World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் France’s Socialist Party pushes free-market deregulation with Macron Law பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி மாக்ரோன் சட்டத்தைக் கொண்டு சுதந்திர-சந்தை கட்டுப்பாடுகளைத் தளர்த்த அழுத்தமளிக்கிறது
By Kumaran Ira பிரெஞ்சு பொருளாதார மந்திரியும் முன்னாள் ரோத்ஸ்சைல்ட் வங்கியாளருமான சோசலிஸ்ட் கட்சியின் இமானுவெல் மாக்ரோன், வணிக-சார்பு கட்டுப்பாடுகளை தளர்த்தும், மாக்ரோன் சட்டம் என்றறியப்படும், ஒரு சட்டமசோதாவை டிசம்பர் 10 அன்று மந்திரிசபையில் தாக்கல் செய்தார். “வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கையின்" பெயரால் கொண்டுவரப்படும் அச்சட்டமசோதா, நிதியியல் சந்தைகளின் நலன்களுக்காக, தொழிலாள வர்க்கத்தை மற்றும் குட்டி முதலாளித்துவத்தின் பிரிவுகளை வறியவர்காளாக்கும் நோக்கம் கொண்டுள்ளது. அச்சட்டமசோதாவின் தொகுப்புரை குறிப்பிடுகிறது: “பிரான்ஸை மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வர, பிரெஞ்சு பொருளாதாரத்தை நவீனப்படுத்துவது அவசியம். சமூகத்திற்கு ஆற்றலும் நம்பிக்கையும் அளிப்பதும், அதற்கு எளிமைப்படுத்தி தருவதும், அதற்கு திறந்துவிடுவதுமே, வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கைக்கான இந்த சட்டமசோதாவின் நோக்கம். ... அது மூன்று அடித்தளத்தைச் சுற்றி கட்டப்படுகிறது: விடுவித்தல், முதலீடு செய்வித்தல் மற்றும் வேலை செய்வித்தல்." அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியார்மயமாக்குவது; வணிகம் தொடங்குவதில் உள்ள தடைகளை நீக்குவது; வேலைநீக்கங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் கொண்டு வரும் சச்சரவுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தொழிலாளர் நீதிமன்றங்களை சீர்திருத்துவது, அத்தகைய சச்சரவுகளுக்கு வேகமாக தீர்ப்பளிப்பது; பெருநிறுவனங்களின் தொழிலாளர் விதிமுறை மீறல்களை வெறும் அபராதங்களோடு தண்டிக்குமாறு செய்து, அவற்றை குற்றமற்றதாக ஆக்குவது; நொத்தார்கள் (நோட்டரி) மற்றும் வழக்கறிஞர்கள் போன்ற தொழில்சார்ந்தோரது வேலை நிலைமைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது; மற்றும் ஞாயிற்றுக்கிழமை கடை திறப்பது மீதிருக்கும் தடைகளைத் தளர்த்துவது போன்ற நடவடிக்கைகள் அச்சட்டமசோதாவில் உள்ளடங்குகின்றன. வணிகங்களால் வரவேற்கப்பட்டிருக்கும் இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள், பெரிதும் செல்வாக்கிழந்தவைகளாக உள்ளன. அந்த சட்டமசோதா கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக, நொத்தார்களும் மருந்துக்கடைக்காரர்களும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கினர். அச்சட்டமசோதா அவர்கள் வழங்கும் சேவைகளில் 10இல் இருந்து 20 சதவீதம் வரை கட்டணங்களை வெட்டுமென அஞ்சுகிறார்கள். அச்சட்டமசோதாவின்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுக்கடைகளைத் திறந்து வைப்பதை ஓராண்டுக்கு ஐந்தில் இருந்து 12 நாட்களாக உள்ளூர் அமைப்புகள் உயர்த்திக் கொள்ளலாம். ஆனால் பாரீஸ் போன்ற "சர்வதேச சுற்றுலா மையங்களில்" உள்ள கடைகளுக்கு அந்த 12 ஞாயிற்றுக்கிழமைகள் என்ற தடை பொருந்தாது, அவை இரவு முழுவதும் கூட திறந்திருக்க அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எந்த கூடுதல் சம்பளமும் கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிலாளர்களை வேலை வாங்குவதற்கு எதிராகவும், அத்துடன் ஒட்டுமொத்தமாக நல்லதொரு சம்பளத்தைக் கோரியும் பாரீசில் நேற்று வர்த்தகத்துறை தொழிலாளர்கள் போராடினர். அரசாங்கம் நீஸ் மற்றும் லியோனில் உள்ள விமான நிலையங்களின் மீதிருக்கும் அதன் பங்கில் (தற்போது இதில் 60 சதவீதம் அரசுக்கு சொந்தமாக உள்ளது) பெரும் பகுதியை விற்பதன் மூலமாக, பிரதான