தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
De facto martial law in Ferguson, Missouri மிசோரியின் ஃபேர்குஷனில் இராணுவச்சட்டம் நடைமுறையில்
Barry Grey Use this version to print| Send feedback ஒரு நிராயுதபாணியான ஆபிரிக்க அமெரிக்க இளைஞர் மைக்கேல் பிரௌன் பொலிஸால் கொல்லப்பட்டதற்கு எதிராக தொடர்ந்துவரும் போராட்டங்களுக்கு, மிசோரி மாநில அரசு ஒபாமா நிர்வாகத்தின் முழு ஆதரவோடு, பெரிதும் தொழிலாள வர்க்கம் நிறைந்த ஃபேர்குஷன் நகரில் நடைமுறையில் இராணுவச்சட்டத்தை திணிப்பதன் மூலமாக விடையிறுப்பு காட்டியுள்ளது. அரசியலமைப்புரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கும் ஒன்றுகூடுவதற்கான உரிமை அந்நகரவாசிகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அல்லது பத்திரிகை சுதந்திரத்தை மீறி தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரதான சாலைச் சந்திகளில் எல்லாம் பொலிஸ் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இராணுவ வாகனங்களில் ஒரு பாரிய படையும், ஹெலிகாப்டர்கள், ஒலியெழுப்பி விரட்டும் பீரங்கிரக வண்டிகள், பிரகாசமாக வெளிச்சமூட்டும் கையெறி குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளும், தேசிய பாதுகாப்பு துருப்புகளின் உதவியோடு கூடிய தாக்கும் ஆயுதங்கள் தாங்கிய SWAT குழுக்களும் மற்றும் உள்ளூர் காவலர்களும் என சமூக எதிர்ப்பை அச்சுறுத்துவதற்காக, பீதியடைய செய்ய மற்றும் நசுக்குவதற்காக அங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன. திங்களன்று இரவு, பிரௌன் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதிகோரிய பெரிதும் அமைதியான ஆர்ப்பாட்டகாரர்கள் மீது ஒடுக்குமுறை அதிகரிக்கப்பட்டது. கலைந்து செல்ல உத்தரவிட்ட பொலிஸின் கட்டளையை மதிக்க தவறியதற்காக, அங்கே சட்டரீதியிலோ அல்லது அரசியலைப்புரீதியிலோ எந்தவொரு காரணமும் இல்லை என்றபோதினும், எழுபத்தி எட்டு பேர் வெளிப்படையாக கைது செய்யப்பட்டிருந்தார்கள். ஒடுக்குமுறையின் அளவுக்கும், அதிகாரிகள் "குற்றம்மிக்க பிரிவினர்" என எதை அழைக்கப்படுவோரிடம் இருந்து வரும் அச்சுறுத்தல் என்று கூறப்படுவதற்கும் இடையில் மிகவும் பொருத்தமற்றவிகிதத்தில் உள்ளது. செவ்வாயன்று அதிகாலை 2:20க்கு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில் மிசூரி நெடுஞ்சாலைத்துறை ரோந்துப்படை கேப்டன் ரோன் ஜோன்சனால் (இவர் கடந்த வாரம் ஜனநாயகக் கட்சியின் ஆளுனர் ஜே. நிக்சனால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பில் இருத்தப்பட்டிருந்தார்), அந்த இரவுநேர கடும் ஒடுக்குமுறையையும் பாரிய கைது நடவடிக்கையையும் நியாயப்படுத்த, பொலிஸால் கைப்பற்றப்பட்ட குற்றத்திற்குரிய ஒரு மொலொடோவ் போத்தில் மற்றும் இன்னும் சில தண்ணீர் போத்தில்களையும், இரண்டு கைத்துப்பாக்கிகளையும் மட்டுமே குறிப்பிட்டுக் காட்ட முடிந்தது. செவ்வாயன்று வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாமென்றும் அதன் மூலமாக வீதியில் இருப்பவர்களை "வெளியிலிருந்து வந்த கிளர்ச்சியாளர்களாக" அடையாளம் கண்டு அவர்களைப் பொலிஸால் கைது செய்ய முடியுமென்றும் அவர் "அமைதியான போராட்டக்காரர்களுக்கு" அறிவுறுத்தி இருந்தார். அந்த ஏதேச்சதிகார மற்றும் பொருத்தமற்ற விகிதத்திலான படையினரின் பயன்படுத்தல் ஒட்டுமொத்த நெருக்கடியாலும் குணாம்சப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தியிராத பிரௌன், வெகு அருகாமையிலிருந்து ஆறு முறை சுடப்பட்டிருந்தார். ஆத்திரமடைந்த குடியிருப்போரின் அமைதியான போராட்டங்களோ, ஓர் இராணுவப்-பாணியிலான ஒடுக்குமுறையை, பாரிய கைது நடவடிக்கைகள் மற்றும் அவசரகால சட்டபிரகடனத்தை கண்டிருந்தது. அவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டதானது இராணுவ சட்டம் அமுலாக்கப்பட்டதைப் போன்றுள்ளது. உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட வீடியோ செய்திகள் காட்டுவதைப் போல, ஃபேர்குஷன் நகரவாசிகள் அந்நகரின் இராணுவ-பொலிஸ் ஆக்கிரமிப்புக்கும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்ட அதேபோன்ற முறைகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைச் சுட்டிக்காட்டுகிறார்கள். உள்நாட்டில் சமூக எதிர்ப்பின் எந்தவொரு அறிகுறியையும், வெளிநாட்டு அரசாங்கங்களை தூக்கியெறிவதற்கான காரணங்களாக காட்டப்பட்ட அதேமாதிரியான ஜனநாயக-விரோத மற்றும் வன்முறை வழிவகைகளைப் பயன்படுத்தி விடையிறுப்பு காட்டுகின்ற அதேவேளையில், மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக என்ற வாஷிங்டனின் வாதத்தில் இருக்கும் பாசாங்குத்தனத்தையும் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள். இந்த புள்ளியைத் தான் WSWS, பிரௌன் பொலிஸால் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டு காட்டியிருந்தது. ஆகஸ்ட் 4இல் "காசா படுகொலை : சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை" என்ற தலைப்பில் அது எழுதியது: “யுத்தம், இராணுவவாதம் மற்றும் சிக்கன நிகழ்ச்சிநிரலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தினது எதிர்ப்பிற்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் பயன்படுத்தப்பட உள்ள நடவடிக்கைகளுக்கு, இஸ்ரேலின் காசா படுகொலைகள் ஒரு முன்னெச்சரிக்கை ஆகும். விரோதம் காட்டும் மக்களை பயமுறுத்த ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான ஒரு தசாப்தகால யுத்தங்களின் போக்கில் அபிவிருத்தி செய்யப்பட்ட முறைகள், தொழிலாளர்கள் தங்களின் வேலைகள், வாழ்க்கை தரங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க போராடும் போராட்டத்திற்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.” ஃபேர்குஷனில் பொலிஸ் அரச வழிமுறைகளில் தங்கியிருப்பதானது அமெரிக்க ஜனநாயகத்தின் நீண்டகால சீரழிவின் விளைபொருளாகும். இந்த நிகழ்வுபோக்கு 2000ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் களவாடப்பட்டதோடு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்திருந்தது. அது 9/11 சம்பவத்திற்கு பின்னரும் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்றழைக்கப்பட்டதன் அறிவிப்புக்கு பின்னரும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. ஆரம்பத்திலிருந்தே அந்த போலி யுத்தமானது, வெளிநாடுகளில் ஏகாதிபத்திய போர் தொடங்குவதையும், அமெரிக்காவிற்குள் ஜனநாயக உரிமைகள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலையும் நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. கடந்த 13 ஆண்டுகள், ஜனநாயக உரிமைகளை அழிப்பதன் மூலம் பாரியளவில் அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதை கண்டுள்ளன. அது இன்று ஒரு பொலிஸ் அரசு தயார் நிலையில் இருப்பதில் சென்று முடிந்துள்ளது. அமெரிக்க மக்கள் மீதும் மற்றும் உலக மக்கள் மீதும் அரசினது உளவுவேலை விரிவாக்கத்திற்கு கடிவாளமில்லாமல் அனுமதி வழங்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு சட்டத்தைத் தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்புத்துறை ஸ்தாபிக்கப்பட்டது, அத்துறை உள்ளூர் பொலிஸை கிளர்ச்சி-ஒடுக்கும் துணைஇராணுவப் படைகளாக மாற்றுவதற்கு பெண்டகனோடு சேர்ந்து ஒத்துழைத்தது; நிதியுதவிகளை வழங்கியது. அமெரிக்க பிராந்தியம் முழுவதையும் உள்ளடக்கிய முன்னொருபோதும் இல்லாத விதத்தில் முதல் இராணுவ கட்டளைப்பிரிவாக வடக்கு இராணுவ வடக்கு கட்டுப்பாட்டு தலைமையகம் அமைக்கப்பட்டது. இத்தகைய புதிய உருவாக்கங்கள், அமெரிக்காவிற்குள் எழும் சமூக எதிர்ப்புகளை நசுக்குவதற்காக இராணுவம், உளவுத்துறை அமைப்புகள் மற்றும் சிந்தனைகூடங்களால் அபிவிருத்தி செய்யப்பட்ட நகர்புற யுத்தமுறை மற்றும் பாரிய ஒடுக்குமுறைக்கான எண்ணற்ற