World Socialist Web Site www.wsws.org |
Ferguson, Missouri: War comes home மிசோரி, ஃபேர்க்குஷன்: தாயகத்தில் போர்
Joseph
Kishore புதனன்று, மிசோரி ஃபேர்க்குஷனில் இருந்து கிடைக்கப் பெற்ற படங்களைக் கண்டு அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 18 வயதான மைக்கேல் பிரவுண் போலிசால் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து வெடித்த கோபத்திற்கான பதிலிறுப்பாக, செயின்ட் லூயிஸ் புறநகர்ப் பகுதியே ஒரு போர் மண்டலமாக உருமாற்றப்பட்டு விட்டிருந்தது. போர்க்கள பணிகளுக்கான உடைகள் மற்றும் கண்ணாடிகளுடன் நகரில் வந்திறங்கிய SWAT அணிகள் உயர் சக்திவாய்ந்த எந்திரத் துப்பாக்கிகளையும், தானியங்கி ரைபிள்களையும் ஏந்தி ஆயுதம் தாங்கிய தாக்குதல் வாகனங்களை ஓட்டி வந்தன. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவர்களும் மற்றும் பத்திரிகையாளர்களும் துப்பாக்கி முனைகளை எதிர்கொண்டனர் என்பதோடு கண்ணீர் புகையாலும், இரப்பர் புல்லட்டுகளாலும், ரைபிள்களால் சுடப்படும் பீன் பைகளாலும் கண்கூசச் செய்யும் சத்தம் மிகுந்த கையெறி குண்டுகளாலும் தாக்குதல் நடத்தப் பெற்றனர். போலிசார் எந்த சட்ட அடிப்படையும் இன்றி தன்னிச்சையான ஊரடங்கு உத்தரவுகளை திணித்தனர், கலைந்து செல்லும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர். புள்ளிவிவர ரீதியாக பார்த்தால் ஈடுபடுத்தப்பட்டது என்னவோ உள்ளூர் போலிஸ் தான், ஆனால் அவர்களின் ஈடுபடுத்தலோ அடிப்படையில் ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை ஒத்திருந்தது. அவர்கள் இராணுவத்தைப் போல தோற்றமளித்தனர், இராணுவத்தைப் போல நடந்து கொண்டனர், அத்துடன் இராணுவத்துடன் நெருக்கமான தொடர்புகளும் கொண்டிருந்தனர். போலிஸ், இராணுவ ஆயுதங்களைத் தரித்திருந்தது என்பதோடு, அவர்களுக்கு புதிய உத்தரவு வகைகளும் கொடுக்கப்பட்டு இருந்தன. அவர்கள் ஆப்கானிஸ்தான், ஈராக், காசா மற்றும் உக்ரேனில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் பயன்படுத்தப் பெறுகின்ற வழிமுறைகளைக் கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறார்கள். ஃபேர்க்குஷன் ஒரு இராணுவ முகாமாக மாறியிருப்பதென்பது வெறுமனே ஃபேர்க்குஷன் குறித்த விடயமல்ல. இது ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் சமூக மற்றும் அரசியல் உறவுகளது தன்மையைக் குறித்துக் காட்டுகின்ற விடயமாகும். ஜனநாயகத்தின் மினுமினுப்பான பகுதி உடைத்தெறியப்பட்டு விட்டிருக்கிறது. இதுதான் இராணுவச் சட்டம் தோற்றமளிக்கின்ற விதமாகும். செயின்ட் லூயிஸ் நகரின் ஒரு சிறிய புறநகர்ப் பகுதியின் நிகழ்வுகள் அமெரிக்காவில் கடந்த 15 வருடங்களின் காலத்தில் உருப்பெற்று வந்திருந்த எதார்த்தத்தை திடுதிப்பென்று அம்பலத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. 2000 ம் ஆண்டின் திருடப்பட்ட தேர்தலைத் தொடர்ந்து, ஆளும் வர்க்கமானது ஒவ்வொரு அடிப்படை ஜனநாயக உரிமையின் அத்தியாவசிய பாகங்களைக் கழற்றியெறிவதற்கான சாக்காக 2001, செப்டம்பர் 11 அன்று நடந்த தாக்குதல்களையும் "பயங்கரவாதத்தின் மீதான போரையும்" பயன்படுத்தியது. உரிய நடைமுறைகளின் வழி இல்லாமல் அமெரிக்க குடிமக்களை கைது செய்வதற்கும் மற்றும் அவர்களை படுகொலை செய்வதற்குமே கூட உரிமை உள்ளதாக ஜனாதிபதி அறிவிக்கிறார். அமெரிக்க உளவு முகமைகள், FBI மற்றும் உள்ளூர் போலிஸ் படைகளுடன் சேர்ந்து வேலை செய்து, ஒவ்வொரு அமெரிக்கரின் அரசியல் மற்றும் சமூக உறவுகளையும் கண்காணிக்கின்றன. இந்த நடவடிக்கைகளுடன் கைகோர்த்து தாயகப் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க