World Socialist Web Site www.wsws.org |
Ukrainian Prime Minister resigns as EU keeps pressure on Russia ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது அழுத்தத்தை பிரயோகிக்கையில் உக்ரேனிய பிரதம மந்திரி இராஜிநாமா செய்கிறார்
By Stefan Steinberg நாட்டின் வலதுசாரி எதிர்த்தரப்பினரின் தலைமையின் கீழ் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் காட்டும் ஒரு விட்டுக்கொடுப்புபோல் உக்ரேனிய பிரதம மந்திரி மைகோலா அஸாரோவ் செவ்வாயன்று பதவியில் இருந்து இறங்கினார். பாராளுமன்றப் பிரதிநிதிகளும் இரண்டு வாரத்திற்கு முன்னால் தாங்கள் இயற்றிய பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமையை கட்டுப்படுத்தும் எதிர்ப்புக்கள்-தடைச் சட்டத்தை பெரும்பான்மை வாக்கின் மூலம் இரத்து செய்துவிட்டனர். மைகோலா அஸாரோவ், யானுகோவிச்சிற்கு மிக நெருக்கமானவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நெருக்கமான பிணைப்புக்களை கொண்டவருமாவார். அவர் முன்னாள் ஜனாதிபதி லியோனிட் குசமாவின் கீழ் நிதிய இயக்குனர் எனப் பணிபுரிந்த காலத்தில் இருந்து தனது பதவிக் காலத்தில் பல முறை ஊழல் அவதூறுகளில் சிக்கியவர். அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஆயுதப் பொலிஸ் மற்றும் அரசாங்கத்தின் இழிந்த பெர்குட் ஆயுதக்குழுக்களை கொண்டு வன்முறையாக அடக்கியதை சமீபத்தில் பகிரங்கமாக ஆதரித்ததால் உக்ரேனியர்களின் வெறுப்பை அஸாரோவ் பெற்றுக்கொண்டார். அஸாராவ்வின் இராஜிநாமாவின் பொருள் அமைச்சரவை இயல்பாக கலைக்கப்படுவதாகும். இது ஐரோப்பிய ஒன்றியச் சார்பு எதிர்க்கட்சி வலதுசாரிகளின் முக்கிய கோரிக்கை ஆகும். அஸாராவ் இராஜிநாமாவை தொடர்ந்து, ஜனாதிபதி யானுகோவிச் இராஜிநாமா செய்ய வேண்டும் என்னும் தங்கள் பிரச்சாரத்தை தொடர இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெளிவாக்கி உள்ளனர். “இது ஒரு வெற்றி அல்ல. வெற்றியே நோக்கி ஒரு படிதான்” என்றார் UDAR எனப்படும் உக்ரேனிய ஜனநாயக சீர்திருத்தக் கட்சிக் கூட்டின் தலைவரான விட்டாலி கிளிட்ஷ்கோ. இக்கட்சி ஜேர்மனியின் பழைமைவாத கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்துடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டுள்ளது. கிளிட்ஷ்கோவின் கருத்து எதிர்த்தரப்பு தாய்நாட்டு கட்சியின் முக்கிய உறுப்பிரான ஆண்ட்ரிய் பாவ்லோவ்ஸ்கியினால் எதிரொலிக்கப்பட்டது. இக்கட்சி சிறையில் இருக்கும் தன்னலக்குழு யூலியா திமோஷெகோவுடையது. “மோதலைத் தீர்க்க இது ஒரு சிறிய முன்னோக்கிய அடி” என்றார் அவர். அமெரிக்க வெளிவிவகாரத்துறை, ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனிய அரசாங்கம் இவற்றின் ஆதரவுடன், தாய்நாடு மற்றும் புதிய பாசிச ஸ்வோபோடா கட்சி ஆகியவை உடனடியாக ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரத்தின் இழப்பில் பாராளுமன்றத்திற்குக் கூடுதல் அதிகாரங்களை கொடுத்த 2004 அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதும் தேவை எனக் கோரியுள்ளன. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் யானுகோவிச்சை அகற்றி, தமது மூலோபாய நலன்களையும் மற்றும் நாட்டின் தன்னலக்குழுவினரின் செல்வத்தைக் பாதுகாக்கும், சர்வதேச நாணய நிதியத்தினாலும் சர்வதேச வங்கிகளினாலும் கோரும் சிக்கனக் கொள்கைகள், தனியார்மயமாக்கும் கொள்கைகளை செயல்படுத்தும் ஒரு நிர்வாகத்தைக் கொண்டுவர முனைகின்றன. உக்ரேனிய அரசாங்கத்தின் இராஜிநாமா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் தீவிர அழுத்த நடவடிக்கைகளை அடுத்து வந்துள்ளது. இவை இரண்டும் எதிர்த்தரப்பின் சார்பில் கீயேவில் நடந்த எதிர்ப்புக்களில் நேரடியாகத் தலையிட்டன. அரசாங்கத்திற்குக் கூடுதல் அழுத்தம் யானுகோவிச்சுடன் மரபார்ந்த முறையில் தொடர்புடைய தன்னலக்குழு முகாமிடம் இருந்தும் வந்தது, குறிப்பாக ரினாத் அக்மெடோவிடம் இருந்து வந்தது. நாட்டின் முதல் பணக்காரரான அக்மெடோவ் அவருடைய நிறுவனத்தின் வலைத் தளத்தில் எதிர்ப்புக்களை அரசாங்கம் அடக்க வன்முறை பயன்படுத்துவதை எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கார்டியன் செய்தித்தாள் தகவல் ஒன்றின்படி, உக்ரேனிய தன்னலக்குழுக்கள் பெருகிய முறையில் யானுகோவிச் கொள்கையான தன் உடனடி நண்பர்கள், உறவினர்களின் குழுக்களை செழிப்பாக்கும் “உக்ரேனை ஒரு பாரீயா நாடாக்கும் (a pariah state) அச்சுறுத்தல் பற்றி கவலை கொண்டுள்ளன... எல்லாவற்றையும் காட்டிலும் இதனை தன்னலக்குழுவினரின் பெரும்பாலன சர்வதேச நிறுவனங்களாகிவிட்ட அவற்றின் வணிகங்களுக்கு அச்சுறுத்தலாக நோக்கின்றன.” தன் பங்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் செவ்வாய் நடந்த ஆண்டு உச்சிமாநாட்டைப் பயன்படுத்தி யானுகோவிச் ஆட்சியின் மிக முக்கியமான அரசியல் பங்காளியான ரஷ்ய அரசாங்கத்தின்மீது அழுத்தத்தை முடுக்கிவிட்டது. உக்ரேன் அரசியல் நெருக்கடி பற்றிய விவாதம் ஐரோப்பிய ஒன்றிய-ரஷ்ய உச்சிமாநாடு செவ்வாயன்று நடந்ததிலும் ஆதிக்கம் கொண்டிருந்தது. இருநாள் உச்சி மாநாடு முதலில் டிசம்பர் மாதம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் இது கீயேவில் எதிர்ப்புக்கள் ஆரம்பித்தபின் ஒத்திப்போடப்பட்டது. இந்த எதிர்ப்புக்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நபர்கள், ஜேர்மனிய வெளியுறவு மந்திரி, முக்கிய அமெரிக்க அரசியல்வாதிகளுடன் வெளிப்படையாக யானுகோவிச்சை வீழ்த்தும் எதிர்த்தரப்பின் அழைப்புக்களில் பங்கு கொண்டனர். எப்படியும் செவ்வாய் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற உச்சிமாநாடு ஒரு நாள் மட்டும் சில மணி நேரம் நடைபெற்ற கூட்டமாயிற்று. ஐரோப்பியக்குழுத் தலைவர் ஹெர்மன் வான் ரோம்பை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸே மானுவல் பரோசோ, ஐரோப்பிய வெளியுறவு தலைவர் காத்தரின் ஆஷ்டன் ஆகியோர் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜீ லாவ்ரோவ் இன்னும் சில உதவியாளர்களுடன் “உறுதியான விவாதங்கள்” என விவரிக்கப்பட்டதில் பேச்சுக்களை நடத்தினர். உச்சிமாநாடு முடிந்தபின் புட்டின் விட்டுக்கொடுப்புகளுக்கு சைகை காட்டி, ஐரோப்பிய சார்பு சக்திகளுடன் பேசுவதை ஒப்புக்கொண்டு ஐரோப்பிய சார்பு ஆட்சி உக்ரேனில் வருவதை ஏற்பதாக தெரிவித்தார். “எங்களைப் பொறுத்தவரை, உக்ரேனில் அனைத்து அரசியல் சக்திகளின் பிரதிநிதிகளுடன் பேசுவது செய்யக்கூடாத ஒன்றல்ல.” யானுகோவிச் சிறையில் அடைத்துள்ள அமெரிக்க ஆதரவுடைய பிரதம மந்திரி யூலியா திமோஷெங்கோவுடன் ரஷ்யா கிட்டத்தட்ட அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் புட்டின் கூறினார். ரஷ்யா உக்ரேனுக்கு கொடுக்கத் திட்டமிட்டுள்ள $15 பில்லியன் என கடனை ஐரோப்பிய ஒன்றியம் திருப்பிகொடுக்க உறுதியளிக்கும் வகையில் உக்ரைன் பொருளாதாரத்தில் சிக்கன நடவடிக்கைகள் கட்டுமான மாற்றங்களுக்கும் புட்டின் ஒப்புதல் கொடுத்தார். “முக்கியத்துவம் வாய்ந்தது எங்களுக்கு, உக்ரேன் பொருளாதாரம் நம்பகத்தன்மை பெற வேண்டும். உக்ரேன் அரசாங்கம் கட்டுமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், அதையொட்டி