தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
As Ukrainian regime totters, oligarchs call for talks with right-wing opposition உக்ரேனிய அரசு தடுமாறுகையில் தன்னலக்குழுவினர் வலதுசாரி எதிர்தரப்பினருடன் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுகின்றனர்
By Alex Lantier Use this version to print| Send feedback பரவும் எதிர்ப்புக்கள் மற்றும் உக்ரேனில் அரசாங்கக் கட்டிடங்கள் ஆக்கிரமிப்புக்களுக்கு இடையே நாட்டின் வணிகத் தன்னலக் குழுவினர் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை சந்தித்து அவர் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் அமெரிக்காவினதும் ஆதரவைக் கொண்ட வலதுசாரி எதிர்த்தரப்புடன் பேச்சுக்கள் நடத்த அழைப்புவிடுத்தனர். இந்த அழைப்பு, உக்ரேனிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்-ரஷ்யாவிற்கும் இடையிலான வழமைக்குமாறான பேச்சுக்கள் பிரஸ்ஸல்ஸில் நடப்பதற்கு முன் வந்துள்ளது. இச்சந்திப்பும் உக்ரேன் மீது கவனம் செலுத்தும். இரண்டுமே இன்று நடைபெற உள்ளன. சுதந்திர சதுக்கத்தில் மையம் கொண்டு கீயேவில் எதிர்ப்புக்கள் தொடர்கையில், யானுகோவிச் ஆட்சி மரபார்ந்த முறையில் ஐரோப்பிய சார்பு மேற்கு உக்ரேனைக் கலைக்கிறது. ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஒன்பது பிராந்திய நிர்வாகங்களை மேற்கு உக்ரேனில் கைப்பற்றியுள்ளனர். எல்விவ், லுட்ஸ்க் மற்றும் டெர்னோபில் மூன்றும் எல்வில் தளம் கொண்ட ஒரு புதிய “மக்கள் ராடா” அரசாங்கத்திற்கு விசுவாசத்தை தெரிவித்துள்ளன. எதிர்ப்புக்கள் தெற்கு, கிழக்கு உக்ரேனிலும் பரவியுள்ளன. இவை மரபார்ந்த வகையில் யானுகோவிச்சின் ஆளும் கட்சிக்கு விசுவாசமான Zaporizhzhiya, Dnpropetrovsk, Kherson பிராந்தியங்களாகும். பிராந்திய நிர்வாகங்களை எடுத்துக் கொள்வதைப் போல், சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள பெரும்பாலான தெருக் கைகலப்புக்கள் ஒரு சில ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களால் நடத்தப்பட்டன. இவை பாசிச, யூத எதிர்ப்பு ஸ்வோபோடா கட்சி, வலது பிரிவுக்குழுவால் அணிதிரட்டப்பட்டன. இத்தகைய சக்திகளால் உக்ரேனை ஸ்திரமற்றதாக்க கூடியதாக இருப்பதற்கு காரணம் யானுகோவிச்சின் பிற்போக்குத்தன ஆட்சியின் செல்வாக்கற்ற தன்மை மற்றும் அது தங்கியுள்ள குறுகிய சமூக அடித்தளத்திற்கு சான்றாகும். பரந்த சமூக அடுக்குகள் எதிர்த்தரப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டமை இழிந்த பெர்குட் கலகப் பிரிவு பொலிஸ் நடத்தும் கொலைகள் பற்றிய சீற்றத்தை வெளிப்படுத்தவும், ஆட்சியின் புதிய கடுமையான ஆர்ப்பாட்ட-எதிர் சட்டத்திற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தவாகும். ஞாயிறன்று ஆயிரக்கணக்கானவர்கள் கீயேவில் 25 வயது மிகைல் ஜிஜ்வென்ஸ்கியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். இவர் ஒரு வலது பிரிவு உறுப்பினர், பொலிஸ் மோதல்களில் கொல்லப்பட்டார். ஒளிப்பதிவு காட்சிகள் கலகப் பிரிவுப் பொலிசார் எதிர்ப்பாளர்களை நிர்வாணப்படுத்தியதை காட்டுகின்றன. யானுகோவிச்சின் ஆட்சி, வீழ்ச்சியின் விளிம்பில் தடுமாறுகையில்கூட, எதிர்த்தரப்பு எளிதில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முடியாதுள்ளது. அது