World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan defence ministry threats to arrest of Tamil politician  

இலங்கை பாதுகாப்பு அமைச்சு தமிழ் அரசியல்வாதியை கைது செய்வதாக பயமுறுத்துகிறது

By M. Vasanthan
5 February 2014

Back to screen version

ஒரு வெளிப்படையான இனவாத ஆத்திரமூட்டலின் பாகமாக, பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகஸ்தர்கள், வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிரிவினைவாத்தை பிரச்சாரம் செய்கின்றார்என்ற போலி குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை புனர்வாழ்வுக்குஅனுப்புவது சம்பந்தமாக பரீசீலனை செய்வதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இராணுவத்திற்கு கீழ் உள்ள சித்திரவதை முகாமில், மூளைச் சலவைக்காக தடுத்து வைப்பதே புனர்வாழ்வு என்பதன் மறு பெயராகும்.

கடந்த வருடம் செப்டெம்பரில் நடந்த வட மாகாண சபை தேர்தலில், தமிழ் முதலாளித்துவத்தின் பிரதான கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு சசிதரன் தெரிவு செய்யப்பட்டார். ஜனவரி 14 வெளியான இலங்கையின் தினசரியான த ஐலண்ட் பத்திரிகை, “பாதுகாப்பு அமைச்சானது வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிரிவினைவாத உணர்வுகளை பிரச்சாரம் செய்வதை தடுப்பதற்காக, அவரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புவது குறித்து கடுமையாக ஆராய்கின்றது,” எனக் குறிப்பிட்டது. 

அனந்தி சசிதரன், 2009 மே மாத்தத்திற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பல தலமை பதவிகளை வகித்த பின்னர், திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த, முன்பு எழிலன் என்று அழைக்கப்பட்ட சின்னத்துரை சிவகுமாரின் மனைவியாவார். யுத்தத்தின் இறுதி நாளில், புலிகளின் பல தலைவர்களுடன் தனது கணவரும், தனதும் தன் பிள்ளைகளதும் கண்ணெதிரில் இலங்கை இராணுவத்திடம் சரண்டைந்ததாக சசிதரன் பகிரங்கமாக தெரிவித்தார். அதன் பின்னர் அவரைப்பற்றி சசிதரனுக்கு தகவல் கிடைக்கவில்லை. 

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கூட்டமைப்பு பிரிவினைவாத்துக்குபிரச்சாரம் செய்வதை கைவிட்டுவிட்டது. அதன் பிரகடனப்படுத்தப்பட்ட இலக்கானது, கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்தவாறு தமிழ் தொழிலாளர்களை கூட்டாக சுரண்டுவதன் பேரில், நாட்டின் இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கை ஆளுவதற்காக, தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று தமிழ் நிர்வாகத்தை அமைப்பதே ஆகும். இராஜபக்ஷ அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கலுக்குச் செல்வதற்காக, தமிழ் கூட்டமைப்பு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா உட்பட பெரும் வல்லரசுகளின் ஆதரவுக்கு அழைப்பு விடுக்கின்றது. சசிதரன் வாய்ச்சவடாலாக ஒரு சர்வதேச யுத்தக் குற்ற விசாரணையையும் வடக்கில் உள்ள இராணுவ ஆளுனருடன் ஒத்துழைக்க வேண்டாம் என்றும் கோருகிறார். அவர் புலி உறுப்பினராக இருக்கவில்லை. அவர் அண்மையில் நோர்வே, டென்மாரக், ஜேர்மன், பிரானஸ் மற்றும் கனடாவுக்கும் சென்று புலம்பெயர்ந்த தமிழர்களின் பல கூட்டங்களில் பேசினார். 

பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அலுவலர்கள் கூறியதாக எழுதிய த ஐலண்ட் பத்திரிகை, யுத்தத்தின் முடிவில் “கைது செய்யப்படாதவர்கள் அல்லது சரணடையாதவர்கள் புனர்வழ்வு திட்டத்தை தவறவிட்டுவிட்டனர். பனர்வாழ்வு அளிக்கப்படாமல் விடுபட்டவர்களில் ஆனந்தி (சசிதரனும்) ஒருவராவார்,” எனக் கூறியது.

அரசாங்கப் படைகளினால் சுமார் 11,000 தமிழ் இளைஞர்கள் புனர்வாழ்வு முகாம் என அழைக்கப்படும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அங்கு சித்திரவதைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளானார்கள். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் எழுந்த விமர்சனத்தின் காரணமாக, கடந்த நான்கு வருடங்களாக அவர்கள் பகுதி பகுதியாக விடுதலை செய்யப்பட்டார்கள். விடுதலை செய்யப்பட்டவர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களால் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.

“புனர்வாழ்வு பெறாமல் சமாளித்து தவிர்த்துக்கொண்டவர்களை பிடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா” என பத்திரிகையாளர் கேட்டபோது, அலுவலர்கள் அது அப்படித்தான் என பதிலளித்துள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டிருந்தால், “சசிதரன் அவ்வாறான விரோதமான நிலைப்பாட்டை எடுத்திருக்க மாட்டார்” என அவர்கள் தெரிவித்தார்கள். சசிதரனுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், அவருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக அரசாங்கத்தின் பரந்த இனவாத பயமுறுத்தல் பிரச்சாரத்தின் ஒரு பாகமாகும் என்பதைக் காட்டுகின்றன.

