World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

This week in history: November 17-23

வரலாற்றில் இந்த வாரம்: நவம்பர் 17-23

17 November 2014

Back to screen version


25
ஆண்டுகளுக்கு முன்னர்: செக் ஆட்சிக்கு எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தன

1989 நவம்பர் 17, ப்ராக்கில் பரந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் வெடித்தது. ப்ராடிஸ்லாவா நகரில் முந்தைய நாள் நடந்த ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தே இந்த ஆர்ப்பாட்டம் வெடித்தது. இந்த இரு ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச மாணவர்கள் தினத்தை முன்னிட்டே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. நாஜி ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கரங்களில், ஜன் ஒப்லேட்டல் என்ற மாணவர் மரணமடைந்ததை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னர், ப்ராக் பல்கலைக்கழகத்தில் நாஜிப் படைகள் நடத்திய கொலை வெறித்தாக்குதலின் (50 வது) ஆண்டு நிறைவை இந்த நாள் குறித்தது.

1989 ஆர்ப்பாட்டங்கள், கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மிலோஸ் ஜேக்சின் கீழான ஸ்ராலினிச ஆட்சி மீதான மக்களின் விரோதத்தால் தூண்டிவிடப்பட்டன. பொல்லுகளுடன் வந்த கலகம் அடக்கும் பொலிஸ், ப்ராக் ஆர்ப்பாட்டத்தை சுற்றிவளைத்து, வெளியேறும் பாதைகளை அடைத்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடிக்கத் தொடங்கினர். அடுத்துவந்த நாட்கள் பூராவும், பெரும் வேலைநிறுத்தங்கள் ப்ராக்கில் இருந்து மற்ற நகரங்களுக்கும் பரவின.


முதலாளித்துவத்தை மீள் ஸ்தாபிதம் செய்வதற்காக ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடன் செயற்படுவதற்கு எதிர்பார்த்து, பின்னர் செக் ஜனாதிபதியாக பணியாற்றவிருந்த பொதுமக்கள் பேரவையின் தலைவரும், நாடக எழுத்தாளரும் மற்றும் சோசலிச-விரோத அரசியல் தத்துவாசிரியருமான வாக்லவ் ஹாவெல், எதிர்ப்புக்களுக்காக வெளிப்படையாக வாதிடும் ஒருவராக தோன்றினார்.

கணிசமான சீர்திருத்தங்கள் செய்ய மறுப்பதன் விளைவுகளையிட்டு சோவியத் பிரதமர் நிகோலாய் ரிஸகொவ்விடமிருந்து வந்த எழுத்துமூல எச்சரிக்கையை அதே வாரத்தின் ஆரம்பத்தில் ஜேக்ஸ் ஆட்சி பெற்றது. பல்கேரியா மற்றும் ருமேனியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுவுடமை நிறுவன நிலை வாரியங்களும் கூட சோவியத் ஒன்றியத்தில் இருந்து இந்த தகவல்களைப் பெற்றன. அலெக்சாண்டர் டூபெக்கின் மிகத் தாராளவாத ஆட்சியை அகற்றுவதற்காக நாட்டின் மீது சோவியத் ஒன்றியம் படையெடுத்த போது, 1968 ஆகஸ்ட்டில் "ப்ராக் வசந்தம்" நசுக்கப்பட்டது முதல் செக் ஆட்சி அங்கு இருத்தப்பட்டது.

நவம்பர் 21, மக்கள் பேரவையானது பிரதமர் லடிஸ்லெவ் அடெமிக்கை சந்தித்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மேலும் வன்முறைகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று உறுதி பெற்றது. நவம்பர் 17, இரண்டு மணி நேர பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. செக் மத்திய தொலைக்காட்சியானது ஆர்ப்பாட்டத்தில் இருந்து நேரடி அறிக்கையை ஒளிபரப்பைத் தொடங்கிய போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போதைய ஆட்சியை டுப்செக்கின் கீழ் மாற்றீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன் அந்த ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது.

ஆலைத் தொழிலாளர்கள், எதிர்ப்புக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியதோடு நவம்பர் 24, ஜேக்ஸ் உட்பட கம்யூனிஸ்ட் கட்சி பொதுவுடமை நிலைவாரியமும் ராஜினாமா செய்தது.

