைத்துலக கட்டுப்பாட்டு ஆணையம் ஒன்று இடைக்கால அறிக்கை ஒன்றைத் தயாரித்திருந்தது. WRP இன் தலைமை மத்திய கிழக்கின் பல்வேறு முதலாளித்துவ தேசிய இயக்கங்களுடனும் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களுடனும் செய்து கொண்டிருந்த கோட்பாடற்ற நிதி ஏற்பாடுகளை இந்த அறிக்கை ஆவணப்படுத்தியிருந்தது. இந்த அறிக்கை 1985 டிசம்பர் 16 அன்று ICFI இன் ஒரு கூட்டத்தில் வழங்கப்பட்டது. அனைத்துலகக் குழு ஏற்றுக் கொண்ட தீர்மானத்தின் முக்கியமான பத்தி கூறியது: “ICFI மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது WRP ஒரு வரலாற்றுக் காட்டிக்கொடுப்பை நிகழ்த்தியிருந்தது என்பதை அனைத்துலகக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இடைக்கால அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆகவே ICFI தனது கோட்பாடுகளையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டாக தனது பிரிட்டிஷ் பிரிவாய் இருப்பதிலிருந்து WRP ஐ இடைநீக்கம் செய்கிறது.” அனைத்துலகக் குழுவின் கூட்டங்களில் அதுவரை வழங்கப்பட்டிருந்த தீர்மானங்களிலேயே மிக மிக முக்கியமானதாக அது இருந்தது. WRP இன் மீது அனைத்துலகக் குழு தனது ஆளுமையை உறுதி செய்தது. அரசியல் சந்தர்ப்பவாதம் கடுமையாக தண்டிக்கப்படும் என்றும் ICFI இன் ஆளுமையையும் அதன் ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்கின்ற அமைப்புகள் மட்டுமே அதன் உறுப்பினர்களாக இருக்க முடியும் என்றும் அறிவித்தது. அந்த சமயத்தில் பிரிட்டிஷ் பிரிவை பிரதிநிதித்துவம் செய்து நான்கு பிரதிநிதிகள் இருந்தனர். கிளிஃப் சுலோட்டர், டோம் கெம்ப், சிமோன் பிரானி மற்றும் டேவ் ஹைலண்ட் ஆகியோரே அந்த நான்கு பிரதிநிதிகள். டேவ் ஹைலண்ட் மட்டுமே இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஒரே பிரதிநிதி ஆவார். இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு WRP இன் சந்தர்ப்பவாத மரபை வெற்றி காண்பதற்கு உழைப்பதன் மூலமாக மட்டுமே WRP ட்ரொட்ஸ்கிச பாதைக்கு மீண்டும் கொண்டுவரப்பட முடியும் என்பதில் டேவ் ஹைலண்ட் உடன்பட்டார். சுலோட்டர், கெம்ப் மற்றும் பிரானி இந்தத் தீர்மானத்தை எதிர்த்தனர். கெம்ப் மிகவும் வெறுப்பூட்டுகின்ற வகையிலும், ஆத்திரமூட்டுகின்ற வகையிலும் நடந்து கொண்டார், சுலோட்டரும் அவ்வாறே நடந்து கொண்டார். பிரானி அச்சமயத்தில் அவரது வழக்கமாக இருந்ததன்படி, மிரட்சியுற்றது போல் நடித்தார். அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதானது நான்காம் அகிலத்திற்குள்ளாக சந்தர்ப்பவாதத்தின் தீர்மானகரமான தோற்கடிப்பை அடையாளப்படுத்தியது. 1953 ஆம் ஆண்டு நான்காம் அகிலத்திற்குள்ளாக தொடங்கியிருந்த உள்நாட்டுப் போர் இறுதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அனைத்துலகக் குழுவின் மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் 1938 இல் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சர்வதேசிய அமைப்பின் மீது இறுதியாக கட்டுப்பாட்டை மீட்டெடுத்திருந்தனர். இப்போது அந்தக் கூட்டத்தின் அரசியல் தாக்கங்களை புரிந்து கொள்ள ஒருவர் விரும்பினால், அதில் WRP ஐ பிரதிநிதித்துவம் செய்த பிரதிநிதிகளின் அதற்கடுத்து வந்த பரிணாம வளர்ச்சியை எடுத்துப் பார்த்தாலே