World Socialist Web Site www.wsws.org |
British role in 1984 Amritsar massacre 1984 அமிர்தசரஸ் படுகொலையில் பிரிட்டனின் பாத்திரம்
By
Harvey Thompson ஜூன் 1984இல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் (சீக்கிய மதத்தினரின் புனித ஆலயம்) இருந்த சீக்கிய போராளிகளை பலவந்தமாக வெளியேற்றுவதில் திட்டமிட, பிரதம மந்திரி மார்கரெட் தாட்சரிடம் இருந்து வந்த உத்தரவுகளின் பேரில் பிரிட்டனின் சிறப்பு விமானப்படை சேவை (Special Air Service – SAS) இந்திய அரசிற்கு உதவியதாக சமீபத்தில் வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை, ஒரு படுகொலையில் போய் முடிந்தது. இந்திய சீக்கிய சிறுபான்மையினரை அதிர்ச்சியூட்டிய மற்றும் ஆத்திரமூட்டிய அந்த சம்பவம் ஒரு வகுப்புவாத பிரிவினை கிளர்ச்சிக்கு எரியூட்டியதோடு, இறுதியில் இந்திய அரசின் பெரும் வன்முறையோடு ஒடுக்கப்பட்டது. ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் (Operation Blue Star) நடவடிக்கையில் பிரிட்டன் உடந்தையாய் இருந்தமை குறித்த வெளியீடு பிரிட்டிஷ் அரசை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி உள்ளது. பழமைவாத கட்சியின் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் ஓர் "அவசர விசாரணைக்கு" உத்தரவிட்டுள்ளார். அந்த ஆவணங்களில் ஏன் உணர்வுப்பூர்வமானவை என்று குறிப்பிடப்படவில்லை என்பதையும், முப்பது ஆண்டுக்கு முந்தைய அரசு ஆவணங்களை வெளியிடும் சட்டத்தின் கீழ் 1984 ஆவணங்கள் வெளியிடப்பட்ட போது ஏன் இவை நிறுத்தி வைக்கப்பட்டன என்பதையும் கண்டறிய, அந்த விசாரணையில் கேபினெட் செயலர் சர் ஜெரிம் ஹெவுட் பணிக்கப்பட உள்ளார். “ஆழ்ந்த வடுக்களை" ஏற்படுத்திய மற்றும் "இன்றும் கூட கண்ணுக்குப் புலனாகாத பலமான உணர்வுகளை" விட்டு சென்றிருக்கின்ற அந்த இராணுவ நடவடிக்கையில், பிரிட்டன் சம்பந்தப்பட்டிருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் அந்த ஆவணங்களில் இல்லை என்று கடந்த மாதம் கேமரூன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதுவொரு பொருத்தமற்ற பொய்யாகும். ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பொற்கோயில் மீது ஒரு தாக்குதல் நடத்த திட்டமிடுவதில் உதவுவதற்கு சிறப்பு விமானப்படை சேவையின் ஒரு அதிகாரி டெல்லிக்கு அனுப்பப்பட்டிருந்தார் என்பதை ஒரு சுயாதீன இதழாளரான பில் மில்லரால் வெளியிடப்பட்ட வொயிட்ஹால் கடிதங்கள் ஸ்தாபிக்கின்றன. பொற்கோயிலில் இருந்து ஆயுதமேந்திய சீக்கிய போராளிகளை வெளியேற்றும் ஒரு நடவடிக்கையில் பிரிட்டனின் ஆலோசனையைக் கோரிய இந்திய அரசின் ஒரு முறையீட்டிற்கு "அணுசரணையாக", வெளியுறவுத்துறை செயலர் சர் ஜியோபெரி ஹோவ் விடையிறுத்திருந்ததாக பெப்ரவரி 23, 1984 தேதியிட்ட ஓர் உயர்மட்ட இரகசிய கடிதம் விவரிக்கிறது. “பிரதம மந்திரியின் உடன்பாட்டோடு" ஒரு SAS அதிகாரி இந்தியாவிற்கு ஏற்கனவே விஜயம் செய்திருந்தார் மற்றும் "ஒரு திட்டம் வகுத்திருந்தார், அத்திட்டத்திற்கு திருமதி. இந்திரா காந்தியால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் இதையும் கூறுகிறது, “அந்த