World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா After pro-EU putsch in Ukraine, Russia puts military on alert உக்ரேனில் ஐரோப்பிய ஒன்றிய சார்பு ஆட்சிச்சதியை அடுத்து ரஷ்யா இராணுவத்தை எச்சரிக்கை நிலையில் வைக்கிறதுBy Alex
Lantier மேற்கு ஆதரவுடைய உக்ரேனிய அரசாங்கம் பாசிசவாதிகளின் தலைமையிலான ஆட்சிசதி மூலம் கீயேவில் அதிகாரத்தை கைப்பற்றியதால் அதிகரிக்கும் அழுத்தங்களுக்கு இடையே நேற்று கிரெம்ளின் பெரிய அளவு இராணுவப் பயிற்சிகளை அதன் உக்ரேனுடனான எல்லையில் நடத்தியது. பயிற்சிகளை அறிவிக்கையில், ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு பின்வருமாறு கூறினார்: “ரஷ்யக் கூட்டமைப்பின் ஜனாதிபதியின் உத்தரவுப்படி மேற்குப்புறம் உள்ள இராணுவ மாவட்டத்தில் படைகள் இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.” இந்த இராணுவ எச்சரிக்கைநிலை ரஷ்யாவின் மேற்கு, மத்திய இராணுவ மாவட்டங்களின் இராணுவப்படைகளுக்கும் மற்றும் அதன் விமானப் படை தலைமையகத்திற்கும் “ஆச்சரியமான, விரிவான, இடைத்தொடர்பான பரிசோதனை” என்று கூறப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 150,000 படையினர், 90 போர் விமானங்கள், 120 தாக்கும் ஹெலிகாப்டர்கள், 880 டாங்குகள் மற்றும் 90 கப்பல்கள் பங்கு பெற்றன எனக் கூறப்படுகிறது. ஷோய்கு இந்த அணிதிரட்டு கீயேவில் நடக்கும் நிகழ்வுகளுடன் “பொதுவாகத் தொடர்பற்றது” என்று கூறினாலும், அவர் பயிற்சிகள் “உக்ரேன் உட்பட பல நாடுகளின் எல்லையில் நடந்துள்ளது” என்றார். இந்த எச்சரிக்கை பரந்தளவில் உக்ரேனிய நெருக்கடிக்கான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் முதல் பகிரங்க பிரதிபலிப்பு என அறிவிக்கப்பட்டது. இதுவரை சோச்சி ஒலிம்பிக் போட்டிகளில் இருக்கும் அவர் இது பற்றிக் கருத்து ஏதும் கூறவில்லை. கிரிமிய தீபகற்பத்தில் நிலைமையை மாஸ்கோ “கவனத்துடன் அவதானித்து வருகிறது” என்று ஷோய்கு மேலும் தெரிவித்தார். அது உக்ரேனில் ரஷ்ய மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிராந்தியம் ஆகும். இங்கு ஒரு முக்கிய ரஷ்ய கடற்படை தளம் செவஸ்ரோபோலில் உள்ளது. நேற்று கிரிமியாவின் தலைநகரான சிம்பெரோபோலில் புதிய உக்ரேனிய ஆட்சிக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆயிரக்கணக்கானவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் கீயேவ் ஆட்சிக்கு எதிரான ரஷ்ய எதிர்ப்பாளர்களுக்கும் (இவர்களில் பெரும்பாலோனோர் கொசாக்குகள் -Cossacks- ஆவர்) மேற்கு ஆதரவுடைய ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் இனவழி டாட்டார்களுக்கும் (Tatars) இடையே நடந்த மோதலில் காயமுற்றனர். ரஷ்ய சார்பான ஆர்ப்பாட்டக்காரர்கள் உக்ரேனில் இருந்து பிரிவினை குறித்து ஒரு சர்வஜனவாக்கெடுப்பை கோரினர். இக்கோரிக்கை