World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Defend the rights of immigrant workers! Unite the working class of North, Central and South America!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்! வடக்கு, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவின் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவோம்!

Resolution of the SEP (US) Third National Congress
14 August 2014

Back to screen version

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் மூன்றாவது தேசிய காங்கிரஸ் ஆகஸ்ட் 6 இல் இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. அக்காங்கிரஸ் "காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலை எதிர்ப்போம்! எனும் தீர்மானத்தையும் நிறைவேற்றி இருந்தது.

* * *

1. சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ தொழில் வழங்குனர்களின் பெரும்-சுரண்டலுக்கும், பொலிஸ் மற்றும் குடியமர்வு அதிகாரிகளின் ஒடுக்குமுறைக்கும் இரண்டுக்கும் எதிராக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை ஐயத்திற்கிடமின்றி பாதுகாக்கிறது.

2. அமெரிக்கா ஒரு "கட்டுப்பாட்டை மீறிய" எல்லை மற்றும் குடியமர்வு ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களின் அலைகளை முகங்கொடுக்கிறது என்ற வாதங்களோடு புலம்பெயர்ந்தோருக்கு-எதிரான பேரினவாதத்தை தூண்டிவிடும் பிரதான கட்சிகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் முயற்சிகளை நாம் இகழ்ச்சியுடன் புறக்கணிக்கிறோம். யதார்த்தம் என்னவென்றால் கடந்த நான்கு ஆண்டுகளில் நிறைய புலம்பெயர்ந்தோர் அவர்களைப்போன்ற அந்நாட்டில் பிறந்தோரைப்போலவே, 2008இல் தொடங்கிய நிதியியல் நெருக்கடியால் வேலைகள் துடைத்தெறியப்பட்டு, மெக்சிக்கோவிற்கும் ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

3. இருந்த போதினும், பெரு வணிக அரசியல்வாதிகளும் ஊடகங்களும், முதலாளித்துவ நெருக்கடியின் விளைவான வேலையின்மை அதிகரிப்பு, வாழ்க்கை தரங்களின் வீழ்ச்சி மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் இந்த ஒடுக்கப்பட்ட பிரிவினைக் குற்றஞ்சாட்டுவதுடன், இரக்கமின்றி புலம்பெயர்ந்தவர்களை பலிக்கடாவாக்கி மற்றும் அதன் சுமையை ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமக்க வைக்க முயற்சிக்கின்றன.

4. இது மாதிரியான கோபமூட்டல் அமெரிக்காவில் ஒரு நீண்ட மற்றும் அருவருப்பான வரலாறைக் கொண்டிருக்கிறது. அது 19ஆம் நூற்றாண்டில் அயர்லாந்து மற்றும் ஜேர்மன் தொழிலாளர்களுக்கு எதிராகவும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலிய, ஐரோப்பிய மற்றும் சீன தொழிலாளர்களுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் அதன் மிகவும் போர்குணமிக்க பிரிவினரை ஒடுக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டது. இதே தந்திரோபாயங்கள் ஐரோப்பா முழுவதிலும், அத்தோடு ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் ஏனைய இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

5. ஜோர்ஜ் டபிள்யு. புஷ் பதவியிலிருந்த அவரது ஒட்டுமொத்த எட்டு ஆண்டுகளில் வெளியேற்றப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில், ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே இரண்டு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றி, எந்தவொரு அமெரிக்க நிர்வாகத்தினது குடியேற்ற-விரோத கொள்கையையும் விட மிக கடுமையானதை நடைமுறைப்படுத்தி உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அதன் "பரந்த குடியேற்ற-சீர்திருத்தமானது", எல்லை ரோந்து உளவாளிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியும், நூறுக் கணக்கான மைல்களுக்கு புதிய முள்வேலி அமைத்தும், மற்றும் தேசிய பாதுகாப்பு துருப்புகள் மற்றும் டிரோன்களை நிறுத்தியும், அமெரிக்க எல்லையை இராணுவமயமாக்குவதை உள்ளடக்கியிருக்கிறது. எல்லை கடந்து வருவோரை பாலைவனங்களுக்குள் தள்ளி ஆண்டுதோறும் அங்கே அவர்கள் உயிரிழந்து போவதே அதன் விளைவாகும்.