திட்டத்தை இந்திய அரசு வெகு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருமென்று வெளியுறவு செயலர் நம்புகிறார்.” இலங்கையில் SAS சம்பந்தப்பட்டிருந்ததன் மீதான தகவல்களைச் சேகரிக்க முயன்றபோது, ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் பிரிட்டன் சம்பந்தப்பட்டிருந்ததை கண்டறிந்த மில்லர், மார்ச் 1984இல் அந்நடவடிக்கைக்கான பிரிட்டனின் உதவிகள் சம்பந்தமான ஆவணங்களின் ஒரு தடத்தைப் பின்தொடர முடிந்தது. (அவர் கண்டறிந்த ஆவணங்கள் Stop Deportations வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன). ஆனால் பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு உடனடியாக இழுத்துச் சென்ற சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட "அந்த தொகுப்புகளின் அடுத்த பகுதியை" அவரால் அணுக முடியவில்லை. ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தியின் உத்தரவுகளின்பேரில், பஞ்சாப் அமிர்தசரஸின் ஹர்மந்திர் சாஹிப் (சீக்கிய பொற்கோயில்) உள்ளிருந்து ஜர்னெயில் சிங் பிந்த்ராவாலே மற்றும் அவரின் ஆயுதமேந்திய சீடர்களை வெளியேற்ற இந்திய இராணுவம் ஜூன் 3-8, 1984இல் ஒரு தாக்குதல் நடத்தியது. ஒரு பெரிய ஆயுதமேந்திய கிளர்ச்சியை தொடங்குவதற்காக அந்த புனித தலத்தில் ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்ததாக பிந்த்ராவாலே மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது, அந்த வாதங்களுக்கு அப்போதிருந்து பல பகுப்பாய்வாளர்களால் எதிர்வாதம் வைக்கப்பட்டுள்ளன. பொற்கோயில் வளாகம் மீதான தாக்குதலுக்கு கூடுதலாக, சந்தேகத்திற்குரிய சக-சூழ்ச்சியாளர்களைப் பிடிக்க பஞ்சாபின் கிராமபுறமெங்கிலும் சோதனை நடவடிக்கைகளும் அந்த ஆப்ரேஷனில் சேர்ந்திருந்தன. அதற்கடுத்ததாக உடனடியாக ஆப்ரேஷன் உட்ரோஸ் என்பது தொடங்கப்பட்டது. மாதக்கணக்கில் நீண்டிருந்த இந்த நடவடிக்கையின் கீழ் அகாலி தள தலைவர்களும் மற்றும் பத்து ஆயிரக்கணக்கான சீக்கிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்; அவர்களில் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஒரு சீக்கிய வகுப்புவாத கட்சியான அகாலி தளம், பிந்த்ராவாலேயின் ஆதரவோடு சீக்கியர் பெரும்பான்மை வாழும் பஞ்சாபிற்கு அதிக சுயாட்சி மற்றும் அதிகாரம் கோரி வந்தது. இந்த நடவடிக்கைகளில், டாங்கிகள், சிறிய பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களோடு பெரும் எண்ணிக்கையிலான இந்திய இராணுவ துருப்புகளும் பயன்படுத்தப்பட்டன. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் 492 “பயங்கரவாதிகளோடு" சேர்த்து 83 இந்திய இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். மொத்த ஏறத்தாழ 3,000 உயிரிழப்புகள் என்ற எண்ணிக்கையோடு, பக்தர்களும் மற்றும் இதர பொதுஜனங்களும் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர் என்பதை சுயாதீனமான ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. சீக்கிய ஆதார நூலகங்களில் இருந்த வரலாற்று