World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP statement for Sri Lanka’s presidential election

Vote for SEP candidate Pani Wijesiriwardena! Fight for a socialist program against war and social counterrevolution!

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களியுங்கள்! போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவோம்!

By the Socialist Equality Party (Sri Lanka)
15 December 2014

Back to screen version

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோசக), ஜனவரி 8 இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எமது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும் அதில் பங்குபற்றுமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

உலக யுத்த அச்சுறுத்தலுக்கும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான இடையறா தாக்குதல்களுக்கும் எதிராக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடும் ஒரே வேட்பாளர் எமது வேட்பாளரான பாணி விஜேசிறிவர்தன மட்டுமே ஆவார். நாம் அனைத்து முதலாளித்துவ வேட்பாளர்களையும் நவ சம சமாஜக் கட்சி (நசசக) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (USP) உட்பட அவர்களின் போலி இடது ஆதரவாளர்களையும் எதிர்க்கின்றோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான விஜேசிறிவர்தன, நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நீளும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கான அரசியல் போராட்டத்தில் ஒரு நீண்ட வரலாறு கொண்டவர். ஓய்வுபெற்ற ஆசிரியரான அவர், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொடுத்த தாக்குதல்களுக்கும் தொழிற்சங்கங்களின் துரோகங்களுக்கும் எதிராக பொதுக் கல்வியை காக்க உறுதியாகப் போராடியதால் நன்கு அறியப்பட்டவராவார். விஜேசிறிவர்தன உலக சோசலிச வலைத் தளத்தின் கொழும்பு ஆசிரியர் குழுவில் பணியாற்றுகின்றார்.

முழு கொழும்பு ஊடகங்களும் அரசியல் ஸ்தாபனமும் பெருகிவரும் போர் ஆபத்து பற்றி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இருட்டில் வைத்துள்ளன. ஏனைய சகல கட்சிகளுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை அதன் தேர்தல் பிரச்சாரத்தின் மையமாகக் கொண்டுள்ளது. நாம் இந்த மௌனச் சதியை தகர்க்க முயற்சிப்பதோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து, முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டுவதற்காக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புகின்றோம்.

2008ல் வெடித்த உலகளாவிய நிதி நெருக்கடியானது பூகோள-அரசியல் பதட்டங்கள் மற்றும் பகைமையை மிகப் பெருமளவில் ஆழமடையச் செய்யும் முதலாளித்துவத்தின் மோசமான பொறிவின் தொடக்கத்தை சமிக்ஞை காட்டியுள்ளது. மீண்டும், ஏகாதிபத்திய சக்திகள், பிரதானமாக அமெரிக்கா, இராணுவ வழிமுறை உட்பட சகல வழிமுறைகளையும் பயன்படுத்தி உலகம் பூராவும் வளங்கள், சந்தைகள் மற்றும் மூலோபாய நிலைகள் மீதான கட்டுப்பாட்டை பற்றிக்கொள்ள முயற்சிக்கின்றன. முதலாம் உலகப் போர் நடந்து நூறு ஆண்டுகளின் பின்னரும் இரண்டாம் உலகப் போரில் இருந்து 75 ஆண்டுகளின் பின்னரும், சிதைந்து வரும் முதலாளித்துவ ஒழுங்கானது முன்னரைவிட அதிக பரிமாணத்திலான ஒரு அழிவுக்குள் தள்ள மனிதகுலத்தை அச்சுறுத்தி வருகின்றது.

போருக்கான முனைப்பில் ஒரு தத்ரூபமான துரிதப்படுத்தலை 2014 குறிக்கின்றது. பெப்ரவரியில், அமெரிக்கா ஜேர்மனியுடன் சேர்ந்து, உக்ரேனில் பாசிசவாதிகளின் தலைமையிலான ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியை அரங்கேற்றியதன் மூலம், அணு ஆயுதம் கொண்டுள்ள ரஷ்யாவுடன் ஈவிரக்கமற்ற ஒரு முறுகலை தூண்டிவிட்டது. ஆகஸ்ட்டில், இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடும் சாக்குப்போக்கில், ஈராக் மற்றும் சிரியாவில் ஒரு வெளிப்படையான போருக்கு ஒபாமா அங்கீகாரம் அளித்துள்ளார். இது மத்திய கிழக்கு முழுவதையும் பற்றிக்கொள்ளும் சாத்தியத்தையும் பெரும் வல்லரசுகளை அதற்குள் இழுத்துப் போடும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது.