வடக்கு கட்டளையகம் (US Northern Command) ஆகியவற்றின் ஸ்தாபகமும் நடந்தேறியிருக்கிறது. இரண்டாவது கூறப்பட்டதானது அமெரிக்காவிற்குள்ளாக இராணுவ நடவடிக்கைளை மேற்பார்வை செய்கின்ற முதன்முதல் கட்டளையகமாக 2002 இல் அமைக்கப்பட்டது. அமெரிக்காவிற்குள்ளாக இராணுவ நடவடிக்கைகளுக்கான திட்டமிடல் என்பது மிக முன்னேறிய நிலையில் இருக்கிறது. வியாழனன்று உலக சோசலிச வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு, நகர்ப்புற சண்டைகள் குறித்த பென்டகனின் மூலோபாய உத்தி விவரிப்புகளில் நியூயோர்க் நகரில் தலையீடு செய்வது குறித்த நேர்வு ஆய்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. வர்க்க மோதலுக்கான ஒரு தூண்டியாக இருக்கக் கூடிய "தீவிரமான வருவாய் ஏற்றத்தாழ்வு" தான் "ஸ்திரமின்மைக்கான பிரதான உந்துசக்தி"யாக இராணுவத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முழு வீச்சிலான இராணுவ ஆட்சிக்கான வடிவங்கள் மற்றும் பொறிமுறைகள் குறித்த பல விவாதங்கள் திரைமறைவில் நடைபெற்று வந்திருக்கின்றன. ஒரு புதிய நிதிபிரபுத்துவத்தின் சமூக மற்றும் அரசியல் நலன்களது காவலனாகச் செயல்படுகின்ற ஒரு பரந்த மற்றும் கணக்கில் வராத இராணுவ-உளவு-போலிஸ் எந்திரத்தினால் அமெரிக்கா தலைமை தாங்கப் பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ அரசியல் அமைப்புகள் எல்லாம் எந்த வெகுஜன சமூக அடிப்படையும் இல்லாத வெற்றுக் கூடுகளாக இருக்கின்றன. சக்திவாய்ந்த பெருநிறுவன மற்றும் நிதி நலன்களுக்கு பிரதிநிதியாக சேவை செய்கின்ற ஒரு ஜனாதிபதியால் இவை அத்தனையும் மேற்பார்வை செய்யப்படுகின்றன. பிரவுண் கொலை செய்யப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர், சம்பிரதாய வார்த்தைகளை உதிர்ப்பதற்காக ஒபாமா அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மார்த்தா' பண்ணைத்தோட்டத்தில் இருந்து முன் கொண்டுவரப்பட்டார். "ஃபேர்க்குஷன் வீதிகளில் அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டிய காலம் இது" என்று அறிவித்த ஒபாமா, நிராயுதபாணியான ஒரு இளைஞர் மரணதண்டனை அளிக்கப்பட்டதைப்போல கொல்லப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை, ஏற்கனவே ஏராளமானோர் கைது செய்யப்படுவதில் விளைந்திருக்கும் போலிஸ் அடக்குமுறை அலை ஒன்றுடன் சமானப்படுத்தினார். தனது நிர்வாகத்தின் வரையறையாக ஆகியிருக்கக் கூடிய எல்லையற்ற வேடதாரித்தனத்துடன் ஒபாமா, "நாம் அனைவருமே ஒரே அமெரிக்கக் குடும்பத்தின் அங்கம்" என்பதை ஒவ்வொருவரும் நினைவுகூர வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் மேலும் தொடர்ந்தார்: "பொதுவான விழுமியங்களில் நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம், சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்பதிலான நம்பிக்கை, பொது ஒழுங்கிற்கான அடிப்படை மரியாதை மற்றும் அமைதியான பொது ஆர்ப்பாட்டத்திற்கான உரிமை, நம்மிலான ஒவ்வொரு தனி ஆண், பெண், மற்றும் குழந்தையின் கண்ணியத்திற்குமான மரியாதை, அத்துடன் நமது அரசாங்கம் என்று வரும்போது பொறுப்பேற்பதற்கான அவசியம் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. " ஃபேர்க்குஷன் நிகழ்வுகளால் அம்பலத்திற்கு வந்திருக்கக் கூடிய அமெரிக்க வாழ்க்கையின் எதார்த்தத்தை ஒபாமாவின் தேன் குழைத்த வார்த்தைகளால் மூடி மறைத்து விட முடியாது. "ஒரே அமெரிக்கக் குடும்பம்" இல்லை மாறாக வர்க்கப் பிளவுகளால் பிளக்கப்பட்ட ஒரு சமூகம் தான் இருக்கிறது. "சட்டத்தின் கீழ் அனைவரும் சமமாக" இல்லை மாறாக பணக்காரர்களுக்கு என