தொல்பொருட்களும், கையெழுப்புப்படிகளும் அரசால் கைப்பற்றப்பட்டு, பின்னர் அவை எரிக்கப்பட்டன. அந்த இராணுவ நடவடிக்கை இந்தியா முழுவதிலும் அதிகளவிலான வகுப்புவாத பதட்டங்களுக்கு மற்றும் சீக்கியர் மீதான தாக்குதல்களுக்கு இட்டு சென்றது. இந்திய இராணுவத்தில் இருந்த சில சீக்கிய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர், அதேவேளையில் ஏனையவர்கள் இராணுவத்தில் இருந்தும் மற்றும் அரசு நிர்வாக அலுவலகங்களில் இருந்தும் இராஜினாமா செய்தனர் அல்லது இந்திய அரசிடம் இருந்து பெற்ற விருதுகள் மற்றும் மரியாதைகளை மறுத்தளித்தனர். அக்டோபர் 31இல், இந்திரா காந்தி அவரது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். சீக்கியர்-விரோத படுகொலைகளை அடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவர்களால் தூண்டிவிடப்பட்ட பொலிஸ் உடனான மோதலில், 3,000த்திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். பொற்கோயில் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து சமூகரீதியில் பதட்டமாக இருந்த சூழ்நிலையில், அந்த ஆப்ரேஷனால் ஒரு தனி சீக்கிய அரசின் உடனடி பிரகடனம் முன்கூட்டியே தடுக்கப்பட்டதாகவும், பஞ்சாபின் இந்திய தரப்பு எல்லையைப் பாகிஸ்தான் துருப்புகள் கடந்து வரவிருந்த ஆபத்தும் கூட முன்கூட்டியே தடுக்கப்பட்டதாகவும் முன்னணி இராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். அங்கே அதிருப்தி அடைந்த வேலையற்ற சீக்கிய இளைஞர்களும் மற்றும் தகுதிக்கேற்ற வேலையில் இருத்தப்படாத சீக்கிய இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் இருந்த நிலைமைகளின் கீழ், காங்கிரஸ் அரசாங்கமும் பஞ்சாபின் பெரும்பாலான சீக்கிய அரசியல் மற்றும் வியாபார மேற்தட்டுக்களும் பல ஆண்டுகளுக்கு அதிகளவில் கசப்பான மோதலில் ஈடுபட்டு வந்தன. (இந்திரா காந்தி ஒரு மதசார்பற்ற தேசியவாதி என்று சித்தரிக்கப்பட்ட போதினும்) இந்த மோதலில் இருதரப்பும் அதிகளவில் ஆக்ரோஷமான வகுப்புவாத முறையீடுகளில் தங்கி இருந்தன, அது பஞ்சாபில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இடையில் அதிகளவிலான சச்சரவை ஏற்படுத்தி வந்தது. பஞ்சாபில் ஜூன் 1984இல் சமூக பதட்டங்களின் ஒரு வெடிப்பு மீது இந்திய மேற்தட்டிற்குள் பீதி நிலவியது நிஜமாகும், ஆனால் அவரது சீக்கிய பிரிவுகளுக்கு வெளியே பரந்த அடித்தளத்திலான ஆதரவைப் பெற்றிராத பிந்த்ராவாலே மீது அங்கே சர்ச்சைகள் இருக்கவில்லை. பிந்த்ராவாலே ஓர் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் தேசியளவிலான சமூக அமைதியின்மைக்கு இடையில், தேர்தல்கள் மற்றும் உள்நாட்டு சுதந்திரங்களை இரத்து செய்தும், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தலைவர்களை சிறையில் அடைத்தும், ஜூன் 1975இல் இந்தியா காந்தி நெருக்கடிகால அவசர நிலையை அறிவித்திருந்தார். அது மார்ச் 1977 வரை நீக்கப்படாமல் இருந்தது. 