6. அமெரிக்க எல்லையை சமீபத்தில் வந்தடைந்த பத்து ஆயிரக்கணக்கான மத்திய அமெரிக்க குழந்தைகள், தசாப்தகாலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டால் அங்கு உருவாக்கப்பட்ட கொடூரமான நிலைமைகளின் விளைபொருளாகும். வாஷிங்டன் இரத்தவெறி பிடித்த சர்வாதிகாரங்களை ஆதரித்ததோடு, 200,000க்கும் மேலான குவாத்தமாலா வாசிகள் மற்றும் 75,000 சால்வாடோரியர்களின் உயிரைப் பறித்த இனப்படுகொலைக்கு இணையான எதிர்கிளர்ச்சி போர்களை ஆதரித்தது. மிகச் சமீபத்தில் ஒபாமா நிர்வாகம், ஹோண்டுராஸில், தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவேல் ஜெலாயாவின் அரசாங்கத்தைத் தூக்கிவீசிய 2009 ஆட்சி கவிழ்ப்பு சதியை முழுவதுமாக ஆதரித்தது.

7. அமெரிக்க இராணுவ தலையீடுகள் மற்றும் அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரங்கள் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு சதிகளால் இத்தகைய சமூகங்கள் சீரழிக்கப்பட்டமை, அமெரிக்க "போதைப்பொருட்களுக்கு எதிரான போருடன்" தொடர்புபட்டதும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதுமான கூறவியலா வன்முறை வெடிப்புக்கான நிலைமைகளை உருவாக்கின. அவற்றால் பலர் வடக்கை நோக்கி வெளியேற தள்ளப்பட்டிருந்தார்கள்.

8. சர்வதேச சட்டத்திற்கிணங்க இத்தகைய இளைஞர்களுக்கு அகதிகளுக்கான அந்தஸ்தை வழங்குவதற்கு மாறாக, ஒபாமா நிர்வாகம் அவர்களைத் தற்காலிக சிறைக்கூடங்களில் அடைக்கவும் மற்றும் ஒழுங்கான விசாரணையின்றி அவர்களின் உரிமைகளை அவர்களிடமிருந்து பறித்து அவர்களை வேகமாக நாட்டைவிட்டு வெளியேற்றுவதிலும் முனைந்துள்ளது.

9. சோசலிச சமத்துவக் கட்சி உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள தொழிலாளர்கள் அவர்கள் எந்த நாட்டில் வசிக்க விரும்புகிறார்களோ அங்கே முழு குடியுரிமையோடு வாழவும், வேலை செய்யவுமான அவர்களின் உரிமைக்கு உறுதியாக ஆதரவளிக்கின்றது. அவர்கள் அமெரிக்காவிற்குள் மீண்டும் திரும்புவதிலிருந்து தடுக்கப்படுவார்கள் என்றோ, அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரிக்கப்படுவார்கள் என்றோ அச்சத்திற்கிடமின்றி, அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான உரிமையும் இதில் உள்ளடக்குகிறது. SEP குடியமர்வுக்கு-எதிரான அனைத்துச் சட்டங்களையும் நீக்கவும் மற்றும், புலம்பெயர்வு மற்றும் சுங்க இலாகா அமுலாக்கம் (Immigration and Customs Enforcement - ICE) மற்றும் எல்லை ரோந்தை கலைக்கவும் போராடுகிறது.

இலத்தீன் அமெரிக்காவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவைக் கட்டியமையுங்கள்!

10. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை என்ற இந்த பொதுவான எதிரிக்கு எதிரான போராட்டத்தில் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்துடன் பிரிக்கவியலாதபடி பிணைந்துள்ளது.

11. அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, தெற்கில் உள்ள ரியோ கிராண்டு தொழிலாளர்களின் போராட்டங்களின் மீது மிக நெருக்கமாக கவனம் செலுத்த வேண்டும். அந்த சம்பவங்களுக்கு ஒரு மார்க்சிச பகுப்பாய்வை வழங்கவும், மெக்சிகோவிலும், மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகள் அனைத்திலும் புதிய புரட்சிகர தலைமைகளைக் கட்டமைக்க உதவுவதற்கும் போராடுகிறது.

12. அந்த பிராந்தியம் இந்த பூமியிலேயே மிகவும் சமூகரீதியில் துருவமுனைப்பட்ட மற்றும் அரசியல்ரீதியில் வெடிப்பார்ந்த பிரதேசங்களில் ஒன்றாக உள்ளது. அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட மேலாதிக்கத்திற்கான சர்வதேச சண்டையில் ஒரு களமாக மாறியுள்ளது. முதலீடு மற்றும் வர்த்தகத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவினால் அதிகரித்தளவில் புறந்தள்ளப்பட்டு, வாஷிங்டன் ஒரு காலத்தில் அதன் "சொந்த கொல்லைப்புறமாக" கருதிய ஒரு பிராந்தியத்தில் ஒரு ஒப்பீட்டளவிலான வீழ்ச்சியை அனுபவித்துள்ளது.

13. இலத்தீன் அமெரிக்காவில் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதற்கு 20ஆம் நூற்றாண்டின் கசப்பான படிப்பினைகளை உள்ளீர்த்துக்கொள்வது அவசியமாகும். அதில் தான் அப்பிராந்தியத்தை அடித்துச் சென்ற ஒரு புரட்சிகர போராட்டங்களின் அலை காட்டிக்கொடுக்கப்பட்டு, பல தசாப்தகால இராணுவ சர்வாதிகாரம் புகுத்தப்பட்டது.

14. இந்த காட்டிக்கொடுப்பில் பப்போவாத திரித்தல்வாதத்தால் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கப்பட்டது, ஆர்ஜென்டினாவில் உள்ள அதன் மோரெனோய்ட் (Morenoite) வடிவமும் அதில் உள்ளடங்கும். காஸ்ட்ரோயிசம், குட்டி-முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் கெரில்லாவாதம் ஆகியவற்றிற்கு ஆதரவாக பப்லோவாதிகள் பேரழிவுகரமான விளைவுகளோடு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரித்தார்கள்.

15. இன்றோ இதே சக்திகள், பிரேசிலில் உள்ள தொழிலாளர் கட்சி (PT) அரசாங்கத்திற்குள் பிரேசிலிய பப்லோவாதிகளின் பங்கேற்பிலிருந்து வெனிசூலாவில் சாவேஜ்-மடூரோவின் முதலாளித்து தேசியவாத ஆட்சியின், அத்தோடு மெக்சிகோவில் லோபெஸ் ஓப்ராடோர் போன்ற முதலாளித்துவ தேசியவாத அரசியல்வாதிகளின் நப்பாசைகளை ஊக்குவிப்பது வரையில், தொழிலாள வர்க்கத்தை தேசிய முதலாளித்துவத்திற்குள் அடிபணிய செய்ய அவர்களின் முயற்சிகளை தொடர்கின்றன.

16. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத தலைமையை அதாவது சோசலிச ஐக்கிய அமெரிக்க அரசுகள் என்ற பொதுவான முன்னோக்கிற்கான போராட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை கட்டியமைப்பதே இலத்தீன் அமெரிக்காவில் புரட்சிகர மேலெழுச்சியின் புதிய அலைகளுக்கு தயாரிப்பு செய்வதில் உள்ள தீர்க்கமான கேள்வியாகும். இத்தகைய புதிய புரட்சிகர கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான அரசியல் விளக்கங்களில் அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.