World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japanese PM strengthens economic-strategic ties with India

ஜப்பானிய பிரதம மந்திரி இந்தியாவுடன் பொருளாதார-மூலோபாய உறவுகளைப் பலப்படுத்துகிறார்

By Deepal Jayasekera
30 January 2014

Back to screen version

ஜப்பானிய பிரதம மந்திரி புது டெல்லியுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருத்தொருமித்த பிரச்சாரத்தின் பாகமாக இருந்த அவரது இந்தியாவிற்கான மூன்று நாள் விஜயத்தைக் கடந்த திங்களன்று முடித்தார். டிசம்பரில் ஜப்பானிய அரசரின் ஒரு இந்திய பயணம் மற்றும் ஜனவரி தொடக்கத்தில் இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்த ஜப்பான் பாதுகாப்பு மந்திரியின் ஒரு விஜயம் ஆகியவற்றைத் தொடர்ந்து அபேயின் விஜயம் அமைந்திருந்தது.

அபேயின் விஜயத்தோடு இணைந்திருந்த முக்கியத்துவத்தை அடிக்கோடிடும் வகையில், இந்தியா கடந்த ஞாயிறன்று அதன் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு சிறப்பு விருந்தினராக ஜப்பானிய பிரதம மந்திரியை அழைத்திருந்தது. இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்குடனான அபேயின் சந்திப்பிற்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு கூட்டறிக்கை, "இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டுறவை மேலதிகமாக ஆழப்படுத்துவதற்கான அவர்களின் உறுதியை மீண்டும் வலியுறுத்தியது."

சிங் குறிப்பிட்டார், "இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் (Look East Policy) இதயதானத்தில் ஜப்பான் உள்ளது." இந்த கொள்கை கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய நிலைப்பாட்டை விரிவாக்குவதை நோக்கமாக கொண்டதாகும். அபே உற்சாக பெருக்கில் பொங்கி வழிவதைப் போலிருந்தார். அவர் அறிவித்தார், "ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவுகள் உலகில் வெறெங்கிலும் வேறெந்த இருதரப்பு உறவுகளையும் விட தலைச்சிறந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது."

இந்தியாவை நோக்கிய அபேயின் நிலைநோக்கு, அப்பிராந்தியத்தில் சீனாவை தனிமைப்படுத்துவதை மற்றும் இராணுவரீதியில் அதை சுற்றி வளைப்பதை நோக்கமாக கொண்ட அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாகும். இந்தியா மற்றும் ஜப்பான் இரண்டினோடும் வாஷிங்டன் அதன் உறவுகளைப் பலப்படுத்தி உள்ளதோடு, அவற்றிற்கு இடையிலான உறவுகளை பலப்படுத்தவும் ஊக்கப்படுத்தியது.

இந்தியாவிலும், மிக பரந்தளவில் ஆசியாவிலும், ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நிலைப்பாட்டை பலப்படுத்த அபே முயன்று வருகிறார். அவரது மேலதிக வலிந்துதாக்கும் இராஜாங்க நடவடிக்கையின் பாகமாக, அவர் டிசம்பர் 2012இல் பதவிக்கு வந்ததில் இருந்து தென்கிழக்கு ஆசியாவின் ஒவ்வொரு நாட்டிற்கும் விஜயம் செய்துள்ளார். ஜப்பான் மற்றும் இந்தியா இரண்டுமே ஒன்றுபோல சீனாவின் பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கின் வளர்ச்சியை எதிர்கொள்வதில் கவலை கொண்டுள்ளன.

அபே மற்றும் சிங் முதல்முறையாக அமெரிக்காவுடன் இணைந்து முத்தரப்பு கப்பற்படை போர் ஒத்திகை நடத்த ஒப்புக் கொண்டனர். சீனாவை ஆத்திரப்படுத்தும் என்ற கவலையால் இதற்கு புதுடெல்லி முன்னர் விருப்பமற்று இருந்தது. டிசம்பரில், இந்தியாவும் ஜப்பானும் தென்னிந்தியாவை ஒட்டிய பகுதியில் அவற்றின் முதல் இருதரப்பு கப்பற்படை போர் ஒத்திகையை நடத்தின. அதை தொடர்ந்து இந்த மாதம் அரேபிய கடலில் கூட்டு கடல்படை இராணுவ போர் தந்திர நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSC) மற்றும் அதன் எதிர்பாகத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஜப்பானின் அமைப்பிற்குள் இடையில் வழக்கமான இடைவெளியில் சந்திப்புகள் நடத்தவும் இரண்டு பிரதம மந்திரிகளும் உடன்பட்டனர்.