1977 தேர்தல்களில், அதில் காந்தி பதவியை இழந்தார் என்பதோடு, சீக்கிய வகுப்புவாத அகாலி தளம் தலைமையிலான ஒரு கூட்டணி பஞ்சாபில் அதிகாரத்திற்கு வந்தது. அகாலி தளத்தை உடைத்து சீக்கியர்கள் மத்தியில் மக்கள் ஆதரவை பெறும் முயற்சியில், காந்தியின் காங்கிரஸ் கட்சி வைதீக மத போதகர் ஜர்னெயில் சிங் பிந்த்ராவாலேயை பஞ்சாப் அரசியலில் முன்னிலைக்கு கொண்டு வந்தது. பிந்த்ராவாலேயின் தம்தாமி தக்சால் (Damdami Taksal) அமைப்பு மற்றொரு மதவாத குழுவோடு வன்முறை சச்சரவுகளில் சிக்கிய நிலையில், அவர் விரைவிலேயே தீமைபயக்கும் விதத்தில் மாறினார். அவர் காங்கிரஸ் தலைவர் ஜகத் நாராயணனின் படுகொலைக்கு தூண்டியமைக்காக செப்டம்பர் 1981இல் கைது செய்யப்பட்டார், ஆனால் சாட்சிகள் கோரி விரைவிலேயே விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் காங்கிரஸில் இருந்து தம்மைத்தாமே பிரித்து கொண்ட பிந்த்ராவாலே அகாலி தளத்துடனான சக்திகளுடன் இணைந்தார். ஜூலை 1982இல், அனந்த்பூர் சாஹிப் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அந்த தீர்மானம், கோதுமை மற்றும் ஏனைய வேளாண் பொருட்களின் விலை நிர்ணயத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டுமென்பது உட்பட, சீக்கியர் பெரும்பான்மை வாழும் பஞ்சாபிற்கு கூடுதல் சுய-அதிகாரம் வழங்க கோரியதோடு, 1966இல் எந்த உடன்படிக்கையின் கீழ் பஞ்சாப் மூன்று மாநிலங்களாக (ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் பெரும்பான்மையினர் பஞ்சாபி பேசும் மற்றும் சீக்கியர்களைக் கொண்ட பஞ்சாப்) பிரிக்கப்பட்டதோ அந்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யவும் கோரியது. பிந்த்ராவாலேயின் சீடர்களில் சிலர் உட்பட சீக்கியர்களில் ஒரு சிறிய பிரிவு, துணைகண்டத்தின் 1947 பிரிவினையின் பிற்போக்குத்தனமான வகுப்புவாத தர்க்கத்தை வைத்துக் கொண்டு, ஒரு தனி சீக்கிய அரசை உருவாக்கும் நோக்கங்கொண்ட காலிஸ்தான் இயக்கத்தின் போராளிகள் பிரிவுக்கு திரும்பியது. பிந்த்ராவாலே பகிரங்கமாக அவரை காலிஸ்தான் இயக்கத்தோடு இணைத்துக் கொள்ளவில்லை, ஆனால் மீண்டும் மீண்டும் சீக்கியர்களை ஒரு "தேசம்" ஆக குறிப்பிட்டு வந்தார். ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டாரை அடுத்து வந்த தசாப்தத்தில் பஞ்சாப் மீது கடிவாளமில்லா இந்திய அரசின் பிடியை மீண்டும் நிலைநிறுத்த, ஏதேச்சதிகார கைது நடவடிக்கைகள், வழக்கின்றி நீண்டகாலம் சிறையில் அடைப்பது, சித்திரவதை, மாயமாக்கிவிடுவது மற்றும் பொதுமக்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய போராளிகளைக் கூடுதல் அதிகாரத்தைக் கொண்டு கொல்வது உட்பட பரந்த மனித உரிமைமீறல்களில் இந்திய அரசு படைகள் தங்கியிருந்தன. அரசாங்க-விரோத குடும்ப உறுப்பினர்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். காலிஸ்தான் பிரிவினைவாதிகள், அவர்கள் பங்கிற்கு, கண்மூடித்தனமான தாக்குதல்களில் இந்துக்களைக் குறிவைத்தும் மற்றும் அவர்களின் வகுப்புவாத-பிரிவினைவாத அரசியலை நிராகரித்த சீக்கியர்களைப் படுகொலை செய்தும், அட்டூழியங்கள் நடத்தினர். ஜூன் 1985இல், காலிஸ்தான் இயக்கத்தினர் மாண்ட்ரீல்-இலண்டன்-புது டெல்லி ஏர் இந்தியா விமானத்தைக் குண்டு வைத்து தகர்த்த போது 329 மக்கள் கொல்லப்பட்டனர். அண்மையில் திறக்கப்பட்ட