அமெரிக்காவின் யுத்தக் குற்ற தூதுவரான ஸ்டீபன் ரப் உடனான சசிதரனின் அண்மைய  சந்திப்பே, பாதுகாப்பு அமைச்சு அலுவலர்களின் அறிக்கைக்கு உடனடிக் காரணமாகும். மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை (யுஎன்எச்ஆர்சி) கூட்டத்தில், கொழும்பு அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு தகவல் திரட்டுவதற்கே அவர் இலங்கைக்கு வந்திருந்தார். வாஷிங்டன், அடுத்த யுஎன்எச்ஆர்சி கூட்டத்தில் யுத்தக் குற்றம் சம்பந்தமாக சர்வதேச விசாரணையை கோரும் ஒரு புதிய தீர்மானத்தை இலங்கை மீது கொண்டுவர இருப்பதாக, ரப் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்திருந்தார். இது அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை குறிக்கின்றது. இலங்கை அரசாங்கமே விசாரணையை நடத்த வேண்டும் என்றே அது முதலில் கோரியது. யுத்தத்தின் இறுதி வாரங்களில் மட்டும் குறைந்தபட்சம் 40,000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது ஐ.நா.வின் மதிப்பீடாக இருக்கின்றது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவும் சீனாவுடன் இணைந்து யுத்தத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுத்தன. எனினும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவுக்கும் தாம் தமது போட்டியாளராகக் கருதும் சீனாவுடனான இராஜபக்ஷ அரசாங்கத்தின் நெருங்கிய உறவை கீழறுக்க விரும்புகின்றன. குறிப்பாக, இராணுவ ரீதியில் சீனாவை கட்டுப்படுத்த முயற்சிக்கும் வாஷிங்டன், அந்த நாட்டுக்கு எதிராக யுத்தம் தொடுக்க திட்டமிடுகின்றது. ஆசிய-பசுபிக் நாடுகளை தம்முடன் இணைக்க திட்டமிடும் அமெரிக்கா, இலங்கையையும் தனது திட்டத்தில் இணைத்துக்கொள்ள விரும்புகின்றது.

தகவல்களை சேகரித்துக்கொண்ட ரப், தான் யுத்தத்தின் போது நடந்தவை பற்றி நேரில் பார்த்த சாட்சிகளை பெற்றதாகக் கூறினார். சசிதரன் மட்டுமன்றி, ஏனைய கூட்டமைப்பு தலைவர்களும் மற்றும் கத்தோலிக்க ஆயர்களும் கூட ரப்பைச் சந்தித்தனர். பாதுகாப்பு அமைச்சின் அச்சுறுத்தலை சுரண்டிக்கொள்வதில் அக்கறை காட்டிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் மிசேல் ஜே சீசென், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் சசிதரனை சந்தித்தார். முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பாதுகாப்பு அமைச்சு சசிதரனை அச்சுறுத்துவதன் மூலம், போர் குற்றங்கள் பற்றி பேசும் எவரையும் அச்சுறுத்தி அவர்களை மௌனமாக்க எண்ணுகின்றது.

அமெரிக்கா, கொழும்பு அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை கபடத்தனமாகத் தூக்கிப் பிடிப்பதில், தனது சொந்த மூலோபாய நலன்களைக் கொண்டுள்ளது; தமிழ் கூட்டமைப்பும் சசிதரனும், அமெரிக்க மற்றும் இந்திய ஆதரவின் கீழ் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்பாட்டுக்கு நெருக்குவாரம் கொடுக்கும் தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரலை கொண்டுள்ளனர். எனினும், இராஜபக்ஷ அரசாங்கம், தனதும் மற்றும் 1983ல் யுத்தம் தொடங்கியதில் இருந்தே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினதும் போர் குற்றங்களை மறைக்கும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியில் ஈடுபடுகின்றது. தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள், உண்மையில் தங்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ள, ஆளும் தட்டுக்களின் திட்டமிட்ட சூழ்ச்சிகளுடன் பொதுவான எதையும் கொண்டிருக்கவில்லை.

கடந்த சில வாரங்களாக, கொழும்பு அரசாங்கம் சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டாம் என்று அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமும் யூஎன்எச்ஆர்சி அலுவலர்களிடமும் வேண்டுகோள் விடுப்பதோடு, தனது சொந்த விசாரணைக்கு "அதிக நேரம்" தருமாறு கோருகின்றது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளை சந்திக்க வாஷிங்டனுக்கு சென்றதோடு அரசாங்கத்தின் அவநம்பிக்கையான முறையீட்டை கையளிக்க ஐரோப்பாவிற்கும் பயணம் செய்கின்றார்.

பாதுகாப்பு அமைச்சின் அச்சுறுத்தல், போர் குற்றச்சாட்டுகளை மறுத்து அரசாங்கம் தூண்டிவிடும் இனவாத பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளியான பௌத்த அதிதீவிரவாத ஜாதிக ஹெல உறுமய, மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆயர் இராயப்பு ஜோசப் அமெரிக்காவுக்கு தகவல் வழங்கியதால் அவரை கைது செய்யுமாறு கோரியது.

தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம்களுமாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அமைதியின்மை வெடிக்கக் கூடும் என்பதையிட்டு பீதிகொண்டுள்ள இனவாத இராஜபக்ஷ அராசங்கமும், சிங்கள பௌத்த அதிதீவிரவாத குழுக்களும், "பயங்கரவாதமும்" "புலி பிரிவினைவாதமும்" மற்றும் "சர்வதேச சதியும்" மீண்டும் தலைநீட்டுவதாக பித்துப்பிடித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை முட்டுச் சந்துக்குள் தள்ளி, அதை பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி, பொலிஸ் அரசை மேம்படுத்துவதே இதன் இலக்காகும்.