World Socialist Web Site www.wsws.org |
The official cover-up of social and political issues in the police murder of Michael Brown மைக்கேல் பிரௌன் பொலிஸ் படுகொலையில் உள்ள சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளின் உத்தியோகப்பூர்வ மூடிமறைப்பு
Andre
Damon அந்த நிராயுதபாணியான 18 வயது இளைஞரின் பொலிஸ் படுகொலை மீதெழுந்த பரந்த சீற்றத்தின் ஒரு வெளிப்பாடாக, திங்களன்று மைக்கேல் பிரௌனின் இறுதிஅஞ்சலி சடங்கில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் பங்கெடுத்தனர். ஆனால் அதில் ஒபாமா நிர்வாகத்தின் மூன்று பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளர் அல் ஷார்ப்டன் தலைமையில் நடந்த அந்த இறுதிஅஞ்சலி நிகழ்வே கூட, முற்றிலுமாக ஸ்தாபகமயப்பட்ட ஒரு வலதுசாரி நிகழ்வாக இருந்தது. ஷார்ப்டனின் அமைப்பால் நடத்தப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட அந்த நிகழ்வின் நோக்கமே, பிரௌன் படுகொலையால் மேலெழுந்த வர்க்க பிரச்சினைகளை மழுங்கடிப்பதும், மிசோரி ஃபேர்குஷனில் நடைமுறைப்படுத்தப்பட்ட இராணுவ சட்டத்தை சட்டபூர்வமாக்குவதும், மற்றது சமூக எதிர்ப்பை அரசியல் ஸ்தாபகத்தின் பின்னால் திருப்பி விடுவதுமேயாகும். பிரௌன் படுகொலையை ஒட்டி தன்னியல்பாக வெடித்த போராட்டங்களுக்கு ஆளும் வர்க்கம் இரு-முனை மூலோபாயத்தோடு விடையிறுப்பு காட்டி இருந்தது. முதலில், தானியங்கி ஆயுதங்கள் ஏந்திய, கவச வாகனங்களை ஓட்டி வந்த, மற்றும் அமைதியான போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள், இரப்பர் தோட்டாக்களைச் செலுத்திய, பீன் பைகளைத் தலை மீதெறிந்த இராணுமயமாக்கப்பட்ட SWAT குழுக்கள் உட்பட, அரசு ஒடுக்குமுறை எந்திரத்தை ஒன்றுதிரட்டியது. அந்த பொலிஸ் ஒடுக்குமுறையில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சமூக எதிர்ப்புக்கு விடையிறுப்பாக ஒரு அமெரிக்க நகரின் மீது பொலிஸ்-அரசு நிலைமைகளைத் திணிப்பதற்கு ஃபேர்குஷன் ஒரு பரிசோதனை சம்பவமாக ஆக்கப்பட்டிருந்தது. இதழாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்; கைது செய்யப்பட்டார்கள்; தாக்கப்பட்டார்கள். தேசிய பாதுகாப்புப்படை அழைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, ஜனநாயக கட்சியின் ஆளுநர் ஜேய் நிக்சனின் உத்தரவுப்படி "அவசரகால நிலையின்" கீழ் துல்லியமாக ஒன்றுகூடுவதற்கான அரசியலமைப்பு உரிமை நீக்கப்பட்டது. எவ்வாறிருந்த போதினும் இந்த படுமோசமான ஒடுக்குமுறையும் கூட போராட்டங்களை மவுனமாக்க போதுமானதாக இருக்கவில்லை. இதனால் ஆளும் வர்க்கத்தின் இரண்டாவது முனை மூலோபாயம் தேவைப்பட்டது. இனவாத அரசியலை ஊக்குவிக்கவும் மற்றும் போராட்டங்களை பாதுகாப்பான வழியில் திருப்பிவிடவும் உள்ளூர் போதகர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளோடு சேர்ந்து ஷார்ப்டன் போன்ற பிரபலங்கள் அணிதிரட்டப்பட்டார்கள். ஒபாமா நிர்வாகம் ஒரு ஆபிரிக்க அமெரிக்கரான அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டரை ஃபேர்குஷனுக்கு அனுப்பியது, மற்றும் பொலிஸ் விடையிறுப்புக்கு தலைமையெடுக்க ஆளுநர் நிக்சன் நெடுஞ்சாலைத்துறை ரோந்துப்படை தலைவராக ரோன் ஜோன்சனை நியமித்தார், இவரும் ஒரு ஆபிரிக்க அமெரிக்கராவார். இந்த இரண்டு மூலோபாயமுமே ஷார்ப்டனால் வழங்கப்பட்ட இறுதிஅஞ்சலி புகழாரத்தில்—அவர் என்ன கூறினாரோ அதிலும், அவர் என்ன