ரஷ்ய மொழி பேசும் தெற்கு, கிழக்கு உக்ரேன் பகுதிகளில் பரந்த எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ளது. சமீப நாட்களில், அரசாங்க-சார்பு ஊர்வலங்கள் கிழக்கு உக்ரேனின் தொழில் மையமான டோனெட்ஸ்கில் மற்றும் கிரிமியா, கார்கிவ், உஜ்கோரோட் மற்றும் லுஹன்ஸ்க் ஆகிய பிராந்தியங்களில் நடப்பதாக அறிவிக்கப்படுகின்றன. நேற்று மந்திரிசபை கூடி நெருக்கடியை ஒரு பெரும் வன்முறை மூலம் தீர்ப்பதற்கான சாத்தியத்தை பற்றி விவாதித்தது. கலகப் பிரிவுத் துருப்புக்களின் எண்ணிக்கையை அது 6 மடங்காக அதிகரித்து 30,000 என ஆக்கும் திட்டத்தை முன்வைத்தது. மேலும் பெர்க்குட் கிரிப்போன் பொலிஸ் பிரிவுகளுக்குக் கூடுதல் ஆயுதங்களை வாங்கவும் முன்மொழியப்பட்டது. ஆனால் பிபிசியின்படி, அமைச்சர் குழு தற்போதைக்கு “நாட்டின் படையினர், உள்துறைத் துருப்புக்கள், கலகப் பிரிவு பொலிசாருக்கு பரிவுணர்வு எவரிடம் என்பது பற்றி எவருக்கும் தெரியாது.... அதிகாரிகள் வன்முறையைப் பயன்படுத்த விரும்பினால், தங்கள் பக்கம் போதுமான படைகள் அவர்களுக்கு இல்லை. பின்னர் இது நாட்டில் ஒழுங்கை மீட்பதற்கு பதிலாக திரு.யானுகோவிச்சிற்கு முடிவு கட்டும்.” என முடிவிற்கு வந்ததாக குறிப்பிட்டது. இச்சூழலில் உக்ரேனிய தன்னலக்குழு ஒன்று நேற்று கூடி எதிர்த்தரப்பிற்கும் ஆட்சிக்கும் இடையே சமரசம் வேண்டும் எனக் கூறியது. இதன் தலைவர் ரினாட் அக்மெடோவ் யானுகோவிச்சின் ஆதரவாளரும் 12 பில்லியன் டாலர்களை கொண்ட உக்ரேனின் மிகப் பெரிய பணக்காரருமாவார். இதன்பின் அறிக்கை ஒன்றை அவருடைய SCM குழுவின் வலைத் தளத்தில் வெளியிட்டார். “சமாதான நடவடிக்கை மூலம்தான் அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட முடியும். வன்முறை அல்லது ஆயுதங்கள் பயன்படுத்தப்படுதல் ஏற்கப்பட முடியாதது. இக்காட்சியில் உக்ரேனில் எவரும் வெற்றிபெற்றவர் இல்லை. பாதிக்கப்பட்டவர்களும், தோற்றவர்களும்தான் உண்டு. இன்னும் முக்கியமாக, வன்முறை பயன்பாடு நெருக்கடியில் இருந்து வெளியேறும் பாதைக்கு உதவாது” என அவ்வறிக்கை கூறுகிறது. ஆட்சியும் எதிர்த்தரப்பும் தன்னலக்குழுக்களுக்கு கீழ்ப்படிபவை. மாலையில் யானுகோவிச்சின் உயர்மட்ட அதிகாரிகள், உடார் கட்சியின் விட்டாலி கிளிட்ஷ்கோ, தந்தைநாட்டு கட்சித் தலைவர் ஆர்செனி யாட்செனியுக், ஸ்வோபோடாவின் ஓலேக் ரியாஹ்னிபோக் என எதிர்த்தரப்பு தலைவர்களை சந்தித்தனர். கார்டியனிடம் பேசிய கிளிட்ஷோ தன்னக்குழுக்களைப் பாராட்டி, அவற்றுடன் தான் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளைப் பெருமையாகப் பேசினார். “தனிப்பட்ட உரையாடல்களில் அனைத்து தன்னலக்குழுக்களும் சட்டத்தின் ஆட்சி என்னும் கருத்தை ஆதரிக்கின்றன” என்றார் அவர். “தலைவர்கள் மாறலாம், ஆட்சி மாறலாம் ஆனால் நிர்ணயிக்கப்பட்ட சட்டங்கள் இல்லாத தன்மை வணிகக் குழுக்கள் தங்கள் சொத்துக்களைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்க முடியாது என்னும் பொருள்படுகின்றது.” இந்த அறிக்கை மேற்கு ஆதரவுடைய எதிர்த்தரப்பினையும் மற்றும் ஆட்சியினையும் உந்தும் தொழிலாளர் எதிர்ப்பு செயல்பட்டியலை சுட்டிக்காட்டுகிறது. இவை இரண்டும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனத்தை பாதுகாக்க