நாங்கள் கடன் கொடுக்கத்தயார் என்பதில் இருந்து வெளியேறும் உத்தரவாதம் பெறுவோம்.... இப்பணம் மீண்டும் வரவேண்டும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என்றார். திங்கள் மாலை திட்டமிட்டிருந்த ஒரு விருந்து இரத்து செய்யப்பட்டது. உச்சிமாட்டை உடனடியாக தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தூதர் காத்தரின் ஆஷ்டன் யானுகோவிச் மற்றும் எதிர்த்தரப்புத் தலைவர்களை சந்திக்க கீயேவிற்கு பறந்தார். ஸ்லோவாக்கிய வெளியுறவு மந்திரி மீரோஸ்லாவ் லாஜ்காக்: “நாங்கள் ஒரு உச்சிமாநாட்டில் இருந்து மற்றொன்றிற்கு அதிக முன்னேற்றம் இல்லாமல் நகர்கிறோம்... மேற்பரப்பிற்கு கீழ் பல பகுதிகளில் இன்னும் அதிக மோதல்கள் உள்ளன.” என்றார். ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வேறுபாடுகள் சமீபகாலத்தில் தீவிரமடைந்துள்ளன. மாஸ்கோ சமீபத்தில் உலக வர்த்தக அமைப்பிடம் ஐரோப்பாவிற்கு ரஷ்யா ஏறுமதி செய்யும் பல பொருட்கள் மீது அபராத வரிகள் விதிக்கப்படுவது குறித்து புகார் தெரிவித்துள்ளது. எரிசக்தி கொள்கை குறித்தும் கணிசமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. ரஷ்யாவிடம் இருந்து வரும் எரிசக்தி விநியோகத்தை ஐரோப்பா பெரிதும் நம்பியுள்ளது. ரஷ்ய எரிசக்தியில் இருந்து கூடுதல் சுதந்திரம் அடைவதற்கான முயற்சிகள் சிதைந்துவிட்டன. கடந்த கோடைகாலத்தில் ஐரோப்பிய ஒன்றியம அதன் சொந்த நாபுக்கோ குழாய்த்திட்டத்தை ரஷ்யாவின் காஸ்ப்ரோன் தெற்குப்புற இயற்கை எரிவாயு குழாய்த்திட்டத்தின் நலனுக்காக கைவிட நேர்ந்தது. இந்த திட்ட இழப்பினால் அவமானப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் இப்பொழுது அதன் காஸ்ப்ரோமிற்கு எதிரான அறக்கட்டளை மீறல் விசாரணையை நடத்துகிறது. அது சந்தை நிலைமையை ஏகபோக உரிமையாக்குகின்றது என்று குறைகூறுகிறது. வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரை, மாஸ்கோ முக்கிய ஐரோப்பிய நாடுகளுடனும், லிபிய, சிரிய, மத்திய கிழக்கு எல்லை நாடுகளின் ஆக்கிரோஷமான தலையீட்டிற்காகவும் அமெரிக்காவுடனும் மோதலில் உள்ளது. எவ்வாறாயினும், ஐரோப்பாவுடான மோதலின் மத்தியில் உள்ளது என்னவெனில் ரஷ்யா அதன் செல்வாக்கு மண்டலத்தை பல முன்னாள் சோவியத், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடையே வளர்க்க முனைவதாகும். இது யூரேசியாவில் அமெரிக்க, ஐரோப்பிய மூலோபாயங்களான தங்கள் பூகோள அரசியல் மேலாதிக்கத்தை நிறுவ முனையும் திட்டங்களுடன் மோதலுக்குள்ளாக்குகின்றது. ஒரு யூரேசிய ஒன்றியத்தை வளர்க்கும் திட்டத்துடன் இசைந்த வகையில், மாஸ்கோ சமீபத்தில் ஆர்மீனியா, சேர்பியாவுடன் சுங்கவரி ஒன்றிய உடன்பாடுகளில் கையெழுத்திட்டது. சேர்பியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட மூன்று நாட்களுக்கு முன், யானுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைவிற்கான உடன்பாட்டு அழுத்தத்தை நிராகரித்து ரஷ்யாவுடன் தன் சொந்த உடன்பாட்டை செய்துகொண்டார். உக்ரேனை முழு அங்கத்துவநாடாக ஏற்கும் விருப்பம் சிறிதும் இல்லாவிடினும், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவம் நாட்டை மேற்கத்தைய நிறுவனங்களும், வங்கிகளும் தீவிரமாக சுரண்ட திறக்கசெய்யவும் அங்குள்ள ரஷ்ய செல்வாக்கை பின்வாங்க செய்வதிலும் தீவிரமாக உள்ளது. செவ்வாய் உச்சிமாநாட்டின் இறுதியில், ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோஸை மானுவல் பரோசோ, உக்ரேன் சுதந்திரம் பற்றி ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் சமரசம் செய்துகொள்ளாது என்பதை தெளிவாக்கினார். |
|