World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egyptian dictator al-Sisi signs military, economic deals in Paris

எகிப்திய சர்வாதிகாரி அல்-சிசி பாரீசில் இராணுவ, பொருளாதார உடன்படிக்கைகளில் கையெழுத்திடுகிறார்

By Kumaran Ira
3 December 2014

Back to screen version

கடந்த வாரம் ரோமில் தொடங்கிய ஐரோப்பாவிற்கான அவரது முதல் பயணத்தில், எகிப்திய சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் அல்-சிசி, நவம்பர் 26-27இல் பாரீசில் தரையிறங்கியதுடன், அவர் சோசலிஸ்ட் கட்சி (PS) ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், வெளியுறவுத்துறை மந்திரி லோரன்ட் ஃபாபியுஸ், பாதுகாப்புத்துறை மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளினது சபாநாயகர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பிரெஞ்சு வணிக தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

ஒரு மூலோபாய பங்காளியான முஸ்லீம் சகோதரத்துவத்தின் (MB) தலைவர் மொஹமத் முர்சிக்கு எதிராக ஜூலை 2013 ஆட்சிக்கவிழ்ப்புச் சதியின் போது, ஆயிரக் கணக்கான போராட்டக்காரர்களை கெய்ரோவின் வீதிகளில் படுகொலை செய்த சிசியை பிரெஞ்சு மற்றும் இத்தாலிய அரசாங்கங்கள் வாழ்த்தி வரவேற்றன. அது, எகிப்தில் அரசியல் எதிர்ப்பை பீதியூட்டவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர மேலெழுச்சியை தாமதப்படுத்தவும், பாரிய படுகொலைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து சிசிக்கு அளிக்கப்பட்ட ஒரு வெளிப்படையான அனுமதி சமிக்ஞையாக இருந்தது.

எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவுக்கு எதிராக பத்து ஆயிரக் கணக்கான அரசியல் கைதிகளும் மற்றும் அவர்களது குடும்பங்களும் ஓர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியிருந்த நிலையில் மற்றும் எஃகுத் துறை தொழிலாளர்கள் ஊதிய நிலுவைகளுக்காக காத்திருக்கின்ற வேளையில், சிசியின் பாரீஸ் பயணம் வந்திருந்தது. சிசியின் இராணுவ ஆட்சிக்குழு 1,400க்கு கூடுதலான மக்களைக் கொன்றுள்ளது, 15,000க்கும் கூடுதலானவர்களை சிறையில் அடைத்துள்ளது. முஸ்லீம் சகோதரத்துவத்திற்கு சிசி தடை விதித்துள்ளார் மற்றும் அதன் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்குப் பாரிய கண்துடைப்பு வழக்குகளின்கீழ் மரண தண்டனை விதித்துள்ளார், அதேவேளையில் பாரியளவில் எரிபொருள் விலை உயர்வுகள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் மீது சிக்கன நடவடிக்கைகளை திணித்துள்ளார்.

ஹோலாண்ட் நிர்வாகம் அந்த எகிப்திய பினோசேயின் கொள்கைகளை ஆதரிப்பதாக தெளிவுபடுத்தியது. சிசியின் விஜயத்திற்கு முன்னதாக, ஹோலாண்டிற்கு நெருக்கமான ஆனால் பெயர் வெளியிட விரும்பாத ஆதாரநபர் ஒருவர் பத்திரிகைக்குக் கூறுகையில்: “ஆம், சிசி சட்டபூர்வதன்மையோடு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஆனால் அதுகுறித்து நிறைய பேச வேண்டி உள்ளது," என்றார்.

நவம்பர் 26இல் சிசியைச் சந்திப்பதில் ஹோலாண்ட் ஜனநாயக உரிமை பிரச்சினைகளை தெளிவுபடுத்த வேண்டியிருக்குமென ஆரம்ப செய்திகள் வாதிட்டன. Reporters Without Borders எனும் அரசுசாரா அமைப்பு, “பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இதழாளர்கள் மீது அதிர்ச்சியூட்டும் விதத்தில் நடத்திய ஒடுக்குமுறை" குறித்து பேசுமாறு ஹோலாண்டிற்கு முறையிட்டு, அவருக்கு ஒரு கடிதம் எழுதியது.

ஆனால், ஹோலாண்ட் சிசியை எலிசே ஜனாதிபதி மாளிகையில் வரவேற்றபோது அத்தகைய பிரச்சினைகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை, பொருளாதார மற்றும் இராணுவ கூட்டுறவு மீது கவனம் ஒருங்குவிந்திருந்தது. சிசி உடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஹோலாண்ட் எகிப்தை "ஒரு சிறந்த நாடு, பிரான்சின் ஒரு மிகப்பெரிய பங்காளி" என்று பாராட்டினார்.

