World Socialist Web Site www.wsws.org |
Washington denounces Syrian air strikes on ISIS ISIS மீதான சிரியா விமானத் தாக்குதல்களை வாஷிங்டன் கண்டிக்கிறது
By
Peter Symonds சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தை கண்டிக்கவும் மற்றும் அவருடைய அரசை அகற்றுவதற்கும் ISISஇன் (ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசு) கோட்டையாக விளங்கும் ரக்காவின் மீது சிரியா நடத்திய விமான தாக்குதலை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக, ஒபாமா நிர்வாகம் சிரியாவில் அசாத்துக்கு எதிரான போராளி குழுக்களை ஆதரித்துள்ளது. டமாஸ்கசில் ஆட்சி மாற்றமே, அதன் மத்திய கிழக்கு போரின் முக்கிய குறிக்கோளாகும். சிரியாவின் முந்தைய நாள் விமான தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்திகளால் அமெரிக்கா "அதிர்ந்து போனதாக" புதனன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜென் சாக்கி தெரிவித்தார். "அசாத் நீண்ட காலத்துக்கு முன்பே ஆட்சி செய்வதற்கான அனைத்து சட்டபூர்வ தன்மையையும் இழந்துவிட்டார்" என்று அறிவித்து, அவர் சிரிய ஆட்சி “சிரிய பொதுமக்களைத் தொடர்ச்சியாக படுகொலை செய்வதையும்" மற்றும் "மனித வாழ்க்கையை இரக்கமின்றி அசட்டை செய்வதற்கும்" கண்டனம் தெரிவித்தார். பிரிட்டனை தளமாக கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகத்தின் கூற்றுப்படி, செவ்வாயன்று 52 பொதுமக்கள் உள்பட 95 பேர் விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர். "பொதுவாக நகரில் ஒரேயொரு மருத்துவமனை தான் செயல்படுகிறது" என்பதால் மேலதிகமாகவும் இறப்புகள் ஏற்படக்கூடும், அத்துடன் "அதிகளவிலான மக்கள் காயங்களால் உயிரிழந்து வருகிறார்கள்" என்று சிரிய எதிர்ப்பு வலையமைப்பு —உள்ளூர் ஒருங்கிணைப்பு குழுக்கள்— தொடர்புபட்ட ரக்காவைச் சேர்ந்த நடவடிக்கையாளர் ஒருவர் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறினார். அசாத் மற்றும் ISIS இரண்டுக்குமே விரோதமாக உள்ள, மேற்கத்திய ஆதரவு எதிர்ப்புடன் இரண்டு அமைப்புகளுமே அணிசேர்ந்துள்ளன. எந்தவொரு நிலைப்புள்ளியிலிருந்தும் சாக்கியின் விமர்சனங்கள் முற்றிலும் எரிச்சலூட்டக்கூடியதாக உள்ளன. சிரியா மற்றும் ஈராக்கில், அத்துடன் ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலும் கூட, அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகளின் போர் விமான தாக்குதலில் ஏற்படும் பொதுமக்கள் மரணங்களின் ஆதாரங்களை, நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்களாக இருந்தபோதுமே கூட, பெண்டகன் வழக்கமாக அவற்றைத் தள்ளுபடி செய்துவிடுகிறது. பொதுமக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக புறக்கணித்து, அது அதன் போலியான "தீவிரவாதத்திற்கு எதிரான போரை" நடத்தி வருகிறது. முன்னதாக, சிரியாவில் அமெரிக்க தலைமையிலான கூட்டணி நாடுகளின் விமான தாக்குதல்களில் 5 பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் உட்பட, குறைந்தது 52 பொதுமக்கள் கொல்லப்பட்டதை குறிப்பிட்டுக்காட்டி, அதே சிரியாவிற்கான மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சனியன்று புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அவ்வமைப்பின் அரசியல் அனுதாபங்களுக்கு இடையே, அந்த எண்ணிக்கை அனேகமாக ஒரு குறைமதிப்பீடாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆச்சரியத்திற்கிடமின்றி, அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த மரணங்களைக் கொடூரமானதாக அறிவிக்கவில்லை. ரக்காவில் ஏற்பட்ட மரணங்கள் முற்றிலும் சிரிய விமான படையால் மட்டுமே ஏற்பட்டதா என்பதே தெளிவாக இல்லை. அமெரிக்க போர்விமானங்கள் மிக