World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The German intervention in Iraq

ஈராக்கில் ஜேர்மன் தலையீடு

By Johannes Stern
28 August 2014

Back to screen version

ஈராக்கில் ஜேர்மன் தலையீடானது, அந்நாடு ஆக்ரோஷமான வல்லரசு அரசியலை நோக்கி திரும்புவதன் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

கடந்த ஞாயிறன்று பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனம் ARD உடனான நேர்காணலில் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஈராக்கிற்கு ஆயுதங்கள் வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை, அதாவது ஒரு யுத்த பிராந்தியத்திற்கு முதல்முறையாக அதுபோன்று ஆயுதங்கள் அனுப்பும் அந்த முடிவை 1990இல் மறுஐக்கியத்திற்குப் பின்னர் ஜேர்மன் அரசாங்கங்கள் எடுத்த ஏனைய தொடர்ச்சியான பல "முக்கிய தீர்மானங்களோடு" ஒன்றாக கொண்டு வந்து நிறுத்தினார். "யூகோஸ்லாவியா மீதான நேட்டோ நடவடிக்கையில் பங்குபெற்றமை" மற்றும் "செப்டம்பர் 11க்குப் பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு போரிடும் துருப்புகளை அனுப்பியமை" ஆகியவற்றையும் அவற்றில் மேர்க்கெல் சேர்த்துக் கொண்டார்.

அந்த அரசாங்கம் வடக்கு ஈராக்கில் குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகள் குழுக்களுக்கு ஆயுதங்களையும் அத்தோடு மரணம் விளைவிக்காத தளவாடங்களையும் அனுப்ப முடிவெடுத்தது. விபரங்கள் தெளிவின்றி இருக்கின்றன, ஆனால் டாங்கிகளைத் தகர்க்கும் "மிலான்" (“Milan”)  ஏவுகணைகளை ஜேர்மனி அனுப்புமென கருதப்படுகிறது. ஹெக்லெர் மற்றும் கொக் (Heckler, Koch) நிறுவனங்களின் நவீன G36 தாக்கும் துப்பாக்கிகளை அனுப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. குர்திஷ் போராளிகளுக்கு பயிற்சியளிக்க ஜேர்மன் இராணுவ ஆலோசகர்களை அனுப்புவதையும் மேர்கெல் நேர்காணலில் விட்டுவிடவில்லை.

ஜேர்மன் ஆயுதங்களையும் ஒருவேளை துருப்புகளையும் ஈராக்கிற்கு அனுப்புவதென்பது, 2014இன் தொடக்கத்தில் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயனால் அறிவிக்கப்பட்ட வெளியுறவு கொள்கை மாற்றத்தின் அண்மைக்கால உச்சகட்டமாக இருக்கிறது. "முதலாவதாக, இன்னும் தீர்க்கமாக மற்றும் இன்னும் போதுமான அளவுக்கு" உலகெங்கிலும் ஜேர்மன் தலையீடு செய்வதற்கு அவர் விடுத்திருந்த அழைப்பை, அரசியல் வாரயிதழான Die Zeitஇன் சமீபத்திய பதிப்பில் அளித்த ஒரு நேர்காணலில் வொன் டெர் லெயன் மீண்டும் வலியுறுத்தினார்.

காசோலை புத்தக அரசியல் நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது," அந்த பாதுகாப்பு மந்திரி தெரிவித்தார். “நாம் ஒரு தீவில் வாழவில்லை. விடயங்கள் நம்மை பாதிக்கின்றன. நாம் பொருளாதாரத்திலும் மற்றும் அரசியலிலும் உலகளவில் செயல்பட வேண்டுமானால், பின் நாம் பாதுகாப்பு கொள்கையில் உலகெங்கிலும் இருந்து சவாலுக்கு உட்படுவோம்," என்று கூறிய அப்பெண்மணி தொடர்ந்து கூறுகையில், “பின்னடிப்பபவர்களுக்கு செல்வாக்கு இருக்காது," என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஒருவரால் இதைவிட இன்னும் தெளிவாக முறைப்படி எடுத்துக்காட்ட முடியாது. பல ஆண்டுகளாக ஒப்பீட்டளவில் கட்டுப்பாடுகளுக்குள் இருந்த பின்னர், ஜேர்மனி இப்போது இராணுவ வழிவகைகளைக் கொண்டு அதன் உலகளாவிய பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களை உறுதிப்படுத்திக்கொள்ள தலையீடு செய்து வருகிறது. ஆக்ரோஷமான ஜேர்மன் ஏகாதிபத்தியம் எந்தளவிற்கு வேகமாக திரும்பியுள்ளதென்பது மூச்சடைக்க வைக்கிறது.