"எகிப்தின் வெற்றியை முழுமையாக அனுமதிக்கும் திட்டத்தை மதித்து, இந்த வழிமுறை, அதாவது ஜனநாயக மாற்றத்திற்கான இந்த வழிமுறை தொடருமென நாங்கள் நம்புகிறோம், இது ஹோலாண்ட் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் கூறியது.

சிசியின் இராணுவ ஆட்சிக்குழு பதவி விலக வேண்டுமென முறையிட்டு முஸ்லீம் சகோதரத்துவம் அழைப்புவிடுத்திருந்த போராட்டங்களில் பங்கெடுத்ததற்காக, "ஒரு தடைசெய்யப்பட்ட குழுவைச்" சேர்ந்தவர்கள் என்று, 13இல் இருந்து 17 வயதிற்குட்பட்ட பருவ வயதடையாதவர்களின் ஒரு குழுவினருக்கு, அலெக்சாண்டரியா நீதிமன்றங்கள் இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுகால சிறை தண்டனையை வழங்கி இருந்த நிலையில், ஹோலாண்டின் ஆத்திரமூட்டும் அக்கருத்துக்கள் வந்தன.

அந்த பேச்சுவார்த்தைகள் பொருளாதாரம், இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டிருந்தன. ஹோலாண்ட் உடனான அவரது பேச்சுவார்த்தைகள் "பயனுள்ளதாக" இருந்ததாகவும், பாரீஸ் மற்றும் கெய்ரோவிற்கு இடையே இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச உறவுகளின் மீது ஒருமித்த கருத்தைப் பிரதிபலித்ததாகவும் அல்-சிசி தெரிவித்தார்.

700 மில்லியன் யூரோ சூயஸ் கால்வாய் உடன்படிக்கை மற்றும் கெய்ரோவின் சுரங்க அமைப்பு முறையை புதுப்பிப்பது உட்பட நூறு மில்லியன் கணக்கில் மதிப்புடைய எகிப்தின் பொருளாதார உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டிருந்ததாக ஹோலாண்ட் தெரிவித்தார். அவரது பயணத்தின் இரண்டாவது நாளில், எகிப்திய பிரதிநிதிகள் குழு உயர்மட்ட பிரெஞ்சு வணிக நிர்வாகிகளைச் சந்தித்தது.

சிசியின் இராணுவ ஆட்சிக்குழுவினது குற்றங்களிலிருந்து தன்னைத்தானே ஓரளவுக்கு விலக்கி வைத்திருப்பதாக காட்டும் அதன் எரிச்சலூட்டும் முயற்சிகளுக்கு இடையே, பாரீஸ் இரத்தக் கறைப்படிந்த எகிப்திய இராணுவத்தை முற்றிலுமாக ஆயுதபாணியாக்க தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரெஞ்சு கப்பல்கட்டும் நிறுவனம் DCNS, எகிப்திய கப்பற்படைக்கு நான்கு வழிதுணைக் கப்பல்களைக் கட்ட 1 பில்லியன் யூரோ ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. அவ்விரு நாடுகளும் பிரெஞ்சு-தயாரிப்பான மிரேஜ் 2000 போர் விமானங்களது எகிப்திய கையிருப்பை புதுப்பிப்பது குறித்தும் விவாதித்து வருகின்றன.

"இந்த உடன்படிக்கை கதவுகளைத் திறந்துவிடுகிறது ஏனென்றால் அது வளைகுடா நாடுகளில் பெரும் ஆர்வத்தை தூண்டிவருகிறது," என்று ஒரு பிரெஞ்சு அரசு அதிகாரி தெரிவித்தார்.

சிசியும் ஹோலாண்டும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" ஒத்துழைப்பதையும் விவாதித்திருந்தனர். "பயங்கரவாதத்திற்கு எதிராக போராட நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்," என்று ஹோலாண்ட் வலியுறுத்தினார்.

"எகிப்து, கடந்த காலத்திலும் சரி இப்போதும் சரி, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாகும், அதுவும் குறிப்பாக சினாய் தீபகற்பம்," ஹோலாண்ட் தெரிவித்தார். “தெற்கு லிபியாவில் பயங்கரவாதிகள் வேரூன்றி வருகிறார்கள், அது அச்சுறுத்தக்கூடும், ஏற்கனவே ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் அச்சுறுத்தி வருகிறது. எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன," என்றார்.

"பயங்கரவாதத்திற்கு எதிராக போர்" தொடுக்கிறோம் என்ற ஹோலாண்டின் போலி வாதங்கள், மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களை ஆக்ரோஷமாக முன்னெடுப்பதற்கான ஒரு மோசடி சாக்குகளாகும், அவ்விடங்களில் அது மாலியில் ஒரு போர் நடத்தி வருகிறது மற்றும் லிபியாவில் ஒரு புதுப்பிக்கப்பட்ட படையெடுப்பை நடத்த அச்சுறுத்தி வருகிறது.

