World Socialist Web Site www.wsws.org |
Class, race and the police killing in Ferguson, Missouri வர்க்கம், இனம் மற்றும் மிசோரி ஃபேர்க்குஷனில் பொலிஸ் படுகொலை
Joseph
Kishore மிசோரி ஃபேர்க்குஷனில் மைக்கேல் பிரௌனின் பொலிஸ் படுகொலை மீது மக்கள் கோபம் வெடித்ததற்கு விடையிறுப்பாக, ஆளும் வர்க்கம் இரு-முனை மூலோபாயத்தைப் பயன்படுத்தி உள்ளது. அது, இராணுவமயப்பட்ட பொலிஸைக் கொண்டு அமைதியான போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளையும், இரப்பர் தோட்டாக்களையும் பிரயோகித்ததோடு, மிசோரி ஆளுநரால் "அவசரகால நிலை" அறிவிப்பு, தேசிய பாதுகாப்பு படை நிலைநிறுத்தப்பட்டமை, நடைமுறையில் இராணுவ சட்டத்தின் திணிப்பு என அரசின் ஒடுக்குமுறை எந்திரத்தைத் அணிதிரட்டி உள்ளது. அதேநேரத்தில், ஃபேர்க்குஷன் ஒரு யுத்த மண்டலமாக மாற்றப்பட்டதன் மீதான ஆரம்ப அட்டூழியங்களுக்குப் பின்னர், அடையாள அரசியலின் அரசியல் மற்றும் செய்தி ஊடக ஆதரவாளர்களையும் ஆளும் மேற்தட்டு அணிதிரட்டி உள்ளது. ஒடுக்குமுறை எந்திரத்தை வழிநடத்துபவர்களும் ஆபிரிக்க- அமெரிக்கர்களாக இருந்துவிட்டால் அவர்களின் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவது ஏற்கக்கூடியதென்றும், இன்னும் முற்போக்கானது எனவும் பெரும்பான்மையான-ஆபிரிக்க அமெரிக்க ஃபேர்க்குஷன் தொழிலாளர்களையும் மற்றும் இளைஞர்களையும் நம்பவைக்க முயற்சிப்பதே அதன் நோக்கமாகும். பொலிஸூடன் "ஒற்றுமையாக" இருக்குமாறு உபதேசிக்கவும் மற்றும் பாதுகாப்புதுறை நடவடிக்கைகளுக்கான புதிய தலைவரான ஆபிரிக்க அமெரிக்கர் மிசூரி நெடுஞ்சாலை ரோந்துப்படை கேப்டன் ரோன் ஜோன்சனுக்கு புகழுரைகளைக் குவிக்கவும், அரசியல் பேரம்பேசிகளான அல் ஷார்ப்டனும் ஜெஸ்ஸி ஜாக்சனும் கடந்த வாரம் அந்நகருக்கு சென்றார்கள். இனம் குறித்த கேள்விகளைப் பிடித்துத் தொங்கி கொண்டிருக்கும் ஊடகங்களோடு சேர்ந்து (ஃபேர்க்குஷன் செவ்வாயன்று இரவும் மற்றும் இனமும் குறித்து CNN ஒரு நகரமன்ற கலந்துரையாடலை ஒளிபரப்பியது, உண்மையில் நிகழ்ச்சி நடுவர்கள் அதில் பங்கேற்றிருந்த கறுப்பின மற்றும் வெள்ளையின நபர்களை பிரித்துவைத்துதிருந்தனர்), முன்னாள் கூடைப்பந்து நட்சத்திர வீரர் கரீம் அப்துல்-ஜப்பாரின் ஒரு கட்டுரையை Time இதழ் சென்ற வாரயிறுதியில் பிரசுரித்தது. அக்கட்டுரை அதன் அரசியல் முடிவுககளில் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தபோதினும், அதில் அவர் புத்துணர்ச்சியூட்டுவதாகவுள்ளது. “எதிர்வருகிற இனப்போர் தோல்நிறம் குறித்ததாக இருக்காது," என்ற தலைப்பில், அப்துல்-ஜப்பார் "[ஃபேர்க்குஷனில்] நிலைமையை வெறுமனே மற்றொரு திட்டமிட்ட இனவாத நடவடிக்கையாக அல்லாமல், மாறாக அது உள்ளவாறே: வர்க்க யுத்தமாக காண்பது" அவசியமாகும் என்று எழுதுகிறார். தோல்நிற (அத்தோடு பாலின) பிளவுகளைப் பேணி வளர்ப்பவர்களை எதிர்த்து, அவர் வலியுறுத்துகையில், "பொலிஸின் அதீதஎதிர்வினையின் இலக்குகள் தோலின் நிறத்தை வெகு குறைவாகவே