மூலோபாயரீதியில் முக்கியத்துவம் மிக்க துறைகளின் முக்கிய திட்டங்களில் முதலீடு செய்ய ஜப்பானுக்கு அழைப்புவிடுத்ததன் மூலமாக புது டெல்லி டோக்கியோவுடனான அதன் உறவுகளின் அஸ்தஸ்தை அடிகோடிட்டு காட்டியது. இந்த திட்டங்களில் சீனாவின் முதலீடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களும் உள்ளடங்கும். சாலை அமைப்பு, விவசாயம், வனத்துறை, நீர்பாசனம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகியவற்றில் முதலீடு செய்ய ஜப்பானிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. சீனாவிற்கு இந்த நகர்வு ஆத்திரமூட்டக்கூடும். இந்திய அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு உரிமை கோரிவரும் சீனா "சர்ச்சைக்குரிய பகுதி" என்று அது எதை குறிப்பிடுகிறதோ அப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவதற்கான ஆசிய வளர்ச்சி வங்கியின் ஒரு கடனுதவிக்கும் 2007இல் எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவிலிருந்து பர்மா வழியாக தென்கிழக்கு இந்தியாவிற்கான முக்கிய தரைவழி போக்குவரத்து பாதையின் ஒரு பாகமாக உள்ளது. இதற்கு கூடுதலாக, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் ஒரு புதிய துறைமுகம் கட்டுவதில் ஜப்பானிய நிறுவனங்களின் முதலீட்டிற்கு இந்தியா அழைப்புவிடுத்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களுமே, "ஆசியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள சீன-செல்வாக்கின் கீழ் உள்ள வலையத்திற்கு ஒரு நம்பகமான மாற்றீட்டை வழங்கும் ஒரு மாற்று வினியோக வலையத்தை" உருவாக்க ஒரு "பெரும் மூலோபாய வடிவமைப்பு" என்றரீதியில் டைம்ஸ் ஆஃப் இந்தியா வர்ணித்ததன் ஒரு பாகமாக உள்ளன.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு அனல்மின் நிலையம் கட்டமைக்க இலங்கையுடனான ஒரு கூட்டு நிறுவனத்திற்கு இந்தியா ஜப்பானின் உதவியைக் கோரி உள்ளது. 2009இல் முடிவுக்கு வந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு (LTTE) எதிராக பெய்ஜிங் கொழும்புக்கு நிபந்தனையற்ற அரசியல் மற்றும் இராணுவ ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து இலங்கையில் சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கு குறித்து புது டெல்லி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

ஜப்பானை பொறுத்த வரையில், இந்தியா வெறுமனே ஒரு மூலோபாய கூட்டாளி மட்டுமல்ல, மாறாக சீனாவிற்கு மாற்றாக ஒரு முக்கிய மலிவு-உழைப்பு தளமாகவும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜப்பான் சீனாவிற்கு எதிரான ஒரு மூலோபாய கூட்டாளியாக உள்ளது, அத்தோடு இந்திய பொருளாதாரம் மந்தமடைந்து வருகின்ற நிலையில், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அதிகரித்துவரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அந்நாடு முகங்கொடுத்து வருகின்ற நிலைமைகளின் கீழ், அது ஜப்பானை முதலீட்டு நிதிகளுக்கான ஒரு பிரதான ஆதாரமாகவும் காண்கிறது.

அபேவிற்கு இந்தியாவில் அளிக்கப்பட்ட மிக சாதகமான வரவேற்பு, வாஷிங்டன் உடனான அதன் மூலோபாய கூட்டுறவுகள் மீது நிலவிவரும் கவலைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தியா அமெரிக்காவிற்கு நெருக்கமாக நகர்ந்துள்ள போதினும், ஈரானுடனான உறவுகள் மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்ந்துவரும் அமெரிக்காவின் நெருக்கமாக உறவு, மற்றும் சீனாவுடனான ஒரு மோதலில் அமெரிக்காவின் பகடைகாயாக பயன்படுத்தப்படும் அபாயம் போன்ற பிரச்சினைகளின் மீது அமெரிக்க மிரட்டல்கள் குறித்து இந்திய ஆளும் மேற்தட்டுக்கள் கவலை கொண்டுள்ளன.

இந்திய ஊடகங்களும் மற்றும் சிந்தனை கூடங்களும் ஜப்பானுடனான உறவுகளை ஆதரிப்பதில் நடைமுறையில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான ஒரு கருத்துரை கட்டுரை இவ்வாறு வலியுறுத்தியது: "இந்தியாவிற்கு ஒரு நவீன தொழில்துறை அடித்தளம் வேண்டுமென்பது மட்டுமல்ல, அண்டைநாடுகளுக்கு எதிராக நிலம் மற்றும் கடல் பகுதிகளில் உரிமைகோரி பலமாக அழுத்தமளித்து வருகின்ற பெரும் சக்திவாய்ந்த மற்றும் உறுதியான சீனாவிற்கு எதிராக இந்தியா மற்றும் ஜப்பான் இரண்டிற்கும் ஒரு தடுப்பு அவசியமாகும்."