இருப்பவை. இத் தன்னலக்குழுக்கள், 1991ல் சோவியத் ரஷ்யாவில் முதலாளித்துவம் மீள்புனருத்தானம் செய்யப்பட்டபின் வெளிப்பட்டவை. யானுகோவிச்சிற்கும் எதிர்த்தரப்பிற்கும் இடையே உள்ள மோதல் பூகோள மூலோபாய சார்புநிலை குறித்ததுதான். அதாவது மாஸ்கோவிடமா அல்லது எதிர்த்தரப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியமா எனபதே. எது தன்னலக்குழுக்கள் ஏகபோக உரிமை கொண்டிருக்கும் “சொத்துக்களை” நம்பகமாக பாதுகாக்கும் என்பது பற்றியதே. தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் கடந்த ஆண்டு எதிர்த்தரப்பு ஆர்ப்பாட்டங்கள், உக்ரேன் அரசியல் திவாலை கிட்டத்தட்ட 15 பில்லியன் டாலர்கள் கடன் என சர்வதேச வங்கிகளிடம் வாங்கியதை எதிர்கொண்ட நேரத்தில் வெளிப்பட்டவை. யானுகோவிச் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளை நிறுவும் உடன்பாட்டின் பகுதியாக ஆழ்ந்த சிக்க நடவடிக்கைகளுக்கு பேச்சுக்களை நடத்தினார். உடன்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கும் முடிவு, மின்சார மானிய உதவித்தொகைகள் மற்றும் சமூகநலத் திட்டங்களில் பெரும் வெட்டுக்கள் கொண்டுவருவதும் தொழிலாள வர்க்கத்தில் சமூக வெடிப்பை ஏற்படுத்தலாம் என்னும் அச்சத்தினால் ரஷ்யாவிடம் இருந்து நிதி உதவியை நாட முயன்றதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய சார்பு எதிர்த்தரப்பு மற்றும் யானுகோவின் ஆட்சி இரண்டுமே சர்வதேச வங்கிகளுக்கு கடன்கள் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும், செலவுகள் பில்லியனர் தன்னலக்குழுக்களால் என்று இல்லாமல் உழைக்கும் மக்களால் ஏற்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதில் ஒன்றாக உள்ளன. ஆளும் உயரடுக்கின் வெவ்வேறு பிரிவுகள் எதிர்த்தரப்பின் பாசிச குண்டர் படைகள் அல்லது அரசின் பாதுகாப்புப் படைகள் மூலம் வன்முறை, அடக்குமுறைக்கு திட்டமிடுகையில், அவை தொழிலாள வர்க்கத்திடம் கொண்டுள்ள விரோதப் போக்கில் ஒன்றுபட்டவையும், சிக்கன செயற்பட்டியலுக்கான எதிர்ப்பையும் கண்டு அஞ்சுகின்றன. இச்சூழ்நிலை, 1991ல் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மறுபுனருத்தானம் மற்றும் மக்களின் அரசியல் நனவின் மீது பிற்போக்குத்தனமான ஸ்ராலினிசத்தின் தாக்கத்தின் மீதான குற்றச்சாட்டாகவும் இருக்கிறது. முதலாளித்துவ மீட்பு உக்ரேனில் சமூகப் பேரழிவிற்கு வழி செய்துள்ளது. 1990ல் இருந்து 2000 வரை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 90 பில்லியன் டாலர்களில் இருந்து (உலகப் பொருளாதாரத்தில் 4%) 31 பில்லியன் டாலர்கள் என (உலகப் பொருளாதாரத்தில் 1 சதவிகிதம்) சரிந்துள்ளது. அப்பொழுது முதல் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் பெரும்பாலும் பெரும் செல்வ தட்டுக்குச் சென்றுள்ளது; இந்த ஒட்டுண்ணித்தன தன்னலக்குழுக்கள்தான், முதலாளித்துவ மறுபுனருத்தானத்தின் போது உக்ரேனிய அரச சொத்துக்களை சூறையாடியவர்களாவர். 