World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

சுகாதார ஊழியர்களின் போராட்டத்துக்கு சோசலிச வேலைத் திட்டம்

By Socialist Equality Party
20 August 2014

Back to screen version

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி, ஆகஸ்ட் 20 அன்று அழைப்பு விடுத்துள்ள நாடு பூராவுமான இரண்டு நாள் வேலை நிறுத்தம் மற்றும் கொழும்பில் நடக்கவுள்ள ஊர்வலத்திலும் 27 தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் 21 தரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்குபற்ற உள்ளனர்.

2006 சம்பள சுற்று நிரூபத்தின் படி, 2012 சம்பள உயர்வுக்குரிய எஞ்சிய சம்பளத்தை பெறுதல், 180 தினங்களை பூர்த்தி செய்த தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல், மேலதிக நேர கொடுப்பனவு வீதத்தை அதிகரித்தல், ஐந்து நாள் வேலை வாரத்தை பெற்றுக்கொள்ளல் மற்றும் இரண்டு நாள் இரவு நேர சேவை முறையை பெற்றுக்கொள்ளல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார உதவியாளர், சாரதி, தொலைபேசி இயக்குனர்கள், மருத்துவ உதவியாளர் போன்ற தரங்கள் முதல் தங்குமிட மேற்பார்வாயளர்கள் மற்றும் வாட்டு எழுதுவினைஞர் வரையான தரங்களைச் சேர்ந்த 47,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த கோரிக்கைகளில் அடங்குகின்றனர்.

மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூட்டுக் கமிட்டியின் அழைப்பில் கடந்த ஜூன் 14 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகம், இப்போது 37வது நாளை தாண்டுகின்றது. இந்த காலகட்டத்தில் நடந்த அபிவிருத்திகள் இவையே:

* கோரிக்கைகள் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை முறிந்த பின், கூட்டுக் கமிட்டியின் அழைப்பின் பேரில் கடந்த ஜூலை 30 அன்று சுகயீன விடுமுறை எடுத்து தேசிய ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்ற எதிர்ப்பு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆஸ்பத்திரி ஊழியர்கள் பங்குபற்றினர்.

* லேக்ஹவுஸ் சுற்று வட்டத்தில் பொலிசார் வீதித் தடைகளைப் போட்டு ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதோடு கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவிக்கும்மணு ஒன்றை ஒப்படைப்பதற்காக பிரதிநிதிகள் சிலர் மட்டும் செயலகத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

* ஆகஸ்ட் 6 அன்று, அதே போன்று ஊர்வலமாக தொழிலாளர்களுடன் சுகாதார அமைச்சுக்கு சென்ற தொழிற்சங்கத் தலைவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு சரியான தகவல்களை வழங்குமாறு சுகாதார செயலாளரிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.

* சுகாதார ஊழியர்கள் தனித்துப் போராடுவது அர்த்தமற்றது, ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் மட்டுமே கோரிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்தை திருப்ப முடியும்என்று கூறி மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) சார்ந்த அனைத்து இலங்கை சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம், கூட்டுக் கமிட்டியிலோ அல்லது அதன் பிரச்சார நடவடிக்கைகளிலோ பங்குபற்றவில்லை.

* ஜேவிபீயின் சங்கம், ஆகஸ்ட் 13 அன்று தனது உறுப்பினர்களை சுகயீன விடுமுறை பிரச்சாரத்துக்கு அழைத்து சுகாதார அமைச்சின் முன் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தியது.

கூட்டுக் கமிட்டி அழைத்த சுகயீன விடுமுறை பிரச்சாரத்துக்கு பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்களும் ஊர்வலத்துக்கு ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும் பங்குபற்றியதன் மூலம், இராஜபக்ஷ அரசாங்கம் தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கும் பல்வேறு ஒடுக்குமுறைகள் மற்றும் கொடூரமான அடக்குமுறைகளின் மத்தியில், தமது வாழ்க்கை நிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்திடம் உள்ள தயார் நிலைமை வெளிப்பட்டது.

தொழிலாளர் மத்தியில் நிலவும் இந்த கொந்தளிப்பு நிலைமையின் எதிரில் தொழிற்சங்க அதிகாரத்துவம் முன்னணிக்கு வந்திருப்பது, அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் அவர்களுக்கு அறிவிக்கும் மணுக்களைகொடுத்தல் போன்ற பல்வேறு சுற்று வட்டங்களில் தொழிலாளர்களை சுற்றித் திரியவிட்டு, அவர்களை களைத்துப் போகவைத்து அவர்களது போராளிக்குணத்தை ஆவியாக்கிவிடுவதற்கே ஆகும்.