ஆய்வுகள் மற்றும் திட்டங்களோடு இணைந்துள்ளன. 2013 போஸ்டன் தொடர்ஓட்ட குண்டுவீச்சு அதுபோன்ற திட்டங்களைப் பரிசோதிக்க ஒரு சந்தர்ப்பமாக பற்றிக்கொள்ளப்பட்டு இருந்தது. அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, ஒரு பிரதான நகரப்பகுதி இராணுவ-பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இருந்ததோடு, குடியுரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டிருந்தன. அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்களின் எந்தவொரு பிரிவிடமிருந்தும் எந்தவொரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் இருக்கவில்லை என்பது, ஆளும் வர்க்கத்திற்குள் ஜனநாயகத்திற்கான அனைத்து கடமைப்பாடும் பொறிந்து போய்விட்டதையே உறுதிப்படுத்தியது. ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கீழ் நடந்த ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், பராக் ஒபாமாவின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்போதைய ஜனாதிபதி சித்திரவதை திட்டங்களுக்கும், குவாண்டனாமோ சிறைகூடங்களுக்கும் பொறுப்பானவர்களை மட்டும் பாதுகாக்கவில்லை. அவர் அமெரிக்க பிரஜைகளை விசாரணையின்றி காலவரையின்றி காவலில் வைக்கவும் மற்றும் படுகொலை செய்யவும் கூட அவருக்கு அதிகாரமிருப்பதாக வலியுறுத்தி உள்ளதுடன், அவ்வாறு செய்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டும் இருக்கிறார். சமூக சமத்துவமின்மையின் பாரிய வளர்ச்சியே, பொலிஸ் அரசுக்கான இத்தகைய முன்னேற்பாடான தயாரிப்புகளுக்கு பின்னால் இருக்கும் உந்துசக்தியாக இருக்கிறது. தொழில்துறை உள்கட்டமைப்பு மற்றும் கண்ணியமான-ஊதியங்களைக் கொண்ட வேலைகளை அழித்துவரும் அதேவேளையில் ஓர் ஒட்டுண்ணித்தனமான இயல்பாக ஊக நடவடிக்கைகளின் அடித்தளத்தில் தன்னைத்தானே செழிப்படையச் செய்கின்ற, திரைமறை-குற்றங்கள் புரியும் பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டு, தேசிய செல்வவளத்தில் முன்னொருபோதும் இல்லாதளவிலான ஒரு பங்கை தனக்கே உரிய உரிமையாக கொண்டாடுகிறது. இந்த குற்றத்தன்மைமிக்க வடிவமானது, ஆக்கிரமிப்பு, யுத்தம் மற்றும் சூறையாடலை அடிப்படையாக கொண்ட ஒரு குற்றகரமான வெளியுறவுக் கொள்கையோடு பிரிக்கவியலாதபடிக்கு பிணைந்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு ஜனநாயக மற்றும் சமூக கோரிக்கையும் இந்த புதிய பிரபுத்துவத்தின் சமூக நலன்களோடு முரண்படுகிறது. அது ஒவ்வொரு சமூக எதிர்ப்பின் வெளிப்பாட்டையும் அதன் நலன்களை முற்றிலுமாக தகர்த்துவிடக்கூடிய ஓர் அச்சுறுத்தலாக காண்கிறது. முந்தைய ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்டுள்ள பரந்த மற்றும் கணக்கில்லா இராணுவ-பொலிஸ்-உளவுத்துறை எந்திரம், இந்த குற்றகரமான முதலாளித்துவ மேற்தட்டின் நலன்களுக்கு உத்தரவாதமளிப்பவரைப் போல செயல்படுகின்றது. ஃபேர்குஷன் சம்பவங்கள் குறித்த ஓர் அரசியல் பகுப்பாய்வை, ஒபாமா மற்றும் ஏனைய அரசியல்வாதிகளின் வெற்றுத்தனமான மற்றும் நேர்மையற்ற வார்த்தைஜாலங்களில் இருந்து தொடங்ககூடாது, மாறாக அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். அவர்கள் சேவை செய்துவரும் நிதியியல் செல்வந்த மேற்தட்டுக்களின் நலன்களுக்காக, அவர்கள் ஃபேர்குஷன் தொழிலாள வர்க்கத்தை மிரட்டவும் மற்றும் நாடெங்கிலும் எல்லா நகரங்களிலும் பயன்படுத்துவதற்கு ஒரு முன்மாதிரியை அமைக்கவும் அரச ஒடுக்குமுறை வன்முறையை பலப்படுத்தி வருகிறார்கள். இதுதான் அமெரிக்காவின் யதார்த்தமாகும். அனைத்து முன்னேறிய தொழில்துறை நாடுகளிலேயே சமூகரீதியில் மிகவும் சமத்துவமின்றி இருக்கும் ஒரு நாடு, மிகவும் ஜனநாயக விரோதமாகவும் இருப்பது ஏதோ தற்செயலாக அல்ல. மக்கள்தொகையில் பாரிய பெரும்பான்மையாக உள்ள தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய இலாயக்கற்று உள்ள முதலாளித்துவ அமைப்புமுறையே இதற்கு மூலகாரணமாகும். |
|
|