ஒரு சட்டமும் ஏழைகளுக்கு என இன்னொரு சட்டமும் தான் இருக்கிறது. "அமைதியான பொது ஆர்ப்பாட்டத்திற்கான உரிமை"க்கு மரியாதையளிப்பது குறித்த ஒபாமாவின் நடிப்பு எல்லாம், மெட்ரோபொலிட்டன் செயின்ட் லூயிஸ் பிராந்தியம் உள்பட உள்ளூர் போலிஸ் படைகளை இராணுவமயமாக்குவதற்கான பென்டகனின் பல பில்லியன் டாலர் திட்டங்களை எல்லாம் அவர் விரிவாக்கியிருப்பதில் பொய்யாகி விட்டிருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் மட்டும் உள்ளூர் போலிஸ் படைகளுக்கு 450 மில்லியன் டாலர் அளவுக்கு சாதனங்களை வழங்கிய 1033 என்றழைக்கப்படும் கூட்டரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஃபேர்க்குஷன் போலிஸ் துறையும் பங்குபற்றியுள்ளது. அரசாங்கத்தின் "பொறுப்பேற்கும் தன்மை"யைப் பொறுத்தவரை, வலிந்து தொடங்கிய போர்கள் முதல் உள்நாட்டிலான வேவு மற்றும் சித்திரவதை வரை எண்ணற்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளை நடத்தியிருக்கக் கூடிய ஒரு அரசாங்கத்தின் தலைமையில் தான் ஒபாமா அமர்ந்திருக்கிறார். இந்தக் குற்றங்களுக்கோ, அல்லது வங்கிகள் மற்றும் முக்கிய பெருநிறுவனங்கள் பொருளாதாரத்தை சூறையாடுவதற்கோ எந்தவிதப் பொறுப்பேற்பும் கிடையாது. ஒபாமா கூறியிருக்கும் கருத்துகள், அமெரிக்காவில் சமூக உறவுகளின் நிலைமை குறித்த உயர்ந்த பதட்ட நிலையை வஞ்சித்தன. எவ்வாறிருப்பினும் ஃபேர்க்குஷன் மற்றும் நாடு முழுவதிலுமான கோபத்தின் கீழமைந்த நிர்க்கதியான பொருளாதார நிலைமைகளைக் குறித்து அவர் ஒரேயொரு முறையும் கூட குறிப்பிடவில்லை. வறுமை, பட்டினி மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை பெருகிச் செல்வதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனையாக, மேலும் ஒடுக்குமுறையைத் தவிர வேறு எந்தவொரு ஆலோசனையும் அவரிடமோ அல்லது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வேறெந்தப் பிரதிநிதியிடமோ இல்லை. அமெரிக்கா ஒரு கத்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த சமூகப் பதட்டங்கள் எல்லாம் பகிரங்கமான மற்றும் வெடிப்பு மிகுந்த வடிவங்களை எடுக்கத் தொடங்கியிருக்கின்றன, அத்துடன் ஆளும் வர்க்கம் அதன் இறுதித் தாக்குதலையும் தொடங்கி விட்டிருக்கிறது. சென்ற ஆண்டில் போஸ்டன் தொடர்ஓட்ட குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து அறிவிக்கப்படாத இராணுவச் சட்டத்தின் கீழ் போஸ்டன் நகரம் கொண்டு வரப்பட்ட சமயத்தில், ஒரு வரலாற்று எல்லைவரம்பு கடக்கப்பட்டிருக்கிறது என்று உலக சோசலிச வலைத் தளம் எச்சரிக்கை விடுத்தது. நகர் முடக்கப்பட்டிருப்பதானது "அமெரிக்காவில் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை ஸ்தாபிப்பதற்கான செயல்பாட்டு விதத்தை தோலுரித்து வெளிக்காட்டியிருக்கிறது" என்று உலக சோசலிச வலைத் தளம் எழுதியது. இந்த மதிப்பீடு ஒரு அளவுக்கதிகமானது என்பதாக கருதியவர்களும் இருக்கவே செய்தனர். விடயங்கள் உண்மையிலேயே அந்த அளவுக்கா போய் விட்டிருந்தன? ஆம், அந்த அளவுக்குத் தான் போய் விட்டிருக்கின்றன என்பதே ஃபேர்க்குஷன் வீதிகளில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தின் நிகழ்வுகள் இன்னுமொரு கூரிய எச்சரிக்கையாக பார்க்கப்பட வேண்டும். ஜனநாயக ஆட்சி வடிவங்கள் எல்லாம், முதலாளித்துவ ஆட்சிமுறை தொடர்ந்து நீடிப்பதற்கும், அதன் தவிர்க்க முடியாத விளைபொருட்களான போர் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கும் இணக்கமற்றதாக இருக்கிறது. சோசலிசமா அல்லது சர்வாதிகாரமா என்பது தான் தொழிலாள வர்க்கத்தின் முன்பாக இருக்கும் தெரிவாக இருக்கிறது. |
|