கூட்டுக் கமிட்டியின் பண்பிலேயே அதன் உண்மையான வேலைத் திட்டம் தெளிவாகின்றது. ஜனாதிபதி இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீலசுக) சார்ந்த சுதந்திர சுகாதார தொழிலாளர் சங்கம், இந்தக் கூட்டுக் கமிட்டியில் உள்ள பிரதான சங்கங்களில் ஒன்றாகும். வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (யூஎன்பீ) ஐக்கிய சுகாதார சேவை சங்கம் இன்னொரு பிரதான தொழிற்சங்கமாகும். ஸ்ரீலசுக சார்ந்த சங்கம், சிக்கன நடவடிக்கைகளை தொழிலாளர் மீது சுமத்தும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கைத்தேங்காயாக செயற்படும் அதேவேளை, யூஎன்பீ சார்ந்த சங்கம், அந்தக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் தொழிலாளர்களின் போராட்டங்கள் மீது குண்டர் படைகளை கட்டவிழ்த்து விட்டபோது இதே பாத்திரத்தை ஆற்றியது.

இந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், தொழிலாளர்கள் மத்தியில் எந்தவிதமான ஜனநாயக பூர்வமான கலந்துரையாடலும் இன்றி உருவாக்கப்பட்டவை. அதற்கு மாறாக, இந்த கோரிக்கைகள் அரசாங்கத்தினால் திணிக்கப்பட்டுள்ள சுற்றுநிரூப கட்டமைப்பில் தொங்குபவையாக உள்ளன. விசேடமாக அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு பொருத்தமான விதத்தில் தொழிலாளர்களுடனான ஒரு கலந்துரையாடலில் சம்பள கோரிக்கைகளை தீர்மாணிப்பதற்கு மாறாக, அது 2006 சுற்றுநிரூபத்தின் வரையறைகளுக்குள் அடக்கப்பட்டுள்ளது.

கூட்டுக் கமிட்டியின்படி, “ஜனாதிபதிக்கு அறிவிப்பதிலும்ஜேவிபி சங்கத்தின்படி அரசாங்கத்தின் கவனத்தை திருப்புவதிலும்தமது கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியும் என்ற உயிர்கொல்லி மாயையில் தொழிலாளர்களை மூழ்கடிப்பதில் இந்த சங்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பகுதியினரதும் வாழ்க்கை நிலைமையையும் சமூக நிலைமையையும் மேம்படுத்துவதற்கு தயாரில்லை என்பதை இராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ச்சியாக நிரூபித்து வந்துள்ளது. உலகில் ஏனைய ஆட்சியாளர்களையும் போலவே, சர்வதேச மூலதனத்தின் தேவையின் சார்பிலேயே இராஜபக்ஷவும் முன்நிற்கின்றார். கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையத்தின் தொழிலாளர்கள், சிலாபம் மீனவர்கள் மற்றும் வெலிவேரிய இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொன்றதன் மூலம், தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஏதாவதொரு செலவில் அதை பூர்த்தி செய்வதற்குள்ள தயார் நிலையையே இராஜபக்ஷ வெளிப்படுத்தினார்.

2008ல் வெடித்த உலக முதலாளித்துவத்தின் வீழ்ச்சியின் மத்தியில், ஏகாதிபத்திய தலைமையிலான முதலாளித்துவ ஆட்சியாளர்கள், உலக மக்களை அழிவுகரமான உலகப் போரை நோக்கி இழுத்துச் செல்கின்றனர். இதற்கு சமாந்தரமாக ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கின்ற சமூக நலன்கள் உட்பட வாழ்க்கை நிலைமைகளை முழுமையாக அழிக்கின்ற சமூக எதிர்ப்புரட்சி ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற வெகுஜன சேவைகளை வெட்டிக் குறைப்பதன் மூலம், இதே வேலையையே இராஜபக்ஷவும் செய்கின்றார்.

2016 முடிவுறும் போது, அரசாங்கத்தின் வரவு-செலவுப் பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 3.8 சதவீம் வரை குறைக்க இராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்திடம் இணங்கியுள்ளார். 2014 முடியும் போது அது நூற்றுக்கு 5.6 ஆக குறைக்கப்பட வேண்டும். இதன் விளைவாக, தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பதற்கு மாறாக மேலும் வெட்டிக் குறைக்கப்படுகின்றன. இராஜபக்ஷ அரசாங்கம் 2006ல் இருந்து தொழிலாளர்களின் ஊதியத்தை உறைய வைத்துள்ளது, அதாவது அதிகரிக்காமல் வைத்துள்ளது.

