சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australian government joins international witch hunt of Edward Snowden

எட்வார்ட் ஸ்னோவ்டென் மீதான சர்வதேச வேட்டையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் இணைகிறது

Patrick O’Connor
3 February 2014

Use this version to printSend feedback

தேசிய பாதுகாப்பு முகமையின் இரகசியங்களை வெளியிட்டவரான எட்வார்ட் ஸ்னோவ்டென் மீது குற்றஞ்சாட்டி, அமெரிக்காவில் சிறையில் அடைக்கும், அல்லது நிரந்தரமாக அவரை மௌனமாக்கும் நோக்கத்தோடு அவருக்கு எதிராக ஒபாமா நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் வேட்டையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்து ஆஸ்திரேலிய அரசும் சேர்ந்துள்ளது.

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட் ஸ்னோவ்டெனை "அவரது நாட்டைக் காட்டிக் கொடுத்த" குற்றத்திற்காக அவர் "ஒரு தேசதுரோகி" என்று கடந்த வாரம் முத்திரை குத்தினார். அபோட்டின் கருத்தை வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷப் போன்றவர்களின் கருத்துக்கள் பின்தொடர்ந்தன. அவர், முன்னொருபோதும் நடந்திராத நம்பிக்கை துரோகம்" என்றும், "ரஷ்யாவில் பதுங்கி இருந்து வெட்கமின்றி அவரது நாட்டைக் காட்டி கொடுத்து வருகிறார்" என்றும் மிரட்டும் விதத்தில் ஸ்னோவ்டெனை குற்றஞ்சாட்டினார்.

இத்தகைய கண்டனங்கள் அமெரிக்காவின் ஆளும் வட்டாரங்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்ற பொய்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் பிரச்சாரத்திற்கு நேரடியாக ஊட்டமூட்டுகின்றன. பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவத்துறை அதிகாரிகள் பகிரங்கமாக ஸ்னோவ்டெனின் படுகொலைக்கு பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர். தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் மற்றும் அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டெர் போன்ற மூத்த அரசு அதிகாரிகள், ஜோடிக்கப்பட்ட உளவுபார்ப்பு குற்றச்சாட்டுக்களின் மீது ஒரு கண்துடைப்பு விசாரணையை முகங்கொடுக்க அமெரிக்காவிற்கு ஸ்னோவ்டென் திரும்ப வேண்டுமென கோருகின்றனர்.

ஸ்னோவ்டென் மீதான அபோட் மற்றும் பிஷாப்பின் தாக்குதல்கள், ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அரசும் அரசியல் ஸ்தாபகமும் வாஷிங்டனுக்கு முற்றுமுழுதாக அடிபணிந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. துணை ஜனாதிபதி ஜோ பெடன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் உடனான சந்திப்பிற்குப் பின்னர் தமது கருத்துக்களை வெளியிட்ட பிஷாப், வார்த்தைக்கு வார்த்தை வெள்ளை மாளிகையால் உத்தரவிடப்பட்ட வசனத்தை வாசித்து கொண்டிருந்தார். வேறெந்த அரசும் சர்வதேச அளவில் ஸ்னோவ்டெனை இத்தகைய சொற்பதங்களோடு குற்றஞ்சாட்டி இருக்கவில்லை.

வெள்ளை மாளிகையில் இருக்கும் குற்றவாளிகளைப் போலவே, கான்பெர்ராவின் அதன் சொந்த குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஸ்னோவ்டெனின் பெயரை இழிவாக்கும் முயற்சியில் அபோட் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க மற்றும் உலகளாவிய மக்கள் மீது NSA மற்றும் அதனோடு இணைந்த உளவுத்துறை நிறுவனங்களால் நடத்தப்பட்ட பாரிய பொலிஸ்-அரசு நடவடிக்கையை ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தி உள்ளார். அமெரிக்காவின் இராணுவ-உளவுவேலை இயந்திரத்திற்கு, குறிப்பாக ஆசியாவில் ஆஸ்திரேலியா எவ்வாறு மையமாக உள்ளதென்பதையே அபோட் அரசாங்கத்தின் விடையிறுப்பு எடுத்துக்காட்டுகிறது.

அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள ஆஸ்திரேலிய இராஜாங்க அலுவலகங்கள், NSA இன் மின்னணு ஒற்றுகேட்பு அலுவலகங்களாக (electronic listening post) செயல்படுகின்றன என்பதை ஸ்னோவ்டெனால் கசியவிடப்பட்ட ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன. இந்தோனேஷிய ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் ஏனைய பிரதான அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகளை ஆஸ்திரேலிய உளவுத்துறை முகமைகள் கண்காணித்தன. கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்களில் இருந்து தகவல்களை உருவி எடுக்க மற்றும் ஆசிய-பசிபிக்கில் உள்ள மில்லியன் கணக்கான சாமானிய மக்களின் இரகசிய மின்னணு தரவுகளைக் கண்காணிக்க ஆஸ்திரேலிய தொலைதொடர்பு நிறுவனங்கள் NSA உடன் இரகசிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன.

இத்தகைய பாரிய உளவுவேலை நடவடிக்கைகள் சீனாவிற்கு எதிரான அமெரிக்க யுத்த தயாரிப்புகளோடும் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பொலிஸ்-அரசு முறைமைகளோடும் நெருக்கமாக பிணைந்துள்ளன. சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைப்பதை நோக்கமாக கொண்டுள்ள ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" ஆஸ்திரேலியாவின் முக்கியத்துவமானது, அந்த கொள்கை உத்தியோகபூர்வமாக வெள்ளை மாளிகையில் அறிவிக்கப்படவில்லை, மாறாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நவம்பர் 2011இல் அறிவிக்கப்பட்டதென்ற உண்மையால் அடிக்கோடிடப்படுகிறது. ஒரு இராணுவ மோதல் சம்பவத்தில் சீனாவிற்கான எண்ணெய் மற்றும் ஏனைய மூலப்பொருட்களின் வினியோகத்தை வெட்ட, பெண்டகனால் "தடுப்பு மையங்கள்" (choke points) என்று அடையாளம் காணப்பட்டவை உட்பட, ஆஸ்திரேலியாவின் எல்லைகள் பிரதான கடல்வழிகளாக உள்ளன.

அமெரிக்க கண்காணிப்பு மற்றும் உளவுவேலை கருவிகளுள் ஆஸ்திரேலியாவின் ஒருங்கிணைவு, அமெரிக்க யுத்த உந்துதலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மின்னணு கண்காணிப்பு, உளவுவேலை, தகவல்தொடர்புகள் மற்றும் இணையவழி தாக்குதல்கள் ஆகியவை நவீன யுத்தக்களத்தில் தவிர்க்கவியலா பாத்திரம் வகிக்கின்றன. பைன் கேப் (Pine Gap) போன்ற ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்காவால் செயல்படுத்தப்படும் சமிக்ஞை கண்காணிப்பு தளங்கள் (signals intelligence facilities) ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடத்தப்பட்ட அமெரிக்க யுத்தங்களின் போதும், அத்தோடு மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் ஒபாமாவின் குற்றத்தனமான டிரோன் தாக்குதல்களின் போதும் இன்றியமையாதவையாக இருந்துள்ளன. சீனா உடனான அமெரிக்க யுத்த நிகழ்வில், கான்பெர்ரா தானாகவே வெளியிலிருந்து சம்பந்தப்பட்டிருக்கும் என்பதை ஆஸ்திரேலியாவின் இராணுவ மற்றும் உளவுவேலைகளுக்கான தளங்கள் உறுதிபடுத்துகின்றன.

இதனால் தான் கான்பெர்ராவிடமிருந்து வரும் ஒரு சிறிய கருத்துவேறுபாட்டைக் கூட வாஷிங்டனால் சகித்துக் கொள்ள முடியாது. ஆஸ்திரேலிய அரசியலில் தலையிடுவதில் அமெரிக்கா நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. இந்தோனேஷியா மற்றும் சிலியில் இரத்தந்தோய்ந்த ஆட்சிகவிழ்ப்புகளுக்கு ஒத்து ஊதிய வெகு காலத்திற்குப் பின்னர் அல்ல, 1975'லேயே, பிரிட்டிஷ் முடியரசின் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதியான கவர்னர் ஜெனரல் ஜோன் கெர் மூலமாக விட்லேம் தொழிற்கட்சி அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து இறக்குவதில் CIA நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்தது. பைன் கேப் மற்றும் ஏனைய அமெரிக்க இராணுவ தளங்கள் மீது கை வைக்கப்படாது என்பதற்கு விட்லேம் வாஷிங்டனுக்கு மறுஉத்தரவாதம் அளித்திருந்த போதினும், அதிகரித்துவந்த அரசியல் தீவிரத்தன்மைக்கு இடையில் அவரது அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து வந்ததாக அங்கே அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய ஆளும் வட்டாரங்களுக்குள் கவலைகள் இருந்தன.