2003இல் சமூக ஜனநாயகக் கட்சி (SPD)-பசுமை கட்சி அரசாங்கம், சர்வதேச சட்டத்தைமீறி நடத்தப்பட்ட ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க யுத்த ஆக்கிரமிப்பில் உத்தியோகபூர்வமாக பங்கெடுக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தான், கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU)- சுதந்திர ஜனநாயக கட்சி (FDP) அரசாங்கம், வெளியுறவுத்துறை மந்திரி கீடோ வெஸ்டெர்வெலவின் கீழ், லிபியா மீதான நேட்டோ தாக்குதலைத் தவிர்த்திருந்தது.

ஆனால் பின்னர் விடயங்கள் வேகமாக நகர்ந்தன. வெஸ்டெர்வெல்லவிற்குப் பதிலாக ஸ்ரைன்மையர் கொண்டு வரப்பட்டார். கௌவ்க் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். மூனிச் பாதுகாப்பு மாநாட்டு உரைகளுக்கு வெறும் ஒருசில வாரங்களுக்குப் பின்னர், பேர்லின், வாஷிங்டன் உடனான நெருக்கமான ஒத்துழைப்போடு, கியேவில் மேற்கத்திய-சார்பிலான கைப்பாவை ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வர மற்றும் ரஷ்யாவைப் பலவீனப்படுத்த உக்ரேனில் ஒரு பாசிச-தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பை ஒழுங்கமைத்தது.

இப்போது, மூலோபாயரீதியில் முக்கியத்துவம் கொண்டதும், மூலவளங்களும் நிறைந்த ஒரு பிராந்தியமான மத்தியகிழக்கை மீள்பங்கீடு செய்வது மற்றும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்த பிரச்சினையின் மீது ஜேர்மன் முதலாளித்துவம் ஒதுங்கியிருக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.

ஜேர்மனியின் புதிய இராணுவவாத கொள்கை, மக்களுக்கு எதிரான ஆளும் மேற்தட்டின் சூழ்ச்சியினது ஒரு விளைபொருளாகும். ஜேர்மனியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஈராக்கிற்கான ஆயுத ஏற்றுமதிகளை எதிர்க்கிறார்கள் என்பதை எல்லா கருத்துக்கணிப்புகளும் காட்டுகின்ற போதினும், அந்த கொள்கை நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிகளாலும் மற்றும் ஊடகங்களின் குறிப்பிடத்தக்க பிரிவுகளாலும் மும்முரமாக நியாயப்படுத்தப்படுகின்றது. பசுமை கட்சியும் இடது கட்சியும் ஆயுதங்கள் அனுப்புவதற்கு மிகவும் தீவிரமான ஆதரவாளர்களாக இருக்கின்றன, எதிர்கட்சிகளான அவ்விரு கட்சிகளுமே யுத்த சூழ்ச்சிகளுக்குள் முழுமையாக ஒருங்கிணைந்துள்ளன.  

நாஜி பிரச்சாரத்தின் பழைய மொழிநடையை நினைவூட்டும்வகையில், பசுமை கட்சியைச் சார்ந்த taz பத்திரிகை "குர்திஷ்தானுக்கு ஆயுதங்கள்" என்ற தலைப்பில் பிரசுரித்த ஒரு கட்டுரை, “இத்தகைய தான்தோன்றித்தனமான படுகொலையாளர்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் பதிலளித்தால் மட்டும் தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியும். அந்த 72 கன்னிப்பெண்களை தேடும் பயணத்தை (தம்மை அர்ப்பணித்துக்கொள்பவர்களுக்கு 72 கன்னிப்பெண்கள் கிடைப்பார்கள் என்ற புராதனகதை) அழிப்பது மட்டுமே அவர்களை நிறுத்துவதற்கான ஒரே வழியாகும்," என்று குறிப்பிட்டது.