போராட்டத்துக்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதற்காக முப்பது ஆண்டுகால இனவாத யுத்தத்தின் போது கட்டியெழுப்பிய பொலிஸ்-இராணுவ இயந்திரத்துக்கும் மேலாக, தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக இன மற்றும் மத ஆத்திரமூட்டல்கள் பயன்படுத்தப்படுகின்றன. முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபல சேனா போன்ற பாசிச கும்பல்கள் அரசாங்கத்தின் முழு ஆதரவுடனேயே வீதியில் இறங்கியுள்ளன.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் தம்மீது திணிக்கும் அழுத்தத்தையும் இராஜபக்ஷ தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்கின்றார். போலி ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் தேசப்பற்றை மிகைப்படுத்தி, தொழிலாளர்களின், மாணவர்களின் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களை நாட்டை ஸ்திரமற்றதாக்கும் சதிஎன முத்திரை குத்தி, “நாட்டுக்காகஅவற்றை எதிர்க்குமாறு கூறும் இராஜபக்ஷ, ஏனைய மக்களை தொழிலாளர்களுக்கு எதிராக தூண்டிவிடுவதற்கு முயற்சிக்கின்றார்.

ஏகாதிபத்தியவாதிகளின் போலி பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்மற்றும் அதன் கீழ் உக்கிரமாக்கப்பட்ட இராணுவவாதமும் இராஜபக்ஷவால் தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படக் கூடும். “புலிகள் மீண்டும் தலை தூக்கியுள்ளனர் என்றும் பல்கலைக்கழகங்களில் பயங்கரவாத கும்பல்கள் வளர்ச்சியடைந்து வருவதாகவும் கூறும் அறிக்கைகள் மூலம் இந்த வேலைத் திட்டமே வெளிப்படுகின்றது.

அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டத்தை தோற்கடித்து தமது உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனில், தொழிலாள வர்க்கம் அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியில் ஒரு எதிர்த் தாக்குதலை தயார் செய்ய வேண்டும். அத்தகைய எதிர்த் தாக்குதலை ஒரேயடியாக எதிர்க்கும் தொழிற்சங்கங்கள், அழுத்தம் கொடுக்கும் பொறிக்குள் தொழிலாளர்களை இறுக்கி வைக்கும் கொந்தராத்தை பொறுப்பெடுத்துள்ளன. கூட்டுக் கமிட்டி மீண்டும் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்ஊர்வலத்தையே ஏற்பாடு செய்துள்ளது. வரவு-செலவுத் திட்டம் நெருங்கின்ற நிலையில், ஜனாதிபதிக்கு அறிவிப்பதன் மூலம்ஏதாவது பெற்றுக்கொள்ள முடியும் என்ற மாயையை சங்கத் தலைவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் பரப்புகின்றனர். இந்த மாயைக்கு மாறாக, தொழிலாளர்களின் தேவைக்கு ஏற்ப அன்றி, சர்வதேச மூலதனத்தின் தேவைக்கு ஏற்பவே ஜனாதிபதியின் நிதி அமைச்சு ஆணை செயற்படுகின்றது.

ஜேவிபீ சங்கங்களின் வேலைத் திட்டம் இவற்றை விட வேறுபட்டது அல்ல. அவர்கள் பிரேரிக்கும் ஒன்றிணைந்த போராட்டமும்அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எல்லையை கடக்கப் போவதில்லை. இந்த சகல தொழிற்சங்கங்களிலும் இருந்து பிரிந்து, அரசாங்கத்தின் சமூக எதிர்ப்புரட்சி சிக்கன வேலைத் திட்டத்துக்கு எதிராக, தமது உரிமைக்கான போராட்டத்தை தம் கையில் எடுத்துக்கொள்ளும் பொருட்டு ஆரம்ப நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், தமது சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க முன்னணிக்கு வருமாறு நாம் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் தலைமையிலான முதலாளித்துவ வர்க்க ஆட்சியை தூக்கி வீசி, சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தொழிலாள-விவசாயிகளின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக, தனது தலைமைத்துவத்தின் கீழ் கிராமப்புற வறியவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட ஏனைய ஒடுக்கப்பட்டவர்களையும் அணிதிரட்டிக்கொள்வதற்கு தொழிலாள வர்க்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைந்து, போரினதும் மற்றும் சமூக எதிர்ப் புரட்சியினதும் அடித்தளமான உலக முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீசி, அனைத்துலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதன் பேரில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துடன் பிணைந்துள்ளது.

இந்த முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மட்டுமே போராடுகின்றது. சோசக உடன் சேர்ந்து, இந்த அரசியல் போராட்டத்துக்காக முன்னணிக்கு வருமாறு சுகாதார ஊழியர்களிடமும் ஏனைய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடமும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.