சமீபத்தில் திங்களன்று அந்நகரத்தின் மீது குண்டு வீசின. "செவ்வாயன்று ரக்காவில் அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகள் விமான தாக்குதல்கள் நடத்தியிருக்கின்றனவா என்பது தெளிவாக இல்லை" என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்ணலின் அறிக்கை ஒன்று குறிப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை மற்றும் அதில் எவ்வளவு பேர் அப்பாவி பொதுமக்கள் அல்லது இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் என்பதும் தெளிவாக வில்லை.” "ரக்கா நகர உள்ளூர்வாசிகளை தீவிரவாதிகளிலிருந்து வேறுபடுத்துவது பெரும்பாலும் கடினமானதாக இருப்பதாக" அது குறிப்பிட்டது. ரக்கா நகர நடவடிக்கையாளர் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: “விமான தாக்குதலுக்கு பின்னர் அந்நகரத்திலிருந்த எல்லா சந்தைகளும் அடைக்கப்பட்டு விட்டன. தெருக்களில் யாரும் நடமாடவில்லை ... அவர்கள் அச்சத்துடன் இருந்தார்கள் ஏனென்றால் காலையில் அந்த ஆட்சியின் விமான தாக்குதல்கள் இருந்ததாகவும், மாலையில் [அமெரிக்க தலைமையிலான] கூட்டணியின் விமான தாக்குதல்கள் இருந்ததாகவும், அத்துடன் இஸ்லாமிய அரசின் [ISIS] கீழ் வாழ்க்கை நடத்துவது மிக மிக கடினமான இருப்பதாகவும்" அவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க மத்திய கட்டளைப்பிரிவின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை ரக்கா மற்றும் சிரிய குர்திஷ் நகரமான கோபேன் உள்பட சிரியா மற்றும் ஈராக்கில் அதன் போர் விமானங்கள் 41 முறை விமான தாக்குதல்களை நடத்தி இருந்தன. ஈராக் மற்றும் சிரியாவில் தரைக்கருகில் பறந்து குண்டுவீச்சு வேட்டை நடத்த ஆப்கனிஸ்தானிலிருந்து குவைத்துக்கு A-10 தண்டர்போல்ட் ஜெட் போர் விமானங்களின் படைப்பிரிவையும், அத்துடன் ஏவுகணை தாங்கிய கூடுதலாக ஆறு ரீப்பர் ட்ரோன்களையும் சமீபத்தில் அமெரிக்கா கொண்டு வந்திருந்ததாக வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா இணைய தளம் நேற்று செய்தி வெளியிட்டது. ஈராக்கின் உள்ளே, மேற்கு அன்பார் மாகாணத்தில், அதன் பெரும்பகுதி ஏற்கனவே ISIS கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்ற நிலையில், ரமாதி நகரின் கட்டுப்பாட்டை தக்கவைக்க அமெரிக்க-ஆதரவு அரசு படைகள் சண்டையிட்டு வருகின்றன. அம்மாகாணத்தின் தலைநகரைக் கைப்பற்ற இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ISIS போராளிகள் ஒரு தாக்குதலை நடத்தி இருந்தார்கள். புதன்கிழமை அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, ISIS போராட்டக்காரர்கள் பின்வாங்க செய்யப்படுவதற்கு முன்பாக, பல நூறு மீட்டர்கள் வரை ஆளுனரின் மாளிகையை நோக்கி முன்னேறி இருந்தார்கள். வடக்கு மாகாணத்தின் கிர்குக்கில் குர்திஷ் பெஷ்மெர்கா படைகளும், ISISஇன் ஒரு பிரதான தாக்குதலைத் தடுப்பதில் கடுமையான சண்டையில் ஈடுபட்டிருந்தன. சிக்கலுக்கு உள்ளான உறவுகளை ஒட்டுப்போட முயற்சிக்கவும் மற்றும் ஈராக் மற்றும் சிரியாவில் போருக்காக துருக்கியின் அதிகபடியான ஆதரவைக் கோரவும் கடந்த வார இறுதியில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பைடென் துருக்கிக்கு விஜயம் செய்தார். டமாஸ்கஸில் ஆட்சியை மாற்றுவதற்கு இன்னும் வெளிப்படையாக அழைப்பு விடுக்குமாறும், அத்துடன் சிரியாவிற்குள் ஓர் இடைத்தடை மண்டலம் மற்றும் விமானர் பறக்கத் தடைவிதிக்கப்பட்ட பகுதி ஒன்றை அறிவிக்குமாறும் துருக்கி அரசாங்கம் அமெரிக்காவுக்கு அழுத்தம் அளித்துள்ளது. துருக்கியில் தடைவிதிக்கப்பட்ட பிரிவினைவாத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் (PKK) குர்திஷ் போராளிகள் குழுக்கள் இணைந்திருப்பதன் காரணமாக, கோபேனைக் கைப்பற்றுவதில் அவற்றிற்கு