வைட்ஹால் கோப்பில் உள்ள ஏனைய ஆவணங்கள், ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவில் இந்தியாவிற்கு ஆதாயமளிக்கும் ஆயுத விற்பனை உட்பட வெளிப்படையான பொருளாதார நலன்கள் சம்பந்தப்பட்டிருந்ததை வெளிக்காட்டுகின்றன. இந்தியாவில் பிரிட்டிஷ் "வியாபார நலன்கள்" “மிகவும் கணிசமாள அளவிற்கு" இருந்தன என்பதை ஜூன் 22, 1984 தேதியிட்ட ஒரு இரகசிய வெளியுறவுத்துறை அதிகாரியின் குறிப்புரை வலியுறுத்தியது. அந்த ஆவணம் தொடர்ந்திருந்தது, “வியாபாரம் மற்றும் இராணுவ விற்பனை இரண்டிற்கும் அது ஒரு மிகப்பெரிய மற்றும் விரிவடைந்துவரும் சந்தையாகும். 1983இல் பிரிட்டனின் ஏற்றுமதி 800 மில்லியன் பவுண்டைக் கடந்திருந்தது. 1975க்கு பின்னர் இருந்து, இந்தியா 1.25 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான பிரிட்டனின் இராணுவ உபகரணங்களை வாங்கி உள்ளது.” இந்திய அரசு 65 மில்லியன் பவுண்ட் உடன்படிக்கையில் இராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு உடன்பட்டதற்கு பிரதி உபகாரமாக பொற்கோயில் மீதான தாக்குதலில் பிரிட்டிஷ் அரசு ஒரு பங்கு வகித்திருக்கக்கூடும் என்று தொழிற்கட்சியின் முன்னாள் துணை சேர்மேன் டோம் வாட்சன் கூறினார். அவர் கேமரூனிடம், “உங்களின் அமிர்தசரஸ் விசாரணையில், அரசு பணியாளர்களை விசாரிக்க உத்தரவிடுவதற்கு மாறாக, நீங்கள் ஏன் ஜாப்ரி ஹோவ் பிரபு மற்றும் லியோன் பிரெட்டென் பிரபுவிடம் அவர்கள் மார்கரெட் தாட்சரிடம் என்ன ஒப்புக்கொண்டார்கள் என்பதையும், அப்போதைய வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் உடன்படிக்கையோடு அதற்கு ஏதேனும் தொடர்பு உண்டா என்பதையும் கேட்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினார். கமெரூன் இயல்பாகவே சதி குறித்த எந்தவொரு கருத்துக்களையும் நிராகரித்தார். இந்தியாவிற்கான பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் மூன்று நாள் விஜயத்தில் கமெரூன் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு வெளிநாட்டிற்கான பெரிய வியாபார பிரதிநிதிகளை ஒன்றுகூட்டி சென்று வந்து வெறும் ஒரு ஆண்டிற்குப் பின்னர், இது நடந்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்கும் நம்பிக்கையில், இந்தியா மற்றும் பிரிட்டன் ஒரு "சிறப்பு உறவை" கொண்டுள்ளன என்று தெரிவித்த கேமரூன், ஆதாரத்திற்காக 1.5 மில்லியன் இந்திய "வம்சாவழியினர் பிரிட்டனில் உள்ளனர்" என்பது உட்பட அவ்விரு நாடுகளும் "மொழி, கலாச்சாரம், உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன" என்று மேற்கோள் காட்டி இருந்தார். அவரது விஜயத்தின் போது கமெரூன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கும் விஜயம் செய்திருந்தார் மற்றும் ஏப்ரல் 13, 1919இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூறுக்கணக்கான நிராயுதபாணியான மக்களை, முக்கியமாக சீக்கியர்களை, பிரிட்டிஷ் இந்திய இராணுவம் இழிவுகரமாக படுகொலை செய்திருந்த ஜாலியன்வாலா பாத்திற்கும் அஞ்சலி செலுத்த (ஆனால் அவர் மன்னிப்பு கோரவில்லை) விஜயம் செய்திருந்தார். |
|