ஆசியாவில், அமெரிக்கா அதன் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் மைய இலக்கான, அணு ஆயுதம் கொண்ட சீனாவுக்கு எதிரான தனது இராணுவ கட்டியெழுப்பலை துரிதப்படுத்தி வருகிறது. வாஷிங்டன் பிராந்தியம் முழுவதும் இராணுவ கூட்டணிகள், மூலோபாய பங்காண்மை மற்றும் அடித்தள ஏற்பாடுகளை விரிவாக்கி வருகின்றது. கொரிய தீபகற்பம், தென் சீன மற்றும் கிழக்கு சீன கடல்களிலான கடல்சார் முரன்பாடுகள், அல்லது சீனாவுடனான இந்தியாவின் எல்லைப் பிரச்சினைகள் போன்ற ஒரு தொகை வெடிப்பு புள்ளிகளில் எதேனும் ஒன்று போர் வெடிப்பதற்கான சாத்தியமான தூண்டுகோலாக இருக்கக்கூடும்.

கடந்த மாதம் ஜி 20 உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்தியபோது, “முன்னிலைக்கான" தன்னுடைய உறுதிப்பாட்டை திட்டவட்டமாக வலியுறுத்திய ஒபாமா, அமெரிக்கா கடைசி உலகப் போரில் இந்தப் பிராந்தியத்தில் "இரத்தம் மற்றும் நிதியை" முதலீடு செய்துள்ளது என்று பிரகடனம் செய்து, மீண்டும் அவ்வாறு செய்யவுள்ளதை சமிக்ஞை செய்தார்.

ஆசியா பசிபிக்கில் ஒவ்வொரு நாடும் பகைமை மற்றும் போர் தயாரிப்புகளின் நீர்ச் சுழிக்குள் இழுபட்டுக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவானது ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தியாவுடனும் தனது மூலோபாய பங்கான்மையை வலுப்படுத்தி வருவதோடு பிராந்தியம் முழுவதும் இராணுவ உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முற்படுகிறது. இலங்கை இதற்கு விதிவிலக்கல்ல.

இலங்கை மற்றும் அமெரிக்க போர் உந்துதல்

இந்த பூகோள-அரசியல் பதட்டங்கள், இலங்கை ஜனாதிபதி தேர்தலை சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடியில் நேரடியாக வெளிப்படுகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு ஆபத்தான சமநிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். அவரது அரசாங்கம், சீன முதலீடு மற்றும் நிதி உதவியில் பெரிதும் சார்ந்து இருக்கும் அதேவேளை, இராஜபக்ஷ ஒரு இழிந்த அமெரிக்க தலைமையிலான "மனித உரிமைகள்" எதிர்த் தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆதரித்ததோடு இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை கண்டும் காணாதது போல் இருந்த அமெரிக்கா, இராஜபக்ஷவை பெய்ஜிங்கில் இருந்து தூர விலக நெருக்குவதற்காக அதே போர் குற்றங்களை வஞ்சத்தனமாக சுரண்டிக்கொள்கின்றது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வளர்ந்து வரும் விரோதத்தை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ, தனது எதிரிகளை முன்கூட்டியே தடுக்கவும் மற்றொரு ஆட்சிக் காலத்தை தக்கவைத்துக்கொள்ளவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும், வெளிப்படையாக நீண்ட காலமாக திட்டமிட்ட ஒரு நடவடிக்கையில், உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, தான் ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) ஆதரவிலான எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (ஸ்ரீலசுக) மற்றும் அதன் கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சிக்கு தெளிவாக பச்சைக்கொடி காட்டியுள்ள வாஷிங்டன், தேர்தலில் இராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. இந்தச் சதிக்கு அச்சாணியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சிறிசேனவுக்கும் யூஎன்பீக்கும் இடையில் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்காக ஸ்ரீலசுகவுக்குள் தனது செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டார். குமாரதுங்க, கிளின்டன் மன்றத்தில் தனது ஈடுபாட்டின் ஊடாக, ஒபாமாவின் "முன்னிலை" கொள்கையின் பிரதான சிற்பிகளில் ஒருவரான முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுடன் தொடர்பு வைத்துள்ளார்.

சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு போர்கள் மற்றும் ஆளில்லா விமான மூலமான படுகொலைகளை முன்னெடுக்கும் அதேவேளை, "மனித உரிமைகளின்" பாதுகாவலனாக காட்டிக்கொள்ளும் வாஷிங்டனின் மோசடியைப் போலவே, "இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராட்டம்" என்ற சிறிசேனவினதும் எதிர்க்கட்சி முகாமினதும் பதாகையும் மோசடியானதாகும்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்பாளியான, மற்றும் தனது சிக்கனத் திட்டங்கள் மீதான எதிர்ப்புகளை நசுக்க பொலிஸ்-அரச வழிமுறைகளை முன்னெடுக்கும் ஒரு எதேச்சதிகார ஆட்சிக்கு இராஜபக்ஷ தலைமை தாங்குகிறார். எனினும், சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆளும் வர்க்கத்தின் நலன்களை முன்னெடுப்பதில் இராஜபக்ஷவை போலவே அவரும் இரக்கமற்றவராக இருப்பார் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது. "பொது வேட்பாளரை" சூழவுள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் தங்கள் கரங்களில் இரத்தக் கறைகளை கொண்டுள்ளன.

* ஒரு சிரேஷ்ட அமைச்சர் என்ற வகையில், சிறிசேனவும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பாளியாவார். அவற்றில் எதையும் அவர் நிராகரிக்கவில்லை.

* 1983ல் இரத்தம் தோய்ந்த தமிழர்-விரோத படுகொலைகளுடன் தீவின் இனவாத யுத்தத்தை தொடங்கி வைத்த யூஎன்பீ, 1980களின் பிற்பகுதியில் கிராமப்புற கிளர்ச்சியை நசுக்குவதற்காக 60,000 இளைஞர்களைக் கொன்ற கொலைப் படைகளை கட்டவிழ்த்து விட்டது.

* வாஷிங்டனின் கருவியான குமாரதுங்க, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக வாக்குறுதியளித்து 1994ல் ஜனாதிபதி பதவிக்கு வந்தபோதிலும், மாறாக போரைத் தீவிரப்படுத்தினார். 2004ல் தனது பரந்த நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்திய அவர், தெரிவுசெய்யப்பட்ட யூஎன்பி அரசாங்கத்தை பதவி விலக்கினார்.

* முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஜனநாயகக் கட்சியின் தலைவராவார். அவர், 2009ல் பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட புலிகளுக்கு எதிரான கடைசி தாக்குதல்களுக்கு பொறுப்பாளி ஆவார்.

* இராஜபக்ஷவின் கூட்டணியில் இருந்து விலகிய சிங்கள-பௌத்த அதிதீவிரவாத ஜாதிக ஹெல உறுமய (JHU), இனவாத யுத்தத்துக்கு வெறித்தனமாக பிரச்சாரம் செய்ததோடு தமிழர்-விரோத பாகுபாட்டை தொடர்ந்தும் ஊக்குவிக்கின்றன.

* மக்கள் விடுதலை முன்னணியும் (ஜேவிபி) இதில் இருந்து வேறுபட்டதல்ல. இராஜபக்ஷவின் தோல்விக்கு வாயளவில் அழைப்பு விடுப்பதோடு தனது சொந்த வேட்பாளரை நிறுத்தாததன் மூலம், பின்னணியில் சிறிசேனவை ஆதரிக்கின்றது.

இத்தகைய பிற்போக்கு அமைப்புக்களை இணைத்திருப்பது "ஜனநாயகம்" அல்ல, மாறாக, ஆளும் வர்க்கம் மற்றும் உயர் மத்தியதர வர்க்கங்களின் பிரிவுகளின் ஆழமான வெறுப்பாகும். இந்த தட்டினர், அரசாங்கத்தின் குடும்ப ஆட்சி, அத்துடன் அது சீனாவுக்கு எதிராக வாஷிங்டனுடன் முழுமையாக அணிசேரத் தவறியமையால் வணிக வாய்ப்புக்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் சேதமடைந்துள்ளமை தொடர்பாக அதிருப்தி கண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக சிறிசேனவை ஆதரிக்காத போதிலும், ஒரு அமெரிக்க சார்பு அரசாங்கம் தனது சொந்த நலன்களுக்கு நன்கு சேவை செய்யும் என்ற நம்பிக்கையில் மெளனமாக அவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. கூட்டமைப்பானது வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு சுயாட்சி அமைவது தமிழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறி வருகின்றது. உண்மையில், அது தமிழ் முதலாளித்துவ தட்டுக்கள் தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வதற்கு மட்டுமே உதவும்.