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சக செயலர் கே. ஷங்கர் பாஜ்பாய் அப்பட்டமாக பின்வருமாறு அறிவித்தார்: "ஜப்பானை நாம் எந்தளவிற்கு விரும்புகிறமோ, அதேயளவிற்கு தெளிவாக அவர்களும் நம்மை விரும்புகிறார்கள். சீனா எங்களை உந்தி தள்ளவில்லை என்றாலும் எங்களின் பரஸ்பர நம்பிக்கைகள் வேறு விதத்தில் எங்களை இணைத்திருக்கும் என்று நடிப்பதில் அர்த்தமே இல்லை, அதேவேளையில் அந்த எதார்த்தத்தில் தவறொன்றும் இல்லை. நாங்கள் சீனாவிற்கு எதிரான விரோதத்தில் எங்களின் உறவுகளைக் கட்டியமைக்கவில்லை, ஆனால் சீனா எங்களுக்கு எதிராக விரோதமாக செயல்பட்டால் என்ன செய்வதென்று ஆராய்வது சரியானதும், முறையானதுமாகும் என்பதை நாங்கள் இருவருமே நேர்மையோடு தெரிவிக்க முடியும்," என்றார்.

அபே, அவருடைய பங்கிற்கு, மிகத் தெளிவாக ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை பலப்படுத்தும் அவரது மூலோபாயத்திற்கு மையமாக இந்தியாவைக் காண்கிறார். அவரது 2007ஆம் ஆண்டு புத்தகமான, ஓர் அழகிய நாட்டை நோக்கி: ஜப்பானுக்கான எனது பார்வை என்பதில், "வேறொரு தசாப்தத்தில், ஜப்பான்-அமெரிக்க மற்றும் ஜப்பான்-சீன உறவுகளை ஜப்பான்-இந்திய தொடர்புகள் கடந்து சென்றால்" அது அவருக்கு ஆச்சரியமாக இருக்காதென்று தெரிவித்திருந்தார். அந்த கண்ணோட்டத்தை அடைவதென்பது இப்போதும் வெகுதூரத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 2012இல் ஒரு கட்டுப்பாடற்ற வர்த்தக உடன்படிக்கை செய்யப்பட்டிருந்த போதினும், 2012-13இல் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், 340 பில்லியன் டாலர் சீன-ஜப்பான் வர்த்தகத்தோடு ஒப்பிடுகையில், வெறும் 18.61 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.

எவ்வாறிருந்த போதினும், அன்னிய நேரடி முதலீட்டின் ஒரு கூர்மையான உயர்வோடு (குறிப்பாக உள்கட்டமைப்புகளில்) சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை ஒரு மலிவு உழைப்பிடமாக கட்டமைப்பதற்கான அபேயின் நோக்கம் வடிவம் எடுக்க தொடங்கி உள்ளது. ஜப்பானிய நிறுவனங்களின் முதலீடுகள் இன்னும் பெருமளவிற்கு திறந்துவிடப்படவில்லை என்றபோதினும், முதலீட்டை 90 பில்லியன் டாலருக்கு அதிகமாக உயர்த்த உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசு செய்திகளின்படி, ஏப்ரல் 2000 மற்றும் ஜூன் 2012க்கு இடையில் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 12.66 பில்லியன் டாலர் மதிப்பிற்கு முதலீடு செய்தன. "இது இந்தியாவிற்குள் வந்த மொத்த FDIஇல் [அன்னிய நேரடி முதலீடு] 7 சதவீதமாகும் என்பதோடு, அது இந்தியாவில் முதலீடு செய்த முதலீட்டாளர்களில் ஜப்பானை நான்காவது இடத்திற்குக் கொண்டு வந்தது. இந்தியாவில் உள்ள பல ஜப்பானிய இணைப்பு பெற்ற நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான அளவிற்கு வளர்ந்துள்ளன மற்றும் சுமார் 1,000 ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன."

ஐயத்திற்கிடமின்றி அபேயின் இந்திய விஜயத்தை உன்னிப்பாக கவனித்து வந்தாலும், சீனா விடையிறுப்பில் மௌனமாக இருந்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் குன் கான்ங் "இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ கூட்டுறவின் அபிவிருத்தியைக்" குறிப்பிட்டுக் காட்டினார். இது "அமைதி, ஸ்திரப்பாடு மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு ஆக்கபூர்வமாக இருக்குமென" நம்புவதாக அவர் குறிப்பாக தெரிவித்தார்.