ஜூன் 2010இல், ஒபாமா நிர்வாகம் அதன் "முன்னெடுப்பை" அறிவிக்க தயாரிப்புகள் செய்து கொண்டிருந்த போது, கான்பெர்ராவில் இருந்த அமெரிக்க தூதரகத்தின் "பாதுகாப்பு ஆதாரங்கள்" (protected sources) என்று விக்கிலீக்ஸால் எவை அடையாளம் காட்டப்பட்டனவோ அந்த ஆட்சியை உடைக்கும் கன்னைகளால் இரவோடு இரவாக அனுமானிக்கப்படாத சூழலில் அவரது முதல் பதவிகாலத்தில் இருந்து தொழிற் கட்சி பிரதம மந்திரி கெவின் ரூட் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய-அமெரிக்க கூட்டுறவில் "உறுதியோடு-திடமாக" இருப்பதாக ரூட் தாமே அறிவித்திருந்தார் என்ற போதினும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வந்த பதட்டங்களில் மத்தியஸ்தம் செய்ய முயன்ற அவரது முயற்சிகள் வாஷிங்டனின் திட்டங்களை வெட்டுவதாக இருந்தன.

தூதரக அதிகாரிகளால் அதிகளவில் வளைந்து கொடுக்கக்கூடிய நபராக அடையாளம் காணப்பட்ட ஜூலியா கில்லார்ட் அமர்த்தப்பட்டார். பதவி ஏற்றதும், அவர் உடனடியாக அவரது அமெரிக்க சார்பு நற்சான்றுகளை வெளிப்படுத்தினார். அமெரிக்க தூதரக இரகசிய ஆவணங்களை வெளியிட்டதன் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஏனைய அரசாங்கங்களின் இழிந்த சூழ்ச்சிகளை மற்றும் குற்றங்களை அம்பலப்படுத்திய அவர் குற்றவியல் செயல்களை இழைத்துவிட்டதாக அறிவித்து, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை கில்லார்ட் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். 2011இல் அவரது "முன்னெடுப்பு" உரையை வழங்க ஆஸ்திரேலியாவிற்கு வருமாறு ஒபாமாவிற்கு அப்பெண்மணி அழைப்புவிடுத்ததோடு, வடக்கு நகரமான டார்வினில் அமெரிக்க கப்பற்படைகளை நிறுத்தும் மற்றும் அமெரிக்க படைகளுக்கான ஏனைய இராணுவ தளங்களைத் திறக்கும் ஓர் உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டார்.

கடந்த செப்டம்பரில் பதவியேற்ற தற்போதைய கூட்டணி அரசாங்கம், அதன் முந்தைய தொழிற்கட்சி அரசாங்கம் எதில் விட்டுசென்றதோ அதிலிருந்து முன்னெடுத்து செல்கிறது. கான்பெர்ராவும் அமெரிக்காவும் "கூட்டாளிகள் என்பதை விட மேலானவை" என்று பதவியேற்றதும் அறிவித்த அபோட், அமெரிக்காவை தாம் ஓர் அன்னிய நாடாக கருதவில்லை" என்பதையும் சேர்த்துக் கொண்டார். ஸ்னோவ்டெனை குற்றஞ்சாட்டுவதில் இருந்து கடந்த நவம்பரில் சீனாவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் குறித்த அதன் ஆத்திரமூட்டும் விமர்சனம் வரையில் ஒவ்வொரு பிரச்சினையிலும், அபோட் அரசாங்கம் ஒபாமா நிர்வாகத்திற்கான ஒரு விரும்பத்தகுந்த வேட்டை நாயாக இருந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரத்தை நிராகரிக்க வேண்டும். அவருடைய தைரியமான நிலைப்பாடு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளில் ஒரு பொலிஸ்-அரசு நிலைநிறுத்துவதற்கான தயாரிப்புகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.

மோசமடைந்துவரும் உலகளாவிய முதலாளித்துவ உடைவுக்கு இடையில், யுத்தம் மற்றும் சர்வாதிகார உந்துதலுக்கு பொறுப்பான இலாப அமைப்புமுறையை தூக்கியெறிய திறன் படைத்த ஒரே சமூக சக்தியை தொழிலாள வர்க்கம் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஸ்னோவ்டெனை பாதுகாக்கவும் மற்றும் அவருக்கு எதிரான அரச சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தவும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பாரிய ஆதரவு ஒன்றுதிரட்டப்பட வேண்டும். அவருடைய பாதுகாப்பானது, யுத்த அச்சுறுத்தல் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாக உள்ளது.