கூறாமல் விடுத்தாரோ அதிலும், இரண்டிலும்—வெளிப்பாட்டைக் கண்டது. அந்த முன்னொரு-காலத்திய FBI உளவாளி, முதலாளித்துவ அரசின், அதாவது பிரௌனைக் கொன்ற மற்றும் அதையடுத்து நிகழ்ந்த போராட்டங்களை நசுக்க முனைந்த அந்த சக்திகளின் ஒரு தூதுவராக அல்லாமல், ஃபேர்குஷன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு பங்காளியைப் போன்று உரையாற்றினார். பிரௌன் (மற்றும் நாடெங்கிலும் இன்னும் இதர நூற்றுக்கணக்கானவர்கள் பொலிஸால் கொல்லப்பட்டதன் அடியிலிருக்கும்) மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பாரிய ஒடுக்குமுறைக்கு அடியிலிருக்கும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் குறித்த எந்தவொரு குறிப்புகளும் இல்லாமல் இருந்ததே, ஷார்ப்டனின் கருத்துக்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஃபேர்குஷனிலும் மற்றும் நாடெங்கிலும் உள்ள நகரங்களிலும் குணாம்சப்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை குறித்தோ, அல்லது சமூக கோபம் மற்றும் கிளர்ச்சிகளை ஒடுக்க அதிகளவில் வன்முறை வழிவகைகளை பயன்படுத்துவற்கு ஆளும் வர்க்கத்தை உந்திச்செல்லும் ஆழ்ந்த சமூக சமத்துவமின்மை குறித்தோ அங்கே எந்தவொரு குறிப்பும் வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக, ஷார்ப்டன் பொதுவாக ஆபிரிக்க-அமெரிக்க இளைஞர்களுக்கு எதிரான மற்றும் குறிப்பாக ஃபேர்குஷனில் போராட்டக்காரர்களுக்கு எதிரான கீழ்தரமான கேலிச்சொற்களுக்கு அவரது கருத்துரையில் நிறைய இடங்கொடுத்திருந்தார். “சேரிப்பிரதேசங்களில் அவலட்சணமான விருந்துகளில்" நிறைய மக்கள் "சுற்றி உட்கார்ந்து கொள்கிறார்கள்" என்று அவர் குறை கூறினார். அவரையும் போன்ற ஆபிரிக்க அமெரிக்கர்களின் ஒரு பிரிவு "அதிகாரத்தின் சில இடங்களில் இடம் பெற்றிருக்கிறது" என்ற உண்மையை பீற்றிக்கொண்டு, “கறுப்பர்களாக இருந்தால் வெற்றியடைய முடியாது" என்று கூறுபவர்களைக் கண்டித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இப்போது நீங்கள் ஒரு n****rஆக இருக்க விரும்புவீர்களா, உங்கள் மனைவியை ஒரு விபச்சாரியாக அழைக்க விரும்புவீர்களா,” என்றார். அத்தகைய வெறுப்பில் ஊறிய கீழ்தரமான கருத்துக்கள், அரசை பகிரங்கமாக நியாயப்படுத்துவதோடு இணைந்திருந்தது. “நாம் பொலிஸிற்கு-விரோதமானவர்கள் இல்லை, நாம் பொலிஸை மதிக்கிறோம்," என்று ஷார்ப்டன் வலியுறுத்தினார். பிரௌன் போன்ற இளைஞர்களின் படுகொலை ஒருசில "தீயவர்களின்" விளைவு மட்டும்தான் என்று அறிவித்த அவர், இன்னும் நிறைய ஆபிரிக்க-அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளைக் கொண்டு அதை சரிசெய்ய முடியுமென்றார். பிரௌன் படுகொலை மீதான போராட்டங்களுக்கு எதிரான பாரிய இராணுவ-பொலிஸ் விடையிறுப்பு குறித்து எந்தவொரு விமர்சனத்தையும் தவிர்த்து கொண்ட ஷார்ப்டன், அரசின் ஒடுக்குமுறையை நியாயப்படுத்த அதனால் பயன்படுத்தப்பட்ட எல்லா கூறுபாடுகளையும் மீண்டும் உரைத்தார். “சக மக்கள் கொள்ளையடிப்பதையும் கலகம் செய்வதையும் நிறுத்தக்கோரி முறையிட" பிரௌனின் பெற்றோர்கள் "அவர்களின் இழப்புக்கான வருத்தத்தைக் கைவிட வேண்டியிருக்குமென்ற" உண்மை குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “மைக்கேல் பிரௌன் நிறைய தொந்தரவுகளுக்காக நினைவுக்கூரப்படுவார்," என்றுரைத்தார். பொலிஸ் மற்றும் இராணுவத்தின் சொற்களஞ்சியத்தின் பாகமாக