ஏற்கனவே கடந்த ஏப்ரலில், இடது கட்சியின் பிரதிநிதிகள் ஏனைய கட்சிகளோடு சேர்ந்து சிரியாவில் ஜேர்மன் இராணுவத்தின் தலையீட்டிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இப்போதோ, இடது கட்சி நாடாளுமன்ற பிரிவின் தலைவர் கிரிகோர் கீசி ஈராக்கிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதற்கு கோரிக்கை விடுப்பதில் முதலிடத்தில் இருந்தார்.

பழமைவாத பத்திரிகை Frankfurter Allgemeine Zeitung ஈராக் மோதல்: ஆயுத ஏற்றுமதிகளுக்காக இடது கட்சிக்கு நன்றி," என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தைப் பிரசுரிக்கும் அளவுக்கு, ஈராக்கில் ஜேர்மனியின் தலையீட்டில் இடது கட்சியின் பாத்திரம் மிகவும் தீர்மானகரமாக இருந்துள்ளது

ஜேர்மனியின் புதிய இராணுவவாத கொள்கைக்கு பின்னால் என்ன இருக்கிறது? முந்தைய நூற்றாண்டின் அதன் குற்றங்களுக்குப் பின்னர் ஜேர்மன் முதலாளித்துவம் இன்று இந்தளவிற்கு உறுதியாக தாக்குதலுக்கு செல்வதை எவ்வாறு விளங்கப்படுத்துவது

முதலாம் உலக போருக்கு முன்னதாக, 100 ஆண்டுகளுக்கு முன்னர், மற்றும் இரண்டாம் உலக போர் வெடிப்பதற்கு முன்னதாக, 75 ஆண்டுகளுக்கு முன்னர் செய்ததைப் போலவே, ஜேர்மன் ஆளும் வர்க்கம் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஓர் ஆழ்ந்த நெருக்கடிக்கு யுத்தம் மற்றும் இராணுவவாதத்தைக் கொண்டு விடையிறுப்பு காட்டிவருகிறது. கிழக்கு ஜேர்மனியில் முதலாளித்துவம் மறுஅறிமுகம் செய்யப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், உலகளாவிய பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடி வெடித்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும், சர்வதேச ஒழுங்குமுறை 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளிலும் மீண்டும் 1930களிலும் இருந்ததைப் போலவே அதேபோல ஸ்திரமின்றி இருக்கிறது.

1914லும் மற்றும் 1939லும் ஜேர்மனி இரண்டு முறை அதன் ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்க இராணுவ வழிவகைகளைக் கொண்டும் மற்றும் வன்முறையாகவும் உலகை அதன் மேலாதிக்கத்திற்கு அடிபணியச் செய்ய முயன்றது

இன்றோ, மீண்டுமொருமுறை, தலைமை ஏற்க இறங்குமாறு ஜேர்மன் ஆளும் வர்க்கம் ஜேர்மனிக்கு அழைப்புவிடுத்து வருகிறது. இவ்விதத்தில், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னரில் இருந்து ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு ஜேர்மன் முதலாளித்துவம் விடையிறுப்பு காட்டிவருகிறது.  

வொன் டெர் லெயென் Die Zeit நேர்காணலில் குறிப்பிட்டார்: “தற்போதைய மோதல்களுக்கு நிச்சயமாக அமெரிக்காவின் வீழ்ச்சியடைந்துவரும் பாத்திரம் காரணமல்ல. மாறாக அது ஒரு அதிகார வெற்றிடம் உருவாக அனுமதித்துள்ளது. இந்த உருவாகியுள்ள இடைவெளிகளை நிரப்ப ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் அவர்களுக்குள்ளேயே இன்னும் மேலதிகமாக துல்லியமான அவர்களின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு உடன்பட வேண்டியுள்ளது."    

