World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி Germany expands its intervention in Iraq ஜேர்மனி ஈராக்கில் அதன் தலையீட்டை விரிவுபடுத்துகிறது
By
Johannes Stern ஜேர்மனி ஈராக்கில் அதன் தலையீடுகளை கணிசமான அளவிற்கு விரிவாக்க தொடங்கியுள்ளது. ஜேர்மன் இராணுவ படைகளின் (Bundeswehr) டிரான்ஸால் போக்குவரத்து விமானங்கள் புதன்கிழமையிலிருந்து தொடங்கி அப்பிராந்தியத்திற்கு இன்னும் கூடுதலாக 100 டன் நிவாரண உதவிப்பொருட்களை வழங்குமென பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜென்ஸ் புளோஸ்டோஃப் தெரிவித்தார். உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் போர்வைகள் போன்ற "மனிதாபிமான" உதவிகளை முக்கியமாக இவை உள்ளடக்கி இருக்கும். கடந்த வாரம் ஜேர்மன் இராணுவ படை ஏற்கனவே 36 டன் பொருட்களை ஈராக்கிற்கு அனுப்பி இருந்தது. இப்போது, முதல்முறையாக, ஜேர்மன் இராணுவம் "மனிதாபிமான உதவியுடன் தொடர்பற்ற" உபகரணங்களையும் அந்நாட்டிற்கு அனுப்புமென புளோஸ்டோர்ஃப் அறிவித்தார். ஜேர்மன் இராணுவ கையிருப்புகளில் இருந்து வாகனங்கள், உடல் கவசங்கள், தலைகவசங்கள், இருட்டில் பார்க்க உதவும் உபகரணங்கள் மற்றும் ஏமாற்று பொறிகளைக் கண்டறியும் சாதனங்களை அனுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. IS இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு எதிராக சண்டையிட்டு வரும் குர்திஷ் பெஷ்மெர்காவிற்கு ஆதரவாக வடக்கு ஈராக்கின் எர்பிலுக்கு இந்த பொருட்கள் நேரடியாக அனுப்பப்பட உள்ளன. சமீபத்திய வாரங்களில் வட ஈராக்கின் பரந்த பகுதிகளை இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தன. IS நிலைகளின் மீது அமெரிக்க விமானப்படை வானிலிருந்து குண்டுவீசி வருகின்ற நிலையில், ஜேர்மன் அரசாங்கமோ குர்திஷ் போராளிகள் குழுக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களோடு சேர்ந்து ஆயுதங்களையும் வழங்க தயாராகிவிட்டது. திங்களன்று மத்திய வெளியுறவுத்துறை அலுவலகத்தின் ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில், அடுத்த சில நாட்களில் "அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வருவார்கள்" என அவருக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். வெளியுறவுத்துறை செயலர் பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரின் (SPD) தகவல்படி, ஈராக்குக்கான உதவிகள் சம்பந்தமாக "எதுவும் புறக்கணிக்கப்படவில்லை" என்பதையும் அந்த செய்திதொடர்பாளர் சேர்த்துக் கொண்டார். “என்ன அவசியப்படுகிறதென்பதைப் பார்த்து, பின்னர் நம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்வோம்," என்றார். ISக்கு எதிரான சண்டைக்கு அவரது ஆதரவை வெளிப்படுத்த கடந்த வாரயிறுதியில் ஸ்ரைன்மையர் ஜேர்மன் இராணுவ விமானத்தில் ஈராக்கிற்கு ஒரு குறுகிய விஜயத்தை மேற்கொண்டிருந்தார். பாக்தாத்தில் அவர் அவரது ஈராக்கிய சமதரப்பு அதிகாரி ஹூசைன் அல்-ஷாரிஸ்தானியையும், மற்றும் பிரதம மந்திரி வேட்பாளர் ஹைதர் அல்-அபாடியையும் சந்தித்தார். சுயாட்சி பிராந்தியம் குர்திஷ்தானின் ஜனாதிபதி மசூத் பர்சானியோடும் அவர் எர்பிலில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஸ்ரைன்மையர் அவரது பயணத்தின் போது எந்தவொரு உறுதியான வாக்குறுதிகளும் அளிக்காவிட்டாலும், ஆனால் ஆயுதங்கள் அனுப்புவது குறித்து முன்னரே அறிவித்திருந்தார். "அச்சுறுத்தும் நிலைமை