புரிந்துவிடும். அந்தக் கூட்டத்தின் சமயத்தில், கிளிஃப் சுலோட்டர் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் பப்லோவாதிகளுடன் மறுஇணைவு காண்பதற்கு ஏற்கனவே பொறியமைவு செய்ய முனைந்து கொண்டிருந்தார். நவம்பர் பிற்பகுதியில், இலண்டனின் Friends Hall இல் நடந்த ஒரு கூட்டத்தில் –பிரிட்டனில் இருந்த ஒவ்வொரு இற்றுப் போன ட்ரொட்ஸ்கிச- விரோத போக்கின் முன்னிலையிலும் WRP இன் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காய் சுலோட்டர் தான் இந்தக் கூட்டத்தை அழைத்திருந்தார் –சுலோட்டர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பயங்கரமான ட்ரொட்ஸ்கிச விரோத “நிபுணர்” Monty Johnstone உடன் கைகுலுக்கிக் கொண்டார். சுலோட்டர் இந்த உடைவை தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மார்க்சிசம், லெனினிசம், ட்ரொட்ஸ்கிசம் அனைத்தையும் நிராகரித்திருந்தார். தொழிலாள வர்க்கத்துள் மார்க்சிச நனவுக்கான போராட்டத்தை வெளிப்டையாக கண்டனம் செய்த அவர், தன்னை அரசியல் ரீதியாக அராஜகவாதத்தை நோக்கி தகவமைத்துக் கொண்டார். அவர் தலைமையிலான WRP கன்னை, மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் பால்கன்களில் US-NATO போருக்கு செயலூக்கத்துடன் ஆதரவளித்தது. ரொம் கெம்ப் அந்தக் கூட்டத்தின் சமயத்தில் விஞ்ஞானமும் சமூகமும் (Science and Society) என்ற ஸ்ராலினிச வெளியீட்டின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தார், பழைய WRP இல் யாருமே இதற்கு ஆட்சேபித்ததாக தெரியவில்லை. அதன்பின் விரைவிலேயே அவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடனான எந்த தொடர்பையும் கைவிட்டு விட்டார். சிமோன் பிரானியைப் பொறுத்தவரை, 1920களில் சோவியத் தொழிலாள வர்க்கம் குறித்த ஒரு புத்தகத்தை அவர் பின்னர் எழுதினார், இப்புத்தகம் இடது எதிர்ப்பாளர்களின் முக்கியத்துவத்தை நிராகரித்ததோடு தனித்துவமான போல்ஷிவிக்-விரோத குணநலத்தை கொண்டிருந்தது. சர்வதேச எண்ணெய் துறையில் ஒரு நிபுணராக தன்னுடைய தொழில்வாழ்க்கையை அபிவிருத்தி செய்து கொண்டு விட்ட அவர் ஆக்ஸ்போர்ட் எரிசக்தி ஆய்வுகளுக்கான நிறுவனத்துடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் ”ரஷ்ய எரிசக்திக் கொள்கை” என்ற தலைப்பிலான கட்டுரை தான் அவரது சமீபத்திய படைப்புகளில் ஒன்றாய் இருக்கிறது. அதிலிருந்து என்ன முடிவுக்கு வருவது என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன். 1985 டிசம்பர் கூட்டத்திற்குப் பின்னர், நிகழ்வுகள் துரிதமாக முன்னேறின. அனைத்துலகக் குழுவுடனான ஒரு முறிவைத் தூண்டுவதற்கு WRP காய்நகர்த்தியது. ICFI இன் ஆளுமையை அது மறுதலித்தது. 1986 பிப்ரவரியில் கட்சிக் காங்கிரஸ் நடக்கவிருந்த அரங்கிற்குள் ஹைலண்ட் தலைமையிலான சிறுபான்மைக் கன்னையின் உறுப்பினர்கள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக, சுலோட்டரது கன்னை போலிஸை அழைத்தது. சுலோட்டர் போலிஸ்காரர்களால் பத்திரமாக காங்கிரசிற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். ஹைலண்ட் தலைமையிலான சிறுபான்மை கன்னை கொஞ்சம் கூட நோக்குநிலை பிறழவில்லை. அது உடனடியாக அனைத்துலகக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியாக பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியாக சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியாய் தன்னை உருவமைத்துக் கொண்டது. சுலோட்டரின் கன்னையை பொறுத்தவரை, அது விரைவாக உடைந்து சிதறிப் போனது. அந்த அமைப்பில் ஒரு உறுப்பினர் கூட புரட்சிகர சோசலிச அரசியலில் இன்று செயல்பாட்டில் இல்லை! டேவ் ஹைலண்ட் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இது மிகக் கடினமான காலமாக இருந்தது. ஆனால் டேவின் நடவடிக்கைகள் அரசியல் கோட்பாட்டினால் வழிகாட்டப்பட்டவையாக இருந்தன. தனிமனித யோசனைகளின் ஊசலாட்டத்திற்குள் செல்ல அவர் மறுத்தார். ஒரு கோட்பாடான அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்த அவர், அதில் இருந்து அசைக்க முடியாதவராக இருந்தார். அத்துடன் அவரது மகள் ஜூலி, அவரது மகன் டோனி உள்ளிட WRPக்குள் இருந்த ஆகச் சிறந்த கூறுகளுக்கு அனைத்துலகக் குழுவை ஆதரிப்பதற்கு அவர் உத்வேகமளித்தார். 2005 அக்டோபர் 9 அன்று, டேவ் கலந்துரையாடலுக்காக அழைத்த 20வது ஆண்டுதினத்தை ஒட்டி நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் எழுதியிருந்தேன்: “சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பாக இதே தினத்தில் நீங்கள் வேர்க்கர்ஸ் லீக் அலுவலகங்களுக்கு அட்லாண்டிக் கடந்த தொலைபேசி அழைப்பினைச் செய்து, ஹீலியின் இயங்கியல் ஆய்வுகள் மற்றும் WRP இன் தலைமையின் கீழ் அனைத்துலகக் குழுவின் கொள்கைகள் ஆகியவை குறித்தான எனது விமர்சனத்தில் எழுப்பப்பட்டிருந்த பிரச்சினைகள் மீதான ஒரு விவாதத்தைக் கேட்டீர்கள். இந்தத் தீர்மானகரமான மற்றும் கோட்பாடுமிக்க நடவடிக்கையானது WRPக்குள்ளான அரசியல் நெருக்கடியில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நின்றதோடு அனைத்துலகக் குழுவிற்குள்ளாக சந்தர்ப்பவாதத்திற்கும் மரபுவழி மாறாத ட்ரொட்ஸ்கிசத்துக்கும் இடையிலான படைவலிமை உறவினை ஒரேயடியாக மாற்றி விட்டது. "1985 கோடையில் பிரிட்டிஷ் பிரிவில் வெடித்திருந்த நெருக்கடியின் உண்மையான தத்துவார்த்த, வரலாற்று மற்றும் அரசியல் வேர்களை வெளிக்கொண்டு வருவதில் நீங்கள் காட்டிய விடாப்பிடியான மன உறுதியின் விளைவாக, முதன்முறையாக, WRP மீதான தேசிய சந்தர்ப்பவாதத் தலைமையின் பிடி ஒரு பெரும் மற்றும் முக்கியமான சவாலைச் சந்தித்தது. பிரிட்டிஷ் அமைப்பில் அவ்வப்போது எழுந்து கொண்டிருந்த பல்வேறு எதிர்ப்புப் போக்குகளில் இருந்து எல்லாம் தனித்துவமாய் வேறுபடுகின்ற விதத்தில், ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரின் கன்னைவாதத் தலைமைக்கு எதிரான போராட்டமானது அனைத்துலகக் குழுவின் அரசியல் ஒழுங்கின் கீழும் அத்துடன் ஸ்ராலினிசத்துக்கு எதிராகவும் பல்தரப்பான பப்லோவாத திருத்தல்வாத வடிவங்களுக்கு எதிராகவும் நான்காம் அகிலம் நடத்திய ஒரு நெடிய போராட்டத்தின் மூலோபாயப் படிப்பினைகளின் அடிப்படையிலும் மட்டுமே நடத்தப்பட முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். “உங்களது அழைப்பை அடுத்து வந்த நாட்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களில், WRPக்குள்ளான நெருக்கடிக்கான முக்கிய காரணத்தில், அதாவது, 1953 இல் பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்டதின் கீழும் 1963 இல் SWP ம் பப்லோவாத சர்வதேச செயலகமும் மறுஇணைவு காண்பதற்கு