டாட்டார் எதிர்ப்பாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இந்த மோதல்கள் வாஷிங்டனாலும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் கீயேவில் உள்ள தீவிர வலதுசாரி, பாசிச எதிர்த்தரப்புக்களுக்கு எந்தளவு பொறுப்பற்ற ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இது உக்ரேனை உள்நாட்டுப் போர் விளிம்பில் நிறுத்தியுள்ளதுடன், ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே ஒரு நேரடி மோதலை அச்சுறுத்துகிறது. சனிக்கிழமை ஆட்சிசதி ரஷ்ய ஆதரவு கொண்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை அகற்றியதில் இருந்து அழுத்தங்கள் வெடித்துள்ளன. கீயேவ் அரசு ரஷ்ய மொழி இனி உக்ரேனில் உத்தியோகபூர்வ மொழியாக இருக்காது என அறிவித்தது. இதேவேளை கிரிமியா மற்றும் பல தெற்கு, கிழக்கு உக்ரேன் மாநிலங்கள் புதிய அரசின் அதிகாரத்தை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று கூறின. குறிப்பாக கிரிமியா பற்றி மோதல்கள் பெருகியுள்ளன. செவ்வாயன்று மேற்கு ஆதரவு பெற்ற இடைக்கால கீயேவ் ஜனாதிபதி ஒலெக்சான்டர் துர்ஷினோவ் அவசரகால கூட்டம் ஒன்றைக் கூட்டி, “பிரிவினைக்கான எவ்வித அடையாளங்களை அனுமதிக்கக்கூடாது, உக்ரேனின் பிராந்திய ஒற்றுமையை அச்சுறுத்துவதை அனுமதிக்கக் கூடாது [இதன் பொருள் கிரிமியாவில் நடக்கும் நிகழ்வுகள்] மற்றும் இக்குற்றம் செய்வோரை தண்டித்தல்” பற்றிய விவாதத்திற்கு அழைத்தார். கீயேவில் இப்பொழுது புதிய ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் தீவிர வலதுசாரிகுழுக்கள் “நட்புப் பிரிவுகள்” என அழைக்கப்படுவதை அனுப்புவதாக அச்சுறுத்தியுள்ளன. உண்மையில் அவை செவெஸ்டோபோலை எடுத்துக்கொள்ள முயலும் ஆயுதமேந்திய குண்டர் குழுக்கள்தான். அங்கு இருக்கும் அதிகாரிகள் சோதனைச்சாவடிகள் மற்றும் தற்பாதுகாப்பு ஆயுதக்குழுக்களை நிறுவி நகரத்தின்மீதான தாக்குதலுக்கு எதிராக போராடவிரும்புகின்றனர். ரஷ்ய ஆதரவுடைய சக்திகளின் பிற்போக்குத் தன்மைக்கு ஒரு குறிப்பாக செவஸ்டோபோல் நகரசபைத்தலைவர் அலெக்சீ சாலி கீயேவ் அதிகாரிகளால் கலைக்கப்பட்ட வெறுப்புகுள்ளான பெர்குட் கலகப் பிரிவு பொலிஸ் உறுப்பினர்களை பாராட்டி, இவர்களை இப்பொழுது நகரத்தை பாதுகாக்க செவெஸ்டோபோலுக்கு வருமாறு அழைத்தார். பெயர்கூற விரும்பாத ரஷ்ய பாதுபாப்பு அதிகாரிகள் நேற்று பைனான்சியல் டைம்ஸிடம் அவர்கள் உக்ரேனை உடைக்க விரும்பவில்லை என்றும், உக்ரேனின் பிற பகுதிகளில் இருந்து கிரிமியா பிரிதல் என்ற முடிவு எடுக்கப்பட்டால் தாங்கள் கிரிமிய தீபகற்பத்திற்கு இராணுவ ஆதரவு கொடுக்கும் “கட்டாயம்” இருக்கும் என்று கூறினர். சமீபகாலத்தில் ரஷ்ய இராணுவ அதிகாரிகளுடன் அழுத்தம் நிறைந்த தொலைபேசி அழைப்புக்களை பரிமாறிக்கொண்டதாக கூறப்படும் மேற்கின் அதிகாரிகள், தங்கள் எதிர்ப்பை அடையாளம் காட்டினர். உக்ரேனை “நெருக்கமான