அரசு சொத்துக்களை தனியார்மயப்படுத்த திட்டமிடுகிறது. அது ஏற்கனவே Toulouse-Blagnac விமானநிலையத்தின் மீதிருந்த அதன் பங்கில் பகுதியை விற்றுள்ளது. மொத்தத்தில் பல்வேறு துறைகளின் மீதிருக்கும் 100 பில்லியன் யூரோ மதிப்பிலான அரசு சொத்துக்களில் 5இல் இருந்து 10 பில்லியன் யூரோ சொத்துக்களை அடுத்த 18 மாதங்களில் விற்கவும், அதில் 4 பில்லியன் யூரோவை கடன் குறைப்பு நடைமுறைகளுக்கு ஒதுக்கவும் அரசாங்கம் திட்டமிடுகிறது. இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள், அடுத்த மூன்று ஆண்டுகளில் வணிகங்களுக்கு 40 பில்லியன் யூரோ கையளிக்க இருப்பதற்கு கூடுதலாக வருகின்றன, மேலும் தொழிலாளர் செலவுகளைக் குறைக்க தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியும் பிரான்சும் கடந்த மாதம் "ரோட் மேப்" என்று கூறப்பட்ட ஒரு கூட்டு பொருளாதார சீர்திருத்த திட்டத்தை வெளியிட்டதற்கு சற்று பின்னர் இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை, தொழிலாளர்களது வளைந்துகொடுக்கும் தன்மையை அதிகரிக்கவும் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பொதுச் செலவினங்களை 57 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்திற்கு கீழே குறைப்பதற்கு ஆழ்ந்த சமூக வெட்டுக்களை முன்னெடுக்குமாறும் பிரான்சுக்கு அழைப்புவிடுத்துள்ளது. அச்சட்டமசோதாவில் பொதிந்துள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் திட்டங்கள், ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வணிகம்-சார்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை துரிதப்படுத்தமாறு வந்திருந்த நீண்டகால கோரிக்கைகளுக்கு பொருந்திய விதத்தில் உள்ளன. பிரான்சும் இத்தாலியும் அவற்றின் வரவு-செலவு திட்டத்தை சமநிலைப்படுத்த வணிக-சார்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த தீர்மானகரமாக இருப்பதை நிரூபிக்க ஐரோப்பிய ஒன்றியம் மார்ச் மாதத்தை இறுதிக்கெடுவாக அளித்த பின்னர் இவை கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த வாரம், Welt am Sonntag பத்திரிகையில் பிரசுரமான ஒரு நேர்காணலில் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தெரிவிக்கையில், “முன்வைக்கப்படுவது போதுமானதாக இல்லை என்பதை ஐரோப்பிய கமிஷன் தெளிவுபடுத்தி உள்ளது," என்று கூறியதுடன் தொடர்ந்து கூறுகையில், “நானும் அதே கண்ணோட்டத்தைத் தான் பெறுகிறேன்," என்றார். மாக்ரோன் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியமும், பெரு வணிகங்களும் புகழ்ந்துரைத்தன. அந்த சட்டமசோதா மந்திரிசபையிடம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, யூரோ மண்டல நிதி மந்திரிகள் ஒரு கூட்டு அறிக்கையில் டிசம்பர் 8 அன்று அதை வரவேற்றிருந்தனர்: “அதன் பொருளாதாரத்தினது கட்டமைப்பு பலவீனங்களைச் சரிசெய்யவும், பெரியளவில் எதிர்பார்ப்புக்குரிய அந்த சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தவும் பிரான்ஸின் பொறுப்புறுதியை நாங்கள் வரவேற்கிறோம்." பிரெஞ்சு தொழில்வழங்குனர்களின் கூட்டமைப்பு மெடெஃப் அதை "சரியான திசையில் நிஜமான படி" என்று பாராட்டி, அச்சட்டமசோதாவை வரவேற்றது. "இதுவொரு புரட்சியாக இருக்காது ஆனால் இது சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு படியாகும்," இது இலண்டனின் பார்க்லே பிஎல்சி பொருளாதார வல்லுனர் பிரான்சுவா கபோ கூறியது. “அது விளக்கமாக உள்ளது, அது அதன் தொனியில் கணிசமான மாற்றத்தைக் கொண்டிருப்பதுடன், அனைத்திற்கும் மேலாக, அது ஏற்கனவே மேசையின் மீது வைக்கப்பட்டுள்ளது," என்றார். டிசம்பர் 10இல், The Economist எழுதியது, “அரசாங்கம் அதன் சந்தைக்கு நேசமான பேச்சுக்களை எந்தளவுக்கு திடமான நடவடிக்கைகளுடன் சரிநிகராக செல்ல தயாராக உள்ளது என்பதை அந்த சட்டமசோதா பரிசோதிக்கும். அது [பிரதம