Die Welt ஞாயிறன்று "உலக பொலிஸ்காரர் ஜேர்மனி" என்று தலைப்போடு ஓர் அறிக்கையைப் பிரசுரித்து இன்னும் வெளிப்படையாக எழுதியது. அது குறிப்பிட்டது: “அமெரிக்காவின் புதிய உள்நாட்டு எண்ணெய் வினியோகங்கள்  காரணமாக மத்திய கிழக்கு எண்ணெயின் முக்கியத்துவம் குறைத்திருப்பதால், அதன் பாகமாக, அமெரிக்கர்கள் உலக பொலிஸ்காரர் பாத்திரம் வகிக்க ஒருமட்டுப்பட்ட விருப்பத்தை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். அடுத்து ஜேர்மனி? அநேகமான உலக சம்பவங்களைப் போலவே உள்நாட்டிலிருந்து வரும் விடையிறுப்பும் அந்தளவிற்கு குழப்பமுள்ளதாக உள்ளது. அனுமானிக்கவியலாத விளைவுகளுக்காக அவர்களால் தவிர்க்கக்கூட முடியாமல் சர்வதேச நிலைமைகள் அரசியல்வாதிகளை முடிவுகள் எடுக்க நிர்பந்தித்து வருகிறது. இதற்கிடையே, ஜேர்மன் அரசாங்கம் ஈராக்கில் குர்திஷ்களுக்கு ஆயுதங்கள் வினியோகிக்க விரும்புகிறதுஇது மேலதிகமாக பொறுப்பேற்க விடுக்கப்பட்ட அழைப்பைத் தொடர்ந்து ஜேர்மன் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு கூர்மையான மாற்றமாகும்."

யதார்த்தத்தில், ஜேர்மன் முதலாளித்துவத்தின் கொள்கைகள் "குழப்பமுள்ளதாக" இருக்கவில்லை. மாறாக ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டுமொருமுறை இராணுவவாதம், சர்வாதிகாரம் மற்றும் யுத்தம் என்ற அதன் உண்மையான முகத்தைக் காட்டத் தொடங்கி உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, முதலாம் உலக யுத்தத்தின் போர் குற்றங்கள் மீது அங்கே ஓர் ஆழ்ந்த விவாதம் இருந்து வருகிறது. 2014இல் போர் குற்றங்கள் மீது கேள்விகளை முன்வைத்து பார்த்தால், அது முகங்கொடுத்துள்ள பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு எந்தவொரு முற்போக்கான தீர்வும் இல்லாமல் ஆளும் மேற்தட்டு மீண்டுமொருமுறை யுத்தத்திற்கு தயாரிப்பு செய்து வருகிறது என்பதில் அங்கே சிறிதும் கூட சந்தேகத்திற்கு இடமில்லை

தற்போதைய யுத்த சூழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், இதழாளர்கள் மற்றும் கல்வித்துறையாளர்கள் 1914இல் அவர்களின் முப்பாட்டனார்கள் சென்றளவிற்கு செல்லமாட்டார்கள் என்று யாரேனும் நினைத்தால் அவர் தன்னைத்தானே முட்டாளாக்கி வருகிறார் என்பதாகும். யதார்த்தத்தில் கௌவ்க், மேர்கெல், ஸ்ரைன்மையர், வொன் டெர் லெயென் மற்றும், பதிப்பக அலுவலகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருக்கும் அவர்களின் கண்ணியமான சேவகர்கள் கடந்தகாலத்தைவிட குறைந்த கட்டுப்பாடு எதையும் தங்கள்மீது விதிக்கவில்லை என்பதே உண்மையாகும்.

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையை நிறுத்த மற்றும் ஒரு மூன்றாம் உலக போரைத் தடுக்க அங்கே ஒரேயொரு சமூக சக்தி மட்டுமே இருக்கிறது: அது சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய யுத்த-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit) போராட்டம் மிகப்பெரிய அவசரத்தோடு முன்னிறுத்தப்பட்டிருக்கிறது.