பின்னர், இந்த நிகழ்வுகளை "வெல்வெட் புரட்சியின்" தொடக்கம் என முதலாளித்துவ செய்தி ஊடகம் சித்தரித்த போதிலும், கிழக்கு ஜேர்மனி போன்றே, அவற்றின் விளைவு எதிர்ப்புரட்சியாக இருந்தது. ஸ்ராலினிச ஆட்சிகள் மீதான மக்கள் எதிர்ப்பு முற்றிலும் அவசியமாக இருந்த போதிலும், குழப்பம் மற்றும் புரட்சிகர தலைமை இன்மை காரணமாக, அந்த இயக்கத்தின் முடிவு முதலாளித்துவம் மீள
நிறுவப்படுவதாக இருந்தது.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: FBI இயக்குனர் ஹூவர், மார்ட்டின் லூதர் கிங், ஜூனியரை கண்டனம் செய்தார்

1964 நவம்பர் 18, FBI தலைவர் ஜே. எட்கர் ஹூவர், சிவில் உரிமைகள் இயக்கத்தின் தலைவர் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியரை பகிரங்கமாக கண்டனம் செய்தார். தெற்கில் கறுப்பர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் கொலைகள் சம்பந்தமான விசாரணையை தடுக்க, ஹூவரின் மத்திய முகவர்கள் இனவெறி படைகளுடன் இணைந்து செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை அடுத்து, அவர் கிங்கை "நாட்டின் மிகப் பெரிய பொய்யர்" என
கூறினார்.

ஹூவரின் கண்டனம், மூன்று மணி நேர செய்தியாளர் கூட்டத்தின் போதே வெளியிடப்பட்டது. அதில் அவர், ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி படுகொலை தொடர்பாக வாரன் ஆணைக்குழு அறிக்கையையும் மற்றும் "ரத்தம் கசியும் இதயம்" படைத்த நீதிபதிகளால் குற்றவாளிகள்பாதுகாக்கப்படுவதாக கூறப்படுவதையும் கண்டனம் செய்தார்.

காங்கிரசால் சிவில் உரிமைகள் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், தெற்கில் பெருகும் இனவெறி பயங்கரவாத அலையை கறுப்பினத்தவர்களும் சிவில் உரிமை ஆர்வலர்களும் எதிர்கொண்டார். 1964 ஜூனில் பிலடெல்பியா, மிசிசிப்பியில் மூன்று சிவில் உரிமை தொழிலாளர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, மற்றும் ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிற்குள்ளான தெற்கு மாநில நிர்வாகங்களின் ஊக்குவிப்புடன் கு குளக்ஸ் க்ளானால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர்ச்சியான படுகொலைகள், குண்டுத்தாக்குதல்கள் மற்றும் சரீரத் தாக்குதல்களும் இதில் அடங்கும்.


சமீபத்தில் நோபல் பரிசு பெற்றிருந்த கிங், மூன்று சிவில் உரிமைகள் தொழிலாளர்கள் கொலையில், அல்லது நான்கு கருப்பு குழந்தைகள் கொல்லப்பட்ட பர்மிங்காம் தேவாலய குண்டு வெடிப்பில், அல்லது தெற்கில் அதிகம் அறியப்பட்டிராத ஏனைய இனவாத அட்டூழியங்களில் சம்பந்தப்பட்ட எவரையும் இன்னமும் FBI கைது செய்யவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

எனினும், ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகிக்கொள்ள விடுத்த அழைப்பை கிங் நிராகரித்துவிட்டார். "FBIயை விமர்சிப்பதை விட, நான் FBIயில் நம்பிக்கை வைக்குமாறும் நம்பிக்கை இழக்க கூடாது என்றும் நீக்ரோக்களை வலியுறுத்தி, நான் மத்தியஸ்தராக செயற்பட்டுள்ளேன்," என்று ஹூவரின் கருத்துக்கள் பற்றிய செய்திகள் வந்த பின்னர் கிங் பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உண்மையில், FBI, கிங் உட்பட சிவில் உரிமை இயக்கத்துக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளில் ஆழமாக ஈடுபாடு கொண்டிருந்தது. கிங்கின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதுடன் ஹூவரால் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அவதூறுப் பிரச்சாரத்தின் இலக்காகவும் அவர் இருந்தார். FBI ஆவணங்களின் படி, அதன் நோக்கமானது "ஒரு பயனுள்ள கருப்பினத் தலைவராக, மார்ட்டின் லூதர் கிங். ஜூனியரை மட்டுப்படுத்தி வைப்பதாகும்". பின்னர், 1965 ல், ஒரு FBI ஒற்றர், வெள்ளை சிவில் உரிமைகள் ஆர்வலர் வயோலா லியூஸோ கொலையில் பங்கேற்றிருந்தார். வயோலா லியூஸோ மரணத்திற்கு பின்னரும் FBIயின் மற்றொரு அவதூறுப் பிரச்சாரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