மந்திரி மானுவெல்] வால்ஸின் அரசியல் மன உறுதியையும் பரிசோதிக்கும். வரவு-செலவு திட்டத்தை சமீபத்தில் தவிர்த்திருந்த ஒருசில சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதிகள், இது ஒரேயடியான எதிரெழுச்சி நடவடிக்கையாக உள்ளது என மாக்ரோன் சட்டத்திற்கு எதிராகவே கூட வாக்களிக்க அச்சுறுத்தி உள்ளனர். அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு செல்ல திரு வால்ஸின் முயற்சியை அவரது அதிருப்தி பிரதிநிதிகள் மிகவும் ஆபத்திற்குட்படுத்தினால், அவர் உத்தரவாணை மூலமாக மாற்றங்களைக் கொண்டுச் செல்ல தயாராக இருக்கிறாரா என்பதை அவர் முடிவெடுத்தாக வேண்டும்." இந்த வலதுசாரி நடவடிக்கை PS அரசாங்கத்தின் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற அதன் போலி-இடது கூட்டாளிகளின் ஆழ்ந்த பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அடிக்கோடிடுகின்றன. புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி, 2012 தேர்தல்களின் இரண்டாவது சுற்றில் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டை ஆதரித்தது. 1945-1975 போருக்கு-பிந்தைய பொருளாதார செழிப்பின் "முப்பதாண்டுகால ஒளிமயமான அணுகுமுறையைக்" கைவிடவும், தொழில்துறைமயமாக்கலைக் குறைக்கும் ஒரு கொள்கையை பின்தொடரவும், நாஜி-ஒத்துழைப்பு விச்சி ஆட்சியை தூக்கியெறிந்த பின்னர் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட அனைத்து சமூக வெற்றிகளைத் துடைத்தெறியவும் வால்ஸ் அப்பட்டமாக அழைப்புவிடுத்துள்ளார். மாக்ரோன், அவரே அவரது கொள்கை, பிரிட்டனின் புதிய தொழிற் கட்சியின் முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயரின் வணிக-சார்பு கொள்கைகளின் மீது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு முக்கிய திருப்புமுனையாக, சட்டத்தின் நான்காவது ஷரத்தை பிளேயர் நீக்கியதை மாக்ரோனும் பாராட்டி இருந்தார்—உற்பத்தி கருவிகளை பொதுவுடைமையாக்க அழைப்புவிடுத்த அந்த ஷரத்து 1918இல் தொழிற் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. "இதுவும் நான்காம் ஷரத்து தருணத்தைப் போன்றதே," மாக்ரோன் கடந்த மாதம் இதழாளர்களுக்குத் தெரிவித்தார். “அப்போது உண்மையிலேயே தேசியமயமாக்கலை நம்பிய சிலரைக் கொண்டு அந்த மாற்றத்தை டோனி பிளேயர் கொண்டு வந்தார். ஆனால் அது ஓர் அடையாளம் அவ்வளவு தான்; அது விடயங்கள் எவ்வாறு மாறி இருந்தன என்பதை எடுத்துக்காட்டியது." பிளேயரைப் போல தொழிலாளர்-விரோத கொள்கைகளைப் பட்டவர்த்தனமாக தழுவவோ அல்லது சோசலிசத்தை கண்டிக்கவோ சோசலிஸ்ட் கட்சி எரிச்சலூட்டும் விதத்தில் மறுத்துள்ள போதினும், அது அதன் கொள்கைகளை கடந்த காலங்களில் பெரிதும் வலதிற்கு மாற்றியுள்ளது. அது தொழிலாள வர்க்கத்தின் மீதான ஆழ்ந்த தாக்குதல்களுக்கும், வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கையை அல்லது தகுதிக்குக் குறைந்த வேலையில் நியமிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஐந்து மில்லியனுக்கு அதிகாக உயர்த்துவதற்கும், மேலும் தொழிலாள வர்க்க வாழ்க்கைத் தரங்களில் வீழ்ச்சியை தீவிரப்படுத்துவதற்கும் தலைமை தாங்கியுள்ளது. சமூக விவகாரங்களுக்கான அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை, அவசரகால குறைந்தபட்ச சமூகநல திட்ட சலுகைகளைப் பெறுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதைக் கண்டறிந்தது: “2012இல் 4.4 சதவீதமாக இருந்த அவசரகால குறைந்தபட்ச சமூகநல திட்ட சலுகைகளை பெறுபவர்களின் எண்ணிக்கை, 3.8 மில்லியனாக உயர்ந்துள்ளது." மனைவி மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளையும் கணக்கில் எடுத்தால், பிரான்சின் 66 மில்லியன் மக்கள் தொகையில் 6.8 மில்லியன் பேர் அவசரகால குறைந்தபட்ச சமூகநல திட்ட சலுகையைச் சார்ந்துள்ளதனர் என்பதை அது அர்த்தப்படுத்தும். |
|