அடித்தளத்தில் கொண்டிருக்கிறது, எபோலா-அளவுக்கான நோயை விட மோசமானதான இருக்கும் வறுமையிலிருந்து, ஒவ்வொருவரின் இனவாத நிகழ்ச்சிநிரலுடன் இவ்வாறு கைக்குலுக்குவதானது, அமெரிக்காவை உண்மையான விடயத்திலிருந்து திசைதிருப்புகின்றது" என்றார். அமெரிக்காவின் அடிப்படை சமூக பிளவு, பணக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே இருப்பதாக அப்துல்-ஜப்பார் குறிப்பிடுகிறார். அவர் "மத்தியதட்டு வர்க்கத்தின்" பொறிவைக் குறித்த ஒரு 2012 பேவ் (Pew) ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையை மேற்கோளிட்டுக் காட்டுகிறார். அது கடந்த பத்து ஆண்டுகளில் மத்தியதட்டு குடும்ப வருமானம் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதைக் கண்டறிந்திருக்கிறது. “வெகுசில மக்களே (வெறும் 23 சதவீதத்தினர்) ஓய்வு பெறும்போது அவர்களிடம் போதிய பணம் இருக்குமென கருதுகிறார்கள்," என்று அப்துல்-ஜப்பார் எழுதுகிறார். “அனைத்திற்கும் மேலாக அதிர்ச்சியூட்டுவது: அமெரிக்காவின் தாரக மந்திரமான கடினமாக உழைத்தால் முன்னேறலாம் என்பதை வெகுசில அமெரிக்கர்கள் தான் இன்னமும் நம்புகிறார்கள்.” அப்துல்-ஜப்பார் ஒரு சோசலிஸ்ட் கிடையாது, மேலும் சமூக சமத்துவமின்மை குறித்த அவரது பரிந்துரைகள் சீர்திருத்த அழைப்புகளுக்கு அப்பால் செல்லாது. ஆனால் அவரது கட்டுரை ஃபேர்க்குஷன் சம்பவங்களைத் தவறாக மதிப்பிடுவதன் மீதிருக்கும் வெடிப்பார்ந்த விளைவுகள் குறித்து அரசியல் ஸ்தாபகத்திற்கு ஒரு மேலதிகமான எச்சரிக்கையாக இருக்கிறது. இருந்தபோதினும், அடிப்படை சமூக பிளவு—அது ஃபேர்க்குஷனிலும் சரி ஒட்டுமொத்த நாட்டிலும் சரி—இனத்தை மையப்படுத்தி அல்ல, வர்க்கத்தை மையப்படுத்தி இருக்கிறது என்ற அவரது வலியுறுத்தல் முற்றிலும் சரியானதே. மிக முக்கியமாக, அந்த கட்டுரை இனவாத அரசியலில் பலமாக முதலீடு செய்துள்ள மேல்மட்ட மத்தியதட்டு வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளிடமிருந்து கோபமான ஒரு எதிர்ப்பு ஓலங்களைத் தூண்டிவிட்டது. இவற்றில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) கட்டுரையாளர் டேவ் சிரின் உள்ளடங்குவார், இவர் Nation இதழில் விளையாட்டுத்துறை கட்டுரையாளராகவும் சேவை செய்கிறார். “இனவாதமே மைக் பிரௌனைக் கொன்றது" என்ற தலைப்பில் அவர் அதை எழுதியிருந்த, அப்துல்-ஜப்பாரை மறுத்துரைக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டுரை புதனன்று ISO வலைத் தளத்தில் பிரசுரமானது. மைக்கேல் பிரௌனின் படுகொலை மற்றும் பொதுவாக பொலிஸ் ஒடுக்குமுறை, அடிப்படையில் "வறுமை சார்ந்ததென்று" கூறும் அப்துல்-ஜப்பாரின் துணிச்சலைக் கண்டித்து, சிரின் வலியுறுத்துகையில், “மைக்கேல் பிரௌன் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வெள்ளையராக இருந்திருந்தால், அவர் ஏழையாக இருந்திருந்தாலும், கொல்லப்பட்டிருக்க மாட்டார். இது உங்களது ஆரம்ப புள்ளியாக இல்லையென்றால், பின் நீங்கள் ஒரு திசையறி கருவி