தொடர்ந்தால், அவசியமானால், இந்த முறை, ஆயுதங்கள் அனுப்புவதை" அவர் "தவிர்க்கப் போவதில்லை" என்று ZDFக்கு ஸ்ரைன்மையர் தெரிவித்தார். அவர் புறப்படுவதற்கு முன்பே, புரூசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு செயலர்களோடு ஒரு கூட்டு அறிக்கையில் உடன்பாடு தெரிவித்திருந்த அவர், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் தனித்தனியாக ஆயுதங்களை வினியோகிப்பதையும் வரவேற்றார். பிரான்சும், பிரிட்டனும் நெருக்கடியில் சிக்கியுள்ள அப்பிராந்தியத்திற்கு ஆயுதங்களை வழங்குமென அவை ஏற்கனவே அறிவித்துள்ளன. பேர்லினில், அதன் இராணுவ திட்டங்களை அதிகரிப்பதற்கான திட்டங்கள் வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. திங்களன்று ஸ்ரைன்மையர் அவரது பயணம் குறித்து முதலில் சுருக்கமாக (வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் CDUஇன்) சான்சிலர் அங்கேலா மேர்க்கெலுக்கும், பின்னர் பாதுகாப்புத்துறை செயலர் ஊர்சுலா வொன் டெர் லெயனுக்கும் விவரித்தார். அன்று மதியம், ஸ்ரைன்மையரும் வொன் டெர் லெயனும் ஈராக் மற்றும் சிரியா நிலைமைகள் குறித்து வெளியுறவு விவகாரங்கள் மீதான நாடாளுமன்ற குழுவிற்கும் மற்றும் பாதுகாப்புத்துறை நாடாளுமன்ற குழுவிற்கும் தகவல் வழங்கச்சென்றனர். சான்சிலர், வெளியுறவு மந்திரி, பாதுகாப்புத்துறை செயலர், அரசாங்கத்தின் ஏனைய அரசியல்வாதிகளோடு சேர்ந்து எதிர்கட்சிகளும் கடந்த வாரயிறுதியில் ஆயுத வினியோகத்திற்கு அவர்களின் ஆதரவை வெளியிட்டிருக்கின்றன. பொருளாதாரத்துறை மந்திரி சிக்மார் கேப்ரியல் (SPD) Der Spiegelக்கு கூறுகையில், “தலை முதல் பாதம் வரையில் ஆயுதமேந்திய அந்த வெறியர்கள் எவ்வாறு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொல்கிறார்கள் என்பதையும், அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவர்களின் பாதுகாவலர்கள் எவ்வித சிறந்த வழிமுறைகளும் இல்லாமல் விடப்பட்டிருப்பதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது," என்றார். Bild am Sonntag உடனான ஒரு நேர்காணலில், பசுமை கட்சியின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜோஸ்கா பிஷ்ஷர் அவருக்கே உரிய திமிர்பிடித்த மற்றும் ஆக்ரோஷ மனோபாவத்தோடு அறிவிக்கையில், ஒரு பயங்கரவாத போராளிகள் குழுவை "பிரார்த்தனைகளோடோ அல்லது பதாகைகளோடோ" நிறுத்த "முடியாது ... அதற்கு மாறாக நாம் குர்திஷ்களுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும், ஏனென்றால் உதவுவது நமது கடமையாகும்," என்று அறிவித்தார். ஜேர்மன் "தைரியம்மிக்க பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் செக் முன்முயற்சிகளோடு சேர்ந்து" கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்வுப்போக்கில், அந்த ஆயுதங்கள் எதிர்காலத்தில் யாருடைய கைகளில் போய் சேருமென்பது "இரண்டாம்பட்சமானது" என்றும் அவர் அறிவித்தார். யுத்த மண்டல பகுதிகளுக்கு ஆயுத வினியோகங்களுக்கு தடைவிதிக்கின்ற போர் ஆயுத கட்டுப்பாட்டு சட்டத்தை (CHP) இதுமாதிரியான ஆயுத வினியோகங்கள் மீறுகின்ற போதினும், குர்திஷ் போராளிகள் குழுவிற்கு இராணுவ உதவி வழங்குவதற்கான கோரிக்கை ஊடகங்களில் பேரார்வத்தோடு ஆதரிக்கப்படுகிறது. தலையங்கம் எழுதும் ஆசிரியர்களும், விமர்சகர்களும் ரஷ்யாவிற்கு எதிராக மட்டுமல்ல, மாறாக மத்தியகிழக்கிலும் இன்னும் மேலதிகமான ஆக்ரோஷ கொள்கையை