இருக்கும் "தொந்தரவுகள்" என்ற சொல்லின் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாகும், போராட்டங்கள் முறைகேடானது என்பதை அது உள்ளடக்கி இருக்கிறது. போராட்டக்காரர்களின் வன்முறைக்கு பொலிஸ் ஒடுக்குமுறை ஒரு அவசியமான விடையிறுப்பாக இருந்தது என்பதை ஷார்ப்டன் உட்குறிப்பாக வைத்திருந்தார். ஃபேர்குஷனில் தேசிய பாதுகாப்புப்படையை நிலைநிறுத்தியதோடு, ஒபாமா மீண்டுமொருமுறை ஈராக்கில் அமெரிக்க இராணுவ ஈடுபாட்டை பலப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், உள்நாட்டு ஒடுக்குமுறைக்கும் ஆக்ரோஷமான வெளிநாட்டு யுத்தங்கள் நடத்துவதற்கும் இடையில் இருந்த தொடர்புகளைக் குறித்து, அந்த உண்மையை நிராகரித்ததுடன், அவர் குறிப்பிடவே இல்லை, இதை உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசுகையில் ஃபேர்குஷன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். பொலிஸ் ஒடுக்குமுறைக்கு ஷார்ப்டனின் ஆதரவு, அவர் என்னவாக இருக்கிறார் என்பதைப் பிரதிபலிக்கிறது: ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பெரும் பெரும்பான்மை மக்கள் அவர்களின் வாழ்க்கைத் தரங்கள் சரிவதைக் கண்டு வருகின்ற நிலையிலும் கூட பெரும் செல்வத்தைச் சுருட்டியுள்ள பெருநிறுவன ஸ்தாபகம் மற்றும் மத்திய மேல்தட்டு வர்க்கத்தின் ஒரு பிரிவின் பிரதிநிதியாக மற்றும் அரசின் ஒரு முகவராக இருக்கிறார். இந்த தனிச்சலுகைமிகுந்த மற்றும் ஊழல்நிறைந்த சமூக அடுக்கு சமூகத்தில் உள்ள அடிப்படை வர்க்க பிளவுகளை மூடிமறைக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்குள் பிரிவினைகளை விதைப்பதற்கும் நீண்டகாலமாகவே அடையாள அரசியலை ஊக்குவித்து வந்திருக்கிறது. குறிப்பாக, ஷார்ப்டன் ஒபாமா நிர்வாகத்தினது ஒரு பிரதிநிதியாக பேசினார். அவர் வெள்ளை மாளிகையுடன் அவரது நடவடிக்கைகளை மற்றும் கருத்துக்களை ஒருங்கிணைத்து, நிர்வாகத்தினது அதிகாரிகளுடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்துள்ளார். பொலிஸின் இராணுவமயமாக்கலை அதிகரித்து வந்திருக்கின்ற அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ஒரு நிர்வாகமாக மற்றும் சமூக சமத்துவமின்மையின் பாரிய அதிகரிப்பை மேற்பார்வையிட்டுள்ள ஒரு நிர்வாகமாக இருக்கிறது. சமூக எதிர்ப்பின் எந்தவொரு வெளிப்பாட்டுக்கும் நிதியியல் பிரபுத்துவம் ஒடுக்குமுறையோடு எதிர்வினையாற்றுகிறது. 1960களில், ஆளும் வர்க்கம் நகர்புற மேலெழுச்சிகளுக்கு வன்முறையோடு விடையிறுப்புக் காட்டியது, ஆனால் சமத்துவமின்மை மற்றும் வறுமை ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதிகளும், மட்டுப்படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் அதைப் பின்தொடர்ந்திருந்தன. இன்றோ, மேலதிகமான ஒடுக்குமுறையைத் தவிர ஆளும் வர்க்கத்திடம் கொடுப்பதற்கு வேறொன்றும் இல்லை. ஃபேர்குஷன் சம்பவங்கள் அமெரிக்காவில் நிலவும் சமூக உறவுகளின் வெடிப்பார்ந்த குணாம்சத்ததின் ஒரு வெளிப்பாடாக இருக்கின்றன. நிதியியல் பிரபுத்துவம் பகிரங்கமாக வர்க்க மோதல் வெடிப்பதன் புரட்சிகர தாக்கங்கள் குறித்து பீதியுற்றுள்ளது. இதனால் அது ஒருபுறம் வன்முறையில் தங்கியுள்ளது, மறுபுறம் திசைதிருப்புதல்கள் மற்றும் பொய்களுடன் அரசுக்கு ஒத்தாசை செய்யும் ஷார்ப்டன் மற்றும் "மக்கள் உரிமைக்காக போராடும்" தலைவர்கள் என்றழைக்கப்படும் ஏனையவர்களை நம்பியுள்ளது. |
|