ஒத்துழைக்க துருக்கி தயங்கி வருகிறது. துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகனுடனை சந்தித்தப் பின்னர் பைடென் ஊடகங்களுக்குக் கூறுகையில், சிரியாவில் ISISஐ ஒழிப்பதற்கு மட்டுமல்ல, "சிரியாவிற்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்தவும் மற்றும் அசாத் ஆட்சியிலிருந்து ஒரு மாற்றத்தை உறுதிபடுத்தவும்" அவர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். மத்திய துருக்கி நகரமான கேசிஹெரில் (Kirsehir) உள்ள ஒரு படைத்தளத்தில் 2,000 "மிதவாத சிரிய எதிர்ப்பு போராளிகள்" பயிற்சி அளிப்பதில் அமெரிக்க படைகளுடன் அது கூட்டு பணியாற்றுமென துருக்கிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. ISISக்கு எதிராக சண்டையிடுவதற்காக, ஈராக்கில் தேசிய பாதுகாப்புப்படை பிரிவுகளுக்கு பயிற்சியளிக்கவும் மற்றும் ஆயுதமேந்த செய்யவும் அது ஆயத்தமாக இருக்குமென்றும் துருக்கி சுட்டி காட்டியுள்ளது. சிரியாவில் ISISஇன் வளர்ச்சியை துருக்கி ஊக்கப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டிய போது, பைடென் கடந்த மாதம் எர்டோகனுடன் மோதலில் இருந்தார். அதேநேரம் துருக்கி, ISIS மற்றும் அல் கொய்தா இணைப்பு கொண்ட நுஸ்ரா முன்னணி போன்ற வலதுசாரி இஸ்லாமிய அமைப்புகளால் அதிகாரம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சிரிய எதிர்ப்பு போராளிகளை நிச்சயமாக துருக்கி ஆதரித்துள்ளது என்றபோதினும், அது மட்டுமே அவ்வாறு செய்திருக்கவில்லை. அசாத்துக்கு எதிரான படைகளுக்கு பயிற்சியளித்தல், நிதியளித்தல் மற்றும் ஆயுத உதவி அளித்தல் ஆகியவற்றில் அமெரிக்காவும் மற்றும் அதன் ஏனைய மத்திய கிழக்கு கூட்டாளிகளுமே நெருக்கமாக ஈடுபட்டுள்ளன. சிரியாவிலுள்ள எதிர்ப்பு படைகளுக்கு துணை நிற்கவும் மற்றும் ஆயுத உதவி செய்வதற்கும் துருக்கிக்கு உள்ளேயே சிஐஏ ஒரு படைத்தளத்தைப் பராமரித்து வருகிறது. வளைகுடா நாடான கட்டாரில், ஒரு முகாமில் அசாத்-எதிர்ப்பு போராளிகளுக்கு மறைமுகமாக பயிற்சியளிப்பதில் சிஐஏ ஈடுபட்டிருந்தது என்பதை புதனன்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. கட்டாரினது சிறப்புப் படைகளால் பாதுகாக்கப்பட்ட ஒரு இராணுவ மண்டலத்திற்கு உள்ளே பாலைவன முகாம் அமைந்துள்ளது. இத்திட்டம் ஒரு வருட காலமாக நடந்துக்கொண்டிருக்கிறது, அத்துடன் மேற்கத்திய ஆதரவு சுதந்திர சிரிய இராணுவத்துடன் (FSA) இணைந்த 12 முதல் 20 போராளிகளைக் கொண்ட சிறிய குழுக்கள் அதில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி: “சமீபத்திய வாரங்களில், கட்டாரைச் சேர்ந்தவர்கள், அசாத்துக்கு எதிரான போரில் போதிய முன்னேற்றமின்றி அதிருப்தி அடைந்து, மற்றொரு இஸ்லாமிய போராளி குழுவான இஸ்லாமிக் முன்னணியின் உறுப்பினர்களுக்கு பயிற்சியளிக்க பரிசீலிக்க தொடங்கி உள்ளனர்.” ISIS மற்றும் "மிதவாத" அசாத்-எதிர்ப்பு போராளிகளுக்கு இடையே வேறுபாடு இருப்பதாக அமெரிக்கா வாதிட்டு வருகின்ற போதினும், இந்த படைகள் பொதுவாக நெருக்கமாக இணைந்து பணியாற்றி உள்ளன. மேற்கத்திய ஆதரவு FSAகளுக்கு விநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள், இஸ்லாமியப் போராளிகளின் கைகளில் போய் சேர்ந்துள்ளன. திங்களன்று கார்டியனில் வெளியான ஒரு கட்டுரையின்படி, இப்பொழுது சிரியாவிற்கு உள்ளே அமெரிக்காவின் விமான தாக்குதல்களுக்கு பொதுமக்களிடையே நிலவும் எதிர்ப்பலைக்கு நடுவே, FSAஇன் பிரிவுகள் ISISஇன் சார்பாக சென்று கொண்டிருக்கின்றன. இதுபோன்ற கட்சித்தாவல்களை தடுத்தும் நிறுத்தும் ஒரு முயற்சியில், விரைவிலேயோ அல்லது தாமதமாகவோ, அசாத் மீது பகிரங்கமான போரை அறிவிக்க மட்டுமே அவை அமெரிக்காவை ஊக்குவிக்கும். |
|