2008ல் உக்ரேனின் உயர்மட்ட 50 தன்னலக்குழுவினரின் நிகர மதிப்பு 112.7 பில்லியன் டாலர்கள் அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரு பகுதி ஆகும். அவர்களுடைய சொந்தச் சொத்துக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் 85% வரையிலான வணிகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. தன்னலக்குழுவினரின் பாரிய சொத்துக்கள், பொது வாழ்வில் அவர்களுடைய சர்வாதிகாரம் பற்றிய மக்கள் சீற்றம் சோவியத்திற்குப் பிந்தைய உக்ரேனில் நிரந்தர அம்சம் ஆகும். ஆனால் ஸ்ராலினிச சோவியத் அதிகாரத்துவம் ட்ரொட்ஸ்கி தலைமையில் இருந்த இடது எதிர்ப்பை நசுக்கியதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து சுயாதீன செயல்பாடுகளையும் நசுக்கியது. இந்த குண்டர் தன்னலக்குழுவிற்கு இடதில் இருந்து, தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு இல்லை. உக்ரேனில் எந்த அரசியல் அமைப்பும் தன்னலக்குழுவின் முறையற்றுச் சேகரிக்கப்பட்டுள்ள சொத்து தொழிலாளர்களால் சோசலிசத்திற்கான போராட்டத்தில் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று போராடவில்லை. தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய அரசியல் பிரதிநிதித்துவமும் இல்லாத நிலையில், மக்கள் எதிர்ப்பு தொடர்ச்சியான வலதுசாரி அரசியல் செயல்பாட்டாளர்களால் திரிக்கப்படுகிறது. இவ்வகையில், 2004ல் யானுகோவிச்சை அகற்றிய அமெரிக்க ஆதரவுடைய “ஆரஞ்சுப் புரட்சி”, “அரசியலில் இருந்து பணத்தைப் பெறுவதற்குத்தான்” குரல் கொடுத்தது. “ஆரஞ்சு” ஆட்சி அதன் வலதுசாரிக் கொள்கைகளால் இழிந்தபோது, யானுகோவிச் ஆட்சிக்கு மீண்டும் வந்தபோது, அவர் இழிந்த முறையில் உக்ரேனில் உள்ள சமூக சமத்துவமின்மையை தீர்ப்பதாக உறுதியளித்தார். 2012ல் அவர்: “செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பாரிய பிளவை நாம் குறைக்க வேண்டும். ஏழைகளை மேம்படுத்த வேண்டும். உழைக்கும் வாய்ப்பை ஆரோக்கியமானவர்களுக்கு கொடுக்க வேண்டும், இயலாதவர்களுக்கு நம்பகமான சமூகப் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்” எனக் கூறினார். தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் மத்திய பிரச்சினை யானுவிச் ஆட்சிக்கும், பிற்போக்குத்தனமான திட்டங்களை கொண்டுள்ள பாசிச மேற்கு ஆதரவுடைய எதிர்தரப்பு சக்திகளுக்கும் எதிராக அதனது சொந்த, சுயாதீன போராட்டத்தை அபிவிருத்திசெய்வதாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகள் எதிர்தரப்பிற்குக் காட்டும் ஆதரவு, எதிர்த்தரப்பினர் உக்ரேனை ஆண்டால், அல்லது மேற்கு உக்ரேனில் ஒரு தொங்குதசை அரசு இருந்தால் அது ரஷ்யாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் எதிரான அவற்றின் செயல்களை முடுக்க உதவும் என்பதுதான். உக்ரேனை கட்டுப்படுத்த முயலுகையில் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பரந்த பூகோள அரசியல் மூலோபாய நோக்கங்களை தொடர்கின்றன. இந்த நாடு மூன்று முக்கிய குழாய்த் திட்டங்கள் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து ரஷ்ய எரிவாயுவை தொடர்புபடுத்துபவற்றில் இரண்டை கட்டுப்படுத்துகிறது—Transgas மற்றும் Soyuz குழாய்கள் இரண்டும் ஐரோப்பாவிற்கான ரஷ்யன் ஏற்றுமதியில் ஏறத்தாழ 80 சதவிகிதத்தை கொண்டுள்ளன என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் சிரியா மீது அமெரிக்கத் தாக்குதல் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் எதிர்க்கையில், ரஷ்ய கடற்படை பயன்படுத்திய முக்கிய கடற்படை தளங்களையும் உக்ரேன் கொண்டுள்ளது. |
|
|