எதிரான போராட்டத்தின் கீழும் அடித்தளமாயிருந்த கோட்பாடுகளில் இருந்து பின்வாங்கியதும் அவற்றை மறுதலித்ததுமே காரணம் என்பதில், நாங்கள் துரிதமாக ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தோம். ”பண்டா மற்றும் சுலோட்டர் சமமான சீரழிவு என்ற தமது பொருத்தமற்ற மற்றும் சுய-நல சிந்தனையுடனான தத்துவத்தைக் கொண்டு அனைத்துலகக் குழுவின் வரலாற்றை சிறுமைப்படுத்த முனைந்ததை நீங்கள் திட்டவட்டமாக நிராகரித்ததானது பிரிட்டிஷ் பிரிவில் இருந்த ஆகச் சிறந்த கூறுகளை சர்வதேசியவாத பதாகைக்காய் வென்றெடுப்பதை சாத்தியமாக்கியது. பழைய WRP இன் தேசிய சந்தர்ப்பவாதக் கன்னைகள் அத்தனையின் மீதும் அனைத்துலகக் குழு ஒரு தீர்மானகரமான வெற்றியைக் காண்பதில் இது மிகப்பெரும் ஒரு அளவுக்கு பங்களிப்பைச் செய்தது. “இந்த மிகக் கடினமான போராட்டத்தில் நீங்கள், சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் ஒட்டுமொத்த வரலாற்றின் மீது உங்கள் அரசியல் வேலைக்கு அடித்தளம் அமைத்தீர்கள், இது பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஆரம்ப வேலைகளின் அத்தனை ஆகச் சிறந்த அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது என்பதை நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அனைத்துலகக் குழுவிற்குள்ளாக 20 ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த சம்பவங்களை நினைத்துப் பார்த்து அந்த வசந்த காலத்தின் போராட்டங்கள் தான் நான்காம் அகிலத்தின் மறுமலர்ச்சிக்கான வேலைத்திட்ட அடித்தளங்களை உருவாக்கித் தந்தது என்பதை அறிந்து கொள்வது இப்போது சாத்தியமாக இருக்கிறது. ”WRP இன் தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டம் சோவியத் ஒன்றியத்தின் பொறிவு மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் தன்மை மற்றும் கட்டமைப்பிலான ஆழமான மாற்றங்கள் ஆகியவற்றால் முன்நிறுத்தப்பட்ட வரலாற்றுச் சவாலைச் சந்திப்பதற்கு ICFI ஐ தயாரிப்பு செய்தது. ”இந்த அபிவிருத்திகளின் ஒருங்கிணைந்த தாக்கமானது, ஒரு சர்வதேசிய முன்னோக்கைக் காட்டிலும் தேசிய முன்னோக்கில் இருந்து முன்னேறிய தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் மற்றும் அமைப்புகளின் செல்தகைமையை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவந்தது. சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் போராடுவது என 1985 இல் நீங்கள் எடுத்த முடிவின் மூலமாக, பிரிட்டனில் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவினைக் கட்டியெழுப்புவதில் தீவிரமான மற்றும் நீடித்து நிற்கக் கூடிய முக்கியத்துவம் பெற்ற ஒரு பங்களிப்பினை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இதற்காக, நானும் உலகம் முழுமையிலான உங்களது பல தோழர்களும் உங்களுக்கு மறக்கவொண்ணாத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். “இதயம் நிறைந்த வாழ்த்துக்களுடன்” தோழர் டேவ் ஒருபோதும் மறக்கப்படமாட்டார். அவரது உழைப்பு நமது சர்வதேச இயக்கத்தில் உயிரோட்டமாக உள்ளது. அவரது தோழர்களால் அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்பதோடு வரவிருக்கும் தலைமுறைகளுக்கு புரட்சிகர மன உறுதிக்கும் கோட்பாட்டிற்கும் உந்துதலான ஒரு முன்மாதிரியாக அவர் திகழ்வார். |
|