World Socialist Web Site www.wsws.org |
Currency turmoil signals new phase of global economic crisis செலாவணி கொந்தளிப்பு உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் புதிய கட்டத்தினை அறிகுறி காட்டுகிறதுNick Beams “வளர்ந்துவரும் பொருளாதாரங்கள்" என்றழைக்கப்படுபவைகளின் நிதியியல் அமைப்புமுறைகளில் குழப்பமான நிலைமையின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், அது ஒட்டுமொத்தமாக உலகளாவிய பொருளாதாரத்தின் ஒரு திருப்புமுனையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த நெருக்கடியின் வேர், அமெரிக்க முதலீட்டு வங்கி லெஹ்மேன் பிரதர்ஸின் பொறிவால் தூண்டிவிடப்பட்ட 2008 முறிவிற்கு விடையிறுப்பாக தொடங்கப்பட்ட, "அதிகபணத்தைப் புழக்கத்தில் விடும்" கொள்கைகளில் (quantitative easing) தங்கியுள்ளது. அது அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் மத்திய வங்கிகளின் மூலமாக ட்ரில்லியன் கணக்கான டாலர்களை உலக நிதியியல் சந்தைகளுக்குள் பாய்ச்சியது. இவற்றில் பெருமளவிலான பணம் "வளர்ந்துவரும் சந்தைகளுக்குள்" பாய்ந்தன. அந்த நாடுகளில் பங்கு விலைகள் மற்றும் ஏனைய நிதிய சொத்துக்களின் மீதான மதிப்பு விகிதங்கள் உயர்ந்ததால் அதிக இலாபங்களைப் பெற முயற்சிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த குமிழி சுருங்க தொடங்கி உள்ளது, மேலும் செலாவணி பரிவர்த்தனை விகிதங்களை (currency exchange rates) தாழ்வடைய செய்ததோடு, நிலையற்ற மூலதனம் வெளியே பாய்ந்து கொண்டிருக்கிறது. தென்னாபிரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் துருக்கி உட்பட பல மத்திய வங்கிகள் கணிசமான அளவிற்கு வட்டிவிகிதங்களை உயர்த்தி உள்ளன. இருப்பினும் இதுவரை இந்த நடவடிக்கைகள் மூலதன வெளியேற்றத்தை தடுப்பதில் தோல்வி கண்டுள்ளன. கேபிட்டல் எக்கொனோமிக்ஸின் அமைப்பின் வளர்ந்துவரும் சந்தைகளுக்கான பொருளியல் நிபுணர் நீல் ஷெய்ரிங், பைனான்சியல் டைம்ஸிற்கு கூறியதைப் போல: “வட்டி விகிதங்களை உயர்த்த தொடங்கி உள்ள நாடுகளில் கூட செலாவணிகள் தொடர்ந்து பலவீனமடைந்து வருகின்றன என்ற உண்மை ஒரு புதிய மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரங்களின் நிதியியல் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய கொந்தளிப்புபோல் இன்னும் அதிக கவலை தரக்கூடிய கட்டம் பற்றிய சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது. அங்கே அழுத்தத்திற்குள்ளாகி இருக்கும் கொள்கை வகுப்பாளர்கள் தங்களாலேயே தங்களின் செலாவணியைக் காப்பாற்ற முடியாத நிலையைக் காண்கிறார்கள்.” பெடரல் அதன் மாதாந்திர 85 பில்லியன் டாலர் மதிப்பிலான அடமான கடன் பத்திரங்கள் மற்றும் அமெரிக்க கருவூல பத்திரங்கள் வாங்குவதை விரைவில் "குறைக்க" இருப்பதாக அதன் தலைவர் பென் பெர்னான்கி குறிப்பிட்ட பின்னர், கடந்த மே மற்றும் ஜூனிலேயே ஒரு நெருக்கடி ஏற்படுவதற்குரிய முதல் அறிகுறிகள் தோன்றின. அவரது கருத்துக்கள் "வளர்ந்துவரும் சந்தைகளில்" ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியதோடு, மூலதனமும் வெளியேறியது. செப்டம்பரில் பெடரல் இந்த "குறைப்பு" கொள்கையிலிருந்து பின்வாங்கியதும் ஸ்திரப்பாடு திரும்பியது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு மாதமும் வாங்குவதில் இருந்து 10 பில்லியன் டாலரை குறைக்க முடிவெடுக்கப்பட்ட போது, மூலதன வெளியேற்றம் மீண்டும் தொடங்கியது. ஒரு மோசமான நிலைமையில் சிரித்த முகத்தைக் காட்ட முயலும் முயற்சியாக, சில விமர்சகர்கள் நிதியியல் கொந்தளிப்பு அந்தந்த நாட்டுக்குரிய பிரத்தியேக பிரச்சினைகளைப் பிரதிபலிப்பதாகவும், அதில் உலகளாவிய தாக்கங்கள் எதுவும் இல்லையென்றும் காட்ட முயன்றனர். அமெரிக்க கருவூல செயலர் ஜேக் லெவ், பல நாடுகளில் கடைபிடிக்கப்படும் தவறான கொள்கைகளே பிரதான பிரச்சினையாகும் என்றார். “சந்தையிடத்தில் பெரும் வித்தியாசத்தை நாம் காண முயல்கின்றோம். கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ள நாடுகளும், திறமையாக சமாளித்து கொண்ட நாடுகளும் வெவ்வெறு அனுபவத்தைப் பெற்றுள்ளதை நாம் காண்கிறோம் என்று நான் கூறுவேன்,” என்றார். அவருடைய கருத்துக்கள், 1997-98இன் ஆசிய நிதியியல் நெருக்கடியின் போது முன்னாள் பெடரல் தலைவர் அலன் கிரீன்ஸ்பான் கூறியதை நினைவுபடுத்துகிறது. அப்போது அவர், இந்த நெருக்கடி முதலாளித்துவ "கட்டுப்பாடற்ற சந்தையின்" நடவடிக்கைகளில் இருந்து வரவில்லை, மாறாக ஆசியாவில் "பரஸ்பர உறவுள்ள முதலாளித்துவம்" (crony capitalism) என்று அவர் எதை குறிப்பிட்டாரோ அதன் விளைவாக ஏற்பட்டதாக அவர் வலியுறுத்தினார். ஆனால் ஆசிய நிதியியல் நெருக்கடி 1998இல் ரஷ்யாவை திவால்நிலைமைக்கு இட்டு சென்றது. பின்னர் அமெரிக்க முதலீட்டு நிதியான நீண்டகால மூலதன மேலாண்மை நிதி (LTCM – Long Term Capital Management) என்பதன் பொறிவிற்கு இட்டு சென்றது, பின்னர் அது மத்திய அரசு நிதியைக் கொண்டு பிணையெடுக்கப்பட்டது. அப்போது ஒட்டுமொத்த அமெரிக்க நிதியியல் அமைப்புமுறையும் கடன்கொடுக்கமுடியாத நிலைக்கு சென்றபோது, அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து என்ன வரப்போகிறதென்பதற்கு LTCMஇன் சிதைவே கூட ஒரு முன்கூட்டிய எச்சரிக்கையாக இருந்தது. தற்போதைய கொந்தளிப்பு "அந்தந்த நாட்டுக்குரிய பிரத்தியேகமான" பிரச்சினைகளின் விளைவாகும் என்ற வாதம், 2008 நெருக்கடிக்கு பிந்தைய ஐந்து ஆண்டுகளில் "வளர்ந்துவரும் சந்தைகளுக்குள்" பாரியளவில் மூலதனம் பாய்ந்தமை ஒரு மிகப் பரந்த நிகழ்வின் பாகமாக இருந்தது என்ற உண்மையைக் கைவிடுகிறது. பூஜ்ஜிய அளவிலான வட்டிவிகிதங்களோடு சேர்ந்து, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1 ட்ரில்லியன் டாலர் என்றளவிற்கு, பெடரலால் தொடர்ந்து பணம் செலுத்தப்படுவதானது, உலகளாவிய நிதியியல் அமைப்புமுறை ஒரு தலைகீழான பிரமிட்டைப் போல வந்துள்ள ஒரு நிலைமையை உண்டாக்கி உள்ளது. அதில், நிதியியல் சொத்துக்கள் இறுதியாக எதன்மீது தங்கி உள்ளனவோ அந்த உலக பொருளாதார உற்பத்தியின் அடித்தளத்தோடு ஒப்பிடுகையில் அதை விட இவை [நிதியியல் சொத்துக்கள்] வேகமாக விரிவாகி