இல்லாமல் நிற்கிறீர்கள் என்றாகும்,” என்றார். ஃபேர்க்குஷனில் என்ன நடந்தது என்பதை விளங்கிக்கொள்ள எந்தவொரு சோசலிஸ்டுக்கும் அரிச்சுவடியான வர்க்கம் அல்லது பொருளாதார சமத்துவமின்மையே "ஆரம்பப்புள்ளி" அல்ல மாறாக இனம் தான் என்று அறிவிப்பதன் மூலம் ISO தன்னைத்தானே ஒரு சோசலிச-விரோத மற்றும் தொழிலாள வர்க்க-விரோத அமைப்பு என்பதை அடையாளப்படுத்தி காட்டுகின்றது. ஆளும் வர்க்கத்தின் பொலிஸ் ஒடுக்குமுறை அமைப்பு உள்ளடங்கலாக, இனம் அமெரிக்க வாழ்வில் ஒரு காரணியாக தான் இருக்கிறது. ஆனால் அதுவொரு இரண்டாம்பட்ச மற்றும் துணை காரணியாகும், அது அடிப்படையில் வர்க்க பிரச்சினைகளோடு பிணைந்திருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் மீது பொருளாதார சுரண்டலை அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், அரசு என்பது அடிப்படையில் வர்க்க ஒடுக்குமுறையின் ஒரு கருவியாக உள்ளது. ஜிரினின் ஆத்திரமூட்டும் வாதங்களுக்கு முரண்பட்ட விதத்தில், பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தால் பாதிக்கப்பட்ட பலர் வெள்ளையின மக்களாவார்கள் (இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆல்புகெர்க்கியில் ஜேம்ஸ் போய்டின் படுகொலையை ஒருவர் சுட்டிக்காட்டலாம்), அதேவேளையில் டெட்ராய்ட் போன்ற நகரங்களில் பொலிஸில் மேலதிகமாக கறுப்பினத்தவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மை ஏழைகள் வெள்ளையின மக்களாவார்கள், அதேவேளையில் வறுமை அளவுகளின் மிகவும் கூடுதலாகவும் மற்றும் ஆபிரிக்க அமெரிக்க தொழிலாளர்களின் ஒடுக்குமுறையையும், பல தசாப்தங்களாக ஆபிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளால் நடத்தப்படும் நகரங்களிலே பார்க்க முடியும். ISO மற்றும் ஜிரினைக் கவலைப்படுத்துவது, அப்துல்-ஜாப்பரின் எழுத்துக்கள் அல்ல, மாறாக ஆளும் வர்க்கம் அதன் அரசியல் மேலாதிக்கத்தைத் தக்க வைக்க அது பயன்படுத்தும் மத்திய இயங்குமுறைகளில் ஒன்று தோல்வி அடைந்து வருவதைக் குறித்த அச்சமே அவர்களைக் கவலை கொள்ள செய்கிறது. தொழிலாளர்கள் இனவாத அரசியலின் மோசடியைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஃபேர்க்குஷனின் போராட்டங்களில் கலந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களோடு அது நடத்திய கலந்துரையாடல்களில், உலக சோசலிச வலைத் தளம் இத்தகைய அடிப்படை வர்க்க பிரச்சினைகள் அதிகளவில் உணரப்பட்டிருப்பதைக் கண்டது. எல்லா இன தொழிலாளர்களும் முகங்கொடுக்கும் பொதுவான பொருளாதார நிலைமைகள் குறித்தும், முதலாளித்துவ அமைப்புமுறையின் கடமைப்பாடுகள் குறித்தும் பலர் பேசினார்கள். ஏனையவர்களோ தன்னலம்மிகுந்த மற்றும் ஊழல்நிறைந்த பலகோடி மில்லியனர்களின் கையாட்களாக உள்ளவர்களும், பிரௌனின் மரணத்தை தங்களுக்கு சாதகமாக சுரண்டி வருகின்றவர்களும், முற்றிலுமாக இப்போதைய பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறையைப் பாதுகாப்பதோடு பிணைந்திருக்கும் இந்த ஷார்ப்டன் மற்றும் ஜாக்சன் போன்றவர்களை பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்கள். ஃபேர்க்குஷனில் போராட்டக்காரர்களின் கருத்துக்கள், ஃபேர்க்குஷனில் மட்டுமல்ல, மாறாக நாடெங்கிலும், அதிகரித்துவரும் முதலாளித்துவ-எதிர்ப்பு உணர்வை பிரதிபலிக்கிறது. தனிநபர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தொழிலாளர்கள் ஒரு பரந்த சமூகபொருளாதார அமைப்புமுறையின் விளைபொருளாக பார்க்கவும், அதனோடு தொடர்புபடுத்தவும் தொடங்கி இருக்கிறார்கள். அங்கே ஜனநாயகக் கட்சியால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு இனவாத அரசியல் இருக்கிறது. 2008இல் ISOஆல் ஒரு "மாற்றம் கொண்டு வரும் வேட்பாளராக" வரவேற்கப்பட்ட முதல் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா, முன்னொருபோதும் இல்லாதளவிற்கான சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சிக்கு, தொடர்ச்சியான யுத்தங்களுக்கு, மற்றும் மிக மிக அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதலுக்கு தலைமை தாங்கியுள்ளார். ஜனநாயகக் கட்சியின் அரசியல் முகவர்களான ISO மற்றும் சிரின், அடையாள அரசியல் மதிப்பிழந்து போவதை ஒரு உயிர்போகும் அபாயமாக காண்கிறார்கள். அவர்கள், ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசியல் எந்திரத்திற்கும் தொழிலாளர்களை அடிபணிய செய்து வைக்கும் உள்ளார்ந்த ஆர்வத்தோடு, மத்தியதர வர்க்க—தொழிற்சங்க நிர்வாக அதிகாரிகளின், கல்வியாளர்களின்— தனிச்சலுகை பெற்ற பிரிவுகளுக்காக, மற்றும் பெருநிறுவன ஸ்தாபகத்தின் பிரிவுக்களுக்காக பேசுகிறார்கள். ISOஇன் இனவாத அடையாள அரசியல், ஆளும் வர்க்கத்தினது பிரிவுகளின் இனவாதத்திற்கு துணைபோகிறது. அவை இரண்டுமே தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தைத் தடுக்கும் பொதுவான நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஃபேர்க்குஷன் சம்பவங்கள் அரசு காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது, அது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்பட வேண்டும். அரசு மற்றும் அதன் ஒடுக்குமுறை அமைப்புகளால் அதன் நலன்களைப் பாதுகாத்திருக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கம், சமூக போராட்டங்களின் வளர்ச்சிக்கு இருக்கும் சாத்தியக்கூறுகளால் அச்சமுற்றுள்ளது. அது அந்நியப்படுத்தப்பட்டு, பரந்த மக்களால் இழிவாக நோக்கப்படுகின்றது. அதன் உத்தியோகபூர்வ அமைப்புகள் அனைத்தும் பெரிதும் மதிப்பிழந்து போயுள்ளன. சமூக எதிர்ப்பின் எந்தவொரு வெளிப்பாட்டையும் நசுக்குவதே அதன் உடனடி பிரதிபலிப்பாக இருக்கிறது. பரந்த பெரும்பான்மை மக்களுக்கும் பெருநிறுவன நிதியியல் பிரபுத்துவத்திற்கும் இடையிலான இடைவெளி, ஃபேர்க்குஷனில் பார்த்ததைப் போல அரசு வன்முறை மாதிரியான விடயத்திற்கு மட்டுமே ஆதாரமாக இல்லை, அது சிரின் மற்றும் ISO போன்றவர்களை அச்சமடைய செய்கின்ற ஒரு உண்மையான, சமூக புரட்சிக்கு உந்துசக்தியாகவும் இருக்கிறது. |
|