பல்வேறு தாராளவாதிகள், அரசு சாரா அமைப்புகளின் அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்விமான்கள் மற்றும் குறிப்பாக, போலி இடது அமைப்புக்களும் மிகவும் நயவஞ்சகமான அரசியல் பாத்திரம் வகிக்கின்றன. அவர்கள் சிறிசேனவுக்கும் அவரது இழிந்த கூட்டணிக்கும் அவசியப்படுகின்ற "ஜனநாயகப்" போர்வையை வழங்குகின்றனர்.

ஊக்குவிப்பாளர்களில் முன்னிலையில் இருப்பவர் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன ஆவார். இப்போது சிறிசேனவுக்கான பிரச்சார மேடைகளில் தோன்றும் அவர், "இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை கவிழ்க்க", அதில் இருந்து வெளியேறியவருக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கின்றார்.

ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் அந்தளவுக்கு செல்லவில்லை என்றாலும், அவை இராஜபக்ஷவை கண்டனம் செய்துகொண்டு சிறிசேன மற்றும் அவரது கூட்டணியினது தொழிலாள வர்க்க விரோத சாதனைகள் பற்றி எதுவும் பேசாமல் இருக்கின்றமை, அவற்றின் நிலைப்பாட்டை தெளிவாகக் காட்டுகின்றன. அது இந்த வலதுசாரி அமெரிக்க-சார்பு கூட்டணியை வெட்கமின்றி ஆதரிப்பதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, சிறிசேனவையும் அவரது அனைத்து கூட்டாளிகள், பரிந்துரையாளர்கள் மற்றும் அவரது முகாமில் உள்ளவர்களையும் எதிர்க்கின்றது. அவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், இலங்கை உழைக்கும் மக்களுக்கு அழிவுகரமான விளைவுகளைக் கொண்ட, வாஷிங்டனின் போர் திட்டங்களுக்குள் மேலும் மேலும் இழுத்துச் செல்லப்படும் என்று தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாம் எச்சரிக்கிறோம்.

அதே நேரத்தில், சோசலிச சமத்துவக் கட்சி இராஜபக்ஷவுக்கு எந்த ஆதரவு கொடுக்காததோடு "சர்வதேச சதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக" அவர் காட்டிக்கொள்வதையும் நிராகரிக்கிறது. இராஜபக்ஷ, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிரியல்ல. உண்மையில், அவரது இராஜதந்திர சூழ்ச்சியில், அவருடைய அரசாங்கம் இலங்கை மற்றும் அமெரிக்க இராணுவங்களுக்கு இடையிலான நெருக்கமான உறவுகளை தக்க வைத்துக்கொண்டதோடு பென்டகனுடன் ராணுவச் சேவை ஒப்பந்தங்களையும் செய்துகொண்டுள்ளது.

சமூக எதிர்ப்புரட்சி நிகழ்ச்சி நிரல்

போருக்கான உந்துதலானது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சமூக எதிர்ப்புரட்சியையும் கையோடு கொண்டு வருகின்றது. இராஜபக்ஷவோ அல்லது சிறிசேனவோ, ஜனவரி 8 தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அவர் சர்வதேச நிதி மூலதனம் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தாங்கிக்கொள்ள உழைக்கும் மக்களை நெருக்குவார். இருவரும் ஏற்கனவே உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களை பேரழிவிற்குள் தள்ளியுள்ள சந்தை சார்பு "திறந்த பொருளாதாரக் கொள்கையை" தொடர்வதாக வாக்குறுதியளித்துள்ளனர்.

இராஜபக்ஷ, தனது அரசாங்கம் வருடாந்த தனிநபர் வருமானத்தை 3,280 அமெரிக்க டாலர் வரை உயர்த்தியுள்ளதாகக் கூறிக்கொள்கின்ற போதிலும், உண்மையில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே சமூக இடைவெளி அதிகரித்துள்ளது. மக்கள் தொகையில் 20 சதவீதமான அதிசெல்வந்தர்கள், நாட்டின் வருமானத்தில் 53.5 சதவீதத்தைப் பெறுகின்ற அதேவேளை, மிகவும் வறிய 20 சதவீதத்தினர் 4.4 சதவிகிதத்தையே பெறுகின்றனர். 2016ல் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதமாக குறைக்கக் கோரும், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையை, அடுத்துவரும் அரசாங்கம் அமுல்படுத்துகின்ற நிலையில், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மோசமடையும். அடிப்படை பண்டங்களுக்கான விலை மானியங்கள் மற்றும் கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளும் வெட்டிக் குறைக்கப்படும் அதே சமயம், பெருவணிகர் மற்றும் செல்வந்த உயரடுக்குக்கு மேலும் வரிச் சலுகைகள் மற்றும் பொருளாதார சலுகைகளும் தாராளமாக வழங்கப்படும்.