வருகின்றன. பகுப்பாய்வின் இறுதியாக, இது எதைக் குறிக்கிறதென்றால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு அடமான கடன்கள் அடிப்படையில் நூறு பில்லியன் கணக்கான டாலர் கடன் பத்திரங்கள் மதிப்பிழந்து போனதைப் போல, இந்த நிதியியல் சொத்துக்களின் பெரும்பகுதி "பெறுமதியற்று" போயுள்ளன, அவற்றிற்கு நிஜமான மதிப்பு இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 2008இல் ஏற்பட்டதை விட மிக பேரழிவுகரமாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறைக் கொண்ட, ஒரு புதிய நிதியியல் நெருக்கடிக்கான ஒரு முன்கூட்டிய அறிகுறியாக தற்போதைய கொந்தளிப்பு உள்ளது. இதை கடந்த காலத்தில் நிலையற்ற நிதியியல் மூலதனத்தின் இயக்கம் எந்தளவிற்கு இருந்ததென்ற புள்ளிவிபரங்களில் இருந்து காண முடியும். சர்வதேச நிதியியல் பயிலகத்தின் தகவலின்படி, வளர்ந்துவரும் சந்தைகள் 2005இல் இருந்து ஏறத்தாழ 7 ட்ரில்லியன் டாலர் ஈர்த்துள்ளன, அது உற்பத்தித்துறை மற்றும் சேவைத்துறை நிறுவனங்களில், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்களில், பங்குகள் மற்றும் பத்திரங்களில் ஒரு கலவையாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் எஞ்சியுள்ள "வளர்ந்துவரும் சந்தைகளின்" பத்திரங்கள் தற்போது 10 ட்ரில்லியன் டாலராக உள்ளன, அதுவே 1993இல் 422 பில்லியன் டாலராக இருந்தது. “குறைப்பு" கொள்கையால் தூண்டிவிடப்படும் மூலதன திருப்பத்திற்கு மேலதிகமாக, இந்த நெருக்கடியில் உள்ள மற்றொரு காரணி சீனாவில் ஏற்பட்டுவரும் பொருளாதார மந்தநிலையாகும். இந்த வாரம் பிரசுரமான ஓர் ஆய்வின்படி, மார்ச் 2009இல் இருந்து சீன உற்பத்தியாளர்கள் மிக வேகமான விகிதத்தில் வேலைகளை இல்லாதொழித்து வருகின்றனர், இது உலகளாவிய நிதியியல் நெருக்கடியால் உண்டான கீழ்நோக்கிய திருப்பத்தின் ஆழ்ந்த தாக்கமாகும். சீன வளர்ச்சி இந்த ஆண்டு முந்தைய 20க்கும் அதிகமான ஆண்டுகளை விட குறைந்தபட்ச அளவிற்கு இருக்குமென அனுமானிக்கப்படுகிறது. மேலும் அந்நாட்டின் நிதியியல் அமைப்புமுறையின் ஸ்திரப்பாடு மீதும் கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த வாரம், 500 மில்லியன் டாலர் மதிப்பிலான சீன கிரெடிட் ட்ரஸ்ட்-China Credit Trust- , திவாலாவதைத் தடுக்க பிணையெடுக்க வேண்டி இருந்தது. அதன் நிதியியல் பத்திரங்களில் தங்கியுள்ள கடன்கள் பெற்றிருந்த ஒரு நிலக்கரி சுரங்க நிறுவனம் நஷ்டமடைந்ததைத் தொடர்ந்து, இது ஏற்பட்டது. சீன கிரேடிட் டிரஸ்ட் சீனாவில் உள்ள நிழலுலக வங்கியியல் அமைப்புமுறையின் பாகமாக உள்ளது, சீன பொருளாதாரத்தில் வழங்கப்படும் அனைத்து புதிய கடன்களில் மூன்றில் ஒரு பங்கை அது கையாள்வதாக நம்பப்படுகிறது. “வளர்ந்துவரும் சந்தைகளின்" நெருக்கடி ஏற்கனவே G20 குழுவில் உள்ள பிரதான நாடுகளுக்கு இடையிலான கணிசமான விரிசல்களை அம்பலப்படுத்தி உள்ளது. அவை 2009 மற்றும் 2010இல் சர்வதேச கொள்கையை ஒழுங்கமைக்க பல்வேறு நெருக்கடிக்கான மாநாடுகளை நடத்தி உள்ளன. பெடரலின் புதன்கிழமை முடிவை ஒட்டி பேசுகையில், இந்திய மத்திய வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், வளர்ந்துவரும் சந்தைகள் உலகை உலகளாவிய நிதியியல் நெருக்கடியிலிருந்து மீட்க உதவியுள்ளன, அவற்றை இப்போது உதாசீனப்படுத்தக் கூடாது என்று கூறினார். சொத்துக்கள் வாங்குவதில் செய்யப்படும் மேலதிக குறைப்புகளால் உலகின் ஏனைய பகுதிகளில் உண்டாகும் பாதிப்பு குறித்து அங்கே எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவர் தெரிவித்தார், "நாணய கூட்டுறவு உடைந்து போயுள்ளது.” அதை மீட்டெடுக்க தொழில்துறைமயமான நாடுகள் ஒரு பங்கு வகிக்க வேண்டும், "இந்த புள்ளியை அவர்கள் கைகழுவிவிட்டு, என்ன செய்ய வேண்டுமோ நாங்கள் செய்வோம், நீங்கள் சமாளித்துக்கொள்ளுங்கள் என்று கூறக்கூடாது,” என்றார். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைத் தனியாக விட்டுவிட தொழில்துறைமயமான நாடுகள் வலியுறுத்தினால், நாங்கள் வரம்பிற்கு கீழே செல்ல நிர்பந்திக்கப்படும் "சமாளித்துக்கொள்ளும் வகைகளை அவை விரும்பாது இருக்கலாம்,” என்று அவர் எச்சரித்தார். செப்டம்பர் 2008க்குப் பின்னர் இருந்து ஐந்து ஆண்டுகளில், சீனா உட்பட "வளர்ந்துவரும் சந்தைகள்" உலகளாவிய உற்பத்தியில் ஏறத்தாழ மூன்று கால்பகுதி உயர்விற்கு பொறுப்பாக உள்ளன என்ற உண்மையால் அந்த கருத்தின் முக்கியத்துவம் அடிக்கோடிடப்படுகிறது. முன்னேறிய முதலாளித்துவ பொருளாதாரங்களில் பெருமந்தநிலையின் போது அப்பிராந்தியத்தில் எந்தளவிற்கு தாக்கம் இருந்ததோ அந்தளவிற்கு குறிப்பிடத்தக்க விதத்தில் 1997-98இல் ஆசிய நிதியியல் நெருக்கடியின் விளைவு கீழ்நோக்கி இருந்தது. இவ்வாறு மீண்டும் ஏற்படக்கூடிய எந்தவொன்றும் உலகெங்கிலும் மிக வேகமாக ஆழ்ந்த மந்தநிலையை கொண்டு வரும். இந்த நெருக்கடியின் வெடிப்பு, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குப் பெரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது. அனைத்து "வளர்ந்துவரும் சந்தைகளிலும்", வட்டிவிகித உயர்வுகள் மற்றும் ஏனைய அவசரகால முறைமைகள் எனப்படுபவை முன்னெடுக்கப்பட்ட ஒரு தாக்குதலை, அதாவது வேலைகள், சம்பளங்கள் மற்றும் சமூக நிலைமைகளில் வெட்டுக்கள் என்பதைக் குறிக்கும். “பொருளாதார மீட்சி" நடந்து கொண்டிருக்கிறது என்ற ஆளும் மேற்தட்டின் மற்றும் அவர்களின் பண்டிதர்களால் வைக்கப்படும் வாதங்களின் வெற்றுத்தனத்தையே தற்போதைய நெருக்கடி மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறை தோல்வி அடைந்துள்ளது. ஒரு மேல்நோக்கிய திருப்பத்தைக் கொண்டு வருவதற்காக என்று கூறப்படும் அனைத்து கொள்கைகளும், மற்றொரு நிதியியல் பொறிவிற்கான நிலைமைகளை உருவாக்குகின்ற அதேவேளையில் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் செல்வச்செழிப்பை மட்டுமே விஸ்தரித்துள்ளன. இந்த அனுபவங்களில் இருந்து சர்வதேச தொழிலாள வர்க்கம் படிப்பினைகளை பெற்று, ஒரு சோசலிச பொருளாதாரத்தின் அபிவிருத்தியை நோக்கிய முதல்படியாக முதலாளித்துவ உயரடுக்குகளை தூக்கி வீசுவதற்கு சர்வதேச அளவிலான ஓர் அரசியல் போராட்டம் என்ற அதன் சொந்த வேலைத்திட்டத்தோடு அது விடையிறுப்புக் காட்ட வேண்டும். |
|