ஜேர்மனியிடமிருந்து கோரி வருகிறார்கள். Frankfurter Allgemeine இன் (FAS) ஞாயிற்றுக்கிழமை பதிப்பு, “WEAPONS" என்ற தலைப்பில் ஒரு மீளாய்வை ஆரவாரத்தோடு வெளியிட்டது, ஈராக்கிய தலையீட்டோடு, யுத்தத்திற்குப் பிந்தைய ஜேர்மனியின் "வெளியுறவுக் கொள்கை இணக்கம் ... மூச்சைத் திணறடிக்கும் வேகத்தில் உடைந்து வருகிறது," என்று குறிப்பிட்டது. ஜேர்மனி "ஐரோப்பாவிற்கு வெளியே நடக்கும் யுத்தங்களில் இருந்து விலகி இருக்கும்" என்பதோடு, "குறைந்தபட்சம் பரஸ்பர கூட்டு நடவடிக்கைகளுக்கான தேவை இல்லாதவரை ... அங்கே அதற்கு எந்தவொரு வேலையும் இல்லை," என்பதே அந்த ஒருமித்த கொள்கை இணக்கமாக இருந்தது. “காலங்கடந்து நீடித்திருந்த அந்த தடையை [உடைப்பதில்] இடது கட்சியும் பங்கேற்றுள்ளது ... இன்னும் கூடுதலாக பங்கெடுக்க CDU அழைப்புவிடுப்பதற்கு முன்பே, ஒரு மரபார்ந்த அமைதிவாதியான உலா ஜெல்ப்க, 'இரக்கமற்ற இஸ்லாமியவாதிகளை' 'இராணுவ வகைப்பட்ட' நடவடிக்கைகளுடன் மட்டும் தான் நிறுத்த முடியுமென்ற உண்மையை வானொலியில் தெரிவித்திருந்தார். கிரிகோர் கீசி தலைமையிலான ஒரு நாடாளுமன்ற கன்னை, அது எந்த விதமான ஆயுத ஏற்றுமதிகளையும் தடுக்க விரும்புகிறது, ஆனால் இப்போதோ 'ஒரு பெரிய பேரழிவைத் தடுக்க' அவற்றை 'அனுமதிக்க' வேண்டுமென நம்புகிறது" என்று அந்த பழமைவாத நாளிதழ் திருப்திகரமாக குறிப்பிட்டது. ஈராக்கிற்கான ஜேர்மன் ஆயுத வினியோகங்கள் மீதிருந்த ஒருமித்த இணக்கத்தை, FAS, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், ஸ்ரைன்மையர் மற்றும் வொன் டெர் லெயனால் அறிவிக்கப்பட்ட ஓர் ஆக்ரோஷ வெளியுறவு கொள்கையை நோக்கிய வெளியுறவு கொள்கை மாற்றத்தோடு தொடர்புபடுத்தியது. “பூகோளமயப்பட்ட உலக ஒழுங்கமைப்பில் ஜேர்மன் 'இன்னும் கூடுதலான பொறுப்புறுதியை' எடுக்க வேண்டிருப்பதாக ஜனாதிபதி அறிவித்ததும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் முனிச் பாதுகாப்பு மாநாட்டு உரைகளோடு அனைத்தும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாக ஒருவர் நினைக்கக்கூடும்," என்று அப்பத்திரிகை எழுதுகிறது. "ஈராக்கிற்கு வெளிப்படையான" ஆயுத வினியோகங்கள் குறித்து இப்போது நாம் பேசுவதானால், “... நாடு ஒரு தீர்க்கமான முன்னோக்கிய படியை எடுத்துள்ளது. அது அதன் சொந்த கடமைப்பாட்டை உணர்ந்து கொண்டுள்ளதோடு அதை ஏற்றுக் கொண்டும் இருக்கிறது; அதன் பாதுகாப்பு நலன்களுக்கு வசதியான பொருள்விளக்கமாக அது தன்னைத்தானே ஒரு சமஅளவிலான குறுகிய-எண்ண ஓட்டத்திலிருந்து விலக்கிக் கொண்டுள்ளது. 'போர்களில் இருந்து விலகி இருங்கள்!' என்ற பழக்கம், இனியும் ஜேர்மன் பாதுகாப்பு கொள்கையை நியாயப்படுத்த சரியானதாக இருக்காது," என்று FAS குறிப்பிட்டது. ஜேர்மனியின் ஈராக்கிய தலையீடு, ஈராக்கிய சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கு ஒரு "மனிதாபிமான தலையீடு" அல்ல என்பதையே அந்த மீளாய்வு வெளிப்படுத்துகிறது. அந்த நடவடிக்கை நேரடியாக ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயிரூட்டுவதோடும், ஒரு வளம்மிகுந்த மற்றும் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் கொண்ட ஒரு நாட்டைப் பிளவுபடுத்துவது மற்றும் சூறையாடுவது என்று வந்தால், இடது கட்சி உட்பட ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் எல்லா பிரதிநிதிகளும் ஒரு பார்வையாளர்களாக இருந்துவிடுவதில்லை என்ற உண்மையோடும் பிணைந்துள்ளது. |
|