பங்காளி” என்று கூறிய நேட்டோவின் பொதுச்செயலாளர் ஆண்டெர்ஸ் போக் ரஸ்முசென் “அனைத்து நாடுகளும் உக்ரேனின் இறைமை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்க வேண்டும், இதைத் தொடர்புடைய அனைவருக்கும் தெளிவாக்குகிறோம்” என்றார். வியாழன் இரவு அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெர்ரி ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலை வெளியிட்டார்: NBC செய்தியில் ஒரு பேட்டியில் மாஸ்கோ இராணுவ சக்தியை பயன்படுத்துவதற்கு எதிராக எச்சரித்தார். மேலும் உக்ரேனில் விக்டர் யானுகோவிச் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பின் நேர்ந்த கதி போல் புட்டின் அரசாங்கத்திற்கும் எதிராக ஏகாதிபத்தியம் தயாரிக்கிறது என்றும் கூறினார். “உக்ரேனில் ஆட்சிசதி நடந்துள்ள விரைவான தன்மை ரஷ்யாவிற்கு கட்டாயமாக ஒரு தகவலாக இருக்க வேண்டும்” என்றார் கெர்ரி. “இனி இங்கு செய்யவுள்ள விடங்களில் ரஷ்யாவின் தீர்மானங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்....” என்றார். இந்நிகழ்வுகள் ஏகாதிபத்திய கொள்கையில் முழு குற்றத்தன்மை மற்றும் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாது, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பேரழிவு தரும் பூகோள அரசியல் தாக்கங்களையும் காட்டுகிறது. சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மறுபுனருத்தானம் செய்யப்பட்டமை மோசமான அளவிலான சமூக சமத்துவமற்றதன்மையை தோற்றுவித்துள்ளது. உக்ரேனின் மேல்மட்ட 50 தன்னலக்குழுக்கள் நிகர மதிப்பாக $112.7 பில்லியனைக் கொண்டுள்ளன, அதாவது உக்ரேனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரு பகுதியை கொண்டுள்ளன. அத்துடன் பிற முன்னாள் சோவியத் குடியரசுகளை பிராந்திய, இனவழி மோதல்களால் உடைவுக்குள்ளாக்கியுள்ளது. அங்கு இருக்கும் ஆட்சிகளின் சமூக அடித்தளம் மிகவும் குறுகியதுடன், இந்நாடுகள் அனைத்தும் ஏகாதிபத்திய சக்திகளுடன் இணைந்து இயங்கும் உறுதியான பாசிசக் குழுக்களுடன் சேர்ந்து அழிவிற்குள்ளாக்கப்படும் சாத்தியப்பாட்டிற்கு உள்ளாகின்றன. ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தி துண்டுதுண்டாக்க நினைக்கும் இரக்கமற்ற போக்கைத் தொடரும் நிலைமையின்கீழ், இந்த சக்திகளால் தூண்டிவிடப்படும் இனவழி மற்றும் பிராந்திய அழுத்தங்கள் போர் அச்சுறுத்தலை நேரடியாக எழுப்பியுள்ளன. தங்களை மாஸ்கோவுடன் பிணைத்துக் கொண்டு நேட்டோவுடன் உலகப் போரை தூண்டக்கூடிய வகையில் ஒரு மோதல் மூலம் தங்கள் நிலையை பாதுகாத்துக்கொள்ள முனையும் ரஷ்ய ஆதரவான பிரிவுகளின் நிலைமை திவாலானதும் பிற்போக்குத்தனமானதாகும். இந்த போராட்டத்தில் உள்ள ஒரேயொரு முற்போக்கானபாதை ஏகாதிபத்தியம், அதன் பாசிச உதவி அமைப்புக்கள் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மறுபுனருத்தானத்திற்கு பின்பு தோற்றுவிக்க்பட்ட ஊழல் ஆட்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதாகும். நேற்று மந்திரிசபையை அறிவித்த இப்பொழுது கீயேவில் பாசிச ஆதரவுடைய ஆட்சிக்கு முக்கிய கவலை மக்களுடைய பிரதிபலிப்பு என்னவென்பதே. ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து வரும் ஆதரவு என்பது உக்ரேனின் கடன்களை முக்கிய வங்கிகளுக்கு திருப்பி அளித்தல், உக்ரேனிய தன்னலக்குழுக்களின் செல்வத்தை பாதுகாக்க மக்கள் மீது வெறுக்கத்தக்க சிக்கன நடவடிக்கைகளை திணித்தல், அரசாங்க மின்சார மானிய உதவிகளில் ஆழ்ந்த வெட்டுக்களை ஏற்படுத்துதல் என்பவையே என்பதை நன்கு அறியும். எனவே, ஒரு வழக்கத்திற்கு மாறான நிகழ்ச்சியில், இது அமைச்சர்களை வரிசையில் நிறுத்திகாட்டியதற்கு அதற்குள்ள ஒரேயொரு ஆதரவுத்தளம் கீயேவின் சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்த சில ஆயிரம் வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்களே. பல மந்திரிகளை சதுக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு ஒப்புதல் அளிக்க உரத்தகுரலெழுப்புமாறு கேட்டுக் கொண்டது. அமெரிக்க அதிகாரிகள் ஆட்சிசதிக்கு முன் தாங்கள் விரும்பிய தலைவர் என அடையாளம்காணப்பட்டவரும், தன்னலக்குழுத் தலைவர் யூலியா திமோஷெங்கோவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட ஆர்செனி யாட்சென்யுக் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அறிவித்தார்: “நாம் மிகவும் மதிப்பிழந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முந்தைய அரசாங்கமும், முந்தைய ஜனாதிபதியும் மிகஊழல் மிகுந்தவர்களாக இருந்ததால் நாடு ஒரு பரிதாபகரமான நிதிநிலையில் உள்ளது. ஒரு பேரழிவின் விளிம்பில் நாம் நிற்கிறோம், அது அரசியல் தற்கொலை செய்து கொள்பவர்களின் அரசாங்கமாகும். எனவே நரகம் வரவேற்கிறது.” இத்தகைய கருத்துக்கள் கீயேவில் நடைபெற்ற ஆட்சிசதி மேற்கு செய்தி ஊடகங்கள் இழிவுகரமாக கூறுவது போல் ஜனநாயகத்துடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மேற்கு ஏகாதிபத்தியத்தின் நிதிய, மூலோபாய நலன்களைக் பாதுகாக்க செயல்படுத்த ஒரு சர்வாதிகாரத்தை அப்பட்டமாக பயன்படுத்தும் முயற்சியாகும். அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற மந்திரிகளில், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் குழுச் செயலர் ஆண்ட்ரி பருபிய் அடங்குவார். கீயேவில் சுதந்திர சதுக்கத்தில் எதிர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு ஒருங்கிணப்பாளரான அவர் பாசிச, வன்முறைமிக்க யூத எதிர்ப்பு ஸ்வோபோடா கட்சியின் தலைவர் ஒலே தியானிபோக்குடன் அரசியல் தொடர்புடையவர் ஆவார். சோவியத் ஒன்றியத்தை கலைத்தபின் இவருடன் இணைந்தே தீவிர வலது சமூக தேசியக் கட்சியை 1990களின் ஆரம்பத்தில் ஒலே நிறுவினார். |
|