பார்க்க: Viola Liuzzo: martyr in the struggle for social equality [வயோலா லியூஸோ: சமூக சமத்துவத்துக்கான போராட்டத்தின் தியாகி]

75 ஆண்டுகளுக்கு முன்னர்: HMS ராவல்பிண்டி கப்பலை ஜேர்மன் மூழ்கடித்ததன் மூலம் "பினாமி யுத்தம்" அம்பலமானது

1939
நவம்பர் 23, ஒரு ஆயுதபாணியான பிரிட்டிஷ் வணிகக் கப்பலான HMS ராவல்பிண்டி, ஐஸ்லாந்து இடைவெளி என அழைக்கப்படும் கடல் பகுதியில், பரோயே தீவுகளின் வடக்கில் வைத்து சாம்ஹோர்ஸ்ட், குனீசெனெவ் ஆகிய இரண்டு ஜேர்மன் போர்க்கப்பல்களால்
மூழ்கடிக்கப்பட்டது.

ராவல்பிண்டியின் கப்டன் எட்வர்ட் கொவர்லி கென்னடி, ஜேர்மன் கடற்படையின் கட்டளையகத்தின் கோரிக்கைக்கு சரணடைய மறுத்து விட்டார். (காலஞ்சென்ற எழுத்தாளரும் தாரான்மை பிரச்சாரகருமான லுடோவிக் கென்னடியின் தந்தை) கேப்டன் கென்னடி மற்றும் மற்ற  237 பேரும் ஒரு-பக்கமான விவகாரத்தினால் நம்பிக்கையற்று உயிரிழந்தனர்.

நாஜி ஜேர்மனி மற்றும் சோவியத் ஒன்றியமும் 1939ல் போலந்து துண்டாடிய பின்னர் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி இடையே போர் நிலைமை காணப்பாட்டாலும், கிட்டத்தட்ட அங்கு மோதல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நேச நாடுகள், ஜேர்மனிக்கு எதிராக ஒரு இராணுவத் தாக்குதலை முன்னெடுப்பதற்கான அவர்களது போலந்துக்கான ஒப்பந்த நிபந்தனைகளில் கடமைப்பட்டிருந்தாலும், அவ்வாறு செய்வதற்கு தாமதித்தனர். மேற்கு ஜேர்மனியின் அதிகளவில் வலுவூட்டப்பட்ட பிரெஞ்சு எல்லைப்பகுதி மீது தாக்குதல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரெஞ்சு அதிகாரிகள் திட்டமிட்டிருக்கவில்லை. பெல்ஜியத்தின் நடுநிலைமையும் பிரெஞ்சு படைகள் போக்குவரத்து உரிமைகளை அனுமதிக்காத காரணத்தால், ஜேர்மனியின் ரைன்லாந்து மீதான ஒரு தாக்குதல் கேள்விக்கிடமில்லாமல் இருந்தது.

 
தங்கள் பங்கிற்கு, பிரிட்டிஷ் தலைமையானது வேர்மாக்கின் (ஜேர்மன் இராணுவம்) வலிமைக்குப் பொருந்தக் கூடியதாக இல்லை என உணர்ந்தது. ஆனால் ஆறு மாத காலத்துக்குள் மறு ஆயுதபாணியான பின்னர், பிரிட்டிஷ் இராணுவமானது ஜேர்மனியின் மேற்கு ஐரோப்பிய பகுதி மீது நம்பகமான சவாலை விடுக்க ஆயுதங்கள் அல்லது மனித பலத்தை கொண்டிருந்தது. இந்த தற்காலிக இராணுவ நிலையானது பிரித்தானியாவில் "வெற்றுப் போர்" என்றும் பிரான்சில் "புதுமைப் போர்" என்றும் அமெரிக்க பாணியில் பேசியவர்கள் "போலி யுத்தம்" என்றும் அப்போது அழைத்தனர். ஜேர்மனி 1940 ஏப்ரலில் பிரான்சைக் கைப்பற்றும் வரை இது நீடித்தது.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: பிரிட்டன் இன்றைய ஈராக்கான பாஸ்ராவின் கட்டுப்பாட்டை கைப்பற்றியது
 