லிபியாவில் இரத்தந்தோய்ந்த குழப்பங்களும் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அதிகரிப்பும், துனிசியா மற்றும் எகிப்தில் பாரிய தொழிலாள வர்க்க மேலெழுச்சிகள் ஏகாதிபத்திய-சார்பு ஆட்சிகளைப் கவிழ்த்த பின்னர், 2011இல் நேட்டோவின் இரத்தந்தோய்ந்த இராணுவ தலையீட்டின் ஒரு நேரடி விளைபொருளாகும். நேட்டோ அதிகாரங்கள், முக்கியமாக பிரான்ஸ் உள்ளடங்கலாக, லிபியா மீது குண்டுவீசின மற்றும் கடாபியை பதவியிலிருந்து இறக்குவதற்காக மற்றும் லிபியாவின் எண்ணெய் மற்றும் நிதியியல் வளங்களைச் சூறையாடுவதற்காக இஸ்லாமிய எதிர்ப்பு போராளிகள் குழுக்களை பொறுப்பில்லாமல் ஆயுதமேந்த செய்தன.

சிசியின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைப் போலவே, இந்த போர்களின் நோக்கமும், ஏற்கனவே இரண்டு இரத்த ஆறை ஓடச் செய்த சர்வாதிகாரிகளை தொழிலாளர்கள் பதவியிலிருந்து இறக்கியுள்ள ஒரு பிராந்தியத்தில், தொழிலாள வர்க்கத்தை பீதியூட்டுவதும் மற்றும் மிரட்டுவதற்காகவும் ஆகும். பயங்கரவாத அச்சுறுத்தல் என்று ஹோலாண்ட் குறிப்பிடும் அந்த வறுமை-பீடித்த சினாய் தீபகற்பம்இராணுவச் சட்டம், எதேச்சதிகார கைது நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஆயிரக் கணக்கானவர்களின் வீடுகளை அழித்த பின்னர் அவர்களை பலவந்தமாக வெளியேற்றிய, சிசி ஆட்சியின் இராணுவ ஆட்சிக்குழுவால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு பயங்கரவாத ஆட்சிக்காலத்தை கண்ட பகுதியாகும்.

கோடைகாலத்தின் போது ஆயிரக் கணக்கான பாலஸ்தீனியர்களின் வாழ்வை பறித்த இஸ்ரேலின் காசா தாக்குதலை இரண்டு அரசாங்கங்களும் ஆதரித்தன, இப்போதோ பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஓர் சமாதான வழிமுறையை ஸ்தாபிக்க அவசியமிருப்பதில் அவர்கள் ஒப்புக் கொண்டிருப்பதாக ஹோலாண்டும் சிசியும் தெரிவிக்கின்றனர். காசா போருக்கு எதிரான நேரடியான போராட்டங்களுக்கு தடை விதித்து, PS அசாதாரணமான நகர்வை எடுத்திருந்தது.

ஹோலாண்டு எரிச்சலூட்டும்ரீதியில் அறிவித்தார், “இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையே சமாதானம் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைகளின் அவசியத்தை எடுத்துக்காட்ட மீண்டும் ஏற்பாடு செய்ய வேண்டும்." உண்மையில், இந்த மோசடி "சமாதான திட்டத்தின்" நோக்கமே, இஸ்ரேல் மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளின் கட்டளைகளுக்கு பாலஸ்தீன பிராந்தியத்தை அடிபணிந்து வைத்திருக்க செய்வதும், அதேவேளையில் அரபு மற்றும் யூத தொழிலாளர் வர்க்கத்தை இனரீதியில் கோடிட்டு பிளவுபடுத்தி வைத்திருப்பதுமே ஆகும்.

நவம்பர் 27 அன்று, அல்-சிசி ஒரு கௌரவ பாதுகாப்புப்படை சூழ, பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்தார். அங்கே அவர், எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சிசியின் வணிக-சார்பு சீர்திருத்தங்களை பாராட்டி இருந்த நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் க்ளோட் பர்க்துலோன் உட்பட சோசலிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்.

பாலஸ்தீன அரசை அங்கீகரித்த ஒரு தீர்மானம் தேசிய நாடாளுமன்றத்தில் நேற்று 339க்கு 151 என்ற வாக்குகளுடன் ஒப்புதலைப் பெற்றது. செனட் அந்த தீர்மானத்தின் மீது டிசம்பர் 11இல் வாக்களிக்க உள்ளது.