தான் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு எவ்வாறு பதிலளிப்பார் என்பதை இராஜபக்ஷ ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். 2009ல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர் இராணுவ மற்றும் பொலிஸ்-அரச இயந்திரங்களை தொடர்ந்தும் விரிவாக்கி பலப்படுத்தி வருகின்றார். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்திய பொலிசும் இராணுவமும், 2011ல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் இளம் தொழிலாளியையும், 2012ல் சிலாபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவரையும் மற்றும் 2013ல் தொழில்துறை மாசுபடுத்தலுக்கு எதிராக வெலிவேரியவில் நடந்த எதிர்ப்பு போராட்டத்தின்போது மேலும் மூன்று இளைஞர்களையும் கொன்றது. சிறிசேன ஆட்சிக்கு வந்தால், அவரும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பை அடக்குவதில் இராஜபக்ஷவைப் போலவே ஈவிரக்கமற்றவராக இருப்பார்.

இராஜபக்ஷ அரசாங்கம் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டு இனவாதத்தை தூண்டிவிட்டு வந்துள்ளது. அது, பீதியைக் கிளப்பிவிடவும், வடக்கு மற்றும் கிழக்கில் தனது பிரமாண்டமான இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவும் "புலி பயங்கரவாதிகள் புத்துயிர் பெறுகின்றனர்" என்ற பொய்யை பரப்புகின்ற அதேவேளை, முஸ்லிம்களை குறிவைக்க பொதுபல சேனா, ராவணா பலகாய போன்ற பாசிச சிங்கள-பெளத்த குழுக்களையும் வளர்த்துவிட்டுள்ளது. அதிதீவிர இனவாத ஜாதிக ஹெல உறுமய கட்சியை சிறிசேன கட்டித் தழுவிக்கொண்டுள்ளமை, அவரும் இதே வழிமுறைகளை பயன்படுத்துவார் என்பதை நிரூபிக்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி அனைத்துவிதமான தேசியவாதம், பேரினவாதம் மற்றும் இனவாதத்தை எதிர்ப்பதோடு தொழிலாள வர்க்கத்தின் பொது வர்க்க நலன்களுக்கான போராட்டத்தில் இன, மொழி அல்லது மதத்தை கருதாமல் அவர்களை ஐக்கியப்படுத்தப் போராடுகின்றது.

போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம்

ஏகாதிபத்திய போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமானது சர்வதேச அளவிலானதாக இருப்பது இன்றியமையாததாகும். பெரிதா அல்லது சிறிதா என்பதற்கும் அப்பால், ஒரு தேசத்தை அடிப்படையாகக் கொண்டு, ஏகாதிபத்தியத்தின் அல்லது உலக பெருநிறுவனங்களின் மற்றும் நிதிய நிறுவனங்களின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளை எதிர்ப்பது வெளிப்படையாகவே சாத்தியமற்றதாகும்.

1948ல் உத்தியோகபூர்வமாக சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, இலங்கை முதலாளித்துவமானது இயல்பிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இலாயக்கற்றது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. சோசகயின் தலைமைத்துவத்தின் கீழ், ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக தெற்காசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தனது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுவதன் மூலம், தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே ஏகாதிபத்தியத்தையும் போர் உந்துதலையும் எதிர்த்துப் போராட முடியும்.

அதேபோல் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே ஜனநாயக உரிமைகளுக்கான உண்மையான போராட்டத்தையும் முன்னெடுக்க முடியும். அனைத்து ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டு சட்டங்களை தூக்கிவீசுகின்ற ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதற்கு, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் நிர்ணய சபையை அமைக்க சோசக அழைப்புவிடுக்கின்றது. அரசியல் நிர்ணய சபைக்கான கோரிக்கையானது முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்காக தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டும் அரசியல் போராட்டத்தின் பாகமாக இருத்தல் வேண்டும். அப்போது மட்டுமே ஜனநாயக உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட முடியும்.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளை தீர்ப்பதற்கு சோசக பின்வரும் கொள்கைகளை பரிந்துரைக்கின்றது:

* வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய, நாம் ஊதியத்தில் எந்த குறைப்பும் இன்றி வேலை வாரத்தை 30 மணித்தியாலங்களாக குறைப்பதன் மூலம் வேலை வாய்ப்பை விரிவாக்க முன்மொழிகின்றோம். சிறந்த ஊதியத்துடனான வேலைகளை உருவாக்கவும் வீடமைப்பு, பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் வீதிகள் போன்ற பொதுமக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யவும் பல பில்லியன் ரூபாய்களிலான பொதுப்பணித் திட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

* நாம் முழு தொழிலாள வர்க்கத்தினதும் சம்பளம் மற்றும் நிலைமைகளை கீழறுக்கப் பயன்படுத்தப்பட்டு வரும், ஒப்பந்த தொழிலாளர் முறையை அகற்றக் கோருகின்றோம். தொழிலாளர் படையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்போது ஒப்பந்த மற்றும் தற்காலிக வேலையில் தங்கியிருக்கின்றனர். சிறந்த ஊதியத்துடனான தொழிலைப் பெற்றுக்கொள்ளும் உரிமை அனைத்து தொழிலாளர்களுக்கும் இருக்க வேண்டும். பணவீக்கத்திற்கு எதிரான வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதியம் உடனடியாக உயர்த்தப்பட வேண்டும்.

* அனைவருக்கும் இலவச, உயர் தரமான சேவைகள் கிடைக்கச் செய்வதன் பேரில், பொதுக் கல்வி மற்றும் சுகாதார சேவையை விரிவாக்க கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட வேண்டும் என சோசக அழைப்பு விடுக்கின்றது. மலிவு விலையில், கௌரவமான குடியிருப்புக்களை வழங்க பொது வீட்டுத் திட்டம் விசாலமாக விரிவாக்கப்பட வேண்டும்.

* இனப் பாகுபாடின்றி நிலமற்ற விவசாயிகளுக்கு அரச காணிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என நாம் பரிந்துரைக்கின்றோம். அனைத்து ஏழை விவசாயிகள் மற்றும் மீனவர்களது கடன்கள் உடனடியாக ரத்துச் செய்யப்படுவதோடு மலிவு கடன், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பிற உதவிகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கான விலைகள், ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

மேல் கூறப்பட்ட கொள்கைகள், மிகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் தனியார் உடமையுடன் பொருந்தக் கூடியவை அல்ல. எனவே அவை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். சமுதாயமானது சில பெரும் செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மையானவர்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவாறு சோசலிச அடிப்படையில் உச்சி முதல் அடி வரை மறு ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

சோசலிசத்திற்கான போராட்டமானது முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்காக இடைவிடாது போராடுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக ஒரு தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் கிராமப்புற மக்களை அணிதிரட்டிக்கொள்ள வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை ஸ்தாபிப்பதன் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக போராடுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புங்கள்

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது (புகக), லங்கா சம சமாஜக் கட்சி சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுழைந்துகொண்டு சர்வதேச சோசலிசக் கொள்கைகளை அப்பட்டமாக காட்டிக்கொடுத்ததற்கு எதிரான அரசியல் போராட்டத்தில், 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. புகக/சோசக மட்டுமே, நீண்ட கால உள்நாட்டு யுத்தம் முழுவதிலும், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடிய ஒரே கட்சியாகும். அந்த அடிப்படையில் அது வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பியழைக்க கோரி வந்தது.

எமது கட்சி, 1917ல் ரஷ்ய புரட்சியின் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் மற்றும் கோட்பாட்டு மரபை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 1938ல், சோசலிச சர்வதேசவாத வேலைத் திட்டத்தின் அடிப்படையில், ட்ரொட்ஸ்கி தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்க்க நான்காம் அகிலத்தை நிறுவினார். இலங்கை போன்ற முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்த நாடுகளில், சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே ஜனநாயகப் பணிகளை இட்டு நிரப்ப முடியும், என்பதை தெளிவுபடுத்தியுள்ள ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தையே சோசலிச சமத்துவக் கட்சி அடித்தளமாகக் கொண்டுள்ளது.

எமது அரசியல் பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். எமது பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களில் இணைந்துகொள்ளுங்கள் மற்றும் தேர்தல் நிதிக்கு பங்களிப்பு செய்யுங்கள். எமது வேட்பாளருக்கு வாக்களியுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எமது அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை கவனமாக படித்து, சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புவதற்காக அதில் இணைந்துகொள்ள விண்ணப்பிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.