1914
நவம்பர் 21, நவம்பர் 11 அன்று போர் தொடங்கியதை அடுத்து, ஒட்டோமான் பேரரசிடம் இருந்து, இன்றைய ஈராக்கான பாஸ்ராவின் கட்டுப்பாட்டை பிரிட்டிஷ் படைகள் கைப்பற்றின. இது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது அதன் போட்டியாளர்கள் மற்றும் பெயரளவிலான கூட்டாளிகளின் இழப்பில், புவிசார்-மூலோபாய முக்கியத்துவம் கொண்ட, வளம் நிறைந்த மத்திய கிழக்கின் மீது மேலாதிக்கத்தை நிறுவ
முயற்சித்ததன் பாகமாகும்.

அடுத்து வந்த ஆண்டுகளில் தொடர்ந்தும் இராணுவத் தோல்விகளால் நசுங்கிய ஒட்டோமன்கள், 1911-12ல் நடந்த இத்தாலிய-துருக்கிய போரில், இத்தாலியிடம் இன்றைய லிபியா மீதான  கட்டுப்பாட்டை இழந்து, மற்றும் 1912-13 முதல் பால்கன் போரில் பால்கன் அரசுகளின் கூட்டணி ஒன்றிடம் பால்கனில் அவர்களின் வரலாற்று ரீதியான ஆதிக்கத்தை இழந்ததனர். 1914 நவம்பர் 5, சைப்ரசில் காப்பரசு ஒன்றை பிரிட்டன் ஸ்தாபித்தது. முன்னர் சைப்ரசில் ஒட்டோமன்கள் வலுவான அரசியல் செல்வாக்கு கொண்டிருந்தனர்.

நவம்பர் 6, பிரிட்டிஷ் துருப்புக்கள் இன்றைய ஈராக்கின் அல் ஃபோ குடாநாட்டில் உள்ள ஒரு துறைமுகத்தில் தரையிறங்கின. அவர்கள் அடுத்து வந்த நாட்களில் ஒட்டோமான் துருப்புக்களுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டு, ஃபாஓவின் முன்னரங்குகளைக் கைப்பற்றியதோடு நவம்பர் 8 அன்று 300 ஒட்டோமான்களை கைது செய்தனர். பாரசீக வளைகுடாவில் சகல பகுதியிலும் ஒட்டோமான் கட்டுப்பாட்டுக்கு இந்தப் போர் முடிவு கட்டியது.

பிரிட்டிஷ் துருப்புக்கள் ஃபாஓ முதல் பஸ்ரா வரை அணிவகுத்துச் சென்றதுடன், நவம்பர் 11 அன்று இடைவழியில் ஒட்டோமன் துருப்புக்கள் நடத்திய தாக்குதல் தோல்வியடைந்தது. ஒட்டோமான்கள் தற்காப்பு அரண்களுக்கு பின்வாங்கிய போதிலும், அவர்களின் சில ஆயிரம் துருப்புக்கள் தப்பி ஓடின, மோதல்களின் இறுதி கட்டங்களில் 1000 பேர் பலியாகினர். பிரிட்டிஷ் துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை சுமார் 350 என்று கூறப்படுகிறது.

பாஸ்ரா கைப்பற்றப்பட்டமை, பாரசீகம் மற்றும் இன்றைய ஈராக்கின் எண்ணெய் வயல்கள் மீது கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்வதற்கான பரந்த பிரிட்டிஷ் மூலோபாயத்தின் ஒரு பாகமாகும் -ஜேர்மன் பேரரசும் இதே மூலோபாய நோக்கத்தை பகிர்ந்துகொண்டது. 1907ல், பிரிட்டன் ரஷ்யா உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் மூலம் பாரசீகத்தின் தென்கிழக்கு பிராந்தியத்தை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலும் வட பகுதியில் ரஷ்யன் வலயமாகவும் பிரித்து, ஒரு நடுநிலை "இடைத்தடை" பகுதியையும் ஸ்தாபித்தது.

யுத்தத்தின் முடிவில் ஏறத்தாழ முழு பிராந்தியத்தினதும் எல்லைகளை மீண்டும் வரைந்த பின்னர், முதலாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் முன்னெடுத்த இந்த மூலோபாயம், அரேபிய எதிர்ப்பு போராளிகள் மீது கொடூரமான அடக்குமுறைக்கு வழிவகுத்தது.